‘சொல்வனம்’ 40 வது இதழில் வெளியான ’ஷ்ரோடிங்கரின் பூனை’ எழுதிய சிகாகோ எழுத்தாளர் விஸ்வநாத் ஷங்கருக்கு வாழ்த்துகள். பொறியியற் கல்லூரி வாழ்க்கை பற்றிய அவரது எழுத்து மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இவ்வளவு அழகாக பொறியியற்கல்லூரி வாழ்க்கையைப் பற்றி அதிகம் தமிழில் படித்ததாக நினைவில்லை.
கூடவே பெளதிகம் தொடர்பாக இந்த கட்டுரை பின்னப்பட்டிருப்பதால் என்க்கு இன்னும் சுவாரசியமாக இருந்தது. புதுமையான நல்ல முயற்சி. அவரது தங்குமிடம் பற்றிய வர்ணனை மிகவும் அழகாக இருந்தது. சில இடங்களில் சற்று அலுப்பு தட்டியது உண்மை. சில வார்த்தைகள் சற்று சரியானதாக படவில்லை. உதாரணத்திற்கு, இயந்திர தொடர்பு – இதை மின்தொடர்பு அல்லது மின்னணுத் தொடர்பு என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்று பட்டது.
விஸ்வநாதன் ஷங்கருக்கு மீண்டும் வாழ்த்துகள்.
இப்படிக்கு
ரவி நடராஜன்
அன்புள்ள சொல்வனம் ஆசிரியருக்கு,
வணக்கம். நான் அறிவியல் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவன். ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியாகும் பெரும்பாலான அறி-சிறுகதைளை எப்படியாவது தேடிப்பிடித்துப் படித்துவிடுவேன். தமிழ் அறி-சிறுகதைகள் பெரும்பாலும் ஏமாற்றமளிப்பவதாகவே இருக்கின்றன. சுஜாதா காட்டிய தவறான பாதையால் வெறும் வார்த்தை விளையாட்டு, அசட்டு சுவாரசியம் போன்ற மேலோட்டமான விஷயங்களை மட்டுமே வைத்துப் பெரும்பாலும் தமிழ் அறி-சிறுகதைகள் எழுதப்படுகின்றன. ஆனால் உங்கள் இதழில் நான் படிக்க நேர்ந்த ‘ஷ்ரோடிங்கரின் பூனை’ தமிழில் மட்டுமல்ல, உலக அளவிலேயே சிறந்த அறிவியல் கதைகளில் ஒன்று. வெகு நேர்த்தியாக நடைமுறை வாழ்க்கையோடு ஓர் அறிவியல் தத்துவத்தை இணைத்திருக்கிறார் விஸ்வநாத் சங்கர். பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இது ஒரு புதிய திறப்பை, தமிழ் அறி-சிறுகதைகளில் உருவாக்கும் என எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துகளுடன்,
இரா.கந்தவேல்
அருண் நரசிம்மன் எழுதும் ‘உயிர்’ தொடர் சுவாரசியமாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஆர்சனிக் கண்டுபிடிப்பு குறித்தும் அவர் எழுதினால் நன்றாக இருக்கும். அறிவியலை ஆழமிழக்காமல் சுவாரசியமாக எழுத முடிவது எல்லோராலும் முடியாது. அது அருண் நரசிம்மனுக்குக் கை வந்திருக்கிறது. எழுதும் அவருக்கும், பிரசுரிக்கும் உங்களுக்கும் நன்றிகள்.
அன்புடன்,
கே.வி.சாலமன்
இன்றைய இலக்கியச்சூழலில் வெங்கட் சாமிநாதன் குறித்து ஒருவரால் பாராட்டாக எழுதமுடிகிறது என்றாலே அவர் தமிழில் வடிகட்டி எடுக்கப்பட்ட தேர்ந்த, நேர்மையான இலக்கியவாதி என்றுதான் அர்த்தம். அந்த வகையில் நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற அலட்டலில்லாத, தேர்ந்த படைப்பாளிகள் – வெங்கட்சாமிநாதனை நெருங்கமுடியக்கூடியவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனின் கட்டுரை மிகவும் நிறைவாக இருந்தது. வெங்கட் சாமிநாதனைக் குறித்து ஜெயமோகன் எழுதிய நான்கு பகுதி ஆய்வுக்கட்டுரையும் மிகவும் முக்கியமான ஒன்று. திலீப்குமார், ஆ.மாதவன் போன்றோர் கவனிக்கப்படுவதும், அவர்களைக் குறித்து தமிழ் சிறுபத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிடும் என்பதும் மிகவும் சந்தோஷமளிக்கும் விஷயங்கள். மிக்க மிக்க நன்றி.
அன்புடன்,
முரு.பழனியப்பன்
One Reply to “வாசகர் மறுமொழி”
Comments are closed.