மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்

சீட்டுக்கட்டுக் கட்டடத்தின் அடிச்சீட்டை உருவினாற்போல வட ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் சர்வாதிகார அரசுகள் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. தரைக்கு அடியில் புதைந்து தூங்கிக்கிடந்த வரலாறு முழித்துக்கொண்டு சோம்பல் முறித்ததில் நைல் நதிப்பிரதேசத்தில் ஓர் அரசியல் பூகம்பமே தொடங்கி விட்டது. ராணுவம், சர்வாதிகாரிகள், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகியவை மட்டுமே பங்கேற்கும் ஆடுகளமாக இருக்கும் பல இஸ்லாமிய நாடுகளின் சர்வாதிகார அரசுகளை இன்றைய இளைய தலைமுறை புரட்டிப்போட்டு விட்டதைப்போல் தெரிகிறது.

மாறவே வாய்ப்பிலையோ என்ற நிலையில் இருந்த எகிப்திலும் டுனீஷியாவிலும் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் அரபு நாடுகளில் கூட ஜனநாயகம் துளிர்க்க வாய்ப்பு இருக்குமோ என்று உலகைத்திரும்பிப் பார்க்க  வைத்திருக்கின்றன. எகிப்தோடு நிற்காமல் லிபியா, ஏமென், ஜோர்டான் என்று தொடர்வது சர்வாதிகார அரபு அரசுகளைக் கலங்கடித்திருக்கிறது. நேற்றுப்பெய்த சமுக வலைத்தொழிநுட்பத்தில் இன்று முளைத்த காளான்கள்கள் போல் இந்த அதிரடி நிகழ்வுகள் தோன்றினாலும் எல்லாப் புரட்சிகளையும் போலவே இந்தப்புரட்சிகளுக்கும் நீண்டகால வரலாறு இருக்கத்தான் செய்கிறது; பல சக்திகளின் பின்னணி இருக்கிறது. அரைநூற்றாண்டின் அதிருப்தி இருக்கிறது.தொழில் நுட்பங்களின் பங்கும் இருக்கிறது.  அவற்றை இந்தக்கட்டுரை ஆராய்கிறது.  இறுதியில் இந்தியாவிற்கு இது தரும் சில பாடங்களையும் விவரிக்கிறது.

குடிமைச்சமூகம் 2.0

2009-இல் பதவியேற்ற ஒபாமா அரசில் ஹிலரி கிளிண்டன் வெளியுறவுத்துறை செயலாளராகப் பொறுப்பை  ஏற்றார். அந்த வருட இறுதியில் அவர் ”குடிமைச்சமூகம் 2.0” (Civil Society 2.0) என்ற ஒரு முனைப்பை அறிவித்தார். 2009-இல் பொருளாதார பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்த உலகத்தில் இந்தச்செய்தி அதிக கவனம் பெறவில்லை.

குடிமைச்சமூகம் 2.0 என்பது என்ன? ஜனநாயகம் பலவீனமாய் இருக்கும் நாடுகளில் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்த அமெரிக்க வெளியுறவுத்துறையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது. ”2.0” என்று குறிப்பதற்குக் காரணம், வலைத்தொழில் நுட்பங்களைக்கொண்டும் புதிய சமூக வலைத் (social network) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதை இது முதன்மைப்படுத்தியது.

கணிணி மற்றும் வலைத்தொழில்நுட்பங்களை உள்நாட்டுப்பிரச்சனைகளை எதிர்த்துக் குரலெழுப்ப எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பயிற்சியளிப்பதை அதன் நோக்கங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தது.

”குடிமைச்சமூகம் 2.0”இல் இன்றைய தேதியில் மிக முக்கியமானதாய் நாம் அடையாளம் கண்டுவிடக்கூடிய அம்சம் ஒன்று  அந்த அறிவிப்பின் கடைசியில் இருந்தது; அது உலகின் ஒரு முக்கியமான பகுதியை நேரடியாய்க் குறிப்பிட்டுப்பேசியது; அந்தப் பகுதியில் உள்ள குடிமைச் சமூக அமைப்புகளை நோக்கி  வலைப்பின்னல், வலை ஊடகம் போன்ற விஷயங்களை வலுப்படுத்த 5 மில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகக் குறிப்பிட்டிருந்தது.  அந்தப்பகுதி வேறெதுவுமில்லை- இன்று நாளுமொரு ஜனநாயக ஆர்ப்பாட்டத்தைக் கண்டுகொண்டிருக்கிற பிரதேசமான வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பிரதேசம்தான் அது.

உடனே நமக்குள் எழும் கேள்வி, அப்படியென்றால் இன்று காணும் புரட்சியெல்லாம் அமெரிக்க சதியா என்பதாகத்தானே இருக்கும். அதற்கு நேரடியான பதில் இல்லை என்பதுதான். மிகச்சிறிய வாழைப்பழக்குடியரசு (banana republic) என்று சொல்லத்தக்க பொம்மை அரசுகளைத் தவிர பிற எந்த நாட்டின் புரட்சிக்கும் இப்படி எளிய  காரணங்களைக் கூறி விட முடியாது. அதுவும் ஒரு பிரதேசம் எங்கும் தீயாய்ப்பரவும் ஒரு எழுச்சிக்கு, வலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் கூட மக்களே முன்னின்று ஆயுதப்புரட்சி நடத்தும் லிபியா போன்ற நாடுகளைப் பார்க்கையில், இதன் பின் உள்ள வெகுஜன பங்கேற்பு தெளிவாகவே தெரிகிறது.

அப்படியென்றால் அமெரிக்காவின் பங்கு என்ன? குடிமைச்சமூகம் 2.0 என்ற அமைப்பின் முக்கியத்துவம் என்ன? இவற்றைக் காண்பதற்கு முன்னால் டுனீஷியா,  எகிப்து ஆகியவற்றின் வரலாற்றை தெரிந்து கொள்வது உதவும். தடுக்கி விழுந்தால் சர்வாதிகார நாட்டில்தான் விழ வேண்டும் என்ற நிலையில் உள்ள ஒரு பிரதேசத்தில், ஏன் இந்த நாடுகளில் மட்டும் முதலில் புரட்சி வெடிக்க வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானது.

Geography is Destiny என்று சொல்வது உண்டு. இன்றைய நிலையில் டுனீஷியாவையும், எகிப்தையும் இதற்குக் கச்சிதமான உதாரணங்களாகக் காட்டலாம். அந்நாடுகளின் வரலாறு அவற்றின் புவியியலாலேயே செலுத்தப்பட்டிருக்கிறது.

டுனீஷியா- வடக்கே மத்தியதரைக்கடலுக்கும் இருபுறமும் அல்ஜீரியா, லிபியா ஆகிய நாடுகளாலும் சூழப்பட்டு இருக்கும் பிரதேசம். ஆண்டாண்டு காலமாய் ரோமப்பேரசாலும், பின் இஸ்லாமிய அரேபியா, கிறித்துவ ஐரோப்பா என பல்வேறு நாகரீகங்களாலும் செதுக்கப்பட்ட ஒரு பகுதி. ஆனால் நவீன டுனீசியாவின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்தது பிரான்ஸ். 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரான்ஸின் பாதுகாப்பு ஆளுகைக்கு உட்பட்டிருந்த டுனீசியா, 75 ஆண்டுகளுக்குப்பின் 1956-இல் விடுதலை அடைந்தது. பிரான்ஸின் கல்விமுறை டுனீசியாவில் நவீனக் கல்வியையும் தேசியவாத அரசியலையும் அறிமுகப்படுத்தி பரவலாக்கி விட்டிருந்தது.

பிரான்ஸின் தாராளவாத சிந்தனைகளும், மதங்களை விலக்கிய மறுமலர்ச்சிகால அணுகுமுறைகளும் வட ஆப்பிரிக்காவில் ஒரு முக்கிய மாற்று சக்தியாக டுனீசியாவை உருவாக்கின. ஆனாலும் டுனீசிய அரசு சர்வாதிகாரியாலேயே தொடர்ந்து அரசாளப்பட்டு வந்தது. இந்த வருடம் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பென் அலி கடந்த 24 வருடங்களாக ஆட்சியிலிருந்தவர். ராணுவத்தைத் தன் கைபில் வைத்துக்கொண்டு அரசின் கான்ட்ராக்டுகளின் மூலம் தன் குடும்பத்துக்கு ஏகப்பட்ட சொத்துகளைக் குவித்தவர். டுனீஷியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு கணிசமான அளவுக்கு உண்டு- இதற்குப்பின்புலத்தில் டுனீஷியாவை லிபியாவுக்கு எதிரான சக்தியாக வலுப்பெற வைக்க வேண்டிய திட்டம் இருந்தது.

ஆனால் கொட்டிய பெரும்பணமும் பென் அலியால் சுருட்டப்பட்டது.  புரட்சி தொடங்கியவுடன் சர்வாதிகாரிகள் மற்றும் கொடுங்கோலர்கள் யாராக இருந்தாலும் முஸ்லீம் என்றால் தயாராக அடைக்கலம் கொடுத்து விடும் சவுதி அரேபியாவுக்கு குடும்பத்துடன் ஓடிப்போனார் பென் அலி. (இடி அமீனும் சவுதிக்குத்தான் ஓடிப்போனான்.) போகிற போக்கில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை டன் தங்கக்கட்டியை பென் அலியின் மனைவி கடத்திக்கொண்டு போய்விட்டதாக செய்திகள் வெளியாயின. இரண்டாம் உலகப்போருக்குப்பின் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் அரசியலானது அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய வல்லரசுகளின் நிழல் யுத்தக் களங்களாக உருவெடுத்தன. எகிப்து, சிரியா, ஏமென் போன்ற நாடுகள் சோவியத் யூனியனின் நட்பு நாடுகளாய் இருந்தன. லிபியாவுக்கும் சோவியத் பல ராணுவ உதவிகளைச்செய்தது. நாஸர் கால எகிப்து அரபு உலகில் சோவியத் யூனியனின் உதாரண சார்பு நாடாக (client state) இருந்தது.   அராபிய மேற்கு என்று சொல்லப்படும் வட ஆப்பிரிக்க மாக்ரெப் பிரதேசம் (அல்ஜிரியா, மொராக்கோ, டுனிஷியா, லிபியா, மௌரிடேனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதி இது) பிற அரபு நாடுகளை விட ஐரோப்பிய நாடுகளுடன் மிக அதிக அளவு சமூக மற்றும் வியாபார உறவுகளைக் கொண்டிருந்தன. இதனால் இந்நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஓரளவுக்கு தணிந்தே இருந்தது. இதற்கு பனிப்போர் சார்ந்த காரணங்களும் உள்ளன.
அன்றைய பனிப்போரின் அராபிய அரசியல் சதுரங்கத்தில் எகிப்து ஒரு முக்கிய அதிகார சதுரம். இந்த சதுரத்தில் 1950-களில் சோவியத் ஆதிக்கம் கணிசமாகவே இருந்தது. இதற்கு எதிராக அமெரிக்கா சவுதி அரேபியாவை வளர்த்து வந்தது. எல்லா அரபு நாடுகளையும் இணைக்கும் உணர்ச்சிகர அரசியல் புள்ளியாக பாலஸ்தீனப் பிரச்சினை இருந்தது. பொது எதிரியாக இஸ்ரேல் அடையாளம் காணப்பட்டது. பாலஸ்தீனப்பிரச்சனை  அராபியர் Vs யூதர் என்கிற எளிய சூத்திரத்திற்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அராபிய மக்களின் காவலன் என்ற பதவிக்கு ஒரு நிழல் போர் உருவாக ஆரம்பித்தது.

எகிப்தின் நாசர் (அதிபர்- 1956-70) பரந்த அராபிய இனத்தின் பிரதிநிதி என்கிற ஒரு நிலையில் இருந்து பிற அராபிய நாடுகளை நோக்கிப் பேசத்தொடங்கினார். பதவிக்கு வந்தவுடன் 1956-இல் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதன் மூலம் மேற்கின் வல்லரசுகளை நேரடியாக எதிர்க்கத் துணிந்த அவரது செயல் அராபிய நாடுகளில் பெரும் புகழையும் செல்வாக்கையும் அவருக்கு கொண்டு சேர்த்தது. அராபிய மக்களின் பிரதிநிதியாக நாஸர் கவனம் பெறத் தொடங்கினார்.

அன்றைய சவுதி மன்னர் ஃபய்ஸல்  (மன்னர்: 1964-75) இதற்கு எதிராக இஸ்லாமிய உம்மா என்கிற மதவாத ஆயுதத்தைக் கையிலெடுத்தார். அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு இதற்கு இருந்தது. ”கடவுளற்ற கம்யூனிஸ்டுகளுக்கு” எதிராக இஸ்லாமிஸ்டுகளை வளர்த்தெடுக்க அமெரிக்கா ஊக்கம் தந்தது. இதன் எதிர் விளைவாக சோவியத்தின் சார்பு நாடுகளில் இஸ்லாமிஸ்டுகள் சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டனர்.

முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) என்கிற இஸ்லாமிஸ்டு அமைப்புக்கு சவுதி மன்னரின் பலத்த ஆதரவு இருந்தது. ஆனால் எகிப்திலும், லிபியாவிலும் சிரியாவிலும் இந்த அமைப்பு கடுமையாக அடக்கப்பட்டது. 1979-இல் ஈரானில் உருவான மதவாத முல்லாக்களின் ஆட்சி, எகிப்து, லிபியா போன்ற சர்வாதிகார அரசுகளுக்கு ஒரு முக்கியமான பாடத்தைத் தந்தது: இஸ்லாமிய மதவாதத்தை வளர விடுவது தமது ஆட்சிக்கே உலை வைத்து விடும் என்பதுதான் அது. சோவியத் ஆதரவு நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. எகிப்தில் நாஸர் அதிபராகும் முன்னரே இது தொடங்கி விட்டது. 1954-இல் நாஸர் நாஸரைக் கொலை செய்ய நடந்த முயற்சி தோல்வியடைந்த பின் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  ”முஸ்லீம் சகோதரத்துவம்” மீதான அடக்குமுறை முடுக்கி விடப்பட்டது.

மதவாத இஸ்லாமிஸ்டுகளைப் பின்னுக்குத் தள்ளி இன்று பரவலாக வெடித்துக்கொண்டிருக்கும் ஜனநாயகப் புரட்சிகளுக்கு ஒரு முக்கியமான ஆரம்பப் பாதை இதன்மூலமாகவே போடப்பட்டது என்பதே நாம் இதில் கவனிக்க வேண்டிய செய்தியாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளை முன்னிறுத்தாததாலேயே ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்தப்புரட்சிகளை ஒரு கட்டத்தில் ஆதரிக்க வேண்டிய நிலையும் வந்தது. ஆனாலும் இவைகளில் இஸ்லாமிஸ்டுகளின் அமைப்பு ரீதியான ஆதரவு பின்புலத்தில் இருந்து செயல்பட்டு வந்துதான் இருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு இந்த புரட்சிகளைத் தன் திசைக்குக் கடத்திப்போக முடியும் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. மட்டுமல்ல, இந்தப்புரட்சிகளின் நீண்ட கால தாக்கமும் ஆராய்ச்சிக்குரியது.

நாஸர் இறப்புக்குப்பின் ஆட்சிக்கு வந்த அன்வர் சதாத் செய்த முக்கிய மாற்றம் சோவியத் சாய்வு என்ற நிலையில் இருந்து அமெரிக்க சாய்வு என்று தன் நாட்டின் அரசியல் நிலையை திசை திருப்பியதுதான். அரேபியக் காவலன் என்ற ஹோதாவில் நாஸர் எகிப்தை ஈடுபடுத்திய போர்களில் தோல்வியும் அவமானமும் பொருளாதாரச்சரிவுமே மிச்சமானது என்பதை அன்வர் சதாத் உணர்ந்து கொண்டார். யாம்-கிப்பூர் போரின் தயாரிப்பில் சோவியத் யூனியன் ராணுவத் தளவாடங்களை அனுப்புவதில் திமிரான பல நிபந்தனைகளை விதித்தது, ஆயுதங்கள் தரவில்லை என்பதைக் காரணம் காட்டி பல்லாயிரக்கணக்கான சோவியத் யூனியனின் துருப்புகளையும் ஆலோசகர்களையும் உடனடியாக எகிப்தைவிட்டுப் போய்விடுமாறு ஆணையிட்டார். (சோவியத் யூனியன் இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு ஆயுத சப்ளைகளை அனுப்பி விட்டதால் எகிப்துக்கு இல்லை என்று காரணம் சொன்னது. ஆனால் உண்மையான காரணம் வேறு: எகிப்தில் இருந்து வந்த தனது பல்லாயிரக்கணக்கான துருப்புகளை நேரடியான ஒரு போரில் ஈடுபடுத்த சோவியத் அதிபர் பிரஷ்னேவ் விரும்பவில்லை. தனது  துருப்புகள் அங்கிருந்து போனபின், எகிப்திற்கு ஆயுத சப்ளை செய்ய சோவியத் முன்வந்தது). போருக்குப்பின் சோவியத் உதவி இல்லையென்றான நிலையில், பொருளாதாரத்தைச் சீர் செய்ய வேண்டுமென்றால் அமெரிக்க உதவி தேவைப்பட்டது. அமெரிக்காவில் கேம்ப் டேவிடின் அமெரிக்க அதிபரின் முன்னிலையில் இஸ்ரேல் அதிபர் மெனகெம் பெகினுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார் (1978).

இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் பெரும் நிதி உதவி எகிப்தின் மீது பொழிய ஆரம்பித்தது. சராசரியாக வருடத்திற்கு 2 பில்லியன் டாலர் அளவுக்கு இந்த உதவிகள் அமைந்தன. இதன் பெரும்பாலான பலன் மறைமுகமாக எகிப்தின் ராணுவ அதிகாரிகளைச் சென்றடைந்தது. ஏனெனில் எகிப்தின் முக்கிய பொருளாதாரத்துறைகள் அனைத்துமே அதன் ராணுவத்தால் நடத்தப்பட்டன. ஆனால் இதன் பலன் மேல்தட்டு ராணுவ அதிகாரிகளைச் சென்றடைந்ததே ஒழிய, அடித்தட்டு சிப்பாய்களுக்கு ஒரு பலனும் இல்லை. மட்டுமன்றி ஹோஸ்னி முபாரக்கும் அவரது அரசியல் வாரிசாய்க் கருதப்பட்ட கமால் முபாரக்கும் ராணுவத்திற்கு மாற்றாக தங்களுக்கு வேண்டிய தனியார்த்தொழிலதிபர்கள் சிலரைப் பெருமளவு ஆதரித்து வளர்த்து வந்தனர். இவர்கள் ராணுவத்திற்கு போட்டியான பொருளாதார சக்திகளாக உருவெடுத்து வந்தனர். ராணுவத்தை பொதுவாகவே வலுவற்ற தலைமையை உடையதாக ஆக்க ஹோஸ்னி முபாரக் முயன்று வந்தார்.

இதற்கிடையில் இந்த ஜனநாயகப்புரட்சிகளை மேற்கின் அரசுகள் -குறிப்பாக அமெரிக்கா- சில வருடங்களாகவே எதிர்பார்த்து வந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

2009-இல் எகிப்தின் அமெரிக்க தூதரகம் அனுப்பிய தந்திச்செய்தி ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அதில் எகிப்தின் அதிபரான ஹோஸ்னி முபாரக், அவரது அரசியல் வாரிசாய்க் கருதப்பட்ட கமால் முபாரக் ஆகியோருக்கும் ராணுவத்தலைமைக்கும் இருக்கும் உரசல்கள் நேரடியாகப் பேசப்பட்டிருப்பது தெரிகிறது.  எகிப்தில் ராணுவம் என்பது எல்லைப்பாதுகாப்பை மட்டும் கட்டுப்படுத்தும் அமைப்பல்ல. ராணுவ அதிகாரிகள் கையில்தான் எகிப்தின் முக்கியமான

பொருளாதாரத் தொழில்துறைகள் உள்ளன. ராணுவத்திற்குச்சொந்தமான கம்பெனிகள் ஓய்வுபெற்ற ஜெனரல்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த கம்பெனிகள் நீர்வளம் (நைல்!), ஆலிவ் எண்ணெய், சிமெண்ட், கட்டுமானத்தொழில், ஹோட்டல்கள் (கவனிக்க: எகிப்திற்கு கணிசமான வருமானம் மற்றும் அயல்நாட்டுச்செலாவணி பெற்றுத்தருவது சுற்றுலாத்துறை) மற்றும் எண்ணெய்வளம் ஆகிய துறைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. பணம் கொழிக்கக்கூடிய நைல் டெல்டாப்பகுதிகளிலும் சிவப்புக்கடல் (Red Sea) கரையோரங்களிலும் பெருமளவு நிலங்களை ராணுவம் தன் கையில் வைத்திருக்கிறது. இந்த இடங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஆனால் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு அரசு தனக்கு தரும் நன்றிக்கடனாக ராணுவம் இதைக் கருதியது!

விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்திய தந்திச்செய்தி ராணுவத்திற்கும் கமால் முபாரக்கிற்கும் ஆகாது என்பதை நேரடியாகச் சொல்லியிருந்தது. ஆனாலும்  முபாரக்கே பதவி விலகி கமால் முபாரக்கை அதிபராக்கினால், ராணுவம் அதனை எதிர்க்காது என்று குறிப்பிட்டு, ஆனால் அந்த மாதிரி நிகழ வாய்ப்பேதும் இல்லை என்றும் அடிக்கோடிட்டிருந்தது.  இந்நிலையில் திடீரெனப்புறப்பட்ட ஜனநாயகக் குரல்கள் வீதிக்கு வந்து போராடத்துவங்கியபோது ராணுவம் புரட்சிக்காரர்களுக்கு சாதகமான நிலையை எடுத்ததை மேற்சொன்ன நிலையின் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.

இந்த அரசியல் மாற்றங்கள் எந்த அளவுக்கு உண்மையாகவே ஜனநாயக சக்திகளை நிலை நாட்டப்போகின்றன என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் டுனீஷியா, எகிப்து, (இப்போது லிபியா?) என்ற எந்த நாட்டிலும் உச்ச தலைமையும் அதற்கு நெருக்கமான ஒருசிலரும் மாறியிருக்கின்றனரே ஒழிய கால்நூற்றாண்டுக்கும் மேலாக அவர்கள் உருவாக்கிய அரசியல் மற்றும் பொருளாதார சக்திகள் கொண்ட ஊழல் கட்டமைப்பு அப்படியேதான் இருக்கிறது.

மக்கள் தொகை என்று எடுத்துக்கொண்டால் இன்றைய அராபியச்சமூகம் மிகவும் இளமையான ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை 15-இலிருந்து 29-க்குள் உள்ள இளைஞர் கூட்டம். எகிப்து போன்ற நாடுகளில் இவர்கள் படித்த ஆனால் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். அராபிய நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளர்களில் 22% எகிப்தில் உள்ளனர். பிற அராபிய நாடுகள் போல அரசாங்கம் வலைத்தளங்களை கடுமையாய்க் கட்டுப்படுத்துவதும் எகிப்தில் கிடையாது. இந்த சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பங்கெடுப்பது 15-லிருந்து 29-க்குள் இருக்கும் இளைஞர்களே. எகிப்தில் 75 சதவீத ஃபேஸ்புக் பயனாளிகள் 15-29 வயதுக்காரர்கள். 2010-இல் மட்டும் அரேபிய நாடுகளில் ஃபேஸ்புக் பயனாளிகள் ஆண்டுக்கு 78% என்ற வீதத்தில் அதிகரித்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பொருளாதார வளர்ச்சியில் பங்கு கிடைக்காமல், படித்த கல்விக்கு உள்ளூரில் வேலை கிடைக்காமல் பெருகிப் புழுங்கிக்கொண்டிருக்கும் ஓர் அதிருப்தித்திரள் இது. இதற்கு வடிகால் கிடைக்காவிட்டால் வன்முறைக்கு அவர்கள் இடம்பெயரக்கூடும். இவர்களது கோபம் இஸ்லாமிஸ்டுகளால் எளிதாக கைவசப்படுத்தப்பட்டு நாடு முழுவதையுமே பயங்கரவாதத்திற்குள் தள்ளிவிடும் அபாயம் வெகு தெளிவாக உள்ளது. எனவேதான் ஜனநாயக முறையில் இஸ்லாமிஸ்டுகளை முன்னிறுத்தாமல் ஏற்பட்ட இந்த அரசியல் மாறுதல்களைப்பார்த்து- உள்ளூர முழுமையான ஆதரவு இல்லாவிடினும்- நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றன அமெரிக்காவும் ஐரோப்பாவும்.

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் பிரான்ஸ் தொடங்கி பெல்ஜியம், ஆஸ்ட்ரியா, இத்தாலி ஜெர்மனி என்று பல இடங்களில் ஜனநாயக சக்திகள் திரண்டெழுந்தன; கிளர்ச்சிகள் தொடங்கின, புரட்சியாக உருவெடுத்தன, சில ஆட்சி மாற்றங்களையும் நிகழ்த்தின. ஆனால் அநேகமாக அத்தனை மாற்றங்களுமே சில வருடங்களிலேயே வலுவிழந்தன. ஜனநாயகம் கோரிய புரட்சிகள் தோல்வியடைந்தன. அரசு பழைய மன்னராட்சிக்குத் திரும்பியது. இது குறித்து ”திருப்புமுனையை அடைந்த வரலாறு திரும்பவேயில்லை” என்று சொல்வார் ஏ.ஜே.பி டெய்லர் என்கிற வரலாற்றாசிரியர். வரலாறு திரும்பவில்லை என்றாலும் கூட, அதற்குப்பின் மன்னர் ஆட்சி முன்போல் வலுவுடன் செயல்பட முடியவேயில்லை. மாற்று அதிகாரம், மக்கள் புரட்சி என்று ருசி கண்ட ஜனநாயக சக்திகள் மெதுவாக படிப்படியாக மீண்டும் தம்மைத்திரட்டிக்கொண்டு பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன. முந்தைய ஐரோப்பாவின் அதிகாரப்படி நிலைக்கு அது இனி செல்லவே முடியாது என்பது அரச குடும்பங்களுக்கும் புரிந்து விட்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டைத் தொடும்போது ”திருப்பு முனையில் திரும்பாத” அத்தனை ஐரோப்பிய நாடுகளிலும் ஜனநாயக ஆட்சி மலர்ந்திருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோல்வியடைந்த மக்கள் புரட்சிகள் வழியாகத்தான் அரை நூற்றாண்டு கழித்து ஜனநாயகத்திற்கு வந்தடைய ஐரோப்பாவிற்கு வழி பிறந்தது.

இதுவே அராபிய நாடுகளிலும் நடக்கும் என்றே தோன்றுகிறது. பல ஜனநாயகப்புரட்சிகள் தோல்வியடையலாம் (உதாரணம்: ஈரான்), அல்லது வென்ற இடங்களில் கூட பழைய அதிகாரங்களே அரசைக் கையிலெடுத்துக்கொள்ளலாம் ஆனால் சர்வாதிகாரங்களுக்கு எதிரான நீண்ட காலப்பயணம் ஒன்றை அரேபிய மக்கள் தொடங்கி விட்டதாகவே இதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்வாதிகாரிகளை ஆதரிக்கும் அமெரிக்க அரசுக்குக்கூட இந்த உண்மையின் தவிர்க்க முடியாத தன்மை புலப்பட்டு விட்டிருக்கிறது. ஜனநாயகக்குரல்களை அடக்கி சர்வாதிகார அரசுகளுக்கு முட்டுக்கொடுப்பது மிதவாத ஜனநாயக ஆதரவாளர்களை அடிப்படைவாத இஸ்லாமிஸ்டுகளை நோக்கித்தள்ளுகிறது என்கிற பாடத்தை அமெரிக்கா பெரும் விலை கொடுத்துப் பயின்றிருக்கிறது. அரேபியாவின் பெரும் திரளான இளைஞர் கூட்டத்தை இஸ்லாமிஸ்டுகளிடமிருந்து விலக்கவும் ஜனநாயகத்தை நோக்கி செலுத்தவும் வலைத்தொழில்நுட்பம் ஏதாவதொரு வகையில்  உதவும் என்றால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் அந்த நிலைமையை வரவேற்கும் நிலையிலேயே இன்று உள்ளன.

அதிபர் ஒபாமா வலைத்தொழில்நுட்பத்தின் வீச்சினை நன்றாகப் புரிந்து கொண்டவர். தனது தேர்தல் பிரச்சாரத்துக்கான செலவை வலைத்தொடர்புகள் மூலம் சிறு சிறு துளிகளாக சேர்க்கத் தொடங்கி மெக்கெய்னை விட, பெருவெள்ளமாய் பிரசார நிதியைத்திரட்டியவர் அவர். வலைத்தொழில்நுட்பத்தின் அரசியல் சாத்தியங்களை அவர் கண்கூடாகப் பார்த்தும் இருந்தார். பதவியேற்று சில மாதங்களிலேயே எகிப்தில் ஜனநாயக மாற்றங்கள் கொண்டுவருவது பற்றி கெய்ரோவில் உரையாற்றினார். அதன் பின்னரே ஹிலரி கிளிண்டன் தனது குடிமைச்சமூகம் 2.0 பற்றிப் பேசினார்.  எல்லா நாடுகளிலும் முக்கிய அரசியல் சக்திகளை வளைக்க வல்லரசுகள் எப்போதுமே திட்டமிட்ட வண்ணம் இருக்கின்றன. ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் தம்மளவில் முக்கிய அரசியல் சக்திகளாக உருவெடுக்க முடியும் என்பதை அமெரிக்கா மிக முன்னதாகவே இனம் கண்டு கொண்டிருக்கிறது.

இந்த சமூக வலைத்தளங்களின் மூலம் செயல்படும் கண்ணுக்குப்புலப்படாத சக்திகளும்கூட முந்தைய காலத்தைய அரசியல் சக்திகள் போலவே அதிகார மாற்றத்தை ஏற்படுத்த உதவக்கூடியவை என்பதையும் அது புரிந்து வைத்திருக்கிறது. ஃபேஸ்புக், யு-ட்யூப், ட்விட்டர், ஆகியவை சாத்தியமாக்கும் பிரம்மாண்ட மாய வலைத்தொடர்புகளின் மூலம் ஜனநாயகம், அதிகாரப்பரவல், உதவாத பழைய அரசியல் சட்டகங்களிலிருந்து விடுபடத்துடிக்கும் இளைய சமூகம் ஆகியவற்றைக்கொண்டு பல சர்வாதிகார அரசுகளை ஆட்டம் காண வைக்க முடியும். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் சீனாவுக்குள் நுழையவே இல்லை. கூகுளுக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகி விட்டிருக்கின்றது. எகிப்தின் புரட்சிக்குப்பின் சீனாவின் வலைத்தளங்கள் இன்னமும் அதிகமாக கண்காணிக்கப்படுகின்றன; சென்ஸாருக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால் இது நீண்ட காலம் நிலைக்கக்கூடியது இல்லை. அமெரிக்க அதிபர் ரேகன் சொன்னது போல் “சிறிய சிலிக்கன் சில்லு என்ற டேவிட் சர்வாதிகார கோலியத்துகளை இறுதியில் வீழ்த்தவே செய்யும்”.

இந்தியாவுக்கான பாடம்

வலைத் தொழில்நுட்பங்கள் சமூகங்களை வடிவமைக்கும் ஒரு கட்டத்தில் முக்கிய பிராந்திய சக்தியாக உருவெடுத்துவரும் இந்திய அரசு யந்திரம் இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது? எனக்கென்ன வந்தது என்று விஸ்ராந்தியாக தானுண்டு தன் ஊழல்கள் உண்டு என்று கூவம் நதி போல்  அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசின் கணிணிகளுக்குள் சீனா புகுந்து முக்கிய தஸ்தாவேஜுகளைத் திருடியது மட்டுமன்றி லோக்கல் பிரதிகளை அழித்து விட்டும் சென்றிருக்கிறது. இந்தியா என்ன செய்தது? இந்தியாவின் மின்சக்தி நிலையங்களைக் குறிவைத்து சீனா சைபர் வெளித் தாக்குதல் நிகழ்த்தினால்  தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இந்திய அரசிடத்தில் திட்டம் ஏதும் உள்ளதா? இந்திய சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிஸ்டுகளும், மாவோயிஸ்டுகள் அடுத்த தாக்குதல் பற்றிப் பேசிக்கொண்டால் அதனை சைபர் வெளியில் பின் தொடரும் தொழில் நுட்ப வல்லமை நமக்கு உள்ளது தெரியும், ஆனால் அரசியல் வல்லமை இருக்கிறதா?

இந்திய ஊடகங்களில் நடுநிலை ராஜாக்களாக முகமூடி போட்டு வந்த பர்க்கா தத், வீர் சாங்வி போன்றவர்களின் அரசியல் பித்தலாட்டம் அம்பலத்துக்கு வந்து விட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்தும் விதத்தில் தமிழ் அரசியல்

பத்திரிகைகள் – குறிப்பாக ஈழப்போரின்போது- பல கட்டுரைகளை வெளியிட்டன. பிரபாகரன் இறந்ததற்குப்பின் அவர் உயிரோடு இருப்பதுபோன்ற பொய் புகைப்படத்தை ஒரு பத்திரிக்கை தன் அட்டைப்படத்தில் வெளியிட்டது.  இதுபோன்ற பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும்கூட கணிணியின் ஊடக வெளியில் செயல்படுபவர்கள்தாம். வெளிப்படையாகவே இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சக்திகளுடன் கைகோர்க்கும் ஊடகங்கள் சமூக வலைத் தொழில்நுட்பங்களை முற்றிலும் தவறான முறையில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம். ஊடகப் பித்தலாட்டங்கள் இந்தியாவிற்குப் புதியதல்ல. அதில் சமூக வலைத்தொழில்நுட்பமும் சேரும்போது பொய்யான தகவலை வைத்து குறுகிய காலத்தில் அரசியல் போக்கை திசைமாற்றும் சாத்தியம் அதிகம். ட்விட்டர் அக்கவுண்டே இல்லாத ஐடிக்களிடம் இருந்து ட்விட்டர் செய்திகள் வந்ததுபோல் செய்திகளை வெளியிட்ட ராஜ்தீப் சர் தேஸாயின் சி என் என் – ஐ பி என் பின்பு மாட்டிக்கொண்டவுடன் மன்னிப்புக்கேட்டது.

apology_video

இந்தியா ஒரு பிராந்திய பெரும் சக்தி. சுற்றிலும் உள்ள நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும். எல்லை தாண்டிய  வலைத்தொழில்நுட்பம் இந்தியாவின் ஜனநாயக சக்திகளுக்கு உதவுவதுபோல் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கும் உதவும் வாய்ப்பு இருக்கிறது. சைபர் வெளியைக் கண்காணிக்கவும் அமெரிக்கா போல் இல்லாவிட்டாலும் இந்திய அளவிலாவது வலைத்தள குடிமை சமூகத்தை பரவலாக்கவும் இந்திய நலன்களுக்காக அவற்றை வடிவமைக்கவும் வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது. ஏனென்றால் சுதந்திரத்துடன் கூடவே பொறுப்பும் வருகிறது. அது வலைத்தொழில்நுட்ப பயனாளர்களுக்கும் பொருந்தும்.

அனுபவமும் பக்குவமும் முன்யோசனையும் மிகுந்த எந்த ஒரு அரசாங்கமும் புதிய தொழில்நுட்பங்களை தனது நாட்டின் நலனைத்தக்க வைக்கவும் விஸ்தரிக்கவும் உபயோகப்படுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கும். சமூக வலைப்பின்னல் என்பது மக்களின் உணர்வைக் கண்டுசொல்லும் உளமானியாகப்பலமுறை செயல்படுகிறது. அதனை முன்கூட்டியே அறிய முடிந்தால், சில அரசியல் காய்களை அதற்குத்தகுந்தவாறு நகர்த்த அது மிகவும் உதவும்.  தமக்கு எதிரான காய்நகர்த்தல்களில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் முடியும். அராபிய நாடுகள் பல-குறிப்பாக துபாய்-ஏற்கனவே இது போன்ற முனைப்புகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

”குடிமைச்சமூகம் 2.0”-இன் ஓராண்டு நிறைவு இந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்றது. பல நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்குப் பரிச்சயமான பல ஜனநாயக ஆதரவுப் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். குடிமைச்சமூகம் என்பது என். ஜி. ஓ. க்களின் அமைப்பு என்று புரிந்து கொண்டால் அதை வைத்து சைபர் வெளியில் நடக்கப்போகும் அதிகார யுத்தத்திற்கு அமெரிக்கா தன்னைத் தயார் செய்து வருகிறது என்பது புரியும். ஜனநாயகம் என்ற தளத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணந்து செயல்பட வேண்டிய ஒரு இடம் இருக்கிறதுதான், ஆனால் அமெரிக்கா இந்த இடத்தை பெரும்பாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு தந்து விட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவை மேலும் பரவலாகவும் வலுப்பெறவும் இந்த தொழில்நுட்பங்கள் உதவும்; உதவ வேண்டும். வேறு விதமாகச் சொல்வதென்றால் இந்தியாவின் ஒருமைப்பாடு., இறையாண்மை, ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றை பலவீனமாக்கும் சக்திகளுக்கு உதவும் வகையில் இவை உருவெடுக்கக் கூடாது, இந்திய அரசு இந்த விஷயத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட வேண்டும்.

தொழில்நுட்பம் என்பது காட்டாறு, அணைகட்ட வேண்டியது அரசின் பொறுப்பு, அந்த அணை நாட்டிற்கு ஒட்டுமொத்த நன்மை தருவதாக இருக்க வேண்டும்.