சென்னையில் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்

இது நடந்து 10 ஆண்டுகள் ஆகின்றன.

இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமான ஒரு திருப்புமுனை தொடர் ஒன்று உண்டு. இந்தியாவில் 2001ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான தொடர்தான் அது.

அப்போது இந்தியா முதலாம் இடத்திலில்லை. ஆஸ்திரேலியாதான். நான்கே நாட்களில் டெஸ்டை முடித்துக் கொண்டிருந்தனர், ஆஸ்திரேலியர்கள். 4 ரன்களுக்கு குறைவாக ரன் ரேட் இருந்ததில்லை. ஆடும் டெஸ்ட் ஆட்டத்திலெல்லாம் வெற்றி. உள்ளூர் வெளியூர் எங்கு சென்றாலும் ஸ்டீவ் வாவின் ஆண்களை வெற்றி தேவதை பின்தொடர்ந்து சென்றாள். இப்போது இருக்கும் அணியை விட வலிமையான அணி. ஹைடன், லேங்கர், வா சகோதரர்கள், பாண்டிங், கில்கிரிஸ்ட் என பேட்டிங்கிற்கு உத்தரவாதம் ஆறாவது டௌண் வரை உண்டு. இதற்கும் மேல் பந்து இரண்டாக உடையும் படி ஸ்கொயர் கட் ஆடும் ஸ்லேடர் வேறு. சில சமயம் ஸ்லேடர் ஆடும் ஸ்கொயர் கட் செவிட்டில் அறைந்தது போல இருக்கும். பாயிண்டும் கல்லியும் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பேன். இந்த அணி ஆல் அவுட் ஆனால் வேறு எந்த அணியும் ஆல் அவுட் ஆகியே தீர வேண்டும். இது போதாதென ஒரே புள்ளியில் ஆறு பந்தையும் அங்குலம் அலுங்காது வீசும் மெக்ரா, 90 டிகிரி பந்தைத் திருப்பும் வார்ன், கில்லஸ்ப்பீ என அசகாய பந்து வீச்சு அணி ஒரு பக்கம்.

அப்படிபட்ட டீமை அழைத்துக்கொண்டுதான் இந்தியா வந்தார் ஸ்டீவ் வா. இந்தியா வருவதற்கு முன் தொடர்ச்சியாக 15 டெஸ்ட் ஆட்டங்கள் வெற்றி. இந்தியாவிலும், முதலாவது ஆட்டம் ஸ்டீவ் வா விருப்பப்படிதான் நடந்தது. இந்தியாவுக்கு செம அடி. இந்த முதல் ஆட்டத்தையும் சேர்த்து 16 ஆட்டங்கள் தொடர்ச்சியாக வெற்றி. 1999-ஆம் ஆண்டு ஹராரேயில் ஜிம்பாபேவிற்கு அடி கொடுக்கத் துவங்கிய அணி, அதன் பின் கைக்கு சிக்கும் எந்த அணியையும் விட்டுவைக்கவில்லை. அடிதான். 16 ஆட்டங்கள் தொடர்ச்சியான வெற்றி இன்றளவில் ஒரு உலக சாதனை. இதே சாதனையை பாண்டிங் வேறு ஒரு முறை நிகழ்த்தினார். (சிட்னி டெஸ்டில் இந்தியாவை வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனை சாத்தியமானது. அந்த ஆட்டம் முடிவில் கும்ப்ளே சொன்னது: “Only one team is playing in the spirit of the game.” இதைப் பற்றி மேலும் சொல்வதென்றால் தனியாக எழுத வேண்டும்.) பாண்டிங்கின் அந்த ஓட்டத்தை அடுத்த ஆட்டத்திலேயே நிறுத்தியது கும்ப்ளேவின் தலைமையிலான இந்திய அணி. (பெர்த், ஜனவரி 2008.)

ஒரு அணியை மனதாலேயே வென்றுவிடக்கூடிய எமகாதகர்கள் ஆஸ்திரேலியர்கள். ஸ்டீவ் வா, ரிக்கி பாண்டிங் ஆகிய இருவரும் பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியர்களின் மனதால் கிரிக்கெட் ஆடும் திறனை கூராக்கி வைத்த கில்லாடிகள். இவர்களை வைத்துக் கொண்டு ஒரு தொடரைத் தோற்க முடியும் என்று ஸ்டீவ் வா கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். வீட்டிற்குப் போகும்போது டிராஃபி நிச்சயம் என்றுதான் யாரும் நினைக்கக்கூடும். ஸ்டீவ் வாவும் அப்படித்தான் நினைத்தார். ஆனால் இந்தியர்கள் அப்படி நினைக்கவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எல்லாமே சரியாக இருந்தது, இரண்டாம் ஆட்டத்தில் ஃபாலோ ஆனை ஏற்று இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட லக்ஷ்மணும் டிராவிடும் விக்கெட் நடுவில் நிற்காத வரை. இரண்டாம் ஆட்டம் உலக வரலாற்றில் லக்ஷ்மண், டிராவிட் இருவரின் பெயரையும் பொன்னெழுத்தில் பொறித்தது.

இத்தொடரின் ஒவ்வொரு ஆட்டமுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘தொடர்ச்சியான 16 வெற்றிகள்’ என்று ஆஸ்திரேலியாவுக்கு உலக சாதனையை ஏற்படுத்திக் கொடுத்தது முதல் ஆட்டம். ஃபாலோ ஆன் கொடுத்த பின்னர், அதிக ஓட்ட வித்தியாசத்தில் தோற்ற அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்தது இரண்டாம் ஆட்டம். (இன்றளவில் இதுவும் ஒரு சாதனை.) நாம் பார்க்கப்போவது எல்லோரும் பேசி முடித்துவிட்ட இரண்டாம் ஆட்டம் அல்ல. மூன்றாம் ஆட்டம். (இந்த தொடர் பற்றி பேச்சு வந்தாலே இரண்டாம் ஆட்டம்தான் நினைவுக்கு வரும். சமயத்தில் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாம் ஆட்டத்தை அனைவரும் மறந்து விடுகிறோம்.)

இரண்டாம் ஆட்டத்தின் முடிவில் இத்தொடர் சம நிலையில் இருந்தது. 1-1. மூன்றாவது ஆட்டம் ஸ்டீவ் வாவுக்கு அதி முக்கியமான ஆட்டமாக இருந்தது. இரண்டு காரணங்கள். இதில் இந்தியாவிற்கு மரண அடி கொடுத்தால், இந்தியாவின் கொல்கத்தா வெற்றி, ஒருமுறை வந்த அதிர்ஷ்டம் என்று நிருபித்துவிடலாம். இரண்டாவது மற்றும் அதி முக்கியமான விஷயம், 1969-70க்குப் பின் ஆஸ்திரேலியாவின் எந்த ஒரு கேப்டனுக்கும் சாத்தியப்படாத ஒரு கனவை, தான் சாத்தியப்படுத்தினோம் என்ற பெருமை – இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடர் வென்ற பெருமை. ஆட்டம் துவங்கும் முன் “This game will decide what the Australians are made off” என்றார் வா.

இந்த சீரிஸில் இறுதி யுத்தம் நிகழ்ந்தது சேப்பாக்கத்தில். ஸ்பின்னுக்கு சாதகமான சேப்பாக்கத்தில் வார்னேயின் சுழல் ஜாலத்தைப் பார்க்க சென்னையைப் போலவே உலகமே காத்திருந்தது. நான்காவதாக பேட்டிங் ஆடும் அணிக்கு கஷ்டம் காத்திருக்கிறது என்பதே பலரின் கணிப்பு. இந்தியா 4 ஸ்பின்னர்களுடன் விளையாடியது. ஹர்பஜன் சிங், சாய்ராஜ் பாஹுதலே, நிலேஷ் குல்கர்ணி மற்றும் சச்சின். நிலேஷ் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த மிகச்சில பந்து வீச்சாளார்களில் இவரும் ஒருவர். இப்படி முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியவர்கள் மொத்த கரியர் பிரகாசமாக இருந்ததில்லை. இவரும் விதிவிலக்கல்ல – மொத்தம் 3 டெஸ்ட்கள்தான். புதிய பந்தை ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீச வேண்டும் எந்த சம்பிரதாயத்திற்காக, இந்த டெஸ்டில் கங்குலி ஜாகிர்கானோடு இணைந்து பந்து வீசினார். பத்து ஓவர்களுக்குள்ளேயே ஸ்பின்னர்கள் வந்து விட்டனர்.

அசத்தலான முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம் முதல் இன்னிங்க்ஸில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியாவின் எண்ணத்தை ஹைடன் உரத்துச் சொன்னார். குயின்ஸ்லாந்திலிருந்து கதை ஏந்தி வந்த கடோத்கஜன் போன்று நிற்கும், ஹைடன் முதல் நாள் முடியும்போது 147 நாட் அவுட். இந்த சீரிஸ் முழுவதுமே ஹைடன் ரன் மழைதான். மூன்றாம் நாளுக்கு மேல் விக்கெட் ஸ்பின்னுக்கு சாதகமாகிவிடக்கூடும் என்பதால், ஆஸ்திரேலியா அவசர அவசரமாக முதல் இன்னிங்க்ஸில் அதிக லீட் எடுத்து விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலியா முதல் நாள் இறுதியில் 326/3. வலுவான நிலை. மறுநாள் களமிறங்கி மேலும் 200 ஓட்டங்கள் சேர்த்தால் போதும், இந்தியாவிற்கு தண்ணி காட்டி விடலாம்.

அடுத்தநாள் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 391 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கும் என்று சத்தியமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், 7 விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன் உட்பட. இத்தனைக்கும் இந்த ஆட்டம் ஹர்பஜன் ஆடிய 7-வது டெஸ்ட் இன்னிங்க்ஸ்தான். பாண்டிங் உட்பட நான்கு பேர் டக் அவுட். ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் 200 ஓட்டங்களை எடுத்து தனித்து ஜொலித்தார் ஹைடன். இரண்டாம் நாள் ஆடத்துவஙகிய ஆஸ்திரேலியாவின் சரிவுக்குத் துவக்கமாக அமைந்தது ஸ்டீவ் வாவின் அவுட். எப்படியாவது மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக ஒரு நிமிடம் மூளைக்கு பதில் ஆசை தலை தூக்கியதில் தனது விக்கெட்டை இழந்தார் ஸ்டீவ் வா.

“HOWZAAT” என்ற அலறல் கேட்டது, ஸ்டீவ் வாவின் கால்காப்பில் பட்ட பந்திற்கு. ஹர்பஜனோடு சேர்ந்து ஒட்டு மொத்த சென்னையும் அலறியது. முடிவெடுக்க ஜெயப்பிரகாஷ் தாமதித்துக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் அதே அலறல். இந்த முறை விக்கெட்டை சுற்றியிருந்த இந்திய வீரர்கள் மட்டும் மன்றாடினர். அவர்கள் மன்றாடியது, வேறொரு காரணத்திற்காக.

கால்காப்பில் பட்ட பந்து மெல்ல சரிந்து விக்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தது. விக்கெட்டை தட்டி விடக்கூடிய அபாயத்தை அறிந்து பந்தை கையால் தட்டினார் ஸ்டீவ் வா. “ஹேண்டிலிங் த பால்” என்ற முறையில் அவருக்கு அவுட் கொடுக்க ஜெயபிரகாஷ் யோசிக்கவேயில்லை. கிரிக்கெட் வரலாற்றில் இந்த முறையில் அவுட் ஆன மிகச்சிலரை மட்டுமே கொண்ட ஒரு தனித்துவமான பட்டியலில் சேர்ந்தார் ஸ்டீவ் வா. (ஒரு புதிர்: “ஹேண்ட்லிங் த பால்” முறையில் அவுட் ஆனால், பவுலருக்கு அந்த விக்கெட் சேருமா சேராதா? பதில் தெரியாதவர்கள் கூகிளாண்டவரை தொடர்பு கொள்ளவும்)

டிராவிற்கு ஆடாத அணிகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்ற ஃபார்மெட்களைப் போல அல்லாமல் characterஐ சோதிக்கும் தருணங்கள் அனேகம் உண்டு. அந்த சந்தர்பங்களில் தெரிந்து விடும் உண்மையான வீரர் யாரென்று. இந்த சீரிஸ் முழுவதுமே அப்படிபட்ட தருணங்கள் பல உண்டு.

பெரிய முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோரை ஏற்படுத்தி, இந்தியாவை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாத நிலையில் ஃபீல்டிங் செய்ய வந்தனர், ஸ்டீவ் வாவின் சூரர்கள். அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது.

எந்த இலக்கை அவர்கள் இந்தியாவிற்கு நிர்ணயிக்க விரும்பினார்களோ, அதை இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தனர். முதல் இன்னிங்க்ஸில் 501 ரன்கள் – முதல் இன்னிங்க்ஸ் லீட் மட்டும் 110 ரன்கள். துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர் சடகோபன் ரமேஷ் மற்றும் சிவசுந்தர் தாஸ். பின்னர், இவர்கள் அமைத்துக் கொடுத்த அடிதளத்தில் கோட்டை கட்டினர் சச்சின், டிராவிட் மட்டும் லக்ஷ்மண். இந்தியாவின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் 4 பேர் ஐம்பது, சச்சின் சதம். சச்சின் அடித்தது அவரது 25வது சதம்.

ஸ்டீவ் வாவின் வித்தியாசமான அவுட், முக்கியமான தருணத்தில் ஆஸ்திரேலியர்கள் விட்ட கேட்ச் ஆகியவை, இந்த ஆட்டத்தில் எந்த அளவிற்கு அவர்கள் மீது அழுத்தம் இருந்தது என்பதை காட்டியது. பொதுவாகவே கேட்ச் விடுவது என்பது ஆஸ்திரேலியர்கள் ஜாதகத்தில் கிடையாது. அவர்கள் நல்ல ஃபீல்டிங் அணி. சச்சினுக்கு ஸ்லேட்டர் எளிதான ஒரு கேட்சை விட்டார். கில்கிரிஸ்ட் ட்ராவிட்டுக்கு கொஞ்சம் கஷ்டமான கேட்சை விட்டார் (half chance). இரண்டும் அவர்களின் வெற்றிக்கு மிகப்பெரிய முட்டுக் கட்டையாக அமைந்தன.

இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆடத்துவங்கியபோது நான்காம் நாள் மதிய உணவு இடைவேளைக்குக் கொஞ்சமே நேரமே பாக்கியிருந்தது. அதன் பின்னர் இரண்டு இன்னிங்க்ஸ் ஆடப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்து விடக்கூடிய அனேக வாய்ப்புகள் பிரகாசமாக தெரிந்தன. ஏற்கனவே 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்து, ஆஸ்திரேலியா முன்னிலை எடுத்து, பின்னர் ஆட்டத்திற்கு ஒரு முடிவு வருவது என்பது அனைவருக்குமே சாத்தியக்குறைவான சம்பவமாகத் தோன்றியது இயற்கைதான். ஆனால், டிரா என்னும் முடிவை ஆஸ்திரேலியா கனவில் கூட நினைக்கவில்லை. “We are playing for a win, not a draw,” – இது ஆட்டத்தின் போது வா சொன்னது.

மிக விரைவாக ரன் எடுக்க விரும்பியது ஆஸ்திரேலியா. இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆரம்பம் முதலே 4.5 ரன் ரேட்டுக்கு குறையவில்லை. 18வது ஓவரில் ஹைடன் அவுட் ஆனவுடன் ரன் ரேட் குறைந்து விடக்கூடாது என்பதற்காக கில்கிரிஸ்டை களம் இறக்கியது ஆஸ்திரேலியா. ஒரு விதத்தில் அது சரியான முடிவாகத் தோன்றினாலும், கில்கிரிஸ்ட் இருந்த ஃபார்மில் தவறான முடிவாகக்கூட சிலரால் பார்க்கப்பட்டது. மும்பை டெஸ்டில் அடித்த சதத்திற்கு பின், இரண்டாம் டெஸ்டின் இரண்டு இன்னிங்களிலும் டக் அவுட், மூன்றாம் டெஸ்டின் முதல் இன்னிங்கில் 1 ரன் என விக்கெட்டில் அதிக நேரம் செலவிடவில்லை கில்கிரிஸ்ட். இக்கட்டான சூழ்நிலையில், ரன் ரேட்டை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய கில்கிரிஸ்ட் 1 ரன்னுக்கு அவுட் ஆகிச்சென்றது இந்தியர்களுக்கு பெரிய ஆசுவாசம் தந்தது. மிகக்குறைந்த நேர இடைவெளியில் ஸ்லேட்டரும் அவுட் ஆகி வெளியேற, 82/0 என்ற நிலையிலிருந்து 93/3 என்ற நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது. அதன் பின், ரன் ரேட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆட்டத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள ஆஸ்திரேலியா பிரயத்தனப்பட்டது. முதல் முறையாக தாக்குதல் ஆட்டத்தை கைவிட்டு காப்பாற்றும் ஆட்டத்தை மேற்கொண்டனர். அதன் பின்னர் மிக மெதுவாக ஆட்டத்தை வா சகோதரர்கள் ஸ்திரப்படுத்தி, 264 ரன்கள் வரை அணியை அழைத்துச் சென்றனர். அவர்கள் ஆல் அவுட் ஆன போது ஐந்தாம் நாள் லஞ்சுக்கு அரை மணிநேரத்திற்கும் சற்று கூடுதலான நேரம் மட்டுமே இருந்தது.

இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் ஆடத்துவங்கிய போது, வெற்றி தோல்விக்கு இடையே 155 ரன்களும் 10 விக்கெட்களும் இருந்தன.

ஜெயிக்கும் வரை தாக்கு…

155 என்பது ஒரு பெரிய இலக்கே அல்ல என்பதை ஆஸ்திரேலியர்கள் நன்கு அறிவர். அவர்கள் வெற்றி பெறுவதற்கு இருக்கும் ஒரே வழி, இந்தியாவை ஆல் அவுட் ஆக்குவதுதான் என்பதை நன்கு அறிந்த ஸ்டீவ் வா, சளைக்காமல் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டார். கவனம் பிசகாமல் அவர் பயன்படுத்திய மிகப்பெரிய துருப்பு சீட்டு கில்லஸ்பி. இந்த சீரிஸ் முழுவதுமே, அற்புதமான ஃபார்மில் இருந்தார் கில்லஸ்பி. பெரிய பயன்தராத ஷேன் வார்னை அளவாகப் பயன்படுத்திவிட்டு அவர் வீச வேண்டிய ஓவர்களையும் சேர்த்து கில்லஸ்பிக்கே தந்தார். யோசித்துப் பாருங்கள், ஐந்தாம் நாள் விக்கெட், சேப்பாக்கம் மைதானம், ஷேன் வார்ன் குறைவாக பயன்படுத்தப்படுகிறார். அந்த அளவிற்கு இந்தியர்கள் ஷேன் வார்னை இந்த சீரிஸில் படுத்தினர்.

சுலபமாக முதல் விக்கெட்டை எடுத்துவிட்ட பின்னர், மற்ற ஆட்டகாரர்களைப் பின் தள்ளி லக்ஷ்மணை களத்திற்கு அனுப்பினார் கங்குலி. தெளிவான முடிவு பலன் தந்தது. வெற்றி நிச்சயம் என்ற அளவில் ஆடிக்கொண்டிருந்தனர் ரமேஷும் லக்ஷ்மணும். ஒரு கட்டத்தில் இந்தியா 76/1. கவலையேயில்லாமல் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை, எதிரணி ஆஸ்திரேலியாவாக இல்லாமல் இருந்தால். தேவையில்லாத ஒரு ரன்னுக்காக ஓடி, ரமேஷ் தன் விக்கெட்டை இழந்தார். அதன்பின், ஆஸ்திரேலியா தன் சுயரூபத்தைக் காட்டத் துவங்கியது. லக்ஷ்மணை விட்டு விட்டு எதிர்முனைக்கு வரும் பேட்ஸ்மேனைக் குறிவைக்கத் துவங்கினர். தாக்குதல் பந்து வீச்சுதான் அவர்கள் சூத்திரம். கில்லஸ்பி, சச்சின் விக்கெட்டை எடுக்க வீசிய லைனைப் பார்த்தாலே இது புலனாகும். எதிர் முனையில் விக்கெட் விழந்தாலும் லக்ஷ்மண் இருக்கும் வரையில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது.

மெதுவாக வெற்றியை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருந்தது இந்தியா. 20 ஓட்டங்களே இருந்தன இந்தியாவை வெற்றி இலக்கிலிருந்து பிரிக்க, லக்ஷ்மணை வீழ்த்த half chance ஒன்றை பாய்ந்து எடுத்தார் மார்க் வா.

சரியும் சமயத்தில் தூக்கி நிறுத்திய சமீர்

ஆட்டம் இந்த சமயத்தில் முழுமையாக ஆஸ்திரேலியா பக்கம் சென்று விட்டது. அசகாய சூரர்களையே பெவிலியனுக்கு அனுப்பிய கில்லாடிகளுக்கு இந்தியாவின் வால் எம்மாத்திரம். அதிலும் களத்தில் இருந்த கீப்பர் சமிர் திகேவுக்கு அது தான் முதல் டெஸ்ட் ஆட்டம். வா சகோதரர்களும், பாண்டிங்கும் ஹைடனும் விக்கெட்டை சுற்றி நின்று கொண்டு திட்டினாலே அழுது கொண்டு பெவிலியனுக்கு ஓடிவிடுவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், சமிர் திகே தான் யார் என்பதை உலகத்துக்குச் சொல்லக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாக இதைப் பார்த்தார். லக்ஷ்மண் விட்ட அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு, மெல்ல ஆடத்துவங்கினார். எதிர் முனை அதிகமாக பந்துகளை எதிர்கொள்ளாமலும், வெற்றிக்கான அனைத்து ஓட்டங்களையும் தன் மட்டையின் மூலமே சேகரிக்கும் பொறுப்பையும் ஏற்று விளையாடினார் சமிர். இந்தியாவின் போராட்ட குணத்திற்கு மிகப்பெரிய சான்றாக அமைந்தது சமிரின் இந்த ஆட்டம்.

அதன் பின், சாய்ராஜ் பஹுதுலே மற்றும் ஜாகிர் கான் விக்கெட் வீழ்ந்த போதும் ஆட்டத்தின் சமநிலை ஆஸ்திரேலியா பக்கமே சாய்ந்தது. மேலும் மேலும் அழுத்தம் இந்திய பேட்ஸ்மென்கள் மீது விழுந்தது. துணிச்சலை ஆயுதமாகக் கொண்ட இந்திய அணியின் வெற்றிக்கான அந்த ஓட்டம் ஹர்பஜன் மட்டையிலிருந்து வந்தபோது சென்னை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவும் துள்ளி எழுந்தது. ஒரு புதிய இந்தியாவை உலகம் கண்டது. துணிச்சலான புதிய இந்தியாவின் அடையாளமாகப் பார்க்கப்பட்டனர் சமிர் திகேவும், ஹர்பஜனும்.

சேப்பாக்கத்தில் இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றின் அதி முக்கியமான பக்கம் எழுதப்பட்ட அந்த தினம் மார்ச், 22, 2001. (இரண்டாம் இன்னிங்க்ஸின் விக்கெட்களை இந்த வீடியோவில் பாருங்கள்.)

http://cricketsbestvideos.blogspot.com/2007/11/cricket-video-india-win-test-series-vs.html

இந்த டெஸ்ட்டின் முழு ஸ்கோர் கார்டை இங்கே காணலாம்.

போட்டி முடிந்தபின்னும் முடியாத போராட்டம்

மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ஸ்டீவ் வாவுக்கும் சௌரவ் கங்குலிக்கும் இடையே நடந்த பனிப்போர், இந்த டெஸ்ட் சீரிஸுக்குப் பின் நடந்த ஒரு நாள் போட்டிகளிலும் தொடந்தது. டாஸ் போடுவதற்கு வேண்டுமென்றே தாமதமாக வந்து ஸ்டீவ் வாவை வெறுப்பேற்றினார் கங்குலி. “காலையில் ஆயிரத்தெட்டு வேலைகள் – அதையெல்லாம் முடித்து விட்டு வரவேண்டாமா?” என்ற தொனியில் பதில் வேறு தந்து கோபத்தைக் கிளறினார். ஆஸ்திரேலியர்கள் அதுவரை மற்றவர்களுக்குத் தந்துகொண்டிருந்த கசப்பான மருந்தை, முதல் முறையாக அதிக வீரியத்துடன் அவர்களுக்கே திருப்பித் தந்தார் கங்குலி. இந்த சண்டை எந்த அளவிற்கு சென்றதென்றால், தமக்கு சாதகமாக விழுந்த டாஸை கங்குலி அவருக்கு சாதகமாக விழுந்ததென்று பொய் சொன்னார் என்று ஸ்டீவ் புகார் சொன்னார். அந்த டாஸ் கங்குலிக்கு சாதகமாகத்தான் விழுந்திருந்தது. போட்டி, ஆடுகளங்களங்களுக்கு அப்பாலும் நடக்கத்துவங்கியிருப்பதை உலகம் புரிந்து கொண்டது.

அதன் பின்னர், இரண்டு அணிகளும் வாய் சண்டை போட்டுக் கொள்வதில் சளைக்கவேயில்லை. அதுவரை இந்தியாவே பார்த்திராத, ஒரு புதிய கேப்டனாக கங்குலி உருப்பெற்றார். ஒரு போராடும் இந்தியாவை, பணியாத இந்திய அணியை உருவாக்கியதில் கங்குலியின் பங்கு அதி முக்கியமானது. இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி எழுதும் யாராலும் கங்குலி என்ற கேப்டனைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது.