கானாங்குனி
கண்மூடித் தூங்கடி தங்கம்
கானாங்குனி வருகிறான் பார்
தூங்காத பிள்ளைகளைக் கூடையில் வைத்துத்
தூக்கிக்கொண்டு போய்விடுவானென்றேன்
கானாங்குனியல்ல வருவது
காய்பழம் தருமங்கிளென்றான்
கண்மூடித்தூங்கடி செல்லம்
கரடிகள் வருகின்ற நேரம்
கண்விழித்திருந்தால் உன்னைக்
காட்டுக்கெடுத்துப்போகுமென்றேன்
கூண்டிற்குள்ளிருக்கும் கரடி
வீட்டிற்குள்ளெப்படி வருமென்றான்
உறங்கிவிடு சமர்த்தாயுடனே
உக்கிர நரசிம்மர் வந்துவிடுவார்
உனைப் பிடித்துப்போய் இருட்டறையில்
பரண்மேல் தள்ளிப் பூட்டிடுவாரென்றேன்
உம்மாச்சி உட்கார்ந்துதானிருக்கும்
நடந்துவராதெனக்குத்தெரியுமென்றான்
பேசாமல் தூங்கிவிடு இல்லையேல்
போலீஸ் வந்துனைப் பிடித்துப் போகுமென்றேன்
பொம்மை செல்போனைக் கையிலெடுத்தான்
போலீஸ்! தாத்தா இன்னும் தூங்கவில்லை
பிடித்துப்போ வந்துடனேயென்றான்
-o00o-
காணாமல் போயிருந்ததது கடல். மீன்கள்
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை
கூழாங்கற்கண்ணாடிகளில் அழகு பார்த்துக்கொண்டன
எந்த சமயத்தில் அந்தக் கொடிமின்னல் மின்னியதென்றோ
எப்போதவன்கொடிமின்னலேறிச சென்றானென்றோ
எப்போது நீர்க்குமிழிகள் மீன்களை விழுங்கினவென்றோ
எதுவும் நினைவின் காலப்ரமாணத்தில் பதிவாகவில்லை
ஆனால் தற்சமயம் தாழம்பூநிறப்பெண்கள் மீன்கள்போல
உடைகளின்றி நீந்திக்கொண்டிருந்தார்கள்
பெண்களைவிட அழகானதாய் படைப்பில் வேறொன்றை
தேடித்தோற்றவன் தருணக்குமிழியில்
தன்னைமறந்து பெண்ணுடல்களை
ரசித்துக்கொண்டிருந்தான்
நிலநடுக்கம் நிகழ்ந்ததுபோலதிர்ந்துபோனவன்
வாழைப்பூக்களினிடையே பெண்களிலிதுவரை
கண்டிராத புதியதோர் பாகமொன்று கண்டான்
மலைமீதிருக்கும் மாதேஸ்வரனை நினைத்தவன்
மரணபயத்தில் அலறிய சேவலை
மதியவுணவாயுண்ண அகலத்திறந்த
அனகொண்டாவின் வாயிலிறங்கினான்.
மிருகக்காட்சிசாலை
காலை நீட்டிக் கட்டிலில் படுத்திருந்தான்
கட்டிலெப்படி மாயமாச்சு? தெரியவில்லை
கட்டைகுட்டையானவன் திடகாத்திரன்
காற்றிலெரிந்த கோலைப்போலே கணத்தில்
மலைக்குமேலே பறந்தான் சாமி சத்தியமாய்
ரெண்டு கண்ணால் பார்த்தோம் சாமி
பொய்யில்லை பிரமையில்லை
கோழிக்குஞ்சை கழுகெடுத்துப் போவதுண்டு
ஆட்டுக்குட்டியை நரியெடுத்துப் போவதுண்டு
யானை வலுவுள்ளவனை விரல்சொடுக்கில்
யார் தூக்கிப்போனார்?எதுவும் விளங்கவில்லை
தெய்வக்குத்தமேதும் நடந்துபோச்சா?
குட்டிச்சாத்தானேதுமெறிஞ்சு போச்சா?
என்ன செய்தால் வீமன் திரும்பிவருவான்?
எமக்கோர் உபாயம் சொல்வீர் உமக்குக்
கோடிபுண்ணியம் சேருமென்றார்
படிகத்தையுருட்டிப்பார்த்த பைரவசாமி
முகம் மூன்று முண்டைக்கண்ணாறு
முன்னும் பின்னுமாய் வாயுமாறு
கால்களில்லை கைபத்தும் ரெக்கையாமாம்
கண்கட்டும் வித்தைக்காரன் மாயாவி
வேறுகிரகவாசி வந்துபோனான்
வீமனைக்கடத்திப்போனான்
வீமனெனும் கிராதகன் இனிவீடுசேரான்
விசித்திரப்பிறவிகளுலவுங்கோளில்
விலங்குகள் நடுவில் வைத்தான் கூண்டிலென்றார்
கல்படகு
காலப்புனலில்
தோன்றும் மறையும்
குமிழிகளின்மீது நடந்தபடி
நாம் பேசிக்கொண்டிருந்தோம்
அல்லது
வேலிகளற்ற வெளியின்
புவர்லோகத்தில்
தொங்குதோட்டத்தில் ஒடியவாறு
நாம் பேசிக்கொண்டிருந்தோம்
தலைவரின் துணையானபின்
குமுதா அரவானிக்கு
கோடிக்கணக்கில் சொத்துசேர்ந்த்து
ப்ளாஸ்டிக் பூக்கள் தற்சமயம்
மணம்கமழ விற்பனைக்கு வருவது
கோவில்களுக்கும் கும்பல்
கூடுவது கரைவது குறித்து
நாம் பேசிக்கொண்டிருந்தோம்
நாயுருட்டிய தேங்காய்க்குள்
பூவிருந்தது இல்லாதது குறித்து
கல்படகேறிக் கடலில் பயணித்தவர்கள்
அக்கரை சேர்ந்த அதிசயங்களை
நாம் நிறைய விவாதித்தோம்
இறந்துபோன நம்செவிகள்
இன்னமும் நம்முகத்தில்
ஓட்டிக்கொண்டிருப்பது குறித்து
நாமெதுவும் பேசவில்லை
பிரியாத உன்னுதடுகளைப்பற்றி
புரளாத என் கல்நாக்கைப்பற்றி
நாமெதுவும் பேசவேயில்லை
தலையும் வாலுமில்லாமல்
தலைகீழாய் தொங்கும்
நம் இருமை குறித்துப்பேச
நமக்கு நேரமிருக்கவில்லை