ஆடுகளத்தில் சிதையும் பண்பாடு

‘கொண்டே புடுவேன்’ – என்று ஆடுகளம் திரைப்படத்தின் நாயகன் யாரையோ பார்த்து நான்கு வாரமாக மிரட்டிக்கொண்டிருந்தார். அவர் யாரை மிரட்டுகிறார் என்று வெள்ளித்திரையில் கண்டு அதிர்ந்துபோக வேண்டியிருந்தது. அவர் மிரட்டியது தனது தாயை என்று தெரிந்ததும் ஆர்வமத்தனையும் வருத்தமாய் மாறியது.

முன்பெல்லாம் டிரெய்லர் நேரம் என்று தனியாக ஒரு அரைமணிநேரம் அதுவும் பதினோரு மணிக்கு மேல் வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் முன்னோட்டக்காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். ஆனால் இன்று முன்னோட்டக்காட்சிகளுக்கு இடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சூழல் உருவாகிவிட்டது.

தமிழ்த் திரைப்படங்களில் தமிழர் வாழ்நிலை பதிவாகவில்லை என்று ஒரு பெரும் வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் சமீபமாக வெளியாக்கிக்கொண்டிருக்கும் கிராமம் சார்ந்த திரைப்படங்கள் வாயிலாக அது நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாது.

பாரதிராஜா, கஸ்தூரிராஜா போன்றவர்கள் கிராமத்திற்கே போய் படச்சுருள்களை காட்சிகளால் நிரப்பிக்கொண்டு வந்ததன் மூலம் கிராம சப்ஜெக்ட்டுக்குள் தமிழ் சினிமாவைக் கொண்டு சென்றார்கள். நடுவில் அந்த ட்ரெண்ட் கொஞ்சம் மறைந்து, மீண்டும் முழுவீச்சில் சிறுநகரம், கிராமம் சார்ந்த படங்கள் வருகின்றன. முந்தைய இயக்குனர்கள் சொலவடைகளையும், சில மண்சார்ந்த பண்பாடுகளையும், வழிபாடுகளையும் கதையினூடாகப் படம் பிடித்தார்கள் என்றால் இன்றைய இயக்குனர்கள் மதுரை மாவட்டத்தை தாண்டிக் களமில்லை, கதையில்லை என்று அங்கேயே டேரா போட்டு விட்டார்கள்.

வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தில் மதுரையைச் சார்ந்த ஒரு இளைஞனின் கதை சொல்லப்பட்டிருந்தது என்பதற்காக வாரிச் சுருட்டிக்கொண்டு எல்லோரும் மதுரைக்கே பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மண் சார்ந்த படமென்றால் மதுரையும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரும் மட்டுமே காட்டப்படுவது ஒட்டு மொத்த தமிழகத்திற்கே அடையாளம் கொடுப்பது போல்தான் இருக்கிறது இல்லையா? தமிழகத்தின் தலைநகராக மதராஸ் இருந்த காரணத்தினாலோ, அதற்கு முன் தமிழகமே ‘மதராஸ் ஸ்டேட்’ என்று அழைக்கப்பட்டதினாலோ இன்று தமிழ் பேசும் அனைவரையும் ‘மதராஸி’ என்று விளிக்கும் வடநாட்டுக்காரர்களைப் போல், இனி தமிழர்கள் என்றால் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சதா குடித்துக்கொண்டும் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டும் அலைவார்கள் என்று அடையாளப்படுத்தப்படலாம் என்று தோன்றுகிறது.

சமீபத்திய திரைப்படங்களில் காட்டப்படும் இளைஞர்களின் போக்கும், நடவடிக்கையும், பேச்சும், எல்லாமும் ஒரே அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரியாக இருக்கிறது. எதாவது ஒரு வகையில் ஆயுதம் தூக்கிவிடுகிறார்கள். காரணங்களும், பாணியும் வேறு வேறாக இருந்தாலும் கதையும், களமும், கையிலெடுக்கும் ஆயுதமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. தன் பெற்றோர், காதலிக்கும் பெண்ணின் பெற்றோர், ஊர்ப்பெரியவர்கள் என அனைவரையும் சகட்டுமேனிக்குத் திட்டுகிறார்கள். சில சமயங்களில் கெட்ட வார்த்தைகளிலும்.

பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் போன்ற வெற்றி பெற்றத் திரைப்படங்களையே சமீபத்தில் வந்த அத்தனைப் படங்களும் முன்மாதிரியாகக் கொள்கின்றன என்பது வேதனை. புதிய இயக்குனர்களும் அவர்களின் கதையை இந்த பாணிக்கு தக்கபடி கட்டமைப்பதும் கவலைக்குறியதுதான்.

உலகமெங்கும் அறியப் பட்ட ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ திரைப்படத்தின் கதையை கருவாக்கக்கொண்டு பொல்லாதவன் என்ற படத்தை இயக்கிய வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழகத்தின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் மூலம் வெளியிடவும்பட்டிருக்கிறது. இரண்டாவது காரணம் போதுமே படம் வெற்றி பெற!

ஆடுகளம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். பருத்திவீரனையும் சுப்பிரமணியபுரத்தையும் பார்த்தவர்களும் இப்படித்தான் புகழ்ந்தார்கள். இம்மாதிரியான திரைப்படங்களை வெற்றிபெறச் செய்வது யார்? இளைஞர் பட்டாளம் என்றால் அவர்களுக்கு ஏன் இம்மாதிரியான படங்கள் பிடித்துப் போகின்றன? ஒருவேளை பழக்கப்படுத்தப்பட்டதனாலா? இப்படியான கேள்விகளைக் கேட்டு சமாதானமாகிக் கொள்ள வேண்டியதுதான். ஆடுகளம் அத்தனை பழுதான படமில்லை என்றாலும் படத்தில் புதுமையில்லை என்பது நிதர்சனம்.

சேவற் சண்டையையும், அது குறித்த பின்னணியையும் கதையோடு பதிவு செய்திருப்பது நன்று. ஆனால் தமிழர் பண்பாடு பதிவாகிக் கொண்டிருப்பது குறித்து ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் ஒரு புதிய பண்பாடு பரவிக் கொண்டிருப்பதை யாரும் கவனிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

மதுரை மாவட்ட பின்னணியில் எடுக்கப்பட்ட பெரும்பாலானத் திரைப்படங்கள் வெற்றிப்படங்கள்தான். இவை அனைத்திலும் நாயகன் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவனாக இருப்பான், இல்லை பொறுப்பில்லாத, ஊதாரித்தனமான, பெற்றோரை மதிக்காத எப்பொழுதும் எந்தவொரு காரணத்துக்காகவும் குடித்துக் கொண்டிருக்கிற குணாம்சங்களோடு இருப்பான். இப்படியான ஒரு இளைஞனை விரட்டி விரட்டி காதலிப்பாள் நாயகி. அவனுக்காக செத்தும் போவாள், ஊரை விட்டு ஓடியும் போவாள். தமிழ்ச் சமூகப்பெண்கள் இப்படியா இருக்கிறார்கள்? இல்லை இப்படி இருந்தால் நலம் என்று சொல்கிறார்களா?

சமூகத்தின் அத்தனை ஒழுக்கக்கேடான பழக்கங்களையும் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் மீது எப்படி ஒரு பெண்ணுக்கு காதல் மலரும் என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அப்படியான இளைஞர்கள் மீது காதலை உண்டாக்கி அவர்கள் மட்டுமே காதலிக்கத் தகுதியானவர்கள் என்றும் மற்றவர்கள் சரியான சோப்ளாங்கிகள் என்றும் நம்பவைத்துவிட்டார்கள் தமிழ் இயக்குனர்கள். குடியில் மூழ்கிய ஒருவன் பத்துபேரை அடித்துத் துவைக்கும் பலம்பெற்றவனாக காட்டப்படுவது பகுத்தறிவுக்குப் புறம்பானது இல்லையா?

நல்ல ஆரோக்கியமும், நாகரீகமும், நல்லொழுக்கமும் கொண்ட இளைஞர்கள் பாஸ்மார்க் வாங்கிவதில்லை. இருபது நாள் சவரம் செய்யாத முகமும், உள்ளாடை தெரிய ஏற்றிக் ட்டிய லுங்கியும், காலை-மாலை என்று காலம் கருதாமல் தவறாது டாஸ்மாக்கில் மது அருந்தும் பழக்கமும், பெற்றோரை ‘ஏய் பெரிசு’ என்றும், ஆசிரியரை ‘ஏய் வாத்தி’ என்றும் அழைக்கும் மரியாதையும் கொண்டவர்களே முழு மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.

ஆடுகளம் திரைப்படத்திலும் வழக்கமான கதை சொல்லல் பாணிதான். அதே சமயம் கதையும் அத்தனை புதுமையல்ல. திரைக்கதையிலாவது இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம். அங்கேயும் பெரிதாய் உழைக்கவில்லை. இடைவேளை வரை உற்சாகமாகப் பயணிக்கும் படம் இடைவேளைக்குப்பின் படுத்துவிடுகிறது. இடைவேளைப் பகுதியிலேயே இனி என்ன நடக்கும் என்று யூகிக்க அல்ல நிச்சயமாகவே சொல்லிவிடமுடிகிறது. முழுப்படத்திற்கும் காசு கொடுத்துவிட்ட காரணத்தால் அரைப்படத்தில் எழுந்து போகாமல் இருக்க நேரிடுகிறது. முன்பாதிகூட ரசிக்கும்படியாக இருப்பதற்குக் காரணம் இரண்டு குத்துப்பாடல்கள்தான் என்று சொல்லலாம்.

aadukalam_movie_posters

இதற்கு முன்னால் வந்த வெற்றிப்படமொன்றில், ‘கொலைக் குற்றத்தில் கைதான அவனையாடி நீ காதலிக்கிற?’ என்று நாயகியின் தோழி கேட்க, ‘அவன் என்ன செஞ்சான்னு எனக்கு தெரியாது ஆனா அவன எனக்கு சின்ன வயசிலேயிருந்து பிடிக்கும்’ என்று பதில் சொல்கிறாள் நாயகி. ஏதோ பைத்தியக்கார சமூகத்தில் சிக்கிக்கொண்டதாக இருக்கிறது இவர்கள் பேசும் வசனம்.  ஒரு சிறு பிரச்சனையின் பொருட்டு காவல் நிலையம் போக நேர்ந்தாலும் அப்புறம் ஆயுசுக்கும் அவர்கள் தீபாவளி, பொங்கல் மட்டுமல்லாது சுற்றுவட்டாரத்தில் நடந்து முடியும் குற்றங்களைத் தொடர்ந்து போலிஸ் வீடு தேடி வந்து விடுவார்கள் என்பது நாடறிந்த உண்மை. இந்நிலையில் திரைப்படங்களில் மட்டும் இந்த யதார்த்தம் மீறப்படுவது ஏன்? புனைவுதான். ஆனால் அதிலொரு நம்பகத்தன்மை வேண்டாமா? திரைப்படம் என்பது திட்டமிடப்படும் ஒரு புனைவு. பலர் பங்கீட்டில் உருவாகும் ஒரு படைப்பு. இவ்வாறான தவறுகளுக்கு இப்படைப்புப் பணியில் இருக்கும் யாராவது ஒருவர் கூடவா எதிர்ப்புக் காட்டவில்லை.

நடிப்புக்காகக் கூட ஒரு திரைப்படத்திலும் சிகரெட் மற்றும் மது அருந்தாமல் நடித்த அமரர் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டை  இப்போதெல்லாம் பாராட்டலாம் என்றே தோன்றுகிறது. (‘ஒளிவிளக்கு’ திரைப்படத்தில் மயக்கமருந்து அடித்து கட்டாயப்படுத்தி மது ஊற்றிவிடுவார்கள். ‘நினைத்ததை முடிப்பவனில்’ புகைக்க ஆயத்தமாவார் அதற்குள் தடுக்கவும்படுவார்.) தனது திரைப்படங்களில் எந்தவொரு கதாபாத்திரமும் புகைக்காமல் இருப்பதோடு படத்தில் பின்னணியில் ஒரு சட்டகத்தில் கூடப் புகையிலை மற்றும் சிகெரெட் விளம்பரங்கள் இல்லாமல் அக்கறையாகப் பார்த்துக்கொள்ளும் நடிகர் ஜாக்கிசானின் சமூக அக்கறையையும் கண்டிப்பாய்ப் பாராட்டத்தானே வேண்டும்?

ஆடுகளம் திரைப்படத்தில் சேவல் சண்டை குறித்து தொகுக்கப்பட்டிருக்கும் விஷயங்களுக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு பாராட்டுகளைச் சொல்லலாம். ஆனால் இரண்டு காட்சிகளுக்கு ஒருமுறை நாயகனை சாராயக்கடையில் சரக்குடன் காட்ட வேண்டிய அவசியம்தான் என்ன? ஏன் டாஸ்மாக்குகள் நிறைந்த சமூகத்தில் குடிக்காத இளைஞனைக் காட்டுவது என்ன அப்படியொரு குற்றமா? ‘எனக்கு குடி ஒத்துக்காதுண்ணே…’ என்று ஒரு வசனத்தில் முடித்துவிட முடியுமே? யதார்த்தமாய்க் காட்டுகிறேன் என்கிற பேரில் எல்லாரும் குடிக்கிறார்கள் என்று காட்டவா? இல்லை எங்கள் சாமி கூட குடிக்குதுப்பா என்று வளரும் இளைஞர் பட்டாளத்தைக் குடிக்கத் தயார்படுத்தவா? தமிழ்ச்சமூகமே ஒரு குடிகார, நாகரீகமற்ற, எதற்கெடுத்தாலும் வெட்டும் குத்தும் நடத்துகிற ஒரு சமூகம் என்று பதிவு செய்து என்ன பயன்? அப்படித்தான் இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு சமூகத்தின் பண்பாட்டைப் பதிவு செய்வது எவ்வளவு பெரிய துரோகம்! இலக்கியத்திலும், கலைகளிலும் பதிவு செய்யப்படும்  ஒரு சமூகத்தின் பண்பாடு, பிற்காலத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தின் பதிவாகப் பாடமாகக் கவனிக்கப்படும். ஆனால் சமீபமாக நம் பண்பாடு எந்த அளவுக்குப் பதிவாகி உள்ளது?

ஆடுகளம் திரைப்பத்தில் தனுஷின் நடிப்பு, நடனம் பற்றி பெரிதாய் சிலாகிக்கத் தேவையில்லை. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் (ரசிகராகக் கூட இருக்கலாம்) எழுந்து ஆடினார். அவர் தனுஷை விடவும் சிறப்பாக ஆடியது போலத்தான் இருந்தது. தனுஷ் நடித்த கருப்பு கதாபாத்திரத்தில் பருத்திவீரனின் கார்த்தி, மைனாவின் வித்தார்த், களவானியின் விமல் அல்லது தென்மேற்குப் பருவக்காற்றின் விஜயசேதுபதி ஆகிய அதே இருபது நாள் தாடிக்காரர்களில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். இது தனுஷால் மட்டுமே செய்ய முடிந்திருக்கக் கூடிய பார்த்திரமென்று சொல்வதெல்லாம் மிகைதான்.

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. அவர் அப்பாத்திரத்திற்கேற்ற நல்ல தேர்வு. மிகையில்லா நடிப்பு. ஒரு நல்ல நடிகர் கிடைத்திருக்கிறார். கிஷோரின் நடிப்புக்கும் பெரிய ஆரவாரங்கள் தேவையில்லைதான். நடிகை தாப்சிக்கு இப்படத்தில் அழகாய் உடுத்திக்கொண்டு அங்குமிங்கும் ஒரேயொரு நோட்டுப்புத்தகத்தை சுமப்பதுதான் ஒரே வேலை. அவர் அழகாய் இருக்கிறார். படம் முழுக்க அழகாய்க் காட்டப்பட்டுள்ளார். அவ்வளவுதான். அவரது துரதிர்ஷ்டம் டூயட்டுகளில் ஆடவோ, டப்பாங்குத்துகளில் குதிக்கவோ, வெளிநாட்டு வீதிகளில் இடுப்பசைக்கவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு படைப்பானது எதாவது ஒரு வகையில் பார்வையாளனை பாதிக்க வேண்டும். படைப்பைக் கண்ட ஒரு சிறுபொழுதுக்கேனும் அவருக்குள் சலனத்தை உண்டாக்கிய வண்ணம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அது பற்றி பேசிக்கொண்டிருக்கவாவது வேண்டும். ஆனால் ஆடுகளம் போன்ற படங்களை உடனடியாக மறக்க வேண்டியதிருக்கிறது.

இன்று விற்பனை சரக்குகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளிடம் எந்த நியாயமும் பேசிக்கொண்டிருக்கமுடியாது.  ஒரு பிரபல திரைப்படத்தில் இறுதிக்காட்சியில் நான்கு நிமிடங்களுக்குக் குறையாமல் ஓடும் ஒரு கழுத்தறுப்பு வன்முறைக்காட்சியைச் சுட்டி, ‘காட்சி ஊடகத்தில் இவ்வாறு காட்டுதல் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டதொரு விஷயம். அதுவுமில்லாமல் அக்காட்சி மனதிலும் உடலிலும் ஒரு அச்சத்தை உண்டுபண்ணுகிறது, அப்படியான காட்சியை ஏன் வைத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘நீங்க பயப்படுனுமுன்னுதான் வச்சேன்’ என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார் இயக்குநர்.

இளைய சமூகத்தை லட்சிய பாதைக்கு கூட்டிப்போகவில்லை, படித்துப் பண்டிதனாக அழைக்கவில்லை. நாகரீகமாக உடுத்த, பேச சொல்லிக் கொடுக்கவில்லை. மாறாக, எவ்வளவு கீழ்த்தரமாக இருந்தாலும் செட்டில் ஆகிவிடலாம் என்று இன்னும் கீழ்த்தரமாக இருக்க திரைகட்டி காட்சியாய் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் தப்பு செய்யலாம், கடைசியில் அழகான பெண்ணுடன் எங்காவது ஓடிப் போய் வாழலாம் என்பது போன்ற யதார்த்தமில்ல கதைப்பாணி இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடருமோ?

‘நடக்காத்தையா நாங்க காடடுறோம்’ என்று காட்டி காட்டி நடக்கச் செய்கிறார்கள். தமிழகத்தின் தலைவிதியே ‘அதுக்கு இது மேல்’ என்று ஏற்றுக் கொள்ளும் நிலைதான். ஆடுகளம் போன்ற பண்பாட்டுச் சறுக்கல்கள் மத்தியில் எந்திரன் போன்ற மசாலாக்கள் தேவலாம் என்று தோன்றுகிறது.