கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று முக்தாம்மாவின் நினைவுதினம். 2007-ஆம் வருடம் மார்ச் 7-ஆம் தேதி அவர் மறைந்து நான்கு வருடங்களாகின்றன. அவர் நினைவாக வெளியிடப்படும் சிறப்புக்கட்டுரை இது.
“இப்போதெல்லாம் பாடல்களை முழுமையாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் போன்ற அடிப்படை விஷயங்களுக்காகக் கூட பாடகர்கள் மெனக்கெடுவதில்லை. ஒரு பாடகர் ‘முந்து வேனுக’ என்ற தர்பார் கிருதியை எழுதி வைத்துக்கொண்டு பாடியது ஆச்சரியமாக இருந்தது” என்றேன்.
அதற்கு பதில் எதுவும் கூறாமல், “‘நித்ய ரூபா’ என்னும் தியாகராஜர் எழுதிய கிருதியை தர்பாரிலும் பாடுவது உண்டு. எல்லோரும் இப்பொழுது காபியில் பாடுகிறார்கள்” என்று சொல்லிவிட்டு, ‘நித்ய ரூபா’ என்று தர்பாரில் பாட ஆரம்பித்தார். பல்லவியைப் பாடிக் காண்பித்துவிட்டு, அதைக் காபியிலும் பாடி காண்பித்தார். அப்படிப் பாடிக் காண்பித்தவர் ‘சாட்சாத் சரஸ்வதி’ என்று போற்றப்பட்ட வீணை தனம்மாளின் பேத்தியான முக்தாம்மா என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட டி.முக்தா அவர்கள். முக்தாம்மா பாடிக் கேட்கவேண்டும் என் ஆசை இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
1998-ஆம் வருடம் என்று நினைக்கிறேன். அப்பொழுது நான் பிருந்தா-முக்தாவின் இசை தட்டுகளைத் தேடிச் சலித்துக்கொண்டிருந்த காலம். அவர்கள் அதுவரையில் எந்த இசைத்தட்டும் கொடுக்கவில்லை என்ற தகவல் எனக்குத் தெரியாது. அப்பொழுது பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் நடத்திக்கொண்டிருந்த சங்கீதம்.காம் இணையதளத்தில் ரவி-ஸ்ரீதர் இரட்டையர்கள், ரவிஸ்ரீ என்ற பெயரில் எழுதிய பிருந்தா-முக்தா கட்டுரையைப் படித்து, அவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு நண்பனானேன். அவர்கள் இருவரும் முக்தாம்மாவின் சீடர்கள். ஒரு முறை சங்கீத சீசனுக்கு சென்னை சென்றபோது முக்தாம்மாவைச் சந்திக்கவேண்டும் என்ற என் நெடுநாளைய விருப்பத்தை அவர்களிடம் சொன்னேன். முக்தாம்மாவின் ஒப்புதலுக்குப் பின் நானும், என் தம்பியும் அடையார் காந்தி நகரில் இருக்கும் முக்தாம்மா வீட்டிற்குச் சென்றோம். ரவி கதவைத் திறந்தார். உள்ளே நாற்காலியில் முக்தாம்மா உட்கார்ந்திருந்தார். மெலிந்த தேகம், நரைத்த முடி, சுருக்கங்கள் கொண்ட முகம். புன்முறுவலுடன் வரவேற்றார். பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு பெரிய மேதையிடம் பேசுகிறோம் என்ற உணர்ச்சி விலகி நம் சொந்தப் பாட்டியுடன் பேசும் உணர்ச்சி ஏற்பட்டது. அவ்வளவு சகஜமான பேச்சு.
முக்தாம்மாவை நேரடியாகச் சந்திக்கவேண்டும் என்ற விருப்பத்தின் பின்னணியில் அவர் பாட்டைக் கேட்கவேண்டும் என்ற என் தீராத ஆசையும் இருந்தது. ஆனால் அது சாத்தியமாகுமா என்ற சந்தேகமும் இருந்தது. வெளிப்படையாக என் விருப்பத்தைச் சொல்லி அவரைப் பாடச் சொல்லிக் கேட்பதற்கு எனக்கு தைரியம் இல்லை. அது மரியாதையும் அல்ல. ஆனால் நான் அவரைச் சந்தித்த ஐந்தாவது நிமிடத்திலேயே அவர் பாட்டைக் கேட்க முடிந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
நான் மிகவும் நேசிக்கும் பாடகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் பிருந்தாவும் முக்தாவும். அவர்களின் பாட்டு என்னை அந்த அளவுக்கு ஈர்ப்பதற்கான காரணங்களை நிதானமாக, புறவயமாக யோசித்துப் பார்த்தால் சில விஷயங்கள் புலப்படுகின்றன. முதலாவது அவர்களின் சமரசமற்ற பாடுமுறை. ரசிகனின் கைதட்டலைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் ஒவ்வொரு ராகத்தையும் அணுகும் முறை. ஒவ்வொரு பாடலையும் பட்டை தீட்டித் தீட்டி மெருகேற்றும் விதம். எதைச் செய்தாலும் அதை ஒரு செறிவுடன் செய்ய வேண்டும் என்ற மனோபாவம். எங்கே பாடினாலும், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், மாபெரும் சபையில் பாடும் தீவிரத்துடன், ஒரு சங்கதியும் குறையாமல் பாடும் தொழில் தர்மம். இவை எல்லாம் அவர்கள் பாடுமுறையின் பல்வேறு கூறுகள்.
இவர்களின் பாணியில் பாடவேண்டும் என்றால் அடிப்படைகள் எல்லாம் மிகச்சரியாக இருக்கவேண்டும். இதில் முதலாவது ஸ்ருதி. சங்கீத விமர்சகர் சுப்புடு, “ஸ்ருதி மாதா என்றால் நம் பாடகர்கள் தாயில்லா பிள்ளைகள்” என்ற ரீதியில் கர்நாடக சங்கீதப் பாடகர்களைப் பற்றிச் சொல்வதுண்டு. இதைப் போன்ற குற்றசாட்டுகள் தொடமுடியாத இடத்தில் இருந்தவர் முக்தாம்மா. அந்த அளவுக்கு அவர் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி முக்தாம்மா முசிறி சுப்பிரமணியம் ஐயர் வீட்டில் ஒரு கச்சேரி செய்தார். அதுவே தனது கடைசிக்கச்சேரி என்றும் அறிவித்துவிட்டார். அவருடைய வழக்கமான கச்சேரிகள் போல அன்றும் அவர் கச்சேரி வெகு சிறப்பாகவே அமைந்தது. அக்கச்சேரியைக் குறித்து இசை வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் ஒரு நெகிழ்ச்சியான கட்டுரையை எழுதினார். அடுத்த நாள் ரவி, “ஸ்ருதி மிகவும் சுத்தமாக நிற்கிறதே, எதற்கு இதுதான் கடைசி கச்சேரி என்று சொன்னீர்கள்?”, என்று முக்தம்மாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு “அடுத்த கச்சேரியில் நிற்காது. ஸ்ருதி நிற்கும்பொழுதே பாடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்”, என்றிருக்கிறார் முக்தாம்மா. அந்த அளவுக்கு அவர் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
‘யாருக்காகிலும் வருமா’ – பேகட ராகம்
கனம் கிருஷ்ணய்யர் இயற்றியது.
அவர் சங்கீத வெளிப்பாட்டின் அடுத்த முக்கியமான அம்சம்: உழைப்பு, உழைப்பு, கடும் உழைப்பு. ஒவ்வொரு கிருதியும், ஒவ்வொரு பதமும், ஒவ்வொரு ஜாவளியும் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்கும்வரை பாடம் செய்யவேண்டும். ஒவ்வொரு முறை பாடும்போது சங்கதிகள் தவறாமல் வரவேண்டும். எதுவும் மறக்கலாகாது. அந்த உழைப்பின் பயனை நான் என் கண்ணால் கண்டேன், காதுகளால் கேட்டேன். பேச்சுவாக்கில் நான் ஒரு கிருதியைப் பற்றிக் கேட்டால் அடுத்த நிமிடமே பாடிக் காட்டினார், “செம்மங்குடி இந்த ஜாவளியை உங்களிடம் கற்றுகொண்டார் என்று கேள்விபட்டிருக்கிறேன்” என்று சொன்னவுடன், “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, உடனே அதைப்பாடிக்காட்டினார். ஒரு வார்த்தை தவறாக இல்லை. ஒரு சங்கதி விட்டுபோகவில்லை. புத்தகத்தைப் பார்க்கவேண்டும் என்ற பேச்சிற்கே இடமில்லை. பல நூறு பாடல்கள் அவரின் மூளையில் ஆழமாகப் பதிந்திருந்தன.
நாரிமணி – கமாஸ் ராகம்
தர்மபுரி சுப்பராயர் ஜாவளி.
வித்வான் ரமா ரவி அவர்கள் ஒரு முறை பெங்களுர் வந்திருந்தபோது எங்களிடம் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. 2004-ஆம் ஆண்டு தொண்ணூறு வயது இருக்கும் முக்தம்மா கீழே விழுந்ததில் அவர் தலையில் அடிபட்டு நினைவிழந்து இருந்தார். அவருக்கு மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வது சிரமமாக இருந்தது. அப்பொழுது ரமா ரவியும் அவர் தாயாரும் முக்தம்மாவை பார்க்கச் செல்கிறார்கள். முதலில் அவர்களை முக்தம்மாவிற்கு நினைவிருக்கவில்லை. மெதுவாக அவர்கள் யார் என்று தெரிந்த பிறகு அவர்களிடம், “பந்துவராளி பதம் ஞாபகம் இருக்கிறதா?” என்று முக்தாம்மா கேட்கிறார். “ஆம்” என்ற பதில் வந்தவுடன், “சரி, பாடலாம் வா” என்று அவர் ஆசைப்பட்டுச் சொல்ல, எல்லோரும் சேர்ந்து பாடுகிறார்கள். “எங்களை யார் என்று அறிந்து கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. அனால் அந்த நிலையிலும் அந்த பந்துவராளி பதத்தின் ஒரு சங்கதியும் அவர் நினைவைவிட்டு அகலவில்லை. எந்த ஒரு பிழையுமில்லாமல் பாடினார்.” என்றார் ரமா ரவி. காலதேவனின் கைகளாலும் அழிக்க முடியாத ஆழத்தில் அந்தப் பதம் அவர் பதிந்திருந்தது அவர் உழைத்த உழைப்பிற்கு ஒரு சாட்சி.
வேலவரே – பைரவி பதம்
கனம் கிருஷ்ணய்யர் இயற்றியது
இந்த உழைப்பு வெறும் பாடலையும், சங்கதிகளையும் வறட்டுத்தனமாக மனப்பாடம் செய்யும் ஒன்றல்ல. தனம்மாள் காலத்திலிருந்து ஒவ்வொரு கிருதியிலும், ராகத்திலும் இருக்கும் நுணுக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வதற்கான கவனமும், உத்வேகமும்தான் அந்த உழைப்பு. ஒவ்வொரு ஸ்வரமும் அடுத்த ஸ்வரத்துக்கு எப்படிச் செல்லவேண்டும், கமகங்கள் எவ்வளவு இருக்க வேண்டும், எப்படி ஆகாரத்துடம் பாட வேண்டும் என்பதெல்லாம் பாரம்பரியமாகக் காப்பாற்றப்பட்டு வரும் நுணுக்கங்கள். அவை அழியாமல் காக்க வேண்டும் என்றால் தனம்மாள் பாரம்பரியத்தின் அழகியலைப் பின்பற்றியாக வேண்டும். அப்படிப் பின்பற்றவேண்டும் என்றால் மூச்சை உள்ளிழுக்கும், வெளியிடும், நிறுத்தும் அளவுகள் கச்சிதமாகத் தெரிந்திருக்க வேண்டும். அசாத்திய ‘breath control’ வேண்டும். அதுவும் ‘breath control’ இல்லாதவர்களால் இவர்கள் பாணியில் பதங்கள் பாடவே முடியாது. ‘குவலயாக்ஷிரோ’ அல்லது ‘பைய்யத’ போன்ற பதங்களில், அவற்றின் முதல் வரியில் வரும் சங்கதிகளே நமக்கு மூச்சைப் பிடித்துப்பாடும் முக்கியத்துவத்தை உணர்த்திவிடும். ஒரு ஸ்வரம் எப்படி நீட்டப்படுகிறது, எப்படி ஆகாரம் கொடுக்கப்படுகிறது, எப்படி அனுஸ்வரங்கள் பேச வேண்டும், எப்படி நிதானமாக சௌக்கத்தில் பாட வேண்டும் என்பதையெல்லாம் பிருந்தா முக்தா சகோதரிகள் இப்பதங்களைப் பாடும்போது நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். இவர்கள் இப்படி நிதானமாகவும், நல்ல ‘ஆ’காரத்துடனும் பாடுவதைச் சிலர், “ஒரே அழுகை” என்று கிண்டல் செய்வதைக் கேட்டு எனக்கு நகைக்கத்தான் தோன்றும்.
பிருந்தா-முக்தா என்று, பெயரில் மட்டும் இல்லாமல், இசை வட்டாரங்களிலும் பிருந்தாவிற்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் சேர்ந்து பல நாட்கள் பாடியிருந்தாலும், பிருந்தாவிற்கு மட்டும் ‘சங்கீத கலாநிதி’ பட்டத்தை அளித்தது மியூசிக் அகாடமி. பிருந்தாவைப் பாடல்களில் நிழல் போல் தொடர்ந்த முக்தா, பிருந்தாவின் நிழலில்தான் பார்க்கப்பட்டார். சிறுவயது முதலே அப்படி அமைந்துவிட்டது. இளம் பிராயத்தில் காஞ்சிபுரம் நாயனா பிள்ளையிடம் இவர்களின் தாயார் காமாக்ஷி அம்மாள் அழைத்துச் சென்றார். இவர்களின் பாட்டைக் கேட்ட நாயனா பிள்ளை, பிருந்தாவிற்கும் மட்டும் சங்கீதம் சொல்லிக்கொடுப்பதாகவும், முக்தாவின் குரல் வளம் சரியில்லை என்றும் கூறிவிட்டார். “நீங்கள் முக்தாவுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டாம். நான் அவளை இங்கு விட்டுச்செல்கிறேன். நீங்கள் பிருந்தாவிற்கு சொல்லிக்கொடுக்கும்போது அவள் கேட்டுக் கொண்டிருக்கட்டும்” என்று சொல்லி இருவரையும் நாயனா பிள்ளையிடம் விட்டுச்சென்றிருக்கிறார் காமாக்ஷி அம்மாள். தினமும் நாயனா பிள்ளை பிருந்தாவிற்குச் சொல்லிகொடுக்கும்போது தீவிரமாகக் கேட்டுகொண்டிருப்பார் முக்தா. பின்பு பிருந்தா அந்தக் கீர்த்தனங்களைப் பாடிப் பயிற்சி செய்யும்போது முக்தாவும் அவருடன் பாடிப் பயிற்சி செய்வார். நாயனா பிள்ளையிடம் குருகுலவாசம் முடிந்த சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் இருவரும் சேர்ந்து கச்சேரி செய்வதைக் கேட்ட நயனா பிள்ளை, காமாக்ஷி அம்மாளிடம், “நான் தவறு செய்து விட்டேன். முக்தாவும் வெகு அழகாகப் பாடுகிறாள். அவளுக்கும் நான் சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும்” என்று வருத்தப்பட்டுக் கூறியிருக்கிறார்.
வாசாம கோச்சருன்டனே – அடானா ராகம்
மைசூர் சதாசிவ ராவ் இயற்றியது.
நாயனா பிள்ளையிடமிருந்து மட்டுமல்ல, பொதுவாகவே அவருக்கு ஒரு தனி ஆளுமையின் அந்தஸ்து சற்று தாமதமாகவே கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும். முக்தா என்ற ஒரு ஆளுமையை, ‘பிருந்தா-முக்தா’ என்று இல்லாமல், வெறும் முக்தாவாக சங்கீத ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தது 1980களின் இரண்டாம் பாகத்தில் என்று சொல்லலாம். 1990கள் கர்நாடக சங்கீதத்தில் மாறி வரும் காலகட்டமாக இருந்தது. பழைய தலைமுறையின் சிறந்த வித்வான்கள் பலர் மறைந்துவிட்டிருந்தார்கள். வேறு சிலர் கச்சேரி செய்ய முடியாத அளவுக்கு மூப்படைந்திருந்தார்கள். அவர்களால். புதிய தலைமுறை வித்வான்கள் மேடையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் முக்தாம்மா, ஆர்.கே.ஸ்ரீகண்டன், நேதனுரி கிருஷ்ணமுர்த்தி போன்றவர்கள் பழைய தலைமுறையின் பிரதிநிதிகளாக முன்னிருத்தப்பட்டார்கள். இவர்களை முன்னிருத்தியது இளைய தலைமுறையினர் என்பதுதான் அதன் சிறப்பம்சம். இவர்கள் மூவரும் வயதில் மூத்தவர்களாக இருப்பினும், (முக்தாம்மவிற்கும் ஸ்ரீகண்டனுக்கும் அப்போது எண்பது வயதைத் தான்டிவிட்டிருந்தது) இவர்களின் குரலிலும், பாட்டிலும் எந்த வித தொய்வும் இல்லை. இவர்களின் கடும் உழைப்பு, குரல் வளம் காத்த விதம், இவர்களின் சங்கீதப் பாணியில் இருந்த செறிவு, அழகியல் எல்லாமே புதிய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. இதனால் இக்காலகட்டத்தில் முக்தாம்மா நிறைய கச்சேரிகள் செய்தார். ‘Cleveland’ சுந்தரம் அவர்கள் வீட்டில் செய்த அவர் செய்த கச்சேரியின் சில பாகங்களை, ‘Padams and Javalis’ என்ற பெயரில் பாடகி சௌம்யாவின் ‘கர்னாடிக்கா’ நிறுவனம் குறுந்தகடாக வெளியிட்டது. இதில் முக்தம்மா பல அருமையான பதங்களும் ஜவளிகளும் பாடியிருக்கிறார். சௌம்யாவும் உடன் பாடியிருக்கிறார். இந்தக் கச்சேரியில் முக்தாம்மா பாடிய கீர்த்தனைகளைத் தனியாக இன்னொரு குறுந்தகடாக சில ஆண்டுகள் கழித்து வெளிவந்தது. இதிலும் முக்தாம்மா பாடிய பல அற்புதமான கீர்த்தனைகளை நாம் கேட்கலாம். ‘வீணா புஸ்தக தாரிணி’, ‘சீதாவர சங்கீத ஞானமு’, ‘வாசம கோச்சருன்டனே’ போன்ற கீர்த்தனைகள் எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டதவை.
‘க்ளீவ்லேண்ட்’ சுந்தரம் அழைப்பில், முக்தாம்மா அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் நகரில் நடைபெற்ற தியாகராஜர் ஆராதனைக்கு 2002ஆம் வருடம் சென்று கச்சேரி செய்தார். அப்போது அவருக்கு 87 வயது. அவர் புகழும் வெகுவாகப் பரவியிருந்தது. இரண்டாயிரம் ரசிகர்களுக்கு மேல் அவர் கச்சேரியைக் கேட்டு மகிழ்ந்தார்கள். பலர் அவர் பாடலை சிலாகித்து இணையதளங்களில் எழுதினார்கள். “எங்கள் குடும்பத்துக்கு இந்த அளவு கூட்டம் வந்தது இதுதான் முதல் தடவை”, என்று இந்தியா திரும்பிய பிறகு முக்தாம்மா ரவி-ஸ்ரீதரிடம் கூறினாராம். தரம் இருந்தால் என்றாவது ஒரு நாள் அது வெளியே வந்தே தீரும் என்ற கூற்று முக்தாம்மாவின் விஷயத்தில் அது நூறு சதவிகிதம் உண்மையாகியது.
2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி ரவி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “முக்தாம்மா காலமாகிவிட்டார். ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது” என்று கூறினார். அவர் சொன்னதைப் போல ஒரு சகாப்தம் முடிந்துவிட்டதுதான். தனம்மாளின் பாணியைப் பேணிக்காத்த ஒருவர் மறைந்துவிட்டார். ஒரு சமரசமும் இல்லாமல் தன் அழகியலைக் காத்த ஒருவர் மறைந்துவிட்டார். பல நூறு கீர்த்தனங்களும், பதங்களும், ஜாவளிகளும் அறிந்த ஒரு வித்வான் மறைந்துவிட்டார். வேதவல்லி, ரமா ரவி, சௌம்யா போன்ற சிறந்த பாடகர்களுக்கு சொல்லிகொடுத்த ஒரு குரு மறைந்துவிட்டார். அனால் அன்று எனக்கு இதெல்லாம் தோன்றவில்லை. நான் அவர் வீட்டில் இருந்த ஒரு மணி நேரம்தான் எனக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. அவர் எளிமையாகப் பழகியது, பேச்சின் ஓட்டத்திலேயே அனாயசமாகப் பல பாடல்களைப் பாடியது, செயற்கைத்தனம் இல்லாத அந்த வெகுளியான பேச்சு, “அந்த பொண்ணு சௌம்யா எல்லாத்தையும் சீக்கிரமாக பிடிச்சிக்கும். அப்படியே பாடும்” என்று பாடகி சௌம்யாவைப் புகழ்ந்தது, மெல்லிய நகைச்சுவை இழையோட பழைய காலத்து வித்வான்களைப் பற்றிக் கூறியது, ரவி – ஸ்ரீதருக்கு சொல்லி கொடுக்கும்போது நுட்பமான திருத்தங்கள் செய்தது, “நீங்க ஒரு பாட்டு பாடுங்களேன்” என்று என்னையும் என் தம்பியையும் கேட்டு பயமுறுத்தியது… இந்தக் காட்சிகளை நான் என் மனதிற்குள் இப்பொழுதும் அசைபோட்டுப் பார்த்துக்கொள்கிறேன். இப்பொழுதும் அடிக்கடி அவர் பாட்டை கேட்டுகொண்டிருப்பேன். ஒரு ரசிகனால் செய்யமுடிவதெல்லாம் ஒரு கலைஞரின் இசையைக் கேட்டுக் கேட்டு அதை உயிரோடு வைத்திருப்பது மட்டுமே. அதைத்தான் நானும் செய்துகொண்டிருகிறேன்.
பஜன பருல – சுருட்டிராகம்
தியாகராஜ கிருதி
இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு பிருந்தா முக்தாவின் இசையை கேட்க விரும்புவோருக்கு அவர்களின் இசைத்தட்டுகளை பற்றிய தகவல்:
1. முக்தாம்மாவின் இரண்டு குறுந்தகடுகள் கடைகளில் கிடைக்கின்றன. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல, ஒன்று கீர்த்தனங்கள் அடங்கியது, மற்றொன்று பதம் ஜாவளி அடங்கியது. இரண்டிலும் சௌம்யா முக்தாம்மாவுடன் பாடியுள்ளார். இதில் கீர்த்தனங்கள் அடங்கிய பாகம் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இந்த இரண்டு குறுந்தகடுகளையும் ‘கர்னாடிக்கா’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. [இணையத்தில் வாங்க.]
2. பிருந்தா முக்தா இருவரும் சேர்ந்து ‘ஆல் இந்தியா ரேடியோவில்’ பாடிய பதம் ஜாவளி குறுந்தகடு ஒன்று AIR வெளியீடாகக் கிடைக்கிறது. [இணையத்தில் வாங்க.]
3. இவை தவிர எல்.சுப்பிரமணியம் தயாரித்த ‘Music of South India’ என்ற தொகுப்பில், முக்தாம்மா பாடிய ‘பட்டகுரா நா கொங்கு’ என்ற ஆனந்தபைரவி பதமும், ‘நீ மாடலே மாயமுரா’ என்ற பூர்விகல்யாணி ஜாவளியும் இடம் பெற்றுள்ளன.
4. குரலைப் பதிவு செய்யக்கூடாது என்ற நாயனா பிள்ளையின் கொள்கையைப் பின்பற்றிய பிருந்தாம்மா, தான் உயிரோடு இருந்தபோது எந்த ஒரு இசைப்பதிவையும் கொடுக்காதது நம் துரதிர்ஷ்டம்தான். நமக்குக் கிடைக்கும் அவரின் குறுந்தகடுகள் எல்லாம் அவர் மறைவுக்குப்பின் வெளியிடப்பட்டவை. ‘கர்னாடிகா’ ஒரு பிருந்தாம்மாவின் குறுந்தகடை வெளியிட்டிருக்கிறது. அதற்குப் பிறகு ‘Sanskriti’ என்ற நிறுவனம் பிருந்தாம்மாவின் ஆறு குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ஐந்தில் கீர்த்தனைகளும், ஒன்றில் பதம்/ஜாவளியும் உள்ளன. [இணையத்தில் வாங்க.]