“An unexpected but welcome shower caught the dry city by surprise on Monday late evening. There were reports of unscheduled power cuts in Koramangala, Viveknagar, Bannerghatta and MG Road for 6 to 8 hours. In some areas, power wasn’t restored till late at night” — டைம்ஸ் ஆப் இந்தியா, சென்ற வார செவ்வாய்கிழமை செய்தி..
பிப்ரவரி மாதம் பெங்களூரில் மழை பெய்யாது. ஆனால் போன திங்கட்கிழமை யாருக்கும் சொல்லாமல் மழை வந்துவிட்டது. அன்றிரவுதான் திவ்யா அலுவலகத்திலிருந்து புறப்பட்டாள். இரவு இல்லை; விடியற்காலை 2:35.
அமெரிக்க இன்ஷூரன்ஸ் கம்பெனி பேக் ஆபிஸ் வேலை. ஹெப்பால் பக்கம் ஒரே மாதிரி இருக்கும் பல கட்டிடங்களில் ஏதோ ஒரு கட்டிடத்தில் இருக்கிறது அவளது அலுவலகம். வெளியே வந்து பார்த்தபோது, டாட்டா சூமோ அணிவகுப்பு வெளிச்சத்தில் மழை மத்தாப்பு மாதிரி பெய்துகொண்டு இருந்தது. தன்னுடைய வண்டியைக் கண்டுபிடித்து, கைப்பையை தற்காலிகக் குடையாக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக வண்டியில் ஏறிக்கொண்டாள். காலை செய்த அலங்காரம் கொஞ்சம் மீதி இருந்தது. கதர் மாதிரி துணியில் வெள்ளை நிற குர்த்தா. கணுக்கால் தெரியும் அளவிற்கு ஜீன்ஸ் அவளின் உடலமைப்பை அவுட்லைன் போட்டு காண்பித்தது. காதில் பிரதான பெரிய வளையத்துக்கு மேல் எஸ்டராவாக ஆணி இரண்டு குத்தியிருந்தது. பத்தடி ஓட்டத்தில் நனைத்த மழை டிரேசிங் பேப்பரில் விழுந்த எண்ணை மாதிரி அவளை இன்ஸ்டால்மெண்டில் காண்பித்தது. வண்டியில் அவளுடைய வாசனையும் பரவத் தொடங்கியதும்.
“வாங்க மேடம்… மழை திடீர் என்று.. ” என்றான் மஞ்சுநாத்.
மஞ்சுநாத் அவளை தினமும் பனர்கட்டா சாலையில் மீனாக்ஷி கோயிலுக்கு பக்கம் இருக்கும் ஹுல்லிமாவு என்ற இடத்தில் அவளது வீட்டில் விடும் டிரைவர். எஃப் எம் போட்டுவிட்டு, ரியர் மிரர் வியூவை சரிசெய்து பார்த்த போது திவ்யா போட்டிருந்த உள்ளாடை மீது அவன் கண்கள் சில வினாடிகள் அதிகப்படியாகத் தங்கியது. திவ்யா செல்பேசியில் பேசிக்கொண்டு ஒரு சாக்லெட் பட்டையை தின்றுகொண்டு இருந்தாள்.
“ஹாய் ராக்ஸ்.. யா.. ரெயினிங்..”
“….”
“யா.. “(சிரிப்பு).. ஷக்ஸ்.. நோ சார்ஜ்” என்று சொல்லிவிட்டு சாக்லெட்டை இன்னொரு கடி கடித்தாள்.
பின்னாடி வண்டிகள் ஹார்ன் சத்தம், மழை என்று பரபரப்பு சூழ்ந்துக்கொள்ள, செக்யூரிட்டி ஒரு கையில் குடையுடன் முன்னால் வந்து ஏதோ பேப்பரில் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கும்போது பின்னால் ஹார்ன் சத்தம் அவசரப்படுத்த, பெண் ஊழியர்களை தனியாக அழைத்துப் போகக்கூடாது என்ற விதிமுறை அன்று மீறப்பட்டது.
வண்டி அவுட்டர் ரிங் ரோடுக்கு வந்து போது, ரியர் மிரர் வியூவில் திவ்யா அந்த சாக்லேட்டை சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். மஞ்சுவின் பார்வை மேலும் அவளை ஆக்ரமித்தது. தன்னைப் பார்ப்பதை கவனித்து, சாக்லெட்டைக் கொஞ்சம் உடைத்து, “மஞ்சு ..இந்தா.” என்று நீட்டினாள். வண்டியை ஓட்டிக்கொண்டே இடது கையை பின்பக்கமாக நீட்டி வாங்கிகொண்ட போது, சாக்லேட்டைப் பிடிப்பதற்குமுன் அவள் கையைப் பிடித்தான். இந்தச் சின்ன விதிமீறல் அவளுக்குத் தப்பாகத் தெரியவில்லை.
சாக்லேட்டில் உள்ள குளூக்கோஸ் அவள் உடம்பில் உள்நோக்கி ஓட்டம் எடுக்க, ஹென்னூர் தாண்டியவுடன் திவ்யாவிற்குத் தூக்கம் வந்தது. பின் சீட்டில் சாய்ந்துக்கொண்டாள். மழை சத்தம் போட ஆரம்பித்தது. எஃப் எம் ரேடியோவின் ஒலி அளவைக் குறைத்துவிட்டு, பின்பக்கம் பார்த்தபோது திவ்யாவின் சட்டை மேல் நோக்கி டைட் சோப் விளம்பரம் மாதிரி அந்த இடம் மட்டும் பளிச் என்று தெரிந்தது. சர்ஜாப்பூர் தாண்டியவுடன்… மஞ்சு முடிவு செய்துவிட்டான்.
மார்த்தஹல்லி வரும் போது திவ்யா நல்ல தூக்கத்தில் இருந்தாள். சர்ஜாப்பூர் சந்திப்பு வந்த பின்னார் வண்டி வழக்கமான பாதையில் போகாமல் ஏதோ ஒரு சந்தில் திரும்பிப்போக ஆரம்பித்தது. இடையில் ஒரு மின்கம்பத்தில் பொறிகள் கிளம்ப, சாலை சடாரென இருட்டுப் போர்வை போர்த்திக்கொண்டது.
செந்தில் சுக்காம்பட்டி பக்கத்தில் இருக்கும் மூவானூரிலிரிந்து பெங்களூருக்குக் கிளம்பும்போது மணி ஒன்பது. மூவனூரிலிரிந்து பெங்களூருக்கு பஸ் கிடையாது, பக்கத்து வீட்டு வேலுவின் டிவிஎஸ் 50ல் முசிறிக்கு வந்து அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து சேலம் வரவேண்டும். சேலத்திலிரிந்து பெங்களூர் பஸ் பிடித்து சில்க் போர்டில் இறங்க வேண்டும். பிறகு அவன் தங்கியிருக்கும் பி.ஜிக்குப் போக வேண்டும். செந்திலுக்கு எல்லாம் புதுசாக இருந்தது. பெங்களூருக்கு பஸ் பயணம் புதுசு. போன தடவை ரயில் பயணம். அவன் கையில் இந்த லாப்டாப், செல்பேசி, வேர்க்கடலை கூட புதுசுதான் வேர்க்கடலை போன வாரம் அவர்கள் நிலத்தில் விளைந்தது. அம்மா வறுத்து பிளாஸ்டிக் பையில் கட்டியிருந்தாள். லாப்டாப் பெங்களூரில் ஒரு ஐ.டி கம்பெனியில் போன வாரம் அவன் வேலைக்குச் சேர்ந்தபோது கொடுத்தார்கள். அப்பா, அம்மாவுடன் ஊரே திரண்டுவந்து பார்த்துவிட்டு தொடுத்த, “எம்புட்டு இருக்கும்?” போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பும் போது, அப்பா போன வாரம் இன்ஸ்டால்மெண்டில் வாங்கிய செல்பேசியைக் கொடுத்தார். ஊருக்கு போய் கனக்ஷன் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
பெங்களூருக்கு முதல் தடவை பஸ்ஸில் பயணம்; அதற்குப் பிறகு எப்படிப் போக வேண்டும் என்ற பயத்தினால் தூக்கம் வரவில்லை. ஓசூர் வந்தபோது பயத்துடன் மழையும் சேர்ந்துக்கொண்டது. “சில்க்போர்டில் இறங்கி பி.டி.எம் வாட்டர் டாங் என்று சொல்லி ஆட்டோ பிடித்து வா” என்ற ஒற்றை வாக்கியத்தை நம்பி சில்க்போர்ட்டில் இறங்கிய போது அதிகாலை 3:15 மணி இருக்கும். ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டது என்று தோன்றியது. மழையினால் சாலை அலம்பிவிட்ட மாதிரி பளபளத்தது. தூரல் கொஞ்சம் பலமாக அடிக்கத் துடங்கியது.
கூட்டமாக ஆட்டோ டிரைவர்கள் சூழ்ந்துக்கொண்டு “எங்கே போகனும்” என்று மாறி மாறி கன்னடம், ஹிந்தியில் கேட்க..
“பி.டி.எம்”
“போகலாம், 200 ரூபாய் தாங்க.” என்றார் தமிழ் கொஞ்சம் தெரிந்த ஒரு ஆட்டோ டிரைவர்.
செந்திலிடம் மொத்தம் ஆயிரம் ரூபாய் தான் இருந்தது. அதிர்ச்சியில் பேசாமல் இருக்க இன்னொரு ஆட்டோ பக்கத்தில் வந்து 180 என்றது.
செந்தில் பெங்களூர் வருவது இது இரண்டாம் முறை. சென்ற வாரம் வேலைக்கு முதல்முறை ரயிலில் அப்பாவுடன் வந்துவிட்டான். இந்தமுறை பஸ்ஸில் மூவானூரிலிருந்து வந்த செந்திலுக்கு கன்னடம், ஹிந்தி தெரியவில்லை, தன்னுடைய சுமாரான ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தது. என்ன செய்யலாம் யாரிடம் கேட்கலாம் என்று திகைத்தான்.
“ஹாய்” என்று குரல் கேட்டு திரும்பிய போது ஒரு பைக் அவன் பக்கம் வந்து நின்றது. ஹெல்மெட் கண்ணாடியை மேலே தூக்கிவிட்டு “நான் பி.டி.எம் தான் போகிறேன் … ஐவில் டிராப், பின்னாடி ஏறிக்கோ” என்றான் அதை ஓட்டியவன்.
“நன்றி” என்று ஆட்டோபடையிடம் தப்பித்த சந்தோஷத்தில் செந்தில் பின்னாடி ஏறிகொண்ட போது பைக் நேராகச் சென்று இடது பக்கம் பி.டி.எம் போகும் பாதையில் திரும்பாமல் வலது பக்கம் சர்ஜாப்பூர் நோக்கிச் சென்றது.
மஞ்சு வண்டியை நிறுத்திவிட்டு கொஞ்சம் தள்ளிப் போய் ஒன்றுக்குப் போகும்போது யாரிடமோ செல்பேசியில் கன்னடத்தில் ஏதோ பேசிவிட்டு தீர்மானித்தவனாக வந்து ஹெட்லைட்டை அணைத்துவிட்டு வண்டியை ஓட்டத் தொடங்கினான். திவ்யா தூங்கிக்கொண்டு இருந்தாள்.
செந்திலுக்கு ஒரே வாரத்தில் பெங்களூரைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. மத்தியானம் வெயில், இரவு குளிர், சர்க்கரை சாம்பார் என்று எல்லாம் புதிதாக இருந்தது. கொஞ்சம் தூரம் சென்று பைக் நின்றது. இன்னொருவன் செந்திலுக்கு பின் ஏறிக்கொண்டான். அவனும் “ஹாய்” என்றான்.
“செந்தில்…” என்று அறிமுகம் செய்துக்கொண்டான்.
கொஞ்சம் தூரம் போன பிறகு நீல நிறப் பலகையில் பி.டி.எம் என்று எதிர் திசையில் அம்பு குறி போட்டிருக்க சந்தேகத்துடன், “நான் பி.டி.எம் போகணும், நீங்க எங்கே போறீங்க” என்றான். வயிற்றில் லேசாகக் குழப்பமும் கலவரமும் புரண்டு எழுந்தது.
பின்னாடி இருந்தவன் “பேசாம வா, இல்லை…” என்று பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுத்துக் காண்பித்தான். பைக் ஒரு சந்தில் திரும்பியது. மழை கொஞ்சம் அதிகமாகியது.
செந்தில் ஊர் ஐயனாருக்கு கிடா வெட்டுவதாக வேண்டிக்கொண்டான். பைக்கிலிரிந்து குதித்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
திவ்யா திடீர் என்று தூக்கத்திலிருந்து எழுந்து ஜன்னல் வழியாகப் பார்த்து, “என்ன ரூட்டு இது ?” என்றாள்.
“சர்ஜாப்பூர் பாலம் வேலை..திருப்பிவிட்டார்கள்..” என்ற பதிலைக் கேட்டு திவ்யா திரும்பவும் தூங்க ஆயத்தம் ஆனாள். மஞ்சு இதற்கு மேலும் தாமதிக்க கூடாது என்று முடிவு செய்தான்.
திருப்பத்தில் பைக்கின் வேகம் கொஞ்சம் குறைவானதும் செந்தில் குதித்தான். அவன் குதித்ததை எதிர்ப்பார்க்காத அவர்கள் நிலை தவறி சறுக்கி விழ, ஒளி இல்லாமல் வந்த சுமோ அவர்களைத் தட்டிவிட்டுச் சென்றது. பைக் சின்னதாக உறுமிவிட்டு நின்று போனது. இருவரும் கீழே கிடந்தார்கள். மழை மேலும் கொட்டத் தொடங்கியது.
“என்ன ஆச்சு?” என்றாள் திவ்யா
“ஒன்னுமில்ல மேடம் குறுக்கே நாய் ….”
மஞ்சு கொஞ்சம் தூரம் சென்றதும் தயங்கி, நிற்க முயற்சித்துவிட்டு… இதற்கு மேல் இங்கே இருந்தால் ஆபத்து என்று மெயின் ரோடை நோக்கித் திரும்பினான் ஹுல்லிமாவுக்கு.
அம்மா கொடுத்து அனுப்பிய கடலை சிதறியிருந்தது. கீழே கிடந்த லாப்டாப் பையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது, இடித்த வண்டி மெயின் ரோட்டில் திரும்பிக்கொண்டிருந்தது. எங்கோ வந்த லாரியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் “Praise the Lord” என்ற வண்டி பின்புறம் இருந்த ரிஃப்லெக்டர் ஸ்டிக்கர் சில விநாடிகள் ஒளிர்ந்தது.