பிஸ்கட்டு, பழம்

பத்து வருடங்களுக்கு முன் அக்காளின் தோழியுடைய பர்ஸிலிருந்து நான் 150ரூபாய் திருடிக் கொண்டு இதே போல ஒரு அதிகாலையில் நான் காணாமல் போயிருந்தேன். திருவானைக்கா பக்கத்திலொரு லாரியில் தொத்திக் கொண்டு, ஊரை விட்டு “ஓடிப் போயிருந்தேன்”. அது 10 வருடக் கதை. போன வாரம் ‘ஸ்ரீரங்கத்திற்கு அக்காவைப் பார்க்கப் போகணும்’ என்று முடிவெடுத்தேன். கையில் சேர்ந்திருந்த இருபத்தைந்தாயிரம் ரூபாயும் ஒரு காரணம் தான். நேற்று இரவு பெங்களூரு சென்ட்ரலில் ஏறியதிலிருந்து, குரங்கு மனம் இன்னும் குதித்துக் கொண்டிருந்தது. அதிகாலையிலும் வெயில் தெரியும் திருச்சி மலைக்கோட்டை ரயில் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன்.

ஸ்டேஷனிலிருந்து வெளியேறும் கூட்டத்தின் பின்னால் வந்து, ஒழுங்கு இல்லாமல் நின்று கொண்டிருந்த ஆட்டோ, டாக்ஸி, ரிக்ஷா வண்டிகளைத் தாண்டி வந்தேன். சவரம் காணாத என்னுடைய இரண்டு நாள் தாடி, கையில் ஒரு சிறிய பை, இன் செய்யப்படாத பெரிய காலர் சர்ட், தொள தொளவென்று ஒரு பான்ட் – இந்த அலங்காரத்தோடேயே வெளியே வந்தேன். ஸ்டைலாக ஆடையுடுத்தி வரும் பெண்களூர் பெண்களைக் கண்டதும் ஓடி வந்து “ஆட்டோவா?” என்று கேட்ட காக்கிகள், கைலிகள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வேகமாக மணி அடித்து ஒரு சைக்கிள் ரிக்ஷா ஓட்டுன‌ர், என்னை ஏறிட்டுப் பார்த்தார். யாராலுமே என் மன வேகத்துக்கு ஈடாக என்னை ஸ்ரீரங்கம் கூட்டிப் போக முடியாது.

ஸ்ரீரங்கம் போகும் பஸ்ஸில் ஏறி, காவேரிப் பாலத்தில் காலைக் காற்றை சுவாசித்த போது, மூச்சுக்காற்று ஆசையாக அப்படியே உள்ளேயே தங்கிக் கொண்டது. பாலத்துக்கு அப்பால் தெரிந்த‌ பெரிய கோபுரமும் இந்த‌ப் ப‌க்க‌ம் நான் படித்த (அல்லது படிக்கத் தவறிய) ஈ.ஆர். ஹைஸ்கூலும் கண்ணில் நீர்க் கொணர‌, பத்து வருட ஆசைகளை எச்சிலோடு விழுங்கிக் கொண்டேன். ஸ்டேஷன் முக்குக் காப்பிக்கடையில் காப்பி குடித்திருக்கலாம். மனம் எப்பவோ அக்காளைப் பார்க்க ஸ்ரீரங்கம் போயாகி விட்டது. உடல் தான் இப்ப மெள்ள பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறது காலைக் காப்பியையும் ம‌ற‌ந்து.

இப்ப சத்தியா, அக்காவுக்கு கல்யாணம் ஆகியிருக்குமோ? என்ன வீராப்பு எனக்கு? என் வாழ்வையும் அவள் வாழ்வையும் ஒரு வழிப் படுத்தும் வக்கில்லாமல் எதற்கு மும்பைக்கும் டில்லிக்கும் ஓடிப்போனேன்? ஓர் ஆணின் கையாலாகாத் தனம் இப்படித் தான் வெளிவ‌ருமா என்ன?

சரியாய்ப் பத்து வருடங்கள் முன் என்னுடைய அப்பா தவறிப் போனார். அப்போது தான் நான் பத்தாவது ஃபெயில் ஆகி இருந்தேன். அப்பா பக்கத்தில் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் வாத்தியார். அவருக்கு வருமானம் பெரிதாய் ஒன்றும் இல்லை. ‘கிடக்கப் படுத்து, இடப்பக்கம் நொந்து’ யாரிடமும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல், ஒரு அப்பாவியின் சாவு அவருக்கு. அதற்குப் பின் அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர் எனக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் வேலை வாங்கித் தரப் பார்த்தார். எனக்கு விருப்பம் இல்லை.

“ஏண்டா, பெருமாளுக்கு சேவை செஞ்சா குறஞ்சுட மாட்டே!” என்றார். அவர் பெண் பின்னாலிருந்து சப்தமில்லாமல் நக்கல் சிரிப்பு சிரித்தது. நான் பத்தாவதில் ஃபெயில் ஆகியிருந்தேன், அவளோ எஸ். வி. எஸ். பெண்கள் பள்ளியில் பத்தாவதில் முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள். இப்போதே பிலானியிலோ திருச்சி ஆர்.இ.சி.யிலோ எஞ்சினியரிங் படிக்கப் போவதாக ‘அகராதித்தனம்’ செய்து கொண்டிருந்தாள். சின்ன வயசிலே இருந்தே, அவளும் அவள் தோழிகளும் எங்கேயாவது போனால், பின்னாலேயே சைக்கிளில் போய் பெல் அடித்து வம்பு செய்வது நானும் என் கூடவே பத்தாவதில் ஃபெயிலான கமலக்கண்ணனும் தான். இதில் இப்போ என்னைப் பார்த்து இந்த பெண்ணுக்கு கேலி!

அப்பா போன பிறகு, அம்மா என்னை படிக்கச் சொல்லி அடிப்பதும், அடித்து விட்டு அழுதுவதும் அதிகரித்திருந்தது. அவ்வப்போது தஞ்சாவூரிலிருந்து வரும் பெரியம்மாவும் அம்மாவை ஏதாவது சொல்லி அழ வைத்துக் கொண்டிருந்தாள். ப்ளஸ் டூ முடித்து விட்டு வீட்டோடு ஏதோ தையல் செய்து கல்யாணத்துக்கு பணம் சேர்த்துக் கொண்டிருந்த என்னை விட ஐந்து வயது பெரியவளான என் வேதா அக்காவையும், “ஒரே பிள்ளை” வாழ வைத்து விடுவான் என்று நினைத்த அம்மாவையும் விட்டு விட்டு – அண்ணாமலை ரஜினிகாந்த் மாதிரி வந்து விட மாட்டேனா என்று வீட்டை விட்டு – ஒரு நாள் அதிகாலை கிளம்பி விட்டேன். சும்மா போயிருந்திருக்கலாம், வழிச் செலவுக்கு வேண்டுமே என்று மாலையில் வீட்டுக்கு வந்திருந்த வேதாவின் தோழி சித்ராவின் கைப்பையிலிருந்து அகப்பட்ட ரூ.150ஐ எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

10 வருடங்களில் எல்லாமே மாறிப் போயிருந்தது. திருச்சி சத்திரம் ரொம்பவுமே மாறி இருந்தது. திருவானைக்கா, இன்னமும் ஸ்ரீரங்கம் போகும் வழி முழுக்க அபார்ட்மெண்ட் வீடுகள் அட்டைகளாய் நெருக்கமாய் நின்று கொண்டிருந்தன. அடையாளமே தெரியாத ஸ்ரீரங்கத்தில் வந்து இறங்கி, வீதிகளைச் சுற்றியாகி விட்டது. நாங்கள் வாடகைக்கு இருந்த குச்சு வீட்டை இப்போது காணோம். அம்மாவையோ அக்காவையோ காணோம். பெருமாளைக் கூடச் சாயங்காலம் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த போது, திடீர் என்று, வேதாவையே சுற்றிக் கொண்டிருந்த என் தோழன் நரசிம்மனின் வீட்டுப் பக்கம் போய்ப் பார்க்கலாம் என்று தோன்றியது. ரங்கநகர் பக்கம் வந்தேன்.

நரசிம்மன் என்னை விட பத்து வயது பெரியவன், அவன் எங்கள் வீட்டுக்கு வருவதெல்லாம், என்னைப் பார்ப்பதற்காக வருவதில்லை என்று சின்ன வயதிலேயே எனக்குப் புரிந்திருந்தது. நரசிம்மன் இருந்தது ரங்க நகரில் கூட்டுக் குடித்தனத்தில் சொந்த வீட்டில் ஒரு சின்ன போர்ஷன். உறவினர்கள் வீட்டை போர்ஷன் போர்ஷனாகச் செய்து, பங்கு போட்டு பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

பக்கத்தில் இருந்த கல்யாண மண்டபங்கள் காணாமல் போனாலும், நரசிம்மனின் வீடு அவ்வளவாக மாறவில்லை. நரசிம்மன் இன்னும் நிறைய இளைத்திருந்தான். ஒரு சைக்கிளின் டயரில் காற்றடித்துக் கொண்டிருந்தவன், என்னை ஏறிட்டுப் பார்த்து, அதிர்ந்தான்

திண்ணையில் தளர்ந்து அமர்ந்து “ஏண்டா, சீனி!” என்றான். சிறிது நேரம் இருவருமே பேசவில்லை.

“ஏதாவது லெட்டராவது போட்டிருக்கலாமே? உங்க அம்மாக் கோசரமாவது?” அவனுக்குக் களைத்த தோற்றம், என்றாலும் குரல் மாறவில்லை.

“அம்மா?” தொண்டை அடைத்தது. கேட்கக் கூடாததைத் தவிர்க்க தொண்டையை கனைத்து, “எப்படி இருக்கா?” என்றேன்.

“இருக்கா. உசிரோட. நீ வந்து காரியம் பண்ணனும்னு இருக்காளோ என்னமோ” நரசிம்மனின் குரல் தடித்தது. அவன் உள்ளே திரும்பி “வேதா, சீனி வந்திருக்கான்” என்றான்.

எனக்குக் கை கால் நடுங்கியது. தொண்டையில் பெரியதாய் அடைத்தது. இருமிக் கொண்டேன்.

வேதா வெளியே வந்தாள். அவள் கன்னச் சதை கரைந்து போனதில், கண்கள் இன்னும் பெரியதாய்த் தெரிந்தன. கழுத்தில் ஒரு அழுக்கான மஞ்சள் கயிறு. கைகளில் ரப்பர் வளைகள், காதில் கவரிங் போன தோடு. இடுப்பில் கண்களில் நீர் இல்லாமல் அழுது கொண்டு ஒரு ஐந்து வயதிருக்கும் வாண்டுப் பெண். பின்னாலேயே ஆறேழு வயதிருக்கும் இன்னொரு சுட்டிப் பெண்.

வேதாவும் நானும் அழுதோம். வேதா தன் குழந்தைகளைக் கட்டிக் கொண்டு அழுத போது இன்னும் எனக்குத் தொண்டையை அடைத்தது. உள்ளே போனோம். நாமமும் சக்கரம்/சங்கு போட்ட படம், பக்கத்திலேயே சயனித்த ரங்கநாதர் படம் என்ற சின்ன அறை. ஓரத்தில் படுக்கை சுற்றி இருந்தது. அம்மாவைக் காணோம். உள்ளே பாத்ரூமில் யாரோ இருமிக் கொண்டிருந்தார்கள்.

“நரசிம்மனோட எப்ப கல்யாணம் ஆச்சு?” வேதாவிடம் மெல்லக் கேட்டேன்.

நான் எதிர்பாராமல், பின்னாலிருந்து நரசிம்மன் வந்து வேகமாக என்னைப் பிடரியில் அடித்தான். “ஏண்டா நாயே! 10 வருஷம் எங்கடா போனே?”

எதுவும் வாயைத் திறப்பதற்குள் இன்னுமொரு அடி முதுகில் வந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் வேதாவின் பின்னால் போய் நின்று கொண்டன. “அப்பா அடிக்காதேப்பா”, சின்ன பெண் கத்தினாள்.

வெளியே போன நரசிம்மனின் கோபம் தீரவில்லை என்பது அவன் சைக்கிளை உதைத்த உதையில் தெரிந்தது. குழந்தைகள் வேதாவின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டன.

போகும் போது நரசிம்மன் சொல்லிக் கொண்டே கிளம்பினான், “காத்தாலியே சகுனம் சரியால்லன்னு நினைச்சேன். வந்துட்டான் பாரு கடங்காரன். ஏண்டா இருமிண்டே இருக்கியே? எதுவும் எய்ட்ஸ்னு இல்லியே?”

நான் பதில் சொல்வதற்குக் காத்திராமல், சைக்கிளை மிதித்துப் போய் விட்டான்.

“அவர், இன்னும் அந்த பிரின்டிங் ப்ரஸ்ல தான் வேலையா இருக்கார்…அம்மா காத்தால எழுந்து பாத்ரூம் போனாள்னா, வேணும்னே பாத்ரூம்லருந்து வெளில வரமாட்டாள். அவர் ஆஃபீஸ் போனப்புறம் தான் வருவாள். அவர் தினப்படிக்கு, அவரோட சித்தியாத்துல போய் தான் குளிச்சு எல்லாம் ரெடியாறது… ஞாயித்திக்கிழமை எல்லாருக்கும் உயிர் போயிடும்!”

சின்னது துடுக்காய்ச் சொன்னது, “மாமா, நீ வந்ததினால தான் அப்பா கோச்சுண்டு சாப்டாம ப்ரஸ்க்கு போயிட்டார்!”. வேதா குழந்தையைத் திட்டினாள்.

இந்த அமர்க்களத்தில், அம்மா வெளியே வந்தாள். தலைமுடி தலைக்கு நெருக்கமாகக் கத்தரித்து விடப் பட்டிருந்தது. நான் “அம்மா” என்றேன். அம்மா “ஏ” என்று கத்தினாள். என்னைப் பார்க்கவே இல்லை. அம்மாவின் கண்க‌ளில் உள்ளே உயிர் இருப்ப‌து போல‌வே இல்லை.

அம்மா என்னைப் பார்க்காம‌ல் “போ போ” என்று சொல்லிவிட்டு எனக்கு முதுகைக் காட்டி த் திரும்பியவள், “உம் பொண்டாட்டி சீமந்தத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லியே! என் ஆத்துக்காரர்ட்ட தானே நீ ஸ்கூல்ல படிச்சே?” என்று சொல்லி விட்டு, சுற்றி வைத்திருந்த‌ ப‌டுக்கையின் மேல், த‌லையை வைத்துப் ப‌டுத்துக் கொண்டாள்.

வேதா க‌ண்க‌ளைத் த‌ழைத்து, அம்மாவுக்குச் சித்த‌ம் க‌ல‌ங்கிய‌தாக, மெல்ல கையால் சைகை செய்தாள். குழ‌ந்தைக‌ள் இருவ‌ரும் இறுக்க‌ம் ச‌ற்றே த‌ள‌ர்ந்து சிலேட்டுக் குச்சி ஒன்றை வைத்து சண்டை போட்டுக் கொள்ளத் தொடங்கினர்.

“நீ காணாமப் போனப்புறம், எல்லாருக்கும் பதில் சொல்லியே மாளலை. சித்ரா இப்பக் கூட நீ 150ரூவா எடுத்துண்டு போயிட்டேன்னு தான் சொல்வா… தையல் வேலை பண்ணி முதல்ல அவளோட கடனைத் தான் அடைச்சேன். ரெண்டு வருஷம் தையல் வேலை அப்பளம், அது இதுன்னு போராடிண்டிருந்தோம். அம்மா நீ காணாமப் போன அன்னியிலேர்ந்தே மொள்ள இப்படி செத்துண்டே இருக்கா……” மூக்கைச் சிந்திக் கொண்டாள்.

“அம்மாவப் பாரு எப்பிடி இருக்கான்னு? நாள் முழுக்க சுத்திச் சுத்தி வரா, தன் காரியத்தைப் பாத்துக்கறா. அப்ப அப்ப கிளம்பி எங்கியாவது போயிடுவா… எனக்குன்னு சமையல், குழந்தைகள் எதுக்குமே அம்மா ஒரு ஒத்தாசை கூட பண்ண மாட்டா…. நீ ஓடிப் போனப்புறம், இவர் தான் ரொம்ப ஹெல்ப் பண்ணார். ஒரு நாள், கல்யாணம் பண்ணிக்கலான்னு சொல்லிட்டார்… அந்த கல்யாணம் முடியறதுக்குள்ள, எனக்கு ப்ராணன் போகாம இருந்ததே அதிசயம்…. நீ எப்பிட்ரா இருக்கே? ஒரு லெட்ட‌ராவ‌து போட்டுருக்க‌க் கூடாதா? இருக்கியா, செத்தியான்னே தெரியலை…” வேதா சொல்லி முடிப்பதற்குள் நெற்றி ந‌ர‌ம்பு புடைக்க‌ அழுதாள்.

சாப்பாட்டுக்கு அலைந்து, பிச்சை எடுத்து, திருடி…, போன‌ புதிதில் சேர்க்கை ச‌ரியில்லை. வாழ்க்கையில் சாதிக்காமல் ஒரு கடிதம் எழுதவும் மனம் இல்லை. போலிஸில் மாட்டி அப்புறம், ஓர‌ள‌வுக்கு ப‌ய‌ம் தெளிந்து, டில்லியிலிருந்து மும்பை, அங்கிருந்து பங்களூரு என்று வ‌ந்து, கூலி வேலை செய்து இன்றைக்கு ஒரு முதலாளியிடம் ஆட்டோ ஓட்டுகிறேன். சொந்த‌மாக இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை சேர்ந்திருந்த‌து. அப்பாவுக்கு திவ‌ச‌ம் வருவது ஒரு நாள் நினைவுக்கு வந்தது. இத்தனை நாள் அப்பா திவசம் நினைவுக்கு வந்த போதெல்லாம் ஏதோ ஒரு கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். இங்கே வரத் தான் திராணியில்லை. இப்பொழுதாவது வேதாவுக்கு இந்த பணத்தையாவது கொடுத்து விட்டுப் போகலாமென்று இங்கே வந்தேன். இதையெல்லாம் சுருக்கமாகச் சொன்னேன்.

ப‌ண‌த்தைப் பையோடு முன்னால் வைத்தேன். வேதா பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. கைவிரல்களை கைகளுக்குள் மடக்கிக் கொண்டாள். “வேண்டாண்டா, புது ஆட்டோவோ என்ன தேவையோ வாங்கிக்கோ” என்றாள் விம்மலோடு .

அம்மா வாரிச்சுருட்டிக் கொண்டு அவ‌ச‌ர‌மாக‌ எழுந்தாள். என் கையிலிருந்து அம்மா வேக‌மாக‌ ப‌ண‌த்தைப் பையோடு வாங்கி, அவ‌ச‌ர‌மாக‌ எடுத்து ஒரு சின்ன ம‌ர‌பீரோவில் வைத்தாள்.

நான் வேதாவைப் பார்த்து, “உன‌க்கு க‌ல்யாண‌ம் ஆகியிருக்குமோன்னு தெரிய‌ல‌டி. அதுக்கு இருக்கட்டுமேன்னு பணம் சேத்தேன்” என்றேன்.

“அம்மா, பாட்டி ஏன் ப‌ண‌த்தை உள்ளே எடுத்து வ‌ச்சா?” என்ற‌து பெரிய‌ பெண்.

“பாட்டிக்கு ஒட‌ம்பு ச‌ரியாக‌ணும்னா டாக்ட‌ர்கிட்ட‌ போணும்னு சொன்னியே, இந்த‌ ப‌ண‌த்துல‌ டாக்ட‌ர் பாட்டியை குணப்படுத்திடுவாரா? ” இது துடுக்கான சின்னப் பெண்.

“சும்மாருங்கோடி” என்றாள் அக்கா. அதற்குள், “மாமா, எம்பேரு ராதை, இவ பேரு கோதை.” என்ற‌து சின்ன‌ப் பெண்.

பீரோவில் பணத்தை வைத்து விட்டு என் பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்த அம்மா, வேக‌மாக‌ ச‌மைய‌லுள் உள்ளே போனாள். என்ன‌ என்று புரிவ‌த‌ற்குள், ஒரு அலுமினிய‌ முற‌ம் கொண்டு வ‌ந்து, என்னைப் பெற்ற தெய்வம் என்னைச் ச‌ர‌மாரியாக‌ அடித்தாள். நான் த‌ரையில் சுருண்டு கிட‌ந்தேன்.

வேதா அம்மாவைத் தடுக்கப் பாய்ந்தாள். முறத்தைப் பிடுங்கப் பார்த்தாள். அம்மாவோ முற‌த்தை விசிறி எறிந்து விட்டு, அதே படுக்கையில் அதே மாதிரி முதுகைக் காட்டிக் கொண்டு தலை வைத்துப் ப‌டுத்துக் கொண்டாள். “குழ‌ந்தை புண்யாஜ‌ன‌த்துக்கானும் கூப்பிடு. இத்தனை வருஷம் உங்காத்துல ஒரு விசேஷத்துக்கானும் கூப்பிட்டியா நீ? வேதா கல்யாணத்துக்குக் கூட உன்னைக் கூப்டேனே, நீ வரலியே” என்றாள் அம்மா.

நான் எழுந்து அம‌ர்ந்து கொண்டேன். பின்னங்கழுத்து வலித்தது. ம‌ன‌ம் மிகவே வலித்த‌து. குழ‌ந்தைக‌ள் கலக்கத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. வேதா “என்ன‌ம்மா ப‌ண்றே?” என்று அழுகையுட‌ன் அலுத்துக் கொண்டாள். சின்னப் பெண் ராதை பக்கத்தில் வந்து, “மாமா வலிக்கிறதா?” என்றாள். நான் இல்லை என்று தலை ஆட்டியதும், அரைநொடி தயங்கி, “நீ எங்களுக்கு என்ன வாங்கிண்டு வந்தே?” என்றாள்.

யாருக்குமே எதுவும் வாங்கி வராமல், வெறும் பணத்தைப் பரிசாகக் கொடுத்து 10 வருடங்களைத் திரும்ப வாங்கி விடலாம் என்ற நினைப்போடு நான் வீட்டுக்கு வந்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.