1
சாமிநாத ஐயர் கண்களை மூடிக்கொண்டு வெளித் திண்ணை சுவரில் சாய்ந்திருந்தார். பக்கத்தில் பிலிப்ஸ் டிரான்சிஸ்டர். அது அவர் வழக்கமாக இருக்கும் இடம். அந்த இடத்தில் இருந்து லேசாகக் கூட ஒரு நாளும் அவர் நகர்ந்ததில்லை. அச்சடித்தது போல் ஒரே இடம். சாய்ந்து சாய்ந்து எண்ணைப் பிசுக்கும் அழுக்குமாக சுவரில் அவருடைய பிம்பம் உருவாகியிருந்தது. அவர் இல்லாத நேரத்தில் கூட அந்தச் சுவர்ச் சித்திரம் அவர் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
“என்னா காப்பியெல்லாம் ஆயாச்சா?” என்று பையக் கேட்டேன்.
“ஏ வா” கண்ணைத் திறந்து பேசினார்.
“குளிக்கக் கிளம்பிட்ட போலுக்கு”
கழுத்தில் துவர்த்துடன், உச்சியில் அரக்கித் தேய்க்கப்பட்டு, கிருதா வழியாக எண்ணெய் வழிந்த நிலையில் நான் நிற்பதைப் பார்த்துக் கேட்டார்.
“ஆமா கோட்டாறு வரைக்கும் போகணும். எங்க அப்பா பேங்கில் இருந்து பென்சனை எடுத்துட்டு வர சொல்லியிருக்காரு”
“கொஞ்சம் இருந்துட்டுப் போடே. பத்து மணிக்குத்தானே பேங்கு தொறப்பான். ஏன் இப்பமே போய் காவல் கிடக்க போறியா?”
அவர் காலையில் நாலு மணிக்கெல்லாம் குளித்து விடுவார். மண்டையைத் துளைக்கும் மார்கழிப்பனியிலும் குளிப்பு அவருக்கு குளத்தில்தான். தெப்பக்குளம் அவருக்குப் பிடிக்காது. ஐயரானாலும் அவர் அக்ரஹாரத்துவாசி அல்ல. கருங்குளத்தாங்கரையில் மண் சுவர் வைத்து, ஓலைக் கூரை போட்டு குடிசையில் காலம் தள்ளுகிறார். பாசி வாடையடிக்கும் தெப்பக்குளத் தண்ணீரை விட, கருங்குளத்துத் தண்ணீரில் முங்கி எழுவதில்தான் அவருக்குப் பிரியம். அவருடைய ஊரில் தெப்பக்குளம் கிடையாது. எங்கள் ஊருக்கு வந்த பிறகும் தெப்பக்குளத்துப் பக்கம் போனதில்லை. இப்போது வீட்டுக்குப் பின்னால் கருங்குளம் இருக்கும்போது தெப்பக்குளம் வரை ஏன் நடக்க வேண்டும்?.
“வெளியேதான் குளிரும். இறங்கிட்டா தணுக்காது. தண்ணீர் சூடாக இருக்கும். தெப்பக்குள படிக்கட்டு மாதிரி வழுக்காது. களிமண் இல்லாத இடமாக, மணலில் கால் பதிய குளிக்கது ஒரு சுகம் கேட்டியா,” என்பார்.
தாமரைக் குளத்துக் தண்ணீர் எப்போதுமே சில்லுணு இருக்கும். காலை வைத்ததும் உடலில் சுர்ரென தணுப்பு ஏறி மயிர்க்கூச்செரியச் செய்யும். ஒரு முங்கு போட்டதும் கண் எரியும். பையப் பைய நவதுவாரங்களின் வழியாக சூடு வெளியாகும். குளிக்கையில் சிலேபியும் கெண்டை குஞ்சுகளும் காலைக் கரம்பும். புண் இருந்தால் துணியைக் கட்டிக் கொண்டுதான் குளிக்க வேண்டும். இல்லையென்றால் தோண்டி எடுத்து விடும்.
குளம் முழுவதும் தாமரையும் ஆம்பலும் நீர் முள்ளியும் பரவி இடைவெளியில்லாமல் தண்ணீரை மறைத்திருந்தாலும் அவர் இறங்கிக் குளிக்கும் இடத்தில் எல்லாம் ஒதுக்கப்பட்டு தண்ணீர் பளிச்சென தெரியும்.
கோவணத்தைக் கட்டிக் கொண்டு ஐயர் குளிப்பார். துவர்த்தை முறுக்கி “சரக் சரக்” என்று முதுகில் போட்டு தேய்ப்பார். சோப்பெல்லாம் கிடையாது.
எனக்கும் ஐயரைப் போல அப்படி குளிக்க ஆசைதான். ஆனால் தாமரைக் குளத்து அட்டைகளை நினைத்தால் பயம். பகலில் மாட்டைக் குளிப்பாட்டும் போது அதன் மீது ஏறி ஒட்டிக் கொண்டு இரத்தம் குடித்து ஊதிப் போய் இருக்கும் அட்டைகளைப் பார்த்திருக்கிறேன். பிடித்து இழுத்தாலும் வராது. தீயைக் கொளுத்தி சுட்டால் கீழே விழும். இல்லையென்றால் சுண்ணாம்பை அதன் மேல் தடவ வேண்டும். குடித்த இரத்தத்தையெல்லாம் கக்கிக் கொண்டே சுருண்டு விழும். பகலில் இதையெல்லாம் செய்யலாம். காலையில் நாலு மணிக்கு கருங்குளத்தில் இறங்க தைரியம் வராது.
குளித்ததும் மதுசூதனப்பெருமாளை முதல் ஆளாகக் கும்பிட்டாக வேண்டும் ஐயருக்கு.
நிர்மாலய தரிசனத்துக்காக, சந்தானம் போற்றி நடைதிறக்கும் போது போய் சேர்ந்து கொள்வார். உடம்பு முழுவதும் திருநீற்றை தண்ணீரில் குழைத்து, நூல் பிடித்தால்போல் அங்கே இங்கே விலகாமல் உடல் முழுவதும் பூசி, பழுப்பேறிப் போன ஈர வேட்டியை உடுத்து, அதற்கு மேல் துவர்த்தை இறுக்கிக் கட்டி சிவப்பழமாய் நிற்பார்.
“சிவன் கோவில் பெருமாள் கோவில் வித்தியாசமெல்லாம் நாங்குநேரிக்கு வடக்கத்தான் பார்த்துக்கோ. திருக்கணங்குடியிலே போய் இப்படி நின்னேன்னா கிறுக்கு வந்திருக்குண்ணு ஒரு மாதிரியா பார்ப்பான். நான் சொல்லுகது சரிதானடே”
அவர் மட்டுமில்லை. ஊரில் உள்ள அத்தனை பேரும் திருநீறு பூசி விட்டுத்தான் கோவிலுக்கு நுழைவார்கள். வைகுண்ட ஏகாதசியன்று கூட திருநீறு பூசிக் கொண்டே சொர்க்கவாசலில் நுழைவார்கள். கையைத் தொட்டு விடாமல் போற்றி கொடுக்கும் சந்தனத்தில் கோபி நாமம் போட்டுக் கொண்டு, காதில் தெற்றிப் பூவையோ, பன்னீர்ப் பூவையை செருகிக் கொண்டு எல்லோரும் கிளம்புவார்கள்.
தரிசனம் முடிந்ததும் ஐயர் எட்டு மணிக்கெல்லாம் காப்பி மேளத்தை முடித்து விடுவார்.
“கோந்தை சின்னதைப் பார்த்துக்கடி. குளத்துல இறங்கிடப் போகுது. அளிக்கதவை மூடிக்கோ. நான் கிளம்புறேன்” என்று டிரான்சிஸ்டரைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவார். மாமியிடம் எதுவும் சொல்லிக் கொள்வதில்லை. அவர்கள் இருவரும் பேசி நான் பார்த்ததே இல்லை.
நேராகக் கோவிலுக்குப் பின்னால் இருக்கும் பங்களா வீட்டுப் படிப்புரை திண்ணையில் போய் இருப்பார். அவருடைய கூட்டாளி கிருஷ்ணமூர்த்தி ஐயரின் வீடு அது. மேற்கு அக்ரஹாரமும் வடக்கு அக்ரஹாரமும் சேரும் முனையில் இருக்கிறது. அக்ரஹாரத்தில் முன்வாசல். நெடுக வளர்ந்து மேற்கு தெருவில் முடியும் அதன் புறவாசல். முன்வாசலில் நின்று பார்த்தால் வீட்டில் புறவாசல் தெரியும். வீட்டின் நடுவே இரண்டு பக்கமும் கருங்கல் தூண்களுடன் கூடிய கிணறு. கருங்கல் தூண்களின் குறுக்கே உள்ள தேக்கு உத்திரத்தில் மாட்டப்பட்டிருக்கும் கப்பியில் ஒரு வாளி தொங்கிக் கொண்டிருக்கும். சற்று ஓரமாகக் கிழக்கேப் பார்த்து துளசிமாடம். அதற்குக் கீழே மாடக் குழியில் விளக்கு எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும். வீட்டின் பின்னே தொழுவத்தில் ஒரு டஜன் மாடுகள். எல்லாம் தொழு பிறப்பு.
வெளியே சிமென்ட் பால் பூசப்பட்ட திண்ணை எப்போதும் சில்லென்று இருக்கும். அதற்கு மேலே ஓலை வேயப்பட்டிருக்கும். வீட்டுக்கு முன்னே, கோவில் மதிலையும் தாண்டி வளர்ந்து கிளைகளைப் பரப்பி வடக்கு அக்ரஹாரம்-மேற்கு அக்ரஹாரம் சந்திப்பில் கொன்றை மரம் பூக்களைச் சொரிந்து கொண்டு நின்றிருக்கும். மரத்தின் நிழலில் கணபதி ஐயர் வீட்டு மாடுகள் கண்களை மூடியும் திறந்தும் ஈயை ஒட்டுவதற்காக காதுகளை ஆட்டியபடி அசைப் போட்டுக் கொண்டிருக்கும். திண்ணையில் இருந்து பார்த்தால் தெப்பக்குளமும் அதைத் தாண்டி கருங்குளமும் தெரியும். தூரத்தில் மருந்துவாழ்மலை. கார்த்திகை தீபமன்று ஏற்றப்படும் விளக்கை இருந்து கொண்டே தரிசிக்கலாம்.
“எத்தனை வருசமா அவரு அங்கணேயே இருக்காரு. கிருஷ்ணமூர்த்தி ஐயரும் அவரும் ஒரு கூட்டு கேட்டியா,” எங்க அப்பா சொல்லுவார்.
சனி, ஞாயிறுகளில் எங்க அப்பாவும் அவர்களோடு போய் உட்கார்ந்திருப்பாராம்.
“ரிட்டயர்ட் ஏட்டு சிவதாணு பிள்ளை, கம்பராமாயணம் பொன்னையா பிள்ளை எல்லோரும் அங்கணத்தான் இருந்து பேசிக்கிட்டிருப்பா. அவோ பேசி எவ்வளவு கதைக் கேட்டிருக்கேன். ஆறுமுக நாவலருக்கும் வள்ளலாருக்கும் நடந்த சண்டையை, பொன்னையா பிள்ளை சொல்லிக் கேக்கணும். சிவஞான முனிவர் கம்பராமாயணத்தை குத்தம் சொல்லி எழுதுனத அழாகச் சொல்லுவாரு பார்த்துக்கோ. கேக்க கேக்க அலுக்காது,” எங்க அப்பா ஒரு நூறு தடவை இதைச் சொல்லியிருப்பார்.
“ஏட்டுக்கு அங்க என்ன வேலை?” நான் ஒரு தடவை கேட்டேன்.
“ஏட்டுக்கு என்ன தெரியுமுண்ணு சிவதாணு பிள்ளையை நிசாரமா நினைச்சிராத. அண்ணைக்கு எல்லாருக்கும் தமிழ் தெரியும் பார்த்துக்கோ. இங்க தமிழ் படிச்ச ஆளுகோ கொஞ்சம் பேரா இருந்திருக்கா. இல்லேணா திருவாவடுதுறை மடத்தை ஏன் இங்க வந்து வைச்சிருக்கான்? இராம நவமிக்குத் தொடங்கி ஒரு மாசம் கம்பராமாயணம் படிப்பா. பெருசா காமணம் போட்டு, பங்களா வீட்டுத் திண்ணையில இரண்டு பக்கமும் விளக்குக் கொளுத்தி வைச்சு வாசிப்பு நடக்கும். ஒரு ஆளு படிப்பா, பொன்னையா பிள்ளை விளக்கம் சொல்லுவாரு”
“தமிழ் வளர்த்த ஊரிலதான் இந்த இடம் திருவாவடுதுறை மடத்திற்க்கு சொந்தமானதுணு எழுதி போட்டிருக்கேளாக்கும்”
“நீ எப்பவும் கிறிச்சான் மறிச்சாணுதான் பேசுவ. நான் பழைய கதையை சொல்லுகேன். நீ இப்பம் நடக்கதை பேசிக் கிட்டிருக்க. ஒழுங்கா கேக்கேணா சொல்லுகேன்”
“சரி சொல்லு”
“மேளம் கேக்கதுல அவருக்கு கிறுக்கு”
“யாருக்கு?”
“ஏட்டு சிவதாணு பிள்ளைக்கு. உங்க அம்மைக்கு மாமாதான”
“அது தெரியாமலா இருக்கேன்”
“கோயில் திருவிழாவுல மேளக்கச்சேரியைக் கடைசி வரைக்கும் இருந்து கேப்பாரு. பாளையங்கோட்டையில சோலியில இருக்கையில கடையநல்லூர் சண்முகசந்தரத்தையும் சிங்கிகுளம் கணேசனையும் கொஞ்சமாக் கேட்டிருக்காரு. கொடை நடக்கும் இடத்துக்கு டூட்டிப் போட்டுக்கிட்டு மேளம் கேக்கப் போவாரு. வள்ளியூரு ராசுகுட்டி மேளத்தை நம்ம தெரு கொடைக்கு அவருதான கூட்டிட்டு வந்தாரு. இப்ப ஒருத்தரும் இல்ல. எல்லோரும் போய் சேர்ந்தாச்சு. சாமிநாத ஐயர் ஒருத்தருதான் பாக்கி”
சாமிநாத ஐயருக்கு சொந்த ஊர் சுசீந்திரம் பக்கம் என்று தெரியும். சுசீந்திரத்தில் கிருஷ்ணமூர்த்தி ஐயரும் அவரும் ஒன்றாக படித்தார்கள். படிப்பில் கெட்டிக்காரர். திருவனந்தபுரத்தில் காலேஜில் படித்தார். டிரசரி ஆபிஸில வேலை கிடைத்தது. போகவில்லை. அவருக்கு அவசியம் இல்லை. இருந்து சாப்பிடும் அளவுக்கு வசதி. புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும். அவருடைய மனைவிக்கு ஊர் திருவனந்தபுரம். குழந்தைகள் இல்லை. முதல் மனைவி இறந்ததும் லேசாக சித்தம் கலங்கி விட்டது. செய்வினை வைத்து விட்டதாகக் சொன்னார்கள். சொத்துகளை விற்க ஆரம்பித்தார். கொஞ்சம் தெளிவு ஏற்பட்டதும் இரண்டாவதாக கோந்தையின் அம்மாவைத் திருமணம் செய்து கொண்டு எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார். குளத்தங்கரையில் இருந்த புறம் போக்கில் வீட்டைக் கட்டிக்கொண்டு இங்கே காலம் தள்ள ஆரம்பித்தார். காக்கமூரிலும் நல்லூரிலும் உள்ள வயல்களில் இருந்து பாட்டம் நெல் வரும். குறிச்சி்த் தோப்பில் இருந்து தேங்காய் வரும். ஐம்பது தேங்காயை வைத்துக் கொண்டு மிச்சத்தை விற்பார். இங்கு வரும் போதே வயது ஐம்பது இருக்கும். கோந்தையும் அவள் தங்கையும் அதற்கு பிறகுதான் பிறந்தார்கள். கோந்தை என்ற சாரதா என்னுடைய கிளாஸ். சங்கீதம் அவரையும் கிருஷ்ணமூர்த்தியையும் ஒன்று சேர்த்தது. சாப்பாடு நேரம் தவிர பங்களா வீடே கதியென ஆனது. இரண்டு வீடு தள்ளி ஒரு திண்ணையில் ஒரு கூட்டம் சீட்டாடிக் கொண்டிருக்கும். இவர் அந்தப் போக்கம் போவதில்லை. கிருஷ்ணமூர்த்தி ஐயர் போய் சேர்ந்த பிறகும் இவருடைய பகலெல்லாம் பங்களா வீட்டு திண்ணையிலேயே கழிந்தது.
ஐயரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“யாரு பாடுனா இன்னைக்கு”
“யாரு வாசிப்புண்ணு கேளு” லேசாகச் சிரித்தார்.
“காருக்குறிச்சியா. ஐயய்யோ மறந்தே போனேன். தெரிஞ்சா வந்திருப்பேன். ஒண்ணாக இருந்து கேட்டிருக்கலாமே. சரி யாரு தவுலு”
“சண்முகவடிவேலும் தட்சிணாமூர்த்தியும்”
“சே. எனக்கு யோகம் இல்லாம போயிட்டே”
“லேசா இராகம் வாசிச்சதும் ஆபேரியோணு நெனக்கதுக்குள்ள ஹிந்துஸ்தானி மாதிரி கேக்கு. பீம்பிளாசப் போட்டு உருக்கிட்டாரு. இவரு வாசித்ததும் தவிலுல உருட்டுச் சொல்லு அடிச்சுட்டு, கையைப் பொத்தி வலந்தலையிலே ஜிம் ஜிம்முன்னு ஒரு முத்தாய்ப்பு வைச்சான். யாரு? சண்முகவடிவேலுதான். கந்தன் கருணை புரியும் வடிவேலுண்ணு இவரு எடுத்தாரு. மதுரை மணி பாடி எத்தனை தடவைக் கேட்டிருக்கேன். “வடிவேல்” என்று அவர் பாடுகையில் பழனி சுப்புடு மிருதங்கத்தில் பிளாங்குனு ஒரு சாப்பு கொடுப்பாரு. அது ஒரு அனுபவம். காருக்குறிச்சி வேறு தினுசு. ஒவ்வொரு வரியும் வாய்ப்பாட்டு மாதிரியே கேக்கு. தவுல் வாசிப்பு சொகம். வலந்தலையும் தொப்பியும் அப்படி ஒரு பொருத்தம். அனுபல்லவிக்கு போகதுக்குள்ள இடைவெளியில் சாடாருண்ணு தட்சிணாமூர்த்தி நூறு கிலோ மீட்டர் வேகத்திலே டிரெயின் போற மாதிரி வாசிக்கான். முழு முழுச் சொல்லா உதிர்த்துத் தள்ளிட்டான். நாகசுரமா தவிலா எதை பெருசுண்ணு சொல்லச் சொல்லுக. கேட்டுக் கிட்டே போய் சேர்ந்திருக்கணும் போல தோணிச்சுடே. இனிமேலு என்ன இருக்கு சொல்லு”
துருத்திக் கொண்டிருக்கும் நெஞ்சு எலும்பில் புரளும் தாடியைக் கையில் உருவிக் கொண்டே பெருமூச்சு விட்டார். நெஞ்சாங்கூடு ஏறி இறங்கியது. மீண்டும் கண்ணை மூடினார் ஐயர். வாசிப்பு அவர் மண்டைக்குள் மீண்டும் ஓடுவது எனக்குக் கேட்டது.
“நல்ல சாப்பாடு. நல்ல சங்கீதம் நல்ல படிப்பு. இதையெல்லாம் தான் மட்டும் ஆண்டு அனுபவிக்கணுமுன்னு நினைக்கது தப்பு” ஐயர் கண்ணை மூடிக்கொண்டே சொன்னார்.
“காலையிலேயே கச்சேரி தொடங்கியாச்சா. சரியான கூட்டாளிகோ ஓய். என்னத்தைத்தான் பேசுகேளோ!” குரலைக் கேட்டு திரும்பி்ப் பார்த்தேன்.
மாடு குளிப்பாட்டுவதற்காக கையில் பசுவையும் கன்றுக்குட்டியையும் பிடித்துக் கொண்டு வந்த இராமச்சந்திர மாமா சொன்னார்.
“நீரும்தான் வந்து பேசிக்கிட்டு இரியுமே. யாரு வேண்டாங்கா. என்ன சொல்லுக.” சொல்லிவி்ட்டு என்னைப் பார்த்தார் ஐயர்.
“எனக்கு ஆசைதான் ஓய். நமக்கு ஒருவாடு வேலை கெடக்கு. மாட்டை குளிப்பிச்சுட்டு, எருமையைக் கொண்டு வரணும். தோப்படிப் பத்திலே இண்ணைக்கு விதைப்பு. பாட்டை டேப்பில பதிச்சு வையும். சாவகாசமாக் கேட்கலாம். சிலோணுல கலவரமுண்ணு சொல்லுகா. ரேடியோ ஸ்டேசனை மூடிறுவான். அதுக்குள்ள எல்லாத்தையும் பதிச்சு வையும்”
“என்ன ஓய் சொல்லுகேரு. டிரான்சிஸ்டருக்கு பேட்டரிக் கட்டைக்கே என்ன செய்யதுண்ணு முழிக்கேன். வயலு அறுத்த உடனே நீருதான் ஒரு டேப்பு வாங்குமே.”
“உமக்கு பரிகாசமா இருக்கா. நெல்லுக்கு எங்க ஓய் விலை கிடைக்கு. ஏதோ கணேசனுக்கு முனிசிப்பாலிட்டில கைக்கூலி குடுத்து உத்தியோகம் வாங்கினதுனாலே கதை ஓடுக. இல்லேண்ணா விக்கிற விலைவாசியிலே கண்ணு தள்ளிரும் பார்த்துக்கிடும். எங்க போய் டேப்பை வாங்கச் சொல்லுகேரு” இராமச்சந்திர மாமா புலம்பினார்.
சொன்னாரேயொழிய, ஐயருக்கு டேப் வாங்கி பதிவு செய்வதில் இஸ்டம் கிடையாது.
“பதிச்சு வைச்சுக் கேக்கதுல எனக்கு பிரியம் இல்லை கேட்டியா. சொத்து சேர்க்கது மாதிரிதான். திரும்பத் திரும்பக் கேட்டு தெகட்டிரும். கேக்க மாட்டோமாணு ஏங்கி தவிச்சுக் கிடக்கையில ரேடியாவிலே போடுவான் பாரு. அதுதாண்டே வேணும். இப்படித்தான் நானும் சிவதாணுவும் சுசீந்திரத்தில போய் கச்சேரிக் கேட்டுட்டு வந்துட்டு வந்தோம். இன்னும் பாட மாட்டாளாணு இருந்தது. காலைல ரேடியோவை வைக்கேன். வசந்தகுமாரி கச்சேரி. தாமதமேன் சாமி தோடியில பாடினா. இப்படியெல்லாம் தினசரி நடந்திராது. நான் சொல்லுகது சரிதானே”
“எனக்கு நேரமாகு. நான் போறேன்” என்று கிளம்பினேன்.
“இராத்திரி வீட்டுக்கிட்ட வா. வானொலி படிச்சியா. ஆல் இந்தியா சங்கீத சம்மேளனத்துல ஆலத்தூர் பிரதரஸ் பாட்டு”
2
குளத்தின் அக்கரையில் உள்ள படித்துறையில் கடைசி படியில் கால்களை தண்ணீரில் நனைத்தப்படி உட்கார்ந்திருந்தேன். கோவிலின் உள்ள கருவறையில் தூக்கு விளக்குகள் எரிவது நன்றாக தெரிகின்றன. திருவிழாவுக்காக கோயில் முகப்பில் பெரிய காமணம் போடப்பட்டிருக்கிறது. ஒலிப் பெருக்கியில் “இராஜன் மகராஜன்” என உசைனியில் உருகிக் கொண்டிருந்தார் தியாகராஜ பாகவதர். திருவிழாவுக்கான சூழலை வேறு எந்தப் பாட்டும் இவ்வளவு பிரமாதமாக உருவாக்குவதில்லை.
“தூரத்தில் இருந்து கேட்டுப் பாருடே. அது என்னமோ செய்யும். காருக்குறிச்சி வாசிச்ச இராமா நின்னே மாதிரி” ஐயர் சொல்லியிருக்கிறார்.
பாட்டு முடியும் வரை குளிக்காமல் இருந்தேன். பின்னர் இரண்டு முங்கு போட்டு விட்டு, நேரே கோவிலுக்குப் பக்கத்தில் வந்தேன்.
முகப்பில் கூட்டம் இன்னும் சேரவில்லை. பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டு, சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு, வெற்றுடம்புடன் சின்னப் பயல்கள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேர் பந்தலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தில் இருந்து நார் உரித்து அதில் கற்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கோவிலுக்குள்ளே உறங்குபவர்களின் பின்னால் வால் மாதிரி கட்டி விட்டு ஒடி விடுவார்கள். வேறொரு கூட்டம் தேருக்கு உள்ள நுழைந்து வௌவால் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. மூடியிருந்த தேர் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆனாலும் வௌவால் எச்சத்தின் வீச்சம் இன்னும் மூக்கைத் துளைத்தது. நான்கு பேர் தேர்ச் சக்கரத்தை சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
வீட்டுக்குப் போய் துணியை மாற்றி விட்டு வரலாம் என்று கிளம்பினேன். பெண்கள் தெருவை அடைத்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
“லே சைக்கிளை விட்டு இறங்கி அதைத் தூக்கிட்டு போல. இவ்வளவு நேரம் நான் உசிரை விட்டுக் கோலம் போட்டிருக்கேன். நீ அதுக்கு மேல ஓட்டிட்டு போகப் பாக்கியா”
வேர்க்க வேர்க்க கலர் பொடிகளைத் தூவி கோலத்துக்கு மெருகேற்றிக் கொண்டிருந்த ருக்மணி அத்தை கத்திக் கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் கோயிலுக்குக் கிளம்பினேன். கோயிலுக்குள் ஒவ்வொருவராகப் போய் கொண்டிருந்தார்கள். திருவனந்தபுரம் சால்வாடி ஐயர் “இராமச்சந்திரம் பாவயாமி” என வசந்தாவில் பாடிக் கொண்டிருந்தார். முகிலன் விளையில் இருந்து வந்திருந்த பஜனைக் குழு உறுப்பினர் இரண்டு பேர் மட்டும் பந்தல் தூணில் சாய்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
பயல்கள் மண்ணை வாரி இறைத்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டும் அமளிப் பண்ணிக் கொண்டிருந்தார்கள்
“போங்கல. அங்கண தள்ளிப் போய் விளையாடுங்கல”
மூக்க அண்ணன் பயல்களை விரட்டினார். ஒரு ஐந்து நிமிடம் காணாமல் போனார்கள். மறுபடியும் அமளி ஆரம்பமானது.
“எளவு பயக்கோ சொன்னாலும் கேட்க மாட்டானுகோ” மூக்க அண்ணன் அலுத்துக் கொண்டார். கோயிலுக்கு வருவோர் அப்படியே நின்று சால்வாடி ஐயரை ஒருமுறை பார்த்து வி்ட்டு மீண்டும் கோயிலுக்கு உள்ளே போனார்கள். வெளியே வரும் போதும் அதே பார்வை.
கொஞ்ச நேரத்தில் செண்டை மேளம் ஒலிக்க ஆரம்பித்தது. சாமி புறப்பாடு அறிவிக்கப்பட்டதும் கூட்டம் முகப்பில் சேர்ந்து விட்டது. கருட வாகனத்தில் முத்துக்குடை பிடிக்க பெருமாள் எழுந்தருளினார். வாகனம் சுமப்பவர்கள் முன் வாசலில் வாகனத்தைக் கொண்டு வந்து, ஆயக்காலில் நிற்க வைத்தார்கள். எத்தனையோ வருடங்களாக வாகனத்தை சுமந்து வருகிறார்கள். காய்ப்பு ஏறி ஏறி காளையின் முதுகில் இருக்கும் திமில் போல் அவர்களின் இரு தோள்களும் மினுங்கின.
ஏற்கெனவே வரிசையாக குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. தீ வட்டியில் இருந்து கிளம்பும் தீயும் புகையும் சேர்ந்து புன்னைக்காய் எண்ணெயில் வாசனையை பறைசாற்றிக் கொண்டிருந்தன.
செண்டை நின்றது. நாகசுர வித்வான்கள் இருவரும் இடுப்பில் பட்டு சால்வையைக் கட்டிக் கொண்டு மல்லாரி வாசித்தனர். அது முடிந்ததும் சாமி கிளம்பி மேற்கு அக்ரஹாரத்துக்கு முனைக்கு வந்தது.
மதிலின் மேலே இருக்கும் கருடனுக்கு மாலை சாத்தி தீபாராதனை ஆனது. இராமசுப்பு ஏணியில் இருந்து இறங்குவதற்குள் மதில் சுவரில் படீர் படீரென தேங்காய் விடலை தெரித்தது.
“பொறுங்கடே. மண்டையை ஒடைச்சுராதீங்கோ. வீட்டுல நாலு உசுரு என்னை நம்பி கஞ்சி குடிக்கணும்” என்று கத்திக் கொண்டே இறங்கினார். அவர் சொல்வதை ஒருத்தனும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
நான்கு புறமும் இருந்து எறிய ஆரம்பித்தார்கள்.
“படீர் படீர்” என்று தெரிக்கிறது.
வாகனம் சுமப்பவர்கள் கருடன் முக்கை விட்டுத் தள்ளி நின்றார்கள்.
மதிலுக்குக் கீழே சாக்கை விரித்து அதில் விழும் தேங்காயை ஒரு கூட்டம் சேகரித்துக் கொண்டிருந்தது. தெரித்து சாக்கில் விழுந்ததும் சட்டென மூடிக் கொள்கிறார்கள்.
எறிவதில் பாதி தேங்காய் நேராக செக்குக்குப் போய் விடும். சண்முகம் பிள்ளைக் கடைக்கு புளிச்சத் தோசைக்கு சட்னிக்கு கொஞ்சம்.
விடலைச் சத்தம் நின்றதும் “செந்தில் ஆண்டவன்” என்று தொடங்கினார் நாகசுர வித்வான். “போங்கோ போங்கோ” என்று விரட்டினார்கள் வாகனத்தை சுமப்பவர்கள்.
அனுபல்லவியைத் தொடங்குவதற்கு முன்னாலேயே சாமி நகர ஆரம்பித்தது. நாகசுர வித்வானும் வாசித்துக் கொண்டே நடந்தார். அடுத்த வீட்டு நடைக்கு வந்து திருக்கண் சாத்துகையில் “முந்திக் கமலப் பெருமான்” என்ற வரிகளை எடுத்து விட்டு கரகரப்பிரியாவின் பிடிகளை இராகமாக வாசித்தார். காருக்குறிச்சி சக்கனி வாசிக்கும் போது எழும் பிடிகள் ஒலிக்க ஆரம்பித்தன.
மறுபடியும் “போங்கோ போங்கோ” என்றார்கள். வித்வான் வாசித்துக் கொண்டே நகர்ந்தார். ஐந்து நிமிடம் முழுமையாக ஒரு கீர்த்தனையைக் கேட்க முடியவில்லை.
தூரத்தில் இருந்து பார்த்தேன். திருக்கண் சாத்துக்காக வடக்கு அக்ரஹாரத்தின் முனையில் உள்ள பங்களா வீ்ட்டின் வாசலில் ஒரு மேசையில் குத்து விளக்கைக் கொளுத்தி வைத்திருக்கிறார்கள். தாம்பாளத்தில் சம்பங்கியும் மரிக்கொழுந்தும் சேர்த்து கட்டப்பட்ட ஆரம் மடித்து வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் சிங்கம் பழம் ஒரு சீப்பு இருக்கிறது. ஐயர் மட்டும் இல்லை.
மேளக்காரர்களை அங்கேயே விட்டு விட்டு, மீண்டும் தெற்கு அக்ரஹாரம் வழியாக கோவிலுக்குள் திரும்பினேன்.
“ஏ சாமிக்கு கூட சுற்றி வராம ஏன் திரும்பிட்ட” ஆறுமுகம் பிள்ளை மாமாக் கேட்டார்.
“ஒன்றும் இல்லை மாமா” என்று கூறி விட்டு நடந்தேன்.
சரணத்தில் “வேலன் வடிவேலன். வள்ளி தெய்வானை லோலன்” காற்றில் கலந்து வந்தது.