தம்புராவின் மெளனம்

தஞ்சை இசைச்சூழல் தமிழகத்தின் தொன்மையான கலாசாரப் பின்னணியை உயிர்ப்போடு வைத்திருந்த ஒன்று. பெருநகரங்களுக்குக் கலைஞர்கள் இடம்பெயர்ந்ததில் கொஞ்சம் கொஞ்சமாக அச்சூழலும் மறைந்து, இப்போது இல்லையென்றே சொல்லுமளவுக்கு ஆகிவிட்டது. தஞ்சை இசைச்சூழலில் எஞ்சியிருந்த வளமான இசைக்கலைஞர்களில் ஒருவரான தஞ்சை வெங்கடேசய்யங்கார் சென்ற வாரம் தன்னுடைய 85-ஆவது வயதில் மறைந்தார். அவரைக் குறித்தும், தஞ்சை இசைச்சூழலைக் குறித்தும், தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்ட தஞ்சை K.சிவசுப்ரமணியன் அவர்களிடம் ஒரு பேட்டி கண்டோம். சித்தார்த்தன் என்ற பெயரில் இவர் படைப்பிலக்கியத்திலும் பங்காற்றியிருக்கிறார். இப்பேட்டி தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் எடுக்கப்பட்டது.

தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களைப் பற்றியும், அவர் யார் யாரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டார் என்பது குறித்தும் சொல்லுங்களேன்?

எனது குருநாதர் தஞ்சை ஸ்ரீ.L.வெங்கடேசய்யங்கார் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, நெய்குப்பை கிராமத்தில் 24.3.1925 அன்று பிறந்தார். தாயார் பட்டம்மாள். இவரது தந்தையார் ஸ்ரீமான் லக்ஷ்மி நாராயண அய்யங்கார் ஆக்கூர் கோயிலில் (மாயவரம் அருகில்) பட்டாச்சாரியாராக பெருமாள் கைங்கர்யம் செய்து வந்தார். அவருக்கு நல்ல சங்கீத ஞானம், ஸஹஸ்ராம நாம அர்ச்சனைகள் செய்யும் பொழுதே, அதைப் பல ராகங்களில் ராகமாலிகையாக இசை நயத்துடன் செய்வார் என்று குருநாதர் கூறி இருக்கிறார். தனது தந்தையாரோடு இவர் கோயிலில் பக்திப் பாடல்களைப் பாடி வந்தார்.

சங்கீத ஞானம் மிக்க தந்தையார் தனது மகன் வெங்கடேசனுக்கு சங்கீதம் கற்பிக்க விரும்பினார். சிதம்பரத்தில் அப்பொழுது வசித்து வந்த எம்பார் ஸ்ரீரங்காச்சாரியிடம் அனுப்பி வைத்தார். அப்பொழுது அவருக்கு வயது 11. பிறகு ஸ்ரீரங்காச்சாரியாரின் புதல்வர் எம்பார் விஜயராகவாச்சாரியாரிடம் கற்றுக் கொண்டார், சில ஆண்டுகளில் குருவின் குடும்பம் இடம் பெயர்ந்ததால் ஊர் திரும்பிய அவர் அருகிலுள்ள மாயவரத்தில் வயலின் வித்வான் திரு.கோவிந்தராஜ பிள்ளையிடம் இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார். தனது 18 வயது வரை அவரிடம் இசைப்பயிற்சி தொடர்ந்தது. நேரம் தவறாமல் காரியங்கள் செய்வது, மிடுக்காக உடை அணிவது, கட்டுப்பாடு முதலிய நல்ல பண்புகளையும் பிள்ளைவாளிடம் கற்றுக் கொண்டதாக என் குரு என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.

நாளடைவில் இவரை மதிப்பீடு செய்த குரு கோவிந்தராஜ பிள்ளை இவருக்கு வாய்ப்பாட்டிலுள்ள ஆர்வத்தைப் புரிந்து கொண்டார். தனது நண்பரான தஞ்சாவூர் லக்ஷ்மிநாராயண பாகவதரின் (தஞ்சை நாணு) கச்சேரிகளுக்கு திரு.கோவிந்தராஜ பிள்ளை அடிக்கடி வயலின் வாசிப்பார். தஞ்சை நாணு அவர்களிடம் பேசி இவரை அவரது சிஷ்யராகச் சேர்த்து விட்டார். தனது 18 வயது முதல் தஞ்சை நாணுவிடம் சங்கீதம் கற்றுத் தேர்ச்சியடைந்த எனது குரு பிறகு கச்சேரிகளில் பல ஆண்டுகள் உடன் பாடி வந்தார்.

அக்காலத் தஞ்சை இசைச்சூழலைக் குறித்து உங்கள் குரு உங்களிடம் பேசியிருக்கிறாரா? அதைக் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

நிறைய பேசியிருக்கிறார். அப்பொழுது மிருதங்கத்தில் புகழ்பெற்ற வித்வானான தஞ்சாவூர் வைத்தியநாதய்யர் தஞ்சையில் இருந்தார். பாலக்காடு மணி அய்யர் அவரிடம் இசை கற்றுக்கொண்டிருக்கிறார். அவருடைய புதல்வி லலிதாவுக்கு என் குரு வெங்கடேசய்யங்கார் பாட்டுச் சொல்லிக் கொடுத்து வந்தார். (இவர் பின்னாளில் D.K.பட்டம்மாளின் புதல்வர் சிவக்குமாரை மணந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தார். லலிதாவின் புதல்விதான் நித்யஸ்ரீ.) அந்த நாட்களில் வைத்தா அண்ணாவின் சிஷ்யர் ஸ்ரீ T.K.மூர்த்தியும் அங்கேதான் வசித்து வந்தார், தஞ்சாவூர் டி.எம்.தியாகராஜனும். தஞ்சை நாணுவும் நண்பர்கள், தினமும் நாணு வீட்டில் சந்தித்து சாதகம் செய்வார்கள். திரு. T.M.T-யின் தகப்பனார் மகாலிங்கம் பிள்ளை நல்ல ஞானஸ்தர். ராமலிங்க ஸ்வாமி மடம், ஸ்டேஷன் பிள்ளையார் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உத்ஸவங்களிலெல்லாம் பிரபல வித்வான்கள் கலந்து கொள்வார்கள்.

4

[மேலே புகைப்படத்தில் ஆனந்த தாண்டவபுரம் ராதா கல்யாணத்தில் தஞ்சை வெங்கடேசய்யங்கார் கச்சேரி.  கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின். தஞ்சாவூர் உபேந்திரன் மிருதங்கம். திருவாரூர் ராஜப்ப ஐயர் கஞ்சிரா.  ராதாகிருஷ்ணன் பின்பாட்டு.]

ஒரு முறை G.N.பாலசுப்பிரமணியம் ஆஞ்சநேயர் கோயில் உற்சவத்தில் பாட வந்தார். அப்பொழுது அவர் பிரபலமாகவில்லை. வெங்கடேசப்பெருமாள் கோயில் படிகளில் உட்கார்ந்து மகாலிங்கம் பிள்ளையுடன் எனது குருவும் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தார். G.N.B-யின் சாரீரத்தின் கவர்ச்சியும் பிர்க்காவும் ரசிகர்களை அசத்திவிட்டது. அப்பொழுது மகாலிங்கம் பிள்ளை என் குருவிடம் கூறினாராம், “அய்யங்கார்வாள்! என்னய்யா இந்த மனிஷன் தொண்டையிலே சீவாளியைச் சொருகிட்டில்ல பாடறான்! அடுத்த வருஷம் பாரு. இந்த ஆள்கிட்டே டேட் வாங்க முடியாது” என்றாராம். எனது குருநாதருக்கும் அவரைப் போன்ற இளம் பாடகர்களுக்கும் ஜி.என்.பி என்றால் ஒரே ப்ரமை. அந்தப் பாணி அவர்களைக் கவர்ந்தது. அப்பொழுது உமையாள்புரம் சிவராமன் தஞ்சை வைத்தியநாதய்யரிடமும், பிறகு பாலக்காடு மணி அய்யரிடமும் மிருதங்கம் கற்றுக் கொண்டிருந்தார். பொதுவாக மிருதங்க சாதகத்திற்கு யாராவது வாய்ப்பாட்டு பாடினால் பக்கவாத்யம் சிறப்பாக வாசிக்கப் பயில முடியும். எங்கள் குருநாதர் சிவராமனின் சாதகங்களுக்கு நிறையப் பாடியிருக்கிறார் என்று சிவராமன் குறிப்பிட்டார்.

தஞ்சையில் என் குரு வீட்டில் பல வித்வான்களை நான் சந்தித்திருக்கிறேன். தஞ்சாவூர் சங்கரய்யர், டாக்டர்.S.ராமநாதன், T.K.மூர்த்தி, சிக்கல் பாஸ்கரன், நாகை முரளி, உபேந்திரன் இப்படிப் பலர். அப்பொழுதெல்லாம் கீர்த்தனைகளைப் பரிமாறிக் கொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் பாடம் செய்து கொள்வார்கள். சங்கீத சம்பந்தமான அலசல்களும் நடக்கும். அப்படிப் பரிமாறிக் கொண்ட கீர்த்தனைகளை உடனே எனக்கும் சொல்லிக் கொடுப்பார். “பஜன ஸேயு மார்க்கமுலு” என்ற நாராயணி கீர்த்தனை அப்படிப் பாடம் செய்ததுதான்.

ஒரு சமயம் வழக்கம் போல் மேல் அலங்கம் வீட்டு மாடியில் எனது குரு சாதகம் செய்து கொண்டிருந்தார். மிருதங்கம் ராஜமையர் (தஞ்சை உபேந்திரன் குரு) பின் தெருவில் இருந்தார். கையில் கஞ்சிராவுடன் வந்து விட்டார், “வெங்கடேசா, எங்காத்து மாடிக்கு போனேனா? உன் பாட்டுக் கேட்டுது. கை துருதுருத்தது. கஞ்சிரா எடுத்துண்டு வந்துட்டேன். பாடு!” என்று கஞ்சிரா வாசிக்க ஆரம்பித்து விட்டார். அன்றைய சூழலில் தஞ்சையில் வித்வான்கள் எப்படி எளிமையாய் பழகினார்கள், எவ்வளவு நெருக்கமான நட்புணர்வுடன் கலையினால் ஒன்றுபட்டிருந்தார்கள் என்பதைக் குறிப்பிடவே இந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

உங்கள் குருவின் குரு ‘தஞ்சை நாணு’ அவர்களும் மிகப்பெரிய வித்வான் என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்.

தஞ்சை நாணு அவர்களின் இயற்பெயர் லக்‌ஷ்மி நாராயண பாகவதர். சென்னை எழும்பூர் ஜகன்னாத பக்த சபா, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் போன்ற பழைய சபாக்களில் தனது குருவுடன் பாட, தம்புரா சகிதம் போட்மெயிலில் சென்னைக்குப் பயணம் செய்தது, பிறகு மயிலாப்பூரில் உள்ள குருவின் நண்பர் அம்பாசமுத்திரம் சுப்ரமணிய அய்யர் (என்ஜினீயர்) வீட்டிற்கு நாலணா டிக்கட்டில் டிராம் வண்டியில் சென்றது, குருவும் சீடரும் 20 ரூபாய் செலவில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்து போன விவரங்களை சுவாரசியமாக வர்ணித்திருக்கிறார்.

ஒரு சமயம் என் குரு தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவரோடு சென்னை கச்சேரிக்கு உடன் பாடச் சென்றிருந்தார். கச்சேரியில் சங்கராபரண ராக ஆலாபனை படு ஜோராக அமைந்தது. கல்கி அவர்கள் அந்தக் கச்சேரி பற்றிப் பாராட்டி விமர்சனம் எழுதினார். மறுநாள் கல்கி கார்டனுக்கு அழைத்து அவரைப் பாராட்டினார்களாம் அப்பொழுது கல்கி, சதாசிவம், எம்.எஸ். அம்மா எல்லோரும் இருந்தார்களாம். அப்பொழுது கல்கி இவரது சங்கராபரண ஆலாபனையைப் பாராட்டி விட்டு நகைச்சுவையாக, “தஞ்சாவூர் லக்ஷ்மி நாராயண பாகவதர் என்ற பெயரைப் பார்த்து பயந்து விட்டேன். வயசான மூத்த வித்வானோ என்று நினைத்தேன். நேரில் பார்த்தால்தான் நீர் இளைஞர் என்று தெரிந்தது, இனி இப்படி எல்லாம் பயமுறுத்த வேண்டாம். ‘தஞ்சை நாணு’ என்றே பெயர் வைத்துக் கொள்ளும்!” என்றாராம். அது முதல் தஞ்சை நாணு என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. செம்மங்குடி சீனிவாஸ அய்யர் சில கச்சேரிகளுக்குப் போக அசந்தர்ப்பமான பொழுது “எனக்கு பதிலாக நாணுவைப் பாடச் சொல்லுங்கள்” என்பாராம். துரதிர்ஷ்டவசமாக தஞ்சை நாணு இளம் வயதிலேயே காலமானார்.

தன்னுடைய குருமார்கள் மீது என் குருவுக்கு அளவு கடந்த மரியாதையும், பக்தியும் இருந்தது. தஞ்சை நாணு அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. என் குரு அவருக்கு ஒரு மகனைப் போலவே பணிவிடைகள் செய்தார். நாணு அவர்கள் மறைந்தபின்னும் மன்னியிடம் சிஷ்ய மனப்பான்மையுடனே பழகினார். எனக்கும் அவர்களுடன் அறிமுகம் உண்டு. அவர்கள் மறைவு வரையிலும் இந்த உறவு தொடர்ந்தது, மன்னியின் தங்கை குடும்பத்தினருடனும் தொடர்புகள் நீடிக்கின்றன. குருவின் மறைவு நாளைத் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் ஸமாராதனை செய்து அனுசரிப்பார். அப்பொழுது தஞ்சையிலிருந்த வித்வான்களையும் தனது சிஷ்யர்களையும் அழைப்பார்.

உங்களுக்கு சங்கீதத்தில் ஆர்வம் வந்தது எப்படி? தஞ்சாவூர் வெங்கடேசய்யங்காரோடு எப்படி அறிமுகம் ஏற்பட்டது?

என் தந்தையார் ஸ்ரீ குப்புஸ்வாமி சங்கீத வித்வான் இல்லை என்றாலும் நல்ல சங்கீத ரசிகர். தாயார் மதுரம் இசையோடு இலக்கியமும் ரசிக்கத் தெரிந்தவர், குன்றக்குடியில் பங்குனி உத்தர உற்சவத்தில் இரவு ஸ்வாமி கிரிவலம் புறப்பாடு. கோயிலுக்கு முருகன் கிரிவலம் முடிந்து வந்து சேரும்போதுபொழுது புலர்ந்துவிடும். எனது தந்தையார் அப்பொழுது குன்றக்குடியில் போஸ்ட் மாஸ்டராக இருந்தார். ஸ்வாமி புறப்பாட்டில் அன்று பிரபல நாகஸ்வர வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை கச்சேரி. இரவு ஸ்வாமி புறப்பாட்டுக் கச்சேரிக்கு அப்பா என்னையும் அழைத்துச் சென்றார். எனக்கு அப்பொழுது 9 வயது. இரவு நீண்ட நேரம் நாகஸ்வர இசையில் தோய்ந்திருந்து விடியற்காலை வீட்டிற்கு வந்தோம். அப்படி இசைகேட்டுவிட்டுத் திரும்பும்போதெல்லாம் என் அப்பா என்னிடம் ராக ஆலாபனை செய்து என்ன ராகம் என்று கேட்டபடி வருவார். சரியாகச் சொன்னால் அவர் மிகவும் சந்தோஷப்படுவார்.

பள்ளி நாட்களில் பாரதி பாடல்கள் பாடுவேன். பரிசாக பாரதியின் “கண்ணன் பாடல்கள்” நூல் கிடைத்தது. அப்பொழுது திருப்புகழ் மணி தம்பதியர் திருப்புகழ் பாடுவார்கள். அவர்களிடம் பல திருப்புகழ்களை இசையுடன் கற்றுக் கொண்டேன். மதுரை மணி அய்யர் பாட்டில் எனக்கு ஒரு மோகம் உண்டு. அவருடைய சீடனாகும் ஆசையும் இருந்தது. குடும்பச் சூழல் இடம் கொடுக்கவில்லை.

பின்னர் தொலைபேசித் துறையில் வேலைக்கமர்ந்த பின் 1954-இல் தஞ்சைக்கு மாற்றலாகி வந்தேன். எனக்கு இலக்கியத்திலும் ஆர்வம் இருந்ததால் அடிக்கடி ஸரஸ்வதி மஹால் நூலகத்திற்குப் போவேன். அங்கே கணபதி ராவ் என்ற மராத்தி பண்டிதர் நண்பரானார். அவரிடம் என் இசை ஆர்வத்தை வெளியிட்டேன். அவர் என்னை வைரமங்கலம் லட்சுமி நாராயணனிடம் சேர்த்து விட்டார். அவர் வித்வான் T.K.ரெங்காச்சாரியாரின் சீடர். ஓராண்டு அவரிடம் ஆரம்பப் பாடங்கள் கற்றுக் கொண்டேன். பிறகு அவர் சென்னைக்குக் குடி பெயர்ந்து சென்றபோது தனது நண்பரான L.வெங்கடேசய்யங்காரிடம் என்னை சீடராகச் சேர்த்துவிட்டார். அப்படித்தான் என் குரு தஞ்சை வெங்கடேசய்யங்காரிடம் சிஷ்யனாகச் சென்று சேர்ந்தேன்.

அவரிடம் இசை கற்றுக் கொண்ட அனுபவத்தைக் குறித்துக் கூறுங்களேன். அவருடைய கற்பிக்கும் முறை எப்படியிருந்தது?

நான் அவரிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது தஞ்சை போலீஸ் ராமசாமி நாயக்கன் தெருவில் இருந்தார். (காமாக்ஷி அம்மன் கோயிலுக்குப் பின்புறம்) தஞ்சை கல்யாணசுந்தரம் பள்ளி ஆசிரியர் சுந்தராமையர் வீட்டில் குடித்தனம் இருந்தார். கீழே ஒரு சிறு சமையல்கட்டும் நாலுகட்டு முற்றத்தில் பாதிப் பகுதியும்தான். மாடியில் ஒரு சின்ன அறை. அதில்தான் இசை சாதகம், வகுப்பு எல்லாம். பல வித்வான்கள் அவ்வப்போது வருவதுண்டு, ஒரு சமயம் மதுரை ஸ்ரீரங்கம் அய்யங்கார் வந்திருந்தார். அவருடன் ஒரு ஸங்கீதப் பரிமாற்றம் நடந்தது, “ஏபாபமு” என்ற அடாணா கீர்த்தனையை அவர் பாட எனது குருநாதர் கற்றுக் கொண்டார். பல்லவியில் பதினாறு சங்கதிகள். பிறகு எனக்கு அதைக் கற்றுத் தந்தார்.

1

[தஞ்சை வெங்கடேச அய்யங்காருடன், தஞ்சை கே.சிவசுப்ரமணியன்]

எனது குருநாதர் நல்ல வாட்டசாட்டமான உருவம் அமைந்தவர். கருகருவென்று கட்டுக்குடுமி. காதில் கடுக்கன். இசை கற்றுக்கொடுப்பதற்காக அவர் மேல வீதியில் சைக்கிளில் போகும் காட்சியை நான் ரசித்திருக்கிறேன். அவர் பழகும் வீடுகளிலெல்லாம் அவரை மிகவும் மரியாதையுடனே நடத்துவார்கள். இவரும் அவர்களிடம் மிகவும் நன்றாகப் பழகுவார். அவருடைய சம்பிரதாயமான தோற்றத்தைப் போலவே அவருடைய சங்கீதமும் சம்பிரதாயமானது. சங்கீதத்தின் புராதனமான மதிப்பீடுகளை பாதுகாப்பதில் அவர் முன்னோடியாக இருந்தார்.

பதவி உயர்வு காரணமாக 1965-க்குப்பின் புதுக்கோட்டையை விட்டு திருவனந்தபுரம், கௌஹாதி போன்ற தூர தூர இடங்களுக்கும் நான் போக நேர்ந்தது, இது சங்கீதப் பயிற்சிக்கு இடையூறாக வந்தது, பிறகு சென்னைக்கு வந்து சேர்ந்தபின் அவ்வப்பொழுது நான் தஞ்சைக்குப் போவதன் மூலம் சங்கீதம் தொடர்ந்தது. சிலசமயம் அவரும் எனக்கு வகுப்பு எடுப்பதற்காக சென்னைக்கு வந்து தங்குவார்.

ஒரு சமயம் சென்னை வந்திருந்தபொழுது. எனக்கு நிரவல் செய்யும் முறையைக் கற்பித்தார். சங்கராபரண ராகத்தை ஒவ்வொரு ஸ்வரத்திலும் நின்று படிப்படியாக மேல் காந்தாரம் வரை ஆலாபனை. அகாரக் கோர்வைகளை நிறுத்தி நிறுத்திப்பாடி என்னையும் பாட வைத்தார். பிறகு “எந்துரு பெத்தல” கீர்த்தனை பாடி “வேத சாஸ்திர தத்வார்த்தமுலு தெலிஸி” என்ற சரணத்தில் நிரவல் பாடும் முறையைப் பாடி விளக்கினார். தாளத்தில் எந்த எழுத்து எந்த அக்ஷரத்தில் விழுகிறதோ நிரவலிலும் அது மாறக்கூடாது என்பார். அந்த இடைவெளிகளில்தான் நிரவலின் வேறுபட்ட சஞ்சாரங்கள் அமைய வேண்டுமென்பார். சுமார் அரை மணி இந்தப் பயிற்சி நடந்தது. இந்தக் கட்டுப்பாட்டு விதிகளை மீறாமல் நிரவல் செய்ய நான் திக்குமுக்காடினேன். அவர் விடவில்லை. அன்று அவருடைய பொறுமையை ரொம்பச் சோதித்து விட்டேன்! அதுபோல ஸ்வரம் பாடி இடத்துக்கு வந்து எடுப்பதும் எனக்குச் சோதனையாக இருக்கும். இதற்கு என் மனைவி சாட்சி.

“ருக்கு! கொஞ்சம் பெட்ரோல் வேணுமே” என்பார். ருக்கு காபி கொண்டு வந்து கொடுப்பாள். காலையில் இட்லி காபி முடிந்தபின் ஒன்பதரை மணிக்கு சாதகத்திற்கு உட்கார்ந்தால் 11.30 அல்லது 12 ஆகிவிடும், அதன்பின் குளித்து ஜபம் செய்து பிறகு சாப்பாடு. சற்றுத் தூக்கம். மாலை 3.30 மணிக்கு எழுந்த பின் ஒரு டீ. பிறகு 5 மணி சுமாருக்கு காபியுடன் இரண்டாம் கட்ட சாதகம் சுமார் ஏழு மணி வரை, ஒவ்வொரு தடவை சந்திக்கும் பொழுதும் ஒன்றிரண்டு கீர்த்தனைகள் ஒவ்வொரு அமர்விலும் பாடிப் பாடம் செய்து வைத்து விடுவார். இடைப்பட்ட நேரங்களில் ருசிகரமான சங்கீத அரட்டைகள் நடக்கும்.

குரு தஞ்சையிலும் சீடன் சென்னையிலும் இருந்ததால் ஸங்கீத சாதகம் விரும்புமளவு நடக்கவில்லை. எனவே “நீ சென்னையில் டி.எம்.டி.யிடம் கற்றுக் கொள்ளேன். இருவரும் தஞ்சைபாணிதான் மாறாது” என்று என்னை ஸ்ரீ டி.எம்.தியாகராஜனிடம் சேர்த்து விட்டார். சுமார் இரண்டு வருஷங்கள் அவரிடம் இசைகற்றுக் கொண்டேன். 10, 15 கீர்த்தனைகள் அவரிடம் பாடம் செய்தேன். அவர் மிகவும் “பிஸி”யான கலைஞர். ஒரு வகுப்பு 15 அல்லது 20 நிமிஷம்தான். அலுவலக வேலைகளில் நான் பல வகுப்புகளைத் தவற விடவும் நேரும். சாவகாசமாக குருவுடன் சாதகம் செய்து பழகி விட்ட எனக்கு இது திருப்தி அளிக்கவில்லை. மறுபடியும் தஞ்சை போய் வரத் தொடங்கினேன்.

நீங்கள் தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களோடு சேர்ந்து கச்சேரிகள் செய்திருக்கிறீர்கள் இல்லையா? அந்தக் கச்சேரி அனுபவங்களைக் குறித்து சொல்லுங்களேன்?

எனது குரு ஒரு தடவை கிருஷ்ண கான சபா கச்சேரிக்காக சென்னை வந்தார். கச்சேரிக்கான வகுப்புகளை சாதகம் செய்தோம். எந்தக் கச்சேரியாக இருந்தாலும், அதற்காக ஒரு நிகழ்ச்சி நிரல் போட்டுக்கொண்டு, கச்சேரிக்கு முன் சாதகம் செய்வோம். இவ்வளவு சாதகம் அவசியமா என்று எனக்குக் கூடத் தோன்றியதுண்டு. “அப்படியில்லை மணி! வீட்டில் பாடுவதில் பாதி கூடக் கச்சேரியில் தேறாது. இப்படி ஒரு நனைப்பு நனைத்தால்தான் கச்சேரியில் சரளமாக வரும். சபையில் ஏதாவது ஒரு ஞானஸ்தர் எங்காவது ஒரு மூலையில் நின்று கேட்டுக்கொண்டிருப்பார். யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று ‘குண்டு’ தைரியத்துடன் பாடக் கூடாது” என்பார். அந்த அளவுக்கு ஒவ்வொரு கச்சேரிக்காகவும் தன்னைத் தயார் படுத்திக்கொண்டுதான் செல்வார்; ரசிகர்களின் ரசனையைக் குறைத்து மதிப்பிடமாட்டார்.

2

[பெங்களூரில் நடந்த தஞ்சை வெங்கடேசய்யங்கார் கச்சேரி. பின்பாட்டு K.சிவசுப்பிரமணியன்.]

சென்னை கிருஷ்ண கான சபாவில் 4-8-87 அன்று கச்சேரி, பாப்பா ஐயர் பிள்ளை தியாகராஜன் வயலின். எம்.என்.கந்தசாமி மிருதங்கம். கச்சேரியன்று அவருக்கு நல்ல ஜுரம். கச்சேரியை ரத்து செய்து விடலாமா என்று கூடத் தோன்றியது. அவர் மனதிடத்துடன் மேடை ஏறிவிட்டார். ஒரு ப்ளாஸ்கில் சூடான காப்பியுடன் ருக்குவும் மேடையில் பின்னால் உட்கார்ந்து கொண்டாள். நான் தம்புராவுடன் பின்பாட்டு. ஒவ்வொரு பத்து நிமிஷமும் ருக்கு சூடாகக் காப்பியைக் கொடுத்துக் கொண்டிருக்க, உடல் ஜுரத்தை கச்சேரி ஜுரம் பின்னுக்குத் தள்ளிவிட்டது, கச்சேரி நாட்டக்குறிஞ்சி பதவர்ணத்துடன் தொடங்கியது, க்ருபாலவால (நாதவராங்கிணி) ஸத்தலேனி (நாகநந்தினி)யின் விறுவிறுப்பு. பிறகு தீக்ஷிதரின் ஹிரண்மயீம் (லலிதா) பிறகு விஸ்தாரமாகக் கல்யாணி ஆலாபனை. அம்மராவம்மா (கல்யாணி) பாடி நிரவல் ஸ்வரம் தனி. வருக (நீலமணி) நின்சரண் (தர்மவதி) இப்படி திட்டமிட்டபடி சிறப்பாகப் பாடிவிட்டார். அவருக்கு ஜுரம் என்று எங்களுக்குத் தெரியுமே ஒழிய ரசிகர்களுக்குத் தெரியாது. “ருக்கு! இன்னிக்கு உன் காபி பலத்திலேதான் கச்சேரி ஓடித்து!” என்று மனமாரப் பாராட்டினார்.

அறுபதுகளில் ம்யூஸிக் அகதமியிலும் பின்னர் நாதோபாஸனா, ராகஸுதா, தாம்பரம் கீதப்பரியா, நாதஸத்ஸங்கம், வேறு பல சங்கீத சபைகளிலும் கச்சேரிகள் செய்ய அவ்வப்போது சென்னைக்கு வருவார். வந்த நேரங்களில் சென்னையில் செம்மங்குடி ஸ்ரீனிவாஸ அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், கே.வி.நாராயணசாமி எனப் பல இசை உலக நண்பர்களைச் சந்திக்க நான் அவருடன் சென்றிருக்கிறேன்.

தஞ்சை ஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் ஸம்ஸ்கிருதத்திலும். தமிழிலும் ஆழ்ந்த புலமை உள்ளவர், தியாகராஜரின் இசையில் ஆழ்ந்தவர், தஞ்சை போகும் பொழுதெல்லாம் நான் எனது குருவுடன் சென்று அவரை சந்தித்துப் பயனடைந்திருக்கிறேன், இலக்கிய விஷயங்கள் மட்டுமல்லாமல் இசையின் நுட்பங்களையும் விளக்குவார், “ஸ்ரீரகுவர தாசரதே” என்ற ஆனந்த பைரவி கீர்த்தனையை என் குருவுடன் நானும் பாடம் செய்தேன்.

5

[1967-இல் தஞ்சை கிருஷ்ணன் கோவில் கச்சேரியில் தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களுக்குச் செய்யப்படும் மரியாதை. புகைப்படத்தில் பாலக்காடு மணி ஐயர், வயலின் சிக்கல் பாஸ்கரன், எம்பார் விஜயராகவாச்சாரியார், ஸ்வாமிநாத ஆத்ரேயன் (பின்னணியில்) ]

ஸ்ரீ ஆத்ரேயர் அவரது தஞ்சை வீட்டில் (பாலோபா சந்து) ஸ்ரீராமர், ஸீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் விக்ரகங்களை வைத்து தினமும் பூஜை செய்பவர். ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியன்று சிறப்பாகத் திருமஞ்சனம். அலங்காரம் பூஜை எல்லாம் ஆத்மார்த்தமாகச் செய்வார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிடிக்கும். ஊரிலிருந்தால் ஆண்டு தோறும் எனது குரு அந்த பூஜையின் போது ஸன்னிதியில் தியாகராஜ கிருதிகளைப் பாடுவார். பல ஆண்டுகள் எனக்கும் அவருடன் பாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

என் குருவின் சங்கீதத்தைப் பற்றி ஸ்ரீஸ்வாமிநாத ஆத்ரேயர் கூறிய பாராட்டு என் நினைவில் இன்றும் பசுமையாகவே உள்ளது:

“கோயிலில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, ஆடை அணி ஆபரணங்களுடன் படிப்படியாக எப்படி அலங்காரம் செய்வாரோ அப்படித்தான் அவரது பாட்டும். பால் தேன் தயிர் பன்னீர் என்று பல பொருள்களால் திருமஞ்சனம் செய்து, பலவித ஆபரணங்களாலும் புஷ்ப மாலைகளாலும் அழகுபடுத்தி, பெருமாளை எப்படி தரிசனம் செய்து வைப்பாரோ அப்படியே படிப்படியாக ராக விஸ்தாரம் செய்து, விதவிதமாக நிரவல் செய்து அலங்கரித்து ஸ்வரக் கோர்வை என்ற மலர்களால் அர்ச்சிப்பார்.”

தன்னுடைய மாமனாரின் ஊரான வரகூர் பெருமாளுக்கு என் குரு அலங்காரம் செய்வதை ஊரே பாராட்டும். அந்தவிதத்தில் ஸ்வாமிநாத ஆத்ரேயர் சொல்லியிருக்கும் பாராட்டு வெகு பொருத்தமானதாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

மெலட்டூர் பாகவத மேளாவில் உங்கள் குருவோடு சேர்ந்து நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள் இல்லையா? அதைக் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

மெலட்டூர் நடுத்தெருவிலிருந்த மஹாலிங்கம் (V.A.O) தனது தந்தையார் காலத்திலிருந்தே பாகவத மேளா நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். அரியக்குடியின் சீடர் சுப்பையரும் எனது குருவும் அதில் இசைக் குழுவுக்குப் பொறுப்பு வகித்தனர். எனது குரு சுமார் 30 ஆண்டுகள் இந்தப்பணியை விடாது ஈடுபாட்டுடன் செய்து வந்தார். ஐந்தாறு வருஷங்கள் எனக்கும் அதில் பாடும் அனுபவம் வாய்த்தது. ஹேரம்பனும் பிறகு அவரது தம்பி பாரதியும் நட்டுவாங்கம் செய்வார்கள். நாட்டியநாடகமாதலால் தோடயமங்கலம் என்ற தொடக்கமே சுமார் அரை மணி நடக்கும். பிறகு ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரவேச தரு. முதலில் வினாயகர் பிரவேசம். பிறகு கதாநாயகி, நாயகன் இவர்கள் ஜதியுடன் பிரவேசம். உரையாடல் பாடல்கள் எல்லாம் தெலுங்கு மொழியில் இருக்கும். கதாநாயகி உணர்ச்சிபூர்வமான கட்டங்களில் பலவித ஸஞ்சாரி பாவங்களில் அபினயம் பிடிக்க, அதே வரிகளை 50, 60 தடவைகள் திரும்பத் திரும்பப் பாட வேண்டும். ஆண்களே இதிலே பெண் வேஷம் போடுவது மரபு.

நல்ல கோடையில் ஏப்ரல் மே மாதங்களில் நரஸிம்ம ஜயந்தியில் தொடங்கி இந்த நாடகங்கள் நடக்கும். பிரஹலாத சரித்திரம், ஹரிச்சந்திரா பார்வதி கல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பாகவத மேளா நாடகங்களை மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி எழுதி இருக்கிறார். காலத்தால் இவர் தியாகராஜருக்குச் சற்று முந்தியவர். தியாகராஜர் எழுதிய “ப்ரஹ்லாத பக்த விஜயம்” “நௌகா சரித்ரம்” என்பவையும் இப்படிப்பட்ட நாட்டிய நாடகங்களே. மெலட்டூர் பாகவத மேளா சாலியமங்கலம் போன்ற ஊர்களிலும் நடத்தப்பட்டது, மெலட்டூரிலேயே பின்பு நடராஜன் தனது குழுவினருடன் வேறு நாட்களில் பாகவத மேளா நடத்தி வருகிறார். திருக்கருகாவூர் ஸ்ரீநிவாஸராகவன் அந்தக் குழுவில் இசையை வழி நடத்தி வருகிறார்.

ஒரு ஆண்டு, வெங்கட்ராம சாஸ்திரிகள் எழுதியிருந்த நாடகமான கம்ஸவதத்தை மேடையேற்ற முடிவு செய்தனர். சாஸ்திரியாரின் நாடகத்தில் தருக்களுக்கு ராகங்கள் குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு வர்ண மெட்டமைத்து ஒழுங்கு செய்வது ஒரு ஆக்கபூர்வமான வேலை. வித்வான் தஞ்சாவூர் சங்கரய்யர் எனது குருவின் நெருங்கிய நண்பர். எனது குருவின் அழைப்பில் அவரும் ஒரு மாதம் முன்பே மெலட்டூருக்கு வந்து எங்களுடன் மாலி வீட்டில் தங்கினார். சொற்களை பிழையின்றி அமைக்கத் தெலுங்கு பண்டிதர் ஒருவரும் இருப்பார். அந்த நாடகத்தில் யதுகுல காம்போதி, சுருட்டி போன்ற பழைய ராகங்களுடன், தேனுகா, சிவபந்துவராளி போன்ற புது ராகங்களிலும் ஸ்ரீசங்கரய்யர் மெட்டமைத்தார். அவருடன் கூடவே இருந்ததால் மெட்டமைக்கும் அனுபவங்களும் கிடைத்தன, அதிகாலை வேளைகளில் எனது குரு. ஸ்ரீசங்கரய்யர் எல்லோரும் காலாற நடந்து வெட்டாற்றங்கரைக்குப் போய் அங்கிருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் குழாய் கிணற்றிலிருந்து பீறிடும் தண்ணீரில் ஸ்னானம் முடித்துக் கொள்வோம். கோடையில் வெட்டாற்றில் தண்ணீர் இருக்காது. இது போலவே மார்க்கண்டேயா நாடகத்திற்கு நானும் குருவும் மெட்டமைத்தோம்.

நீங்கள் தஞ்சை இசைச்சூழலைப் பின்னணியாக வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறீர்கள் இல்லையா?

ஆம். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் தஞ்சாவூர் இசை உலக பிரமுகர்களால் நிறைந்திருந்தது. பிறகு தான் மெல்ல மெல்ல பல வித்வான்கள் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். அப்பொழுது கூட எனது குரு தஞ்சையை விட்டுப் பிரிய விரும்பவில்லை. தஞ்சையின் அந்த சங்கீதச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு “ஜீவன்முக்தன்” என்ற நாவலை எழுதினேன், அதில் வரும் மையப் பாத்திரம் வித்வான் பஞ்சநதீசன், இவரிடம் என் குருவின் சாயலைக் காணலாம். இந்த நாவலின் வெளியீட்டு விழா சென்னை ராகஸுதாவில் (1997) எனது குருவின் கச்சேரியுடன் தொடங்கி நடைபெற்றது. அன்று எனது குருநாதர் பவப்ரியா ராகம் பாடி பத்ராசல ராமதாஸரின் “தீன தயாளோ” கீர்த்தனையை விரிவாகப் பாடினார். அதற்கு மெட்டமைத்தவர் ஸ்ரீ டி.எம்.தியாகராஜன், பாடல்களுக்கு சட்டத்திட்டத்துடன் இசையமைக்கும் திறமை கொண்ட வித்வான் அவர். அன்று திருப்பாற்கடல் வீரராகவன் வயலின், மூர்த்தி அய்யர் மிருதங்கம்.

3

[‘ஜீவன் முக்தன்’ வெளியீட்டு விழா கச்சேரி]

உங்கள் குருவை கடைசியாகச் சந்தித்தது எப்போது?

அவர் மறைவுக்கு ஒரு வாரம் முன் திருவையாறு தியாகராஜர் சமாதிக் கோயிலில் சிவராத்திரி அகண்டத்தில் பாடப் போனபோது அவரைக் கடைசியாகப் பார்க்க முடிந்தது. திருவையாற்றில் என்ன பாடப் போகிறாய் என்று விவரமாகக் கேட்டார். எனக்கும் ருக்குவுக்கும் அவருடன் அதுவே கடைசிச் சந்திப்பாகி விட்டது. நிறைவோடு வாழ்ந்து பெருமாளின் புகழையே பாடி, அவர் திருவடிகளில் ஐக்கியமான அவர் நினைவில் தழுதழுக்கிறேன். மேல் அலங்கம் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நாட்களும். அந்த மர நாற்காலியும் நினைவில் நிழலாடுகின்றன.

விருதுகள் தேடிவந்தால் மகிழ்ச்சி என்றாலும். அதனால் அவருக்கு அகந்தை வளர்ந்ததில்லை. உழைப்பில் நம்பிக்கையையும் மேலும் பாடுபட வேண்டும் என்ற உறுதியை அந்தப் பாராட்டுகள் அளித்தன. மற்ற வித்வான்களுக்கும் பெருமை சேரும் பொழுதும் எனது குரு மகிழ்ச்சியே அடைவார். பட்டம் பதவிகளை எதிர்பார்த்து, ஏமாற்றம் அடையாத சமன்பாடு அவரிடம் இருந்ததால் அவர் கண்ணியமாகவே வாழ்ந்தார்.