நாஞ்சில் நாடன் – ஒரு கனிந்த தமிழ் இதயம்

வாசிப்பின் சுகம் ஒருவரை தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. அதுதான் அடிப்படை. விமர்சனம் பண்ண வேண்டிய நிர்பந்தமும், போக்குகளைப் பற்றிய தகவல் சுமைகளும் அதிருஷ்டசாலி வாசகனை பீடித்து இந்த சுகத்தை வதம் செய்து விடுவதில்லை.

அதே போல் கலையானுபவம் கலைஞனுக்கும், ரசிகனுக்கும் இடையே ஆன பிரத்யேக உறவு.

சுகமும், பிரத்யேக உறவும், கலைஞனின், வாசகனின் குறிப்பாக வாழ்க்கையின் புரிதலை தெளிவாக்கி விரிவாக்குகின்றன.

கலைஞன் தான் காணும் ஒளியால் நிரம்பி வழிகையிலேயே தாஸ்தாயவ்ஸ்கியும், காஃப்காவும், பாரதியும், புதுமைப் பித்தனும் கிடைக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் அவ்வழியில் வந்தவர்தான்.

dsc_5439-1வெகுசனப் பத்ரிகைகளும்,‘இஸம்’ ‘இனம்’ சார்ந்த பத்ரிகைகளும் அதிகமாயுள்ள சூழலில் ஒரு வாசகன் சாதாரணமாகக் காண்பது வெற்றுச் சந்தடி, இலட்சிய கோஷம், பொழுது போக்கு நீர்மை, காழ்ப்பு. எழுதுபவர்களிலோ பலரும் எங்கோ எதிலோ தேங்கிப் போனவர்கள். இது வசை அல்ல. இத்தகைய சூழலில் ஊற்றுக் கண்களையும், வரத்து வாய்க்கால்களையும் மூடி விடாத, புண்ணிய நதியாகும் நோக்கமுமற்று நமது அன்றாட வாழ்வின் அங்கமான சாமான்ய ஆறாக நாஞ்சில் நாடன் ஓடுகிறார்.

சுமைகளும், பழைய குப்பைகளும், பாசியும் அற்ற இந்த ஆறு தமிழர்களின், அதன் மூலம் மனிதர்களின் இயல்பை, முரண்பாடுகளை, பஞ்சமா பாதகங்களை அஞ்சாது செய்யக் கூடிய சாத்தியக் கூறுகளை, கருணையின் சாயையை, தூய்மையை, சர்வ சாதாரணமாக, ‘அனுபவங்களை முயற்சி செய்து பெற்ற செயற்கைத் தகவல்கள்’ இன்றி அனாயாசமாக, ஆனால் மிகப் பெரிய வேட்கையோடு காட்டிச் செல்கிறது.

இவரோடு எழுத வந்த பலர் தீவிரமாக இயங்குவதை நிறுத்தி பல காலம் ஆகி விட்டது. இவர் இன்னமும் தன் வாசகர் வட்டமும், அவர்கள் மேல் தன் தாக்கமும் அதிகரித்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர் எந்தக் கொட்டகையிலும், சாதனையிலும் ஓய்வெடுத்துக் கொள்ள நினைத்து உறங்கிப் போய் விடவில்லை. வாழ்வின் சவால்களும், சண்டைகளும், தாக்குதல்களும் பேனாவைப் பிடுங்கி எறியவும் இவர் விடவில்லை. கதவு, கூரை, சன்னல்கள் அற்ற இடத்தில் உயிர்ப்புடன் இருப்பதனாலேயே இவருக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.

இவர் பெரிதும் மதிக்கும் முன்னோடிகளில் ஒருவரான நகுலன் சொன்ன ‘When you hate some thing you cannot understand it’ என்கிற சொற்கள் இவர் வாழ்நாள் முழுவதும் துணை வரும் ஜீவ வாக்யங்களில் ஒன்றென்பதால் எதன் மீதும் துவேஷமற்று எதையும் புரிந்து கொள்ள இவரால் முடிகிறது. இலக்கியம் வாழ்க்கையின் புரிதலுக்கான ஒரு சாதனம் என்றாகையில் அந்த சாதனத்தின் சாதகர்களில் இதன் காரணமாகவே இவர் மிக முக்கியமானவராகிறர்.

நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் உடனே தென்படுபவை: வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையின் முன் முடிவுகள் அற்ற கூர்மை, கொள்கலனின் கொள்ளளவின் பிரம்மாண்டம், எங்கும் தங்காது எந்த முடிவுப் புதரிலும் சிக்காது இயங்கும் நேர்மை, அனாதைகள், அபலைகளின் மேல் (பிரச்சார, தன்னை ‘இன்னார்’ என்று வெளி உலகுக்கு பறைசாற்ற காட்டிக் கொள்கிற நீச புத்தி அற்ற) உண்மையாக உள்ள அக்கறை, சுவாரஸ்யம், பாதகம் செய்பவரைக் கண்டு அஞ்சாத எள்ளல், எல்லாவற்றுக்கும் மேல் வளமும், எளிமையும், குளிர்ச்சியும், செழுமையும் மிளிரும் தமிழ்.

காலங்கள் தோறும் இவர் கற்றுக் கொண்டேயிருந்திருக்கிறார். இன்னமும் கற்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியன் செய்ய வேண்டிய வேலையை தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து செய்து கொண்டேயிருக்கிறார். தமிழில் வெளிவரும் முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் காசு கொடுத்து வாங்கிப் படிப்பவர். நான் கூட வேடிக்கையாகக் கேட்பேன். “பெண்டிங் விழுந்த அரியர்ஸ்ஸை எல்லாம் க்ளியர் பண்ணிட்டீங்களா” என்று. “இன்னும் மூன்று புத்தகங்கள் இருக்கு. இந்த வாரம் படிச்சுடுவேன்” என்பார்.

இதற்கிடையில் சங்கத் தமிழ், அகராதிகள், கம்பன், ஆழ்வார்கள், தேவாரம், ஔவை, என்று கலந்து பழக இவருக்கு எப்படி நேரம் இருக்கிறது என்பது இவர் இலக்கிய தாகம் எத்தகையது என்பதற்கு சான்று.

இவ்வளவு படித்தும் அறிவின் சுமை இவரிடம் இல்லை. அதனால் வாசகனுக்கு அயற்சியும் இல்லை. இவர் தனிப் பேச்சில் கூட யாருக்கும் வகுப்பு எடுப்பதோ உபதேசம் செய்வதோ இல்லை. ஆறு நாவல்கள், 110 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், இரண்டு கவிதைத் தொகுதிகள், எண்ணற்ற பேட்டிகள், முன்னுரைகள், மதிப்புரைகள் எழுதியுள்ள இவரிடம் ஒரு புது எழுத்தாளர் சுலபமாகத் தன் கருத்துகளைக் கூற முடியும். சில சமயம் அவர்கள் மட்டுமே கூட பேசி, இவர் கேட்டுக் கொண்டிருப்பதும் உண்டு.

அதே போல் இவரை முகஸ்துதியாக யாரும் புகழவும் முடியாது. ‘அந்தக் கதை ப்ரமாதம், எனக்கு ரொம்பப் பிடித்தது’ என்று யாராவது ஆரம்பிக்கையில், பேச்சை வேறெங்கோ மாற்றி எடுத்துச் சென்று விடுவார். அதே சமயம் அவர் கதைகளை ஆழமாக விவாதிக்கும் நல்வாய்ப்பும் என் போன்ற சிலருக்குக் கிடைத்திருக்கிறது.

அனைவருக்கும் நண்பர். எல்லா கூடாரங்களிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. எனினும் தன் கருத்துகளைக் கூற அஞ்சாதவர். இவரது துவேஷமற்ற போக்கும் நேர்மையுமே இவர் பெயரை எவர் ஜாபிதாவிலும் இடம் பெற வைத்து விடுகிறது.

தன் மனதைப் புண் படுத்தியவர்களிடம் கூட இவர் சாதாரணமாக பகைமை பாராட்டுவதில்லை. ‘அவன் இப்பிடி செஞ்சுட்டான். இனி அவனுக்கு நான் எதையும் அனுப்பப் போறதில்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அந்த நபர் ஃபோனில் வந்தால், ‘என்ன. . . . நல்லாருக்கீங்களா’ என்று ஆத்மார்த்தமாகக் கேட்பார்.

nanjil3

அறிவு, சாமர்த்தியமாக மாறாத எல்லையில் இருப்பவர். எதிர் கருத்துகளைக் கூறுபவர்களிடமும் பொறுமையாக இருக்கும் பக்குவம் பெற்றவர். குடும்பம், நண்பர்கள் என பேச, அன்பு செலுத்த 24 மணி நேரமும் இவருக்கு ஆட்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் வாழ்வில் காட்டும் அன்பெனும் அமுதைப் போன்றே ஆலகாலத்தையும் எழுத்தில் மட்டும் கொண்டு வருகிறார் நிதர்சன வாழ்வில் அது எங்கும் நிறைந்திருப்பதை உணர்ந்தவர் என்பதால்.

புற உலகு, அக உலகு என்று இரண்டு இருப்பது போல் தோன்றுகிறது. அதே போல் மூளை, இதயம் என்கிற இரண்டு இயக்கங்களும் மனதில் இயங்குகிற மாதிரி தோன்றுகிறது. Subjectivity – objectivity, இடது மூளை – வலது மூளை, கலை – அறிவியல் என்றெல்லாம் இவை பிளவு பட்டு நிற்பது போன்ற தோற்றங்களும் உள்ளன. இவ்விரட்டைகளை புராண அன்னத்தைப் போல் பால், நீர் என்று பிரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் இயலாது.

புற உலக நிகழ்வுகளை இதயம் கொண்டு ‘சப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ, அக உலக இயக்கங்களை ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதுவதோ உலக இலக்கியங்களில் அரிதில்லை. எல்லாவித ‘பர்முடேஷன் காம்பினேஷன்’களிலும் இதைப் பார்க்கலாம்.

புதுமைப் பித்தனும், மௌனியும் வேறு மாதிரி என்று தெரிந்தாலும் இருவரும் மிகுந்த தெளிவுடன் சிலவற்றை ‘இன்டலெக்ட்’ டை உபயோகித்து எழுதியவர்களே! சிலகதைகளில் வேண்டுமென்றாவது ஈரம் கொஞ்சம் கம்மியாக இருப்பதைப் படிக்கும் போதே உணரலாம்.

‘இதயம், இதயம்’ என்ற தம்பட்ட எழுத்துகளுக்குப் பஞ்சம் இல்லை. இதய நிகழ்வுகளை இதயம் மூலம் கனிவோடு அணுகியவர் தி.ஜானகிராமன். இவர் போன்றே புறப்பட்ட நகலெழுத்துகளினூடே ஆயாசமடைய வைக்கும் அபரிமித நெகிழ்ச்சிகளும் பல உண்டு.

பெருங்கலை என்பது இதயமும் மூளையும் வலது இடது பேதமின்றி ‘சப்ஜெக்டிவ்’ விஷயங்களைப் பற்றிக் கூட ‘அப்ஜெக்டிவ்’ வாக எழுதும் போது நேர்கிறது. கலைஞன் வாழ்வின் தரிசனத்தில் லயித்து கரைந்த பின்னரே வெளிவந்து தன் அறிவால் மொழியால் அதை நம்மிடம் தொடர்பு கொண்டு கூறுகிறான். இந்த சரிவிகிதக் கலப்பில் இதயம் உணர்வதை மூளை சரியாக சொல்கையில் பெருங்கலை தோன்றி விடுகிறது.

போர்ஹே சற்று தூக்கலான இன்டலெக்டின் வெளிப்பாடு என்றால் காஃப்கா சரியான இதய மூளை கலப்பாக, அதாவது முழுமையான பார்வை, கூர்மை, வெளிப்பாடு சேர்ந்து ‘கலை’ செய்தவராகவும் தெரிகிறார். தாஸ்தாயவ்ஸ்கியும், டால்ஸ்டாயும் அப்படியே. லாவ்ட்சு சொல்லும் “clear heads and calm minds’. இவர்கள் மிகக் களேபரத்தில் இருக்கும் வாழ்க்கையையும் அப்படியே எழுத்தினால் ‘காம் மைண்ட்’டுடன், அதாவது திரிக்காத மனதினால் வாசகனுக்குக் கடத்துபவர்கள்.

புற உலகு பற்றிய இதயத்தின் வெளிப்பாடாக பழந்தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இருக்கிறது. மன நெகிழ்வின் உச்சமாக அதன் பின் வந்த காவியங்களும், பக்தியும். இவை அனைத்திலும் ஊறியது நாஞ்சில் நாடனின் மனம். புற உலக வாழ்க்கையை வறட்டு, தத்துவ, கோட்பாடு, தர்க்க நோக்கின்றி இதயத்தால் பார்த்துணர்ந்து எழுதியவை இவர் எழுத்துகள்.

இதயத்தில் ‘காலம் மீறி இருந்து சொதசொதத்துப் போகாமல்’ எழுதுவதே இவர் கலை வெளிப்பாடு. அதற்கு கறாரான தர்க்கத்தின் மீதமைந்த கணிதத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு பெற்றவர் என்பதும் ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னொரு முக்கிய காரணம் பழந்தமிழ், பக்தித் தமிழ், காவியத்தமிழ் மட்டுமின்றி பாரதி துவங்கி, இன்று எழுதும் எவ்வித பின்புலமோ, பிரபலமோ அற்றவரின் எழுத்துகள் வரை அயராது ஆர்வத்துடன் படிப்பது. மேலும் உலக இலக்கியங்களோடான பரிச்சயம்.

மற்றொன்று இவரது தாட்சண்யம். ஈழத் தமிழருக்காக, ஒரு பைசா பிரதியுபகாரமாகப் பெறாமல், உண்மையிலேயே துக்கமுற்றுத் துடித்தவர். முற்றிலும் எதிரிடையான கருத்துகளைச் சொல்பவரிடத்தும் முகம் சுளிக்காது கேட்பவர். தன் அபிப்பிராயங்களைக் கட்டித் தொங்காமல் இருப்பது மனிதரிடையே மிக அரிதாக காணப் படும் அருங்குணம். அதுவும் இவருக்கு சாத்தியமாகி இருக்கிறது.

கலை, நீதியுனர்வோடு இரண்டறக் கலந்தது. ‘வெள்ளாளர் வாழ்க்கை’யில் ‘காலம் நிகழ்த்திய மாற்றங்களை’ நூலாக எழுதிய இவரை தற்கால தமிழ் வழக்கப் படி ‘வெள்ளாளர் அடைப்புக் குறிகளு’க்குள் அடைக்க முடியாது. இவரது எழுத்துகளைப் படித்தவருக்கு இது தெரியும். லௌகீக வாழ்விலும் வெள்ளாளர்கள் அவர்கள் இனத்து அமைச்சருக்கும் சேர்த்து இவரை கௌரவிக்க அழைத்தபோது அந்த விழாவையே ‘வர முடியாது’ என்று தவிர்த்தவர்.

வெள்ளாளர், தமிழர் என்றில்லாமல் மனிதருக்குப் பொதுவான மனம் இவரது எழுதும் மனம். அதனால்தான் வட இந்தியாவிலிருந்து “காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊருலே கெடக்காம , ஊரை நாறடிக்க வந்திருப்பதாக” வசைபாடப்படும் க்ஷெத்ராடனம் வரும் வட இந்திய ஏழை யாத்ரீகர்களுக்காக “மேற்கில் மேலாங்கோடும், கிழக்கில் முப்பந்தலும் தாண்டியிராத, தெற்கே கன்யாகுமரி கடலையும், வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்டவே முடியாத” வெற்றுக் காழ்ப்பினருக்கு எதிராக எழுத முடிகிறது.

கலை உள்ளம் என்பது எப்போதுமே ‘anti-establishment’ டாகத்தான் இருக்கும். வெற்றி தோல்விகளிலோ, சாச்வதத்தைப் பற்றியோ அதற்குக் கவலை இல்லை. இது ஒரு மாற்றமுடியாத சூத்திரம். அவ்வுள்ளம் எழுதவோ, பிற கலைகளில் ஈடுபடவோ கூட வேண்டாம். மகாத்மா காந்தியிடமும், ராஜாஜியிடமும், பாரதியிடமும், ஜெயகாந்தனிடமும், ஜெயமோகனிடமும் இன்ன பிறரிடமும் நாம் இதைத்தான் கண்டோம்; காண்கிறோம். (அவ்வுள்ளம் சகட வாழ்க்கையினால் சின்னாப் பின்னமாக்கப் பட்டோ, சாமர்த்தியத்தாலோ எஸ்டாப்ளிஷ்மென்டுக்கு இணக்கமாகப் போனால் அதில் கலை செத்து விடும் என்பதும் கண்கூடு) அந்நியர் ஆட்சிக்கு இணங்கிப் போவதே அனுகூலம் என்ற கால கட்டத்தில் அதை எதிர்ப்பது, நாத்திகப் போர்வையில் துவேஷம் வளர்ப்பதில் உள்ள அநீதியை முழுமூச்சாக எதிர்ப்பது, அரசு கையில் இருப்பதால், அரசியல் கூட்டம் பின்னால் இருப்பதால் எல்லா புகழும் எனக்கே என்பவரின் பொய்யை எதிர்ப்பது எல்லாமே ‘anti-establishment’ உணர்வுகள்தான். தராசு அநியாயமாக தாழ்கையில் எதிர்த்தட்டில் அமர்ந்து சரி செய்பவன் கலைஞன். அதைத் தொடர்ந்து செய்து வருபவர் நாஞ்சில் நாடன்.

உயர்கலையும் இலக்கியமும் ஒரு மொழியைச் சேர்ந்ததாய் இருந்தாலும், ஒரு பிரதேசத்தில் உருவானாலும் அவை உலகளாவியவை. உயிர்கள் அனைத்தையும் தழுவியவை. அதனால்தான் நாஞ்சில் நாடன் கதைகளில், இரையுண்டதாலோ கர்ப்பிணியாயிருப்பதாலோ நிறைந்த வயிறோடு சாலையைக் கடந்து செல்லும் பாம்புக்காக வண்டியை நிறுத்திய பேருந்து ஓட்டுநர் “போ மோளே பெட்டென்னு’ என்று கனிவு கசிய கூறி காக்கிறார். எங்கிருந்தோ வரும் பாபுராவும், யுகங்களாய்த் தொடரும் மனித குலத்தின் பசியின் வடிவமாய் நாத்ரேயும் சந்திக்கும் அந்த திரிவேணி சங்கமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அனைத்துக்கும் ஆதாரமாக ‘தயை’ சரஸ்வதியாக ஓடுகிறது. அதனால்தான் ‘யாம் உண்பேம்’ என்பது தகப்பன் சாமியின் உபதேசம் போல், மிச்ச வாழ்க்கைக்குமான மந்திரம் போல் பாபுராவின் காதில் ஒலிக்கிறது. நம் காதிலும்.