நான் வளர்கிறேனே மம்மி

shaving_man_kid“அப்பா, என் ரூமுக்கு வாங்க…” கதவைத் திறந்ததும் அருண் என் கைகளைப் பிடித்துக்கொண்டு குதித்தது. ஒன்றும் புரியாமல் விஜியைப் பார்த்தேன். விஜி முகத்தில் மர்மமான புன்னகை. எனக்கொன்றும் புரியவில்லை. “ஒங்க பையன் ஒங்ககிட்ட என்னமோ பேசணுமாம்,” மனதுள் அபாய விளக்கு எரிந்தது.

வேலை மாறுதல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பையில் வசிக்கிறேன். மும்பைக்கு வரப் பிடிக்காததால், மதுராவின் பத்தாம் வகுப்புத் தேர்வைக் காரணம் காட்டி என்னை மட்டும் நாடு கடத்திவிட்டார்கள். மாதத்தில் ஓரிரு முறை சென்னை வந்து போகிறேன். பல்கலைக் கழகங்களில், விசிட்டிங் ப்ரொஃபசர்கள் போல, நான் இப்போ விசிட்டிங் ஃபாதர். அடுத்த நாள் நடக்கவிருக்கும் மாதாந்திரப் பஞ்சாயத்துக்கு (மாத ரெவ்யூ) சென்னை வந்து, வீட்டுக்கதவைத் திறந்தவுடன் இந்தக் கூத்து. எதுக்கு என்று யோசிப்பதற்குள், என்னை அறைக்குள் இழுத்துச் சென்றது.

உள்ளே போனதும், சட்டையைக் கழற்றி, தன் கையை உயர்த்தி, அக்குளைக் காட்டியது. “முடி முளைச்சிருக்கா?” எனக்குப் புரிந்துவிட்டது. வெளியே வந்து, “இவுங்களுக்கும் growing up classes நடக்க ஆரம்பிச்சிருச்சா?” என்றேன் விஜியிடம். “ஆமா, நாலு நாளா ஒரே இம்சை.”

theschoolஅருணும், மதுராவும், சென்னை ஜே.கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் நடத்தும் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளியின் பெயரே பள்ளிதான் (The school). மதிய உணவோடு கல்வியும் புகட்டும் பள்ளி. படிப்பில் போட்டி, மதிப்பெண், ரேங்க் போன்ற எதையும் வற்புறுத்தாத இடம். தியொசபிகல் சொசைட்டி அருகில், மரங்களடர்ந்த ஒரு சூழலில் இருக்கிறது. குழந்தைகள் ஆறாம் வகுப்பு
வந்தவுடன் அவர்களுக்கு பாலியல் கல்வியை அறிமுகம் செய்துவிடுகிறார்கள். அந்த excitement குழந்தைகளிடம் கொஞ்சநாள்வரை இருக்கும். பெற்றோருக்கு அதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

இரவுணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அருணன், அவன் அம்மாவிடம் சொல்லிவிட்டான். “Mom, we need some guys time.” அவன் அம்மா, கையை மேலுயர்த்தி கும்பிட்டாள். “சந்தோஷமா போயிட்டு வாங்க சாமிகளா, Have a nice time. பாலாவைக் கடவுள் காப்பாற்றுவாராக.”

இரவு அவன் அறையில் படுத்துக்கொண்டேன். அவனிடம் க்ரோயிங்-அப் வகுப்புகளைப் பற்றிப் பேசும் ஆர்வம் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

“யாரு இந்த க்ளாஸ் நடத்தறாங்க?” என்று துவங்கினேன். இந்த உரையாடலைச் சீக்கிரம் முடிப்பது என் மனநலத்துக்கு நல்லது. தன் ஆசிரியையின் பெயரைச் சொல்லி அந்த அக்கா என்றான். பள்ளியில் ஆசிரியைகள் “அக்கா” என்றும், ஆசிரியர்கள் “அண்ணா” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

“டாட், எனக்கு எப்ப மீசை முளைக்கும்?”

“சீக்கிரமே…”

“இப்ப முளைக்க ஆரம்பிச்சிருச்சா?”

“இன்னும் இல்லப்பா…”

“எய்த்து பசங்க ரெண்டு பேருக்கு முளைக்க ஆரம்பிச்சிருச்சி டாட்.”

“சில பேருக்கு சீக்கிரம் முளைக்கும்.. சில பேருக்குக் கொஞ்சம் லேட்டாகும்டா” என்று ஆசுவாசப்படுத்தினேன். எனக்கு கல்லூரியில்தான் முளைக்கத்துவங்கியது என்று ஆறுதல் சொன்னேன்.

“அது பெரிய விஷயமே இல்ல.. கவலைப் பட ஒன்றுமில்லை..”

“அப்ப, நீ பொண்ணு மாதிரி இருந்தியா?” என்று சிரிப்பு.

“போடா.. பையன் எப்படிரா பொண்ணு மாதிரி இருப்பான்? லூஸூ”

“அப்பறமா, அக்கா பீரியட்ஸ் பத்தியிம் சொன்னாங்க…”

“என்ன சொன்னாங்க?”

“ரொம்ப ப்ளட் போகுமா டாட்?”

“இல்லப்பா.. கொஞ்சம்தான்.”

“சில பேருக்கு ரொம்ப வயிறு வலிக்குமாமே?”

“ஆமா.. ப்ரீயட்ஸ் சில பேருக்கு ரொம்பக் கஷ்டம்”

“அக்கா சொன்னாங்க, அவுங்க ஸ்கூல்ல ஒயிட் யூனிஃபார்ம். ரொம்பப் ப்ராப்ளமாம். ட்ரெஸ்ல கறையாயிடுமாம். பாய்ஸ் கிண்டல் பண்ணுவாங்க… ரொம்ப அழுவாங்களாம்.”

கொஞ்ச நேரம் அமைதி.

“ஃபூல்ஸ் டாட்” என்றான் அருண்

“யாருடா?”

“ஒயிட் யூனிஃபார்ம் வச்சவுங்க.”

“ஆமா. அது பொண்ணுங்களுக்கு ரொம்ப கஷ்டம்ணு யோசிச்சிருக்க மாட்டாங்க.”

“மதுராவுக்கும் வலிக்குமா?”

“ஆமாண்டா. நீ பாத்திருக்கேல்ல… அவ ரொம்ப டயர்டா இருப்பா.”

மீண்டும் அமைதி.

“கேர்ள்ஸ் பாவம்பா”

அவனைக் கட்டிக்கொண்டேன். “கரெக்ட் அருணா. தூங்கலாமா? எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேல இருக்கு. காலைல சீக்கிரம் போகணும்.”

“டாட்… ஒரு விஷயம் கேக்கலாமா?”

இது விடியும் வரை இம்சை. அர்விந்த் அவனுக்கு non-stop nonsense என்று பெயர் வைத்திருந்தான். ஆனால், கிண்டல்கள் அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை.

“கேளு. வேண்டாம்னா விடவாப் போறே?”

“நீங்களும் அம்மாவும் அது பண்ணீங்களா?”

“எதுடா?” என்று துவங்கியவுடன் அவன் கேள்வி புரிந்து விட்டது. இது அபாய அறிவிப்பு.

“பின்ன, நீ என்ன ஆகாசத்தில இருந்த குதிச்சே? ஷட் அப் அண்ட் கோ டூ ஸ்லீப்” பின்னால் சந்திக்க நேரிடும் அபாயத்தைக் காக்க முன்கோபமே சரியான வழி.

“Yuk Dad…” உவ்வே என்று வாந்தியெடுக்கும் முகபாவனைகளைக் காண்பித்தது. கையைக் கொண்டு முகத்தை மூடிச் சிரித்தது.

“அருணா, போதும். வாய மூடிட்டுப் படு” குரலின் கடுமை உயர்ந்தது, அருண் திரும்பிப் படுத்துக் கொண்டது. அப்பா என்னும் அதிகாரம் சில நேரங்களில் எவ்வளவு வசதி.

sex-education-india_26

கொஞ்ச நேரம் அமைதி. “அருணா” என்று தொட்டேன். தூங்கி விட்டிருந்தான். அவன் எப்போதுமே அப்படித்தான். பேசிக்கொண்டேயிருப்பான். திடீரென்று தூங்கிவிடுவான். சின்னக் குழந்தையாக இருந்தபோது, ஒருமுறை மதியம் ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அப்படியே தட்டில் தலை சரிந்து தூங்கிவிட்டது நினைவுக்கு வந்தது. லேசான சிரிப்போடு எழுந்தேன் “லூஸூப் பய.”

தண்ணீர்க் குடுவையிலிருந்து டம்ப்ளரில் நீர் எடுத்துக்கொண்டு வந்தபோது, பால்கனியின் கதவு திறந்திருந்தது. சில்வண்டு சத்தம் கேட்டது. இருள் முழுதாகக் கவியத் தொடங்கியிருந்தது. வாகனங்களின் இரைச்சல் ஓய்ந்துவிட்டிருந்தது.

தன் வெள்ளைச்சீருடை தந்த சங்கடத்தைச் சொல்லி, பாலியல் கல்வி சொல்லித்தரும் அந்தப் பெண்மணியை நினைத்துக்கொண்டேன். நிச்சயம் காசுக்காக வேலை செய்யும் இடத்தில், இப்படி ஒரு அர்ப்பணிப்பு இருக்காது. இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் லௌகீக எதிர்காலம் பற்றி அடிமனத்தில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளை நாங்கள் உருவாக்கப் போவதில்லை என்று உறுதியாக இருக்கும் பள்ளி. இது போன்ற பள்ளிகளைத் துவங்கிய அந்தத் தத்துவ ஞானியையும் நினைத்துக் கொண்டேன். என்ன ஒரு கம்பீரமான ஆளுமை!

எந்தரோ மகானுபாவுலு.