எஸ்.வி.ராமகிருஷ்ணன்

ள்ளியில் படிக்கும் காலத்தில் கோடை விடுமுறைக்கு வருஷா வருஷம் பாட்டி தாத்தா வீட்டிற்கு ஹைதராபாதுக்குச் செல்வது வழக்கம். குதூகலத்துடன் ரயிலில் பயணம் செய்வோம். போகும்போது பத்து பைசா நாணயங்கள் சிலவற்றை எடுத்துவைத்துக் கொள்வோம். நடுராத்திரி, நல்ல தூக்கத்தில், கிருஷ்ணா நதிக்குமேல் போகும்போது அம்மா எங்களை எழுப்பிவிட, ஜன்னல் கதவைத் திறந்து பாலம் கடக்கும் ஓசையில் பத்து பைசாக்களை வெளியே போட, கிருஷ்ணா நதி முழுங்கிக்கொள்ளும்.

வியாழன் அன்று ராஜ்தானி ஹோட்டலில் சின்னச் சின்னக் கிண்ணங்களில் பரிமாறிய உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது சேது அனுப்பிய குறுஞ்செய்தியில் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் இறைவனடி சேர்ந்தார் என்று இருந்தது. ஐந்து நிமிட இடைவெளியில் சுக துக்கம் இரண்டும் எப்படி வருகிறது என்று நினைத்துக்கொண்டேன்.

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு, என் கைபேசியில் இருக்கும் எண்களைச் சரிபார்க்கும் போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்ற பெயர் பார்த்து, “அட இவரிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சே. பேச வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பேசவில்லை. “பேசியிருக்கலாமே” என்று இனி ஆயுளுக்கும் வருத்தப்படப்போகிறேன்.

dsc01419

2004-ஆம் வருடக் கடைசியில் “ரயில் பிரயாணத்தின் கதை” என்ற கட்டுரையை உயிர்மையில் படிக்க நேர்ந்தது. சில சமயம்தான் இந்த மாதிரி கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும். ‘யார் இந்த எஸ்.வி.ராமகிருஷ்ணன்?’ என்று தேடிக் கண்டுபிடித்து, அவரைத் தொடர்பு கொண்டு ஐந்து நிமிடம் பேசியிருப்பேன்.

“எங்கே சார் இவ்வளவு காலம் இருந்தீர்கள்? நீங்க எழுதிய கட்டுரைகள் எல்லாம் எங்கே கிடைக்கும்?” என்று விசாரித்துக் கொண்டேன்.

அந்த வருடம் நடந்த புத்தகக் கண்காட்சியில் “அது அந்த காலம்” என்ற கட்டுரைத் தொகுப்பை வாங்கி, ஒரே மூச்சில் படித்து முடித்தது ஞாபகம் இருக்கிறது.

எஸ்.வி.ராமகிருஷ்ணனுக்கு என் அப்பா வயது. சட்டம், சரித்திரம் பயின்று சுங்க ஆணையராக ஓய்வுபெற்றவர். இந்தியாவில் பல பகுதிகளில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று ஹைதராபாத்தில் வசித்துவந்தார் என்ற தகவல் மட்டுமே எனக்குத் தெரிந்த மாதிரி பலருக்கு தெரிந்திருக்கலாம். இதற்கு மேல் இலக்கியச் சர்ச்சை, மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தேவையில்லாத விமர்சனம் போன்றவை அவரிடம் கிடையாது. அவருடன் பேசிய சமயங்களில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருடையவை, தொப்புள் சமாசாரம் இல்லாத இதழ்களில் பெரும்பாலும் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் வகைக் கட்டுரைகளும், nostalgia-வையும் சார்ந்தவை.

அவரது முதல் கட்டுரைத் தொகுப்பு “அது அந்த காலம்”. அதில் முன்னுரையில் அசோகமித்திரன் “இந்த நூலுக்கு ஒரு பெயர் மற்றும் பொருளகராதி தயாரித்தால் அதுவே பல பக்கங்களுக்குப் போகும்… அது புத்தகத்தைவிடப் பெரிதாக இருக்கும்!” என்று எழுதியது நிதர்சனம். இன்று கட்டுரை எழுதும் எழுத்தாளர்கள் நிச்சயம் அவரது கட்டுரைகளைப் பாடமாக படிக்க வேண்டும்.

அவருடைய கட்டுரைகளைப் படித்தால்- அவர் பல விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பவர்; அதை நினைவிலும் வைத்துக்கொள்ளுபவர் என்பது உடனே புலப்படும். என்னுடைய ஒரு கதையைப் படித்துவிட்டு “அப்பா 7 ரூபாய்க்கு ரேடியோ வாங்கினார் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் சொன்ன காலத்தில் உபயோகித்த ரேடியோவே அந்த விலைக்குக் கிடைக்காது” என்று சொல்லிவிட்டு அந்தக் காலத்தில் ரேடியோ என்ன விலை, சுதந்திரம், உலகப் போருக்குப் பிறகு அதன் விலை எவ்வாறு கம்மினது… என்று தகவல்களை சொல்லிவிட்டு, உங்கள் கதையில் அந்த ரேடியோ ரூபாய் 75/= இருக்கலாம்” என்று ரேடியோவை பற்றிய தகவல்களால் சிறு கட்டுரையே எழுதி எனக்கு மெயில் அனுப்பியிருந்தார்.

ஒரு முறை கும்பகோணம் சென்றிந்த சமயம், அவருடன் தொலைப்பேசியபோது தானும் அந்த ஹோட்டலில்தான் தங்கியிருப்பதாகக் கூறினார். அவரை முதன்முதலில் சந்தித்து கொஞ்சம் நேரம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்த அனுபவம் மறக்க முடியாதது. அதற்கு பிறகு அவ்வப்போது அவர் பத்திரிகைகளுக்கு எழுதும் சில கட்டுரைகளை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைப்பார்.

அவரையும், அவர் எழுத்தையும் நேசிக்கும் வா.மணிகண்டன் ஹைதராபாத்தில் இருந்த சமயம் அவருடைய கட்டுரைகளை கணினியில் தட்டச்சு செய்வது போன்ற சிறு சிறு உதவிகளைச் செய்வதோடு அவருக்கு சிறந்த நண்பராகவும் விளங்கினார் என்று என்னுடம் பேசும்போது பல முறை திரு.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

அவருடைய கடிதங்களில் அரசியல், இலங்கையில் நடக்கும் யுத்தம் என்று பல விஷயங்களுக்கு, ஆதாரங்களை இலாவகமாக மேற்கோள் காட்டி, இனி என்ன செய்ய வேண்டும் என்று அழகான ஆங்கிலத்தில் எழுதியவைகளைப் படித்திருக்கிறேன். அவர் கூறும் கருத்துகளை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறுக்க முடியாது. அவ்வளவு ஆழமான எழுத்து.

கதிர்காமர் படுகொலை சமயம், முன்னாள் ‘ரா’ செயலாளர் பி.ராமன் விடுதலைப் புலிகள் பற்றி எழுதிய கட்டுரைக்கு திரு.ராமகிருஷ்ணனின் காட்டமான ஒரு மறுப்புக் கடிதம் நினைவு இருக்கிறது.

தெலுங்கானா பற்றி அவர் எழுதிய கட்டுரையில் “நாற்பதாண்டுகளுக்கு முன் முதன்முறை அவ்வூருக்குப் போனபோது கேட்டது: ஹைதராபாத் வீதியில் யாரோ பேசிக்கொண்டு நடக்கிறார்கள். “தூகானம் குல்லா உந்தா?” என்று கணவன் மனைவியைக் கேட்டது என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழில் சொல்வதானால் “கடை திறந்திருக்கிறதா” என்று கேட்கிறார். அவருடைய கேள்வியில் இருக்கும் மூன்று சொற்களில் தூகானம் (அதாவது கடை) என்பது தூகான் என்ற ஹிந்தி வார்த்தையின் மருவிய ரூபம், குல்லா (திறந்து) என்பது அசல் ஹிந்தியேதான். உந்தா (உள்ளதா, இருக்கிறதா) என்பது மட்டுமே தெலுங்கு” என்று அவர் என்றோ கேட்ட அந்த மூன்று வார்த்தைகளை ஆராய்ந்து எழுதியிருப்பார்.

அவர் சமீபத்தில் எழுதிய, ‘இந்தியப் பொதுத்தேர்தலில் அறுபதாண்டுப் பரிணாமம் (1951-2009)’ என்ற கட்டுரையில் 1952,1957 தேர்தலிலேயே பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது தொடங்கியிருந்தது என்று படித்த போது ஆச்சரியமாக இருந்தது.

காந்தி, இந்திய அரசியல், உலக சரித்திரம் போன்ற கடினமான தலைப்புகளில் எழுதப்படும் புத்தகங்களை எல்லாம் அவருக்கு அனுப்பிச் சரிபார்க்கும் சந்தர்ப்பதை தமிழ்நாடு இழந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

சிறுகதை பற்றி ஒரு சமயம் பேசிக்கொண்டு இருந்த போது, “நிச்சயம் எல்லோரிடமும் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது” என்று சுஜாதா சொல்லுவதை போலவே அவரும் சொன்னார். தன் மனைவியிடத்தும் சிறுகதை ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்து, தான் அவளை எழுதச் சொன்னதாகவும், “இயற்கையின் இரண்டு பக்கங்கள்” என்று தலைப்பிட்ட அந்தச் சிறுகதை கணையாழியில் வந்ததாகவும் சொன்னார். அதன் பிரதியைப் படித்துப்பாருங்கள் என்று எனக்கு தபாலில் மறக்காமல் அனுப்பிவைத்தார்.

அவர் எழுதியதைவிட எழுதாமல் விட்டவைதான் அதிகம் என்று நினைக்கிறேன்.

நேற்று அவர் மனைவிக்கு தொலைப்பேசிய போது, ஆச்சரியப்படும் வகையில் என்னை நினைவு வைத்துக்கொண்டிருந்தார். “கிருஷ்ணா நதிக்கு… போய்க்கொண்டு இருக்கிறோம்” என்றார்

அடுத்த முறை ரயிலில் ஹைதராபாத் போகும் போது, விழித்திருந்து, கிருஷ்ணா நதியில் திரு.ராமகிருஷ்ணன் நினைவாக பைசா போட வேண்டும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திரு.எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளையும், அவருடைய வேறு பல கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம்.

புகைப்படங்கள்: வெங்கடாசலம்.