புத்தகப் பரிந்துரைகள் – 2011

07thtamil_340395f

சென்னையில் வருடந்தோறும் நடைபெறும் புத்தகக்கண்காட்சி இந்தமுறையும் சென்ற வாரம் ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து நாளை மறுநாள் 17-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. கண்காட்சியைச் சுற்றியதிலும், நண்பர்களின் பரிந்துரையின் பேரிலும் கிடைத்த சில குறிப்பிடத்தக்க படைப்புகளின் பட்டியல் இது. கடைசி இரு தினங்களில் கண்காட்சிக்குச் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் மிக மிக நிறைவான விஷயம் தேர்ந்த இலக்கியவாதிகளின் சில புத்தகங்கள் நல்ல முறையில் விற்பது. தமிழினி வெளியீடாக வந்திருக்கும் நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதைத்தொகுப்புக்கு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்ததால் இப்புத்தகம் நல்ல கவனிப்பைப் பெற்று, சிறந்த முறையில் விற்றிருக்கிறது. நல்ல புத்தகங்களை தேடிப்பதிப்பிக்கும் தமிழினி பதிப்பகத்துக்கு இது மேலும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்திருக்கும். தமிழினி வெளியீடாக வந்திருக்கும் நாஞ்சில்நாடனின் ‘கான் சாகிப்’ என்ற சிறுகதைத் தொகுதியும் குறிப்பிடத்தக்க ஒன்று.

ஜெயமோகன் எழுதிய ‘இன்றைய காந்தி’ புத்தகமும் தமிழினியில் இந்தமுறை விற்றுத்தீர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான கண்மணி குணசேகரனின் பூரணி பொற்கலை, உயிர்த்தண்ணீர் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ராஜேந்திர சோழனின் குறுநாவல் தொகுப்பும் முக்கியமானவை. தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிடக்கூடாதவை. 2007-இல் வெளியாகி இன்னும் பரவலான கவனத்தைப் பெறாத ஜே.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ நாவலும் மிகவும் முக்கியமான ஒன்று.

கீரனூர் ஜாகிர் ராஜா இஸ்லாமியர்கள் அல்லாத தேர்ந்த எழுத்தாளர்கள், இஸ்லாமியப் பின்னணியில் எழுதிய சிறுகதைகளை ‘காஃபிர்களின் கதை’ என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். இது மிகவும் முக்கியமானதொரு சிறுகதைத் தொகுப்பு. ஆழி பதிப்பக அரங்கில் கிடைக்கிறது.

தாணு பிச்சையா எழுதிய ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ என்ற கவிதைத்தொகுப்பு இந்த வருடம் வெளிவந்ததில்லையென்றாலும், மிகவும் முக்கியமான தொகுப்பு என்பதால் இங்கே குறிப்பிடுகிறேன். திணை வெளீயிடகம் என்ற நிறுவனம் பதிப்பித்த இப்புத்தகத்தை அகல் பதிப்பக அரங்கில் வாங்கலாம். இத்தொகுப்பு ராஜ மார்த்தாண்டன் விருதைப் பெற்றிருக்கிறது. வரும் ஜனவரி 30-ஆம் தேதி நாகர்கோயிலில் இந்த விருது வழங்கப்படுகிறது. மேல் விவரங்களுக்கு: http://www.jeyamohan.in/?p=10911

இரு முக்கியமான தேர்ந்த படைப்பாளிகளின் தொகுப்புகள் இந்த வருடம் வந்திருக்கின்றன. அடையாளம் வெளியீடாக வந்திருக்கும் கு.ப.ராவின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பையும், உயிர்மை வெளியீடாக லா.ச.ரா சிறுகதைகளின் தொகுப்பையும் முழுமையாகத் தொகுத்துப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாதவை. உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலும் சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறது. விருட்சம் பதிப்பக அரங்கில் சில அரிய பழைய இலக்கியப் புத்தகங்கள் கிடைக்கின்றன. ‘என் சிறுகதை பாணி’ உள்ளிட்ட சி.சு.செல்லப்பாவின் சில புத்தகங்களை இந்த அரங்கில் வாங்கலாம்.

தமிழினி அரங்கிற்கு எதிரே இருக்கும் ‘கண்மணி க்ரியேட்டிவ்’ என்ற அரங்கில் இசை விமர்சகர் சுப்புடுவின் நான்கு புத்தகங்கள் கிடைக்கின்றன. வாசிப்பு சுவாரசியத்துக்காகவும், சுப்புடுவின் கிண்டல் கலந்த நடைக்காகவும், கர்நாடக சங்கீத மேடைக்கச்சேரிகளின் ஒரு snapshot போலவும் இப்புத்தகங்களைப் படிக்கலாம். தினமணி அரங்கில் ‘இசைவிழா மலர் – 2011’ கிடைக்கிறது. பல அரிய தகவல்களும், புகைப்படங்களும் அடங்கிய பொக்கிஷம் இது. 2009, 2010 ஆம் ஆண்டுகளின் இசைமலர்களையும் இந்த அரங்கில் வாங்கலாம். இசை ரசிகர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாத பொக்கிஷங்கள் இவை.

பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல், வைக்கம் முகமது பஷீரின் ‘பாத்துமாவின் ஆடு’ (தமிழில் குளச்சல் மூ.யூசுப்), சென்ற வருடம் மறைந்த ஆர்.சூடாமணி எழுதிய ‘இரவுச்சுடர்’ நாவல் ஆகியவை காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவை. மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா குறித்த அனுபவங்களையும், சிந்தனைகளையும் எழுதியிருக்கும் ‘சினிமா அனுபவம்’ என்ற புத்தகம் கவிஞர் சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடில் வெளியாகியிருக்கிறது. வ.உ.சிதம்பரனார் எழுதிய ‘திலக மகரிஷி’ என்னும் பாலகங்காதர திலகரின் வரலாறும் வெளியாகியிருக்கிறது. இவை தவிர ஹெப்சிபா ஜேசுதாஸன் (புத்தம் வீடு), கிருத்திகா (வாசவேஸ்வரம்), எம்.வி.வெங்கட்ராம், நீல.பத்மநாபன் (பள்ளிகொண்டபுரம்), பூமணி (பிறகு) போன்ற அரிய எழுத்தாளர்களின் படைப்புகளை க்ளாஸிக் வரிசையில் முன்பே வெளியிட்டிருக்கிறது. புதுமைப்பித்தன், கிருஷ்ணன் நம்பி, மெளனி ஆகியோரின் ஒட்டுமொத்த சிறுகதைத் தொகுப்புகளும் காலச்சுவடு பதிப்பகத்தில் குறிப்பிடத்தக்கவை.

திலீப்குமாரின் சிறந்த சிறுகதைத் தொகுப்பான ‘கடவு’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் இந்த வருடம் மீள்பதிப்பித்திருக்கிறது.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஜெயமோகன் எழுதிய சாகச நாவலான ‘உலோகம்’ நாவலும் விற்றுத்தீர்ந்து, மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். விறுவிறுவெனப் படித்துவிடமுடியும் இந்த நாவல் தமிழின் உளவியல் சாகசக்கதைகளில் ஒரு புதிய திறப்பு. கிழக்கு பதிப்பகத்தில் வெளியாகியிருக்கும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘நம்பக்கூடாத கடவுள்’கட்டுரைத்தொகுப்பும் மிக முக்கியமானதொரு புத்தகம். நாத்திகம், அறிவியல், ஆன்மீகம் ஆகியவற்றைக் குறித்து அரவிந்தன் நீலகண்டன் தமிழ்பேப்பர் தளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

ஷிஷ்ரி (தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம்) பதிப்பித்திருக்கும் ‘தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்’ என்னும் நூல் ஆய்வுநோக்கில் மிகவும் முக்கியமான ஒன்று. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எஸ்.இராமச்சந்திரன், அ.கணேச நாடார் எழுதியிருக்கும் இப்புத்தகம் உடுமலை.காம் அரங்கில் கிடைக்கிறது.

தினத்தந்தி வெளியீடாக வந்திருக்கும் வரலாற்றுச்சுவடுகள் என்ற தொகுப்பு மிக மிக அரிதான, முக்கியமானதொரு பொக்கிஷம். 270 ரூபாயில் ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் அனைவரும் தவறவிடாமல் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டிய தொகுப்பு. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சோழர்கால ஒவியங்களைப் பிரதியெடுத்து வரைந்து புத்தகத்தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. 156 பக்கம் உள்ள ரூ 500 விலை உள்ள இந்த புத்தகம் கண்காட்சியில் சலுகை விலையில் ரூ.375க்கு கிடைக்கிறது.

மொழிபெயர்ப்புகள்:

முத்தம்மாள் பழனிச்சாமி என்ற கொங்குநாட்டுப்பெண் சஞ்சிக்கூலியாக மலாயா சென்று உழைப்பால் உயர்ந்த தன்வரலாற்று நூல். அவரே ஆங்கிலத்திலிருந்து இப்புத்தகத்தைத் தமிழில் “நாடுவிட்டு நாடு” என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முதல்பதிப்பு 2007-இல் வெளிவந்தது.

எஸ்.திவாகர், பூர்ணசந்திர தேஜஸ்வி, யூ.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற முக்கியமான கன்னட எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஆர்.நஞ்சுண்டன் மொழிபெயர்த்து “மரணம் மற்றும்…” என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.  2002-இல் முதல்பதிப்பு வெளிவந்து இப்புத்தகக் கண்காட்சிக்கு மறுபதிப்பு கண்டிருக்கிறது. எஸ்.திவாகரின் கன்னடச் சிறுகதைகள் தி.சு.சதாசிவத்தால் மொழிபெயர்க்கப்பட்டு “அந்தரத்தில் நின்ற நீர்” என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகத்தில் கிடைக்கிறது. சென்னையின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த கன்னடச் சிறுகதைகள் சுவாரசியமான வாசிப்பனுபவத்தைத் தருபவை.

சாகித்ய அகாடமி அரங்கில் ஏராளமான நல்ல இந்திய எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. நீலகண்டப்பறவையைத் தேடி (அதின் பந்தோபாத்யாய் – வங்காளம்), பாவண்ணனின் சிறப்பான மொழிபெயர்ப்பில் பைரப்பாவின் பருவம் (கன்னடம்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வ.உ.சி பதிப்பக அரங்கில் எம்.டி.வாசுதேவன் நாயர், தகழி சிவசங்கரன் பிள்ளை போன்றோரின் முக்கியமான நாவல்களின் மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன.

இவை போக, ஏராளமான அரிய புத்தகங்கள் பல பதிப்பகங்களில் விசேஷ சலுகை விலையில் கிடைக்கின்றன. புத்தக விரும்பிகள் இந்தக் கடைசி இருநாட்களையும் சிறந்த முறையில் உபயோகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.