சொல்வனம் பிரசுரம் – சுகா, ராமன்ராஜா புத்தகங்கள்

logo3

அன்புள்ள நண்பர்களுக்கு,

ஏற்கனவே அறிவித்தபடி, இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற சனிக்கிழமையன்று (08-01-2011) இவ்விரு புத்தகங்களும் ‘உடுமலை.காம்’ அரங்குக்கு வந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நட்பார்ந்த புத்தகவெளியீடு நடந்தது. சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியிருக்கிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிருக்கிறது. புத்தகங்கள் உடுமலை.காம் அரங்கில் கிடைக்கின்றன. தாயார் சன்னதி புத்தகங்கள் விற்றுத்தீர்ந்து புதிய பதிப்புகள் வந்திருக்கின்றன. சொல்வனம் இதழைத் தொடர்ந்து ஆதரித்து, இதழை நாங்கள் உற்சாகமாக நடத்தக் காரணமாயிருக்கும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய இந்தப் புதிய முயற்சிக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் “உடுமலை.காம்” அரங்கில் (அரங்க எண்: 302) விற்பனைக்குக் கிடைக்கின்றன.
தாயார் சன்னதி – சுகா – 256 பக்கங்கள் – ரூ.150
சிலிக்கான் கடவுள் – ராமன் ராஜா – 160 பக்கங்கள் -ரூ 100

மிக்க அன்புடன்,
ஆசிரியர் குழு.

இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது.
— வண்ணதாசன்

சுகாவின் பிறந்த மண் பற்றிய துல்லியமான பதிவுகளும், வசீகரமான வட்டார வழக்குப் பிரயோகமும், ஹாஸ்ய உணர்வும், படித்து முடித்த பின்பும் மனசை விட்டகலாத இனிய விஷயங்கள். இந்தக் கட்டுரைகள் மூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன விஷயம் அது.

— பாலுமகேந்திரா

divider2

அறிவியல் பற்றி தமிழில் எழுதி எல்லோரின் கவனத்தையும் திருப்பிய சுஜாதாவிற்கு அடுத்தபடியாக ராமன் ராஜா இன்றைய பொழுதில் இயங்கி வருகிறார். அறிவியலை சுவாரஸ்யமாக எழுதுவது என்பது சிலசமயம் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி அறிவியலை இரண்டாம்பட்சமாக்கிவிடக்கூடிய ஆபத்து உண்டு. ஆனால் ராமன் ராஜாவின் எழுத்து அப்படிப்பட்டதில்லை. அறிவியலின் மீதும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வளர்ச்சி நிலைகள் மீது குவிமையம் எப்போதுமே இருக்கும் வகையில் ராமன் ராஜாவின் எழுத்து அமைந்துள்ளது.
— கோபால் ராஜாராம்

’சிலிக்கான் கடவுள்’ புத்தகத்துக்கு சேதுபதி அருணாசலம் எழுதியிருக்கும் நன்றியுரையை இங்கே படிக்கலாம்.