திக்பந்தனம்

திக்பந்தனம்

ஏழுகுதிரைச் சூரியரதம்
நகராமல் நின்றதால்
மேகப்புழுதி சிறிதுமில்லை.
எண்திசைகளிலும் இரும்புக்குதிரைகள்
மதயானைகள் ரப்பர்கால்களுடன்
கனைத்தும் பிளிறியும் பறந்தன.
வருவதும் செல்வதும் குறையும் சமயம்
கால்கள் நடுவில் கடவுள் படைத்ததில்
நிரம்பும் நீரையெங்கேனும் கொட்டி
வர நினைத்தவனின் மூளைக்குளத்தில்
கற்களாய் விழுந்த சொற்கள்
கபாலத்துள்ளிருக்கும் பூச்செண்டில்
மின்னல்களைத் தொடர்ந்தெழுப்பின.
சாலையில் ஊர்வன பறப்பன மிதப்பன
அனைத்தையும் ஓரமாய் நிறுத்தச் சொல்லி
கைப்பேசியில் வந்த கட்டளையை
அமுலாக்கும் பரபரப்பின் நடுவில்
கடத்தல்காரன் வருகிறான்
கஞ்சா விற்பவன் வருகிறான்
கள்ளநோட்டடித்தவன் வருகிறான்
கற்பழிப்பவன் வருகிறான்
கொலைகாரன் வருகிறான்
என்றொரு பெருங்கூச்சல்
எங்கிருந்து வருகிறதெனத் தெரியாமல்
தவிப்புடன் சாலையைக் கண்களால்
காதுகளால் சுற்றிப்பார்த்தபோது
நிசபதமாய் நின்றிருந்த்து சாலை.
அதுவே சிறந்த தருணமென்று
நாக்குத்தொங்க நாயொன்று
சாலையின் குறுக்கே சென்றது
திரிவிக்கிரமன்போ லவன் கால்நீண்டு
நாயின்மீது இடிவிழுந்த்து.
சாலையைக்கடந்த நாய்
சூரியனைப் பார்த்து தமிழில் குரைத்தது.

statue-of-maa-kali

ஏன்?

சிருஷ்டிகாளியின்
கருமுலைக்காம்பில்
வழிந்து சிந்திய
ஒருசொட்டுப்பால் சிதறி
வெளிச்சமாகி விரிந்ததது
வெளியும் பிரபஞ்சமுமாய்.
ஒருசொட்டுப்பால் சிதறி
ஒளியிறுகி உயிராகி
ஒன்று பலவாகி
பல பலப்பலவாகி
ஓயாது உயிரியக்கமாய்
நிகழ்ந்தபடியிருக்கும்
காத்தல் லீலை.
ஒருசொட்டுப்பால் சிதறி
கடலின் முதல்துளியில்
பிறக்கும் ஊழித்தீயின்
பெருமாயவிசையில்
மறையும் யாவும்
கருமுலைப்புள்ளியில்
ஒருசொட்டுப்பால் சிதறி
சூன்யகர்ப்பம் சூலுறும் மீண்டுமென்று
வெள்ளையனுரைத்தால் பளிங்குண்மை
கருப்பையன் நானுரைத்தால்
சனாதனப் புனைவுச்சுருள்.
ஏன் அப்படி?