மகரந்தம்

நைட்ரஜன்கள் எங்கே சென்றுவிட்டன?

நம் புரதங்கள், அவற்றின் செங்கல்களான அமினோ அமிலங்கள், நியூக்ளியோடைட்கள் எல்லாவற்றிலும் நீக்கமற உள்ள ஒரு முக்கிய சமாச்சாரம் நைட்ரஜன். வளி மண்டலத்திலுள்ள நைட்ரஜனை நிலத்துக்கு கொணர்வதில் முக்கிய பங்கு வகிப்பவை நுண்ணுயிரிகள். இந்த நுண்ணுயிரிகள் நைட்ரஜனை நிலத்தில் நிலைப்பெறுத்துகின்றன. உதாரணமாக பட்டாணி, அவரை, மொச்சை போன்றவற்றின் வேர்களில் இருக்கும் நுண்ணுயிரிக் கோளங்கள் இந்த வேலையைச் செய்யும். வளி மண்டலத்திலிருந்து இது தவிர மின்னல் மூலமாகவும் நைட்ரஜன் பூமிக்கு வரும். இந்த நைட்ரஜன் புவியில் ஒரு சுழற்சியில் உள்ளது. வளி மண்டலத்திலிருந்து நிலம் நீர் என செல்லும் அச்சுழலில் இப்போது கடல்களில் உள்ள நைட்ரஜனின் அளவு குறையத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள். உண்மையிலேயே நைட்ரஜனின் அளவு குறைவடைந்திருக்கிறதா அல்லது அதன் சுழற்சியில் நாம் இன்னும் அறிந்திராத மர்மப் பாதைகள் இருக்கின்றனவா என அலசுகிறது இந்த பதிவு.

http://scientistatwork.blogs.nytimes.com/2011/03/23/where-has-all-the-nitrogen-gone/?hpw

யானைகளின் பாதுகாப்பு அரண்

யானைகள் என்றதும் நினைவுக்கு வருகிறது. யானைகளின் ஞாபக சக்தி பற்றி எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அவற்றை உறுதிப்படுத்துகிற மாதிரி ஒரு செய்தி – யானைகள் சிங்கங்களின் உறுமலைக் கேட்டதும் பாதுகாப்பாக அரண் அமைத்து அணிவகுப்பது அவற்றின் இயல்பு. காரணம், பக்கவாட்டிலிருந்தும்  பின்புறத்திலிருந்தும் சிங்கம் தாக்கும்போது யானையால் தன்னைத் தற்காத்துக் கொள்வது கடினம். ஆப்பிரிக்க யானைகளுக்கு சிங்கங்களின் கர்ஜனையை ஒலிபரப்பியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். வயதில் மூத்த பெண் யானைகள் (பாட்டி முறையாக வேண்டும்) தலைமை தாங்கும் யானைக் கூட்டங்கள் வேகமாகவும் சாதுரியமாகவும் தம் கூட்டத்தில் உள்ள சிறு யானைகளை பாதுகாப்பாக அரண் அமைத்து சத்தம் வந்த திசை நோக்கி அணிவகுக்கின்றனவாம். இந்த உத்தி மூத்த பெண் யானை இல்லாத கூட்டங்களில் சரிவரப் பழகப்படவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். மூத்த பெண்யானைகள் 80 வயது வரை கூடத தம் செவிப்புலன் திறமையைச் சிறிதும் இழக்காமல் இருப்பதும் மிக்க உதவியாக இருக்கிறதாம். இது தொடர்பான சிறு வீடியோ இங்கே.

விலங்குகளின் அறம்?!

மனிதனின் அறம் பற்றிப் பேசினாலே சந்தேகமாகப் பார்க்கின்றனர் இந்த காலத்தில் “விலங்குகளின் அற வாழ்வு” (The Moral Lives of Animals) என்று புத்தகம் எழுதினால் சும்மா விட்டு விடுவார்களா? போட்டு தாளித்து விட்டனர் – அவற்றில் ஒரு கண்டனக் குரல் இங்கே. இவர்கள் மனிதனையே பழக்கப்படுத்தப்பட்ட எந்திரம் என்று சொன்னாலும் சொல்வார்களேயன்றி மிருகங்களுக்கு நன்றி, நேசம், கருணை போன்ற உயர்குணங்கள் இருப்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மனிதன் என்ன சொன்னால் என்ன, மிருகங்கள் தமக்குத் தெரிந்த அறவாழ்வு வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. இங்கே பாருங்கள், கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் ஒரு சிறுத்தை தான் கொன்ற பபூனின் ஒரு நாள் குழந்தையைக் காப்பாற்றி அதனிடம்  ‘நேசம்’ காட்டுகிறது. இது வனவிலங்குகளுக்கும் கருணை உண்டு என்று நம்மை எண்ண வைக்கிறது.

மெசஞ்சர் என்ற விண்ணூர்தி

இங்கிருந்து எழுபத்து ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட மைல் தொலைவில் இருக்கிறது மெர்குரி கோள். இந்தக் கோளை நோக்கி ஏவப்பட்ட மெசஞ்சர் என்ற விண்ணூர்தி தன் பயணத்தில் ஒரு கட்டத்தில் நொடிக்கு அறுபத்து மூவாயிரம் கிலோமீட்டர் வேகத்தை நெருங்கியது. இந்த வேகத்தில் பூமியை விட்டு ஒரு வாகனம் கிளம்பியதேன்றால் அது நிலவை ஒன்றே முக்கால் மணி நேரத்தில் தொட்டு விடுமாம். இவ்வளவு வேகமாக மெர்குரியை நெருங்கிய மெசஞ்சர் மெல்ல மெல்ல நிதானித்து இப்போது அதன் புவிஈர்ப்பு வட்டத்தில் சிக்கிக் கொண்டு அதை சுழலத் துவங்கி இருக்கிறது. இதன் ஆறரை ஆண்டுப் பயணம் பொதுவாக மணிக்கு ஒரு லட்சத்து முப்பத்து ஆறாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் இருந்திருக்கிறது. இரண்டே இரண்டு மெர்குரி நாட்கள் (பூமியில் ஏறத்தாழ ஒரு வருடம்) இது மெர்குரியை சுற்றிவரப் போகிறது. மெர்குரி, வீனஸ், பூமி, செவ்வாய் ஆகிய இந்த நான்கு கற்கோள்களில் முதலில் தோன்றிய கோள் மெர்குரி. இதன் இயல்பை அறிவது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் உருவான வகையை அறிய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெசெஞ்சர் அனுப்பிய மெர்குரி படங்கள் இங்கே. இதன் நிலைப்பாதையை செயல்படுத்தியது குறித்த வீடியோ இங்கே

ஒளியை நோக்கி ஏக்க நினைவுகள்

சிலேவில் உள்ள ஈரப்பதம் அறவே இல்லாத அடகாமா பாலைவனத்தில் விஞ்ஞானிகள் பால்வெளிக்கு அப்பாலுள்ள நட்சத்திரங்களில் உலகின் துவக்கத்துக்கான ஆதாரங்களைத் தேடுகிறார்கள். வானோக்கி நிமிர்ந்த அந்த துல்லியமான டெலஸ்கோப்புகளுக்கு கீழே, சற்று தொலைவில், சிலேவின் சர்வாதிகாரி அகுஸ்டொ பினோச்செட்டால் (Pinochet) கொன்று புதைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அதே சூரியனின் கீழ், தங்கள் அன்புக்குரியவர்களின் சடலங்களைத் தேடுகின்றனர். பத்ரீஸியோ குஸ்மான் (Patricio Guzman) இயக்கிய “ஒளியை நோக்கி ஏக்க நினைவுகள்” (Nostalgia for the Light). சென்ற ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான ஐரோப்பிய திரை விருது பெற்றது. இவ்வாரம் உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு அறிமுகம் இங்கே: அண்ட சராசரங்களின் இயக்கத்தில் ஒளிப் புள்ளிகளுக்கும், பாலைவனத்து மணலில் புதைந்த அடையாளமழிக்கப்பட்ட உடலங்களுக்குமிடையே அவர் காண்பது ஒரு ஒற்றுமை.  இரண்டு முயற்சியும் கடந்தகால இருப்பில் தேடுவன.  ஏனெனில் நம்மை வந்தடையும் ஒளிப் புள்ளிக்கான மூலம் அங்கிருக்கிறதா இன்னும் என்பது நமக்கு நிச்சயம் இல்லை. அந்த ஒளியை அனுப்பிய ஒரு நட்சத்திரம் எத்தனையோ வருடம் முன்பு அந்த ஒளியை விடுவித்தது.  பாலைவனத்து மண் துகள்கள் எத்தனையோ அத்தனை துகள் விவரங்கள் அண்ட வெளியிலும் கிடக்கின்றன. நாம் தேடுவதோ ஒரு நட்சத்திரத்தை, அகுஸ்டொ பினொச்செட் என்ற சர்வாதிகாரி கொன்று புதைத்த சடலங்கள் இந்தப் பெரும்பரப்பில் எங்கோ இருக்கின்றன. அவற்றைத் தேடி சலிக்கிறார்கள் பெண்கள். இவர்களனைவரையும் இணைக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் இங்கே.