இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 5

11
சோவியத் நான் கன்ஃபர்மிஸ்ட் ஆர்ட்
Soviet Non-conformist Art-1953 / 1986

சோவியத் ருஷ்யாவில் 1953/1986 களுக்கு இடையில் நிகழ்ந்த இயக்கங்கள், கலைப்படைப்புப் பாணி போன்றவற்றை வரலாறு ‘சோவியத் நான் கன்ஃபர் மிஸ்ட் ஆர்ட்'(Soviet Non-conformist Art)என்று பெயரிட்டழைக்கிறது. அவை அப்போது அரசின் கலைக் கொள்கையாக விளங்கிய சோஷியலிஸ்ட் ரியலிஸம் என்னும் தணிகைமுறையைத் தாண்டி மறைவாகவே இயங்கின. கம்யூனிஸ அரசின் ஆட்சியில் கலைக் கொள்கை வரையறுக்கப்பட்டு மிகக் கடுமையாக செயற்படுத்தப்பட்டது பற்றி நாம் முன்னரே பார்த்தோம். இவ்விதம் தங்களது கற்பனை சுதந்திரத்துக்கு தடைபோட்ட அரசு ஆணைக்கு அடிபணியாமல் கலைஞர் பலர் இரகசியமாகத் தாம் விரும்பிய விதமாகப் படைக்க முற்பட்டனர். அவை திருட்டுத்தனமாக கலை ஆர்வலரிடையே வலம் வந்தது. அந்த உணர்வு சார்ந்த பல படைப்பாளிகள் கூடிப் பயணித்ததுதான் நான் கன்ஃபர்மிஸ்ட் ஆர்ட் (Non-conformist Art) இயக்கம். அது, ‘அனஃபிஷியல் ஆர்ட்’ (‘Un-official Art’) என்றும், ‘அண்டர்கிரௌண்ட் ஆர்ட்’ (‘Under-Ground Art’) என்றும்கூடக் குறிப்பிடப் படுகிறது.

சர்வாதிகாரியாகச் செயற்பட்ட ஸ்டாலின் 1953 இல் மரணமடைந்தார். பதவியில் அமர்ந்த நிகிதா குருஷேவ் பிரகடப்படுத்தின கொள்கையான ‘த்வா’ (Thaw) கலை மீதான அரசின் பிடியை சிறிது தளர்த்தியது. அதிகாரபூர்வமான எந்த மாற்றமும் நிகழாவிடினும், கலைஞர்களுக்கிடையில் அரசுப் பிடியினின்று மீண்டு கலை உணர்வுகளையும் சுதந்திரமான சிந்தனைகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தலாம் என்னும் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது.

பிரபல அமெரிக்க இதழ் ‘லைஃப்’ (LIFE) அப்போது ருஷ்ய நாட்டில் பிரபலமான இரு ஓவியர்களின் படைப்புகளை (Portraits) வெளியிட்டது. ஒன்று, ஓவியர் செரோவ் (Velantin Serov) வின் சோவியத் அரசின் அதிகாரபூர்வமான லெனின் உருவம் (Official Soviet Icon); மற்றது, அரசு நிர்ணயித்த படைப்பு விதியிலிருந்து விலகி மறைவாக சுதந்திரப் படைப்புகளைத் தீட்டிய ஓவியர் ‘அனடாலி வெரெவ்’ (Anatoly zverev) இன் சுய உருவம் (Self Portrait). கிருஸ்துவ மதத்தில் கடவுளுக்கும் சாத்தானுக்கும் காலம் காலமாக நிகழும் யுத்தத்தின் பிரதிபலிப்பாக அது மேலை நாடுகளில் விமர்சிக்கப்பட்டது. அதிபர் குருஷேவுக்கு இந்த விவரம் தெரிய வந்தவுடன் அவர் மிகுந்த சினமும் ஆத்திரமும் கொண்டு அனைத்து வெளிநாட்டு விருந்தினரிடமிருந்தும் தமது தொடர்பைத் துண்டித்தார். காட்சிக்கூடங்களில் நடைபெறும் ஓவியக் காட்சிகளுக்கு தடைபோடப்பட்டது. புதியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஓவியர் ‘அனடாலி வெரெவ்’ மீது அவரது கோபம் திரும்பியது.

1962 ஆம் ஆண்டு மாஸ்கோ ஓவியர் சங்கத்தின் 30 ஆவது கலைக் காட்சி மெனேஜ் காட்சி (Manege Exhibition) வளாகத்தில் நிகழ்ந்தது. அதில் அரசின் கலைக் கொள்கையிலிருந்து விலகிப் படைக்கப்பட்ட ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன. அதிபர் குருஷேவ் காட்சிக்கு வருகை தந்தார். ஓவியரும் சிற்பியுமான எர்னெஸ்ட் நெய்ஸ்வெஸ்ட்னியுடன் (Ernst Neizvestny) அரங்கிலேயே அதுபற்றி விவாதித்து, அவ்வகைப் படைப்புகளை எள்ளி இகழ்ந்து, அவற்றை சாணி (Shit) என்றும், ஓவியர்களை ஓரினசேர்கையாளர் (Homosexuals) என்றும் வெளிப்படையாக நிந்தித்தார். ‘போற்றுதலுக்கு உரிய ருஷ்யக் குடிமகனை இவ்வாறு ஏன் சிதைத்துப் படைக்கிறீர்கள்?’ என்று சாடினார்.

மாஸ்கோ நகருக்கு வெளியே ‘பெல்யேவோ’ (Belyaevo)என்று ஒரு வனம் பராமரிக்கப்பட்டு வந்தது. அதில் இருந்த திறந்தவெளி திடலில் 1974 செப்டம்பர் 15 இல் ஓவியக் காட்சி ஒன்றை நிகழ்த்த அனுமதி கோரி அரசின் கலை கொள்கையினின்றும் விலகிச் செயற்படும் சில ஓவியர்கள் அரசுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் அரசிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. எனினும், தங்கள் எண்ணத்தைச் செயலாக்க முடிவு செய்தனர் ஓவியர்கள். அன்றைய தொடக்கவிழாவுக்கு தமது உறவினர், நண்பர், சில கலை விமர்சகர் என்று அழைத்தனர். மொத்தமாக அங்கு இருபது அல்லது முப்பது பேர் இருந்திருப்பர்.

காட்சி தொடங்கிய சிறிது நேரத்திலேயே அரசு இயந்திரம் செயற் பட்டது. சீருடையில் இல்லாத நூறுபேர் கொண்ட காவற்துறையின் ஒரு பிரிவு புல் டோஸர் (Bull dozer), தண்ணீர்வண்டி, குப்பைவண்டி சகிதம் காட்சி நடக்கும் இடத்துக்கு வந்தது. அரசு அறிவித்தபடி அந்தக் குழு காட்டை சீர்திருத்த அனுப்பப்பட்ட தோட்டக்கார்கள். அதிகாரியின் உத்தரவுக்கு ஏற்ப காவற்துறைப் பிரிவு காட்சியிலிருந்த படைப்புகளை அடித்து நொறுக்கி முற்றிலுமாக அழித்து விட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பலரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள், கைது செய்யப் பட்டனர். ஓவியர் ஆஸ்கர் ரபைன் (Oscar Rabine) புல்டோசரின் முன்புற இரும்புத் தகட்டைப் பிடித்துத் தொங்கியபடி காட்சியை அழிவிலிருந்தும் காப்பாற்ற முயன்றார். “உங்களை யெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டும். ஆனால், அதற்கான தோட்டாக்கள் உற்பத்தி செய்யும் செலவுக்குக் கூட நீங்கள் அருகதை அற்றவர்கள்” (You should be shot, but only you are not worth the ammunition) என்று தாக்குதலை நடத்திய அதிகாரி கத்தினார்.

அந்த நிகழ்ச்சி வெளியுலகில் மற்ற நாடுகளில் பெரும் கண்டனத்துக் குள்ளாகியது. வேறு வழியின்றி சோவியத் அரசு இரு வாரங்களுக்குப் பின்பு மாஸ்கோ நகரில் Izmailovsky பூங்காவில் வேறொரு ஓவியக்காட்சியை நடத்த அனுமதி கொடுக்கும்படியாகியது. வரலாற்றில் அந்த நிகழ்ச்சி “Bull dozer Exhibition” என்று பதியப்பட்டது.

1980களில் அதிபரின் ‘திறந்த அணுகல்” “புனர் கட்டமைப்பு” போன்ற கொள்கைகளினால் கலைஞர்கள் மீதிருந்த அரசின் இரும்புப்பிடி வெகுவாகத் தளர்ந்தது. ஒருங்கிணைந்த சோவியத் அரசின் வீழ்ச்சியும், சிதறலும் அரங் கேறியபின் இந்த இயக்கத்துக்கு அவசியமில்லாமல் போனது.

12) Non-conformist Art- groups

சோவியத் ருஷ்யாவில் குருஷேவ் அதிபராயிருந்த காலத்தில் அவர் அறிவித்த ‘Thaw’ கொள்கை வலுவிழந்து போனபின் அரசு கலைவிதியிலிருந்து விலகிப் பயணித்த கலைஞர்கள் தமக்குள் குழுக்களாகவும் இயக்கங்களாகவும் செயற்பட்டு கலைப்பயணத்தைத் தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட பாணியைப் பின்பற்றவில்லை. எப்போதும் இறுக்கமற்று அவரவர் வழியே பயணித்தனர். என்றாலும், அரசின் கலைவிதியிலிருந்து விலகிப் போன பொதுஅம்சம் மட்டுமே அவர்களை ஒன்றிணைத்தது. இவ்விதம் இயங்கிய கலைஞர் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் நகரங்களில்தான் மையம்கொண்டிருந்தனர்.

Lianozovo group

Lianozovo என்பது மாஸ்கோ நகரத்தின் எல்லைப்புறத்தில் அமந்துள்ள ஒரு கிராமம். கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்குதான் வசித்தனர். கிராமத்தின் பெயரை தமது குழுவுக்கானதாக அமைத்துக்கொண்டு அவர்கள் மிக வீரியமாகச் செயற்பட்டனர். குழுவில் பலர் அரூபப் பாணி ஓவியங்களைப் படைத்தனர். 1957 இல் அரசின் ‘Thaw’ கொள்கை ருஷ்யாவின் தொன்மையான கலை உத்திகளையும், மேலை நாட்டு புதிய கலைசார்ந்த சோதனைகளையும் பற்றி இளைய தலைமுறை அறிய உதவியது. 1962 ஆம் ஆண்டு Manege Exhibition வளாகத்தில் நிகழ்ந்த மாஸ்கோ ஓவியர் சங்கத்தின் 30 ஆவது கலைக் காட்சி அரசின் கலைக் கொள்கையில் மீண்டும் இறுக்கத்தைத் தோற்றுவித்தது. இருப்பினும், கலைஞர்கள் அரசின் கலைச்சட்டத்தில் சிக்காமல் தப்பித்து வாழக் கற்றுவிட்டிருந்தனர். ஸ்டாலின் ஆட்சியில் தோன்றிய அச்சம் இப்போதில்லை. அதிபர் குருஷேவ் மக்களுக்கான இல்லங்களை மேம்படுத்தும் திட்டத்தை செயற் படுத்தினார். அது ஓவியர் தமக்கான கலைக்கூடம் அமைத்துக் கொள்ள வழி செய்தது. ஒருவது கலைக்கூடத்தில் பலரும் கூடி ஓவியங்கள் படைப்பதும் சாத்தியமாயிற்று. அரசு அமைப்புப்படி, அந்தக் குழுவின் உறுப்பினர் மாஸ்கோ கிராபிஃக் ஓவியர் சங்கத்தின் (Moscow Union of Graphic Artists) அரசுப் பணியாளர். ஓவியர் சங்கம் என்பது இன்னொரு அரசு அமைப்பு. எனவே அவர்களுக்கு ஓவியக் காட்சிகளில் பங்கேற்க அனுமதியில்லை. ஆனாலும் இக்குழு தொடர்ந்து உறுப்பினர்களின் படைப்புகளைப் பொது இடத்தில் காட்சிப்படுத்த முயன்று வந்தது. அதனால் அரசின் கோபத்துக்குள்ளானதும் நிகழ்ந்தது (Bull dozer Exhibition)

Sretensky Boulevard group

மாஸ்கோ நகரின் ஒரு பகுதியில் 1960 களில் ஒத்த கருத்துள்ள ஓவியர்குழு ஒன்று இயங்கியது. இவர்களும் அரசின் ஒப்புதல் பெற்ற கிராபிஃக் சங்கத்தில் வேலை செய்தார்கள். இதனால், அரசு அவர்களுக்கு கலைக்கூடம், படைப்புக் கான பொருள்கள் போன்றவற்றைக் கொடுத்தது. அரசு வெளியிட்ட புத்தகங் களுக்கு கிராபிஃக் ஓவியங்கள், கோட்டோவியங்கள் போன்றவற்றை அவர்கள் வரைந்தனர். அத்துடன் தமது சுதந்திர கலைவேட்கைக்கும் அரசு அறியாமல் நேரம் ஒதுக்கினர். இந்தக்குழு ஓரிடத்தில் வசித்தமையால் மட்டுமே இந்தப் பெயருடன் பேசப்படுகிறது.

Moscow Conceptualists

1970 களில் அரசு விதிசெய்த கலைப் பாதையில் பயணிக்காத ருஷ்ய சமகாலக் கலைப் பயணத்தை உண்மையில் உலகுக்கு உரைத்த பணியை இக்குழு தான் செய்தது. அந்த ஓவியர்கள் தங்களுக்கு அரசால் உண்டான தடைகளையும், கண்காணிப்பையும் மீறி வாழ்க்கையின் சுவையான பகுதியையும், கடந்தகால மகிழ்ச்சியான தருணங்களையும் கருப்பொருளாக்கி ஓவியங்களைப் படைத்தனர். Non-conformist Art என்னும் அணுகுமுறையில் ஒரு புதிய தோற்றத்தைக் கொடுத்தனர்.

The Petersburg Group

1964 இல் Hermitage அருங்காட்சியகக் கூடத்தில் நிகழ்ந்த ஓவியக் காட்சி இந்தக்குழு அமைவதற்குக் காரணமாயிற்று. அவ்வருடம் மார்ச் மாதம் 30/31 களில் தொடங்கிய அக்காட்சி ஏப்ரல் முதல்தேதியன்று அரசு அதிகாரியால் இழுத்து மூடப்பட்டது. காட்சியகத்தின் அதிகாரி Mikhail Artamonov பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1967 இல் அக்குழு தனது படைப்பு இலட்சியத்தை அனைவரின் கையெழுத்தோடு அறிக்கையாக வெளியிட்டது. 1979 களுக்குப் பின்னர் குழுவாக இயங்குவது நின்றுபோனது.

Odessa group

கருங்கடலின் துறைமுகமான Odessa நகரம் உக்ரைன் பகுதியில் உள்ளது. 1794 இல் ருஷ்யப் பேரரசி காதரைன் (Catherine-The great) வடிவமைத்த நகரம் அது. எப்போதும் கலைஞர்கள், மாலுமிகள், வர்த்தகர்கள் என்று அந்நகரம் உயிர்த்துடிப்புடன் விளங்கியது. Odessa group ஓவியர்கள் Non-conformist Art வழியில் அரசின் கலைக் கொள்கையை எதிர்த்து இரகசியமாக 1960,70,80 களில் இயங்கினர்.
‘Apartment Exhibition’ என்று அழைக்கப்பட்ட இல்ல ஓவியக் காட்சிகள் அப்போது அங்கு பிரபலமாயின. மிக நெருக்கமான நண்பர்குழாம், கலை ஆர்வலர் போன்றோர் மட்டுமே அவற்றிற்கு அழைக்கப் பட்டனர். வயலின் கலைஞரும், கலைப் பொருள் வர்த்தகருமான Vladimir Asriev தமது இல்லத்தில் இத்தகைய காட்சிகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்தார். 1977களில் அவரது இல்லம் அதிகாரபூர்வமற்ற கலைக்கூடமாக செயற்பட்டது.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]
01_anatolyzverev-images

01-underground-art-images

02_underground-art

03_-underground-art-2648-b

by-oscar-images

by-oscar-rabin-5204

by-serov-images

lenin-by-serov-images

odessa-group-theflower

self-portraitby-ernst5

self-study-serov-images

[/DDET]

(வளரும்)