சீனா கண்டுபிடித்த தங்கம்
சி.கே.பிரகலாத் பிரமிடின் அடியில் இருக்கும் பொக்கிஷம் என்று சொன்னார். இதனை நாம் எந்த அளவு புரிந்து கொண்டோம் என்று தெரியவில்லை. ஆனால் உலக அளவில் இருக்கும் பிரமிடின் அடிப்பாகத்தில் வாழ்கின்றனர் பெரும்பாலான மக்கள். முக்கியமாக ஆப்பிரிக்காவில். மின் இணைப்பின்றி வாழும் ஆப்பிரிக்க மக்களுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்சார செல்கள் மூலம் மின்சாரம் கிடைக்கிறதாம். உலகில் ஐந்தில் ஒருவர் மின்சாரம் இல்லாமல் வாழ்கிறார். இதற்கு முக்கியமான காரணங்கள் அரசியலும் வறுமையும். இவர்களுக்கு அரசாங்கத்தைச் சாராத தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் கிடைக்க வைத்தால் அவர்களுக்கு அது வரப்பிரசாதம். மேலும் அசாத்திய சமுதாய மாற்றங்களும் ஏற்படும். இந்த சந்தை பல பரிமாணங்கள் கொண்டது. இதனை சரியாகவே சீனா பிடித்துவிட்டது. இந்த இணைப்புடன் உள்ள உலகப்படத்தைப் பாருங்கள். நேபாளமும் மின்னிணைப்பில்லாமல் அதிகப்படி மக்கள் வாழும் நாடு என்பது புரிபடும். நாம் தவறவிட்ட வாய்ப்பை சீனா திறமையாக பயன்படுத்துவது புரிகிறதா?
http://www.nytimes.com/2010/12/25/science/earth/25fossil.html?src=me&ref=general
ரோஸாலிண்ட் ப்ராங்க்ளின்
மெக்கார்த்தே நினைவிருக்கிறதா? மெக்கார்த்தே வேட்டையாடல். வலதுசாரி அதிதீவிர வேட்டையாடலின் பெயரில் அதீத கருத்து சுதந்திர ஒடுக்குதல் அமெரிக்காவில் நிகழ்ந்த காலம். மெக்கார்த்தேயிஸம் இல்லையென்றால் அமெரிக்காவுக்கு ஒரு அதிகபடி அறிவியல் நோபல் பரிசு கிடைத்திருக்கக்கூடும். லின்னயஸ் பவுலிங் டி.என்.ஏ மூலக்கூறின் வடிவத்தை அறிவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தார். ஆனால் அவருக்குத் தேவையான மிக முக்கியமான துப்பு பிரிட்டனில் ரோஸாலிண்ட் ப்ராங்க்ளின் எடுத்திருந்த ஒரு எக்ஸ்-ரே புகைப்படத்தில் இருந்தது. இந்தப் புகைப்படத்தை வாட்ஸன் & க்ரிக் குழு பார்க்க முடிந்தது. அவர்களால் பவுலிங்கிற்கு முன்னால் சரியான டிஎன்ஏ வடிவத்தைக் கண்டடைய முடிந்தது. தவறான தேசபக்தியால் விளைந்த தேசிய இழப்பு. ஆனால் இப்போது நாம் பார்க்கப்போவது பவுலிங் தவறவிட்ட வாய்ப்பை அல்ல. ரோஸாலிண்ட் ப்ராங்க்ளினுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்பட்டதா என்பது இன்றைக்கும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. அண்மையில் இந்த விஷயம் குறித்து நியூயார்க்கில் வெளிவந்த நாடகம் ”ஃபோட்டோகிராப் 51” அது இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் மீள்-உயிர் கொடுத்துள்ளது. படியுங்கள்:
http://www.scientificamerican.com/blog/post.cfm?id=rosalind-franklin-and-dna-how-wrong-2010-11-03
‘மந்தை’ அறிவியல்?
அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்களுக்குக் கொண்டு செல்வது குறித்து எப்போதும் எல்லா மொழிகளிலும் விவாதங்கள், முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. பரிசோதனைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் வெள்ளை உடை அறிவியல் தீர்க்கதரிசிகளும் உயர்குருக்களும் சொல்வதை மக்களுக்கு கொண்டு செல்வதே காலங்காலமாக வேண்டப்பட்டு வந்தது. இப்போது அறிவியல் கண்டுபிடிப்புகளும் கண்டடைதல்களும் பரிசோதனைச்சாலை குறுஞ்சுவர்களை உடைத்துவிட்டு மக்களைச் சார்ந்து இயங்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே விண்வெளியில் அறிவுள்ள உயிரினங்களைத்தேடுதல், புரத மூலக்கூறுகளின் வடிவ சாத்தியங்களைத் தேடுதல் என்பதாக distributed computing மூலம் ஒருவித அறிவியல் தேடல் செயல்முறை பகிர்வு பெற்றுள்ளது. இப்போது அடுத்தக் கட்டம். மக்கள் பங்கு பெறும் அறிவியல். “நீங்களும் நானும் இணைந்து கண்டுபிடிப்புகளை நடத்தலாம் வாருங்கள். தாரா மண்டலங்களைத் தொகுத்தளிக்க எங்களுக்கு உதவுங்கள்” எனப் பொதுமக்களை கோருகிறார்கள் முன்னணி வானியல் கேந்திரங்கள். இந்த அமைப்பு சார்ந்த அறிவியல் செயல்முறை இன்று மக்கள் ‘மந்தை’ சார்ந்ததாக உருமாறியுள்ள மாற்றத்தின் பின்னால் இருக்கும் உண்மைக்கதை சுவாரசியமானது. படியுங்கள்:
http://chronicle.com/article/The-Rise-of-Crowd-Science/65707/
ஜப்பானியக் கணிதம்: உலகெங்கிலும் ஒவ்வொரு பூர்வகுடியுமே ஒரு தனித்துவமான வழியில் கணித முடிவுகளைக் கண்டடைவதற்கான குறுக்குவழிகளை வைத்திருந்தார்கள். அவற்றின் பின்புலத்தையெல்லாம் ஆராய முடிந்தாலே எவ்வளவோ சுவாரசியமான மனிதமூளையின் முன்னகர்வுப் பரிமாணங்களைக் கண்டறிய முடியும். இங்கே தரப்பட்டிருக்கும் வீடியோவில் ஜப்பானியர்கள் எவ்வாறு பெருக்கல் (multiplication) கணக்குகளைச் செய்கிறார்கள் என்று பார்க்க முடியும். மனிதமூளை விசித்திரமானதுதான்.