மூன்று கவிதைகள்

நான் வீட்டில் துப்பாக்கி வைத்துக் கொள்ளாததற்கு இன்னொரு காரணம்

அண்டை வீட்டு நாய் குரைப்பதை நிறுத்தாது
அவர்கள் வெளியே போகும் போதெல்லாம்
அவனுடைய அதே உயர்ந்த சீரான குரைப்பு
வெளியேறும்போது அவனை முடுக்கி விடுவார்களா.

அண்டை வீட்டு நாய் குரைப்பதை நிறுத்தாது
என் வீட்டு ஜன்னலெல்லாம் மூடி,
பீத்தோவனின் சிம்ஃபொனியை முழங்க விடுகிறேன்
இருந்தும் இசையின் பின்னே மெல்லக் கேட்கிறது
அவன் குரைப்பு, குரைப்பு, குரைப்பு.

இப்போது அவனைப் பார்க்கிறேன் இசைக்குழுவில் ஒருவனாய்
தன்னம்பிக்கையோடு தலைநிமிர்த்தி உட்கார்ந்திருப்பதை
பீத்தொவனே குரைக்கும் நாய்க்கும்
ஓரிடம் கொடுத்தது போல

பதிந்த இசை முடிந்தும் இன்னும்
குரைத்துக் கொண்டிருக்கிறான்
ஓபோ*க்களிடையே உட்கார்ந்து
குச்சிகொண்டு அவனை நடத்தும்
நடத்துனர்மேல் கண் பதித்து
பிரசித்தமான இந்த நாயின் தனிப்பாட்டை
இதர கலைஞர்கள் கேட்கிறார்
மரியாதை நிறைந்த மௌனத்தில்.
பீத்தொவனை ஒரு புதுமை நிறைந்த மேதையாய்
உறுதிசெய்த அந்த முடிவில்லாத இறுதிப்பகுதியை.

கவிதை – ஒரு அறிமுகம்

நான் அவர்களைக் கேட்பது
ஒரு கவிதையைக் கையில் எடுத்து
விளக்கின் முன் பிடியுங்கள்
ஒரு வண்ணப்பட வில்லையைப் போல.

அல்லது அதன் இனிய தேன்கூட்டில்
ஒரு காதைச் சாய்த்துக் கேளுங்கள்.

நான் சொல்வது
ஒரு சுண்டெலியைக் கவிதையினுள் விட்டு
அது தூண்டித்துருவி வெளியேறும் வழி காண்பதைக்
கவனியுங்கள்.

அல்லது
கவிதையின் அறையினுள் நுழைந்து
அதன் சுவர்களைத் துழாவி
வெளிச்சக் குமிழைத்
தேடுங்கள்.

நான் வேண்டுவது
கவிதையின் மேற்பரப்பில்
நீர்ச்சறுக்கலாய் விளையாடுகையில்
கரையில் இருக்கும் கவிஞரின் பெயரை நோக்கி
அவர்கள் கையாட்டுவதை.

ஆனால் அவர்கள் வேண்டுவதெல்லாம்
கவிதையைக் கயிற்றால் நாற்காலியில் கட்டி
அதை வருத்தி ஒரு வாக்குமூலம் வாங்குவதை.

அதன் அர்த்தத்தை அறியவேண்டி
அதை ஒரு ரப்பர் குழாயால் அடித்துதான்
அவர்கள் ஆரம்பிக்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள்

ஒரு கவிதை முழு உருப்பெறுமுன்
அதைப் பற்றி பேசுவது அபசகுனமாம்.
சீக்கிரமாய் அதை வெளியே விட்டால், அது
பறந்து போய்விடும், என எச்சரிக்கிறார்கள்.
இம்முறை அவர்கள் சொல்வது மிகவும் சரி.

பைத்தியக்காரர்களைப்பற்றி எழுதவேண்டுமென
நான் உன்னிடம் சொன்ன இரவை எடுத்துக்கொள்.
செய்தித்தாள்கள் அப்படித்தான் விளிக்கின்றன அவர்களை,
கலையைத் தாக்குபவர்களை, விமரிசனத்தில் அல்ல-
ரொட்டிக்கத்திகளுடனும் சுத்தியல்களுடனும்
ப்ராஹாவின் ஆம்ஸ்டர்டாமின்*
ஓசையற்ற அருங்காட்சியகங்களில்

அவர்கள்தான் உண்மையான கலைஞர்கள்
என்றாய் நீ, உன் கோப்பையில் ஐஸைச் சுழற்றியபடி,
திருப்புளிதான் அவர்களது தூரிகை.
நிஜத்தில் சிதைப்பவர்கள் புதிப்பிப்பவர்கள்தான்,
மேலும் பேசினாய், மெதுவாய் என்னைக் கவிழ்த்தாய்,
மருத்துவர்களின் வெள்ளை அங்கியில்
நில வெளி ஓவியத்தின் காயத்தை மூடுபவர்தாம்
பைத்தியங்களின் உண்மைக் கலையைக் குலைப்பவர்கள்.

என் கவிதை மதுக்கூட முகப்புக்கு இறங்கிப்
பறந்து அங்கே வட்டமிட்டதைப் பார்த்தேன்.
அடுத்த வாடிக்கையாளர் உள்ளே வருகையில்
திறந்த கதவின் வழியே இரவுக்குள்
பறந்து போனதைப் பார்த்தேன்.
கற்பனைதான் செய்ய முடிந்தது,
அது மிதந்து போனதென,
நகரத்தின் இருண்ட குடியிருப்புகளின் மேல்.

நான் சொல்ல விரும்பியதெல்லாம்
கலையின் ஆயுளும் சுருங்கியதுதான்
ஒரு கத்தியின் ஓரிரு வீச்சு வெட்டுக்கள் இதை போதிக்கும்
வாழ்வோடு ஒப்பிடுகையில்தான் அது நீண்டதாய்த் தெரிகிறது.
ஆனால் அன்றிரவு,
நான் தனியே வண்டி ஓட்டி வீடு திரும்பினேன்,
என் நெஞ்சுக்கூட்டில் ஊசலாடியது வேறேதுமில்லை,
ஒரு சின்ன நம்பிக்கை மட்டுமே
அதை என்னுடைய முகப்பு விளக்கின் ஒளி விசிறியில்
ஒரு கணம் பார்க்கக்கூடும்
ஒரு பெயர்ப்பலகை அல்லது தெருவிளக்கின் மேல் அமர்ந்து
எளிய, எழுதப்படாத பறவை, தன் அடங்கிய சிறகுகளுடன்
தன் சின்ன ஒளியூட்டிய கண்களால்
என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டு.

* ஓபோ ஒரு மேலைச் செவ்வியல் இசைக் கருவி-காற்று வாத்தியம்.