ப்ளூகிராஸ் இசை – ஓர் அறிமுகம்

save

வ்வொரு வருடமும் அமெரிக்காவில் நடைபெறும் ‘கண்ட்ரி இசை விருதுகள்’ [Country Music Awards (CMA)] நிகழ்ச்சியைப் பார்க்கும்போதெல்லாம் பெருத்த ஏமாற்றமடைகிறேன். திடகாத்திரமான இளைஞர்கள், பெரிய கெளபாய் தொப்பியும், கண்ணைப் பறிக்கும் உடைகளும் அணிந்து, இரைச்சலான, சலிக்கும்படியான பாடல்களைப் பாடுவதையே இந்த நிகழ்ச்சியில் பார்க்கமுடிகிறது. இவர்கள் பாடும் பாட்டுகளில் எந்த ஒரு குறிப்பிட்ட இசைவகையின் இனிமையும் இருப்பதில்லை. பெண் பாடகர்களைப் பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்த இரைச்சலை ஏன் ‘கண்ட்ரி’ இசைவகையில் சேர்க்கிறார்கள் என நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன்.

இசை என்பது அகவெளிப்பாடு என்றாலும் கூட, இசையில் ஒரு குறிப்பிட்ட வடிவம் உருவாகி வருவதில் புறச்சூழலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ‘கண்ட்ரி ம்யூசிக்’ என்ற அமெரிக்க இசைவகையை, நாட்டுப்புற இசைவேர்களைக் கொண்டதொரு இசைவடிவம் என மேலோட்டமாக வரையறுக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஒரு வடிவமாகத் தனித்து அறியப்படும் இந்த கண்ட்ரி இசை, காலப்போக்கில் செறிவாகிப் பல கிளை இசைவகைகளையும் தோற்றுவித்திருக்கிறது. அதேசமயம், தனித்துவமானதொரு உள்ளார்ந்த இசை உணர்வையும் கொண்டதாக இருக்கிறது. எளிய மனிதர்களின் இசைக்குரல் கண்ட்ரி இசையில் வெளிப்பட்டது. அவர்களுடைய தினப்படி வாழ்க்கை, சக மனிதர்களுடனான உறவுகள், இயற்கையையும், இறைவனையும் குறித்த எண்ணங்கள், தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளவேண்டிய உடலுழைப்பு, துயர்மிகுந்த இருண்ட வாழ்வில் வெளிச்சக்கீற்றைத் தரும் வெகு சில தருணங்களான காதல் மற்றும் எளிய சந்தோஷங்கள் – இவையே பெரும்பாலும் கண்ட்ரி இசையின் பாடுபொருட்களாக இருந்தன. கண்ட்ரி இசை இதுபோன்ற பல எளிய உணர்ச்சிகளின் கலவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பிழைப்பு தேடி அமெரிக்காவுக்குள் அகதிகளாக வந்தப் பல நாட்டவர்கள், தங்கள் கடந்தகால நினைவுகளாகச் சுமந்துகொண்டுவந்த இசைவகைகளின் கலப்பாகவும் இருக்கிறது. ஸ்காட்லாந்து மக்கள் தங்கள் நாட்டுப்புற வயலின் இசையைக் கொண்டுவந்தார்கள் என்றால், போலந்து மக்கள் சிறப்பான நடனத்தைக் கொண்டுவந்தார்கள். ஒரு நெடியநாளின், கடின உழைப்பின் ஆயாசத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக உருவான இந்த இரண்டு கலைகளின் கலப்பு, இரண்டு கலாசாரங்களிலும் வேர்கொண்ட உயரிய கலை வெளிப்பாடாகவே இருந்தது. இப்படிப் பல நாடுகளின் நாட்டுப்புற இசைவடிவங்கள், தங்கள் தனித்துவத்தை இழக்காமல் ஒருங்கே இணைந்து, எளிய மனிதர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதே கண்ட்ரி இசைவகை உருவான எளிய வரலாறு. இப்பாடல்களின் பாடுபொருள்கள் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஆங்கிலப்பாடல்களை விரும்பிக் கேட்பவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய உணர்ச்சிகள் என்பதால், இந்த இசைவகை இன்று பிரபலமான ஒன்றாகவே இருக்கிறது.

கண்ட்ரி இசை மூலமும், அதன் கிளை இசைவகைகள் மூலமும் வெளிப்பட்ட சிறந்த கலைப்படைப்புகள் உலகை அழகாக்கியிருக்கின்றன. ‘ப்ளூகிராஸ்’ (Bluegrass) அப்படிப்பட்ட சிறந்த இசை வெளிப்பாடுகளைத் தந்த கண்ட்ரி இசையின் கிளை வடிவம். ப்ளூகிராஸ் இசையைப் பின்புலமாகக் கொண்டு 2000-ஆம் வருடம் வெளிவந்த ‘Oh Brother, where art thou’ என்ற திரைப்படம் காரணமாகவும், அதில் பங்களித்த ‘The union station’ என்ற ப்ளூகிராஸ் இசைக்குழுவின் காரணமாகவும், ப்ளூகிராஸ் இசைவடிவம் மீது கடந்த சில வருடங்களில் ஒரு புதிய கவனம் விழுந்திருக்கிறது.

பெரும்பாலான கலைவடிவங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும், அவற்றின் நுட்பங்களைக் கவனிக்கவும், அக்கலையில் தேர்ச்சியடைந்ததொரு கலைஞரின் உதவி தேவைப்படுகிறது. முதன்முதலின் நான் குண்டேச்சா சகோதரர்களின் த்ரூபட் இசையைக் கேட்டபோது அது எனக்கொரு புதிய தரிசனமாகவே இருந்தது. அதற்கு முன்பே நான் சிலமுறை த்ரூபட் இசையைக் கேட்டிருந்தாலும், அன்று நான் கேட்ட குண்டேச்சா சகோதரர்களின் கச்சேரி, த்ரூபட் இசையின் பல நுணுக்கங்களைக் காட்டுவதாகவும், அதில் பொதிந்திருக்கும் இந்திய ஆன்மிகப் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும் இருந்தது. அதற்குப்பின் நான் வேறு த்ரூபட் பாடகர்களைத் தேடிப்பிடித்துக் கேட்க ஆரம்பித்தேன். இந்தமுறை என்னால் அவர்கள் இசையோடு மேலும் நன்றாகத் தொடர்புகொள்ள முடிந்தது. இதற்குக் காரணம் குண்டேச்சா சகோதரர்களின் கச்சேரியே ஆகும். ப்ளூகிராஸ் இசைவகையையும் இப்படிப்பட்டதொரு கலை மேதைமை மூலமே கண்டடைந்தேன்.

சில வருடங்களுக்கு முன் ஒரு மாலைப்பொழுதில் நான் கேட்க நேர்ந்த, ‘Oh brother, where art thou’ படத்தில் இடம்பெற்று பெரிய ஹிட்டான டான் டிமின்ஸ்கியின் ‘Man of Constant Sorrow’ என்ற பாட்டுதான் ப்ளூகிராஸ் குறித்து அப்படியொரு புரிதலைத் தந்தது. அதற்கு முன்பே நான் ப்ளூகிராஸ் வகைப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். டான் டிமின்ஸ்கியின் பாட்டின் போக்கையும், இசைக்கருவிகள் பயன்படுத்தியிருக்கும் விதத்தையும் வைத்து அது ப்ளூகிராஸ் வகையைச் சேர்ந்தது என்று என்னால் எளிதில் புரிந்துகொள்ளமுடிந்தது. சிறகடித்துப் பறந்து மிதக்கும் டான் டிமின்ஸ்கியின் குரலிலிருந்த ஜீவன், ஒரு வாழ்க்கைச்சூழலையே பிரதிபலித்தது. அது மிகவும் புத்துணர்ச்சியளிப்பதாகவும் இருந்தது. இந்தப் பாட்டு மூலம் நான் டான் டிமின்ஸ்கி பங்களித்த ‘Union Station’ என்ற இசைக்குழுவையும் கண்டுகொண்டேன். இந்த இசைக்குழு பல சிறப்பான ப்ளூகிராஸ் பாடல்களைத் தந்திருக்கிறது. மிகச்சிறந்த ப்ளூகிராஸ் பாடகியான ஆலிஸன் க்ராஸ் (Alison Krauss) இந்தக்குழுவோடு இணைந்து பல பாடல்களைத் தந்திருக்கிறார். குண்டேச்சா சகோதரர்கள் ‘த்ரூபட்’ இசையின் அற்புத உலகத்தைக் காட்டியதுபோல ‘Union Station’ இசைக்குழு எனக்கு ப்ளூகிராஸ் இசையின் பல அற்புதப் பரிமாணங்களைக் காட்டியது.

o-brother-where-art-thou-movie-poster-1020539268

முந்நூறு வருடங்களாகப் பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் தஞ்சம் தேடி வந்தவர்கள் பெரும்பாலும் தென் கிழக்குக் கடற்கரையிலிருக்கும் அப்பலாச்சியன் மலைத்தொடரில் தங்கினார்கள். அவர்கள் மூலம் அங்கே வந்துசேர்ந்த பல்வேறு நாடுகளின் கிராமிய இசைவகைகளின் சங்கமம் (fusion), அவர்கள் பணிச்சூழலாலும், புவிச்சூழலாலும் வடிவமைக்கப்பட்டது. இந்த சங்கம இசை, ‘மலை இசை’ (Mountain music) என்றொரு கட்டற்ற இசைவகையைத் தோற்றுவித்தது. பல்வேறு நாடுகளின் கிராமிய இசையின் பங்களிப்போடு சேர்த்து, அமெரிக்க மண்ணின் பங்களிப்பும் இந்த இசையில் இருந்தது இதன் சிறப்பம்சம்.

காலப்போக்கில் 1930களில் மலையிசையில் புதிய இசைக்கருவிகளும், ரெக்கார்டிங் கருவிகளும் சேர்ந்தன. அதே சமயத்தில் கிட்டத்தட்ட இதே சூழலிலிருந்து மேலெழுந்து உருவாகிவந்த ஜாஸ் இசையின் பாதிப்பும் மலையிசையில் ஏற்பட்டது. இவ்வாறு மலையிசையோடு சேர்ந்து ஜாஸ் இசை, ராக்டைம் (ragtime) இசை ஆகியவை கலந்து உருவாகியதொரு வித்தியாசமான நாட்டுப்புற இசையே ப்ளூகிராஸ் இசை என்றறியப்பட்டது. இப்படிப்பட்டதொரு இசையை இரண்டாம் உலகப்போருக்குப்பின் 1940களில் பிரபலமாக இருந்த ‘ப்ளூகிராஸ் பாய்ஸ்’ என்ற இசைக்குழு இசைத்தது. அந்தக்குழுவின் பெயரே இந்த இசைவகைக்கும் வைக்கப்பட்டது. அந்த இசைக்குழுவின் தலைவரான பில் மன்றோ ப்ளூகிராஸ் இசையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

ப்ளூகிராஸ் பெரும்பாலும் காற்றுக்கருவிகளால் இசைக்கப்படுவது. பாஞ்ஜோ தாளக்கருவியும், டோப்ரோ (Dobro) ஒலியதிர்வு கிதாரும் (Resonator Guitar) பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. குரல் பகுதிகளில் ஒருவிதமான செழுமைப்படுத்தப்படாத ஒத்திசைவு (coarse harmony) இருக்கிறது. இப்படிப்பட்டக் குரல் ஒத்திசைவு, ப்ளூகிராஸ் இசைவகையின் நாட்டுப்புற, இயற்கைச்சூழலைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், ப்ளூகிராஸ் இசையின் முத்திரையான, அதி வேகமாக மீட்டப்பட்டும் இசைக்கருவிகளோடு சிறப்பாக ஒத்துப்போவதாகவும் இருக்கிறது. இன்று ஒரு ப்ளூகிராஸ் இசைக்குழுவானது, மாண்டலின், கிதார், பாஞ்ஜோ, வயலின், டபுள் பாஸ் வயலின், ஒலியதிர்வு கிடார் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. குரல் பகுதிகள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஒரு ப்ளூகிராஸ் பாட்டில் குரல் பகுதியின் மெலடியை, இன்னொரு இசைக்கருவி தன் எல்லைக்குட்பட்டு மேம்படுத்தி அடுத்த இசைக்கருவியிடம் மெலடியைத் தரும். இப்படி ஒரு இசைக்கருவி முன்னிலை வகிக்கும்போது மற்ற இசைக்கருவிகள் பக்கவாத்தியமாக இயங்குகின்றன. இந்த call-and-response தன்மையை நாம் ஜாஸ் இசையிலும் கேட்கமுடியும். இதற்கு முன்பிருந்த பிற கண்ட்ரி இசைவகைகளில் ஒரு குரல் பகுதியோ, இசைக்கருவியோ முன்னிலை வகிக்க, பிற இசைக்கருவிகள் ஒத்துழைப்பாக இருக்கும். மற்ற இசைக்கருவிகள் பாடலின் மைய மெலடியை முன்னிலை எடுத்து வாசிப்பதில்லை. அதிலிருந்து மாறியதொரு நவீன அம்சமாக ஜாஸ் இசையிலும், ப்ளூகிராஸ் இசையிலும் இந்த call-and-response தன்மையைக் கேட்கலாம். ஒருவிதத்தில் ப்ளூகிராஸ் இசை, சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த கண்ட்ரி இசைக்கும், ஜாஸ் இசைக்கும் நடுவில் இருக்கும் ஒரு இசைவடிவமாகும். கண்ட்ரி இசைபோல முழுதும் நாட்டுப்புற இசையாக இல்லாமலும், ஜாஸ் இசைபோல நுணுக்கப்படுத்தப்பட்ட இசையாக இல்லாமலும்,  நாட்டுப்புற வேர்கள், நவீன இசைவெளிப்பாடு இரண்டின் கலவையாகவும் இருக்கிறது ப்ளூகிராஸ். சமீபகாலங்களில் கண்ட்ரி இசையில் பல மாற்றங்கள் வந்துவிட்டன; நிறைய மின்னணு இசைக்கருவிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால் ப்ளூகிராஸ் 1940களிலிருந்த வடிவத்திலிருந்து அதிகம் மாற்றமில்லாமல் இருக்கிறது.

ஒரு பொதுவான ப்ளூகிராஸ் பாடல் இப்படி இருக்கும்.

பாப் இசையைப் பொருத்தவரை அதைப் பிரபலமாக்கும் காரணிகள், மேன்மையான இசையின் ஜீவனையும், ஆத்மாவையும் புரிந்துகொள்வதில் போதாமை கொண்டவை என்பது உலகளாவிய உண்மை. ஆனால் ஓர் இசைமேதை சில சமயங்களில் தன் மேதமையால் தன் கலைப்படைப்பை எப்படியாவது வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துவிடமுடிகிறது என்பதும் உலகளாவிய உண்மைதான். அப்படிப்பட்டதொரு கவனத்தை ஆலிஸன் க்ராஸ், யூனியன் ஸ்டேஷன் இசைக்குழு இணைந்து ப்ளூகிராஸ் இசை மீது ஏற்படுத்தினார்கள் என்று சொல்வதில் கொஞ்சமும் மிகைப்படுத்துதல் இல்லை. இந்த இசைக்குழு தேர்ந்த ஐந்து இசைக்கலைஞர்களால் ஆனது. இவர்கள் ஐவரும் இணைந்து ஒரு சிறந்த கலைப்படைப்பையும் தரமுடிகிறது, அதை வெற்றிகரமாக வணிகப்படுத்தவும் முடிகிறது.

alison_krauss_lrbw

ப்ளூகிராஸ் இசையில் பின்னாட்களில் சேர்க்கப்பட்ட டோப்ரோ கிதார் ஒரு புத்துணர்வூட்டும் அம்சமாக இருக்கிறது. ப்ளூகிராஸ் இசைவகைக்காகவே அந்த கிதார் உருவாக்கப்பட்டதோ என நம்மை வியக்கவைக்கிறது. (மாண்டலின், வயலின் ஆகியவையும் ப்ளூகிராஸுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.) யூனியன் ஸ்டேஷன் இசைக்குழுவில் டோப்ரோ கிதார் வாசிக்கும் ஜெர்ரி டக்ளஸ், இந்த இசைக்கருவியை மிகத் திறமையாகக் கையாளத் தெரிந்த இசைக்கலைஞராவார். டோப்ரோ கிதாரை இவர் பாஞ்ஜோ, acoust கிடார் ஆகியவற்றின் துள்ளவைக்கும் ஒத்துழைப்போடு ஒரு புதிய உயரத்துக்குக் கொண்டுசெல்கிறார். அவருடைய திறமைக்கும், ப்ளூகிராஸின் துள்ளலுக்கும் ஒரு உதாரணத்தை இங்கே கேட்கலாம்.

இது வெறும் நடன இசை கிடையாது. குறிப்பாக நடன இசை என்று இப்போதெல்லாம் நம்முன் வைக்கப்படும், நாம் வெறும் பழக்கத்தால் தலையசைக்கும், அழுத்தி வாசிக்கப்பட்ட தாள இசை கிடையாது. இது இசைக்கருவியின் அற்புதமான ஒலியையும், அதை வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் மேதைமையையும் கூட தாண்டிய ஒன்று. நாள் முழுக்க கடினமான உடலுழைப்பில் உழன்றுவிட்டு, மாலையில் திறந்தவெளியைத் தேடிப்பிடிக்கும் ஆத்மாவின் அக வெளிப்பாடு இந்த இசை. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாலை நேரங்களில் குளிர்நெருப்பின் (campfire) கதகதப்பைத் தேடி அமர்ந்த ஜீவனின் குரல் இந்த இசை. காற்றின் ஓட்டம், தீயின் நடனம், மரங்களின் சலசலப்பு போன்ற நடனத்துக்கு உத்வேகமாக இருக்கும் கிராமிய இசைக்காரணிகளைக் கூட இந்த இசையில் கேட்கலாம். இதை இசைக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களின் மேதைமையையும் தாண்டி, இதில் ஒரு செழுமையின்மை, பண்படுத்தாத தன்மை இருப்பதைக் கவனிக்கமுடிகிறது. அதற்குக் காரணம், இந்த இசையின் ஜீவன் நாட்டுப்புற இசையில் வேர்கொண்டிருக்கிறது. இந்த இசை செவ்வியல் இசையைப் போல உள்ளார்ந்து சிந்திக்க வைப்பதில்லை. மாறாக எந்த ஒரு நாட்டுப்புற இசையைப் போலவும், தன்னோடு இழுத்துக்கொண்டு ஆடவைக்கிறது. ஒரு கிராமிய இசை நமக்குக் காட்டுப்போவதைப் போல, சிந்தனை வயப்படுத்தும் நுண்கலைகள் போலவே, உந்துதலில்லாமல் மேலெழுகிற (spontaneous) மன வெளிப்பாடும் மிக முக்கியம் என இந்த ப்ளூகிராஸ் இசை காட்டுகிறது.

ப்ளூகிராஸ் முதல் பார்வைக்குத் தெரிவதைப் போல வெறும் நடன இசை இல்லை. எல்லா நாட்டுப்புற இசைகளைப் போலவே, இது மண்ணின் இசையாகவும், வாழ்வின் எல்லா வண்ணங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பக்தி இசையின் (gospel music) தாக்கமும் இந்த இசையில் இருக்கிறது. அமெரிக்காவின் ஆரம்பகால குடியேறிகள் தீவிரமான மத நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருந்தது அதற்கான காரணமாக இருக்கவேண்டும். ஆனால் வழக்கமான சர்ச் இசையைப் போல முன்வரையறை செய்யப்பட்டதாகவும்,  சடங்கானதாகவும் இல்லை ப்ளூகிராஸ். சர்ச் இசையின் தீவிரத்தைக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், வாழ்வின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுத்தனம் நிரம்பியதாகவும் இந்த இசை இருக்கிறது. ஆலிஸன் க்ராஸ் பாடும் பிரார்த்தனைப் பாடலான ‘Down to the River to pray’ என்ற ப்ளூகிராஸ் பாடலைக் கேட்டுப்பாருங்கள். அது ஒரு சர்ச் பிரார்த்தனைப் பாடலிலிருந்து எப்படி வேறுபட்டிருக்கிறது எனத் தெரியும்.

முதலில் கேட்ட ‘Man of constant sorrow’ பாடலில் அடிநாதமாக ஒரு சோக இழை ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் மாண்டலின், பாஞ்ஜோ மற்றும் ஹார்மோனி ஒத்திசைவின் காரணமாக நாம் வழக்கமாகக் கேட்கும் சோக இசையிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. இதில் ஒலிக்கும் சோகம், வலிந்து திணிக்கப்படாமல், இயல்பான ஒன்றாக இருக்கிறது. சோகம் மட்டுமில்லாமல் வேறெந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும்போதும் ப்ளூகிராஸ் இசை அதை வலிந்து திணிப்பதில்லை. ஏனென்றால் இசை வழியாக அது வாழ்வின் ஒரு சிறு கூறை வெளிப்படுத்துகிறது. ஏனவே அது மனதை ஒரு நாடகத்தனமான திசையை நோக்கித் திருப்புவதில்லை. அப்படிப்பட்ட இசை வெளிப்பாடுகளில் நாம் கலையின் ஆத்மார்த்தத்தோடு தொடர்புகொள்கிறோம். ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியோடு இல்லை. அதனால் இப்படிப்பட்ட இசையனுபவங்கள் செறிவானதாகவும், முழுமையானதாகவும் இருக்கின்றன.

இசை என்பதே ஒரு தொழில்முறையாகிவிட்ட நம் காலங்களில், இப்படிப்பட்ட அரிதான கலையமைப்பைத் தன்னுள் வைத்திருக்கும் இசைவகைகளைக் கேட்பதே அரிதாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாகப் பலரும் இப்படிப்பட்ட மேன்மையான இசைவகைகளைப் பழமையானவை என்று புறந்தள்ளுகிறார்கள். இப்படிப்பட்டச் சூழலில், நம் காலகட்டத்தின் போக்கை உடைத்து, தரமான இசையை வெற்றிகரமாகத் தந்துகொண்டிருக்கும் யூனியன் ஸ்டேஷன் போன்ற இசைக்குழுக்களுக்கு நாம் பெரிதும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

(தமிழில்: சேதுபதி அருணாசலம்)