வாசகர் கடிதங்கள்

அன்புடைய ஆசிரியருக்கு

திரு.அருணகிரி எழுதிய ‘மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்’ நல்ல கட்டுரை. வடக்கு ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு அரசியலை வரலாற்று நிகழ்வுகளோடு அழகாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த கிளிண்டன் 2.0 விஷயம் புதியதாகப்பட்டது. நானும் பல வட அமெரிக்க நிதி நெருக்கடி விஷயங்களில் ஆழ்ந்து 2009 ல் இதை கவனிக்க தவறிவிட்டேன்.

ஆயினும், ஃபேஸ்புக்/டிவிட்டரினால் இத்தனை மாற்றங்கள் வந்துள்ளன என்பது முழுவதும் ஜீரணிக்க முடியவில்லை. சமீபத்திய ஜப்பான் சுனாமியில் டிவிட்டரின் பங்கு பாராட்டத்தக்கது. ஆனால், எகிப்து மற்றும் லிப்யா, டுனீசியாவில் நடக்கும் புரட்சி ஏன் சுவுதி அரேபியாவில் இல்லை? அங்கும் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஏன், இந்தியா/அமெரிக்காவில் கூட, இது அதிகரித்து வருகிறது.

கட்டுரையாசிரியர், நடந்த, நடக்கும் கொந்தளிப்புகளை மட்டும் அலசாமல், எதிர்கால போக்குகளையும் சற்று விவாதித்திருக்கலாம் என்பது என் கருத்து.

ரவி நடராஜன்

அன்புள்ள சொல்வனம் ஆசிரியருக்கு,

வணக்கம்.
இந்த சொல்வனம் இதழில் வந்த கணியான் கூத்து கட்டுரை அபாரம். நான் மிகவும் ரசித்துப் படித்தேன். திருச்செல்வன் இதை ஒரு கலை வடிவம் என்று மட்டுமில்லாமல், தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்து எழுதியிருப்பது மிகவும் அற்புதமானதாகவும், அவர் ரசனையின் உண்மையைச் சொல்வதாகவும் இருந்தது. இதைப் போன்று அழிந்து, நசிந்து வரும் நாட்டார் கலைகளைக் குறித்து சொல்வனம் வெளியிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரை நடுவே தரப்பட்ட திரு.இளையராஜா அவர்களின் பதிவு வீடியோ மிகவும் சுவாரசியமாக இருந்தது. தற்காலச் சூழலில் சொல்வனத்தின் பங்கு மிக மிக ஆரோக்கியமான ஒன்று. இப்படிப்பட்ட கட்டுரைகளை நம் அச்சிதழ்களில் கூடப் படிக்க முடிவதில்லை.

அன்புடன்,
சாலை.அரங்கராசன்

ஆர்.கே.ஸ்ரீகண்டன் அவர்களின் பேட்டி சிறப்பாக இருந்தது. பேட்டியெடுத்த எஸ்.சுரேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகள். வெறும் சம்பிரதாயமான ‘வாழ்த்து நவிலும்’ உரையாடலாக இல்லாமல், இக்கால இசைப்போக்குகளைக் குறித்து அவர் கருத்துகளை வெளியிட்டதும் அருமை. நாளொரு புதுமை, பொழுதொரு பரிசோதனை என்றிருக்கும் நம் சங்கீதச் சூழலுக்கு, இவர் சொல்லும் ‘அடிப்படைகளில் கவனமாக இருங்கள்’ என்ற அறிவுரை மிகவும் அவசியமான, தேவையான ஒன்று. கட்டுரையில் இவர் பாடிக்காட்டிய இடங்களில் ஒலித்துணுக்குகளை வெளியிட்டது அருமை. முழுமையாக ஒரு பாடலையும் பாடவைத்து வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

அன்புடன்,
ரா.மணிகண்டன்

சொல்வனம் இப்போதெல்லாம் வெகு தாமதமாக வருவது கவலையளிக்கிறது. முன்பெல்லாம் ஒரு நாள், இரண்டு நாள் என்றிருந்த காலதாமதம், இப்போது ஒரு வாரமாகிவிட்டது. காலம் வழுவாமல், சீராகக் கொண்டு வருவது இதழ் பற்றிய கவனத்தை வாசகர்களிடையே தக்கவைத்துக்கொள்ள மிகவும் அவசியமான ஒன்று.

(மொழிபெயர்க்கப்பட்ட கடிதம்.)

– ஆர்.சதீஷ்

அன்புள்ள ஆர்.சதீஷ்,

உங்கள் கடிதத்துக்கு நன்றி. ஆசிரியர் குழுவினரின் வேலைப்பளு காரணமாகவும், கடந்த மாதத்தில் வழங்கியில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுகளாலுமே இத்தகைய தாமதம் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. இந்த இதழை எப்போதும் போல வெள்ளியன்றே வெளியிடுவோம்.

– ஆசிரியர்.