வில்லியம் கிப்ஸன், அறிவியல் நவீன ‘ஆளுமை’

ஐலீன் காலகர்

வில்லியம் கிப்ஸன், 1984ஆம் வருடம், ‘நியுரோமான்ஸர்’ (Neuromancer) என்ற அறிவியல் நவீனத்தைப் பிரசுரித்தபோது அது ஒரு புதுப்பாதையைத் திறந்த புத்தகமாக இருந்தது. ஆனால் நம்ப முடியாத அளவுக்கு, மனித சமூகத்தின் எதிர்காலத்தை இருண்டதாகக் காட்டியது. [1]

25 வருடங்களுக்கு மேலாகி விட்ட பின், உலகில் என்னென்னவோ மாறி விட்டன. அவர் இப்போது தற்காலத்தைப் பற்றியே எழுதுகிறார், எதிர்காலம் பற்றி அல்ல. அவருடைய சமீபத்து நாவல், ‘சரித்திர சூன்யம்’ (Zero History) என்ற புத்தகம், வரிசையான மூன்று நாவல்களில் கடைசி புத்தகம். இவை ஒரு ‘ப்ராண்ட்’என்பதை எப்படி நிறுவுவது, பிரசித்தி பெற்றதாக்குவது என்பதில் முழு கவனமும் செலுத்துகிற ஒரு பண்பாட்டுச் சூழலைப் பற்றியவை. தவிர, சகலவிதமான ‘பொருட்’களின் பெருக்கத்தைப் பற்றியவை. (கிப்ஸன், ‘செய்பொருட்கள்’ (artifacts) என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கிறார்.) “என்ன காரணமோ, நான் எப்போதுமே பொருட்களின் உலகையே அதிகம் கவனித்திருக்கிறேன்,” என்னும் கிப்ஸனோடு பேசியபோது இப்படி ஏராளமாகி விட்ட ‘பொருட்’களைப் பற்றிப் பேசினோம்- ஐபாடிலிருந்து, இப்போது ரொம்பப் பழசாகிப் போய் காலத்துக்குப் பொருந்தாமல் போயிருக்கிற பொருளான ‘புத்தகங்கள்’ வரை பலவற்றைப் பற்றிப் பேசினோம்.

[பேட்டி தொலைபேசி வழியே நடந்தது. அவருடைய மேற்சொன்ன ‘சரித்திர சூன்யம்’ என்கிற புத்தகம் சென்ற அக்டோபர் மாதம் வெளியான பிறகு அதை விளம்பரப்படுத்த அமெரிக்காவில் பல நகரங்களுக்கு கிப்ஸன் ஒரு சுற்றுப் பயணம் போயிருக்கையில் நடந்த பேட்டி. – 

ஐலீன் காலகர்]

 

william_gibson_by_fredarmitage_0

கே: புத்தகச் சுற்றுப் பயணம் போகிறீர்கள். உங்களுடைய வாசகர்களிடம் இத்தனை வருடங்களில் என்ன மாறுதல்களைக் காண்கிறீர்கள்?

கிப்ஸன்: நேற்று ஒருவர் இதைச் சுட்டிக் காட்டினார்- எப்படி இன்று என் வாசகர்கள் தணிந்தவர்களாக, அலட்டாமல் இருக்கிறார்கள் என்றார். முன்பெல்லாம் ரொம்பத் தீவிரமான, ஓரளவு நிலை குலைந்த வாசகர்களே எனக்குக் கிட்டினார்கள். அது தீவிர ‘சைபர்பங்க்’(Cyberpunk) நாவலின் காலம் என நினைக்கிறேன். நான் அப்புறம் எழுதியவற்றில், பாத்திரங்களுக்குப் பெற்றோர்கள் இருக்கிறார்கள், உறவுகளும், உணர்ச்சிகளும் இருக்கின்றனவா, என் வாசகர்களும் மாறி, முந்திக் காலச் சந்திப்புகளுக்கு வந்த நீண்ட கருப்புக் கோட்டு போட்ட ஆட்கள் இப்போது தேய்ந்து மறைந்து போய்விட்டார்கள்.

அவர்கள் போனதை இழப்பாக உணர்கிறீர்களா?

அப்படி ஒன்றுமில்லை. அவர்கள் அன்று வந்ததை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன், அதென்னமோ ஒரு யுகம் முன்பு நடந்தது போலத் தோன்றுகிறது.

80’களில் நீங்கள் பிரசுரித்தவற்றுக்கு அப்புறம் உலகில் ஏற்பட்டு விட்ட மாறுதல்கள் எக்கச்சக்கம், இல்லையா? இப்போதைய ‘நிஜ உலகம்’ உங்கள் புத்தகங்களை எப்படி பாதிக்கிறது?

1981 இல் நான் வருங்கால தரிசியாக இருந்தேன். அல்லது எதிர்காலத்தைப் பற்றி ஆருடம் சொல்லும் ஆளாக இருந்து, 21ஆம் நூற்றாண்டைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதோ 21ஆம் நூற்றாண்டாகி விட்டதே! அதைப் பற்றியே தொடர்ந்து நான் எழுதினால் இயல்பான பார்வையோடு இலக்கியம் (literary naturalist) எழுதுபவன் என்று கருதப்படுகிறேன். அன்று அறிவியல் நவீனமெனும் கல்விக் கூடத்தில் எனக்கு ஒரு ஆயுதப் பெட்டி கிட்டியது. அது உண்மையிலேயே நல்லதொரு கருவிப் பெட்டி. 21ஆம் நூற்றாண்டைத் துருவி நோக்கவும், அதிலிருக்கும் சூடான குழப்பஙகளைப் புரிந்து கொள்ளவும் மிக உதவியாக இருக்கக் கூடிய கருவிகளின் பெட்டி அது.

1986ஆம் வருடம் ஒரு பேட்டியில் நீங்கள் சொன்னீர்கள்,’ஒரு அதீதப் புனைவை நான் படிக்கும்போது, சிறிதும் தேவையில்லாத கதை நகர்வுகள், சம்பந்தமில்லாது புதிராகக் கொடுக்கப்படும் விவரங்கள் ஆகியனதான் அதில் ஒரு வினோதத்தன்மையைக் கொணர்ந்தன என்று எனக்குத் தெரிந்திருந்தது,’ என்று. உங்கள் சமீபத்துப் புத்தகங்களில், ஆடைகள், இடங்களெல்லாம் மக்களை விட பலமடங்கு கூடுதலான விவரங்களோடு கொடுக்கப்படுகின்றன, ஏன்?

நீங்கள் என்னுடைய இரண்டு வேறு வடிவங்களை வைத்துப் பேசுகிறீர்கள். இரண்டுக்குமிடையே பெரியதொரு கால, இட இடைவெளி இருக்கிறதே! ‘சரித்திர சூன்யம்’ நாவலில் உலகம் இரு பாத்திரங்களின் பார்வைகள் வழியே விவரிக்கப்படுகிறது. ஹொலிஸ், மில்கிரிம் எனும் இரண்டு பாத்திரங்களின் அனுபவங்களைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நாவலின் உலகை நீங்கள் பார்க்க முடிந்திராது, அனுபவிக்க முடிந்திராது. இந்த நாவலில் ஒரு அசரீரிக் குரலாகவோ, பார்வையாகவோ என் கருத்துகளை நீங்கள் அறிய முடியாது. ‘இதே நேரம், ஹொலிஸ் இதைச் செய்து கொண்டிருக்கையில், மில்கிரிம் அதைச் செய்து கொண்டிருந்தார்.’ என்று எதுவும் இராது. அப்படி ஒரு அசரீரிக் குரல் பொருட்களின் விவரங்களில் கவனம் செலுத்தியதாக வந்தால் அதற்கு அர்த்தமே வேறாக இருக்கும்.

இந்த இரு பாத்திரங்கள் கவனிக்கும் விவரங்களே அவர்களின் குணங்களை நமக்குத் தருவன. அவை ஏதோ தற்செயலாக உலகில் மிதக்கும் பொருட்களல்ல. அவை ஹொலிஸும், மில்கிரிமும் கவனிக்கும் பொருட்கள். அதெல்லாமே பாத்திர சித்திரிப்புதான். முதல் அத்தியாயத்தில், முடிவில்லாமல் போகும் விவரிப்புகள்- ஒரு உதாரணமாக லண்டனில் ஒரு தனியார் ஹோட்டெலில் காணும் வினோதங்களின் பட்டியல்- மூலம் ஹொலிஸ் ஒரு வகையில் நிறுவனப்படுத்தப் படுகிறாள். அந்த ஹொட்டெல் அவள் அறிவிலும், உணர்ச்சிகளிலும் புகுந்து அவற்றை ஓரளவு தன் காலனியாக்கிக் கொண்டு விடுகிறது. நாம் செய்பொருட்களாலான உலகில் வாழ்கிறோம். நம் சூழல் அனேகமாக மனிதர் ஆக்கிய சூழலாகவே உள்ளது. இவை எல்லாம், இந்த செய்பொருட்கள் எல்லாம் மனித அறிவின் சங்கேதக் குறிப்புகளாகவே (coded intelligence) வெளிப்படுகின்றன.

அறிவின் ‘சங்கேதக் குறிப்பு’ என்பது என்ன?

நீங்கள் எதாவது உருவாக்கினால் அது ஒரு செய்பொருள். ஒருவர் அல்லது ஏதோ ஒரு அமைப்பு இந்தப் பொருள் தோன்றக் காரணமாகிறார். நிறைய மனிதர்கள் இப்படி ஒவ்வொரு செய்பொருளையும் பற்றி நிறைய யோசித்த பின்னரே நம்மைச் சுற்றி இருக்கும் இவை உருப்பெறுகின்றன. பல வகையான, பல ஆழங்களுள்ள மனித அறிவும், கவனமும்தான் எப்பொருளையும் உருவுக்குக் கொணர்கின்றது…. என் எதிரே ஸ்டார்பக்ஸ் காஃபி கோப்பை இருக்கிறது இதோ. இந்தக் கோப்பை இந்த உருவில் இருக்க, என் படுக்கை அருகே உள்ள ஒரு சிறுமேஜையில் அது இருக்க, எக்கச்சக்கமான தகவல்கள் தேவைப்பட்டிருக்கின்றன. இந்தக் கோப்பை இந்த மேஜைக்கு எப்படி வந்தது என்பதைப் பற்றி மட்டுமே ஒரு தடித்த புத்தகத்தை உங்களால் எழுத முடியும். நான் எப்போதுமே, காரணம் என்னதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பொருட்களினால் ஆன உலகைப் பற்றி மிகக் கவனம் கொண்டுள்ளேன். இன்றைய பேச்சுவழக்கில் சொல்வதானால். ஒரு விதத்தில் உலகம் என்பதே பொருட்களின் இண்டர்நெட், உலகவலைதான் எனலாம்.

மாடல் ஆக இருந்து, வடிவமைப்பாளராகி (டிஸைனர்) இருக்கும் மெரிடித், ஹோலிஸிடம் சொல்கிறாள், “ வடிவமைப்பாளர்கள் எந்திரங்கள் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்பவராகி விடுகிறார்கள். எந்திரங்கள் நாம் என்ன செய்ய முடியும் என்பதை வரையறுக்கின்றன.”அப்படியானால் வடிவமைபபாளர்கள், தமக்குப் பொருத்தமான எந்திரங்களைத் தேடுகிறார்களா, அல்லது கிட்டும் எந்திரங்களுக்குப் பொருத்தமான பயன்பாட்டைத் தேடுகிறார்களா?

நேரடியாகச் சொல்கிறேன் – இங்கு ஏதும் குறியீடாகப் பேசவில்லை- உற்பத்திக்கான ஒரு எந்திரம், என்ன சாதிக்கப்பட முடியும் என்பதைப் பற்றி சில வரையறைகளைச் சுமத்துகிறது. வடிவமைப்பாளர்கள் என்னென்னவோ திட்டமிடலாம், ஆனால் செய்யப்பட முடியாதவையாக அவை இருந்தால் ஒரு பயனுமில்லை. ஆடைதயாரிப்புத் தொழில்துறையில், 1900ங்களில் தயாரான எந்திரங்களை இன்னமும் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையிலேயே ஆச்சரியமான தகவல். இன்று தயாராகும் ஒரு எந்திரத்தை வைத்துக் கொண்டு அவர்கள் அந்த எந்திரங்கள் செய்த வேலைகளைச் செய்யக் கூட முடியாமல் இருக்கலாம். அதனால்தானோ என்னவோ அவர்கள் இந்தப் பண்டைய எந்திரங்களை இன்னமும் வாங்குகிறார்கள். அவற்றைத் தொடர்ந்து பழுதுபார்த்து வைத்துக் கொள்கிறார்கள். மான்ஹாட்டன் பகுதியின் மையம், அன்று ஒரு ஆடை தயாரிப்பு கேந்திரமாகவே இருந்தது- 20ஆம் தெரு பக்கத்தில் என நினைக்கிறேன் – முழுக்க இந்த எந்திரங்களுக்கு உதிரி பாகங்களும், துணிகள் மற்றும் தயாராடைகள் செய்யும் எந்திரங்களும் மட்டுமே விற்கும் பகுதியாக இருந்தது. அங்கு அன்று காஃபிக்கடைகளும், தையல் மெஷின் பாகங்களும் மட்டும்தான் இருந்தன. இன்று பார்த்தால், அங்கு எல்லாம் அடுக்கு அகங்கள்.

பழைய தையல் எந்திரங்களுக்கு உதிரி பாகங்கள் யாருக்கும் இன்று தேவைப்படவில்லையோ என்னவோ?

இன்று தொழில்மயமான சமூகத்தைக் கடந்து விட்டிருக்கிறோம். என்றாலும் இன்னும் தொழில்மயமான உற்பத்திக்கு வராத நாடுகளும் இருக்கின்றன. அவை இன்னும் முழுதுமாக சந்தையில் விற்பதையும், பிராண்ட்களை ஸ்தாபிப்பதிலுமே இறங்கி விடவில்லை.

2012800329உங்கள் ‘வரலாறு இன்மை’ (Zero History) புத்தகத்தில் பயங்கரவாதம் என்பது பிராண்ட் ஒன்றை நிலைநாட்டும் முயற்சிதான் என்று சொல்லியிருக்கிறீர்கள். லாட்டரிக்கும் பயங்கரவாதத்துக்கும் ஏறக்குறைய ஒரே மனோதத்துவம்தான் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அது எப்படி ?

நீங்கள் ஒரு பயங்கரவாதி (அல்லது தேச ஹீரோ – அது பார்வையாளரைப் பொருத்த விஷயம்) என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சம் பேர்தான் இருப்பீர்கள். நீங்கள் மோதுவதோ, ஏராளமான பெருந்தலைகளுடன். பயங்கரவாதம் என்பது உங்களுடைய பிராண்டைப் பிரபலமாக்கும் முயற்சி. ஏனெனில் உங்களிடம் இருப்பதெல்லாம் அந்த பிராண்ட் ஒன்றுதான். பயங்கரவாதிகளிடம் அவ்வளவாகப் பொருள் வசதி இருப்பதில்லை. முதலில், பயங்கரவாதம் என்ற சொல்லே எனக்குப் பிடிக்கவில்லை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அந்த வார்த்தை துல்லியமாகச் சொல்லுவதில்லை.

உண்மையில் என்ன நடக்கிறது என்று சொல்ல வருகிறீர்கள் ?

சம பலம் இல்லாத யுத்தம் என்று சொல்லலாம். ஒரு பெரிய ஆள், ஒரு சின்ன ஆளுக்கிடையே போராட்டம். சின்னவன், பெரியவனை அடிப்பதற்காகப் பற்பல உத்திகளைக் கையாள்கிறான். இதில் பல, அவனுடைய பிராண்டைப் பிரபலமாக்கும் முயற்சிகள். சின்ன ஆசாமியிடம் பிராண்ட் அடையாளம் மட்டுமே இருக்கிறது. பெரியவனோடு ஒப்பிட்டால் இவனிடம் பண பலம், படை பலம் மிகவும் குறைவு. ஒரு சின்ன சதிக் கும்பல், பெரிய தேசத்துடன் மோதுகிறது. அவர்களுக்கு ஒரு வலுவான பிராண்ட் அடையாளம் இல்லாவிட்டால் காரியம் நடக்காது. முதலில் நாச வேலையில் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் பிராண்டை மண்ணில் ஊன்றுகிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு குண்டு வெடித்த பிறகும் யாராவது ஒருவர் போன் செய்து ‘எங்கள் பெயர் சந்தடி சாக்கு விடுதலைப் படை. நாங்கள்தான் அங்காடியைத் தகர்த்தோம்’ என்கிறார்கள். அதுதான் அவர்கள் பிராண்ட் ! மாறாக, சில சமயம் ரொம்பவே விசித்திரமான கணங்களையும் நீங்கள் காணலாம்- இவர்களே ஃபோன் செய்து, ‘நாங்கள் அதைச் செய்யவில்லை,’ என்பார்கள். அதுவும் பிராண்ட் ஐப் பதிப்பதுதான். அவ்வளவுதான் அதில் வேலை. பிராண்ட் ஏதுமில்லாத ஒரு பயங்கரவாதி, பைசைகிள் இல்லாத மீனைப் போல. அவன் எங்குமே போய்ச் சேரப் போவதில்லை.

பயங்கரவாதிகளுக்கு இது நல்ல நேரம்தானே ? அது உலகம் முழுவதும் இப்போது அவர்கள் பிராண்டைப் பரப்ப முடிகிறதால்தானே?

இன்று நாம் இருக்கும் உலகமே பிராண்ட் அல்லது தகவலைப் பரப்ப உதவும் உலகம்தான். அதற்கு மிக வசதியான நேரம் இது ! பயங்கரவாதத்தை விடுங்கள், இன்று பிராண்ட்கள்தான் உலகத்தை ஆள்கின்றன. நாளுக்கு நாள் அதை பயங்கரவாதம் என்று கூப்பிடுவதே தப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படிக் கூப்பிடுவதால் நமக்குத் தெளிவேதும் கிட்டுவதில்லை, மாறாக ஒரு அறியாமை இருள்தான் சூழ்கிறது. தன் செய்கைகளைப் பயங்கரவாதம் என்று உங்களை நம்ப வைக்கிறானே, அவனுக்கு அதுதான் பெரிய வெற்றி.

லாட்டரி குலுக்கலில் உள்ள மனவியலும் இதேதான். நானோ நீங்களோ, பயங்கரவாதத் தாக்குதல் எதிலும் நேராக அடிபட வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதே அளவுதான் உங்களுக்கோ எனக்கோ பெரும் லாட்டரிப் பரிசு விழுவதும். ஏன், சுமாரான பரிசு கூட விழாது ! நம் பரிணாம வளர்ச்சியில் மூளையில் ஏதோ குறைபாடு ஏற்பட்டு, கண்ணெதிரே உள்ள போக்குகளைப் புரிந்துகொள்ள முடியாமல் ஆகிவிட்டது. ‘நமக்கு லாட்டரி அடிக்கும்’ என்று ஆதாரமில்லாமல் நம்பி, போய் அதை வாங்குகிறோம். யாருக்கோ விழும், இல்லை என்கவில்லை, ஒரு நாளும் நமக்கு விழாது ! பயங்கரவாதமும் அதே போலத்தான், நமக்கு பாதிப்பிராது.

ஆனால் லாட்டரி என்பது நம்பிக்கையை ஒட்டியது. பயங்கரவாதமோ பயத்தைப் பொருத்தது.

நீங்கள் ஒரு விடுதலைப் போராளியாக இருந்தால், பயங்கரவாதமும் உங்களுக்கு நம்பிக்கை தருவதுதானே ! போராளி, பயங்கரவாதி இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். பெரும் அநியாயமான ஆட்சியைத் தூக்கி எறிய முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்பவர் போராளி. அநியாய ஆட்சியின் கீழ் வாழ்பவர்கள் கூட, போராளி வந்து ஏதோ தனக்குக் கெடுதல் செய்துவிடுவான் என்று பயப்படுவது நேரலாம். மக்கள் பெரும்பாலும் சரியான இளிச்சவாயர்கள். பயங்கரவாதிகள் இது தெரிந்த சாமர்த்தியக்காரர்கள். அவர்கள் விளையாடும் விளையாட்டு ஓரளவாவது புரியக் கூடியதே, அதில் நிறையவே வெற்றி வாய்ப்புகள் உண்டு. உங்கள் மனதில் பயத்தை விதைத்துவிட்டாலே போதும்; அவர்களுக்கு வெற்றிதான். உங்கள் சமுதாயத்தைக் கோணலாக்கி விடும்படி உங்களை அச்சுறுத்தி, எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சியைக் குறைத்தாலே அவர்களுக்கு வெற்றிதான்.

உங்கள் ’சரித்திர சூன்யம்’ (Zero History) நாவலில், பாத்திரங்கள் யாரும் எந்த ஊர்க்காரர்கள் என்பதே தெளிவாக இல்லை. லண்டன், பாரிஸ், நியூ யார்க் எங்கிருந்து வேண்டுமானாலும் இருக்கலாம். அது ஒரு பொருட்டாகவும் இல்லை. அவர்கள் நகரத்து மக்கள். அவ்வளவுதான். சொந்த ஊர், சொந்த நாடு போன்ற பாசங்களை எல்லாம் நாம் இழந்து கொண்டு வருகிறோமா?

மரபு வழி தேசியங்களிலிருந்து தூரப் போய்விட்டவர்களை எனக்குப் பிடிக்கும். தேசங்களைத் தாண்டிய, பல பண்பாடுகளின் கலப்பாக கோலாகலமாக இருக்கும் சூழலில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன், இப்போதுள்ள மாநகரங்களெல்லாம் அப்படித்தான் இருக்கின்றன. எனக்குப் பிடித்த இடங்களைப் பற்றியே நான் எழுதுகிறேன். சென்ற வருடம் நான் யோசித்தேன், 1970-ம் வருடம், முதல் தடவையாக ஐரோப்பாவைச் சுற்றிப் பார்த்தது எப்படி இருந்ததென்று. யூரோப்பில் நெடுகப் பயணம் செய்தபோது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நாணயம் இருக்கும், தனித் தனி சிகரெட் பிராண்ட்கள், எல்லாவற்றிலும் தனித்தனி எதுவோ இருக்கும்! அது ஓர் அருமையான அனுபவம். ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடும் ஒரு குட்டியூண்டு உலகம் போல இருந்தது. அதெல்லாம் போய்விட்டது. இனி வராது ! எங்கு திரும்பினாலும் யூரோப்பிய யூனியனின் பொருள்கள்; அல்லது அமெரிக்க, ஜப்பானியப் பொருள்கள். இவையெல்லாம் முன்னைப் போல பொலிவாக இல்லைதான். ஆனால் இன்று இப்படித்தான் இருக்கும். உலகம் மாறாமல் இருக்க வேண்டும் என்றோ, அந்தப் பழைய வாழ்க்கையை அப்படியே வைத்திருப்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. பழசுக்கு நான் ஏங்குவது இல்லை. அப்படி பழையனவற்றுக்கு ஏங்குவது நோய்ப்பட்ட முறை என்று நான் நினைக்கிறேன். நுணுகிப் பார்த்தால் தெரியும், அப்படிப் பட்ட ஏக்கம் அனேகமாக ஏதோ சில மோசமானவற்றை ஒட்டிக் கொண்டிருக்கின்றது என்று. நான் பழைய நினைவுகளை விற்பனை செய்வதும் இல்லை. நாமெல்லாம் ஒரு உலகப் பண்பாடாகிக் கொண்டிருக்கிறோம்.

ஒரே ஒரு கலாச்சாரத்தின் கை ஓங்கிப் போய், எல்லாத் தயாரிப்புகளுமே அதிலிருந்துதான் வருகின்றன என்று ஆகிவிட்டால் – அதில் என்ன ஆபத்து இருக்கிறது?

உண்மையிலேயே உலகமயமான கலாச்சாரமாக ஆகிறது என்றால், அது ஒற்றை நாட்டிலிருந்து புறப்படுவதாகாது. ஒருவேளை நாம் எல்லாருக்கும் பொதுவான, எங்கும் நிறைந்த ஒரு கலாச்சாரத்தைத் தான் போய் அடைவோமோ என்னவோ. ஆனால் நான் ”எதிர்காலம்” என்பதை அப்படிப் பார்க்கவில்லை, அந்தத் திசையில்தான் நாமெல்லாம்
போகிறோம் என்றும் கருதவில்லை.

இதைக் கேட்டால் எல்லாருக்கும் ஆச்சரியமாக இருக்குமே?

நான் ஆரம்பத்திலிருந்தே இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நாளைக்கு நடக்கப் போவது என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அறிவியல் கதை எழுத்தாளர் என்றால் நம்ம ஊரில் ஜோசியம் சொல்லியே ஆகவேண்டும். நான் எழுத ஆரம்பித்தபோது, நான் கதை சொன்ன முறையை வேண்டுமானால் அறிவியல் புனைவு என்று சொல்லலாமே தவிர, நான் என் துறை அறிவியல் கதை என நினைக்கவில்லை. இந்த வகை எழுத்து என்று எடுத்துக்கொண்டு, அதற்குள் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்ற கணக்குகளில் நான் சிக்க விரும்பவில்லை.

இப்போது அந்த வட்டத்துக்குள் வந்துவிட்டீர்களா ? அல்லது என் போன்றவர்கள்தான் இதைப் பற்றித் தொணதொணக்கிறோமா ?

எந்த வகை எழுத்தாக இருந்தாலும் அது கலாச்சாரத்துக்கு உட்பட்டதுதான். அறிவியல் கதைகள் என் இயல்பான இலக்கிய வகை. என் வேர்கள் அதில் இருக்கின்றன. நான் தென்மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்தவன், மேலும் நான் ஒரு அறிவியல் கதை சொல்லி. ஆனால் நான் ஒரு தென்மேற்கு வர்ஜீனியாக்காரன் போல ஏதும் நடந்துகொள்வது இல்லை, அப்படி ஒன்றும் ஒரு அறிவியல் புனைவன் போல் எழுதுவதும் இல்லை.

ஆக, இன்றைக்கு உலகமே ‘உலகமயமாகிவிட்து.’ இதில் பிறந்த ஒருவருக்கு, சொந்தக் கலாச்சாரம் என்று ஏதாவது இருக்கிறதா ?

இன்றைய உலகத்தில் பிறந்தீர்கள் என்றால் உங்கள் பண்பாடு என்பது மேன்மேலும் உலகப் பண்பாடாய்த்தான் இருக்கும். எதிர்காலத்தைக் கணிப்பவர்கள் யாருக்கும் பிடிபடாத சில விஷயங்கள் இருக்கின்றன – என்னைப் போல் விஞ்ஞானக் கதை என்று ஜல்லியடிப்பவர்கள் ஆகட்டும், பத்து வருடம் கழித்து மக்களுக்கு என்ன பிடிக்கும் என்று கண்டுபிடித்துச் சொல்வதற்காகவே மோட்டார் கம்பெனிக்காரர்கள் சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்களே மானுடவியலாளர்கள், அவர்களாகட்டும்- இப்படி ஒருவருக்கும் வசப்பட முடியாத விஷயம் என்னவென்றால், அது எதிர்காலத்தில் மக்கள் தொழில்நுட்பத்தை (டெக்னாலஜியை) எப்படி உபயோகிக்கப் போகிறார்கள் என்பதுதான்.

4975560393_3cd6c69a64கடந்த நூறு வருடத்தில் எழுந்துள்ள டெக்னாலஜியை வைத்துப் பார்த்தால், நாம் இந்த மாதிரி ஒரு உலகை அடைவோம் என்று யாராலும் சொல்ல முடிந்ததா என்ன? அடுத்து எழுந்து வரப் போகிறதென்று தோன்றும் தொழில்நுட்பம்தான் உலகத்தை மாற்றக் கூடிய வேகம் கொண்ட ஒரு சக்தி. டெக்னாலஜிக்கு முன் அரசியல் ஒன்றுமே இல்லை. அதன் முன் மதமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அதனால்தான் நாம் இன்று எங்கு இருக்கிறோமோ அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இதுதான் எனக்கு அத்தனை தெளிவாகத் தெரிகிறதே! பின் என்னால் ‘தொழில்நுட்பத்தால் நன்மையா, பெருந்தீமையா?’ என்ற பட்டி மன்றத்துக்கெல்லாம் போக முடியுமா என்ன? சரி டெக்னாலஜியை நாம் நாடப் போவதில்லை என்றால் வேறென்ன பாக்கி இருக்கிறது நமக்குச் செய்ய? வேறெங்கு போக முடியும் நாம்? இது ஒன்றுதான் நாம் செய்கிறோம் என்பதோடு, இன்றைய மனித இனமே டெக்னாலஜிதான். இனிமேலும் நம்முடைய முன்னோர்கள் போன்ற பிறவிகள் இல்லை நாம்.

இன்றைக்கு எனக்கு ஐம்பத்திரண்டு வயதாகிறாது.[2] ஆனாலும் எல்லாப் பல்லும் இன்னும் இருக்கிறது. முன்பு இப்படி நடந்திராது. நான் ஒரு சைபோர்க், பாதி இயற்கை, பாதி செயற்கை மிருகம். டெக்னாலஜி எனக்கு எத்தனையோ நோய்களுக்கு எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்திருக்கிறது. குச்சியில் கல்லைக் கட்டிக் கோடரி செய்தார்களே, அந்தத் தொழில் நுட்பத்திலிருந்து ஆரம்பித்து எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த மகா டெக்னாலஜி கோபுரத்தின் உச்சியில் நான் உட்கார்ந்திருக்கிறேன். டெக்ஸஸில் உள்ள ஆஸ்டின் நகரில், ஒரு ஹோட்டலில் அமர்ந்துகொண்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவருடன் டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன். இதுதான் நாம் செய்வதே. டெக்னாலஜிப் பிராணிகளாக வாழ்வதைத் தவிர வேறு வழியே நமக்குக் கிடையாது !

உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் என்ன டெக்னாலஜியை உபயோகிக்கிறீர்கள் ?

புதுசாக ஒரு ஐ-பேட் (iPad) வாங்கியிருக்கிறேன். இன்னும் பழகவில்லை. நான் அப்படி ஒன்றும் புது டெக்னாலஜிகளைள அடித்துப் பிடித்துக்கொண்டு உபயோகிக்க ஆரம்பித்துவிடுபவன் அல்ல. என் மொபைல் போனைப் பாருங்கள். ஐந்து வருடம் பழசு. நதியில் கிடந்து தேய்ந்த கூழாங்கல் மாதிரி இருக்கிறது. ஐஃபோன் வாங்கவில்லை. கவர்ச்சிகரமான நவீன டெக்னாலஜி கருவிகள் எதுவும் என் வீட்டில் கிடையாது. ஆனால் யாராவது கவர்ச்சியான புதுவகைக் கருவிகளைக் வைத்திருந்தால் உடனே போய் எட்டிப் பார்ப்பேன். ஆனால் நான் கவனிப்பதெல்லாம், உயர்-தொழில் நுட்ப சாதனங்களுடன் (High-tech gear) மக்கள் எப்படி உறவாடுகிறார்கள் என்பதுதான். அவர்கள் வாழ்வில் சாதனங்களின் இடம் என்ன என்று பார்க்கிறேன். அந்த சாதனத்தைத் தயாரித்தவர்களே எதிர்பார்க்காத விதங்களில் மக்கள் அதை எப்படியெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பதிலதான் சுவாரசியமே!

நீங்கள் ட்விட்டர் உபயோகிக்கிறீர்கள் இல்லையா? (யாரை விட்டது விதி?)

ஆமாம். தண்ணீரில் வாத்து போல் நான் ட்விட்டரில் நீந்துகிறேன். மிகவும் எளிமையாக இருப்பதால் நம் அனுபவத்தை நாமே வடிவமைத்துக்கொள்ள முடிகிறது; அதற்கு ட்விட்டர்காரர்களின் உதவி தேவையில்லை. அவர்கள் இப்படியே அதை எளிமையாக விட்டு வைப்பார்களாக! சுலபமாக இருப்பதுதான் ட்விட்டரின் சூட்சுமம். ஃபேஸ்புக், மை ஸ்பேஸ் போன்றவை என்னைக் கவரவில்லை. அவையெல்லாம் மேலிருந்து இயக்கும் ஒரு மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அவை பெரும் சந்தைக்கடைகள் போலத் தோன்றுகின்றன எனக்கு! ட்விட்டர், நம்முடைய பேட்டைத் தெரு போல. இங்கே யார் வேண்டுமானாலும் எதிர்ப்படலாம்.

ட்விட்டரில் உங்களை 38,000 பேர் தொடர்கிறார்கள். நீங்கள் வெறும் 87 பேரைத்தான் தொடர்கிறீர்கள். யாரைக் கவனிக்கவேண்டும் என்பதை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் ?

பெரும்பாலும் அவர்கள் தற்செயலாகக் கிடைத்தவர்கள். என்னைக் கவரக்கூடிய சரக்கு என்றால் அதில் நிறையத் தகவல் இருக்க வேண்டும். எனக்காக வேலை செய்பவர்கள், புதுமைகளைத் திரட்டிச் சாறு பிழிந்து தருபவர்கள். இதற்கு 87 பேரே அதிகம் என்று தோன்றுகிறது.

நீங்கள் ட்விட்டரை வித்தியாசமாக உபயோகிக்கிறீர்கள் போலிருக்கிறது. எல்லாரும் சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுகிறார்களே தவிர, அதிலிருந்து எடுத்துக் கொள்ளும் விஷயம் குறைவு.

ட்விட்டர் மிகப் பெரியது. அங்கே செமத்தியாக ஒரு கோஷ்டியே இருக்கிறது – ரேஸ் குதிரைகளுக்குக் காயடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யாத கோஷ்டி. நான் அந்தப் பக்கமே போவதில்லை. நான் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது : புதுமைகளைத் திரட்டுவது. இதனால் நாங்கள் அனைவரும் ஒரே சமுதாயம் என்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. ட்விட்டரில் லட்சக்கணக்கான சமுதாயங்கள் வசிக்கின்றன; ஒரே மாய உலகத்தில் வசித்தாலும் அவை ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்வதில்லை. பேசிக் கொள்வதில்லை- வினோதம்தான் அது. நான் மகிழ்ந்து கொண்டாடும் ட்விட்டர், என்னுடைய சொந்த ட்விட்டர்.

புத்தகங்களே எதற்கு? அவை இன்னும் ஏன் உங்களுக்குக் கவர்ச்சியான ஊடகமாகத் தோன்றுகின்றன ?

நுகர்வோரிடம் செல்லும் பொருட்களிலேயே புத்தகங்களைப் போல என்னுடைய தனிக் கட்டுப்பாட்டில் இருப்பவை வேறு எதுவும் இல்லை. முழுக்க முழுக்க! பதிவு செய்யப்பட்ட இசையில் கட்டுப்பாடு கிட்டும், ஆனால் அதை ரீமிக்ஸ் செய்து மாற்றி அமைக்க முடியும். புத்தகங்களை அப்படி மாற்ற முடியாது. பழங்காலம் போல வரிசை வரிசையாக வார்த்தைகளை அமைக்கிற மீடியம்தான் எனக்குத் தோதுப்பட்டு வருகிறது. நான் எழுதும்போது என்னைத் தவிர வேறு யாரும் அதில் நுழைவதில்லை. சினிமா, டெலிவிஷனுக்கு தயாரிப்பவர்களைப் பார்த்தால் எனக்குப் பிரமிப்பாகவே இருக்கிறது. அவர்கள் என்னத்தையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது ! புத்தகம் எழுதுவது, சுத்தம். இதில் மொத்த அனுபவத்தையும் கட்டி எழுப்புவது ஒரே ஆள்தான்.

டீ பார்ட்டி இயக்கம் ஏன் இப்போது இத்தனை வெற்றி கண்டிருக்கிறது என்பது குறித்து ஏதும் சொல்வீர்களா? ஏன் எல்லாரும் இத்தனை வேகப்படுகிறார்கள்?

ஒரு கருப்பர் வெள்ளைமாளிகையில் இருப்பது உதவுகிறது. அது எந்தக் கருப்பராக இருந்தாலும் சரி. எல்லாவற்றையும் கரித்துக் கொட்டும் கிழ வெள்ளையர்களின் கட்சியாக ஒன்றைக் கட்ட வேண்டுமானால், எதிரே ஒரு கருப்பரை வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் போதும். உடனே எல்லா சிடுமூஞ்சி வெள்ளையரும் கூட்டங்களுக்கு வந்து சேர்ந்து விடுவர்.

அப்படியானால் இந்த குரோதம் பல ஆண்டுகளாக சூடாகிக் கொண்டிருக்கிறது, இப்போது கொதிநிலைக்கு வந்திருக்கிறதென்கிறீர்களா?

இல்லையா பின்னே? உள்நாட்டுப் போர் நடந்து என்ன ஒரு 150 வருடங்கள்தான் ஆகியிருக்கிறது. அது நேற்றைப் போலத்தான் இருக்கிறது. இனங்கள் பற்றி அமெரிக்காவில் இன்னமும் ஏதும் உருப்படியாக பேசி அறியப்படவில்லை. ஒரு காலத்தில் கோட்டு சூட் போட்ட வெள்ளையர்கள்தான் நாட்டை ஆண்டார்கள். இனி கோட்டு சூட் போட்ட வெள்ளையர் இங்கு முழுதும் ஆளப் போகிற நிலை வராது. அது அரசியல் சம்பந்தப்பட்டதல்ல, வெறும் ஜனத்தொகை பற்றிய சமாச்சாரம். அது சிலருக்கு அடியில் சூட்டைக் கிளப்புகிறது. ரிபப்ளிகன் கட்சி முன்பு தெற்குப் பகுதியைப் பிடித்துக் கொண்டு ஆட்சியில் வெகு நாள் இருந்ததில்லையா, அந்த தந்திரத்துக்கு இன்று கொடுக்க வேண்டிய விலைதான் டீ பார்ட்டி இயக்கமும்.

இதைக் கேட்டால் அச்சமேற்படுகிறதே?

ஆமாம், நீண்ட நாள் பார்வையில் இது அச்சப்பட வேண்டிய ஒன்றுதான். ரிபப்ளிகன் கட்சிக்கு இதனால் ஆபத்துதான் வரும். இனிமேலும் கட்சியை நடத்த வேண்டுமென்றால் தலைப்பா கட்சி (Whigs) போன வழியில்தான் போக வேண்டி வரும்.[3] அடுத்த வருடமே இப்படி ஆகுமென்றில்லை, ஆனால் போகிற போக்கில். அதிகாரம் கையிலில்லாத போது என்ன அட்டூழியம் வேண்டுமானாலும் செய்து அதிகாரத்தில் இருப்பவர்களை ஏதும் செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால் அட்டூழியங்களுக்கான விலையைப் பின்னால் கொடுத்தே ஆக வேண்டி வரும்.

(முற்றும்)

[1] நியுரோமான்ஸர் என்கிற சொல் மூன்று அர்த்தங்கள் தருவதாக சைபர்பங்க் அறிவியல் நவீனங்கள் எழுதுவதில் ஒரு முன்னோடியாகக் கருதப்படும் நார்மன் ஸ்பின்ராட் என்கிற எழுத்தாளர் சொல்கிறார். (நன்றி:விக்கி) புதுப் புளகம் (நியு ரொமான்ஸர்), நரம்பியலின் எதிர்காலம் பற்றிய ஆரூடம் (நியுரோ மான்ஸி), பிணங்களை உயிர்ப்பிப்பது போல நரம்புகளை உயிர்ப்பித்துப் பயன்படுத்தல் (நெக்ரோமான்ஸி, நியுரோ மான்ஸி) என்று மூன்று அர்த்தங்கள். இவற்றில் மூன்றாவது ’சிலேடை’யான பயன்படுத்தல் என்கிறார்.

[2] பேட்டியில் உள்ள ஒரு தகவல் பிழை இது. கிப்ஸன் 1948 இல் பிறந்தவர். இந்த பேட்டி நடந்தது அக்டோபர் 2010 இல் என்றால் அப்போது அவருக்கு 62 வயதாகி இருக்கும். பேட்டி தொலைபேசி வழியே நடந்ததால் பேட்டியாளர் தவறாகக் கேட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் நியுயார்க் மாகஸீன் போன்ற ஒரு பத்திரிகையில் எழுதுபவர் தகவலைச் சரிபார்க்காமல் எழுதி இருப்பது சற்று அதிசயமாகவே இருக்கிறது.

[3] தலைப்பா கட்சி (Whigs party) 1820 இலிருந்து 1850 வரை அமெரிக்க அரசியலில் ஒரு இரண்டாம் கட்சியாக இருந்தது. லிங்கன் கூட இதில் சில காலம் இருந்தார். அடிமை முறையை ஒழிப்பதா வேண்டாமா என்கிற கேள்விக்குப் பதில் காண முடியாது கட்சி உடைந்தது. அடிமை முறையைக் கைவிடத் தயாரில்லாத வெள்ளையர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். கட்சி காணாமல் போயிற்று என்று விகி குறிப்பு சொல்கிறது.

(மொழிபெயர்ப்பு உதவி : மைத்ரேயன்)

________________________________________________________________

 

கட்டுரை வெளியான பத்திரிகை – நியுயார்க் மாகஸீன். நியுயார்க் மாகஸீனுக்கு சொல்வனம் நன்றி தெரிவிக்கிறது

தொடர்பு இதோ:http://nymag.com/daily/entertainment/2010/09/vulture_transcript_william_gib.html