உள்ளம் கவர்ந்த உள்வேலை

wall-street-2

விவரணப்படங்கள் (Documentary Film) என்றாலே அழுது வடியும் படங்கள் என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பொழுதுபோக்கான விஷயங்கள், நகைச்சுவைக்காட்சிகள் இவையெல்லாம் விவரணப்படங்களில் இடம்பெறவே கூடாது என்றும் நாம் பரவலாக நினைக்கிறோம். நம் தமிழ்ப்படங்களில் ஒரு காட்சி நிதானமாக நகர்ந்தால் கூட ‘என்ன டாகுமெண்ட்ரி படம் மாதிரி எடுத்திருக்கான்?’ என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

நம்மூரைப் போலில்லாமல், மேற்குலகில் வழக்கமான சினிமாவுக்கு (feature films) வரவேற்பு இருப்பதைப் போல, விவரணப்படங்களுக்கும் வரவேற்பு உள்ளது. வழக்கமான சினிமாக்கள் ஓடும் தியேட்டரிலேயே இப்படங்களும் ஓடுகின்றன; நிஜ உலகப் பிரச்சினைகளை விளக்கிச் சொல்லி சிந்திக்க வைக்கின்றன. 2006-ஆம் ஆண்டு வெளியான ‘An Inconvenient Truth’ என்ற Davis Guggenheim இயக்கிய விவரணப்படம் அப்படிப்பட்ட விவரணப்படங்களில் முக்கியமானது,. இதில் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபர் அல் கோர், (Al Gore) ‘கோள வெதும்பல்’ (global warming) பற்றி அழகாக விஞ்ஞான மேற்கோள்களுடன் விளக்கி, இன்று ‘கோள வெதும்பல்’ பற்றி எல்லோரும் ஓரளவு அறிந்து கொள்ள உதவிய விவரணப் திரைப்படம். 50 மில்லியன் டாலர்கள் ஈட்டிய இப்படம், விவரணப்படத்துக்கான ஆஸ்கரையும் வென்றது. அதற்குப் பின், 2007-இல் அமைதி நோபல் பரிசையும் வென்றார் அல் கோர்.

விவரணப்படங்கள் அதிகமாக எடுத்து சம்பாதித்தவர்கள் உண்டா? ஸ்டீவன் ஸ்பீல்பர்க் அளவுக்கு பணக்காரர் ஆகவில்லையென்றாலும் விவரணப்பட உலகில் வெற்றியை சம்பாதித்தவர்களில் முக்கியமானவர் அமெரிக்க இயக்குனர் மைக்கேல் மூர் (Michael Moore). இவர் எடுத்த பல விவரணப்படங்கள் சிலபல மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளன. 2002-இல் இவர் எடுத்த ‘Bowling for Columbine’ என்ற திரைப்படம் ஆஸ்கர் பரிசு வென்றது. அமெரிக்கப் பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கிக் கலாசாரத்தால் எப்படிக் கெட்டுப்போகிறார்கள் என்பதை விளக்கிய இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது. இவர், இதற்குப்பின் எடுத்த பல விவரணப்படங்கள் ஆஸ்கர் வெல்லவில்லை என்றாலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் எடுத்த ‘Fahrenheit 9/11’ என்ற விவரணப்படம் இதுவரை அதிகம் வருவாய் ஈட்டிய அரசியல் திரைப்படம். 100 மில்லியன் டாலருக்கு மேல் சம்பாதித்த இந்தப்படம் புஷ்ஷின் அரசியலை விமர்சித்து எடுக்கப்பட்ட ஒன்று. 2007-இல் இவர் எடுத்த Sicko என்ற விவரணப்படம், அமெரிக்க சுகாதார அமைப்பு மற்றும் காப்புரிமை பற்றி கடுமையாக விமர்சித்தது. 2007-இல் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இப்படங்களைப் போல பல நல்ல விவரணப்படங்களை ஆஸ்கர் அகாடமி ஊக்கிவித்து வந்துள்ளது. 1990-இல் ஆஸ்கர் பரிசு வென்ற ‘The American Dream’ என்ற விவரணப்படம், அமெரிக்கத் தொழிற்சங்கங்ளில் உண்மையாக நிகழ்ந்த போராட்டங்களை காட்டியது. 2009-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிபெறாத ‘Food Inc’ என்ற திரைப்படம் அமெரிக்க ‘அவசர உணவுத் தொழில்கள்’ (fast food) எப்படி இயங்குகின்றன என்று அழகாக விளக்கியது. இதே கருத்தையொடி அமெரிக்க நிறுவனமான McDonalds ன் உணவகங்கள் உடலுக்கு எவ்வளவு கெடுதல் விளைவிக்கின்றன என்பதை விளக்கிய விவரணப்படம் Supersize Me (2004).

இந்த வருடம் விவரணப்படத்திற்கு ஆஸ்கரை வென்ற சார்ல்ஸ் ஃபெர்கூஸன், ‘எங்கள் கொள்ளுப்பாட்டிக்கு நன்றி, பிறக்கப் போகும் குட்டி மகளுக்கு நன்றி’ என்று ஹாலிவுட் பாணியில் ஏற்புரை ஆற்றவில்லை. “மூன்று வருடங்கள் ஆகியும் நம் வேலைகளை, பணத்தை, அமைதியைக் கொள்ளையடித்த வெள்ளைக் காலர் திருடர்கள் ஒருவரும் சிறைக்கு செல்லாதது வேதனையாய் இருக்கிறது” என்றார். ’Inside Job’ என்ற இவரது திரைப்படம் 2008-இல் அமெரிக்க பங்கு மார்கெட் சரிவு மற்றும் அதன் பின் நிகழ்ந்த சதிகளை மிக அழகாக விளக்கும் விவரணப்படம்.

charles-ferguson

மைக்கேல் மூர் விவரணப்படங்களில் பல பேட்டிகளில் காமிரா ஆடும், இசை ஏனோதானோ என்றிருக்கும். சார்லஸ், ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் தொழில்நுட்பத்தரத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பல இடங்களில் ஹெலிகாப்டர் ஷாட்களை (நியூயார்க்கில் பெரும்பகுதி காட்டப்படுவதால்) நேர்த்தியாக எடுத்துள்ளார். இந்த விவரணப்படம் மூலம் பல திடுக்கிடும் தகவல்களை, ஆதாரங்களோடு பல பேட்டிகள் மற்றும் கிராபிக்ஸ் மூலம் அழகாகக் காட்டியிருக்கிறார் சார்ல்ஸ்.

இந்தப் படத்தை சரியாகப் புரிந்துகொள்ள முக்கியமானது கொள்ளை போனது எவ்வளவு பணம் என்பது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஓரளவிற்கு கோடிகள் பற்றி நாம் அறிந்து கொண்டுள்ளோம். ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ஏறக்குறைய 45 ரூபாய். 1 மில்லியன் டாலர் என்பது 10 லட்சம் டாலர்கள். 1 பில்லியன் டாலர்கள் என்பது 100 கோடி டாலர்கள். 1 டிரில்லியன் டாலர்கள் என்பது 100,000 கோடி டாலர்கள். இந்த 2008 பங்குச்சந்தை ஊழலில் காணாமல் போனது குறைந்தபட்சம் 20 டிரில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலருக்கு சற்று கூடுதலானது. ஸ்பெக்ட்ரம் ஊழல் அமெரிக்க டாலர்களில் மதிப்பிட்டால் ஏறக்குறைய 40 பில்லியன் டாலர்கள்.

இந்த ஊழலின் விளைவுகளை இன்றும் உலகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச்சரிவால், குறைந்தபட்சம் 1.5 கோடி பேர் மீண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் உலகெங்கும் வேலை இழந்து தவிக்கிறார்கள். ஏற்கனவே பல அமெரிக்க உற்பத்தி வேலைகள் சீனா மற்றும் ஜப்பானுக்கு 1980/90-களில் சென்று விட்டன. இதற்குப் பின், செலவைக் குறைப்பதற்காகப் பல பின்னலுவலக வேலைகளை (Backoffice work) இந்தியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துவிட்டன. அமெரிக்காவில் மிஞ்சியிருந்தது இரு பெரும் பொதுத் தொழில்கள் (ராணுவம் அல்லாதவை) என்று சொல்லலாம். ஒன்று தகவல் தொழில்நுட்பம்; இன்னொன்று நிதித்தொழில். இந்த மாபெரும் அமெரிக்க ஊழல், இந்த இரு துறைகளில் ஒன்றான நிதித்துறையில் நடந்தது. நிதித்துறையின் பேராசையால் நடந்த இந்த ஊழல் இன்று உலகையே ஆட்டிப் படைக்கிறது.

இப்படம் 5 பாகங்களாக சொல்லப்பட்டுள்ளது:

1) எப்படி இங்கு அடைந்தோம் – நிதித் துறையின் ஆரம்ப கால பேராசைகள்.

2) நிதி நீர்க்குமிழி – எப்படி எல்லாம் கனவு காண்பித்து ஏமாற்றினார்கள்.

3) 2007-08 நிதி நெருக்கடி – குளறுபடிகள் எப்படி கட்டுக்கடங்காமல் வெடித்தன.

4) நெருக்கடிக்குப் பொறுப்புடைமை – எப்படி எல்லாம் நிதித்துறையினர் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்தார்கள்.

5) இன்று எங்கு இருக்கிறோம் – யாருமே தண்டிக்கப்படாமல் எப்படி எல்லோரும் அவதிப்படுகிறோம்.

இப்படத்தில் பல திடுக்கிடும் தகவல்களை ஹாலிவுட் புகழ், மேட் டேமனின் (Matt Damon) பின்னணிக் குரலில் அழகாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் சார்லஸ். தொகுக்கப்பட்டிருக்கும் பல பேட்டிகள், நடந்தவற்றை புரிந்து கொள்ள உதவுகின்றன. இவற்றில் சில சுவாரசியமான தகவல்களை இங்கு அலசுவோம்:

· இந்த நிதி நெருக்கடியின் அடிப்படை ரீகன் காலத்தில் (1980-கள்) துவக்கப்பட்டது. ஒழுங்காக நடந்து வந்த அமெரிக்க நிதித்துறைக்கு வாடிக்கையாளர்களின் பணத்தில் உத்தேச முதலீடுகள் (speculative investments) ஆரம்பித்தது இந்த கால கட்டத்தில்.

· ஃபைனான்ஸ் கம்பெனிகளின் தில்லுமுல்லு காரணமாக 1980-களில் 124 பில்லியன் டாலர்களை அமெரிக்க மக்கள் இழந்தனர். இதில் சில மோசடிப் பேர்வழிகளுக்குத் துணை போனவர்களில் ஒருவர் ஆலன் க்ரீன்ஸ்பான். (Alan Greenspan) இவர் அமெரிக்க Federal Reserve என்ற ரிசர்வ் வங்கிக்கு தலைவராக பல ஆண்டுகள் பணியாற்ற ரீகன், புஷ், கிளிண்டன் போன்ற அதிபர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

· 1995-க்குப் பிறகு, பல அமெரிக்க நிதி அமைப்புகள் ஒருங்கிணைந்து சில ராட்சச நிறுவனங்கள் உருவாகத் தொடங்கின. இந்த மிகப்பெரிய நிறுவனங்கள் முக்கியமான அரசாங்க நிதிப்பதவிகளை தட்டிச் சென்றன. தங்களுக்கு வேண்டியது போல சட்டங்களை மாற்றி அமைக்கத் துவங்கி அமெரிக்க அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் சக்தியாக வளரத் தொடங்கினார்கள்.

· 1998 ல் Citibank மற்றும் Travelers இணைந்து Citigroup என்ற உலகின் மிகப் பெரிய வங்கி உருவானது. (இந்த வங்கி உருவாவதற்காகப் பல அரசாங்கத் தடைகள் / சட்டங்கள் மாற்றப்பட்டன).

· ஒரு பத்து அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நிலை பிறந்தது. இதில் Goldman Sachs, Morgan Stanley, Lehman Brothers, Merrill Lynch மற்றும் Bear Stearns போன்ற முதலீட்டு நிதி அமைப்புகள், Citigroup மற்றும் JP Morgan என்ற ராட்சச வங்கிகள், Moody’s, S&P மற்றும் Fitch என்ற நிதி மதிப்பீடும் நிறுவனங்கள், AIG, MBIA மற்றும் AMBAC போன்ற காப்புரிமை நிறுவனங்களும் அடங்கும்.

· அமெரிக்க நிதித்துறை இப்படி மோசடி செய்வது இது முதல் முறை அல்ல. 2002-இல் பிடிபட்ட பத்து முதலீடு நிதி அமைப்புகள் 1.4 பில்லியன் டாலர்கள் அபராதம் கட்டினார்கள். ஒழுங்காக நடந்து கொள்வதாக அமெரிக்க செனட் முன் சத்தியம் செய்தார்கள். 6 ஆண்டுகளில் மீண்டும் உலகையே ஒரு பொருளாதார நெருக்கடியில் தள்ளியவர்களும் இவர்களே.

· பனிப்போர் முடிந்தபின், திறமை வாய்ந்த இயற்பியல் மற்றும் கணித அறிஞர்கள் தங்களது திறமைகளை உபயோகித்து மிகச் சிக்கலான நிதிக்கருவிகளை உருவாக்கியதன் விளைவு இன்றைய பொருளாதாரச்சரிவுக்குக் காரணம் என்கிறார், ஆண்ட்ரூ ஷெங் என்னும் சீனாவின் மத்திய வங்கி நிபுணர்.

· நிதிப்பொறியாளர்கள் (Financial Engineers) என்பது சற்று அபத்தமாகப்படலாம். ஆனால் இவர்கள் வால் ஸ்ட்ரீட்டில் மிகப்பெரிய ஹீரோக்கள். கணினி மென்பொருள் உதவியால் சிக்கலான நிதிக்கருவிகளை (Financial Instruments) உருவாக்கினார்கள். இதை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும், லாபம் வருகிறது என்று அதை வாடிக்கையாளர்களிடம் விற்கத் தொடங்கினார்கள்.

· இப்படி ஆரம்பித்து, பல உருப்படியில்லாத வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன் என்று பலவற்றையும் கலக்கி, புதிய புதிய கருவிகளை உருவாக்கத் தொடங்கினார்கள். இந்தக் கருவிகள் பல நிறுவனங்களுக்கு கைமாறி, மேலும் சிக்கலாக்கப்பட்டன.

· நிதி மதிப்பீடு செய்யும் அமைப்புகள் இவற்றைத் தடுக்க உருவாக்கப்பட்ட அமைப்புகள். முதலீடு அமைப்புகளுடன் கைகோர்த்து இந்தக் குப்பை நிதிக்கருவிகளுக்கு அருமையான மதிப்பீடும் செய்து கொடுத்தார்கள்.

· இப்படி விற்ற நிதிக்கருவிகளுக்காக பல கோடி டாலர்களை டீலர்கள் கமிஷனாகச் சூறையடித்தார்கள்.

· இத்துடன் பரவிய ஒரு பெரிய நோய், பெரிய நிதி நிறுவனங்களின் மேல்தட்டு மேலாளர்களின் சம்பளம். கட்டுப்பாடின்றி இன்றுவரை பல கோடி டாலர்களாக உயர்ந்து நிறகிறது. 1980-களில் ஒரு மேல்மட்ட மேலாளரின் சம்பளம் அதிகபட்சம் ஒரு கீழ்மட்ட ஊழியரை விட 30 மடங்காக இருந்தது. இது, இன்று பல்லாயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இது உலகெங்கும் பேராசை பிடித்த உயர் மேலாளர்களின் சம்பளமாக வியாபித்து பொருளாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது. உதாரணத்திற்கு, அமெரிக்க அரசால் காப்பாற்றப்பட்ட AIG என்ற காப்பீடு நிறுவனம் அதனுடைய CEO வுக்கு 315 மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு சம்பளம் வழங்கியது! குப்பைகூளங்களை விற்ற டீலர்கள் 3.5 பில்லியன் டாலர்கள் ஊக்கச் சம்பளம் பெற்றார்கள்.

· ‘Inside Job’ படத்தில் எப்படி குப்பையான கடன்களை விற்றார்கள் என்பதை அழகிய கிராஃபிக்ஸ் கொண்டு தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். CDO மற்றும் CDS போன்ற சிக்கலான நிதிக்கருவிகள் மூலம் எப்படிப் பல பூச்சுக்களுடன் அழகுபடுத்தி நுகர்வோரை ஏமாற்றினார்கள் என்று நமக்குப் புரியும்படி விளக்குகிறார்கள்.

· இந்த விதமான கட்டுப்பாடற்ற வியாபாரம் நடப்பதைத் தவிர்க்க அமெரிக்காவில் இரு அமைப்புகள் இருக்கின்றன. ஒன்று, நிதி மதிப்பீட்டு நிறுவனம். மற்றொன்று CFTC, SEC என்ற அரசாங்க அமைப்பு. இரண்டையும் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நிதி நிறுவனங்கள் இயங்க முடியாதபடி செய்துவிட்டன. முதலில் நிதி மதிப்பீட்டு நிறுவனங்கள் பல குப்பை CDO-க்களை ‘உயர்தர அரசாங்க பாண்டு’ (government bonds) க்கு இணையாக மதிப்பிட்டன. பல முதியோர் ஓய்வூதியப் பணத்தை இதனால் பல அமைப்புகள் முதலீடு செய்து இன்றும் தவிக்கின்றன. CFTC மற்றும் SEC போன்ற அமைப்புகளின் கண்துடைப்புக்குக் கூடப் பரிசீலனை இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் நிதி நிறுவன முதலாளிகள்.

· 1998 முதல் 2008 வரை நிதித்துறை மட்டும் அமெரிக்காவில் லாபியிங் என்ற அரசியல் வற்புறுத்தலுக்காக மற்றும் தேர்தல்நிதிக்காக 5 பில்லியன் டாலர்கள் வரை செலவழித்துள்ளதாக இப்படம் சொல்லுகிறது.

· பல நிதித்துறை டீலர்கள் மற்றும் மேலாளர்கள் சொந்த ஜெட் விமானம், விலையுயர்ந்த ஓவியங்கள், கார்கள், சில பல பங்களாக்கள் என்று தூள் கிளப்பி நுகர்வோருக்கும் வரிகட்டுவோருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்தார்கள். பலரும் போதைப்பொருள் மற்றும் உயர் ரக விபச்சாரம் போன்றவற்றுக்காக நிறுவனப் பணத்தை தாராளமாக செலவு செய்யத் தயங்கவில்லை என்கிறது இப்படம்.

· அமெரிக்காவில் இரண்டு கோடி வீடுகளுக்கு மேல் கடனைத் திருப்பி தராமல் பூட்டிக் கிடக்கின்றன. அடி மாட்டு விலைக்கு இதை விற்கும் நிதி நிறுவனங்கள் சமுதாயச் சீரழிவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

· அமெரிக்க அரசாங்கம் 2008-இல் அவசரமாக 1 டிரில்லியன் டாலர் வரை வரி கட்டுவோர் பணத்தை நிதி மற்றும் கார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது. இது எப்படி திருப்பப்படும் என்பது யாருக்கும் தெரியாது.

· பொருளாதாரத்தை ஒரு குறையுள்ள விஞ்ஞானம் என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த படத்தில் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை திடுக்கிடும் முறையில் காட்டியுள்ளார்கள். புகழ் பெற்ற ஹார்வர்டு, கொலம்பியா, பிரவுன், கலிபோர்னியா போன்ற பல்கலைக்கழகங்களின் பொருளாதார நிபுணர்கள் (பேராசிரியர்கள்) எப்படி அரசாங்கம் மற்றும் நிதி நிறுவனங்களோடு சேர்ந்து மக்களுக்கு பதில் தாங்கள் தனிப்பட்ட முறையில் பயனடைந்திருக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் விளக்குகிறது.

· இந்த நெருக்கடி நடப்பதற்கு சில மாதங்கள் முன்னால் அதை சரியாகக் கணித்துப் பரிந்துரைத்த ரகுராம் ராஜன் (IMF) மற்றும் நோரியல் ரூபிணி (NYU Business School) ஆகியோர் பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கப்பட்டார்கள் என்கிறது இப்படம்.

· 2009-இல் ஓபாமா பதவி ஏற்றார். அவரது 2008 தேர்தல் பிரசாரத்தில் நிதி நிறுவனங்களின் பேராசையைச் சாடி எல்லாவற்றையும் சரி செய்வதாக வீராவேசம் செய்தார். ஆனால், அவருடைய அத்தனை பொருளாதார ஆலோசகர்களும் அதே பத்து நிதி நிறுவனங்களில் வேலை செய்து பயனுற்றவர்கள். எந்த மாற்றமும் இன்றுவரை வரவில்லை.

· ஒரு நிதி நிறுவனத் தலைமை அதிகாரி கூட இன்றுவரை சிறை செல்லவில்லை.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் விளைவை மிக அழகாக ஒரே வரியில் இந்தப் படத்தில் சொல்லிவிட்டார்கள். வரலாற்றிலே முதன் முறையாக, இன்றைய அமெரிக்கத் தலைமுறை முந்தைய தலைமுறையை விட குறைந்த செல்வமும் கல்வியும் பெற்றிருக்கிறது.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆரம்பத்திலேயே சில பேட்டிகளின் கீற்றுகளைக் காட்டி விடுகிறார்கள். அந்தப் பேட்டிகள் விரிவாக வரும்பொழுது ஏற்கனவே பார்த்ததுபோல் சில சமயம் அலுப்பு தட்டுகிறது. இது பன்னாட்டு விஷயம் என்பதற்காக ஐஸ்லாண்ட், சிங்கப்பூர், சைனா, ஃப்ரான்ஸ் என்று பல்வேறு நாட்டு நிபுணர்களை பேட்டி கண்டுள்ளார்கள். ஏனோ இந்த உத்தி சரியாகப் படத்துடன் ஒட்டவில்லை. அத்துடன் ஆரம்பத்தில் ஐஸ்லாண்டை ஐந்து நிமிடம் விரிவாகக் காட்டி மற்ற நாடுகளை புறக்கணிக்கிறார்கள். படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம். ஆனால், சொல்லவந்த சிக்கலான பிரச்சினையை தெளிவாகப் புரியும்படி விளக்கியிருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம்-2ஜி குறித்து யாராவது படம் எடுப்பதாக இருந்தால் இதிலிருந்து பல உத்திகளை எடுத்துக் கொள்ளலாம்! ஏனென்றால், தங்கள் ஜனநாயகம் அநியாயத்துக்கு விலை போவதைத் தடுக்க முடியாமல் மக்கள் குமுறுவது இந்த விவரணப்படத்திலும் அப்பட்டமாய்த் தெரிகிறது.