மகரந்தம்

அமீபா வேளாளர்கள்

சமூக விலங்குகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். அவற்றில் வேளாண்மை செய்யும் எறும்புக் காலனிகள் குறித்தும் படித்திருக்கிறோம். ஆனால்  பூச்சிகளுக்கும் முன்னாலேயே இருக்கும் உயிரினங்களிலேயே விவசாயிகள் இருப்பதை அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். மண்வாழ் அமீபாக்கள் (Dictyostelium discoideum) தங்கள் உணவுக்கான பாக்டீரியங்களை வளர்த்து விவசாயம் செய்து உண்கின்றனவாம். ஏற்கனவே நத்தைகளிலெல்லாம் கூட இந்த ‘விவசாயச்’ செயல்பாடு இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இது குறித்த ஒரு சின்ன அறிக்கையை இங்கே படியுங்கள்:

http://www.the-scientist.com/news/display/57924/

இஸ்ரேலின் புதிய கணிணி

கணினி யுகம் வந்து விட்டது என்று இந்தியாவில் கிராமங்களில் கூடத் தெரியும். பல கிராமத்துப் பெண்கள் தமிழ்நாட்டிலாவது, கணினிகள் அல்லது கம்பியில்லாத் தொலைபேசி நிறுவனங்களின் தொழிற்கூடங்களில் வேலைக்குப் போகிறார்கள். அங்கு நிச்சயம் அவர்கள் கணினிகளைப் பார்த்துப் பழகி இருப்பார்கள். இருப்பினும் சராசரிக் கணினி என்பது அனேக மக்களின் சக்திக்கு மீறிய ஒரு கருவியாகவே இருக்கிறது. கருவி விலையளவு அதன் மின்சக்திப் பயன்பாட்டுத் தேவையும் இருக்கும், அதுவும் ஏகப்பட்ட செலவு வைக்கும். இஸ்ரேலியர்கள் ஒரு புது கணினியை உற்பத்தி செய்யவிருக்கிறார்கள். இது ஒரு சிறிய கணினி, இதற்கு ஆகும் மின் செலவு மிக மிகக் குறைவு. இருப்பினும் ஒரு சராசரிக் கணினி அளவு இதன் இயங்கு சக்தி இருக்கும். இது ஏப்ரலில் இருந்து உலகச் சந்தையில் கிட்டும் எனச் சொல்லப்படுகிறது. விலை? இப்போது ஐ-பாட் என்று சொல்லப்படும் டாப்லெட் கணினிகளை விடக் குறைவாக இருக்கும், பல தொலைக்காட்சி, இசை கோப்புகளை விநியோகிக்கும் கருவிகளை விடச் சற்று கூடுதலாக இருக்கும் என்கிறார்கள். அதாவது உலகச் சந்தை விலையில் 25,000 ரூபாய்க்குக் குறைவாக, 10,000 ரூபாய்க்கு மேலாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இந்தியாவில் இதன் விலை இன்னும் குறையவே வாய்ப்பு உண்டு.

http://www.gizmag.com/compulab-announces-tegra2-powered-trim-slice-mini-pc/17664/

இந்திய அரசு – நீக்கமற நிறைந்த அறியாமை

பர்மா, இலங்கை போன்ற தேசங்கள் கூட இந்தியாவை துளியும் மதிப்பதில்லை. உறுதியற்ற அரசும், சுயநலவாத தலைவர்களும் ஒரு தேசத்திற்கு பெற்று தரும் ஆகப்பெரும் மரியாதை இது. பிற அரசாங்கங்களை விட்டுத்தள்ளுங்கள். ஒரு ஆஸ்திரேலிய இசைக்குழு தனக்கு “All India Radio” என்று பெயரில் உலவுகிறது. இந்திய அரசின் முக்கியமான அங்கமான, அதன் ஒலிபரப்புத் துறையின் பெயரை தனக்கு சூட்டிக்கொள்ளும் திமிர்த்தனத்தையும், இந்தப் பெயரைப் பதிவு செய்து தனக்கான உரிமையை உறுதி செய்யத் தெரியாத இந்திய அதிகார வர்க்கத்தின் அரியாமையையும் எண்ணி எண்ணி வியக்கத்தான் முடியும். வர்த்தகம், ராணுவம், உளவு சேகரித்தல் போன்ற பல்வேறு துறைகளில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு அறியாமை நிரம்பி உள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் கவலை கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.

http://www.wired.com/underwire/2011/01/all-india-radio/

காக்கைகளின் அடையாளம் காணும் திறன்
காக்கைகள் மனிதரில் பலரை நன்கு அடையாளம் கண்டு கொள்வதோடு, தெருவில் இறங்கினாலே தாக்கக் கூட செய்யும். அல்லது இவர் வருகிறார் என்று இதர காக்கைகளுக்கு அபாய அறிவிப்பு கொடுக்கும். சிறு வயதில் காக்கை பிடிக்கும் சில குறவர்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அந்தக் குறவர்கள் தலையில் கூடைகளைக் கவிழ்த்துக் கொண்டு அல்லது பலவிதமான முண்டாசுகள் கட்டிக் கொண்டு வருவார்கள், இருந்தாலும் காக்கைகள் எப்படியோ அவர்களைக் கண்டு பிடித்து விடும். அதனால் அவர்கள் அடிக்கடி ஊர் விட்டு ஊர் போவார்கள், ஊரில் பல பகுதிகளுக்குப் போவார்கள். இதெல்லாம் நம் சிறுவயதில் அவ்வளவு அர்த்தம் புரியாமல் இருந்திருக்கும். ஒரு பேராசிரியர் காக்கைகள் மனித முகங்களை எப்படி இனம் காண்கின்றன என்று கண்டுபிடிக்க ஒரு சிறு ஆய்வு நடத்தினாராம். இதோ அந்த ஒலிபரப்பைக் கேளுங்கள், பாருங்கள். அந்தப் பக்கத்தில் உங்களுக்குக் காக்கைகள் அளவு அடையாளம் காணும் திறன் இருக்கிறதா என்று ஒரு சிறு சோதனையும் இருக்கிறது. ஜெயிக்கிறீர்களா பாருங்கள்.