டிசம்பர் நாற்காலிகள்-2

வேப்பிலைக் கட்டி என்பது வேப்பிலையில் செய்யப்படுவதல்ல; நாரத்தை மரத்தின் இலைகளை உரலில் இடித்து (மிக்ஸியில் அரைத்தால் flavour போய்விடும்!) செய்ய வேண்டிய ஒரு ஹை டெக் ஊறுகாய் வகை அது. புளி உருண்டை போல ஆகிவிடாமல், படு சன்னமாக செல்லுலோஸ் ஃபைபரை வெளியே கொண்டு வருவதில்தான் பக்குவமே இருக்கிறது. அந்த வேப்பிலைக் கட்டியையும் ஞானாம்பிகாவின் signature dish-ஆன மணத்தக்காளி வற்றல் குழம்பையும் தொட்டுக்கொண்டு தயிர் சாதம் சாப்பிட்டவர்கள், பிறகு குழலினிது யாழினிது என்று வேறு எதையும் தேடிப் போக மாட்டார்கள்.

காண்டீனுக்குப் போகாத சமயங்களில் சிறிது கச்சேரியும் கேட்டேன். நாரத கான சபாவில் சௌம்யா. மாருதி கார் சாம்பல் நிறத்தில் பட்டுப் புடவை, இங்கிலீஷ் கலர் பார்டரில் பளிச்சென்று இருந்தார். ஆனால் கச்சேரிதான் நமுத்துப் போன பிஸ்கட் மாதிரி ஆரம்பித்தது. மா.மா. கௌளையில் ஸ்ரீராதா என்று ஒரு கிருதி. பிறகு காவாவா. திவாகர தனுஜம்… ஆனால் எல்லாவற்றிலுமே spontaneity was missing. அவ்வப்போது ஒரு பிருகாவை உதிர்த்துவிட்டு வெற்றிப் புன்னகையுடன் பக்கவாத்தியக்காரரைத் திரும்பிப் பார்ப்பாரே, அது கூட ஒத்திகை பார்த்த மாதிரிதான் தோன்றிது. ‘காமாட்சி அம்பா’ பாட்டை மிகவும் கீழ் சுருதியில் எடுத்துவிட்டுக் கிணற்றிலிருந்து மேலே வரமுடியாமல் திண்டாடினார்.

lat_sowmya_157179f

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சூடு பிடித்து usual Sowmya திரும்பி வந்தார். கோவிந்த சாயினம் பாட்டை சீனத்து maglev ட்ரெயின் வேகத்தில் ஒரு ஓட்டு ஓட்டினார். ‘கச்சேரி களை கட்டி விட்டது’!

பிறகு சாரங்கா, தேஷ் என்று தன் forte-யில் புகுந்து விளையாடியவர், காவடிச் சிந்தைக் காலடியில் போட்டுப் பழனி பஞ்சாமிர்தம் மாதிரி மிதித்துக் கூழாக்கிவிட்டார். இனி வேறெங்கும் ஆனந்த பைரவி கேட்கத் தேவையில்லை!

* * *

சஞ்சய் சுப்ரமணியனின் வாய் மட்டுமில்லாமல் மொத்த உடம்பும் பாட்டுப் பாடுகிறது. குன்னக்குடிக்கு அடுத்தபடி சேஷ்டை மன்னர் என்ற பட்டத்துக்குத் தகுதியானவர். கை, அது பாட்டுக்கு ஏதோ மானசீகமான இயந்திரத்தின் knob-களைத் திருகிக்கொண்டே இருக்கிறது. ஆலாபனையின் போது ததரின்னாவைக் கைவிட்டு ‘டுட்டுட்டுடூ’ என்று கூட ஆரம்பித்துவிடுகிறார்.

அன்றைக்கு வாணி மகாலில் அவர் ஆரம்பித்த ஆலாபனை, ஆபேரி என்று புரிவதற்கு முப்பது செகண்டு ஆயிற்று. ஏனெனில் அதில் ‘சிங்கார வேலனே’யின் வாடை கூட இல்லை. ‘இந்த ராகத்துக்குப் பேரு கூட ஆபேரிதான்’ என்று சஞ்சய்யே பிறகு ஜோக் அடித்தார். இதை இப்படிக் கூடப் பாட முடியுமா!

நெலதா மருலு கொண்டினியை அவசரமில்லாமல் RTP செய்தார். அவரும் வயலின் வரதராஜனும் நிதபமதப்பா-பமதப்பா-மதப்பா-தப்பா என்று மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்தபோது மைக் செட்காரரே கூத்தாடினார். அன்றைய ஹை லைட் ஒரு அருமையான ராக மாலிகை. வசந்தா, தேஷ், தர்பார் இன்னும் என்னென்னவோ இனிப்பான சரக்குகளைக் கலக்கிய heady cocktail.

07fr-sanjay_subrama_338064f

மிருதங்கம் ஸ்ரீமுஷ்ணம் ராவ்காரு, சஞ்சய் பாடுவதை அருகிலிருந்து தகப்பனார் போல் பெருமையுடன் ரசிக்கிறார். மேடையில் team spirit என்றால் இந்த டீமிடம்தான் பார்க்க வேண்டும்.

இங்கேயும் ஞானாம்பிகாதான் கேட்டரிங். வள்ளுவருக்கு வாசுகி அமைந்தது போல் மொறு மொறுவென்ற அடையுடன் ஜோடி சேர்ந்த புளி கொத்சு. ராஜா, slurp, slurp! ஆழ்வார் சொன்ன மாதிரி நரை, திரை, மூப்பு, பிரஷர், ஷுகர் எல்லாம் வந்து பீடிக்கும் முன், உப்பில்லாத கோதுமை சாதம் சாப்பிட ஆரம்பிக்கும் முன், வாழ்க்கையை அவசரமாக அனுபவி!

* * *

அனுமார் வேலை செய்யாமல் சீரியஸாக வாசிக்கும் தருணங்களில் கணேஷ்-குமரேஷ் வயலினை மிகவும் ரசிக்க முடிகிறது. பின்-நவீனத்துவ கெட்டப்பில் இருவரும் ஒல்லியான வெண்டைக்காய்க் குடுமி வைத்திருக்கிறார்கள். ‘ஹரித்வார மங்கலம் அண்ணாவுடன் நாங்களும் வாசிக்கிறோம் என்பதில் பெருமை அடைகிறோம்’ என்று அவையடக்கமாகச் சொன்னார்கள்.

வாணி மகாலில் ஜகதானந்தகாரகாவை பிரம்மாண்டமாக ஆரம்பித்தபோதே சகோதரர்கள் full form-இல் இருப்பது புரிந்துவிட்டது. சாத்திரம் மீறாத, ஆனால் மாடர்னாகப் பேசும் வில். They have mastered the craft. கணேஷ் வாசித்த அந்த அருமையான மத்யமாவதி ஆலாபனையை, பல்லாண்டுக்குப் பிறகு சக தாத்தாக்களிடம் பேசி மகிழ்வதற்காக என் நியூரான்களில் பத்திரமாக சேமித்திருக்கிறேன்.

darbar-ganesh-kumaresh_medium

ஆனால் ஸ்வரம் போடும்போது enthu அளவுக்கு மீறிப் போய் இரண்டு பேரும் கீச்சு கீச்சென்று மாறி மாறித் தேய்ப்பதையும், கடைசி அரை இஞ்ச் கம்பியில் விரலை வைத்துக்கொண்டு டிரில்லிங் மெஷினால் இரும்புத் தகட்டைத் துளைப்பது போல் சப்தம் எழுப்புவதையும் இசை என்று ஒத்துக் கொள்வது கடினம்.

தஞ்சாவூர் tradition-இல் தலை வாழை இலை போட்டு ஏற்பாடாகச் சாப்பிட விரும்பினால் ராதாகிருஷ்ணன் சாலை, உட்லண்ட்ஸில் உள்ள ‘தஞ்சாவூர்’ ரெஸ்ட்டாரெண்டுக்கு வாருங்கள். பருப்பு நெய் அப்பளத்துடன் பன்னீர் போல் தெளிவான ரசம் பரிமாறி பீடா மடித்துக் கொடுத்து அனுப்புவார்கள். ஜெமினி அருகே அமைதித் தீவாக இருந்த டிரைவ் இன் ஹோட்டலை மூடி அந்த இடத்தையும் மற்றொரு நாராசக் கும்பல் பீச்சாக மாற்றினார்களே, அதற்குப் பிறகு பி.பி. ஸ்ரீநிவாஸ் கூட இடம் பெயர்ந்து இங்கேதான் வந்து உட்காருகிறார்.

* * *

ஒய்ஜிபி ஆடிட்டோரியம் என்பது ஒரு மழலையர் பள்ளிக்கூடத்தின் நடுவே மூன்று பக்கமும் திறந்த ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை. புராதனமான அஹுஜா ஸ்பீக்கர்கள். அதெல்லாம் பரவாயில்லை; ஆனால் அரசியல் பொதுக் கூட்டம் போல் வரிசையாக சவுக்குக் கம்பம் நட்டு நம் மூக்குக்கு நேரே செங்குத்தாக டியூப் லைட் கட்டி அலங்கரித்திருக்க வேண்டாம். கண் வலிக்கிறது.

பாரத் கலாச்சாரில் பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரிக்கு, தள்ளு முள்ளுக் கூட்டம். ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே என்று மென்மையாக வலிக்காமல் ஆரம்பித்தார். போகப் போக அந்த ஒலிப் பின்னல்கள் சிக்கலடைந்து, ஸ்வரம் பாட ஆரம்பித்த போது அவருடைய experience-ம் pedigree-யும் சாதகமும் ஆர்ட்டீசியன் ஊற்றாகப் பீறிட்டன. ஓ ரங்கசாயியை எடுத்துக்கொண்டு இத்தாலிய ரிஸ்ட் வாட்ச் மாதிரி வைரம் பதித்து நுணுக்கி நுணுக்கி வேலைப்பாடுகள் செய்து நம் கையில் கட்டிவிட்டார்; பெருமையாக இருந்தது. அடுத்து ராக மாலிகையில் ஒரு தில்லானா – கெஜட்டில் பதிவு செய்து அவர் தன் பெயரை பாம்பே அல்வா ஜெயஸ்ரீ என்று மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு டேஸ்ட்!

ஒவ்வொரு கச்சேரியின் நட்ட நடுவிலும் திருமதி ஒய்.ஜி.பி ஆண்ட்டி, உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒயர்லெஸ் மைக் வைத்துக்கொண்டு அசரீரி மாதிரி சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்து விடுகிறார். இதனால் கச்சேரியின் டெம்ப்போவே இறங்கிப் போய்விடுகிறதே!

கலாச்சாரில் காண்ட்டீன் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை (ஆறிப் போன பஃப் தவிர). அந்த மழலையர் பள்ளியின் பாய்ஸ் டாய்லெட்டில் நுழைந்தால், தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் வரிசையாகக் குட்டிக் குட்டியான பீங்கான் urinals. அதைப் பார்த்த உடனே பஸ் டிக்கெட் ஒன்றின் பின்புறத்தில் ஹைக்கூ எழுதுவதற்குப் பத்து விரலும் பரபரத்தது.

* * *

சிக்கில் குருசரண் சென்ற இடத்துக்கெல்லாம் ஹட்ச் நாய் போல் பின் தொடர்ந்து கேட்டேன். இந்த இளைஞருக்கு சீசனின் மிகச் சிறந்த male voice என்ற விருதை சுலபமாகத் தரலாம். வாமிட் காமெட் விமானம் போல மூன்று ஸ்தாயியும் அநாயாசமாக டைவ் அடிக்கும் குரல்.

நாசாமணி என்ற வித்தியாசமான ராகத்தில் ஸ்ரீரமா சரஸ்வதி பாடினபோது அதில் அவர் செய்த சில experiments ஆச்சரியப்படுத்தின. குருசரணிடம் நல்ல IQ தெரிகிறது. குறிப்பாக நாரதாவில் அவர் பாடிய சரகுன பாலிம்ப்பவைச் சொல்ல வேண்டும்; இங்க் ஃபில்லரில் liquid nitrogen எடுத்து சொட்டுச் சொட்டாகக் காதில் விட்டது போல் ஜிலீரென்று சுட்டது.

sikkilgurucharan_307042f

நல்ல வேளை – குருசரணின் பெற்றோர்கள் ‘இஞ்சினியரிங் காலேஜ் படித்தால்தான் ஆம்பளை’ என்ற தியரியின்படி பையனை ஏதாவது பொட்டல் காட்டு சுயநிதிக் கல்லூரிக்கு அனுப்பி சாஃப்ட்வேரில் இழுத்து விடாதது நமக்கெல்லாம் அதிர்ஷ்டம்தான்.

* * *

எந்தக் கச்சேரியாக இருந்தாலும் சரி, தனி ஆவர்த்தனம் ஆரம்பித்த உடனேயே சென்னை ரசிகர்கள் பாராளுமன்றம் போல வெளி நடப்பு செய்கிறார்கள். இந்தத் தருணத்திற்காகவே வருடக் கணக்காக அதிகாலை நாலு மணிக்கு எழுந்து சாதகம் செய்த ஒரு கலைஞனை முகத்திற்கு நேராக அவமரியாதை செய்கிறோம் என்பதை அவர்கள் யோசித்தால் நலமாக இருக்கும்.

இசை மழை பொழியும் டிடிகே ரோடிலிருந்து பூமராங் போல வளைந்த மேம்பாலம் ஏறி இறங்கினால் நைவேத்யா என்று சின்னதாக ஒரு ரெஸ்ட்டாரண்ட். தாபா சர்தார்ஜிக்கே நாக்கு ஊற வைக்கும் வட இந்திய உணவுகள். குறிப்பாக, வறுத்த முந்திரியைப் போட்டுத் தாளித்த அரை இனிப்பான அந்த பாம்பே லுக்டி…! நெய் மணக்கும் அந்தக் காரா சேவ்…!

* * *

‘ஜேசுதாஸ் கச்சேரி கேட்கப் போகாதே. குரலெல்லாம் ஆடிப் போச்சு’ என்று எச்சரித்தாள் தோழி. இருந்தும் போனேன். ‘பிரமதவனம்’ தந்த முயக்கத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை.

மறுபடி என் மூக்கருகே பாரத் கலாச்சாரின் டியூப் லைட்கள். கருகரு தாடியுடன் வெண் ஜிப்பாவில் ஜேசு அண்ணா. அந்தத் தங்கக் குரல்தான் இழுத்த இழுப்புக்கு வர மறுக்கிறது. நிறைய rough edges. அதட்டி அதட்டிப் பாடி சமாளித்தார். (நாமெல்லாம் அவர் வயதில் multiplication table கூட ஒப்பிக்க முடியாது).

KJJ ஒரு ஜாலியான ஆசாமி! நடுநடுவே பாட்டை நிறுத்தி ஆடியன்ஸிடம் இயல்பாகப் பேசுகிறார். குட்டிக் குட்டி anecdote-கள் சொல்கிறார். கச்சேரி கேட்கும் மூடே இல்லாமல் வீட்டில் நம் சொந்தத் தாத்தா நம் எதிரில் அமர்ந்து பாடிக் காட்டுவது போல் கலகலப்பாக இருக்கிறது. சின்ன மேஜையில் ஆப்பிள் லாப்டாப் வைத்துக்கொண்டு ஸ்டைலஸ் குச்சியால் தொட்டுத் தொட்டு ஏதோ குறித்துக் கொள்கிறார்.

hyf07yesudas-1_338013e

முதலில் ஹம்ஸத்வனியைத் தூக்கிச் சுவரில் அறைந்து சாய்த்து நிறுத்தினார். பிறகு குருலேக, மருகேலரா, க்‌ஷீர சாகர என்று பதாகைகளுடன் அணிவகுப்பு நடந்தது. கதனுவாரியை எடுத்துக்கொண்டு ஐந்து நாள் கிரிக்கெட் மாதிரி elaborate-ஆக ஆலாபனை செய்தபோது பாதியில் ஆடியன்ஸ் அவசரப் பட்டுக் கை தட்ட ஆரம்பித்துவிட்டார்கள். “இன்னும் ஆகலை” என்று கடிந்து கொண்டு தொடர்ந்தார்.

பிறகு லைட்டான பேட்டைக்கு வந்தபோது – அவரது home turf ஆயிற்றே – சிக்ஸரும் பௌண்டரியுமாகத் தூள் பறந்தது. கடைசியில் பாடிய அந்த ஹரிவராஸனம், cochlear implant மாதிரி என் காதிலேயே உறைந்துவிட்டது.

* * *

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் முன்னே மாதிரி சொதப்பாமல் இந்த முறை பர்ஸைத் திறந்திருக்கிறார்கள். கதிரி, அருண், சஞ்சய் என்று எல்லாம் டாப் செட்டுகள்.

காண்டீனில் ‘அறுசுவை அரசு பிரைவேட் லிமிட்டெட் உங்களை வரவேற்கிறது’ என்று தெர்மோகோல் எழுத்துக்கள் இழுக்கப் பார்க்கின்றன. ஐ, இஸ்க்கு புஸ்க்கு! நானா ஏமாறுவேன்? காமராஜ், அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு கட்சி நடத்துவது போல்தான் இதெல்லாம். ஒரிஜினல் அறுசுவை அய்யரின் ஒரிஜினல் ரசத்தை ஒரு முறை கப்பில் வாங்கிக் குடித்தால், நாக்கை இழுத்து வைத்துப் பச்சை குத்தியது போல் நிரந்தரமாக அதன் சுவை தங்கிவிடுமே!

* * *

டிசம்பர் நாற்காலிகள் என்று பெயர் வைத்ததற்குக் காரணம் – ஜேசுதாஸ், அருணா சாயிராம் போன்ற ஸ்டார் பாடகர்களுக்கு மட்டும்தான் சபை நிறைந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்றது; மற்றபடி நான் சென்ற மிகப் பல கச்சேரிகளில் அரங்கத்தில் பாதி நாற்காலிகள் காலியாக இருந்தன. (ஓர் உச்சிப் போதில் நடைபெற்ற வீணைக் கச்சேரிக்கு, பக்க வாத்தியர்களைச் சேர்த்தே பதினொரு பேர்தான் இருந்தோம்). இந்த அவல நிலை தொடர்ந்தால் கிட்டார், கீ போர்டு எல்லாம் வைத்துக்கொண்டு ட்ரம்ஸ் முழங்கக் கர்நாடக இசைக்கு gender change operation செய்யும் கோஷ்டி உள்ளே நுழைந்துவிடும்.

இப்போதே அவர்கள் வாசலில் காத்திருக்கிறார்கள்.