சொல்வனம்,
வணக்கம்.
இந்த சொல்வனம் இதழ் ஒரு இசைரசிகனாக எனக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது. லலிதா ராம் எழுதிய தட்சிணாமூர்த்திப்பிள்ளை கட்டுரை நம் மண்ணில் இருந்து மறைந்த ஒரு மாமேதையை அடையாளப்படுத்தியது. அதை லலிதா ராம் எழுத்தாக்கிய விதம் சுவாரசியமாக இருந்தது. சற்று முன் நம்மை விட்டு மறைந்த பீம்சென் ஜோஷிக்கு சேதுபதி அருணாச்சலம் எழுதிய அஞ்சலியும் வெகு அருமை. ஓப்லா விஸ்வேஷ் எழுதிய ப்ளூகிராஸ் இசை பற்றிய அறிமுகம் மிகவும் உருப்படியான ஒன்று. மிகு உணர்ச்சிகள் இல்லாமல் நேர்த்தியாக, ஒரு நல்ல அறிமுகமாக இருந்தது. தமிழ் திரையிசையைப் பற்றியே முக்கியத்துவம் தந்து எழுதாமல், ஆந்திரப்பிரதேசத்தில் கொண்டாடப்படும் தமிழரரான கே.வி.மகாதேவனைப் பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பான ஒன்று. ராமச்சந்திர ஷர்மாவின் கட்டுரையும் பல தெரியாத விஷயங்களை சொல்லித் தருவதாக இருந்தது.
இசைச்சிறப்பிதழ் என்று சொல்லாமலேயே கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, அமெரிக்க இசை, திரையிசை எனப் பலவகை இசையைப் பற்றியும் சத்தமில்லாமல் ஒரு சிறப்பிதழாக வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகள்.
கட்டுரைகளை ஏனோ தானோவென்று வெளியிடாமல், தேவையான படங்கள், வீடியோக்கள், ஒலித்துணுக்குகள் தந்து ஒரு புதிய அனுபவத்தையே அள்ளித்தரும் உங்கள் சிரத்தையை எத்தனை பாராட்டினாலும் தகும்.
அன்புடன்,
கே.ப்ரியா
ஓப்லா விஸ்வேஷ் எழுதிய ப்ளூகிராஸ் இசையைப் பற்றிய கட்டுரை நன்று. ப்ளூகிராஸ் இசை உருவான விதத்தைப் பற்றிய வரலாறு நன்றாக இருந்தது. ஆனால் அமெரிக்காவிலிருந்து உருவான ஜாஸ், கண்ட்ரி, ப்ளூகிராஸ் என எல்லா இசைவகைகளின் பின்புலமும் ஒரேமாதிரியான ஒன்றுதானே?
கே.வி.மகாதேவன் பற்றிய கட்டுரை வெகு சிறப்பான ஒன்று. தெலுகு வரிகளுக்கு எப்படி முக்கியத்துவம் தந்து மகாதேவன் இசையமைத்திருக்கிறார் என்று விளக்கியவிதம் அருமை. இப்படிப்பட்டதொரு கட்டுரை தெலுகில் கூட எழுதப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே!
நன்றி,
கே.வி.சாலமன்.
அன்புள்ள சொல்வனம்,
சென்ற இதழ் சொல்வனம் பார்த்துதான் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு குறித்து அறிந்துகொண்டேன். அதிர்ச்சியாக இருந்தது. அவர் எழுதிய சுவாரசியமான வரலாற்றுக் கட்டுரைகளுக்கு நான் விசிறி. இன்னொரு வருத்தமளிக்கும் விஷயம் இப்படிப்பட்டதொரு முக்கியமான எழுத்தாளருக்கு சொல்வனத்தைத் தவிர வேறு எந்த இணைய, சிற்றிதழும் ஒரு சம்பிரதாய அஞ்சலி கூட எழுதாமல் போனது…
அன்புடன்,
அப்பாதுரை
ஆசிரியருக்கு,
வணக்கம்.
மதியழகன் சுப்பையாவின் விமர்சனம் நன்று. ஆடுகளம் என்ற பெயரில் இருக்கும் ஆடும், பண்பாடும் இரண்டுமே பல இடங்களில் சிதைந்துதான் இருந்தது. இன்றைய சூழலில் வளரும் பருவத்தினருக்கு முன் மாதிரியான மனிதர்கள் அரிதாகியிருக்கும் இவ்வேளையில், இது போன்ற சித்தரிப்புகள்
சூழலை மேலும் மாசுபடுத்தும். The critic has to educate the public; the artist has to educate the critic என்று ஆஸ்கர் வைல்ட் சொன்னதை மாற்றி, விமர்சகர்கள் படைப்பாளிகளை இன்று மேம்படுத்தினால் தேவலை போலிருக்கிறது.ஈரோடு நாகராஜன்.
http://erodenagaraj.blogspot.com/2011/01/blog-post.html