பாலழித்தல்

எழுத்தாளர் ஷங்கரநாராயணன் வருடம் ஒருமுறை ‘இருவாட்சி’ என்றொரு இதழைக் கொண்டுவருகிறார். இப்புத்தகம் பொங்கல் சமயத்தில் வெளியாகிறது. இதுவரை இரு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. பல தேர்ந்த எழுத்தாளர்களின் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பாக இப்புத்தகம் இருக்கிறது. அசோகமித்திரன், ஞானக்கூத்தன், சு.வேணுகோபால், நாகரத்தினம் கிருஷ்ணா, சுப்ரபாரதிமணியன் ஆகியோர் இப்புத்தகத்தை வளமாக்கியிருக்கும் படைப்பாளிகளில் சிலர். இப்புத்தகத்தில் வெளியாகியிருக்கும் ஜெயந்தி சங்கர் எழுதிய ‘பாலழித்தல்’ என்ற கட்டுரை சீனாவில் நிலவிய சமூகச்சூழலை சிறப்பாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அக்கட்டுரையை சொல்வன வாசகர்களுக்குத் தருகிறோம்.

iruvatchipongalmalar

ழஞ்சீனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டத்தரசிகள், நூற்றுக்கணக்கான மனைவிமார்கள், ஆயிரக்கணக்கான ஆசைநாயகிகள் வைத்திருந்த பேரரசர்களின் முக்கிய நோக்கமான ஆண்வாரிசைக் கொடுக்கும் ஒரு பெண்ணுக்கு கௌரவமும் அந்தஸ்தும் உயரும். பட்டத்தரசியா, மனைவியா அல்லது வெறும் ஆசைநாயகியா என்பதைப் பொருத்தே உயர்வின் அளவும் அமையும். பேரரசர்கள் அரச மாளிகைகளில் நபுஞ்சகர்களையே வேலைக்கமர்த்தி வந்தனர்.

காவல், அலுவலகம், சமையலறை, ஆலயம், நாடக அரங்கம் போன்ற அரண்மனையின் அனைத்து பிரிவிலும் நபுஞ்சகர்களை நியமிக்கும் மரபு சீனத்தில் மிகமிகத் தொன்மையானது. ஆகப்பழைய வரலாற்றுப் பதிவு கிட்டத்தட்ட கி.மு எட்டாம் நூற்றாண்டு வரை பின் நோக்கிப் போகிறது. அதற்கும் நெடுங்காலம் முன்பே வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்றே அந்தப்பதிவும் சுட்டுகிறது. கன்ஃப்யூஷியஸ் பல்வேறு மரபுகளை உடைத்தார் என்று பெயர். இருப்பினும், சமீபமாக அதாவது கன்ஃப்யூஷியஸின் காலத்துக்குப் பிறகு தான் இந்தப் பழக்கம் அதிகமும் பெண்களின் ஒழுக்கத்தோடும் தொடர்புடையதாகி இருக்கிறது. சிசு மரணங்கள் மலிந்திருந்த முற்காலத்தில் குழந்தைகளின் பிறப்பு, அதிலும் ஆண் குழந்தைகளின் பிறப்பு அரசகுலத்திற்கு மிக முக்கியமானது. அறுவைக்குட் படாத ஆண்கள் அந்தப்புரத்தின் அருகில் கூட அனுமதிக்கப்பட்டதில்லை. அப்படியே அவர்கள் அவ்வளாகங்களில் தென்பட்டால் அபராதமோ சிறைத் தண்டனையோ நிச்சயம்.

அரண்மனை அறைகளில் படுக்கையறைகளைச் சுத்தம் செய்வது, சீராக்குவது, அரசருக்கு முடிதிருத்துவது, குளிப்பிப்பது, அரசர் காதுக்கு செய்தி கொண்டு போவது என்று ஏராளமான பணிகளும் நபுஞ்சர்களுக்கு இருந்தன. பட்டத்தரசிகள் அல்லது ஆசைநாயகிகள் ஆட்சிகளைக் கவிழ்க்கவும், அரியணையைக் காப்பாற்ற, பறிக்க போன்ற மிகப்பெரிய சதித்திட்டங்களடங்கிய அரண்மனை அரசியலில் கைகோர்த்தவர்கள் மிக அதிகம்.

தாய்மையடைக்கூடிய பெண்கள் இருக்கும் அரண்மனை அந்தப்புரத்தில் வேறு எந்த ஆணுடைய வித்தும் எந்தப் பெண்ணின் கருவிலும் துளிர்த்து வளரக் கூடாதென்பதற்கான கவனங்களை எடுத்தனர். இதற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டு அரண்மனைகளில் காவலுக்கும் மற்ற மற்ற பணிகளுக்கும் நியமிக்கப் பட்டார்கள். பெண்களுக்கும் இவர்களுக்கும் இடையில் சிநேகமோ நட்போ உருவான கதைகள் பலவுண்டு. கரு மட்டும் உருவாகாது.

பிறந்து பால்குடி மறக்கும் வரை தாதியிடமும் தாயிடமும் இருக்கும் இளவரசன், அதன்பிறகு வளர்க்கவென்று நபுஞ்சகரிடம் தான் ஒப்படைக்கப்படுவார். அரியணைக்கு மிக அருகில் வாழ்நாளெல்லாம் இருக்கும் கனவோடு தான் இளவரசர்களை இவர்கள் வளர்த்தெடுத்தனர். எதிர்கால அரசரின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமாக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் சூதுகள் செய்தனர். இளவரசனைத் தம் கனவுகளுக்கேற்பவே வளர்த்தெடுத்தனர். வளர்ந்துவரும் காலங்களில் இளவரசனுக்கு எல்லா கெட்ட பழக்கங்களையும் அறிமுகப்படுத்தி விடுவதால் மனமும் உடலும் கெட்டுப் போன பின்னர் இளவரசர்கள் மனதால் பலகீனமடைந்திருப்பர். பாதுகாப்பிற்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கும் தமது நபுஞ்சக ஏவலாளியையே நம்பினர். பொறாமையும் முன்னேறும் வெறியும் அரண்மனை வளாகமெங்கும் ஓங்கியிருக்கும். அரியணை வாரிசையே மாற்றிவிடும் அளவிற்கு இவர்களில் பலரது கையோங்கியது. இவர்களது பிடிக்குள் சிக்கியிருந்த பேரரசர்களில் பெரும்பாலோருக்கு சாதகமாகவும் பாதகமாக திரும்பிய வரலாறுகள் உண்டு.

உடல் லேசாக முன்னால் சாய்ந்து கால்களிரண்டும் சேர்தந்தாற்போல் சின்னச்சின்ன அடிகள் எடுத்து வைத்து நடக்கும் இவர்களை தூரத்திலிருந்தே அடையாளம் கண்டுகொள்ள முடியும். இயல்பாக அமைந்ததா அல்லது அப்படியிருக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தனவா என்பதெல்லாம் ஆய்வுக்குரியது. அன்றாடம் அரச குடும்பத்தினருடன் பேசிப்பழகும் வாய்ப்பு பெறும் இவர்களில் பலர் மெதுமெதுவாக அந்தஸ்தும் அதிகாரமும் பெற்றிருக்கின்றனர். ஊழல்கள் புரிந்து பெருஞ்செல்வம் பெற்றவர்களுமுண்டு. அரச முடிவுகளில் தன் அந்தஸ்தைச் செலுத்துவோரும் இருந்திருக்கின்றனர். அவ்வாறான செயல்கள் ஆட்சியின் வளர்ச்சிக்காக அமைந்த பல்வேறு கதைகளுமுண்டு. பழிவாங்கும் நோக்கில் அரசையே கவிழ்த்த கதைகளுமுண்டு.

சீனத்தில் நிலவும் மூதாதையர் வழிபாடும் இந்த மரபு தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமென்பர். இறைவனின் பிரதிநிதி தான் நாட்டின் அரசன் என்பது பழஞ்சீனத்து நம்பிக்கை. மேலுலகிற்கும் பூவுலகிற்கும் இடையேயான சம நிலையைப் பேணுபவன் அரசன். அரசன் தான் நாட்டின் நலனை வேண்டி தன் பல தலைமுறைகள் பின்னோக்கிப் பட்டியலிட்டு முன்னோர்களுக்குப் படையலிடுவான். அடுத்தடுத்த தலைமுறையின் ஒரு அரசனும் அந்நிய வித்தில் உருவானவனாக இருந்துவிடக் கூடாதென்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததால் இம்முறை பழக்கத்திற்கு வந்திருக்கலாம். அரச மாளிகைகளைச் சுற்றிலும் ஒருவித புனிதத் தன்மையையும் ரகசியத் தன்மையையும் உருவாக்கிப் பேணும் பணி இந்த நபுஞ்சகர்களுக்கானது. சாதாரணர்களிடமிருந்தும் அவர்களது எளிய வாழ்க்கைத் தவறுகளிடமிருந்தும் அரசன் என்கிற இறைப் பிரதிநிதியைக் காக்கும் பொறுப்பும் இவர்களுக்குரியது.

எல்லா நபுஞ்சகர்களயும் புனிதர்களாக மதித்த போதிலும் பத்து வயதுக்கு முன்னர் ஆண்மையகற்றப் பட்டவர்களை மேலும் அதிக புனிதர்களாகக் கருதினர். படுக்கை அறைமற்றும் குளியலறை வரை இவர்களையே அனுமதிக்கவும் அரண்மனைப் பெண்கள் பணியில் அமர்த்தவும் விரும்பினர். பெரியவர்கள் ஆனதும் மற்ற வேலையில் அமர்த்திவிட்டு புதிய சிறார்களை நியமித்துக் கொண்டனர். நேரடி வாரிசென்றோ குடும்பம் என்றோ உருவாகியிராத நபுஞ்சகர்களுக்கு தம் ஆயுள் முடியும் போது செல்வமும் சொத்தும் விட்டுச் செல்லவேண்டும் என்ற ஆர்வமோ கட்டாயமோ இருக்கவழியில்லை. ஆகவே, பொருள் சேர்க்கும் ஆசைகளும் அதிகம் இருக்காது என்பதே யாரும் எதிர்பார்க்கக்கூடியது. இருந்தாலும், அவர்கள் மீதிருந்த இந்த நம்பிக்கையோ அவர்களிடம் எதிர்பார்த்த விசுவாசமோ வரலாறெங்கும் பங்கப்பட்டிருந்தன. இறப்புக்குப் பிறகு தமக்குச் செய்யவேண்டிய கிரியைகள் மற்றும் படையல்கள் போட யாருமில்லாதவர்கள் என்றும் இவர்களைச் சமூகம் பார்த்தது.

இளவரசர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தகுதி மற்றும் பதவி அந்தஸ்தைப் பொருத்து இருபது முதல் முப்பது நபுஞ்சகர்கள் வரையிலும் வேலைக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்கள். ஆசைநாயகிகள் பெற்ற மகன்களுக்கு நான்கு முதல் ஆறு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விருப்பமில்லாத அதிகாரிகளும் அவர்களையே வேலையில் நியமித்தாகவேண்டிய விதியிருந்தது. ஏனெனில், அப்பழக்கத்தை அந்தஸ்துடன் தொடர்பு படுத்தினர். இவர்களுக்கான மிக எளிய குடில் போன்ற வதிவிட விடுதிகள் அரண்மனை வளாகங்களிலேயே கட்டப்பட்டிருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இவர்களுடைய மாத வருவாய் இரண்டிலிருந்து நான்கு பணமாக இருந்திருக்கிறது. மிக உயர்பதவியிலிருந்தவர் பன்னிரெண்டு பணம் பெற்றார். முதுமையில் அரண்மனையிலிருந்து விரட்டியடிக்கப்படும் இவர்கள் பெரும்பாலும் மடாலயங்களுக்குச் சென்று பிக்குகள் ஆனார்கள்.

அரண்மனை ஆலயங்களில் நுழைய இவர்களை அனுமதியிருந்தனர். சடங்குசம்பிரதாயங்கள், விரதங்கள், வழிபாடுகள் எல்லாமே இவர்கள் செய்யலாம். இருப்பினும், குறைபாடுடையோர் என்று இவர்களைச் சமூகம் கருதியதால் கைகால் குறைபாடுடையோர், கண்பார்வையற்றோர், மாதவிடாய்ப் பெண்கள் போன்றவர்களைப் போலவே கருவறைக்குள் புக அனுமதியில்லை. பணியில் சிறப்பான பயிற்சியும் அனுபவமும் பெற்ற விசுவாசம் மிகு நபுஞ்சர்கள் வரலாறெங்கும் அரசர்களால் விற்கவும் வாங்கவும் பட்டுள்ளனர். வாங்கும் முன்னர் ஆரோக்கியமும் தேகத் தூய்மையும் சோதிக்கப் பட்டது.

eunuch1இவர்கள் அரசரை நேராகக் கண்பொருத்திப் பார்ப்பது குற்றமாகக் கருதப்பட்டதால் அவையில் பெரும்பாலும் தரையிலேயே பார்வையை வைத்திக்க வேண்டும். பல்லக்குகளைச் சுமக்கும் இவர்கள் அரசரைக் காணும் போதெல்லாம் முழந்தாளிட்டு ஒன்பது முறை தலை நிலத்தில் படும்படி நமஸ்கரிக்க வேண்டும். வேலையைச் செய்யாமல் சோம்பியிருப்பது போன்ற எளிய குற்றங்களுக்கு கூட சாட்டையடி, பிரம்படி போன்ற கடுமையான தண்டனையும், அதனால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சையளிக்கவென்றே நபுஞ்சக மருத்துவர்களும் இருந்தார்கள். எல்லோருக்கும் பாடமாக அமைய வேண்டுமென்ற நோக்கில் மற்ற நபுஞ்சர்கள் முன்னால் தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சூதுகள், சதித்திட்டங்கள், சூழ்ச்சிகள், மோசடிகள், ஏய்ப்புகள் என்றே வாழ்க்கையைக் கடந்திருப்பதாக வரலாறு இவர்கள் மீது நெடுகவே கடுமையான விமரிசனங்களை வைத்திருக்கிறது. இதற்கு காரணமுமுண்டு. பழஞ்சீன வரலாறு பெரும்பாலும் அரசாங்கத் தேர்வில் தேறிய கற்றோர் மற்றும் அறிஞர் பெருமக்களால் மாண்டரின் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அரண்மனையின் வாகனங்கள் முதல் மாளிகை வளாகம் வரை புழங்கிய அவர்கள் மீது மேட்டுக்குடிகளெனக் கொள்ளப்பட்ட அறிஞர் பெருமக்களுக்குப் பெருங்கடுப்பு. ஆகவே, வரலாறு சொல்லும் சூழ்ச்சிக் கதைகள் நபுஞ்சகர்களுக்கு எதிராகவே பெரும்பாலும் இருப்பதைக் காணலாம். இருந்தாலும், இவர்கள் அசர மாளிகை வளாகங்களிலும் சமூகத்திலும் செய்த தீமைகளை மறுப்பதற்கில்லை.

இவர்களின் குறுக்கீடுகள் அதிகரிக்குந்தோறும் அரசர்களும் அரசதிகாரிகளும் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றனரே தவிர நியமனங்களில் மாற்றம் கொண்டு வர யாருமே விரும்பியதாகவோ பரிந்துரைத்ததாகவோ தெரியவில்லை. இந்தக் கட்டமைப்பில் எல்லோருக்கும் இசைவே இருந்திருக்கிறது. அவர்களிடமிருந்து அரசர்கள் பெரும்பாலும் நேரடியான ஆலோசனைகளைப் பெற்றதில்லை. எனினும், அவர்களுடைய கருத்துகள் மற்றும் அவதானிப்புகளைக் கணக்கில் கொண்டனர். அவ்வகையில் முடியாட்சியின் போக்குகளிலும் மாற்றங்களிலும் இவர்களுக்கு மறைமுகப் பங்கு இருந்திருக்கிறது. கன்ஃப்யூஷியஸ் இவர்களை நியமிக்கும், அதிகாரம் அவர்கள் கைக்குப் போக வழிவகுக்கும் இந்நடைமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பினார் என்கிறது ஒரு பதிவு. நபுஞ்சர்களுக்கும் அதிகாரிகளுக்குமான மோதல்கள் கொண்ட அரசியல் முடிச்சு இன்றைக்கும் சரித்திர மேடைநாடகம் மற்றும் திரைப்படங்களின் முக்கிய கருவாக இருந்து வருகிறது.

எல்லாருமே ஊழலும் தீமையுமாக இருந்ததில்லை. பேரரசர்களுக்கு ஆலோசகர்களாக விளங்கும் அளவு திறன்படைத்தவர்களும் இருக்கவே செய்தனர். இதனால், பிற அதிகாரிகளின் பொறாமைக்கும் ஆளானார்கள். வெளிவிவகாரங்களில் அதிகாரிகள் அதிகமாக உதவியதாகவும் இந்த நபுஞ்சகர்கள் பேரரசரின் உள்விவகாரங்களில் அதிகமாக உதவியதாகவும் தெரிகிறது. காகிதம் கண்டுபிடித்த காய் லுன் மற்றும் ஸிமா ச்சியேன் என்ற வரலாற்று அறிஞரும் பழஞ்சீனத்தின் அரசியல் நிபணுரும் கூட சிறுவயதில் ஆண்மையகற்றப் பட்டவர்கள் தாம். அதில் ஸிமா ச்சியேன் பெரியவரானதும் அறுவை செய்யப்பட்டார். ஒருமுறை அரசவையில் பேரரசரை அவமதித்த குற்றத்திற்கு தண்டனையாக ஆண்மையகற்றப்படவோ அல்லது தற்கொலை செய்யவோ ஆணையிடப்பட்டார். தற்கொலை அகௌரவமென்று கருதி அறுவையைத் தேர்ந்தெடுத்தார். ஸ்யூ முடியாட்சியின் போது இந்த அறுவை ஒரு தண்டனையாகவும் பரவலாக இருந்திருக்கிறது. 1382ல் யுன்னன்னின் மிங் முடியாட்சி மங்கோலியர்கலால் கைப்பற்றப் பட்ட போது ஆயிரக்கணக்கான போர்க் கைதிகளின் இளவயது மகன்கள் கட்டாய அறுவைக்குட் படுத்தப்பட்டனர். அப்படி மிகச் சிறுவயதிலேயே அறுவை செய்யப்பட்டவர்களுள் ஒருவரான கடலோடி செங் ஹ பிற்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளராக உருவானார்.

வான் லீ பேரரசரிடம் பணியாற்றிய ச்சென் ஜு என்ற ஓர் அரசதிகாரி இருந்தார். இன்றைய பேய்ஜிங்கிற்கு அருகில் அன்ஸு என்ற சிற்றூரில் பிறந்த இவர் தான் சரித்திரத்தில் ஆக அதிக உயரத்தை எட்டிய நபுஞ்சகர் என்றறியப்படுகிறார். இவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் காவ் ஜோங் எனும் இன்னொரு நபுஞ்சகர். உயர்ந்த கோட்பாடுகள் கொண்டிருந்தவராக அறியப்பட்ட ச்சென் ஜு ஏராளமான எளியோரை அரசவையில் பேரரசர் முன்னால் வாதாடிக் காப்பாற்றியிருக்கிறார். இவரது பொறுப்புணர்வு எண்ணற்ற பொய் வழக்குகளை அகற்ற உறுதுணையாக இருந்திருக்கிறது. ஜியாஜிங்கின் ஆட்சியின் 26றாவது ஆண்டில் 1547ல் இவர் அரச மாளிகையில் வேலைக்கமர்ந்தார். அரச குடும்பத்தினரிடையே நடந்திருக்கக்கூடிய பெரிய சண்டைகளை இவர் இடையில் புகுந்து சமரசமாக்கியிருக்கிறார். மிக முக்கிய முடிவுகளில் பேரரசருக்கு ஆலோசனை வழங்கி, பொருள் மற்றும் மனித வளம் வீணாகாமல் தடுத்திருக்கிறார். எண்ணற்ற அரசதிகாரிகள் மரணதண்டனை பெற்றிருக்க வேண்டிய சச்சரவுகளை அரசருடன் மிகச் சுமூகமாகப் பேசித் தீர்த்து வைத்தவர்.

மிங்க் முடியாட்சியின் முடிவில் அறுவைக்குட்படுத்தப் பட்டோர் சுமார் 70000 பேர் இருந்திருக்கிறார்கள். அரண்மனை நியமனம் குறைந்தபோது இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 1912ல் வெறும் 470பேர் மட்டுமே இருந்தனர். அக்காலச் சீனத்தில் மிகமிக ஏழ்மையில் வாழ்ந்த குடும்பத்தில் சிறார்களை அரச மாளிகையிலோ அரசவையிலோ நல்ல வேலை கிடைக்கவென்று அறுவைக்கு அனுப்புவதுண்டு. குடும்பத்து ஒட்டுமொத்த பிழைப்புக்கு என்று ஆரம்பித்துவிட்டு அந்தப் பாதையையே பணக்காரர்களாகும் பேராசையை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்துவோர் இருந்தனர். இதனால், ஆண் வாரிசை மிக விரும்பிய அக்கால சீனச் சமூகத்திலேயே நிறைய பேருக்கு அறுவை செய்யப்பட்டது. சிறுவனுக்கு விவரம் தெரிந்து மறுக்கும் முன்னரே அறுவை செய்தனர். பெரியவனாகி மறுப்பு தெரிவித்தாலும் முடிவில் மாற்றமிருக்காது. இதற்கு முழுமனதோடு இணங்குவோர் மிகக் குறைவு. அரைமனதோடு அறுவைக்கு ஒத்துக்கொள்வது தான் அதிகம்.

பதவிக்குரிய ஆடை நிறம் மற்றும் அணிகலன்கள் இருந்தன. பெரும்பாலும் எழுதப்படிக்க தெரியாத இவர்களிடையே சூதாட்டம் மிகவும் பிரசித்தம். வாலில்லாத நாய், மூக்கில்லாத கெண்டி போன்ற பிரயோகங்கள் இவர்களை ஆத்திரப்படுத்தும். வயது கூடிவரும் நபுஞ்சகர் தோல் சுருங்கி மூதட்டியைப் போலத் தோற்றமளிப்பார். சமீப நூற்றாண்டுகளில் ஓய்வூதியங்கள் அளிக்கப்பட்டதற்கான பதிவுகள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளில் சீனத்துக்குப் போய் வசித்த ஆங்கிலேயர்கள் தான் முதன்முதலில் இந்தமரபைக் குறித்து வெளியுலகுக்குச் சொன்னார்கள். 1887ல், ஜ்யார்ஜ் கார்ட்டர் ஸ்டென்ட், மேலை நாடுகளில் அதுவரை அறிந்திருக்காத அளவிலான விவரங்களுடன் கட்டுரை ஒன்றை எழுதினார். மிங் முடியாட்சிக்கு முன்னரே அறுவை நிபுணர்களும் அறுவையகங்களும் இருந்திருக்கின்றன என்ற விவரம் இக்கட்டுரையிலிருந்து பெறக்கூடியது. அதற்கு வெகுகாலம் முன்பே அறுவையில் பல வகைகள் இருந்திருந்தன. ஜ்யார்ஜ் கார்ட்டர் ஸ்டென்ட் காலத்தில் ‘ஃபார்பிடன் ஸிடி’யில் வெறும் 2000 நபுஞ்சகர்கள் தான் இருந்தனர். மஞ்சூ பேரரசர்கள் எண்ணிக்கையைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க முடிவெடுத்திருந்தது முக்கிய காரணம். இன்னொரு காரணம் அதற்கு முன்னர் நாடு பேரரசி டோவேஜர் ட்ஸு ஹ்ஸியின் ஆட்சியில் இருந்தது. அவருக்கு மிக இளம் வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். பேரரசிக்கு பேடிகளின் தேவையிருக்கவில்லை.

அறுவை நிறைவேற்றப் படும் விதத்தில் வேறுபாடுகள் நிலவியிருக்கின்றன. ஆணுறுப்பையே முழுக்க அறுத்தெறியப் படுவது ஒருவகை என்றால் பீஜக்கொட்டை மட்டும் அகற்றப் படுவதுமுண்டு. தலைநகரில் இருக்கும் மிக பிரமாண்ட அரண்மனை வளாகத்தில் அரசாங்கம் அங்கீகரித்த அறுவை நிபுணர்கள் இருந்தார்கள். அரசாங்க ஊதியம் என்று ஒன்றும் இவர்களுக்குக் கிடையாது. இருப்பினும், இத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர் அக்காலந்தொட்டே தலைமுறை தலைமுறையாக குடும்பத்தொழிலாகவே செய்தனர். ஒவ்வொரு அறுவைக்கும் அதன் பிறகான சிகிச்சைக்கும் ஆறு பணம் வாங்கினர். ஆண்மையகற்றும் அறுவை செய்து கொள்ளவிருப்பவரை உயரம் குறைந்த கட்டிலில் படுக்க வைப்பார்கள். இறுதியாக ஒருமுறை சம்மதமா என்று வினவுவார்கள். ஆமென்றால், ஓர் ஆள் இடுப்பில் அழுத்திப் பிடித்துக் கொள்வார். இன்னும் இருவர் அசையாமல் இருக்க கால்களிரண்டையும் அகட்டிப் பிடிப்பர். தொடைகளிலும் அடிவயிற்றிலும் இரண்டு பட்டிகளை இறுக்கக் கட்டுவர். ஏற்கனவே நரம்புகளை மரக்க வைக்கும் மூலிகைக் கஷாயம் கொடுக்கப்பட்டிருக்கும். உறுப்புகளை மிளகு சேர்ந்த சுடுநீரால் கழுவுவர். விரையும் ஆணுறுப்பும் கண்ணிமைக்கும் பொழுதில் சிறிய கத்தியால் ஒட்ட வெட்டியகற்றப்படும். உடனே ஒரு உலோகத்தை சிறுநீர்க் குழாயில் வைத்துப் பொருத்திவிடுவார்கள். நீரில் நனைத்த காகிதத்தை நிறைய வைத்து அழுத்தி கட்டுப் போடுவார்கள். நபுஞ்சகரை நடக்க வைப்பார்கள். இருபுறமும் இருவர் உதவி செய்ய இரண்டு மூன்று மணிநேரம் அறைக்குள் நடக்க வேண்டும். பிறகு தான் உட்காரவோ ஓய்வெடுக்கவோ அனுமதியுண்டு. மூன்று நாட்களுக்கு குடிக்க நீரோ திரவமோ கொடுக்க மாட்டார்கள். தாகம் ஒருபுறம் வாட்ட, சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமங்கள் பல அந்த நாட்களில் தொடரும். மூன்றாம் நாளில் முடிவில் கட்டு பிரிக்கப்படும். சிறுநீர் கழிப்பதால் சிறு ஆசுவாசம் கிடைப்பது போலத் தோன்றும். அப்படி நீர் பிரிந்தால் உயிருக்கு ஆபத்தில்லை இனி என்று கூடி நிற்போர் வாழ்த்துவர். பிரியாவிட்டால் கடுமையான வேதனையுடனான மரணம் நிச்சயம். நிறையபேர் அறுவை சிகிச்சையின் போது இறந்தும் போயினர். பெண்களைப் போல குத்தவைத்து சிறுநீர் கழிப்பர்.

அறுவை முடிந்து பலநாட்களுக்கு மிகச் சாதாரணமாக நடக்கும் படுக்கையை நனைப்பதெல்லாம் கொஞ்ச நாளைக்கு அதைப் பொருட்படுத்துவதில்லை. நாளடைவில், ‘நாத்தம் பிடிச்ச பேடி’ என்றெல்லாம் கேலி பேசுவர். சாதாரண ஆட்களும் ஒருவரை மற்றவர் இவ்வாறு ஏசிக் கொள்வது வழக்கமானது. வெட்டியறுக்கப் பட்ட உடலுறுப்பு விலைமதிப்பற்றது என்ற பொருளில் பாவ் என்றழைக்கப்பட்டு இரசாயன திரவத்திலிடப் பட்டு அவர் மேலும் மேலும் வாழ்விலும் பதவியிலும் உயரவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உயரத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும். அடுத்த பிறவியில் முழு ஆணாகப் பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் இறக்கும் நபுஞ்சகருடைய சவப்பெட்டிக்குள் இந்த உடலுறுப்பை வைத்து இறுதி ஊர்வலத்தில் அனுப்புவார்கள். ஏதோ காரணத்தினால் காணாமல் போயிருந்தால் கூட ‘இரவல் வாங்கி’யேனும் வைப்பது வழக்கம்.

ஆண் வாரிசுக்கும் ஆண்மைக்கும் உயரிய அந்தஸ்தையளிக்கும் பழஞ்சீனத்தில் தான் ஆண்மையழிக்கும் போக்கும் நிலவியிருக்கிறது. பெண்களின் மீது எப்போதும் விரவிப் படர்ந்திருக்கும் ஆண்களின் அவநம்பிக்கையும் அரண்மனை வளாகங்களில் பெண்களை அடைக்கும் தீவிரப் போக்கும் இதையும் தோற்றுவித்துள்ளது. காமம், குரோதம் போன்ற பல்வேறு உணர்ச்சிகள் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் அகல்வதாகத் தெரிவிக்கின்றனர். மிகச் சிறிய வயதில் அறுவை செய்யப்பட்டால் கைகால்கள் நீண்டு வளர்கின்றன. தலையில் சொட்டை விழுவது போன்ற சில்லரைப் பிரச்சனைகள் மறைந்து ஆயுள் அதிகரிப்பதாகவும் பரவலான நம்பிக்கை நிலவுகிறது.

வரலாற்றுப் பதிவுகளின்படி இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஆணுறுப்பை அகற்றிவிட்டு விரையை மட்டும் வைத்திருக்கிறார்கள். இதனால், போர்வீரர்களுக்கு காமம் பெருகி ஆக்ரோஷம் கண்டபடி வெடித்து வெளியாவதால் எதிரிகளைத் தாக்கிக் கொல்வதில் பெரியளவு வெற்றி உறுதி என்பதே நிலவிவந்த நம்பிக்கை. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேலைநாடுகளிலிருந்து சீனத்துக்கு வந்து வாழ்ந்த சில வெள்ளையர்கள் விலைமாதர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் இவ்வாறு அறுவைசெய்து கொண்டார்கள்.

4569_the_last_eunuchமிங் முடியாட்சியின் (1368-1644) போது பிற்கால நபுஞ்சகர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் தியான் யீ. ஒரு குறிப்பிட்ட வரித் திட்டத்தை நிறுத்த அரசரிடம் மிகவும் போராடி இறுதியில் தோற்றவர். அந்தக் காலகட்டத்தில் ஏராளமான நபுஞ்சகர்கள் ஒன்று சேர்ந்து செய்த சதித்திட்டத்தில் சேராமல் ஒதுங்கியிருந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவர். அடிமட்டத்திலிருந்து படிப்படியாக உயர் பதவியை அடைந்து மூன்று அடுத்தடுத்த தலைமுறை அரசர்களுக்கு சேவகம் செய்தவர். 1953ல் தியான் மிகவும் நோயுற்ற போது அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. அவருக்கு ஆடம்பரமான பாதாளக் கல்லறை ஒன்றைக் கட்ட ஆணையிட்டார். இதுவே ஒரு நபுஞ்சகர் பெறக்கூடிய ஆக உயரிய அரசாங்க கௌரவமாகக் கருதப்பட்டது. கல்லறையின் நினைவுக்கற்கள் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் உயர் தரச் சித்திர எழுத்துக்களில் தியான் யீ பற்றிய செய்திகள் எல்லாமே செதுக்கப் பட்டிருக்கின்றன.

94 ஆம் வயதில் பேய்ஜிங்கில் இறந்த நுண்ணறிவுடையவர் என்றறியப்பட்ட ஸன் யோடிங் (1902-1996) தான் சீனத்தின் ஆகக் கடைசி நபுஞ்சகர். குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக அரண்மனையில் வேலை கிடைக்குமென்று தந்தையால் அறுவை செய்யப்பட்டபோது இவரது வயது 8. அதன்பிறகு ஒரே மாதத்தில் 1911ல், 1660 முதல் சீனாவை ஆண்ட மஞ்சூஸ் முடியாட்சி முடிவுக்கு வந்தது. “எங்க மகன் பட்ட பாடெல்லாம் வீணா? இனி அவங்களுக்கு பேடிகள் தேவையில்லையே”, என்று மார்பில் அடித்துக் கொண்டு தகப்பனார் அழுதார் என்று ஜியா என்பவர் எழுதிய ‘சீனாவின் இறுதி நபுஞ்சகன்’, என்ற தனது சரிதையில் நினைவுகூர்கிறார். கலாசாரப் புரட்சியின் போது தண்டனைக்கு பயந்து இவரது உடலுறுப்புகள் அடங்கிய புட்டியை குடும்பத்தினர் உடைத்தெறிந்து விட்டதால், சவப்பெட்டியில் குறையோடு தான் அனுப்பப்பட்டார். எட்டாண்டுகள் வெறும் வேலைக்காரராக மட்டுமே இருந்தார். கிராமத்திலிருந்த உடன்பிறந்தவரின் உதவியை வேண்டியிருந்தார். வரலாற்றுப்பதிவுகள் பலவற்றில் இருந்த தவறுகளைத் திருத்திய பெருமை இவருக்குண்டு. ஒரு கட்டத்தில் தெருக்களில் கரித்துண்டுகளைப் பொறுக்கி மிகவும் வறிய வாழ்வு வாழ்ந்தவர் அக்காலங்களில் அதிக அவமானங்கள் இருக்கவில்லை என்கிறார். சீனக்குடியரசு கொடுத்த 16 பணத்தை மானியமாகப் பெற்று நாற்பது நபுஞ்சகர்களோடு ஆலயத்தில் காசாளராகப் பணியாற்றி வாழ்ந்தார்.

இவரைக்குறித்தும் மற்ற பல பிரபல நபுஞ்சகர்களைக் குறித்தும் பாதுகாக்கவென்று பேய்ஜிங் அருங்காட்சியகம் ஒன்றை தியான் யீயின் கல்லறைக்கு அருகில் நிறுவியிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முறைகள், வீரதீரங்கள், சூதுவாதுகள், கசப்புகள், அவமானங்கள், சாதனைகள் போன்றவற்றுடன் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த இழிவுகள் மற்றும் துயரங்களையெல்லாம் சொல்லும் ஆவணங்கள் இங்கே காட்சிக்கு உள்ளன.