மகரந்தம்

ஒளி ஊடுருவும் சிமெண்ட்

இது இருந்தால் நிறைய இருட்டு வீடுகள் சென்னையிலும், கல்கத்தாவிலும், பம்பாயிலும் ஒளி வீசும் கட்டிடங்களாகி விடும். எத்தனையோ கோடவுன்கள் இருட்டுக் கல்லறைகளாக இல்லாமல் மனிதர் நடமாடி வேலை செய்யும் இடங்களாகும். இந்த சிமெண்ட் சுவர்கள் வழியே காற்றும் வீசுமானால், என்னவொரு சுகமாக இருக்கும்? கொசுக்களையும், தூசியையும் மட்டும் வடிகட்டி அனுப்பும்படி வடிவமைக்கச் சொல்ல வேண்டும். இதாலிய நிறுவனம் இப்படி ஒரு சிமெண்டை உருவாக்கி அதற்குக் காப்புரிமை எல்லாம் வாங்கி இருக்கிறதாம். அதில் வேடிக்கை என்னவென்றால் உலகமகா திருடர்கள் நிறைந்த சீனத் தொழிலுற்பத்தி கண்காட்சியில் இதைக் காட்டி இருக்கிறார்கள். முன்பொரு காட்சியில் ஜெர்மன் நிறுவனம் சீமென்ஸ் இப்படித்தான் தம் அதிவேக ரயில் வண்டிகளைக் காட்டி விட்டு, அன்றிரவு அதன் டிஸைன், மேலும் அமைப்புத் திட்டங்களை எல்லாம் சீனத் தொழிற்துறைத் திருடர்களிடம் பறிகொடுத்து விட்டு, இன்று சீனாவின் அதிவேக ரயில்கள் முழுக்க சீனாவாலேயே தயாரிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சீமென்ஸ் அந்த அமைப்புகள் எல்லாம் திருடப்பட்டன என்று புலம்பிக் கொண்டிருக்கிறது. சீனா அதைப் பற்றிக் கவலைப் பட்டால்தானே? இந்த இதாலிய நிறுவனமும் இன்னும் சில வருடங்களில் இப்படிப் புலம்பும் என நாம் உறுதியாக நம்பலாம்.

http://www.gizmag.com/italian-firm-creates-transparent-cement/17454/

புத்தக இடப்பற்றாகுறை? – தீர்ந்தது பிரச்சனை

வீடுகளும், குடியிருப்புகளும் மக்கள் தொகை பெருகப் பெருக, நகரங்கள் விரிவடைய விரிவடைய, அளவில் சுருங்குவதையும் அறிவோம். தெரிந்த எழுத்தாளர்கள், பிடித்த எழுத்தாளர்களோ சும்மா இராமல் அவர் கை அரிப்பு, மன அவதிக்கு வடிகாலாகப் புத்தகங்களை அவ்வப்போது எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் கண நேர ஆசைக்கு விழுந்து, வீட்டில் இன்னும் நான்கைந்து புத்தகங்களைக் கொண்டு வந்து சேர்த்து எல்லாரிடமும் முகச்சுளிப்பைப் பெறுகிறோம். ஒரு தனி அறையையே புத்தகத்திற்காக ஒதுக்கி வைத்து வரிசையாக வைத்தால் இடமில்லை என்று கட்டுக் கட்டாக வைத்தார் என் நண்பர். எது எங்கிருக்கிறது என்று குத்து மதிப்பாகத் தெரிந்தாலும் உடனே உருவி எடுத்து விடமுடியாத அளவு அடைசல். பூச்சிக் கொல்லி மருந்துகள், எலிகள் நுழையா வண்ணம் பாதுகாப்பு, தூசி தட்டல் இப்படி பல பராமரிப்பு வேலைகள். இதை எல்லாவற்றையும் எப்படியாவது படமெடுத்து வைத்துக் கொண்டு விட்டு ஏதாவது நூலகத்துக்குக் கொடுத்து விடலாம். 90-களில் அதற்கான கருவி கிட்டவில்லை. இன்று ஒரு கருவி வந்திருக்கிறது. அதிலும் ஒரு பிரச்சினை. கருவியைப் புத்தகத்தின் மீது பொருத்த ஒரு நபர், பக்கங்களைப் புரட்ட இன்னொருவர் என்று ஆள்பலம் வேண்டி இருக்கிறது. என்றாலும் கருவியின் விலையும் மலிவுதான், பின் படமெடுத்ததைக் கணினியிலோ, இன்று கிட்டுகிற மின் புத்தக வாசிப்புக் கருவிகளிலோ சேர்த்து எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம், நண்பர்களோடு எளிதில் பகிரலாம். இதோ அந்தக் கருவி.

http://www.gizmag.com/book-saver-scanner-from-ion-unveiled/17532/

குற்றவாளியான போலிஸ்

தான் கைது செய்யும் பெண்களில் பலரை பலாத்காரம் செய்து உடலுறவு கொண்டதற்காக ஒரு பிரிட்டிஷ் போலிஸ்காரருக்குப் பிரிட்டிஷ் நீதி மன்றம் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறது. இது மட்டும் இந்தியாவில் நடந்தால் இந்திய சினிமா உலகும் அரசியல் உலகும் எத்தனையோ ‘தலை’களை இழக்கும். ஏன் மடாதிபதிகள், சர்ச்சாதிபதிகள் போன்றாரிலும் ஒரு கணிசமான எண்ணிக்கை குறையும். செய்தியைப் பிரசுரித்த கார்டியன் இந்த போலிஸ்காரரின் படத்தை ஏன் இத்தனை பெரிதாகப் போட்டிருக்கிறது என்றுதான் புரியவில்லை. ஆயுளுக்குச் சிறையில் இருக்கப் போகும் நபர் குறித்து மக்களுக்கு உருவத்தோடு விவரம் தெரிவதில் என்ன பெரிய பலன் என்று இந்தப் பத்திரிகை நினைக்கிறது?
http://www.guardian.co.uk/uk/2011/jan/11/rapist-police-officer-life-sentence

1794-ல் நிகழ்ந்த சிசேரியன்
தினம் மாறும் தளத்தில் செய்திகளுக்குப் பல இடங்களில் இருந்து செய்திகளைத் திரட்டுகிறார்கள். ஒரு இடம், பழைய வரலாற்றுப் பதிவுகள். அமெரிக்காவில் இந்த நாளில், சுமார் 260 வருடங்கள் முன்பு முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் பிரசவத்தில் குழந்தை ஒன்று பிறந்தது என்பது செய்தி. இதில் தேதிதான் முக்கியம், வருடம் அல்ல, அதாவது இதொன்றும் 250ஆவது வருடம் இல்லை, 300ஆவது வருடம் இல்லை. ஜனவரி 14 அன்று என்னென்ன முக்கியமாக நடந்தன என்று சல்லடையை வரலாற்றில் முக்கினால் கிட்டும் எத்தனையோ நிகழ்வுகளில் ஒன்றைப் பொறுக்கி இதை எழுதி இருக்கிறார்கள். கட்டுரையைப் படித்தல் அறுவை சிகிச்சை மூலம் பிள்ளைப் பேறு என்பது ஏற்கனவே பல நாடுகளில் தெரிந்த ஒன்றுதான் என்றும் தகவல் உண்டு. ஸ்விட்ஸர்லாந்தில், 1500ஆம் ஆண்டுதான் முதல் முறையாகக் குழந்தையும், தாயும் உயிர் பிழைத்த அறுவை சிகிச்சை நடந்தது என்று ஒரு தகவலில் ஒரு சிறு தகுதிப்படுத்தலும் உண்டு. அதாவது அந்த முறைதான் முதல் தடவையாக பதிவான தகவல் கிட்டுகிறது. அதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா இல்லையா என்பது யூரோப்பிய வரலாற்றில் தெரியவில்லை. இதர நாடுகளில்? உங்கள் வரலாற்றை நீங்கள்தானே எழுத வேண்டும், அவர்கள் எழுதுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும், இல்லையா? தகவல் கட்டுரை இதோ.

http://www.wired.com/thisdayintech/2011/01/0114caesarean-first-us/