உயிரின் கதை – 3

ஆதி மனிதனின் நாட்குறிப்பிலிருந்து

“இப்பிரபஞ்சம் என்பதுதான் என்ன?” -என்ற கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள எந்த விஷயத்தையும் நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றுக் காலந்தொட்டு ஒன்றுக்கொன்று எதிரான முற்றிலும் வேறான இரு பதில்கள் இக்கேள்விக்கு விடையாக வைக்கப் பட்டுள்ளன. நம் புலன்களால் அறிய முடிகிற பொருள்களால் ஆகியது என்பது ஒரு பதில். நம் புலன்களால் அறிய முடியாதவற்றால் ஆகியது என்பது இரண்டாவது பதில்.

அதாவது ஒரு கோணத்தில் இப்பிரபஞ்சம் முழுக்க பொருள் வடிவானது. இன்னொரு கோணத்தில் இப்பிரபஞ்சம் முழுக்க ஆன்மீக வடிவானது.

“குறைந்தது ஒரு கருத்தாக்கம் என்றாகவாவது அறிவியல் முதலாவது கோணத்தை ஏற்றுக் கொள்கிறது. ஆன்மிகமும் மதமும் சற்றும் தயங்காமல் இரண்டாவது கோணத்தை ஏற்றுக் கொள்கின்றன” என்கிறார் ஜேம்ஸ் ஃபிரேஸர் (James Frazer) எனும் மானுடவியலாளர். ஆனால் இது போல ஒரு கண்ணோட்டத்தை மட்டும் சார்ந்து யோசிப்பது சிந்தனையை எளிமைப்படுத்தி முழுமையற்றதும் பிழையானதுமான முடிவுகளை நோக்கி நம்மை இட்டும் செல்லும். முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளை உள்வாங்கிய அவற்றிலிருந்து தொகுக்கப் பட்ட ஒரு புதிய சிந்தனையே மேம்பட்ட தாகவும் முழுமையானதாக இருக்க முடியும். கென் வில்பர் (Kenneth Earl Wilber II) போன்ற நவீன சிந்தனையாளர்கள் முன்வைப்பது இதைத்தான்.

உயிர் என்றால் என்ன? -என்ற கேள்வியை மனிதன் புரிந்து கொண்ட விதம் மனித நாகரீகத்தின் அடிப்படைக் கூறாக அமைந்து, பிற்காலதில் மதங்கள் தோன்றுவது வரை முக்கியப் பங்கு வகித்தது என்பதால் எவரும் இக்கேள்வியை அறிவியல் நோக்கை மட்டும் கொண்டு மேலோட்டமாக விவாதித்து விட முடியாது என்றே நினைக்கிறேன்.

-o00o-

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் ’உயிர் என்றால் என்ன’ என்பதை மனிதன் எவ்விதமாகப் புரிந்து கொண்டான் என்பதை மானுடவியலின் ஆய்வு மூலம் கிடைக்கும் தொன்மங்களின் வழியே சென்று யூகித்து அறிய முடியும். நம் புலன்களின் வழி அறியும் இயற்கையின் ஒவ்வொரு பொருளுக்கும் காரணமாக இருப்பது புலன்களால் அறிய முடியாத இயற்கைக்கும் அப்பாற்பட்ட (supernatural) அதன் சக்தி, அல்லது ஆன்மா என்பதுவே ஆதிப் பழங்குடி சமூகத்தின் நம்பிக்கையாக இருந்தது.

இயற்கையான காற்று, ஆறு, பூமி, பாறை, மலை, மரம், தண்ணீர் வரையாடு, பறவை என எல்லாவற்றுக்கும் தனித்தனியே தனித்தன்மையான ஆன்மா உள்ளது. அதனாலேயே காற்று காற்றாகவும், ஆறு ஆறாகவும், பாறை பாறையாகவும் உள்ளது என்பது ஆதி மனித நம்பிக்கை.

ஒரு பறவை பறவையாக இருப்பதற்குக் காரணம் அதன் தனித்துவமான ஆன்மாவே காரணம். பறவையும் அதன் ஆன்மாவும் ஒன்றின் இரு வடிவங்களே என்பதைத் தாண்டி அதீதமான கேள்விகளுக்கு இச்சிந்தனையில் இடமில்லை. இருந்தும் இயற்கையும் இப்பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்வதற்குரிய வழி முறையாக இச்சிந்தனை இன்றும் கூட இருந்து வருகிறது. ’உயிர்’ அல்லது ’ஆன்மா’ என்று பொருள் படும் இலத்தீனின் ‘anima’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து விரிக்கப்பட்டு ஆங்கிலத்தில் ‘Animism’ என்று அறியப் படும் இத்தத்துவத்தை ‘உயிர்த்துவம்’ அல்லது ‘ஆன்மத்துவம்’ என்று மொழி பெயர்க்கலாம். இத்தத்துவத்தின் மூலம் பிரபஞ்சத்தை அறியும் சிந்தனை முறை அனைத்து நாகரீகங்களிலும் இருந்து வந்துள்ளது. ஓரிடத்தில் தோன்றி, பல நூறு ஆண்டுகள் வழி ஒரு நாகரீகத்திலிருந்து இன்னொன்றுக்கு இச்சிந்தனை பரவியது என்பது ஒரு சாராரின் கருத்து என்றாலும் ஆதி மனித குடிகளிடையே இந்நம்பிக்கை ஆங்காங்கே தனித்தனியாகவும் தோன்றியிருக்க் கூடும். நிராதரவாகத் தனித்து விடப்பட்ட ஆதி மனிதனின் எளிய மனம் இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை இதை விட வேறு எவ்விதமாகப் புரிந்து கொண்டிருந்திருக்க இயலும்.

தன்னால் முற்றிலும் அறிய முடியாத மரணம், புயல், தீ, பெருமழை, கொடிய காட்டு விலங்குகள் ஆகியவற்றால் குழப்பம் மற்றும் பீதியடைந்து இயற்கைச் சக்திகளின் மூலம் ஏற்படும் துன்பத்திற்கும் அழிவுக்கும் காரணம் கண்ணுக்குப் புலப்படாத இச்சக்திகளின் கடுங்கோபமே காரணம் என்று கருதிக் கொண்டு அவற்றின் வலிமைக்குத் தலை வணங்கி கோபத்தைத் தணிக்க பலி/ காணிக்கை இடும் வழக்கம் இருந்தது.

நத்தை, நன்ணீர் நண்டு, கெண்டை மீன், பாம்பு, புறா, கொக்கு, வான்கோழி, காகம், கழுகு, நாய், ஓநாய், கரடி, காட்டெருமை என ஏதாவது ஒரு விலங்கிலிருந்தே தன் குலம் தோன்றியது என்று ஆதி மனிதக் குலங்கள் நம்பின. ஆகவே இவற்றை தன் குலக்குறியாகக் கொள்ளும் வழக்கம்(totemism) இருந்தது. குலச் சடங்குகளில் தன் குலக்குறியான (totem) முன்னோரைப் போல உடை, ஒப்பனையுடன் தோன்றுவதும் வழக்கமாக இருந்தது. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆதி குடிகளிடம் இவ்வழக்கம் மிக வலுவாக நிலவியதற்கான ஆதாரங்கள் உள்ளன. நீர், வெள்ளம், இடி, மின்னல், பனிக்கட்டி, வானவில், காற்று, எலும்பு என உயிரற்ற பொருள்களைக் குலக்குறியாகக் கொள்ளும் வழக்கமும் இருந்தது.

ஒவ்வொரு குலத்திலும் எல்லாம் அறிந்த தலைவன் (shaman) மூலிகைகளைப் பற்றி அறிந்தவனாகவும் தன் உடலை விட்டு வெளியேறி வேறு பல வேலைகளைச் செய்பவனாகவும் இருந்தான். நோய்க்கு மருந்து தருவதே தலைவனின் தலையாய பணியாக இருந்தது. மனிதனின் ஆவி/ ஆன்மா அவன் உடலை விட்டு விலகி விடுவதாலேயே வியாதி வருகிறது என்பது ஆதி மனிதனின் நம்பிக்கை. அவ்வாறு பிரிந்து சென்ற ஆவியைப் பிடித்து அதைச் சரியான உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைத்து நோயைக் குணப்படுத்துவது தலைவனின் முக்கிய வேலை. ஒரு வேளை இம் முயற்சி வெற்றி பெறாமல் நோயாளி இறந்து விட்டால், ஆன்மாவைப் பின் தொடர்ந்து சென்று அது அடுத்த உலகத்திற்குச் செல்லும் கடுமையான நெடிய பயணத்துக்கு துணை போவதும் தலைவனின் வேலைதான். அவ்வாறு மேற்கொண்ட தன் பயணத்தை முழுக்க ஒன்று விடாமல் உணர்ச்சி வயப்பட்டு விவரித்து வர்ணித்துச் சொல்லும் நிகழ்வும் முக்கியமான ஒரு குலச் சடங்காக இருந்தது.

-o00o-

மெஸபடோமியாவின் (இன்று இராக் நாடு) ஒரு பகுதியான சுமேரிய மக்களின் குல நம்பிக்கைகள் மேற்கத்திய நாகரீகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று நம்ப ஆதாரங்கள் உள்ளன. மனிதன் உட்பட எல்லா உயிரிகளும் தெய்வீக சக்திகளால் படைக்கப் பட்டவையே என்பதும் சுமேரியர்களின் நம்பிக்கை. அவர்கள் நம்பிக்கையில் இயற்கையும் தெய்வமும் ஒன்றே. நம்மு (Nammu) என்ற கடல் தேவதை பால்வழியல்லாத இனபெருக்கம் மூலம் வானமாகிய அன் (An) என்ற ஆண் தேவனையும் என்-கி (En-ki ) அல்லது இயா (Ea) என்ற பூமியாகிய பெண் தேவதையையும் தோற்றுவித்தாள். அன், என்-கி இவர்களின் பாலியல் உறவு மூலம் என்-லில்(En-lil) என்ற காற்றுக் கடவுள் பிறந்தார். இவ்வாறாக கடல், காற்று, பூமி, ஆகாயம் இவையனைத்தும் கடவுளின் அம்சங்களே. மேலும் இதைப் போல சுமார் 5,000 தேவர்கள் மற்றும் தேவதைகளைப் பற்றிய வர்ணனைகள் சுமேரிய நாகரீக ஆய்வு நூல்களில் காணக்கிடைக்கின்றன.

சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட ’எனும எலிஷ்’ (Enuma Elish) என்ற ஆவணம் உலகம் படைக்கப் பட்டதைப் பற்றிய சுமேரியர்கள் சிந்தனையையைக் காட்டும் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்நம்பிக்கையில் முதல் மூதாதையாக வருபவர்கள் தேவ ஜோடிகளான ’அஸ்பு’ (Aspu) என்ற ஆணும் டியாமத் (Tiamat) என்ற பெண்ணும். சுருக்கமாகச் சொன்னால், பிற்பாடு நேர்ந்த ஒரு சண்டையில் டென்ஷனாகி டியாமத்தை திரு. மார்டுக் (Marduk) என்ற ஒரு ஆண் கடவுளார் இரண்டாக வெட்டிப் பிளக்க அவளின் ஒரு பாதி ஆகாய வளைவாகவும் இன்னொரு பாதி பூமியாகவும் ஆகியது என்பது ஐதீகம்.

தீமை ஏற்படுத்த முயன்ற கெட்ட சர்ப்பம், சாப்பிடக்கூடாத பழத்தைச் சாப்பிட்டு சாகவரத்தை இழந்த என்-கி, என்று பழைய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளோடு ஒப்பிடும் படியான நிகழ்வுகளும் சுமேரிய புராணங்களில் உள்ளன.

மெஸபடோமியர்கள் இவ்வுலகம் யுகாந்திரமாக என்றும் இருப்பது என்ற கருத்தை ஏற்கவில்லை. உலகம் கடவுளால் படைக்கப் பட்டது என்றே நம்பினார்கள். கடவுளால் நேரடியாகப் படைக்கப் படுதல் அல்லது இரண்டு கடவுளர்களின் குருதி கலத்தல், கடவுளால் களிமண்ணால் செய்யப்படுதல், விதைகளிலிருந்து முளைத்தல் ஆகியவற்றின் வழி மனிதன் தோன்றினான் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

-o00o-

“மேற்கத்திய தத்துவம் அனைத்தும் பிளாட்டோ (வின் தத்துவதிற்கு) ஒரு அடிக்குறிப்பு மட்டுமே (All of western philosophy is a footnote to Plato)!” என்றார் ஒயிட்ஹெட் (Alfred North Whitehead) எனும் தத்துவ அறிஞர். ஒயிட்ஹெட் ரஸலின் (Bertrand Russell) பிஎச்டி ஆய்வுக் கட்டுரையை மேற்பார்வை செய்தவர்.

அதுபோல உயிரியல் மொத்தமும் அரிஸ்டாட்டிலுக்கு (அவரின் சிந்தனைக்கு) ஒரு அடிக்குறிப்பே என்று சொன்னால் அது மிகையாகாது என்கிறார் ஜான் மூர்(John Moore) எனும் உயிரியல் பேராசிரியர்.

அப்படி அரிஸ்டாட்டில் என்ன தான் செய்தார்?

வாழ்க்கையின் பெரும்பகுதியை ஏதென்ஸில் கழித்த அரிஸ்டாட்டில் (கி. மு. 384 – 322) பிளாட்டோவின் மாணவராகவும் அலெக்ஸாண்டரின் ஆசிரியராகவும் இருந்தார். உயிரிகளின் வரலாறு (The History of Animals), விலங்குகளின் நடையைப் பற்றி (On the Gait of Animals), வாழ்வின் நீட்சியும் குறுக்கமும் (On Longevity and Shortness of Life) ஞாபகமும் கடந்த காலநினைவும் (On Memory and Reminiscence), விலங்குகளின் இடப்பெயர்ச்சி (On the Motion of Animals), விலங்குகளின் உடற்கூறு (On the Parts of Animals), புலனும் உணர்வும் (On Sense and the Sensible), உறக்கமும் உறக்கமின்மையும் (On Sleep and Sleeplessness), இளமை முதுமை, உயிர்ப்பு மரணம், மற்றும் சுவாசம் (On Youth and Old Age, On Life and Death, On Breathing), ஆன்மாவைப் பற்றி (On the Soul) எனப் பல நூல்களை எழுதிக் குவித்தார் அரிஸ்டாட்டில் (உயிரியல் சம்பந்தப் படாத நூல்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை).

கிரேக்கத்திலிருந்து அரபிக்கும் பிறகு பிறகு அரபியிலிருந்து இலத்தீனினுக்கும் மொழிபெயர்க்கப் பட்டதில் இந்நூல்களில் சில பல தவறுகள் நேர்ந்திருக்கலாம் என்றாலும் காலாவதியாகி விட்ட (இன்று கேலிக்குரிய) வர்ணனைகள் கருத்துக்கள் நிரம்பியிருந்தாலும் எழுதப் பட்ட காலத்தின் தொன்மைக்கு (கி.மு 350கள்) இவை முதல் தரமான அறிவியல் நூல்களே. ஒரு நவீன விஞ்ஞானிக்குரிய தர்க்கத்துடன், தரவுகளைச் சேகரித்து, அவற்றை அலசி ஆராய்ந்து பார்த்து அறிவியல் ரீதியாக கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு தர்க்கத்தின் அடிப்படையில் பதில் காண முயன்றார் என்பது அரிஸ்டாட்டிலின் தனிச் சிறப்பு.

AD 77-79-ல் ரோம் நாட்டைச் சேர்ந்த பிலினி (Pliny the Elder) என்பவர் ’இயற்கையின் வரலாறு’ (Naturalis Historia) என்ற பெயரில் உயிரியல், இயற்பியல், பூகோளம், நுண் கலைகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு தகவல் களஞ்சியத்தை (encyclopedia) வெளியிட்டார். சுமார் 473 ஆசிரியர்களால் எழுதப் பட்ட பல்வேறு புத்தகங்களைப் படித்துத் திரட்டிய 34,707 தகவல்கள் அடங்கியது இது. ”ஆன்மா என்றும் நீடித்து நிலைப்பது என்றோ மரணத்தின் போது புதுப்பிக்கப் பட்டு மறுபிறப்பை அடைகிறது என்றோ நம்புவது சிறு பிள்ளைத் தனமானது. சொர்க்கம், நரகம் இவையெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை!” என்பது போன்ற அதிரடியான குறிப்புகளை இந்நூலில் காணலாம்.

‘மருத்துவத்தின் தந்தை’ (Father of Medicine) எனக் கருதப் படும் ஹிப்போகிரடெஸ் (Hippocrates of Cos, 460 BC – 370 BC) எழுதிய புத்தகங்கள் (Hippocratic Corpus) நவீன மருத்துவத்தின் ஆரம்பமாகும். நோயாளியின் உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுப் புறம் ஆகியற்றால் உடலின் நான்கு விதமான திரவங்களான இரத்தம் (blood), கபம் (phlegm), பித்தம் (yellow bile), கறும் பித்தம் (black bile) ஆகியவற்றில் ஏற்படும் சமநிலைக் குறைவே நோய்கள் ஏற்படக் காரணமே தவிர கடவுளின் கோபமோ சாபமோ காரணம் அல்ல என்பது ஹிப்போகிரடெஸின் முக்கியமான தத்துவம்.

நோய் உண்டாகும் காரணத்தை கடவுள் மற்றும் மத நம்பிக்கையிலிருந்து விடுவித்து உடற்கூறியல், உடலியங்கியல் நோக்கித் திருப்பியது இவரின் முக்கியப் பங்களிப்பாகும். இதன் மூலம் உடற்கூறியல், உடலியங்கியல் ஆகிய துறைகள் அதுவரை இல்லாத முக்கியத்துவம் பெற்றதோடு பிற்காலத்தில் அவை தனித் துறைகளாக வளர்ந்து விரிவடையவும் வித்திட்டது தலைவர் ஹிப்போகிரடஸ்தான்.

(இன்னும் வரும்)

உதவியவை & மேலும் படிக்க

1. Burns, Edward M., et al., 1986. World Civilizations. 2 vols. 7th edition, Norton: New York.
2. Campbell, Joseph. 1988, Historical atlas of world mythology. Vol.1. The way of animal powers, New York: Harper and Row.
3. Tylor, Edward B, 1881, Anthropology: An introduction to the study of man and civilization, New York: Appleton.
4. Kramer Samuel., 1972, Sumerian Mythology. Philadelphia: University of Pennsylvania Press.
5. Mayr, E., 1982. The Growth of Biological Thought: Diversity, Evolution, and Inheritance, Cambridge: Harvard University Press.
6. அரிஸ்டாட்டில் மற்றும் ஹிப்போகிரடெஸின் நூல்களை இங்கே வாசிக்கலாம்: http://classics.mit.edu/Browse/index-Aristotle.html