விட்ட ஷட்ஜம்

[‘சிலிக்கான் கடவுள்’ புத்தகத்துக்கு எழுதப்பட்ட நன்றியுரை]

ஓர் இரவு முழுக்க சுகா புத்தகத்தைப் பிழைதிருத்தித் தூக்கமிழந்ததில் அடுத்த இரவு சோம்பேறித்தனத்தோடு ஆரம்பித்தது. ராமன்ராஜா புத்தகத்தைப் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டுவந்து பிழை திருத்த உட்கார்ந்தபோது மணி இரவு 10.30 ஆகியிருந்தது. நியாயப்படி அப்போதிருந்த ஆயாசத்துக்கு, முதல்நாள் இழந்த உறக்கத்துக்கு, அந்த வேலை ஒரு பெரிய மனச்சுமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு உணர்வு ஒரு துளி கூட வரவில்லை. நள்ளிரவில் பல வரிகளுக்காகத் தன்னந்தனியாக சிரித்துக்கொண்டிருந்தேன்.

[“உடலின் ஓடியாடும் தேவைகளுக்கு நேரடியாக இந்தக் கொழுப்பை எரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் தொப்பை கரையும்; இடுப்பும் தொடையும் மெலியும்; பஸ்ஸில் பக்கத்துசீட்காரர் முறைக்கமாட்டார்.”

“வளைகுடா கடற்கரையில், மெக்ஸிகோ தேசத்தின் அத்தனை சலவைக்காரிகளும் திரண்டு வந்தாலும் சுத்தம் செய்யமுடியாத எண்ணெய்க்கறை.”]

முதல் கட்டுரையிலிருந்து கடைசிக் கட்டுரை வரை உற்சாகம் குன்றாமல் படிக்க முடிந்தது. அதிலும், நிற்காமல் தகவல்மழை பெய்துகொண்டிருக்கும் இணைய யுகத்தில் மனிதனின் நிலை என்ன, மனிதமூளையின் எல்லை என்ன, இந்த பரிணாம வளர்ச்சிப்பாதையில் அடுத்து என்ன என்று ஒரு தொடராக விளக்கிய முதல் ஐந்து கட்டுரைகள் அபாரமான வாசிப்பனுபவத்தைத் தந்தன. இதைக் குறித்தே இவர் ஒரு முழுப்புத்தகத்தையும் எழுதியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்குமே என்றுகூட தோன்றியது. ஆல்வின் டாஃப்ளர் 1970களில் தகவல் புரட்சியைக் குறித்துப் புத்தகமே எழுதியிருந்தாலும் அது தமிழக அறிவுச்சூழலுக்குள் அதிகம் பேசப்படவில்லை. இத்தனைக்கும் நம்மில் பெரும்பாலானோர் இன்று இணையத்திலேயே அதிகம் நேரம் செலவழிக்கிறோம்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டப் பல நல்ல ‘பயன்பாட்டு அறிவியல்’ (application science) கட்டுரைகள் இணையம் மூலம் படிக்கக்கிடைக்கின்றன. நியூயார்க்கர், ஸ்லேட், நேச்சர் போன்ற இதழ்களில் வெளியாகும் வெகுஜன அறிவியல் கட்டுரைகள் என்னைப் பிரமிக்க வைத்திருக்கின்றன. உடனடியாக நினைவுக்கு வருவது ‘பாயின்கேர் தியரம்’ குறித்தும், வி.எஸ்.ராமச்சந்திரன் குறித்தும் நியூயார்க்கரில் வெளியான கட்டுரைகள். தமிழில் இதுபோன்ற கட்டுரைகள் எப்போது வெளியாகும் என்று ஏங்கியிருக்கிறேன். எழுதும் துறை சார்ந்த நேரடிப்பயிற்சியும், அனுபவமும் குறைவாக இருக்கும் தமிழ்ச்சூழலில், அறிவியல்துறையில் நேரடி அனுபவமும், சரளமான எழுத்துமுறையும் கொண்ட ராமன்ராஜாவின் பங்களிப்பு மிகவும் பெரியது.

silicon1-2-copy1நகைச்சுவை உணர்வும், சமகால அறிவியல் குறித்து அப்டேட்டடாக இருப்பதும் ராமன் ராஜாவின் பெரிய பலங்கள். வெறும் அசட்டுத்தனமான வார்த்தை விளையாட்டாக இல்லாமல், எதிர்பார்க்காத இடங்களிலிருந்து ‘அட!’ என்று சொல்லவைக்கும்படியான வாக்கியங்களால் நிரம்பியவை இவர் கட்டுரைகள். (“போஸானின் வாழ்நாள், நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பணிக்காலம் மாதிரி அற்ப நேரம்தான்.”) தமிழில் சமகால அறிவியல்சூழலைக் குறித்து ராமன்ராஜா அளவுக்குத் தொடர்ந்து எழுதி ஆவணப்படுத்தியவர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. (அருண் நரசிம்மனும், அரவிந்தன் நீலகண்டனும் சமகால அறிவியல் குறித்து நல்ல கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் வேலைப்பளு காரணமாக இருவருமே அதிகம் எழுதுவதில்லை.) இத்தனைக்கும் சமகால அறிவியல்சூழல் என்பது பெரும்பாலும் மேற்கின் அறிவியல் ஆராய்ச்சித்துறையோடு தொடர்பு கொண்டது; நமக்கு அந்நியமானது. ஆனால் ராமன்ராஜாவின் எழுத்தில், அவர் கொடுக்கும் உதாரணங்கள் மூலம் நம் வேளச்சேரிக்கே இந்த அறிவியல்சூழல் வந்துவிடுகிறது.

உதாரணமாக, ‘ஹிக்ஸ் போஸான்’ துகளை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று ஒரு மிகப்பெரிய ‘துகள் வெடிப்பு’ நடத்தப்போவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ராமன்ராஜா அதைக்குறித்து இவ்வாறு எழுதுகிறார்:

“இப்படி எல்லாம் முரட்டுப் பரிசோதனை செய்தால் விளைவுகள் எப்படி இருக்குமோ என்று கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவு வெப்பமான நரகத்தில் ப்ளாக் ஹோல் என்ற கரும்பொந்து உருவாவதற்கு சான்ஸ் இருக்கிறது. கரும்பொந்துகளுக்குப் பசி அதிகம். அக்கம்பக்கத்தில் இருப்பதையெல்லாம் விழுங்கி விழுங்கிப் பெரிதாகி வேளச்சேரி வரை வந்துவிட்டால் – நான் எங்கே ஓடுவேன்? என் லாப்டாப் வேறு ஏகப்பட்ட கனம் கனக்கிறதே!”

ராமன்ராஜா காட்டும் அறிவியல்சூழல், அச்சூழலோடு நேரடித் தொடர்பில்லாத வாசகர்களுக்குப் புதியதான ஒன்று. அரசுகளுக்கிடையே ஆராய்ச்சிச்சூழலில் நடக்கும் போட்டி, அதன் காரணமாக வெளிவரும் அரைகுறை முடிவுகள், பொய்யான வெற்றிகள், மருத்துவத்துறையின் ஆராய்ச்சிச்சூழல், மருந்துக் கம்பெனிக்காரர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்கள் ஏற்படுத்தும் செயற்கையான பதற்றம் – இவையெல்லாம் இதற்கு முன் தமிழில் நமக்குப் படிக்கக் கிடைக்காதவை. நம்மை நேரடியாக பாதிக்கக்கூடிய எண்ணெய்ச்சிதறல், NDM மரபணுப் பிரச்சினை போன்றவற்றைக் குறித்து நம் வெகுஜனப் பத்திரிகைகளே விரிவாகப் பேசியிருக்கவேண்டும். ஆனால் இப்பிரச்சினைகளைக் குறித்து வெகு அரிதாக எழுப்பப்பட்ட குரல்களில் ராமன்ராஜாவின் குரலும் ஒன்று.

எப்போதும் புன்னகைக்க வைத்துக்கொண்டிருக்கும் இந்தக் குரலில் மனிதனின் பேராசை ஏற்படுத்தும் அழிவுகள், அறிவியலாளர்கள், வணிகர்களின் கூட்டுக்கொள்ளைகள், அமெரிக்காவின் விரிவாக்கம், சுற்றுச்சூழலை நம் இஷ்டத்துக்கு ஆள நினைப்பது, இந்தியாவை இழிவுபடுத்தும் மேற்கத்திய அறிவியல்சூழல், இந்தியாவின் கையாலாகாத்தனம் என இத்தனையைக் குறித்த தார்மீகக்கோபமும் ஆங்காங்கே தெறித்தபடியே இருக்கிறது. இவையெல்லாம் போக, ராமன்ராஜாவின் கார்ட்டூன்கள் – அதிலும் பப்லு அடித்த லூட்டிகளும், அதிகப்பிரசிங்கித்தனமும் வெகுவாக ரசிக்க வைத்தவை. பல பக்கங்களில் சொல்ல முடியாத விஷயங்களை அநாயசமாக ஒரே ஒரு பப்லு கமெண்ட்டில் சொல்லிவிடுகிறார் ராமன்ராஜா. (”என்ன அங்க்கிள், ஜுரத்துக்கு எப்பவும் பாராஸிடமாலையே எழுதிக் கொடுக்கறீங்க? டைலினால், அட்வில், நியோப்ரோஃபென்னு எத்தனை புது மருந்தெல்லாம் வந்திருக்கு?” – டாக்டரிடம் கேட்கிறான் பப்லு.)

“சுத்தமான அதிர்வு எழுப்பும் இசைக்கவையின் (tuning fork) ஒலியைக் கேட்டுக்கேட்டுப் பழகியபிறகு, சங்கீத உணர்வே இல்லாதவர்களுக்குக்கூட சுருதியில் வந்து ‘டக்’கென்று நிற்க முடிகிறது. கச்சேரியின் நடுவே, மேல் ஷட்ஜத்தைப் பிடிக்க முடியாமல், கையாலேயே விட்டத்தை சுட்டிக்காட்டி சமாளிக்கும் வித்வான்கள் கவனிக்கவும்.” என்று ஒரு கட்டுரையில் சொல்கிறார் ராமன்ராஜா. நள்ளிரவில் சிரிக்கவைத்த அந்தக் கடைசிவரிக்காக ராமன்ராஜாவுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்று எழுதியதுதான் இக்கட்டுரை.

மைக் கிடைத்த சந்தர்ப்பத்தில் இந்தப் புத்தகங்களைக் குறித்து மேலும் சில விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். திட்டமிடப்படாமல் திடீரென்று சொல்வனம் இணைய இதழ் ஆரம்பிக்கப்பட்டதைப் போன்று, திடீரென்று முடிவானதுதான் ராமன்ராஜாவின் ‘சிலிக்கான் கடவுள்’ புத்தகமும், சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகமும். ஒரு யோசனையாகப் பேசப்பட்ட சில மணித்துளிகளிலேயே அடுத்தடுத்து நண்பர்களுக்குத் தகவல் சொல்லி ஒரு வடிவத்துக்கு இப்புத்தகங்கள் வந்துவிட்டன. அதற்குப்பின் நாங்களே நினைத்திருந்தாலும் இதை நிறுத்தியிருக்க முடியாது.

ராமன்ராஜா, சுகா இருவருமே ஆசிரியர்குழுவாலும், சொல்வன வாசகர்களாலும் கொண்டாடப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் மெல்லிய நகைச்சுவை மூலம் அசாதாரணமான உயரத்துக்குத் தங்கள் கருத்துகளைக் கொண்டுசென்றவர்கள். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் சொல்வனம் ஆரம்பிக்கப்பட்டபோது நாங்கள் ‘யாரோ’! படைப்புகள் கேட்டுத் தொடர்பு கொண்டதில் பலரிடமிருந்து மரியாதை நிமித்தமாகக் கூட பதில் வரவில்லை. ஆனால் இப்படி ஒரு இணையதளம் ஆரம்பிக்கிறோம் என்று சொல்லி கட்டுரை கேட்டவுடனேயே அனுப்பினார் சுகா. ராமன்ராஜாவும் அப்படியே! இருவரும் எந்த நினைவூட்டலும் இல்லாமல் மிகச்சரியாகக் கட்டுரை அனுப்பிவைத்துவிடக்கூடியவர்கள். இப்படிப்பட்ட எழுத்தாளர்களே ஒரு பத்திரிகை நடத்துவதற்கான உத்வேகத்தைத் தருபவர்கள். கடற்கரையில் மாபெரும் கூட்டம் நடத்தி, திரைப் பிரபலங்களை வைத்துப் புத்தகம் வெளியிடுமளவுக்கு இன்றைய பதிப்புச்சூழல் வளர்ந்திருந்தாலும், எளிமையான புதிய பதிப்பாளர்களான நாங்கள் இவற்றை வெளியிடுவதற்கு அனுமதி தந்திருக்கும் இருவருக்கும் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறது சொல்வனம்.

சுகா, ராமன்ராஜா, அச்சுப்பணியில் பல யோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் செய்த ஹரன்பிரசன்னா, புத்தக வடிவமைப்பில் உதவிய மணிகண்டன், முன்னுரை எழுதி சிறப்பளித்த வண்ணதாசன், பாலுமகேந்திரா, கோ.ராஜாராம், அற்புதமான கோட்டோவியங்களைத் தந்த பொன்.வள்ளிநாயகம், ஆசிரியர்குழு நண்பர்கள் ரவிஷங்கர், சாமிநாதன், ஹரிவெங்கட், வ.ஸ்ரீனிவாஸன் – என இப்புத்தக உருவாக்கத்தில் பங்குபெற்ற அனைவருமே நட்பார்ந்த முறையில்தான் இதைச் செய்தார்களே தவிர, கிஞ்சித்தும் வியாபார மனநிலை இங்கே வந்துவிடவேயில்லை. பன்னீர் சொம்பிலிருந்து, காசியாத்திரை செருப்பு வரை காண்ட்ராக்ட் விட்டு நடத்தும் கல்யாணங்கள் இருக்க, ஆளாளுக்கு ஒரு வேலையை இழுத்துப்போட்டு நடத்திய ஒரு கிராமத்துத் திருமணம் அளிக்கும் திருப்தி இந்தப் புத்தகங்கள் உருவாக்கத்தில் கிடைத்தது. வணிகம் பிரதானமாகாத ஆத்மார்த்தமான முயற்சி தரும் இந்தத் திருப்தி, சொல்வனத்திலும் எல்லா முயற்சிகளிலும் சாத்தியமாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

நன்றி.

சேதுபதி அருணாசலம்,
28-12-2010.