தளவாய்ப்பேட்ட சந்தையும், மேலாண்மை உத்தியும்

கொங்கு நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை ஒரு விசேடமான நாள். திங்கள் முதல் சனி வரை சுதந்திரமாய் வேலிகளில் பிரண்டைக்கொடி தின்று மகிழ்ந்த ஆடுகளில் சில அன்று கடைகளில் தோலிழந்து தலை கீழாய்த் தொங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலோனோர் கறி என்று கடைக்காரர் வெட்டித் தருவதை சமைத்து உண்பர். செவ்வியல் ரசிகர்கள் தலை, காது, ஈரல், குடல், கால், தொடை என்று பார்த்து வாங்கி, சமைத்து ருசித்து உண்பர்.

தளவாய்ப்பேட்டையில் இருந்த காலத்தில் எனக்கு, செவ்வாய்க்கிழமையும் ஒரு விசேட நாளே. அன்றுதான் எங்களூரில் சந்தை. தேங்காய்கள், கருவேப்பிலை, கீரை, தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை அம்மாவும், பண்ணையாள் கிறுக்கனும் தலையில் சுமந்து சென்று விற்று வருவர். சுமை அதிகமாக இருக்கும் காலங்களில், அப்பா சைக்கிளில் ஒரு கூடையைக் கட்டிச் சந்தை வரை கொண்டுபோய்க் கொடுத்து வருவார். நானும், எங்கள் ஜிம்மி நாயும் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு செல்வோம். “நானுஞ்சந்தைக்கு வர்ரேன்.. நானுஞ்சந்தைக்கு வர்ரேன்” என்று முகாரி . ஆலாபனையும் உண்டு. எங்கள் காட்டில் இருந்து ஊர் எல்லை வரைச் செல்லத்தான் அனுமதி. அதற்கு மேல், அம்மா எங்களை “ஊட்டுக்குப் போங்கடா” என்று துரத்தி விடுவார். நான் அழுதுகொண்டே திரும்புவேன். எல்லை தாண்டினால் தம் குலத்தார் தமக்கு நிகழ்த்தி மகிழும் வன்முறைப் பூசையை பலமுறை அனுபவித்திருந்ததால், ஜிம்மி சந்தோஷமாகத் திரும்பி வந்துரும்.

local_market

ஒவ்வொரு வாரமும் நடந்த எனது ஒப்பாரி ஒரு செவ்வாய், அம்மாவின் கல்மனதைக் கரைத்துவிட்டது. ஒரு நாள், “சரி வந்து தொலை” என்று சொல்லிவிட்டார்கள். ஜிம்மியினால் நம்ப முடியவில்லை. “பாத்துப் போடா தம்பி, யாராவது கடிச்சிரப் போறாங்க” என்று கரிசனத்தோடு பார்த்தது. பின் திரும்பிவிட்டது. பின்னெ கண்ட நாய்களுக்காக ரிஸ்க் எடுக்க ஜிம்மி என்ன முட்டாளா?

சந்தை ஒரு புழுதி மேட்டில் களேபரமாக மூடிய பெரும்பலூன் போல இருந்தது. ஓரத்தில் பொம்மை வியாபாரிகள். பம்பாய் மிட்டாய் விற்பவர்கள். ஐஸ் வண்டிக்காரர்கள். உள்ளே, தானிய வியாபாரிகள். மோர்க்காரிகள். பொரிக்கடைகள். காய்கறிக் கடைகள் என்று… வெள்ளை வெளரென்று, முழங்கை வரை நீண்ட சட்டையணிந்த பெரிய மோளபாளைய மணியக்காரர் ஒவ்வொரு கடைக்கும் போய், சந்தைக்கடை வசூல் செய்து கொண்டிருந்தார். அதற்கான உரிமையை அவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார் என்று அம்மா விளக்கினார். அந்த வேலை நல்லாயிருக்கேன்னு பட்டது.

அம்மாவும், கிறுக்கனும் கூடையை இறக்கி வைத்தனர். சாக்குப்பையை விரித்து, தேங்காய், தக்காளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருவேப்பிலை என்று ஒவ்வொன்றையும் வரிசையாக அடுக்கினர். விற்பனை துவங்கியது. தக்காளி வியாபாரிகள் எட்டணா, எட்டணா என்று கூவிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் வாயினால் ஒரு வித்தியாசமான ஒலியை ஏற்படுத்தி எல்லோரையும் திகைக்க வைத்தார். தூரத்தில் எங்கோ ஒண்ணார் ரூவா ஒண்ணார் ரூவா என்று சத்தம். ஆனால் அம்மா ஒரு சத்தமும் போடாமல் சும்மா இருந்தார். சிலர் வந்து வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

நான் போய் அம்மாவிடம், “நாமுளும் சத்தம் போடலாம்மா…” என்றேன். அம்மா, “சும்மாரு கண்ணு… அதெல்லாம் வேவாரிங்க பண்ற கூத்து. நம்மகிட்ட வாங்கறவீங்க வந்து வாங்கீட்டுப் போவாங்க” என்றார். அம்மாவுக்கு வியாபார அறிவு கொஞ்சம் பத்தாதுன்னு தோணுச்சு. கருவேப்பிலைக் கட்டை எடுத்துக்கொண்டு, “ரூவாய்க்கு நாலு… ரூவாய்க்கு நாலு”ண்ணு கத்தணும் போல ஆசையா இருந்துச்சு. கத்தட்டுமான்னு கேட்டேன். “வாய மூடிட்டு இர்றா… இம்ச பண்ணாத. இதுக்குத்தான் ஒன்னய ஊட்டுலேயே இரு, வர்றையில ரெண்டுப்புப் பொரி வாங்கீட்டு வர்றேன்னு சொன்னனுல்ல?”

கொஞ்ச நேரம் சும்மாயிருந்தேன். தொலைவில் ஒரு பெண் கருவேப்பிலைக் கட்டுக்களைக் கையில் எடுத்துக்கொண்டு போய் போவோர் வருவோரிடம் காண்பித்து விற்றுக்கொண்டிருந்தாள். இனி பொறுப்பதில்லை தம்பி என்று திரும்பி, “அம்மா… அம்மா, நானும் போயி, அந்தப் புள்ளையாட்டமா விக்கிட்டுமா?” என்று தொணதொணத்தேன். “ஏண்டா இப்புடி லொம்மா லொம்மான்னு இம்ச பண்றே? போயித் தொல” என்று சொன்னதும், நாலு கட்டு கருவேப்பிலையை எடுத்துக்கொண்டு பறந்தேன். எதிர்ப்படும் மனிதரிடமெல்லாம்’ “ரூவாய்க்கு நாலு. ரூவாய்க்கு நாலு”. அவர்களுக்கு வாங்க இஷ்டமா என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.. “ரூவாய்க்கு நாலு. ரூவாய்க்கு நாலு” என்று கத்திக் கொண்டிருந்தேன். உலகின் மிகச் சிறந்த வேலையொன்றைச் செய்து கொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன்..

திடிரென்று ஒருத்தர், “தம்பி அஞ்சு தருவியா”ன்னு கேட்டார். அந்த வாக்கியம் என் தலைக்கு மேலே பறந்து சென்றது. எனக்கொண்ணும் புரியல. ”அப்பிடீன்னா?” என்று கேட்டேன். “தம்பி ரூவாய்க்கு நாலு சொல்றையில்லோ… அஞ்சு கட்டுக் குடு’ன்னார். “குடுத்தா வாங்கிக்குவீங்களா”ன்னு கேட்டேன்.

“வாங்கிக்கிறனப்பு” என்றார்.

”இருங்க.. எங்கம்மாட்டச் சொல்லீட்டு வர்றே”ன்னு ஓடினேன்.

அம்மா எரிச்சலாயிருந்தார். ஏதோ ஒரு படியாத பேரமாக இருந்திருக்க வேண்டும். அன்று எனக்குப் புரிந்திருக்க நியாயம் இல்லை.

”அம்மா…”

“என்றா?”

“அங்கொரு ஆளு ரூவாய்க்கு அஞ்சு கேக்கறாரு”ன்னு.

பொட்டென்று ஒரு அடி விழுந்தது பொடனியில். “கட்ட சாக்குல வெச்சிட்டு பேசாம ஒக்காரு, டேய் கிறுக்கா…” கண்ணீர் சிந்தி ஒப்பாரியைத் துவங்கினேன்

“ஏனுங்” கிறுக்கன் ஓடி வந்தான்..

“இந்த நாயிக்கு ஒரு ஐஸ் குச்சி வாங்கிக் குடு”

“ஐஸைத் திண்ணுபோட்டு, பொட்டாட்டம் இருக்கோணும்… விக்கறம் கிக்கறம்னே கொண்ணு போடுவன்”

அந்த அஞ்சு கட்டு கேட்ட ஆள் அங்க இருப்பாரேன்னு சொல்லலாமுன்னு அம்மாவைப் பாத்தேன். பார்வையிலேயே வால் காலுக்குள் போயிடுச்சு. ஐஸ் குச்சி கெடைக்கறதும் கெட்டுப் போய்ரும்னு மூச்சுக் காட்டாம இருந்துட்டேன். கொஞ்ச நேரத்தில் எல்லாம் விற்றுவிட, ரெண்டுப்புப் பொரி ரெண்டு பக்கா வாங்கிக் கொண்டு ஊட்டுக்குப் போனோம். ஜிம்மிக்குப் பொரி ரொம்பப் புடிக்கும்.

dee-bargaining

பின்னர் மேலாண்மை படித்து வேளாண் பொருள் வணிகனானேன். (commodity trader). எண்ணெயும், பருப்பும், கோதுமையும் சக்கரையும் வாங்குதல் பற்றிக் கொஞ்சம் அறிவேன். அப்படீன்னு நம்பி ஒரு பெரும் நிறுவனம் வேலை கொடுத்திருந்தது. பொருள் வணிகம், வாங்குதல் என்னுமொரு நிறுவன வேலையில் தனித்துவமானது. அதாவது வேளாண் வணிகச் சந்தையில் அதிக பேரங்கள் கிடையாது – உலகச் சந்தைகளை நோட்டமிட்டு, எங்கே எவ்வளவு உற்பத்தி, எங்கே எவ்வளவு நுகர்வு என்றெல்லாம் கணித்து, சரியான நேரத்தில் வாங்குவது என் வேலை. இங்கே தகவல்களை பீராய்ந்து, ஆராய்ந்து முடிவெடுத்தலே திறன். எனக்கு, வாங்கும் தொழிலின் இறுதிக் கட்டமான பேரம் பேசுதல் என்றாலே ஒரு ஒவ்வாமை. முடிந்த வரை அதை மற்றவர்களிடம் என் தலைவரிடம் விட்டு விடுவேன். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக்கூட, கார் நிறுத்தும் வசதி கொண்ட விற்பனையகங்கள் சென்று, எனக்குப் பிடித்த பொருட்களை, அவர்கள் சொன்ன விலையில் வாங்கி வருவேன். காதுவழியே நீராவி வருமளவுக்குக் கோபப்படும் மனைவியிடம், என்ன விலையில் வாங்கினோம் என்பதை விட, எவ்வளவு நல்ல பொருளை வாங்கினோம் என்பதே முக்கியம் என்று சமாளிப்பேன். ஆனால் விதி வலிதல்லவா?

இன்னொரு கம்பெனி ஒரு நாள் எங்கள் குழுமம் மொத்தத்துக்கும் ஒரு பொதுமேலாளர் வேண்டும்; எல்லாவற்றுக்கும் தேவையான பொருட்களை வாங்கித்தரும் ஒரு பிரிவுக்குத் தலைவராக… வருகிறீர்களா? என்றது, அது சொந்த ஊருக்கு அருகில் இருந்ததால், ஒரு சபலத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அங்கே வேளாண் பொருட்களோடு, வேதிப் பொருட்கள், பாட்டில்கள், லேமினேட்ஸ், இயந்திரங்கள் முதலானவற்றை வாங்க வேண்டும். இதில் பேரம் பேசுவதென்பது மிக முக்கிய அங்கம். மாட்டிகிட்டோமேடா என்று துணிந்த பின் எண்ணினேன் கருமம்.

புது நிறுவனத்தில், என் குழுவில் இருந்த சஹ்ருதயர்கள் க.தோ.மு.தோ காலத்தில் இருந்து வாங்குபவர்கள். விற்க எந்த ஆள் வந்தாலும், உடனே அவனை வன்புணர்வு செய்யத் துவங்கிவிடுவார்கள். ஆனால், விற்க வருபவர்களோ எமகாதகர்கள் அல்லவா? இரண்டு ரூவாய்ப் பொருளை பத்து ரூவாய் சொல்லி, ஆபீஸ் முடிந்து அரை மணி நேரம் வரை பேரம் பேசி (அதுக்கு மேலே லேட்டாப் போனா, மாமி இவருக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுவார்), ஐந்து ரூவாய்க்கு விற்றுப் போவார். பேரம் முடித்து வரும் சஹ்ருதயரின் முகத்தில் பொலியும் மகிழ்ச்சியும், மமதையும் கண்டங்களை வென்ற மன்னர்களுக்கே உரித்தானது.

பொருட்களை விற்கும் ஆட்கள் வந்த உடனேயே பேரம் பேசத் துவங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. எடுத்த உடனே மூன்று பெருக்கல் குறிக் கலைப் படம் போல இடுப்புக்குக் கீழே துவங்குவது தவறு என்று ஒரு நகைச்சுவை கலந்து சொல்லிப் பார்த்தேன். “பின்ன எப்படி ஸார், கொழந்த பொறக்கும்”னு பதில் வந்தது. “அது இல்லீங்க, நமக்குப் பொருள் தரும் நிறுவனத்தின் இன்றைய நிலை என்ன, சென்ற வருடம் நம்மிடம் அவர் செய்துள்ள தொழிலின் மதிப்பு, தரம், சேவை – இவை பற்றிய தகவல்களை முதலில் ஆராய வேண்டும்.. பின்னர், நமது தொழில் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்ற ஒரு மதிப்பீடு வேண்டும் – இவற்றையெல்லாம், ஒரு அறிக்கையாகத் தயாரித்த பின்பே பேரம் பேசுவது சரியாக இருக்கும்” என்றேன். “அதெல்லாம், இந்தக் கம்ப்யூட்டர்ல இருக்கு ஸார்” என்று தலையைச் சுட்டி, பதில் வந்தது.

இவை இறுகிய மட்டைகள். ஊற வச்சித் தொவச்சாத்தான், கயிறு திரிக்க முடியும். அடுத்த நடவடிக்கை – பயிற்சி. இவர்களுக்குப் பயிற்சியளிக்கு முன், நான் பயிற்சி எடுத்துக் கொள்ள முடிவெடுத்தேன். மிகக் கவனமாகச் செய்ய வேண்டிய விஷயம்.

என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். நண்பரிடம் கேட்டேன். ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு வெண் தோல் நிபுணி அடுத்த மாதம் வருகிறார். அவர் பேரம் பேசும் அறிவியலில் உலகில் மிகச் சிறந்தவர். அவர் ரெண்டு நாட்கள் ஒரு பயிற்சி முகாம் நடத்துகிறார். ஒரு ஐந்து நட்சத்திர ஒட்டலில், ஆட்டுக்கால் சூப் குடித்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டால், இதில் மிக வல்லவனாகி விடுவாய் என்றார். உடனே அவர் பயிற்சியரங்கில் பங்கு கொள்ள சீட்டுப் பிடித்தேன்.

வந்த நிபுணி ஒரு பெரிய ஸ்கர்ட் அணிந்த பாட்டி. பயிற்சியில் பங்கு கொள்ள வந்த அனைவரின் உற்சாகமும் உடனே வடிந்து போனது. “சரி, வேற வழியில்ல. அறிவுப் பசிதான் உலகில் முக்கியம். புக்கைப் பிரிக்கலாம்” என்றார் என்னருகில் இருந்த ஃப்ரெஞ்சுத் தாடியர். ஒன்றை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எதையும் ஒரு சிரத்தையோடு வெளிநாட்டு நிபுணர்கள் செய்யும் பாங்கு. துவக்கத்தில் என்ன ஜோக் சொல்ல வேண்டும் என்பதைக் கூடப் பாட்டி முன்பயிற்சி செய்து வந்திருந்தார்.

ஒரு சின்ன விளையாட்டில் துவங்கி, பேரம் பேசுதலின் பல்வேறு அம்சங்களை விளக்கினார். முதலில் சொன்னது – அடிப்படை உழைப்பு. எந்த ஒரு பொருளை வாங்க வேண்டுமென்றாலும், அதைப் பற்றிய விவரங்கள், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை முதலில் சேகரிக்க வேண்டும் என்றார். இது பாலபாடம். பங்கு பெற்ற எல்லோருமே செய்வதாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஜேம்ஸ் பாண்ட் பட வில்லி மாதிரி சிரித்த அவர் அடுத்து ஒரு புள்ளி விவரம் கொடுத்தார். உலகின் மிகப் பெரும் வர்த்தக நிறுவனத்தில் எடுக்கப்பட்ட வாங்கும் முடிவுகளில், 85% சதத்துக்கும் அதிகமான முடிவுகள், அரைகுறை விவரங்களோடும், மிகக் குறைவான அடிப்படை உழைப்போடும் எடுக்கப் பட்டவை என்னும் ஒரு ஆய்வுத் தகவலைக் கொடுத்தார்.

“பாத்துப் பேசுங்கப்பா. தப்பாச் சொன்னா, பாட்டி வால ஒட்ட நறுக்கிடுவா” என்றார் கழுத்துப் பட்டி துதிக்கை போல் வளைந்து அமர்ந்திருந்த ஒரு பெருந்தொந்தியர்.

”எனவே மதிப்புக்குரிய கனவான்களே, உண்மையை நேர்மையாக எதிர் கொண்டால், கற்றுக் கொள்வது எளிது” என்றார். அரங்கில் அமைதி. முதலாம் சுற்றில் பாட்டி வெற்றி வாகை!

அடுத்த சுற்று – வலிமை. பேரம் பேசும் போது ஒரு வலிமையான தளத்தில் இருந்து பேசுவதே வெற்றிக்கு முதற்படி. பேரம் நடக்கும் தளம், அதன் விதிகள் இவற்றை நிர்ணயம் செய்து கொள்வது வெற்றிகரமான பேரத்துக்கு முதற்படி. எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை விற்க வருபவரின் இடத்துக்குச் சென்று பேரம் பேசுவதை விட, உங்கள் இடத்துக்கு அவரை வர வைத்துப் பேரம் பேசுவது உங்களுக்குச் சாதகமாக இருக்கும். நீரினுள் இருக்கும் முதலையே பலமானது.

“இதைத்தான், என் சிறு வயதில் என் அம்மா, எங்க ஊர்ச் சந்தையில் கற்றுக் கொடுத்தாங்க” என்றேன் உற்சாகமாக.

”எல்லா உன்னதமான விஷயங்களும் எளிதானவைதாம் என் இனிய கனவானே” என்றாள் பாட்டி. அத்துடன் உணவு இடைவேளை.

தெளிந்த கோழிச் சாறைச் சின்னக் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, “சே… எங்கம்மா, நாலணாக் கருவேப்பிலக் கட்டுல சொல்லிக் குடுத்ததக் கேக்காம, இப்போ இருபதாயிரம் செலவு பண்ணிக் கத்துக்கறமே,” என்றேன். ”இருபதாயிரம் செலவு பண்றதாலதான், அவ சொல்றதுக்கு மதிப்புக் குடுக்கறே” என்ற நண்பர், ”எப்பொருள் யார் வாய்க் கேக்கறமோ, அதுக்குத் தக்கனேதான் மதிப்பு?” என்று முடித்தார்.

வெள்ளைக்காரப் பாட்டியின் சொல்வடையையே கடன் வாங்கிச் சொல்வதென்றால், அய்யன் கல்லறையில் ஒரு முறை புரண்டிருப்பார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.