பகுதி 01 – கூட்டுக்குள் அலையும் தேனீக் கூட்டம்

ஆஸ்திரேலியாவை விடப் பெரிய நிலப்பரப்பு.

இருநூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்கள் தொகை.

மிகப் பழமையான நாகரீகமும், மிக நவீனமான தொழில்நுட்பமும் ஒரே இடத்தில் வசிக்கும் விநோத பூமி. அதுதான்  சீனா!  ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனர்களின் மரக்கலங்கள் உலகெங்கும் பயணித்தன. மத்திய ஆசியாவில் எங்கும் சீன வியாபாரிகள் பிரயாணம் செய்தனர்.

இன்றைக்கும், சீனர்கள் அலைந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், இப்போது அனேகமாகத் தம் நாட்டுக்குள்ளேயே பெருமளவு அலைகிறார்கள்.

ஊர் விட்டு ஊர். மாநிலத்துக்கு மாநிலம். மூட்டை முடிச்சுகளுடன், குழந்தை குட்டிகளை இழுத்துக்கொண்டு அந்த மாபெரும் ஜன சமுத்திரம் வருடா வருடம் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது.

எதற்காக?

சீனர்கள் தங்கள் நாட்டுக்குள் செய்யும் இடப்பெயர்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் – ஆதி மனித நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம். சீனாவின் கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் நகரங்கள், உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், குடும்ப வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையும் வெறுமையாகிக் கொண்டிருக்கின்றன.

சொந்த நாட்டுக்குள்ளேயே சீனர்கள் அகதிகளாக மாறி ஓடத் தொடங்கியது எப்போது? எதனால்? இதன் காரண காரியங்கள் சுவாரசியமானவை. வாருங்கள், சீனாவுக்கு!

பாகம் 1

ரயில் ஜோசியர்

இந்த வருடம், பிப்ரவரி நான்காம் தேதி.

சீனாவே விழாக் கோலத்தில் இருக்கிறது. புத்தாடைகள், வண்ணமயமான வாண வேடிக்கைகள் என்று திரும்பின திசையெல்லாம் ஒரே கொண்டாட்டம்!

அன்றைக்குத்தான் சீனப் புத்தாண்டு. பாட்டிமார்களையும் பாரம்பரியமான ஜோதிடர்களையும் கேட்டால் இந்த ஆண்டின் பெயர் ‘முயல் ஆண்டு’ என்கிறார்கள். புது வருடத்தில் ஏற்படப் போகும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் அலசி ஆருடம் சொல்லும் ஜோதிடர்கள் இல்லாவிட்டால் சீனாவுக்குப் புத்தாண்டு கொண்டாடின மாதிரியே இருக்காது!

rabbityear

என்னவோ தெரியவில்லை, இந்த வருடத்தைப் பற்றி சீனத்து ஜோசியர்கள் கணித்துச் சொல்லும் எதுவுமே நம்பிக்கை தருவது மாதிரி இல்லை: “முயலாண்டு துரதிர்ஷ்டங்கள் தொடரும் ஆண்டு. தென் சீனத்தில் இடை விடாமல் பனி மழை கொட்டும். செடி கொடி, வளர்ப்புப் பிராணிகள் அனைத்தும் வெண் பனிப் போர்வை மூடிவிடும். நாட்டின் வட பகுதியிலோ, வெப்பம், வறட்சி, தூசிதான் ஆட்சி செய்யப் போகிறது!”

முக்காலமும் தெரிந்து சொல்லும் ஜோதிடர்களுக்கு முடியாத காரியம் ஒன்றுதான் இருக்கிறது: “புத்தாண்டுக்கு ஊருக்குப் போகவேண்டும். எனக்கு ரயில், பஸ் டிக்கெட் கிடைக்குமா ?” என்று கேட்டுப் பாருங்கள். சத்தியமாக பதில் வராது!

வருடா வருடம்தான் வட மாகாணங்களில் வெயில் சுட்டெரிக்கிறது; ஆறுகள் காய்ந்து நிலம் கருகிப் போகிறது. டிசம்பர் வந்தால் குளிரான தென் பகுதிகளில் பனி கொட்டும் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியுமே! ஆனால் ரயில் டிக்கெட் பற்றி இவர்கள் ஆரூடம் சொல்லி, அது பலிக்கவும் செய்தால் அதுதான் பேராச்சரியம்.

ரயில் டிக்கெட் கிடைத்தால் அதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா ? முன்பே சொன்ன மாதிரி, சீனர்கள் மொத்தம் இருநூறு கோடி. அதில் ஒரு சில கோடிகள் ஒரே சமயத்தில் புறப்பட்டு மாபெரும் மனித சுனாமி போல் பயணம் கிளம்பிவிடுகிறார்கள். புத்தாண்டைக் கொண்டாட, குடும்பத்துடன் கிளம்பிச் சொந்த ஊருக்குப் போய் வருவதென்பது அவர்களின் தவிர்க்க முடியாத வாழ்க்கை முறை. அதற்காகவே வருடம் முழுவதும் கடுமையாக உழைக்கிறார்கள். அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், காசு சேர்க்கிறார்கள். புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு, கிராமத்தில் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டினால்தான் அவர்களுக்கு வாழ்க்கை நிறைவடையும்!

சீனா பல நூறு மிலியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டு மேலெழுப்பியது என்று சீன அரசின் பிரச்சாரத்தையும், அதை வணங்கி வழிமொழியும் இந்திய ஊடகங்களின் பின்பாட்டையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். வறுமையிலிருந்து மேலெழுப்பியது நிஜமா, இல்லையா என்பதைப் பிறகு பார்ப்போம். உண்மை என்னவென்றால் சீனா உலகத்து முதலீட்டையெல்லாம் கேட்டுக் கேட்டுத் திரட்டி வைத்துக்கொண்டு, நாடெங்கும் பெருநகரங்களிலும், மாநகரங்களிலும் தொழிற்சாலைகளை ஏராளமாக நிறுவியது. அடுத்து அவற்றில் வேலை செய்ய பல நூறு மிலியன் கிராமத்து மக்களைக் கொண்டு போய் அங்கு சேர்த்தார்கள். இப்படி, சுமார் 50 கோடி பேர் நகரங்களுக்கு இடம் பெயர்த்து அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இளைஞர், நடுவயதினர், ஆண்கள், பெண்கள். ஆனால் சிறு குழந்தைகளும் முதியோரும் அனேகமாக ஊரிலேயே தங்கிவிட்டார்கள். எனவே நகரத்தில் உள்ளவர்கள் கிராமத்தில் விடப்பட்டுள்ள தம் குடும்பத்தைக் காணப் போவது இந்த ஒரு வார விடுமுறையில்தான்.

பயணம் கிளம்புவது புத்தாண்டுக்கு முன்னாலா, பின்னாலா, எத்தனை நாட்களுக்கு, தன் ஊருக்கா, மனைவி ஊருக்கா, குழந்தை மனைவியுடனா, தனியாகவா என்று பலவற்றையும் யோசிக்க வேண்டும். அத்துடன் விடுப்பு கிடைப்பதையும் பொருத்தே பயணச்சீட்டு வாங்க வேண்டும். பெரும்பாலும், கணவனின் கிராமத்துக்கு மனைவி போவதுதான் வழக்கம். (அட, சீனாவிலும் இப்படித்தானா என்று கேட்காதீர்கள். அது இன்னமும் ‘அரை முதலாளிய, அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனி ஆதிக்க’ நாடாகத்தான் இருக்கிறது.)

பிறந்த வீடு அருகில் இருந்தால், புத்தாண்டு பிறக்கும் அன்றைக்கு போக்குவரத்து நிலவரத்தைப் பொருத்து ஒரு பெண், தான் மட்டுமோ, கணவனுடனோ போவாள். ஊரிலிருக்கும் தன் பெற்றோரையும், அங்கே அவர்கள் வளர்ப்பிலிருக்கும் தன் குழந்தையையும் காணவென்று கிளம்பும் பலர், இந்தப் புத்தாண்டு முடியும் போதே அடுத்த புத்தாண்டுக்கு திட்டம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். வீட்டுக்கு மாதாமாதம் அனுப்புவதும், தன்னுடைய அத்தியாவசியச் செலவுக்கானதும் போக மீதியை அடுத்த புத்தாண்டுச் செலவுகளுக்காகச் சேர்க்கவும் துவங்கி விடுவது வழக்கம். வசதி குறைந்த எளியமக்களின் வாழ்க்கையே புத்தாண்டு எனும் சந்திரனைச் சுற்றும் செயற்கைக் கோள் போல்தான்.

திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில்தான் அதிகம் பேர் பயணமாகிறார்கள். பேருந்துகள், ரயில்கள், படகுகள், விமானங்கள் எது கிடைத்தாலும் சரி, பயணிப்பார்கள். நகரங்களில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தம் ஊர்களுக்குப் போவதும் இச்சமயத்தில்தான். புத்தாண்டு வாரத்தில்தான் மாணவர்களுக்குக் குளிர்கால விடுமுறை துவங்கும். தோள்களிலும் தலைகளிலும் முதுகுகளிலும் பற்பல அசாதாரண அளவிலும், வடிவிலும் பெட்டிகளைத் தூக்கியபடியே நாடெங்கும் குறுக்கும் நெடுக்கும் பயணித்து, எதையும் சகித்து எப்படியாவது சொந்த ஊர் போய்ச் சேரவே துடிக்கின்றனர் பல கோடி சீனர்கள்.

இந்த இடப்பெயர்வுகளின் போது ஏற்படும் நெரிசலையும் கூட்டத்தையும் பார்த்துவிட்டுப் பயணிகளுக்கு உதவி செய்ய முன்வருவோரில் பெரும்பாலோர் மாணவர்கள் என்பது ஆறுதலான ஒரே விஷயம். இவ்வாண்டு தொண்டு செய்த ல்யூ சென் என்ற மாணவர், “ஒரே நாளில்ல 70 பயணிகளின் மூட்டை முடிச்சுகளை ரயிலில் ஏற்ற உதவி செய்தேன். எல்லாரும் ஏறி ரயில் கிளம்பியதும் என் கால் இரண்டும் பக்கவாதம் வந்ததுபோலாகிவிட்டது,” என்கிறார்.

இப்படி சிரமப்பட்டு ரயில் பெட்டியில் ஏறியபின், உட்கார இடம் கிடைக்க, அவரவர் புத்தாண்டுப் பலனில் யோகம் இருக்க வேண்டும். ஏறியதிலிருந்து ஊரில் இறங்கும் வரை பெட்டி படுக்கைகளுடன் மணிக்கணக்கில் நின்று கொண்டே பயணிப்போர்தான் மிக அதிகம். ரயில் பெட்டியில் பொது வழி, கழிவறை வாசல் என்று எங்கும், துளி இடம் கிட்டினாலும், உட்கார்ந்தும் கிடந்தும் பயணிக்கிறார்கள். அனைத்து வாகனங்களிலும் ரயில் நிலையங்களிலும் கூட்டமான கூட்டம், குப்பையான குப்பை! சீனாவில் ரயில் பெட்டிகளே கூட்டுவார் இன்றி எப்போதும் அழுக்கும் குப்பையுமாக இருக்கும். கழிப்பறைகளில் எட்டிப் பார்த்தால் படு பயங்கரம்!

காசேதான் கடவுளடா

ஒரு விஷயம்: இன்றைய சீனாவில் ஏழை பணக்காரன் வித்தியாசம் நிறையவே உண்டு. புரட்சியில் உதித்த சமூகமானால் என்ன? வெட்ட வெட்ட வர்க்கம் முளைக்காத நாடே உலகத்தில் கிடையாது.

ஏழைத் தொழிலாளிகள் பயணச் செலவுக்கே சிரமப்படும் சீன நகரங்களில் எதற்கும் சிரமப்படாத வேறு சில வகுப்பினர் உண்டு. உயர் கல்வி, நல்ல வேலை, பொருளாதார வசதி என்று வளமாக வாழ்பவர்கள் இவர்கள். தங்கள் பெற்றோர், மனைவியின் பெற்றோர், மற்ற உறவினர்களுக்காக பட்டுத்துணி, அழகிய மெழுகுவத்தி, மதுப்புட்டி, சிகரெட்டுகள் என்று கிராமத்தில் கிடைக்காத விலை உயர்ந்த பரிசுகளைக் கொண்டு போவார்கள். சொந்த ஊர்க்காரர்கள் எதிரே இவர்களுக்கு, அந்தஸ்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

இவர்களில் சிலர் வட்டிக்குக் கடன் வாங்கியாவது புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். தத்தமது பிள்ளைகள், உறவினர்களுடைய பிள்ளைகள், அண்டை வீட்டுப் பிள்ளைகள் என்று எல்லோருக்கும் ‘அங்பாவ்’ எனப்படும் சிவப்பு உறைகளில் போட்டுப் பணம் தர வேண்டும். வீடு வாங்குவது, சொத்து வாங்குவது என்று பெரிய திட்டங்கள் போடுவதைப் போல இந்தக் கொண்டாட்டத்துக்கும் திட்டமிட்டுப் பணம் ஒதுக்க வேண்டும். “எனக்கும் குடும்பத்துக்கும் எவ்வளவு நெருக்கம் என்பதைப் பொருத்து 50 முதல் 500 வரை போட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுப்பேன். குறிப்பாக, என்னுடைய பெற்றோருக்கு அவர்கள் ஒரு வருடமாகச் செய்திருக்கும் உதவியைப் பொருத்தே அங்பாவில் தொகை அமையும்,” என்கிறார் ஒருவர்.

வங்கிகள், தகவல் தொழில்நுட்பம், பயோடெக், ஏற்றுமதி இறக்குமதித் துறைகள் போன்றவற்றில் பணிபுரியும் இவர்களுக்கு 30,000 யுவான் வரைகூட இந்த மாதத்தில் செலவாகிறது. வருட வருவாய் 150,000 வரை இருக்கும் போது இது முடியாத காரியம் அல்ல. ஆனால் சிலருக்கு புத்தாண்டுக்குப் பிறகு கையில் ஒன்றும் மிஞ்சாது. சில முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள், ஊரிலிருந்து நகருக்குத் திரும்ப டிக்கட்டை முதலிலேயே வாங்கிவிடுவார்கள். “நான் வருவேன்னு பெரிய குடும்பமே காத்திருக்கு கிராமத்துல. என் மனைவி மக்களோட சேர்ந்து வருஷத்துக்கு ஒரு தடவயாச்சும் ஊருக்குப் போறதுதான் அப்பா அம்மாவுக்குச் செய்யற மரியாதை,” என்பார்கள். “சிநேகிதர்களுக்குத் திருமணப் பரிசாக 1000 முதல் 2000 வரை கொடுக்கும்போது, பெத்தவங்களுக்கு 2000-3000 கொடுப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்?” வருடம் முழுவதும் பெற்றோரைக் கவனித்துக் கொள்ளாமல் விட்டுவிட்ட குற்றவுணர்வுக்கு இதமாகத் தடவும் களிம்புதான் இப்படிப் பணம் கொடுப்பது. வருமானம் கூடக் கூட, பெற்றோருக்குக் கொடுக்கும் தொகையையும் கூடும்.

sam_2547

நகரமயமாகிக் கொண்டு வரும் சூழலில், நன்றியுணர்வையும் பாசத்தையும் குடும்பத்துக்குக் கொடுக்கும் பணத்தை வைத்து எடைபோடும் இந்தப் பழக்கமும் வந்து சேர்ந்திருக்கிறது, இதெல்லாம் குடும்ப ‘மறுகூடல்’ விருந்தின் உண்மையான கருத்தை நீர்க்கச் செய்து விட்டதென்று நினப்பவர்கள், இந்த அமர்க்களங்களில் சேருவதில்லை. இவர்கள் மிகச் சிறுபான்மை. வேறு வழியின்றி ஊரோடு ஒத்து வாழ்ந்துவிடலாமே என்று நினப்பவர்கள்தான் அதிகம்.

இடம்பெயர்பவர்களில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளியும் மிக மிக அகலமாக இருக்கிறது. வசதி குறைந்தோர் செலவைக் குறைத்துக் கொள்ளும் நோக்கில் சுற்றி வளைத்து சல்லிசான பாதையில் பயணம் போகிறார்கள். இதனால் ரயில் சேவைகளிலும் பயணப் பாதையிலும் ஏகப்பட்ட குளறுபடிகள், தாமதங்கள். ஆனால் சொந்த ஊருக்குப் போய் ரத்தபந்தங்களைக் கண்டதுமே பயணக் களைப்பெல்லாம் பறந்து போய்விடும்!

புத்தாண்டு அன்று சொந்த ஊரில் இல்லாவிட்டால் புத்தாண்டுக் கொண்டாட்டமே கிடையாது. அதற்கு ஒரு மாதம் முன்பே எல்லா வணிக வளாகங்கள், ரயில்/பேருந்து நிலையங்கள், சந்தைகள் என்று எங்கு பார்த்தாலும் கூட்டமான கூட்டம். அவரவர் சொந்த ஊர்களுக்குப் போய்விட்டால் நகரங்களும் பெருநகரங்களும் சந்தடியின்றி அலை ஓய்ந்த கடலாக நிச்சலனமாகக் கிடக்கும். விழாக்காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிடும். 2010ல் இருந்ததை விட ’முயல் ஆண்டில்’ விலைவாசி உயர்வு 5.1 சதவிகிதம் அதிகம்! இதை மனதில் கொண்டு விழாக்காலம் வரை காத்திருக்காமல் ஒரு மாதம் முன்பே கிராமத்துக்குப் போகிறவர்கள் உண்டு. குருட்டு தைரியத்தில் வேலையை விட்டவர்கள், திட்டமிட்டு வேலையை மாற்றிக் கொண்டு போகிறவர்கள், ஒரு மாதச் சம்பளம் போனால் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் எல்லோரும் இதில் அடக்கம்.

பேருந்துப் போராட்டங்கள்

தொலை தூரப் பேருந்துகள் எப்படியாவது சேரிடம் சென்றடைந்துவிடுவதே ஒரு ஆச்சரியம்தான். பெய்ஜிங்கிலிருந்து வெளி ஊர்களுக்கு வழக்கமாக ஓடும் 500 பேருந்துகள் தவிர, புத்தாண்டின்போது 100 விசேஷ சொகுசுப் பேருந்துகள் விடுவார்கள். இவற்றில் பயணிப்பவர்கள் 20-30 ஆயிரம் பேர். தலைநகரிலிருந்து 2200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர்களுக்கும் செல்லும். இப்போது இணையம் மூலம் கூட டிக்கெட் வாங்கி விட முடியுமென்பதால் சீட்டு வாங்குவதில் சிரமம் குறைந்திருக்கிறது.

ஷாங்காயிலிருந்து மங்கோலியாவின் உட்பகுதிக்குப் போவோரில் பெரும்பாலோர் ரயிலையோ விமானத்தையோவிட இந்த சொகுசுப் பேருந்தையே தேர்ந்தெடுக்கின்றனர். சுற்று வழியாக இருந்தாலும் பெய்ஜிங்கிலிருந்து ஷான்ஸி போய், பிறகு கிழக்கே திரும்பி மங்கோலியாவை நோக்கிச் செல்ல வேண்டி இருப்பது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ரயில் டிக்கெட் கிடைக்க வேண்டுமென்றால் முக்கிய அதிகாரிகளின் தொடர்போ அல்லது குறுக்கு வழியிலோதான் முயற்சிக்க வேண்டும். எனவே எட்டு மணிநேரம் குளிரில் வரிசை பிடித்துக் காத்திருந்தும் பேருந்து டிக்கட்டுகள் வாங்குகிறார்கள்.

_dsc6180

சீனாவின் பெருவிரைவுச் சாலைகள் தரத்திலும், நீளத்திலும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கின்றன. ஆகவே, பேருந்துப் பயணம் வசதியாகத்தான் இருக்கிறது. அவரவர் சொந்த வாகனங்களிலேயே ஊருக்குப் போவோரும் நிறைய உண்டு. தென் சீனத்தின் குயிஜோவ், ச்சோங்பிங், ஹுன்னன் போன்ற பகுதியிலிருக்கும் பல முக்கிய சாலைகளில் பனி மூடியிருக்கும்; கார்களிலும் பேருந்துகளிலும் போவோருக்குப் பயணம் தாமதமாவதுண்டு. இடைவிடாமல் பனியை அகற்றவென்று ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். பேருந்துகள் வழுக்கி மலைச் சரிவுகளில் விழுந்து உயிர் பலிகள், உடல் சேதங்கள் ஏற்படுவது சாதாரணமாக நடக்கும். இருபது அங்குலம் வரையில் கூட பனிப்பொழிவுகள் ஏற்பட்டு தண்டவாளங்கள் மூடப்பட்டு ரயில் போக்குவரத்துக்கு இடையூறாவதுண்டு.

சீனாவில் போக்குவரத்து சேவைகள் தாமதமாவதையும் ரத்தாவதையும் அரசியலாக்கவென்றே பலர் காத்திருப்பார்கள்! இது அரசாங்கத்துக்கும் தெரியும். எனவே குழப்படிகள் ஏதும் நடக்கக் கூடாதென்று அரசாங்கம் விசேஷ கவனம் எடுக்கிறது. 2008ஆம் ஆண்டு புத்தாண்டின் போது பனிப்பொழிவு காரணமாக சாலை அடைக்கப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்து ஏற்பட்ட குழப்படிகளுக்குப் பிறகு பத்தாயிரக்கணக்கில் மக்கள் இடையில் ஆங்காங்கே மாட்டிக் கொண்டனர். அப்போதிலிருந்தே அதிகாரிகள் அவசரகாலத் திட்டங்கள் தீட்டி ஒருங்கிணைப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். முக்கியமாக, எக்காரணம் கொண்டும் விழாக்காலங்களில் பெருவிரைவுச் சாலைகளை அடைப்பதில்லை.

ரயில் பயணங்களில்…

தெற்கிலிருந்து வடக்கேயிருக்கும் ச்செங்டூ போன்ற ஊர்களுக்குப் போக ரயிலில் முப்பது மணிநேரம் ஆகும். எல்லோரும் பல வாரங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்வதால் ரயில் டிக்கட்டுகள் மளமளவென்று விற்றுத் தீர்கின்றன. டிக்கெட் வாங்கவென்று தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் அலுக்காமல் விடியலிலேயே வந்து வரிசையில் நிற்பார்கள். திறந்து ஓரிரு மணிநேரத்திலேயே பயணச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கதவடைக்கும் அதிகாரிகளைத் திட்டி ஆர்பாட்டம் நடக்கும். கட்டுக்கடங்காத தள்ளுமுள்ளு. பயணிகளிடையே கோபம் தீயெனப் பற்றிப் பரவும்.

பயணச் சீட்டுகளை மொத்தமாக வாங்கி மூன்று நான்கு மடங்கு லாபம் வைத்து சட்டவிரோதமாக விற்கும் கும்பல்களும் உண்டு. பல இடங்களில் ரயில்போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் ஊழியர்களே கூடுதல் வருவாய்க்கு ஆசைப்பட்டும் உயிருக்கு பயந்தும் இந்தக் குறுக்கு வழிகளுக்கு உடந்தையாக இருப்பார்கள். ரயில் நிலையங்களில் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விற்கும் ஆட்கள் திரிந்தபடியே இருப்பார்கள். மெல்ல அருகில் வந்து ‘டிக்கட் வேண்டுமா?’ என்று ரகசியக் குரலில் விசாரிப்பார்கள். வேறு வழியில்லாமல் இவர்களிடமிருந்து வாங்கத் தயாராக இருக்கும் பயணிகளும் பெருவாரியாக இருக்கவே செய்கிறார்கள். நகரங்களில் பெரிய அளவில் இயங்கும் குண்டர் கும்பல்கள் வேறு, விற்போரை மிரட்டிக் கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கும். கள்ள டிக்கெட் விற்றால் கடுமையான தண்டனை என்று அரசாங்கம் சொல்லிக் கொண்டே இருந்தாலும் இது ஒரு பக்கம் நடந்தபடியே தான் இருக்கிறது. இந்த ஆண்டு, போலீஸார் கிட்டத்தட்ட 1800 ஆட்களைப் பிடித்து 14,000 டிக்கட்டுகளையும் கைப்பற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள்.ஆனால், இதெல்லாம் ரயில்வே ஊழியர்களை ஒன்றுமே செய்வதில்லை.

001

இவ்வளவு சிரமப்பட்டு ரயில் டிக்கட்டுகள் கிடைத்தாலும் உரிய நேரத்தில் ஊர் போய்ச் சேர்வோம் என்பது உறுதியில்லை. இருபது மணிநேரத்துக்கு அதிகமாக ரயிலில் பயணம் செய்து வடக்கு மாநிலங்களுக்குப் போகிறவர்கள் அதிக சிரமத்துக்குள்ளாகிறார்கள். மைனஸ் 30 டிகிரி வரை இறங்கும் குளிர். பனி ஒரு பக்கம் கொட்டும். பயணச்சீட்டின் விலை சிலருடைய இரண்டு மாத வருவாயாகக் கூட இருக்கும். சுற்று வழியிலோ அல்லது வெப்பமூட்டப்படாத சாதாரண ரயில் பெட்டியிலோ பயணப்படத் தயாராக இருக்கும் ஊழியர்கள் ஒருமாதச் சம்பளத்தைக் கட்டணமாகக் கொடுத்துப் போக வேண்டி இருக்கும். மிகப்பெரிய மூட்டை முடிச்சுகளும் புழுதி படிந்த உடையுமாகப் பரிதாபமாக வந்து இறங்குவார்கள்.

‘Last Train Home’ என்ற திரைப்படம் சீனர்கள் நகரத்தை நோக்கி இடம் பெயர்வதைச் சொல்கிறது. சொந்த ஊரை நோக்கிப் புத்தாண்டுப் பயணம் செல்வதன் பரபரப்பைச் சொல்கிறது. முக்கியமாக, தாத்தா பாட்டியிடம் பேரப்பிள்ளையை வளர விட்டுவிட்டுக் குழந்தையின் பெற்றோர் நகரத்திற்குப் போய் பொருளீட்டுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதார்த்தமாகச் சொல்லும் படம் இது. தமது எதிர்காலத்தையும் பிள்ளையின் எதிர்காலத்தையும் வளப்படுத்த இவர்கள் நிகழ்காலத்தைத் தொலைப்பதை மனதைத் தொடும் விதமாகக் காட்டுகிறது.

முயல் ஆண்டு பிறக்கச் சில நாட்கள் முன்பு, பேய்ஜிங் ரயில் நிலையத்துக்கு வெளியே உறைய வைக்கும் குளிர். ரயில்நிலையத்தின் உட்பகுதிகள் வெப்பமூட்டப்பட்டிருந்தாலும், அங்கே நிற்கக்கூட இடமில்லாமல் வெளியே காத்திருந்தோர்தான் அதிகம். சொந்த ஊருக்குக் கொண்டு போகவென்று ஏராளமாக வாங்கியிருந்த கடல் உணவுப் பொருட்களை ஃப்ரிஜ்ஜில் வைத்தது போல் பாதுகாப்பாகப் பனியில் வைத்துக்கொண்டு பலர் வெளியில் நின்றார்கள்.

ரயில் நிலையத்துக்குள், சாதாரணப் பயணிகள் காத்திருக்கும் அறைகளுக்கும் முதல் வகுப்பு விசேஷ அறைகளுக்கும் பெரிய வேறுபாடுகள் ஒன்றும் கிடையாது. முன்னதில் இருப்பது சாதாரண மர பெஞ்ச்சுகள்; பின்னதில் இருப்பதோ பராமரிக்கப்படாமல் பிய்ந்து பல்லிளிக்கும் பழைய மெத்தை இருக்கைகள்.

தன்னுடைய நவீன அதி வேக ரயில்கள் குறித்து சீனாவுக்கு ஒரு பெருமை. இந்த முறை புத்தாண்டுப் பயணிகளில் 20% பேர் அதிவேக ரயிலில் சென்றனர். டிக்கெட்டுகள் 352 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுவதால், புத்தாண்டு விழாக் காலம் தவிர மற்ற நேரங்களில் இந்த டிக்கட்டுகளை வாங்க ஆள் இல்லை. பெருந்தொகை செலவிட்டு இந்த அதிவேக ரயில் சேவையை அரசாங்கம் துவங்கி அது ஒரேயடியாகக் காலியாக ஓடுவதைக் குறித்துப் பரவலான விமரிசனங்கள் எழுந்தபடியேதான் இருக்கின்றன. இந்த விழாக்காலத்தில் அதிவேக ரயில் சேவையின் எண்ணிக்கையும் இரண்டு மூன்று மடங்காகக் கூடியது.

‘போன ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரயில் சேவை சரியில்லை, டிக்கெட்டுகளே கிடைக்கவில்லை,’ என்று ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் அதிருப்தியுடன் முறையிடுகிறார்கள். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இது மாதிரியான புகார்கள் இருக்கவில்லை. ஏனெனில், அப்போதெல்லாம் சீனர்களிடம் பயணங்களுக்குச் செலவு செய்ய ஏது வசதி? பயணத்திற்கு அனைவரும் அத்தியாவசிய தேவைகளைச் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கிறது. கைக்குழந்தைகளை முதுகிலும் தோள் தூளியிலும் கூடைகளிலும் ஏந்திப் பயணிக்கும் சீனர்களுக்கு திடீர் நூடுல்கள், பன் போன்றவை தான் பயண காலங்களில் பசிக்கு உதவுகின்றன.

இவ்வளவும் சொல்லிப் பின் மனித மன விகாரங்கள் பற்றிச் சொல்லா விட்டால் எப்படி? அதுவும் எல்லா நாடுகள் போலவே, சீனாவிலும் உண்டு. நிறையவே உண்டு. விழாக் காலத்தில் சீனாவின் விபசார விடுதிகள் ரயிலுக்கே வந்து விடும்! கூட்டம் கூட்டமாகப் பாலியல் தொழிலாளிகள் முன் பதிவு ரயில் டிக்கட்டுகளுடன் வந்து சேர்வார்கள். முடிந்தால் வாடிக்கையாளர்களையும் தெரிவு செய்து முன்பணம் வாங்கிக் கொண்டு இவர்கள் ரயில் பெட்டிகளை ஆக்கிரமிப்பார்கள். வசூலிக்கும் கட்டணத்துக்கேற்ற நடை உடை, பாவனை, சேவையென்று பணியாற்றுவார்கள். பெரிய பெரிய தொழிலதிபர்கள் இதற்காகவே விமானப் பயணத்தைத் தவிர்த்து விட்டு ரயிலில் முதல் வகுப்பு போட்டுக் கொண்டு பயணிக்கிறார்கள். சமீப காலங்களில் ஆண் பாலியல் தொழிலாளிகளையும் ஆங்காங்கே காண முடிகிறது என்கிறார்கள்.

முதல் முறையாகப் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் அதிர்ச்சியாக இருக்கலாம். புத்தாண்டுப் பயணங்கள் மேற்கொண்டு பழகியோருக்கு இது சாதாரணம். இதையெல்லாம் ஆபாசம் என்று வெறுப்பவர்கள் இருக்க, சுவாரஸியமான பார்வை கொண்டு பார்ப்போரும் இருக்கிறார்கள். தங்கள் ரயில் பெட்டியில் சில இருக்கைகள் தள்ளி நடக்கும் குறும்பும் குறுகுறுப்பும் சில ஜொள்ளர்களின் ரயில் பயணத்திற்குச் சுவை கூட்டுகிறது. ஆதிகாலத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இதுபோன்ற போக்குகள் இருந்திருக்கின்றனவா என்றெல்லாம் ஆராய்வோரும் உண்டு. நமக்குத்தான் வசதியோ வாய்ப்போ இல்லாமல் போனாலும், அந்த வசதியும் துணிச்சலும் இருப்பவர்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் என்று சாதாரணமாக எடுத்து கொள்பவர்களே பெரும்பான்மையினர்.

கண்ணைக் கட்டும் எண்ணிக்கைகள்

அதிகாரபூர்வமான விடுமுறை என்பது, புத்தாண்டுக்கு முன் தினம் தொடங்கி ஒரு வாரத்துக்கு நீடிக்கும். இந்த முறை புத்தாண்டுக்கு முன்பும் பின்புமாக ஒரு மாதத்தில் பிரயாணிகளின் எண்ணிக்கை 260 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 11.6% அதிகம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 166 கோடியாக இருந்திருக்கிறது. புத்தாண்டு காலத்தில் இடம் பெயர்வோர் சீனத்தின் பாதி மக்கள் தொகை – 70 கோடி பேர். ஜேஜியாங்கில் மட்டும் 10,102,000 பயணிகள். இது கடந்த ஆண்டைவிட 14.1% அதிகம். பிராஸ்யூ நாட்டின் (Brazil என்ற பெயரை உள்ளூர் மொழியான போர்ச்சுகீஸில் இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்!) மொத்த மக்கள் தொகையை விட 23 கோடி அதிகம் சீனர்கள் புத்தாண்டன்றும் அதற்கு முன்தினமும் பயணப்பட்டார்கள். சுமார் 3.5 கோடி பயணங்கள் படகுகள் வழி நிகழ்ந்தன.

இந்த இடப்பெயர்வின்போது சராசரியாக அன்றாடம் 2265 ரயில்கள் ஓடும். இவ்வருட ரயில் வண்டிகளில் 5654 ரயில் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப் பட்டன. டிக்கட்டுகள் விற்க 20,000 தற்காலிக அலுவலகங்களைத் திறந்தார்கள். பிரச்சினைகள் ஒன்றுமே இல்லாமல் சமாளித்து விடுவோம் என்று அதிகாரிகள் மிகுந்த நம்பிக்கையோடு ஏற்பாடுகளைச் செய்து அறிவிக்கவும் செய்தார்கள். ஒவ்வொரு புத்தாண்டின் முதல் பதினோரு தினங்களில், மட்டும் 86,000 கிலோமீட்டர் நீள தண்டவாளங்களில் அன்றாடம் 6 கோடிப் பேர் பயணம் செய்தார்கள். இதைச் சமாளிக்க 300 ரயில்கள் உபரியாக ஓட்டினார்கள்.

பறக்கும் சீனா

சீனாவில் விமானச் சேவைகளும் வருடாவருடம் 11.6% அதிகரித்தபடி இருக்கின்றன. புத்தாண்டின் உச்சகட்ட நிலையில் கூடுதலாக 252 விமானங்கள் பறக்கின்றன. 5000த்துக்கும் மேல் இருக்கைகள் கொண்ட 12 விமானச் சேவைகள் ச்சோங்ச்சிங்கிற்கும் குவாங்ஜோவுக்கும் இடையில் விடப்படுகின்றன. அதிகரிக்கப்படும் ரயில் கட்டணத்துக்கு ஈடாக விமானக் கட்டணங்கள் குறைத்து விற்கப்படும். இணையம் வழி பயணச் சீட்டு வாங்குவது வழக்கத்துக்கு வந்தாலும் இன்னும் வரிசையில் நிற்போரே அதிகம்.

வான் வழிப்பாதைகளில் பெரும்பகுதி ராணுவத்தின் வசம் இருந்தாலும், சீனாவின் புதிய கோடீஸ்வரர்களில் பலர் சொந்த விமானங்கள் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். சொந்த விமானம் இல்லாதவர்கள் அவரவர் ஊருக்குப் போக ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தவிருக்கிறார்கள். பொது ஹெலிகாப்டர் சேவைக்கான ஆயத்தங்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன!

இடப்பெயர்வால் என்ன பிரச்னை?

பெருவாரியான மக்கள் பயணம் புறப்பட்டுவிடுவதால், சீனாவில் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. ஊழியர்கள் வேலைக்குத் திரும்புவார்களா, அல்லது புத்தாண்டு முடிந்ததும் வேறு நல்ல வேலை கிடைத்துப் போய்விடுவார்களா என்ற பதட்டம் முதலாளிகளிடம் இருந்து கொண்டே இருக்கிறது. ஜிங்ஹுவா நிறுவனத்தின் ஹுவாங் ஹே, “1500 தொழிலாளிகள் வேலை செய்ற இடத்தில 500 பேர் புத்தாண்டுக்கு ஒரு மாசம் முன்னால வேலையை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டா, எப்படித்தான் நான் சமாளிக்கிறது?”என்று புலம்புகிறார்.

முக்கியமாக ரயில் டிக்கட் கிடைக்காதென்ற பயத்தினால்தான் ஒரு மாதம் முன்பே கிளம்பி சொந்த ஊருக்குப் போகிறார்கள். உற்பத்தி பாதிக்கப்படாதிருக்க என்னென்ன செய்யலாம் என்ற சவால் ஒவ்வொரு ஆண்டும் முதலாளிகளுக்கு முன்னால் நிற்கிறது. ஊழியர்கள் சொந்த ஊருக்குப் போக அனுமதிச் சீட்டு வாங்கித் தர சில முதலாளிகளே முயற்சி எடுப்பதுண்டு. ‘புத்தாண்டுக்கு முதல் நாள் வரை வேலை செய்தால் சம்பள உயர்வு, அல்லது ஊருக்குப் போக இலவச ரயில் டிக்கட்’ என்று அறிவித்தால் வேலை செய்யத் தயாராகவே இருக்கிறார்கள் கடும் உழைப்பாளிகளான பல சீனர்கள். இந்த வகை ஊழியர்களின் சொந்த ஊர் நகரத்திலிருந்து சில மணிநேரப் பயணத்திற்குள் இருக்கும்.

crowded_train_stations_in_china_17_1

முயல் ஆண்டுக் கொண்டாட்டத்துக்காக 3540 நிறுவனங்கள் 650,000 டிக்கட்டுகளைத் தமது தொழிலாளர்களுக்காக முன்பதிவில் வாங்கியுள்ளன. எல்லாமே ஊருக்குப் போய் மீண்டும் வேலைக்குத் திரும்ப ரிட்டர்ன் டிக்கட்டுகள். இந்த எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் கூடி வருகிறது. “கூடுதல் சம்பளமெல்லாம் கொடுக்க எங்களுக்குக் கட்டுப்படியாகாது. உண்மையில் எங்களுக்கு லாபம்னு பார்த்தா பெரிசா ஒண்ணுமில்ல”, என்று முதலாளிமார்கள் அலுத்துக் கொண்டாலும், ஏழு நாட்கள் மட்டும் விடுப்பெடுக்கும் தொழிலாளிகளுக்கு ஊக்கத் தொகைகளும் ஊதிய உயர்வும் அறிவிக்கின்றனர். இதைச் சிலர் விரும்பி ஏற்க, சிலர் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் சேர்த்தே தான் பார்க்கும் வேலையை விட்டுவிடுவது என்பது சீனத் தொழிலாளிக்கு ஒரு பொருட்டே இல்லை! தோங்குவான், குவாங்தோங் போன்ற நகரங்களின் தோல் தொழிற்சாலைகளில் புத்தாண்டுக்குப் போன தொழிலாளர்களில் பெரும்பாலோர் வேலைக்குத் திரும்பவில்லை. எல்லோரும் தத்தமது குடும்பத்துடன் இருந்துவிட முடிவெடுத்து விட்டனர். ‘இந்த வேலை போனால் என்ன, வேறு வேலையைத் தேடிக் கொள்ளலாம்’ என்ற நம்பிக்கை அவர்களுக்கு. கொடுக்கப்பட்ட விடுமுறை முடிந்து பல நாட்கள் கழித்துத் திரும்புவோரும் நிறைய. சிலர், புத்தாண்டின் பதினைந்தாம் நாளான ‘லாந்தர் விழா’ முடிந்த பிறகுதான் திரும்புவார்கள்.

இப்படிப்பட்ட காரணத்தால் உற்பத்தி குறையும்போது அல்லது தடைப்படும்போது, அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வணிகர்களுக்கும் விளக்கிப் புரியவைப்பது முதலாளிகளுக்குக் கஷ்டமாகிறது. இந்த வருடம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளின் இறக்குமதி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குக் காக்க வைக்கப்பட்டன. சீனப் புத்தாண்டையும் அது ஏற்படுத்தும் உள்நாட்டு இடப்பெயர்வுகளையும் புரிந்து கொள்வது அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. எண்ணற்ற புகார்கள், ஒப்பந்தங்கள் ரத்து என்று பல தொல்லைகளைச் சந்திக்கிறார்கள் தொழிற்சாலை முதலாளிகள்.

இந்தப் புத்தாண்டு இடப்பெயர்வுகளின் அதிர்வு உலகம் முழுவதும் பரவுகிறது. சீனாவின் மலிவு விலைப்பொருட்களை நம்பியிருக்கும் அமெரிக்கச் சந்தையில், பேரங்காடிகளின் அலமாரிகள் கொஞ்சகாலத்துக்குக் காலியாகக் கிடக்கின்றன. இந்த வருடம் டெக்ஸாஸைச் சேர்ந்த ‘கண்டெயினர் ஸ்டோர்’ என்ற அங்காடி நான்கு வாரங்களாக சீன சரக்குக் கப்பலை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அதே போல, ஒரு சீனத் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்ற, இறக்கத் தொழிலாளிகள் இல்லை. காத்திருந்து வெறுத்த ஒரு கப்பல் மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பிப் போய்விட்டது!

சவாலா ? சமாளி !

வரும் ஆண்டுகளில் சீனாவில் மேலும் பல பெருவிரைவுச் சாலைகள் உருவாவதால் இந்த விழாக்கால இடப்பெயர்வுகளைச் சமாளித்துவிட முடியும் என்று அவர்கள் கடந்த சில காலமாகவே எதிர்பார்க்கிறார்கள். சாலைகளும் பயண வசதிகளும் கூடியபடியே இருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கையும் கண்டபடி அதிகரித்து சமாளிக்க முடியாமல் போகிறது. பொருளாதார மேம்பாட்டைத் தேடி வெவ்வேறு மாநிலம், மாவட்டம், ஊர், கிராமங்களிலிருந்தும் வருடம் முழுவதும் வெவ்வேறு நேரத்தில் நகரை நோக்கிப் போன மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் போவதால் தலை சுற்ற வைக்கும் பிரச்னைகள்!

கிராமத்திலிருந்து நகருக்குச் செல்பவர்களுக்கு, வசிப்பிட அனுமதிச் சீட்டாக ‘ஹுகோவ்’ என்ற அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. இந்த ஹுகோவ்தான் விழாக்கால இடப்பெயர்வுகளின் போது நிகழும் பல குழப்படிகளுக்கான மிகமுக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.
கிராமத்து வீட்டைப் பூட்டி வைத்து விட்டு வெவ்வேறு நகரங்களுக்குப் போய் உழைத்துச் சம்பாதிப்பவர்கள், இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் வீடு திரும்பி, வீட்டைப் புதுப்பித்து, கூடியிருந்து உண்டு களித்து, புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு மீண்டும் அவரவர் நகரங்களை நோக்கி ஓடுகிறார்கள். விவசாயத்தை முற்றிலும் துறக்க முடியாமல் தவிப்பவர்கள், நகரில் சம்பாதித்ததை வைத்து விவசாயத்தில் முதலீடு செய்வதும் உண்டு.

புத்தாண்டு காலத்தில் கிராமங்கள் மற்றும் சிற்றூர்களிலிருந்து நகரங்களுக்குப் போவோரும் இருக்கிறார்கள். ஆனால், எதிர்திசையில் கிளம்புகிறவர்களோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை வெறும் தூசு!

வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் புத்தாண்டு யாத்திரைகள், சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பண்பாட்டின் அடிப்படையில் நடந்தன. ஆனால் சமீப வருடங்களில் இவை பொருளாதார அடிப்படையிலேயே நிகழ்ந்து வருகின்றன. ஆய்வாளர்களுக்குப் புதிர் என்னவென்றால், நவீனமாகிக் கொண்டே வரும் பொருளாதார, சமூக வளர்ச்சியைக் கடந்தும் மிகத் தொன்மையான ‘ஒன்று கூடல்’ விருந்துக்கு ஏன் சீனர்கள் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதுதான்.