வரலாற்றின் துணையோடு ஒரு பயணம்

‘வெள்ளிப்பனி மலையின்மீது’ பயணநூலை முன்வைத்து:

நாம் தினசரி பல ஊர்களுக்கு சுற்றுலா, வேலை, தேடல் என விதவிதமானக் காரணங்களுக்காகப் பயணம் செய்கிறோம். பழங்காலம் போல் உணவு, இருப்பிடம் போன்றவற்றுக்காக சிறு குழுக்களின் பயணங்கள் இன்று அருகியிருந்தாலும், சுற்றுலா, ஆன்மிகம், மலையேற்றம், ஆழ்கடல் தேடல் போன்ற பல காரணங்களுக்காக இன்றும் குழுவாகப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு இடத்தைச் சென்றடைவது மட்டுமே பெரும்பான்மையான பயணங்களின் குறிக்கோள். ஆனால் வெகு சில பயணங்கள் மட்டுமே கால தேச வர்த்தமானங்களைக் கடந்து மனிதனின் பெரும் இச்சையின் தேடலாக அமைகின்றன.

100510_361935_dsc_0509_uggrid-4x2தி.ஜானகிராமன் – சிட்டி (நடந்தாய் வாழி காவேரி), சே குவாரா (மோட்டார்சைக்கிள் டயரி), வீ.எஸ்.நைபால் (A Bend in the South), ஜி.செபால்ட் (Emigrants), யுவான் சுவாங் (பயணக்குறிப்புகள்) – போன்றவர்கள் மேற்கொண்ட சில பயணங்கள் சமூக ஆவணங்களாக அமைந்திருக்கின்றன. காவேரி மூலத்தைப் பார்த்த கையோடு பயணக்குறிப்பு எழுதிவிடலாம் என நினைத்த தி.ஜா-சிட்டி “காவேரி ஒரு ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம்” – என உணர்ந்தவுடன் இப்பயணத்தின் தீவிரம் புரிந்ததாக எழுதியுள்ளனர். இப்படி உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்வோருக்கு புது சமூகத்துடன் பழகிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தீர்ப்புகளுக்குள் நுழையாமல் புது சமூகத்தின் பக்கங்களைப் பதிவு செய்தல் இப்படிப்பட்ட ஆவணங்களின் அடிப்படை தேவையாக இருக்கிறது. வேறொரு உலகில் நுழைபவன் பயணங்களுக்கே பிரத்யேகமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறான்.எவ்வித மனச்சாய்வுகளுக்கும் ஆளாகாமல் பார்க்கக்கிடைத்த உதிரி உண்மைகளை நேர்மையாகப் பதிவு செய்வது மட்டுமே அந்த ஒப்பந்தத்தின் ஒரே விதி.

மார்க்கோ போலோ, அல்பெரூனி போன்ற பல யாத்ரீகர்கள் தாங்கள் வெற்றி அடைந்த நிலப்பகுதிகளைப் பற்றி நாட்குறிப்புகள் எழுதியுள்ளனர். பெரும்பாலும் வணிகம், ஆக்கிரமிப்பு போன்ற சுயநல நோக்கங்களோடு இப்பயணங்கள் அமைந்திருக்கின்றன.கிடைத்த லாபங்களை பங்கிட்ட பின்னர் இம்மைக்குப் பின் புகழுக்காக மட்டுமே இப்பயணக்குறிப்புகள் எழுதப்பட்டன. பல சமூகக்குறிப்புகள் இருந்தாலும் இவை பெரும் பயணங்களாக மட்டுமே அறியப்பட்டுளன; தேடல் அனுபவமாக மாறவில்லை. அக எழுச்சி உந்திய தேடல்கள் மட்டுமே உயர்ந்த பயண அனுபவங்களாக எஞ்சுகின்றன. இப்படிப்பட்ட உயர்ந்த அனுபவங்களை அடைய ஹிலாரி, டென்சிங் செய்ததுபோல் வீர தீர சாகஸம் நிறைந்த பயணங்கள் செய்யத்தேவையில்லை. கடலின் அறிய முடியாத ஆழங்களையும், எட்ட முடியாத மலைச் சிகரங்களையும் அளக்கும் பயணங்களாக அமையத் தேவையில்லை. தன்னிருப்பை சத்தமில்லாமல் நிகழ்த்திக்காட்டும் ஒரு சூரியோதயத்தைத் தேடி அமையலாம். ஊரின் இடிபாடுகளுக்கிடையே வரலாறின் சுவடைத் தேடும் விதமாக இந்த அனுபவம் அமையலாம். வாழ்ந்து சரிந்த தெருவும் அதில் உலவிய ஆளுமைகளின் வாழ்வினுக்குள்ளும் அத்தேடல் அமையலாம்.

தேடல்களைக் கொண்ட பயணங்கள் விதவிதமான அனுபவங்களை தரக்கூடியவை.அவற்றை பதிவு செய்யும் பயணியின் பொறுப்பும் மிக அதிகமானது. வெற்று தகவல்களை மட்டும் கொடுத்தால் நாட்குறிப்பு போல் அப்பயணத்தின் சாரம் நீர்த்துப்போய்விடும் அபாயம் உண்டு.தகவல்களைத் தாண்டி கலாசாரம் மற்றும் வரலாறை முன்வைத்து தன் அனுபவங்களை எழுத வேண்டிய கட்டாயம் அவனுக்கு உண்டு.மன்னர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களோடு நின்றுவிடாமல் நாடோடிக் கதைகள் மூலம் தொன்மங்களுக்கும் மக்கள் வாழ்வுக்கும் இருந்த தொடர்பை நிலைநாட்ட வேண்டிய அவசியம் உள்ளது.பழங்கதைகள், இதிகாசம் மூலம் இவை அனைத்தும் தழும்பு போல அழியாத நினைவுகளாக என்றும் நிற்பதையும், புராணக்கதைகளை எண்ணிப்பார்க்கும் சமயத்தில் சமகால மாற்றங்களைக் கணக்கில் கொண்டு பதிவு செய்வதும் அவசியமாகிறது.

இவையனைத்தையும் கருத்தில் கொண்டு இமயம் போல் உயரமும் மாட்சிமையும் மிக்க விரிவான பயணக்குறிப்பு நூலாக `வெள்ளிப் பனிமலையின் மீது’ புத்தகம் கவிதா பப்ளிகேஷனால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் மலையாளத்தில் `ஹைமதபூவில்’ என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. புகழ்பெற்ற மாத்ருபூமி இதழின் நிர்வாகத் தலைவரான எம்.பி.வீரேந்திர குமார் எழுதிய இந்நூலை சிற்பி பாலசுப்ரமணியம் தமி்ழ்ப்படுத்தியுள்ளார். ஒரு மொழிபெயர்ப்பைப் படிப்பது போலில்லாமல் சீரான வேகத்துடன் தெளிவாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

பயணத்துள் புகுவதற்கு முன் ஒரு கேள்வி- பயணக்குறிப்பு நூலில் வரலாறு, மரபு, ஐதீகத்துக்கான தேவையென்ன?

பயணக்குறிப்பு மூலம் யாத்ரீகன் காலத்தின் முடிவுறாத கதைகளை நம்முடன் பேசியபடியே இருக்கிறான். இது பயணம் செய்யும் இடங்களைப் பார்ப்பதைவிட நமக்கு அதிக கிளர்ச்சியைத் தரும். ஏனென்றால் ஒரு கலாச்சாரத்தை மொழி மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம். மொழியோ பல நூற்றாண்டுகளாகச் சுட்டும் பொருள், இடுகுறிப் பொருள் எனப் பல மறைபொருள்களை தன்னகப்படுத்தியுள்ளது. `விசும்பு’, `கார்மேகம்’ எனும் போது இவ்வார்த்தைகள் வழியாக பல சாளரங்கள் நமக்குள் திறக்கின்றன. இதைப்போல இன்று கலாச்சாரம் எனும் வார்த்தை மரபு, கட்டுப்பாடு போன்ற அர்த்ததில் ஒரு இடுகுறிச்சொல்லாக சரிந்துவிட்டது. எப்படி ஆன்மிகம் என்ற சொல் தத்துவ அடையாளங்களை இழந்து கடவுள், வழிபாடு எனக்குறிப்பதாகச் சிதிலமடைந்துவிட்டதோ அதைப் போல். பழுத்த சொல்லான மரபைப் போல் கலாசாரமும் அதிக கல்லடிபடுகிறது. கலாசாரம் எனும் வார்த்தையைப் பிரயோகித்தாலே அடிப்படைவாதி எனும் முத்திரை இலவசமாகக் கிடைக்கிறது. இதனால் கலாசாரக் குறிப்புகள், மரபுக்கதைகள் அவற்றின் சாரத்தை இழந்து வருகின்றன.

மொழியானது எண்ணங்களைச் சுமப்பதோடு மட்டுமல்லாது வரலாறையும் தன்னகப்படுத்தியுள்ளது. இதனாலேயே காலதத்துவம் இருக்கும் வரை மொழி எல்லாவற்றையும் விழுங்கி செரித்து உரமேறியபடி இருக்கும். இதன் காரணமாக பயணக்குறிப்பு எழுதும்போது மாறிவரும் இடத்தின் வரலாறை மட்டும் எழுதாமல் மொழியின் மரபுக்குள்ளும் புக வேண்டியது அவசியமாகிறது.

இந்திய வரலாற்றாசியர் ரோமிலா தாபர் (Romila Thapar) தன் `இந்திய சரித்திரம் – பாகம் ஒன்று’ எனும் ஆய்வு நூலில் புறச்சமூக அமைப்பைப் பற்றிய விழிப்புணர்வு எப்படி வரலாற்றியலில் முக்கியமாகிறது என்பதை இந்திய சமூகத்தைக் கொண்டு விவரிக்கிறார். அதில் ஒரு உதாரணமாக, இந்திய சமூக அமைப்பில் பெளத்த, ஜைன சமயத்தின் தோற்றம் ஏற்படுத்திய மாற்றத்தை இந்தியா எனும் கருதுகோளோடு பொருத்திப் பார்க்கிறார். கடலுடன் சேரும் நதியைப்போல் இயல்பானதொரு மாற்றமாக பல்லிறைச் சமூகத்தில் இச்சங்கமம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார். தொலைத்தொடர்பு இல்லாத காலத்தில் பயணம், உரையாடல் மூலம் இச்சமூகங்கள் இணைந்திருக்கின்றன. பண்டமாற்றம் போல் சமூகப் பழக்கவழக்கங்கள் இடமாறியுள்ளன. வரலாறின் முக்கிய ஆவணமாக கலாசாரம் மற்றும் மொழி உள்ளது என்றால் அது மிகையில்லை. இதனாலேயே புது சமூகங்களை விவரிக்கும் பயணக்குறிப்புகள் வரலாறையும், மரபையும், கலாசாரத்தையும் தொட்டுப் பேசியபடி இருக்கின்றன. பயணத்தில் வரும் திசைக்காட்டியைப் போல் புதுத்திசையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. மரபைப் பற்றிப் பேசுவதால் பழைய கருதுகோள்களை உயர்த்திப் பேசுவதாக அர்த்தமாகாது.

இதற்கு `வெள்ளிப் பனிமலையின்மீது’ மிகச் சிறந்த உதாரணம்.

தில்லி முதல் ரிஷிகேசம், ஹரித்துவார், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் போன்ற ஆன்மிக இடங்கள் வழியாக இப்பயணம் அமைந்திருக்கிறது. 2003ஆம் ஆண்டு நூலாசிரியர் எம்.பி.வீரேந்திரகுமார், அவர் மனைவி உஷா, மாத்ருபூமியின் ஆசிரியர் பி.வி.சந்திரன், கோபாலகிருஷ்ணன், ஹேமலதா என நூலாசிரியருடன் பணி செய்வோரும் இப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஒரு ஆன்மிகப் பயணமாகத் தொடங்கினாலும், பாதி வழியிலேயே ‘பண்பாட்டின் நீரோட்டங்களைக் குறித்த தேடலாக’ மாறியதாக எம்.பி.வீரேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ரிஷிகேசம் தொடங்கி வழியெங்கிலும் பல நதிகள் இவர்களுடன் பயணம் செய்திருக்கின்றன. பாகீரதி, அலக்நந்தா, நந்தாகினி போன்ற சிறு நதிகள் கலந்து உருவான கங்கை மற்றும் யமுனை. அவற்றின் கரைகளில் தோன்றிய நாகரிகங்களை வழித்தடங்களாக ஆசிரியர் பதிவு செய்கிறார். ஒவ்வொரு இடத்தை அடையும்போதும் அதைப்பற்றி பல ஐதீகங்களையும், தொன்மக்கதைகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். ஒரு ஊருக்குள் நுழைந்தவுடன் அதன் சரித்திர நிகழ்வுகளைக் கூறத்தொடங்கி ஒரு முழுமையான சித்திரத்தை அளித்த பின்னர் அண்மைக்கால மாற்றங்களை விவரிக்கிறார். இமயமலைச் சாரல்களின் அனுபவங்கள், சப்த சங்கமமாக இணையும் பிரயாகைகள், மலைமேலுள்ள ஆலையங்கள், பள்ளத்தாக்குகளில் பூக்கும் பலதரப்பட்ட பூ வகைகள் என இப்பயணத்தின் மையம் பரந்துவிரிந்த இயற்கை அனுபவமாக மாறுகிறது. ஆன்மிகத்திலிருந்து இயற்கை, சூழியல் எனப் பேசியபடிச் செல்லும்போது சரேலென வழியில் பார்த்த மனிதர்களின் மனங்களுக்குள்ளும் பிரயாணம் செய்யத் துவங்குகிறார். புனிதநதியான கங்கையை விவரிக்கும் அதே அக்கறையுடன் டோலியாக வரும் சுரேந்தரின் கதையைக் கேட்டு பதிவு செய்கிறார். அதனால் ஒரு எல்லை வரை சமூக ஆவணமாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது.

தில்லியில் பயணத்தைத் தொடங்கும்போது ஆசிரியரின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நினைவுகளில் மூழ்குகிறது. வருடங்கள் மெளனமாகப் பின்னகர சோஷிலிஸ்ட் கட்சித் தொண்டனாக நாடாளுமன்றம் வரை நடத்திய கண்டனப் பேரணியில் பங்கு கொண்டதை நினைவுகூர்கிறார். கட்சித் தலைவரான ராம் மனோகர் லோகியா பற்றியும், இந்தியன் காபி ஹவுசில் அவருடன் செலவழித்த நேரங்களையும் நினைத்துப்பார்க்கிறார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக தில்லியின் வேறொரு முகத்தைப் பார்த்திருக்கிறார். பல முறை பார்த்திருந்தாலும் தில்லி ஒவ்வொரு முறையும் புதிதாக இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. மெல்ல பின்னோக்கி புராணங்களுக்குள் புகுந்துகொள்கிறார். தில்லியின் பண்டைய பெயரான இந்திரபிரஸ்தம் பற்றி விவரிக்கிறார். மகாபாரத ஊரான இந்திரப்பிரஸ்ததின் தோற்றம் வளர்ச்சி என இன்றைய தில்லியின் கம்பீரத்துக்கான காரணத்தைப் புராணத்தில் தேடுகிறார். தேவலோகமாகக் கருதப்பட்ட இந்திரபிரஸ்தம் பற்றிய பல தனிச்சிறப்புகளைக் கூறியபடி அடுத்த இடமான குருஷேத்திரத்திற்குள் நுழைகிறார்.

இன்றைய தில்லியின் ஆட்சியாளர்கள் பற்றிப் பேசும்போது பல அரசர்களின் கனவாக தில்லி இருந்ததையும் மொகலாய ஆட்சியாளர்களான நிஜாமுதீன், அலாவுதீன் கில்ஜி, துக்ளக், ஹுமாயூன், ஷாஜகான் என சரித்திரத்துக்கு வளம் சேர்த்தவர்களைப் பற்றியும் பல கதைகள் கூறுகிறார். பல முறை தில்லி எரிந்த அழிந்த பின்னும், சர்க்கரையைச் சுற்றி எறும்பு திரிவதைப் போல், பல அரசர்கள் அதைச் சுற்றி கைப்பற்றுவதற்காக வலம் வந்திருக்கிறார்கள். வீரப் போர்களைப் போல் தில்லி வாழ் மக்களின் கதைகளும் ஆச்சர்யமாக இருக்கின்றன. அதிக வரி வசூல், நேர்மையற்ற அதிகாரிகள், உணவுப் பற்றாக்குறை என பெரும்பாலான அரசர்களின் ஆட்சியின்போது மக்கள் பாடு திண்டாட்டம்தான்.

1911 ஆம் ஆண்டு தில்லி தர்பார் உருவான கதை மூலம் தில்லி கட்டடக்கலை வல்லுனர்கள் பற்றித் தெரிந்துகொள்கிறோம். திட்டமிடுதல் தொடங்கி உருவாக்கத்தில் உதவும் வரைபடங்கள், சரியான உபகரணங்கள், பகலிரவு பாராமல் உழைக்கும் மக்கள் என பல நுண்ணிய விஷயங்கள் ஒரு நகரின் தலையெழுத்தை தீர்மானிக்கிறது. எதிர்காலத்தில் பல சம்பவங்கள் நகரத்தின் அமைப்பால் உருவாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என தில்லி தர்பாரின் தோற்றம் தொடர்பாக பல நிகழ்வுகளை வர்ணிக்கிறார்.

கடந்தகால புராணங்களையும், ஐதீகக் கதைகளையும் சொல்லிச் சென்றாலும் நூலாசிரியரின் கண் நிகழ்காலத்தையும் பார்த்தபடியே இருக்கிறது. ஹரித்துவாரை அடையும்போது கங்கைநதி வற்றியிருந்தது கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தில்லியில் இருந்த சோனியா விஹார் தொழிற்சாலைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டது ஹரித்துவார் மக்களுக்குத் தெரியாது. பலகாலமகவே தண்ணீர் விற்பனைக்காகவும், கோலா கம்பெனிகளின் தேவைக்கும் கங்கையில் கைநனைப்பது பழக்கமாகிவிட்டது. பண்டைய இந்தியாவில் புதியவர்களைச் சந்திக்கும்போது `தாங்கள் எந்த நதியுடன் தொடர்புடையவர்?’ எனக் கேட்கும் வழக்கம் இருந்ததாம். தண்ணீரைத் தனியார்மயமாக்கும் இத்தலைமுறையினருக்கு இக்கேள்வி புதிதாக இருக்கலாம். ஆனால் நம் பெயர், ஊர் போன்ற பிரத்யேக அடையாளங்களைப் போல் நதியும் இருந்திருக்கிறது. Blue Gold என்ற புத்தகத்தை எழுதிய சூழியல் ஆர்வலர் மோட் பார்லோ, சுகுமார் அழிக்கோடு போன்றவர்கள் தண்ணீர் பாதுகாப்புக்காக பிளாச்சிமடை எனும் இடத்தில் நம் வருங்கால சந்ததியினருக்காக நிறைவேற்றிய தீர்மானம் குறித்து ஆழமான வருத்ததுடன் எழுதுகிறார். தண்ணீரை வணிகமாக மாற்றியதில் அரசுக்கும், பல நாட்டு தொழிற்சாலைக்கும் இருக்கும் தொடர்பை விளக்குகிறார். பல தகவல்களுக்கு நடுவே தினம் 6,350 லட்ச லிட்டர் கங்கை நீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பப்படுகிறது எனும் தீற்றல் செய்தி திடுக்கடைய வைக்கிறது.

78a4176f671039f228f381305e9a_grande

கங்கையிலிருந்து யமுனை பயணிக்கும்போது ஆசியரின் கவித்துவ மனம் விழித்துக்கொள்கிறது. ஜெயதேவரின் `கீதா கோவிந்தம்`, வசுதேவர்-தேவகி மைந்தனான கண்ணனின் தோற்றம், யமுனைக் கரையில் ராதா-கிருஷ்ணனின் இராச லீலைகள், பிருந்தாவனம் என பல தோரணங்களைக் கட்டி பெரிய கனவொன்றை எழுப்பிவிடுகிறார். முக்கியமாக கீதா கோவிந்தம் பாடல்களின் வார்த்தை அழகும், ஓசை லயமும், இனிமையான இசையும் கேட்போர் மனதை உருக்கச் செய்யும் பக்திப் பாடல்களாகும். வேகமாக ஓடும் யமுனை நதியும் இப்பாடல்களையே முணுமுணுத்தபடி செல்கிறது என மனமுருகுகிறார்.யமுனையில் தொடங்கி ஜெயதேவர், வல்லபர் போன்ற பக்தி மையங்களோடு பதினாறாம் நூற்றாண்டின் பக்தி இலக்கியத்தின் சரித்திரத்தை முடிக்கிறார். நமக்கும் யமுனைக் கரையில் அமர்ந்து இப்பாடல்களை ரசிக்கும் அனுபவம் ஏற்படவேனுமெனத் தோன்றும்படி ஆழ்ந்திருக்கிறார்.

மெல்ல பயணம் இயற்கையிலிருந்து ஆளுமைகள் நோக்கி நகர்கிறது. பிரயாணம் செய்யும் பலரும் யமுனை மன்னவனான கண்ணனைப் பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். கார்மேக வண்ணனாக வர்ணிக்கப்படும் கிருஷ்ணன் பல தத்துவங்களாக நம்மிடையே வாழ்கிறான். வெளிநாட்டவர்களுக்குக் கருப்பு நிறம் துக்கத்தின் சின்னமாக இருக்கிறது. ஆனால் இந்திய தத்துவத்தில் கருப்புக்கு ஆழம், அடர்த்தி எனப் பொருள்களுண்டு. இதை அடிப்படையாகக் கொண்டு ரிக் வேதத்திலும், ஸ்மிருதிகளிலும் பிரளயத்தின்போது பிரபஞ்சம் முழுவதும் கறுப்பு நிறம் சூழ்ந்திருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என விவாதம் தொடர்கிறது. ஒரு பறவையின் இரு சிறகுகள் போல் வாழ்வில் யோகமும் கர்மமும் கிருஷ்ணரால் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பது ஓஷோவின் Krishna – The Man and his Philosophy புத்தகத்தின் சாரமாக இருப்பதாக நூலாசிரியர் விளக்குகிறார். இப்படியாக பிரபஞ்ச கீதம், இதயத்தின் தாளம் எனும் பகுதி ஒரு தத்துவ விவாதம் போல் இந்திய சமயங்கள அனைத்தையும் தொட்டுச் செல்கிறது.

ருத்ர பிரயாகையை அடையும்போது விவாதமும் திசை திரும்புகிறது. சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த இடமாகிய ருத்ர பிரயாகை இனிமையான இசையால் நிரம்பியிருந்தது போல் நூலாசியருக்குத் தோன்றியதாம். இதற்கு பிரயாகையின் ஓசை காரணமாக இருக்கலாம். அலக் நந்தாவும் மந்தாகினியும் சேரும் இடமாததால் இதயத்தை வசீகரிக்கும் நீர் ஓசையின் பின்னணியில் சுவாமி பல நாட்கள் தியானத்தில் இருப்பார். இளமையில் மிகுந்த இசை ஆர்வம் மிக்கவராக இருந்த சுவாமி விவேகானந்தர் இந்த இடத்தில் பல இனிமையான பாடல்களைப் பாடியுள்ளார். பயணக்குழுவும் சுவாமி விவேகானந்தரின் பல தத்துவங்களையும், அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் அசைபோட்டபடி பயணத்தைத் தொடர்கிறது. அப்படியே கேதார்நாத்துக்குள் நுழைந்ததும் அந்த இடத்துக்கும் சைவ பாரம்பரியத்துக்குமான தொடர்பை நூலாசிரியர் விளக்குகிறார். முக்கியமாகத் தமிழகத்தைச் சேர்ந்த பல சித்தர்களின் கதைகள் இங்குள்ளதாக விவரிக்கிறார்.

மெல்ல இமயமலைச் சிகரங்கள் வழியெங்கும் தென்படத்துவங்குகின்றன. அவற்றின் அதிரூபத்தில் லயித்திருந்தபோதும், பாதையின் குறுக்கே விழும் பாறைகளையும் கவனித்த படி ஜாக்கிரதையாகச் செல்கின்றனர். சில சமயம் மலையிலிருந்து பல கற்கள் சரிந்துவிழுவதால் பாதை சரியாகும்வரை காத்திருக்க வேண்டும். கற்களை அகற்ற சில வாரங்கள் கூட ஆகுமாம். அதே போல் இப்படிப்பட்ட இயற்கை மாற்றங்களால் வருமானமில்லாமல் மலைகளில் வாழும் வணிகர்கள் கஷ்டப்படுவார்கள் என விளக்குகிறார். பனிப்பொழிவால் இப்பகுதி பல மாதங்களுக்கு உறைந்து போகக்கூடிய வாய்ப்பு அதிகம். அச்சமையங்களில் மக்கள் ருத்ரப்பிரயாகைக்கு இறங்கிச் சென்றுவிடுவார்களாம். சீரான வாழ்க்கை முறைகள் இல்லாவிட்டாலும் அவர்கள் அவ்விடத்திலேயே மகிழ்ச்சியாகவே இருப்பதாக நூலாசிரியர் பதிவு செய்கிறார்.

19kimp_kedar_146140f

மேலும் மலை உயரத்தைக் கடப்பதால் பயணிகளுக்குச் சுவாசிக்கவும் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆனாலும் துணிந்து கர்ணப் பிரயாகைக்குச் சென்றுவிடுகிறார்கள். இவ்விடத்தில் கர்ணனின் குணங்களைப் பற்றி நூலாசியர் கவித்துவ நடையில் விவரிக்கிறார். இப்புத்தகத்திலேயே மிகச்சிறந்த பகுதியாக இந்த நூறு பக்கங்கள் அமைந்திருக்கின்றன. சரித்திரத்தில் விளங்காத மர்மமாக என்றுமே இருப்பது கர்ணனின் கதை. ஒரு தோல்வியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டாலும், கர்ணன் சுயகெளரவத்துக்குப் பெயர் போனவன். குறிப்பாக அவன் சூரியபுத்திரன் எனத் தெரிந்தும் தன் அம்மாவிடமும், பீஷ்மரிடமும் விவாதிக்கும் போது அவன் சாதாரண நண்பனிலிருந்து ஞானியாக விஸ்வரூபமெடுக்கிறான். கவிதையின் வீச்சோடும் உணர்ச்சி மிக்க பகுதியாக இது அமைந்திருக்கிறது. குறிப்பாக அர்ஜுனனைத் தவிர மற்றவர்களைக் கொல்ல மாட்டேனென தன் தாய் குந்தியிடன் சத்தியம் தரும்போதும், தன் மகன் பானுசேனன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு பிரபஞ்ச தரிசனத்தை வியக்கும் தருணமும் இந்நூலுக்கு ஒரு மணிமகுடம்.

நூலைப் படித்து முடிக்கும்போது இந்தியா எனும் ஒருமித்த பதத்தைப் பற்றிய எண்ணங்கள் நாம் தடுத்தாலும் நம்மை சுற்றி வலம் வருகின்றன. ஓஷோ கிருஷ்ணரை ஒரு தத்துவமாகப் பார்ப்பதுபோல் இந்தியாவைப் பல கோணங்களில் இப்புத்தகம் அணுகியுள்ளது. மரபு எனும் அறுபடாத தொடர்ச்சியின் மூலம் நம்மை வந்தடைந்திருப்பது என்ன? வரலாறு எனும் உதிரி உண்மைகளை கலாச்சாரம், ஐதீகம், நாடோடிக் கதைகள் மூலம் பூர்த்தி செய்ய முடியுமா? காற்றைப் போல் பேதமில்லாமல் பயணத்தில் நம்மைத் தொட்டுச் செல்லும் சக மனித மனங்களை நம்மோடு இணைப்பது எது? இப்படிப் பல கேள்விகள் நம்மை மோதுகின்றன.

பழம்பெரும் நாடாக செழிப்பான வரலாறு, தொன்மம், ஐதீகம் போன்றவை எந்தளவு பலங்களாக இருக்கின்றனவோ அதேயளவு பலவீனங்களாக இன்று பாவிக்கப்படுகின்றன. மொழியின் ஊடாகப் பல அர்த்தங்கள் சாத்தியப்படுவது போல வரலாறு மூலமாக இவற்றின் அர்த்தங்கள் மாறியுள்ளன. கைக்குக் கிடைக்காத ஒரு மாயமானைத் தேடும் பாவனையோடு பழங்கால புராணங்களை பயணத்தின் எழுச்சியாக நூலாசியர் தொகுத்துள்ளார். பல சமூகங்கள் இணைந்த இந்தியாவை தத்துவ மற்றும் சமூக/அரசியல் நோக்கில் புரிந்துகொள்ள இந்நூல் உதவும். இயற்கை வளங்களைப் பற்றிய விழிப்புணர்வு, சூழியல் குறித்த அக்கறை, மலைகளில் கட்டப்படும் அணைகளால் சிறு கிராமங்களுக்கு உண்டாகும் சீர்கேடுகள் குறித்த விவரங்களால் இந்நூல் இக்காலகட்டத்துக்குத் தேவையான சூழியல் பாதுகாப்பு பற்றிய முக்கியமானத் தொகுப்பாகவும் பார்க்கப்படுகிறது. இத்தகைய பன்முக நோக்கினால் இந்த 928 பக்க நூல் தமிழில் இதுவரை வந்த பயண நூல்களில் குறிப்பிடத்தக்க படைப்பாகிறது.

இப்புத்தகத்தை இணையத்தில்  இங்கே வாங்கலாம்.