‘மரணம் மற்றும்…’ கன்னடச் சிறுகதைகள்

பெங்களூரில் வசிக்கும் நஞ்சுண்டன் மரணத்தைப் பற்றிப் பேசும், மரணத்தோடு தொடர்புடைய ஆறு கன்னடச் சிறுகதைகளை ‘மரணம் மற்றும்…’ என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் 2002-இல் வெளியிட்ட இத்தொகுப்பு இவ்வருடம் மீள்பதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. நஞ்சுண்டன் ‘பவா’ என்ற யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் நாவலைத் தமிழில் ‘பிறப்பு’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த மொழிபெயர்ப்பு எனக்கு ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளரைக் காட்டித்தந்ததால் ‘மரணம் மற்றும்…’ தொகுப்பை வாங்கினேன். இத்தொகுப்பின் சிறுகதைத் தெரிவுகளும், மொழிபெயர்ப்பு நெறியும் என் தெரிவை ஏமாற்றவில்லை.

யஷவந்த சித்தால, யூ.ஆர்.அனந்தமூர்த்தி, ஏ.கே.ராமானுஜன், ம்ருத்யுஞ்ஜயன், பூர்ணசந்திர தேஜஸ்வி, பி.சி.தேசாய் ஆகிய ஆறு எழுத்தாளர்களின் ஆறு சிறுகதைகளை இத்தொகுப்பில் படிக்கலாம். இந்த ஒவ்வொரு எழுத்தாளரைக் குறித்தும் ஒரு ஒன்றரை பக்க அளவிலான விரிவான அறிமுகமும் தந்திருக்கிறார் நஞ்சுண்டன். அது எழுத்தாளரைக் குறித்த ஓரளவு புரிதலோடு சிறுகதைக்குள் நுழைய உதவுகிறது.

funeral-pyre-jj-001

01. யஷவந்த சித்தால – கதையானாள் சிறுமி (1978)

மரணப்படுக்கையிலிருக்கும் 13 வயது மகள் தன் எழுத்தாள அப்பாவிடம், தன்னைப் பற்றி ஒரு கதை எழுதியே ஆகவேண்டுமென விளையாட்டாகவோ, உண்மையாகவோ சொல்லிவிட்டு இறந்துபோகிறாள். அப்பாவின் அப்போதைய துயரமான மனநிலையால் அது முடியவில்லை. அதனால் தன் மகள் பெயரிலேயே ஒரு சிறுமியின் கதாபாத்திரத்தை அமைத்து அதை வேறொரு சூழலில் சாகடிக்கிறார். கதையெழுத, எழுத தன் கையிலிருக்கும் முற்போக்கு சூத்திரத்துக்குள் அது அடைபடுகிறதா என்று பார்த்தபடியே அதற்கேற்றவாறு கதை அமைத்து, செத்துப்போகும் சிறுமியின் ஏழைத் தொழிலாளப் பெற்றோர் ஒரு சுரங்க விபத்தில் சாவது போலவும், அன்று மாலையே முதலாளிகளின் மகன்கள் அப்பெண்ணைக் கற்பழித்துக் கொல்வது போலவும் கதையை உருவாக்கிப் பதிப்பிக்கிறார். படித்துவிட்டு எழுத்தாளரின் நண்பர்கள் கொண்டாட்டமாக வீட்டுக்கு வந்து ‘fantastic story!’ என்றெல்லாம் புகழ்ந்து பீர் குடித்துவிட்டு, எழுத்தாளரின் மனைவி கையால் சைட் டிஷ் செய்து சாப்பிட்டுவிட்டுச் செல்கிறார்கள். எழுத்தாளரின் மனைவி ‘உன் மகள் சாவை இப்படிப் பிறர் கொண்டாடும் விதத்தில் எழுதியிருக்கிறாயே? நீயெல்லாம் ஒரு மனுஷனா? அவர்களெல்லாம் உன் நண்பர்களா?’ என அவர் முகத்தில் காறித்துப்பி விடுகிறாள். அதற்குப்பின் அந்தத் தம்பதியர் வேறொரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை ஒரு பூர்ஷ்வா நிகழ்ச்சியாகக் கருதி அவர் நண்பர்கள் புறக்கணிக்கிறார்கள் என்போடு கதை முடிகிறது.

கண்மூடித்தனமான முற்போக்குகளின் போக்கை இதைவிட நுட்பமாக யாரும் விமர்சித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். இங்கே தரப்பட்டிருக்கும் எளிதான கதைச் சுருக்கம் கொஞ்சம் முற்போக்குகளுக்கெதிரான பிரச்சார நெடி அடிப்பது போல் இருந்தாலும் கதையில் அதையெல்லாம் நேரடியாகச் சொல்லாமல் வாசகன் ஊகித்துக் கோர்த்துப் படித்துக்கொள்ளும்படி மிகத் திறமையாக எழுதியிருக்கிறார் யஷ்வந்த். கதையில் மூன்று சரடுகள் ஒன்றோடு ஒன்று வெகு லாவகமாகப் பொருந்திப் போகின்றன. நிஜவாழ்க்கையில் மகள் மரணம், எழுத்தாளர் எழுதும் கதை மரணம், இலக்கிய உலகம் பற்றிய விமர்சனம். கதை மொழியும் சுஜாதாவுடையதைப் போல் லாவகமாகத் தத்தித் தத்திச் செல்கிறது. ஆனால் அதே நிலையில் மேலோட்டமாக நின்றுவிடாமல் தேவைப்பட்ட இடங்களில் ஆழமாகச் செல்லவும் செய்கிறது.

02. மிருத்தியுஞ்ஜயன் – எஸ்.திவாகர் (1978)

எஸ்.திவாகர் சென்னையில் வசிக்கும் கன்னட எழுத்தாளர். நிறைய மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார். குறிப்பிட்டத்தக்க நல்ல படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்திருக்கிறார். பொது மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் வேலைக்கு வரும் ஓர் இளைஞன், தனக்கு வந்த பிணத்தைக் குறித்து மேல் விவரங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அந்தப் பிணத்தைப் பற்றி நிறைய மர்மமான விஷயங்களைத் தெரிந்து கொள்கிறான் என்பதோடு கதை முடிகிறது. ஒரு கதை என்றளவில் அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை என்றாலும், பிணத்தைப் பார்த்தவுடன் அது யாராக இருக்கும், நேற்று இந்நேரம் இவன் என்ன செய்துகொண்டிருப்பான் என்றெல்லாம் கதை நாயகன் யோசிக்கும் ஆரம்ப கட்டங்கள் வெகு வெகு சிறப்பானவை. ஒரு நவீன சிறுகதையின் அந்த எண்ண ஓட்டங்கள் இச்சிறுகதையை உயரிய ஒன்றானதாக்குகிறது.

03. அண்ணையனின் மானுடவியல் – ஏ.கே.ராமானுஜன் (1972)

வெகு நவீனமாகவும், சிறந்த உத்திமுறையோடும் 1972-இலேயே இக்கதை எழுதப்பட்டிருக்கும் இச்சிறுகதை ஆச்சரியப்படுத்துகிறது. அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காகச் செல்லும் அண்ணையன் அங்கே நூலகத்தில் ஒரு ஆர்வத்தின் காரணமாக இந்தியாவைப் பற்றி மேல்நாட்டவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்கிறான். அவன் இந்தியாவிலிருந்தபோது மேல்நாட்டவர்கள் மேல்நாட்டைப்பற்றி எழுதியதை மட்டுமே படித்தவன். வெள்ளைக்காரர்கள் நம் நாட்டைப் பற்றி, வேதங்களைப் பற்றி, மனு ஸ்மிருதியைப் பற்றி, நம் சடங்குகளைப் பற்றி இவ்வளவு விரிவாக விஷயங்களோடு எழுதியிருக்கிறார்களே என அவனுக்கு ஒரே ஆச்சரியம். மரணத்தின்போது செய்யவேண்டிய சடங்குகள் பற்றி அவன் ஒரு பெரிய புத்தகத்தைப் படிக்கிறான். அதில் இடையிடையே மனு ஸ்மிருதி மேற்கோள்கள். அவன் அதிலிருக்கும் பிற்போக்குத்தனமான விஷயங்களையெல்லாம் விமர்சித்தபடியே படிக்கிறான். அதில் சாவுச்சடங்குகளைப் பற்றியெல்லாம் புகைப்படங்கள். அவை மைசூரில் எடுக்கப்பட்டவை.

iln1892

கொஞ்ச கொஞ்சமாக அவற்றை எடுத்தவன் தன்னூரைச் சேர்ந்த ஸ்டூடியோ வைத்திருக்கும் தன் உறவினன்தான் என்று தெரிந்து கொள்கிறான். ஒரு குறிப்பிட்ட புகைப்படத்திலிருந்து, அந்த சாவு தன் தந்தையுடையது என்று தெரிந்து அதிர்ந்து போகிறான். மேலும் அப்புத்தகத்திலிருக்கும் சீமந்தம் போன்ற வேறு சடங்குகளும் தன் குடும்பத்தைச் சுற்றியே நடந்திருக்கிறது. உறவினன் காசுக்கு ஆசைப்பட்டுத் தன் மொத்த குடும்பத்தையும் இப்படி புகைப்படமாக்கியிருக்கிறான் என்று அறிந்து அவன் எரிச்சலாகிறான். பிறகுதான் அப்பா இறந்தால், அம்மாவை மொட்டையடித்து சடங்கு செய்வார்களே, அதைக் கைவிட்டுவிட்டார்களா இல்லை இவன் காசுக்கு ஆசைப்பட்டு, அதை நடத்தி அதைப் புகைப்படமாக்கிவிட்டானா என்று பரபரப்பாகத் தேடுகிறான். அவன் எதிர்பார்த்தது போலவே தன் மொட்டைத்தலை அம்மாவின் புகைப்படத்தையும் கண்டுகொள்வதோடு கதை முடிகிறது. நம் பிற்போக்குத்தனமான பழக்கங்கள் ஒரு பக்கம் என்றாலும், அதை விற்றுக் காசு பார்க்கும் போக்கும் இன்னொரு பக்கம் என எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் படு நவீனமாக எழுதியிருக்கிறார் ஏ.கே.ராமானுஜன். இவரெழுதிய ஒரே ஒரு கன்னடச்சிறுகதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

04. ஆகாயமும், பூனையும் – யூ.ஆர்.அனந்தமூர்த்தி (1981)

அனந்தமூர்த்தியின் சூத்திரங்களிலிருந்து சற்றும் வழுவாத கதை. மலைநாட்டில் வசிக்கும் ஒரு பிராமணக் குடும்பத்தைப் பற்றிய விமர்சனக்கதை. பணக்காரர்களுக்கு வாதாடும் வக்கீல் அப்பா மரணப்படுக்கையில் இருக்கும்போது, அவருடைய முன்னாள் கம்யூனிஸ்ட் நண்பர், முன்னாள் காதலி என எல்லோரும் கூடும் கதை. ஒருபக்கம் இடது சாரி நண்பர், இன்னொரு பக்கம் மெளடீக அப்பா – இருவருக்கும் நடுவில் டெல்லியில் பல்கலையில் வேலை செய்யும் கதை சொல்லி என்ற கதை. அதாவது இரண்டுக்கும் நடுவில் தன்னை லாவகமாக நிறுத்திக்கொள்ள நினைக்கும் அனந்தமூர்த்தி – தன்னையறியாமலே தன் அப்பா மரணப்படுக்கையில் திருந்திவிட்டார், திருந்திவிட்டார் எனத் திரும்பத் திரும்பச் சொல்லித் தன்னை ஒரு நிலைப்பாட்டுக்குள் வைத்துகொள்கிறார். இதற்கு நடுவே தொடர்பேயில்லாமல் அப்பாவுக்கு இன்னொரு கள்ளக்காதலி இருந்ததைப் பற்றிய பத்து பக்கங்கள் ஆயாசமளிக்கின்றன. இத்தொகுப்பின் முதல் கதை இந்த மூன்றாவது கதையைத்தான் விமர்சிக்கிறது என எண்ணவைக்கிறது. ஆனால் அனந்தமூர்த்தியின் எழுத்துத்திறனில் மலைநாட்டுப் பக்கங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.

05. சாவு – பி.சி.தேசாய் (1983)

இந்த சிறுகதையின் மொழி பிற சிறுகதைகளிலிருந்து பெரிதும் வித்தியாசமாக இருந்தது. இவர் வட-கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எனவும் வட்டார வழக்குகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது எனவும் நஞ்சுண்டனே தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஒருவிதமான வித்தியாசமான கதை. கெளடர்களை விமர்சிக்கும் கதை. இதுபோன்ற ஒரு கதை சமீபகாலத்தில்தான் தமிழில் சாத்தியமாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய பணம் வைத்திருக்கும் பூப்பெய்வதற்கு முன்னரே விதவையாகிவிட்ட ஒரு பெண்மணி, தன் சாமர்த்தியம் மூலம் எப்படி நிறைய பணம் சம்பாதிக்கிறாள் என்பதைப் பற்றிய கதை. பண விஷயத்தில் சாமர்த்தியமாக இருந்தாலும், தன் உடலிச்சையை அவள் வெற்றி கொள்ள முடியாமல் சில தவறான முடிவுகள் எடுத்து, மூப்பெய்தி சாவதைப் பற்றிய கதை. காமத்தையும், இறப்பையும் மோதவிட்டு, எதிரும் புதிருமாக நிறுத்தி முடிகிறது கதை.

06. மாயாமிருகம் – பூர்ணசந்திர தேஜஸ்வி (1987)

இது கொஞ்சம் எளிமையான, நகைச்சுவையான கதை என்று ஆரம்பித்தாலும் முடிவில் ஒரு பெரிய புதிருக்குள் நுழைத்து, நம்மை யோசனையிலேயே நிறுத்தி முடிவடைகிறது கதை. இரண்டு நடுவயது படித்த ஆண்கள் பேயைத் தேடி சுடுகாட்டுக்குப் போகிறார்கள். அங்கே பல நகைச்சுவையான சம்பவங்கள் நடக்கின்றன. பேயைக் காணாமல் ஏமாற்றத்தோடு திரும்புகிறார்கள். சுடுகாட்டில் உருண்டு புரண்டுகொண்டிருந்ததொரு நாய்க்குட்டி இவர்களைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. அவர்கள் என்ன விரட்டியும் அது பின்னால் வந்துகொண்டேயிருக்கிறது. இருவரில் ஒருவருக்கு அது பேய்தானோ என்ற சந்தேகம் எழுகிறது. இறுதியில் அது பேயாக இருக்குமோ என்று நம்மையும் எண்ணவைத்து முடிகிறது கதை. பூர்ணசந்திர தேஜஸ்வி பிரலமான கன்னடக் கவியான குவெம்புவின் மகன். ஆனால் பலவருடங்களாக அதை வெளியில் சொல்லாமல் மறைத்தே வைத்திருந்தார்.

இக்கதைத் தொகுப்பில் பாராட்டப்பட வேண்டியது அதன் சரளமான அம்சம். சரளம் என்றால் தன்னிஷ்டத்துக்கு மொழிபெயர்த்து மூலக்கதையைக் காணாமலடிப்பது அல்ல. தீவிரமான கதைகளில் உரையாடல்களைத் தூயத் தமிழிலும், கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த கதைகளில் ‘இயல்பான’ பேச்சுத் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார் நஞ்சுண்டன். கெளடர் என்பதாலேயே கொங்குநாட்டுக் கவுண்டர் வட்டாரவழக்கில் உரையாடல்களை அமைத்துவிட்டு அதை ‘மொழிபெயர்ப்பாளனின் சுதந்திரம்’ என்றெல்லாம் நஞ்சுண்டன் சொல்லியிருக்கலாம். இப்படியெல்லாம் அவர் மூலக்கதையின் கழுத்தை நெறித்துக் கொல்லாமல் இருந்ததற்காகவே நாம் நஞ்சுண்டனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். நிறுத்தி நிதானமாக யோசிக்க வைக்கும் நல்ல சிறுகதைகளையும் அவர் தெரிவு செய்திருப்பதும் சிறப்பான ஒன்று.

சில முக்கியமான விஷயங்களை அப்படியே வைத்துக்கொண்டு அடிக்குறிப்பில் விளக்கம் தருகிறார். அதே நேரத்தில் கதையை விட நீளமாக அடிக்குறிப்பு எழுதில் புனைவை அபுனைவாக மாற்றாமல் இருந்ததும் நல்ல விஷயம். உதாரணமாக, அனந்தமூர்த்தியின் சிறுகதையில் ‘தேனே’ என்றொரு பறவையைப் பற்றி ஒரு குறிப்பு தருகிறார் நஞ்சுண்டன். “தேனே மலைநாட்டில் காணப்படும் பறவை. இப்பறவைக்கு முழுநிலவென்றால் பிடிக்கும் என்றொரு நம்பிக்கை மலைநாட்டு மக்களிடையே நிலவுகிறது.” என்று சொல்கிறார் நஞ்சுண்டன்.

இதை இப்படிச் சொல்லாமல், தேனே என்பதை பொத்தாம்பொதுவாகப் பறவை என்றோ, இல்லை ஏதோ ஒரு பறவைதானே, எதாயிருந்தால் என்ன, அதனால் தமிழர்களுக்குத் தெரிந்த பறவையான தூக்கனாங்குருவி என்றோ மொழிபெயர்த்திருந்தால் ஒரு பண்பாட்டுச் செய்தியையே நாம் இழந்திருப்போம். இந்தத் ‘தேனே’ குறிப்பின் மூலம் இன்னொரு பண்பாட்டுச் சூழலை, நம்பிக்கையை நமக்குக் காட்டுகிறார் நஞ்சுண்டன். அதனால் ஒரு சிறுகதையிலிருக்கும் ‘கதை’யளவுக்கே அதிலிருக்கும் உட்குறிப்புகள், பண்பாட்டுப் பின்புலக் குறிப்புகள் மிகவும் முக்கியமானவை என்ற புரிதல் கொண்ட நல்ல மொழிபெயர்ப்பாளராகத் திகழ்கிறார் இவர்.