20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 8

barbarabபார்பரா ப்ளூம் (BARBARA BLOOM)

(1951-    ) நாடு – ஐக்கிய அமெரிக்கா

இந்த ஓவியருக்குப் பெண்ணியவாதப் படைப்பாளிகளில் ஒருவராக அங்கீகாரம் கிடைத்ததே தற்செயலான ஒரு நிகழ்வுதான் எனக் கூறலாம். இவரது படைப்புகள் எப் போதுமே பூடகத்தன்மை கொண்டவையாகவே இருக்கும். ஏனெனில், பெண்ணியம் பேசும் படைப்புகளில் தீவிரமான அழுத்தத்துடன் கூடிய, போர்க்குணம் கொண்ட அணுகுமுறை தேவையில்லை என்பது இவரின் கருத்து.

THE REIGN OF NARCISSIM (படைத்த ஆண்டு 1989) என்பது இவரது ஒரு படைப்பு. இதை ‘சுய மோகத்தின் ஆட்சி’ என்று சொல்லலாம். இங்கு ஓவியர் ஒரு கண்ணாடியின் முன்பு உடையின்றி நிற்கிறார். ஆடியில் தெரியும் தனதுடலைக் கண்டு அதில் லயித்து, அதை மோகித்து அனைத்தும் மறந்த நிலையில் இருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களிலும் ஏதாவது ஒரு வகையில் அவரைப் பிரதிபலிக்கும் விதமாக ஓவியம் உள்ளது. இதில் ஒருவித ஏளனமும் உள்ளது. இவருடைய உருவத்தின் இருபுறமும் கிரேக்க பாணியில் வடிவமைக்கப்பட்ட தூண்கள். அவற்றின் மேல் இவரது முகம் சிலாரூபமாக, நகையலங்காரங்களுடன் காணப் படுகிறது. விரவியுள்ள மேசை, நாற்காலிகள் எல்லாம் 16ஆம் லூயி மன்னன் பயன்படுத்தியது போன்றவை. மேஜை விரிப்பின்மீது ஓவியரின் கையெழுத்திடப்பட்ட தாள்கள், அவரது ஜாதகக்குறிப்புக் காகிதம், பல்லின் xRay புகைப்படம் போன்றவை பரப்பி வைக்கப் பட்டுள்ளன. அங்கு காணப்படும் சாக்லேட் பெட்டியின் மீதுகூட ஓவியரின் பக்கவாட்டு முகம் கருமை நிறத்தில் உள்ளது. அவருக்குப் பரவலாகப் புகழீட்டித்தந்த படைப்பு இது.

saltz5-13-4

இடா ஆப்பிள்ப்ரூக் (IDA APPLEBROOG)
(1929-   )  பிறப்பு – நியூயார்க் நகரம்

portrait-of-idaபொதுவாக ‘இடா’வின் படைப்புக்கரு பெரும்பாலும் பெண் நோயாளிகளின் மீது ஆண் மருத்துவர்களின் அக்கறையின்மை பற்றியதாக இருக்கும். அன்றியும், மருத்துவத் துறையில் ஆணாதிக்கம் என்பது பற்றியும் பேசும்.

‘EMITIC FIELDS’என்னும் தலைப்புடைய ஓவியம் அவரால் 1989 இல் படைக்கப் பட்டது. ‘வாந்தி வரவழைக்கும் நிலங்கள்’ என்பதாகப் பொருள் கொள்ளலாம். ஓவியத்தளம் இருபகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பகுதி பெண் நோயாளிகளின் பல நிலைகளை உருவகப்படுத்தும். மற்றொரு பகுதியில் சிவப்புப் பின்புலத்தில் ‘நீ நோயாளி நான் முழு மனிதன்’ என்னும் சொற்றொடர் திரும்பத் திரும்ப எழுதப்பட்டிருக்கும். ஓவியர் எப்போதும் கூறுவது, பெண் நோயாளியால் தன்னை ஒரு முழுமையானவளென்று நிரூபிக்க முடிவதில்லை. அன்றியும், நோயையும் தாண்டி ஒரு பெண் முழுமைபெற்றவள் என்று ஆண் மருத்துவர் கருதுவதில்லை. தாங்கள் மட்டுமே முழுமையானவர் என்ற கருத்தோடும், நோயாளியின் நோய்ப்பகுதி மட்டுமே தங்களது எல்லை என்பதான இயந்திரத் தன்மை உடையவர்களாக உள்ளனர் என்பதுதான். (இவரது ஒரு பேட்டியை  இங்கே காணலாம்  http://www.pbs.org/art21/artists/applebroog/clip1.html# )

212

[DDET IDA APPLEBROOG-இன் மேலும் சில படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்.]

applebroog_cul-01robinson1-16-2
[/DDET]

நான்ஸி ஃப்ரைடு (NANCY FRIED)
( 1945-  ) ஐக்கிய அமெரிக்கா

nancy-imagesஇவர் ஒரு சிற்பி ஓரினச் சேர்க்கையை வாழ்க்கை முறையாகக்கொண்ட பெண் கலைஞர்களில் முக்கியமானவர். ஓரினச்சேர்க்கை பற்றின பிரச்சினைகளைத் தனது படைப்புகளில் பிரதிபலித்தார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரது வலது மார்பகம் அறுவை சிகிச்சை முறையில் நீக்கப்பட்டது. தனது நோய், அதுசார்ந்த உடல் வலி அதனால் தோன்றிய மனவலி பற்றியே இவரது படைப்புகளின் கருப்பொருளாக அமைந்தது. சுடுமண் சிற்பங்களாகவே அமைந்தன.

02

exposed-anger-by-nancyEXPOSED ANGER (1988) என்று தலைப்பிடப்பட்ட சிலைபற்றிப் பார்ப்போம். ஒரு பெண்ணின் உருவம். இடுப்புக்குக் கீழ்ப்பகுதியும் தலையும் இல்லாதது. வலது கொங்கையும் இல்லை. இரு கை கொண்டு கிழித்த மார்பின் உள்ளே நோயின் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக வாய்பிளந்த நிலையில் ஒரு முகம். அது சிற்பியினுடையதுதான். அவரது பலசிலைகளில் இந்த உருவாக்கத்தைக் காண முடிகிறது. தன் வலியைச் சொல்ல சிற்பி உபயோகித்த உத்தி மிகவும் புதியகோணம் கொண்டது. வித்தியாசமான வெளிப்பாடு. நூதனமான கற்பனை.

வில்கெ ஹானா (WILKE HANNAH)
(1940- 1993)  நியூயார்க் நகரம்

imagesஇவர் பெண்ணிய வாதக் கலைஞர்களில் முக்கியமானராகப் பேசப்படுகிறார். ஓவியம், சிற்பம், புகைப்படக்கலை, நிகழ்கலை (Performance), ‘வடிவமைத்து நிறுவுதல்’ (Instala-tion) என்பதாகப் பல உத்திகளில் படைத்த இவர் தமது வாழ்நாள் முழுவதும் சர்ச்சைகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். தனது சமகால பெண்ணியப் படைப்பாளிகளில் சிலரைப் போலவே இவரும் உடையற்ற தனது உடலையே படைப்புக்கருவாகவும், கித்தானாகவும் பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் சமுதாயத்தில் பெண்ணெனப்படுபவளின் முன்னரே முடிவு செய்யப்பட்ட அடையாளத்தை கேள்விக்குறியாக்கி முறியடிக்கிறார். சமூகத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களைப் பற்றி தனது எதிர் கருத்துக்களை வெளியிட ஒருபோதும் இவர் அஞ்சியது இல்லை.

எழுபதுகளின் முடிவிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் தனது தாய் புற்று நோயால் அடைந்த துயரங்களையும் வலியையும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்தார். 1987 இல் இவரும் அதே நோயால் தாக்கப்பட்டார். நோயின் படிப்படியான தீவிரத்தையும் தன் உடலை அது எவ்வாறு சிதிலப்படுத்தியது என்பதையும் பெரிய அளவில் பற்றற்ற நிலையில் நோயை எள்ளும் விதமாகப் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.

இவரது படைப்பு ஒன்றைப் பார்ப்போம் ஒரு வெள்ளைப் பரப்பில் இடை வரை தெரியும் விதமாக ஆறு கருப்பு/வெள்ளைப் புகைப்பட உருவங்கள் (அவருடையதுதான்) அடுத்தடுத்து உள்ளன. அவற்றில் அவர் உடையின்றியே தோற்றமளிக்கிறார். கடித்துச் சுவைக்கப்பட்ட சுயிங்கத்துண்டுகள் (chewing gum) பல்வேறு வடிவங்களில் ஒழுங்கற்ற விதமாக உடலை அலங்கரிக்கின்றன. அவை இவரது உடல் மீது இருப்பது தோலின்மீது அதிகப்படியாக வளர்ந்துவிட்ட சதை பிதுங்கித் தொங்குவதுபோலத் தோன்றுகிறது. இவ்வாறு கடித்தும், சிதைத்தும் பெண்குறியாகப் பயன்படுத்தப் பட்டுள்ள சுயிங்கம் (chewing gum) பாலுறவில் ஏற்படும் மனச்சிதைவைப் பகுத்தாராயும் நோக்கோடு ஒட்டவைத்திருப்பதாகப் பொருள் கொடுப்பதாக கலை விமர்சகர்கள் கருதுகின்றனர்.

hannah-wilke-sos-1974-1975

தனது படைப்புகளில் அவர் ஒரு விளம்பர அழகி போலவே காணப்படுவார். அவ்வகைப் புகைப்படங்களை ஆண் புகைப்படக் கலைஞரைக் கொண்டே படம் பிடிக்கச் செய்வார். அதற்குக் காரணம் அவர்கள்தான் பெண்ணின் உடலை அவளது முகம், கை, கால்களைக் காட்டிலும் நுட்பமாகப் படம்பிடிப்பார்கள் என்பதுதான். வாழ்ந்தபோது அருங்காட்சிக்கூடங்களில் அவரது படைப்புகள் இடம்பெறவில்லை. அவற்றை எந்தக் கலைப்படைப்பு வகையில் சேர்ப்பது என்று பொறுப்பாளர்கள் குழம்பினர். இவரது மரணத்திற்குப் பின் VILLAGAE VOICE என்னும் நியூயார்க் இதழில் ‘படைப்பாளி தனது தோலின் மூலம் வெளிப்படுத்த எண்ணிய துணிவு நம்முள்ளும் சென்று தைக்க வேண்டுமென்பதே அவற்றின் உண்மையான கருப் பொருள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜினா பானே (GINA PANE )
(1939- 1990) நாடு பிரான்ஸ்

pane-ginaமற்ற பெண் கலைஞர்களைப் போலவே இவரும் பாலுறவில் ஆண்களின் ஆதிக்கத்தையும், அதில் பெண்களின் ஈடுபாடுபற்றி அவர்களின் அக்கறையற்ற உணர்ச்சிகளையும் பற்றி அதிகம் அலசியுள்ளார். 1970களில் “BODY ART” என்று சொல்லப்படும் உத்தியில் தனது உடலையே நிகழ்கலையின் களமாக அமைத்து நிகழ்த்துவதில் மிகவும் பிரபலமாக இருந்தார். இவருடைய எண்ணங்களைப் பற்றிய விளக்கங்களை இவரது ஒரு நிகழ்கலை காட்சியின் புகைப்படம் மூலம் தெரிந்து கொள்வோம். நிகழ்கலை நிகழ்ச்சியின் பெயர் PSYCHE பாரிஸ் நகரில் ஒரு கலைக்கூடத்தில் பார்வையாளர் முன் நிகழ்த்தப்பட்டது

மேடையின் மீது அமர்ந்துகொண்டு ஜினா தன்னை ஒப்பனை செய்து கொள்கிறார். எதிரில் முகம்பார்க்கும் கண்ணாடி. அதில் தன்னையே உற்று நோக்கியவாறு உள்ளார். இதனிடையே தன் வயிறு, முகம் இங்கெல்லாம் பிளேடு கொண்டு கிழித்துக் கொள்கிறார். சதை கிழிந்து உதிரம் பீரிட்டு வழிகிறது. ஆனால் அதனால் ஏற்படும் வலியை இவர் முகம் பிரதிபலிக்காமல் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தபடியே உள்ளது. பிடிவாத குணம்கொண்ட ஒரு குழந்தையைப் போலத் தொடர்ந்து தன்னைத் துன்புறுத்திக் கொள்கிறார். காண்போரை அதிர்ச்சியில் உறையவைக்கிறது இக்காட்சி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கலைஞர் முன் நிறுத்தும் செய்தி தினசரி வாழ்க்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பலவிதமான வன்முறை பற்றியது. உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பலப்பல வன்முறைகள் சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் இந்த சமுதாயமோ அரை மயக்கத்தில், உணர்வற்ற நிலையில் அவ்வித வன்முறைகளுக்கு எந்தவிதமான எதிர்வினையும் காட்டாமல் அறுவை சிகிச்சைக்கு ஆட்பட்ட நோயாளிபோல வெறுமே கிடக்கிறது என்கிறார்.

மேலும், “இந்த என் நிகழ்கலை என்பது ஏதோ தோலுக்கு அடியில் இருக்கும் உள் உறுப்புக்களை வெளிக்காட்டுவதும் பின்பு மூடுவதும் என்பதானது அல்ல. அது உலகின் எங்கோ ஒரு விளிம்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகளை மூடி எடுத்துவந்து உங்கள் முன் திறந்துகாட்டி அதன் ஆழத்தை புரிய வைப்பதற்கானது” என்கிறார் ‘பெனெ’.

BODY ART என்னும் உத்திசார்ந்த இந்தக் நிகழ்கலை நிகழ்ச்சி 1960/70-களில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்டது. ‘பெனெ’ தனது நிகழ்வின் மூலம் சமுதாயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். VITO ACCONIC, CHRIS BURDEN (இருவரும் ஆண்) போன்றோர் இவ்வகை நிகழ்கலையில் பேசப்படுவோரில் சிலர்.

[DDET GINA PANE படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும். இந்தப் படைப்புகள் ரத்தம் சிந்துவதை சித்தரிப்பதாக இருப்பதால் பலவீனமான மனதுடையவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்.]

03-performance-by-paneg2-performance-by-paneg1-permance-by-paneg

[/DDET]

(வளரும்)