பாரசீக ஈரானிய தெய்வக்கதைகளை நுணுகி ஆராய்வோமெனில் தமிழ்நாட்டில் எவற்றையெல்லாம், யாரையெல்லாம் ஆரியம் என்றும் ஆரியர் என்றும் அறியப்பட்டுள்ளதோ அவை அனைத்துமே தவறு என்று எண்ணத்தோன்றும். பண்டைய உலக வரலாற்றின்படி ஆரியர்களின் தளமாயிருந்தது பாரசீகம். பாரசீகப் பேரரசர்கள் டரீயஸ், செர்சஸ் காலத்தில் இந்தியாவின் வடமேற்குப்பகுதி பாரசீக ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம். பின்னர் அகண்ட இந்தியாவை ஆண்ட கனிணகர் – இஸ்லாமிய மதம் தோன்றிய பின் ஆண்ட கஜ்நவி, துக்ளக், மொகலாயர்கள் யாவருமே ஆரியர்களின் தளமாயிருந்த மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களே. சரியான ஆரியப்பண்பாட்டில் ஊறியவர்களே.
மிகவும் தொன்மையான நாகரிகம், பேரரசுகள் தோன்றிய மத்திய ஆசியப்பகுதியிலிருந்து மேற்கே சென்றவர்களும், அங்கேயே தங்கியவர்களும் முறையே கிறுஸ்துவர்களாகவும் இஸ்லாமியர்களாகவும் மாறினாலும் மிகவும் கொடூரமான அசுரதெய்வமான அகுர் மஸ்தாவின் வீரத்தால் கவரப்பட்டிருந்தனர். எனினும் கிழக்கே இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள், வந்த இடத்தில் நிலவிய பண்பாடுகளைத் தமதாக்கிக்கொண்டு கொலை, கொள்ளை, படையெடுப்பு, போர் ஆகியவற்றை இரண்டாவது நிலைக்குத் தள்ளிவைத்துவிட்டு வாழ்க்கை நெறிகளில் ஆர்வமுடையவர்களாக மாறியிருக்கலாம்.
கிறுஸ்துவமதம் தோன்றிய காலாட்டத்தில் ரோமாபுரி பற்றி எரிந்தது. அநேகமாக ரோமானியர்களும், கிரேக்க-ஜெர்மானியர்களும் ஆரியமதமான மஸ்தாயிசத்தால் (Mazdaisa) அல்லது மித்ராயிசத்தால் கவரப்பட்டிருந்த காரணத்தால் கிறுஸ்தவர்களை அனுமதிக்கவில்லை என்பதுடன் கொடூரமாக அடக்கினர். அடுத்தகட்டமாக நபிகள் நாயகத்தின் கொள்கைகளைப் பரப்ப ஜிஹாத் – வாள் முனையில் மதமாற்றம் நிகழ்ந்தது. இதுவும் ஆரியக் கொடுங்கோன்மையே. அடுத்தகட்டமாக நிகழ்ந்த சிலுவைப்போர் கிறுஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பல நுõற்றாண்டுகளுக்குத் தலை முறை தலைமுறையாக நீடித்தன.
அதேசமயம் இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் அஹீராமஜ்தா (Ahuramazda) வழங்கிய இன்னல்களைப் பொறுக்க முடியாமலோ அல்லது தோற்று ஓடியவர்களாகவோ இருக்கலாம். தங்கள் கோபத்தைக் கொட்டித்தீர்க்கப் புராணங்களை எழுதி அசுரர்களின் கொடுங்கோன்மையை வெளிப்படுத்தியிருக்கலாம். நினைத்தாலே நடுக்கம் எடுக்கக்கூடிய மஸ்தா, மித்ரா போன்றோர் ஹிரண்யகசிபுகளாகவோ, நரகாசூரர்களாகவோ, இராவணர்களாகவோ சித்தரிக்கப்பட்டு ஏட்டில் எழுதி சூரசம்ஹாரம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இப்படியெல்லாம் பேசுவதற்கு ஈரானிய வழிபாடுகள் – தெய்வங்கள் இடம் தருகின்றன. இந்து மதமோ, புத்தமோ உருவாக்கப்பட்ட விதத்தில் வன்முறை என்ற பேச்சே எழவில்லை. ஆனால் ஆரிய நாடான ஈரானில் நிகழ்ந்தது என்ன?
ஈரானிய அல்லது பாரசீக தெய்வக் கூட்டங்கள் -அவை நிகழ்த்திய களியாட்டங்கள் பற்றிய விவரங்களை பஹ்லவி இலக்கியங்களில் உண்டு. இஸ்லாமிய எழுச்சிக்குப் பின்னரே – 9-ஆம் நூற்றாண்டில்தான் படி எடுத்துப் புதிப்பிக்கப்பட்டது. புந்தாஹின் – ஷாநாமா – பின்னர் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ‘அவதரித்த’ ஜராதுஷ்டிர முனிவர் எழுதியதாகக் கூறப்படும் அவஸ்தா ஆகிய ஆரிய இலக்கியங்களைக் கொண்டு நிஜமான ஆரிய தெய்வங்களின் பன்முகத் தோற்றங்களை அறியலாம். இந்திய தெய்வங்களுக்கு ஆரியமூலாம் பூசப்பட்டுள்ளதே தவிர அவை ஆரிய தெய்வங்களாகப் போற்றப்படுவதே கேள்விக்குரியது.
ஈரானிய உலக தத்துவத்தின் அடிப்படையே கூட வன்முறைக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. ஏன் அஹீர்மஸ்தா தோன்ற வேண்டும்? உலகமே தீமையால் சூழப்பட்டுள்ளதால் நன்மை ஒளிபெற தீயசக்திகளை அழிப்பதற்கென்றே அகுர் மஸ்தா தோன்றினார். இப்படிப்பட்ட விளக்கத்தை அவஸ்தா வழங்குகிறது. அகுர் மஜ்தாவுக்கு ஆறு கூட்டாளி தெய்வங்கள் உண்டு. ஆகவே அவர் ஏழில் ஒன்று என்றும் வழங்கப்படுகிறார். அகுர் மஜ்தாவுக்குக் கட்டுப்பட்ட ஆறு துணைவர்கள் யார் யார்? ஈரானிய மொழியில் அஹீர் மஸ்தா என்றால் புத்திமான், நிரந்தரமானவன் என்று பொருள் உண்டு. அஹர்மஸ்தாவுக்குப் பின்னணியாக இயங்கும் முதல் தெய்வம் ‘அமேஷாஸ்பண்டாஸ்’ – அழிக்க முடியாதவன். அமேணாஸ்பண்டாஸ் ஆறுமுகமாக (யசேட்டா) உள்ளவன். ஒருவன் ஒகுமனா, இரண்டு, ஆஷா, மூன்று, க்ஷத்ரா, நான்கு, ஹர்வதத், ஐந்து. ஆர்மதி, ஆறு, அமரேதத்.
அகுர் மஸ்தா – தீயவர்களை தண்டித்து நியாயம் வழங்கும் தெய்வம். அகுர் மஸ்தா தீயவர்களை தண்டித்தாரா? தண்டனை பெற்றவரெல்லாம் தீயவர்களா? பிற்கால மரபில் கிரேக்கக் கதையில் வரும் ஸீயூஸ் (Zeus)? அகுர் மஸ்தாவின் ஆஜானுபாகுவான தோற்றம் – பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் காட்டும் விசுவரூபதரிசனத்திற்கு ஒப்பானது. இங்கு கிருஷணனே அகுர் மஸ்தாவானாரோ?
அகுர்மஸ்தாவின் முதல் பலம் ஒகுமானஹா. ஒரு மானஹா என்பது சிவன் என்றால் ஒகுமானஹன் நந்தி. அகுர் மஸ்தா விண்ணுவென்றால் ஒகுமானஹன் காமதேனு அல்லது நந்தினிப்பசு. நந்தியாகவும் நந்தினியாகவும் இருக்கும் ஒகுமானஹன் வழங்கக்கூடிய கோமூத்திரமும், பாலும் ஹோமத்திற்கு (யாகத்தீ) வேண்டும். சோமபானத்திற்கு வேண்டும். இந்தியாவில் வேதகாலத்தில் நிகழ்ந்த யாகங்கள் நிஜமாகப் பாரசீகத்தில் நிகழ்ந்தவை. சொல்லப்போனால் ‘ஒகுமானஹ’ என்ற சொல்லின் திரிபாகவே ‘ஹோமம்’ இருக்கலாம் அல்லவா.
அகுர்மஸ்தாவின் மூன்றாவது துணை அல்லது அமேஷாஸ் பண்டாசின் மூன்றாவது முகம் க்ஷத்ரா. க்ஷத்ராவே இந்தியாவில் க்ஷத்திரியனானது. கி.மு.ஆறாவது நூற்றாண்டில் அல்லது அதற்கு முன்பே ஈரானிலிருந்து வந்த ஆரியர்களே க்ஷத்திரியர் ஆவார். எனினும் ஈரானில் அது படைக்கலன் – போர் தெய்வம். நாட்டைக்காப்பது, போரிடுவது, பித்தளை – இரும்பு போன்ற உலோகங்களை உழவுக்கருவிகளாகவோ, படைக்கருவிகளாகவோ (வில் – அம்பு) மாற்றுவதும் கூட.
அமேஷா ஸ்பண்டா – இந்தியாவில் ‘ஹமேஷாபண்டா’. ‘எப்போதுமே அவன் கடவுளின் தூதன்’. இவனது நான்காவது , ஐந்தாவது, ஆறாவது முகங்களில் இரண்டு பெண்கள். ஒன்று ஆர்மதி. இவள் பூமிபக்தை. அடக்க ஒடுக்கமான குணமுடைய பெண்தெய்வம். ஆர்மதிக்குத் துணைவன் ஹார்வதத். மூலிகைகளின் காவலன். நீர் தெய்வமும்கூட. சுத்திக்குரிய தெய்வம். உண்மையில் ஹார்வதத்தின் மனைவியாகக் கருதப்படும் அமரேதத், செல்வம், நலவாழ்வுக்கும் வித்தாகும். பொதுவாக இம்மூன்று தெய்வங்களும் கூட்டாகவே செயலாற்றும்.
தொடக்கால ஆரிய மதவழிபாட்டுக்கும் அதாவது ‘ஆர்ரியானாம்‘ என்று பாரசீகத்தில் அழைக்கப்படும் ஈரானிய வழிபாட்டுக்கும் – இந்திய ஆரியர்கள் என்று கூறப்படும் வைதீக ஆரிய வழிபாட்டுக்கும் நிறைய உடன்பாடுகள் உண்டெனினும் பிற்கால மரபில் ஏற்பட்ட பல நல்லொழுக்க சிந்தனைகளினால் இந்துமதம் உருவானதைப்போல் மேற்கு ஆசிய நாடுகளில் கிறுத்துவமும் இஸ்லாமும் வேர்விட்டிருக்கலாம். வைதீக ஆரிய வழிபாடுகளிலிருந்து வேதாந்த ரகசியங்களில் ஒன்றாக வெளிப்பட்ட புத்தமதம் கிழக்கு ஆசிய நாடுகளில் வேர்விட்டது. அதேசமயம் ஈரானில் ஒரு மறுமலர்ச்சிபோல் எழுந்த ஜராதுஷ்டிர மதம், பின்னர் மஸ்தாயிசம், மித்ராயிசம் மனிக்கேயிசம் யாவும் கிறுத்துவம் அல்லது இஸ்லாமியத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதானால் உலகமதங்கள் எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்ணாயிருந்தது ஈரான்.
தொடக்ககால ஆரிய வழிபாடு – பிராதன ஈரானிய மதக்கருத்துக்கு இசைவான அகுர் மஜ்தாவின் செயல், இன்றைய தமிழ் நாட்டில் சன் டிவியில் காண்பிக்கப்பட்ட/காண்பிக்கப்படுகின்ற நெடுந்தொடர்களின் வில்லன்களுக்கு இணையானது. உலகம் தீமைகளால் சூழ்ந்துள்ளது. நல்லவையே இல்லை. 1000 நாட்களுக்குக் காண்பிக்கப்படும் நெடுந்தொடர்களில் கதைமுடியும் 2 நாள்கள் மட்டுமே நல்லவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மீதி 998 நாள்களில் வில்லன்களின் ராஜ்ஜியமே. ஆரிய நாட்டின் அகுர்மஜத்õவின் சிந்தனைகளை அப்படியே திராவிட நாட்டின் டி.விக்கள் ஒளிபரப்புகின்றன. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. அகில இந்தியாவிலும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் நடத்தும் வன்முறை தர்பார்கள் ஆரியத் தோன்றலாகப்படுகிறதே தவிர திராவிடத் தென்றலாகப்படவில்லை.
நெடுந்தொடர் முடிந்தபின் அகுர்மஸ்தாவின் விதியாக நிற்பவன் ‘க்ஷவரே நஹ்’ – நீரில் நிற்கும் அக்னி வடிவில் இது உள்ளது. இது அகுர்மஸ்தாவின் கட்டளை. நீரும் நெருப்புமாயுள்ள காரணம் நெருப்பைத் தரும் மரங்கள் நீரில் வாழ்வதால் அல்லது நீரில் ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளதால் இருக்கலாம். க்ஷ்வாரேநஹில் அகுர்மஸ்தாவின் கட்டளையில் தோன்றிய யிமா (எமன்) ஈரானிய புராணத்தில் முதல் மனிதன். யிமா இங்கு வித்தியாசமான கதையாக உள்ளது.
அகுர்மஸ்தா யிமாவை உருவாக்கி, அவனிட்ம் தனக்குரிய தேவதுதனாகவும், பூசாரியாகவும் பணிபுரியக்கூறியபோது யிமா மறுத்துவிட்டான். அதற்குரிய தகுதி தனக்கு இல்லை என்று கூறிய யிமா அதேசமயம் அகுர்மஸ்தாவின் மக்களை நோய் நொடியில்லாமல் வாழ வழிசெய்வதாக வாக்களிக்கவே ஒப்புக் கொண்டதாக வைவஹ்வந்த் () பாடல் கூறுவதுடன் யிமாவின் ஏற்றம், சீரழிவு எல்லாம் விளக்குகிறத. 1000ஆண்டுகள் யிமா ஈரானை ஆண்டான். ஏறத்தாழ ராம ராஜ்யம். இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லாமல் வளம். யிமா கையில் ஒரு தங்க மோதிரமும், தங்க மந்திரக்கோலும் இருந்து எல்லா வளத்தையும் சுகத்தையும் பெற்றான். இதனால் மக்கள் தொகை பெருகியது. அகுர்மஸ்தாஹவுக்கு அழிவு தென்பட்டது. ‘ஊழிகாத்துள்ளது. ஆகவே நல்ல ஆன்மாக்களை மட்டும காப்பாற்றி ‘வார்‘ என்ற இடத்தில் பாதுகாக்க உத்தரவிட்டார். கடும் குளிர், பனி, மழை பொழிந்து மக்கள் மடிந்தனர். அதன் பின்னர் யிமா இறப்பதற்குத் தலைவனானான். ஒருக்கால் ஊழிக்குப்பின் எஞ்சிய ஒரே மனிதனாகவும் யிமா இருந்திருக்கலாம்.
ஈரானிய புராணத்தில் யிமா பிற்கால மரபாயிருக்கலாம். தொடக்கத்தில் அகுர் மஸ்தாவுக்கு அறுவர்களம் அந்த அறுவர்களின் துணைகளுமே உண்டு. ஆறுமுகங்களை முன்பு கவனித்தபடி – மேலும் தொடங்கும்போது ஒஹீமனஹ்க்டு மாஹ் வடிவும் உண்டு. மாஹ் என்பது சந்திரன். அலைகளாகவும் இருப்பான். ஒஹீமனஹ-ஜியுஷ்உர்வன் என்றும் அழைக்கப்படுவான். ஜியுஷ்உர்வன் அநேகமாக ஜோராவாஸ்தவரின் படைப்பாக இருக்கலாம். பசுவின் ஆன்மாவே அவன். ஈரானிலும் வாயு உண்டு. நல்ல ஆன்மாக்களை சொர்க்கத்திற்குக் கொண்டு செல்வான்.
ஆஷா வஹிஸ்ட் பற்றி கவனித்தோம். அட்டார் என்பது தீ. ஈரானிய வழிபாடுகளில் அட்டார் (ஓமத்தீயில்) பலவகை உண்டு. பர்ன் பாக் என்பது பூசாரியின் தீபம். குஷ்நஸ்ப் என்பது போர்வீரர் – படைத்தீ. பர்சின் மிஹிர் – விவசாயிகளின் தீ. போடு ஃப்ரைன்-தாவரங்களின் தீ. வசிஷ்ட் – மின்னல் – மேகத் தீ. வ்ரஹ்ரன் – 15 வகையான உலோகங்களின் தீ, ஆஷாவஹிஸ்ட் – பஞ்சபூதசக்திகளின் தீ – அதாவது பூமி, ஆகாயம், நீர், தாவரம், கால்நடை, மனிதன் ஆகிய எல்லாமே தீயின் அம்சமே. இப்படிப்பட்ட தீத்தத்துவம் – பிற்காலமரபில் மித்ரா தோன்றி ஒஹீமனஹை – அதாவது அகுர்மஸ்தாவின் நந்தியையே தீயிலிட்டான். அப்படிச் செய்ததின் முலமாகவே மித்ரா சக்திகளைப் பெறமுடியும் என்பதும் அகுர்மஸ்ராவின் கட்டளை என்று ஈரானிய புராண மரபின் பிற்காலத் திரிபாகத் தோன்றுகிறது.
புராதன புராண மரபுப்படி ஆரியானாம் (ஈரான்) தேசத்தில் க்ஷத்திராவே சக்தியான தெய்வமாக இருந்து பிற்கால மரபில் அழிந்து சிந்து – கங்கை சமவெளியில் குடியேறி நான்கு வர்ணத்தில் முந்நிலை பெற்றதுடன் இந்தியாவில் உலோகத்தொழிலுக்கும் ஆக்கம் தந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அலெக்சாந்தர் தனது பாரசீக வெற்றிக்குப் பின்னர் நிலைகுலைந்து சிந்துவுக்கு வந்து ஒரு புருஷோத்தமனை (புரு மன்னன் – பாண்டவம்சம்) வெல்வதற்கே சிரமப்பட்டான். கங்கைப்புறத்தில் மௌரியர்களின் படைபலம் அலெக்சாந்தரைப் பின்வாங்கச் செய்தது. அப்படிப்பட்ட க்ஷத்திரா (க்ஷத்திரியன்) ஈரானிய மரபின்பஐ அகுர்மஜ்தாவின் ஆறு அம்சங்களில் ஒன்று என்பதுடன் க்ஷத்திராவே சூரியன், மித்திரன், வருணன், விசுவகர்மன், இந்திரன் எல்லாமே.
நான்காவதாக அமேஷாஸ்பண்டாவின் அர்மதி – ‘அர்தவி சுரா அன்ஹிதா’ எனப்படுகிறான். அமுர்தத் – அதாவது அமிர்தம் பெற்ற மோகினியும்கூட. விந்து – விதைகளின் தெய்வம் – தாய்தெய்வம் அதாவது அம்மன்சாமி. இவளே ‘ஹவோமா’ இந்த பாரசீகச் சொல் திரிந்து ‘சோமா’வாகி இந்திய அக்னியில் படைக்கப்படும் சோமபானமானது.
ஐந்து, ஆறு எல்லாமே அமேஷாஸ்பண்டாதான். அறிவுக்கு எடுத்துக்காட்டாக சரஸ்வதி தேனா எனப்படுகிறான். எனினும் மகாபாரத்தில் விவரிக்கப்படும் சாந்தி பருவம் இந்தியத் தத்துவங்களின் அணிகலன். அதில் இறந்தபின் ஆன்மாவின் ஒளியைப் பற்றிய விவரங்கள் உண்டு. திருதாஷ்டிரனுக்கம் காந்தரிக்கம் விதுரன் அறிவுரை கூறி – அதாவது பாண்டவர்கள் நல்லவர்களே என்றாலும் உங்களைப் பொருத்தரையில் உங்களின் நூறுபிள்ளைகளையும் கொன்ற ரத்தம் தோய்ந்த பஞ்சபாண்டவர்களின் கரங்களால் உண்ணும் சோறு பாவத்தை மேலும் அதிகமாக்கும் என்று விதுரர் கூறிய பின்பு குருஷேத்திரப் போருக்குப் பின் தருமபுத்திரன் பாதுகாப்பில் வாழ்ந்த திருதாஷ்டிரனும் காந்தாரியும் வானப்பிரஸ்தம் மேற்கொண்டு பின்னர் முக்தியுற்றனர். இது போல் குருஷேத்திரப் போரில் மிஞ்சியிருந்த ஆன்மாக்களை சாந்திபர்வம் கூறும். இறப்புக்குப்பின் ஆன்மா செல்லும் மார்க்கத்தை க்ஷோர்தர் என்று பாரசீகமொழி கூறும். நல்ல ஆன்மாக்கள் வானில் நட்சத்திரமாகும். துருவ நக்ஷத்திரம் என்று நாம் சொல்வது போல் ‘திஷ்திரையாவாத்,’ ‘ஃபிராவர்த்தின்’ என்று பல பதங்கள் இறப்புக்குப்பின் ஆன்மாவில் பயணத்தை நவிலும். நமது சாந்திபர்வம் அங்கு ‘அமுர்தத் ரஷ்னு’ என்றானது. பிறப்பதையும் இனி பிறக்கப்போவதையும் நிர்ணயிக்கம் ஆன்மா அழிவதில்லை என்ற வேதாந்தக்கருத்துக்கும் ஈரானில் இழையோடியிருந்தது. பிரவர்த்திகன் – பிரவஷி – என்றால் வலுவானவன், மனிதனின் நற்கதிக்கு உதவுவன், தீயசக்திகளை – தீய ஆன்மாக்களை வதைப்பவன் என்றெல்லாம் பொருள் உண்டு.
அசல் ஆரியத்தத்துவமான மஸ்தாயிசம் பற்றியும் மித்ராயிசம் பற்றியும் அடுத்த இதழில் கவனிக்கலாம்.
(தொடரும்)