மகரந்தம்

மேதாவிகளும் சமூகமும்

த எகானமிஸ்ட் பத்திரிகை பொதுவாக ஒரு வலதுசாரிப் பத்திரிகை. தேய்ந்து வரும் பிரிட்டிஷ் நாட்டின் சென்ற நூற்றாண்டு மகிமைகளின் எச்ச சொச்சங்களில் பிபிசி நிறுவனமும், இந்தப் பத்திரிகையும், டைம்ஸ் ஆஃப் லண்டனும் சில நிறுவனங்கள். இப்பத்திரிகை பொதுவாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றித் தொடர்ந்து தன் பக்கங்களில் எழுதும், பழைய ஏகாதிபத்திய நாட்டுக் கடமைகளில் இது ஒன்றாக இருந்திருக்கும். இன்று பிரிட்டிஷ் பார்வைக்கு என்ன பெரிய மவுசு இருக்கப் போகிறது? எனவே இந்தப் பத்திரிகை சமீபத்து வருடங்களில் ஆசியப் பார்வைகளுக்குக் கொஞ்சம் இடம் கொடுக்கத் துவங்கி இருக்கிறது, இருந்தாலும் பழைய யூரோப்பிய மமதை எல்லாம் போய் விட்டது என்று சொல்லி விட முடியாது. இந்த வலது சாரிப் பத்திரிகையின் வாசகர்கள் உலகத்து இங்கிலீஷ் வழிப் படிப்பை மையமாகக் கொண்ட எலீட் எனப்படும் பெருநகர மேல்தட்டு மனிதர்களாகவே இருக்க வாய்ப்புண்டு. ஆனால் உலக வலை வடிவில் நிறைய சாமானியர்களும் சிறுநகர வாசகர்களும் படிக்கிறார்கள். இந்தப் பத்திரிகை சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. தலைப்பு உலக எலீட்கள் உலக மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்களா அல்லது சுரண்டி இருக்கிறார்களா என்பதாக. குறிப்பாக உலக நிதி நிறுவன எலீட்கள் மீது கவனம் செலுத்தப்பட்ட விவாதத்தில் இந்தப் பத்திரிகை தன் மூல நிலையை வெளிப்படுத்தியது- இது அது வாசகர் முன் வைத்த வாசகம், ‘This house believes the global elite serve the masses’. கேட்கும்போதே சிரிக்கச் சொல்லும் இந்த வாசகத்தை வாசகர் முன் வைத்து வாக்களிக்கக் கோரியது. 10 நாட்கள் வாக்களித்த வாசகர்களில் 84% பேர் இல்லை என்று வாக்களித்துள்ளார்கள். இந்த சர்ச்சை குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

http://www.economist.com/debate/overview/195&fsrc=nwl

சீனா : பசுமை ஆற்றலா? பகல் கனவா?

சீனா அமெரிக்காவைக் காட்டிலும் அதிக அளவில் காற்றாடிகளை நிறுவி பசுமை ஆற்றல் போட்டியில் முன்னணியில் இருப்பதாக ஒரு பெரிய பாவ்லா காட்டியது. ஆனால் உண்மை என்ன? இந்த பசுமை ஆற்றல் விளம்பர மாயையை மீறி உள்ளே சென்று நோக்கினால் தெரிவது மற்றொன்று. பகட்டு விளம்பரங்களும் பகல் கனவுகளும் ஆற்றலை காற்றிலிருந்து பெற்றுத்தந்திட இயலாது.

http://blogs.worldwatch.org/revolt/beyond-the-numbers-a-closer-look-at-china%E2%80%99s-wind-power-success/

ஒரு தமிழனின் மைக்ரோபிராசசர் புரட்சி

கணிணி குறித்த பரிச்சயம் உள்ளவர்களுக்கு மைக்ரோபிராசசர் குறித்தும், தகவல்களை அது கையாளும் முறையும் தெரிந்திருக்கும். பயனர் கொடுக்கும் கட்டளைகளை செயல்படுத்த மைக்ரோபிராசசர் அவசியம். தனக்கு உடனே தேவைப்படக்கூடிய தகவல்களை மட்டும் அருகே இருக்கும் நினைவுசில்லில் வைத்துக் கொள்ளும். மற்றவை சற்று தள்ளியிருக்கும். பிராசசருக்கும் மெமரிக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்ற அளவே கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கறது. பிரதி பத்து வருடங்களுக்கு கணிணியின் வேகம் பல மடங்கு அதிகரிக்கிறது. இதற்கு டிரான்சிஸ்டர் (transistor) தொழில்நுட்பத்தின் முன்னேற்றமே காரணம். ஆனால் இந்த தொழில்நுட்பம் தனது உச்சத்தை அடைந்துவிட்டால், கணிணியின் வேகத்தை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் அதிகரிக்க முடியாமல் போகும். டிரான்சிஸ்டர் தொழில்நுட்பம் கூடிய விரைவில் தனது உச்சத்தை அடைந்தவிடும். ஆனால் மனிதனின் தேவைக்கு அளவு ஏது? மனித குலத்தின் தேவை வளர வளர, அதற்கு ஈடுகொடுத்து கணிணியின் வேகமும் வளர வேண்டும். இல்லையேல், எளிய மனிதர்களுக்கான நுகர்வோர் மின்ணணுவியல் துறை முதல் பெரும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அறிவியல் துறை வரை, பல்வேறு தளங்களில் பெரும் தேக்கம் ஏற்படும். அதனால், வேறு வழியே இல்லை, கணிணியின் வேகம் அதிகரித்தபடி இருக்க வேண்டும். ஆனால் எப்படி? கணிணி வல்லுநர்கள் முன்வைக்கப்பட்ட சவால் இது. பலரும் இந்த சவாலை ஏற்றனர். சமீபத்தில் திரு.பார்த்தசாரதி என்பவரின் ஆராய்ச்சி ஒன்று இதற்கான விடையை முன்வைத்துள்ளது. மேலும் அறிய இதை படியுங்கள் :

http://www.nytimes.com/2011/03/01/science/01compute.html?_r=1&pagewanted=all

மிஸ்டர்.ஷெர்லாக் ஹோம்ஸ், நீங்கள் வீட்டுக்குப் போகலாம்…

உண்மைதான். ஹோம்ஸுக்கு இனி பெரிதாக வேலையொன்றுமில்லை. மனிதர்களின் ரகசிய நடவடிக்கைகளை கண்காணிக்க, பல்வேறு ஆவணங்களை அலசி அராய்ந்து ஒரு முடிவிற்கு வர அவரோ, அவரை போன்றவர்களின் குழுவோ தேவையில்லை. ஒரே ஒரு மென்பொருள் போதும். மனிதர்களின் செயல்பாடு கணிணி இல்லாமல் நடைபெறுவதில்லை. கணிணியில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவும் பதிவாகின்றன. நீங்கள் நிச்சயம் உங்களை அறியாமலேயே தடயங்களை விட்டுச் செல்வீர்கள். அந்த தடயங்கள் போதும், இந்த மென்பொருள்கள் உங்களை காட்டிக் கொடுத்துவிடும். ஜாக்கிரதை!

http://www.nytimes.com/2011/03/05/science/05legal.html?hp

மரபைக் காத்தல்

இது ஒரு பிரமாதமான ஐடியா- சோதனை நடத்த. நாம் அவ்வப்போது கேட்டிருப்போம். ஏதோ ஒரு புத்தகமோ, இசைத் துண்டோ, கீர்த்தனையோ, கவிதையோ, ஏன் பல ‘புனித’ நூல்களோ எல்லாம் துவக்கத்திலிருந்து துளிக்கூட மாறாமல் ஆயிரம் வருடங்களாக அப்படியே நமக்கு வந்து சேர்ந்திருக்கின்றன என்று. பொது அறிவோ, துலக்கும் அறிவோ இருந்தால் இது எப்படி ஒரு அசாத்தியமான விஷயம் என்பது நமக்குப் புரிந்திருக்கும். அப்படி ஒரு நடக்கவியலாத விஷயம் என்பதால்தான் மேற்படி நபர்கள், சமூகங்கள், மதகுருமார்கள் போன்றாரெல்லாம் அது நடந்ததாகச் சாதிக்கிறார்கள். இல்லாவிடில் சாமானியரை எப்படிப் பணிய வைப்பது? இங்கு ஒருவர் ஒரு சிறு பரிசோதனை செய்கிறார். ஒரு நபரை ஒரு நேர்கோட்டை வரையச் சொல்கிறார். அடுத்தவர் அதன் மீது ட்ரேஸிங் செய்து ஒரு கோடு வரைய வேண்டும். மூன்றாமவர் இரண்டாமவரின் கோட்டை நகல் செய்ய முயல்வார். இப்படி அடுத்தடுத்த நபர்கள் தமக்கு முந்தைய நபரின் கோட்டை மட்டும்தான் பார்த்து நகல் செய்கிறார்கள். 500 பேருடைய முயற்சிகளைத் தொகுத்து ஒரு வீடியோவாகக் காட்டுகிறார்கள். பாருங்கள் எந்த மரபைபயும் பாதுகாப்பது எத்தனை பெருங்கடினமான விஷயம் என்பது புரியும்.

A Sequence of Lines Traced by Five Hundred Individuals from clement valla on Vimeo.