டிசம்பர் நாற்காலிகள்-1

2191908939_cc2320aba71

சென்னையில் அத்தனை பேரும் ஏன் ஒரே நேரத்தில் இசைக் கச்சேரி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஸ்பான்சர் செய்யும் NRI சடையப்ப வள்ளல்களுக்கு டிசம்பரில்தான் லீவு கிடைக்கும் என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த வருடம் எல்லா migratory என்னாரைகளும் எங்கே? கிருஷ்ண கான சபாவில் உன்னி கிருஷ்ணன் கச்சேரிக்குக் கூட்டமே இன்றிக் காற்று வாங்கியது.

சென்ற முறை பார்த்ததை விட சபாவின் லைஃப் மெம்பர் தாத்தாக்களுக்கெல்லாம் இன்னும் வயது கூடியிருப்பது போல் தோன்றியது.

உன்னி கிருஷ்ணனுக்கு அசத்தலான Gold E.T.F குரல். அன்று பெரும்பாலும் lower notes-இலேயே பாடினார். மேல் octave-கள் அனைத்தையும் அகாடமியில் மெயின் கச்சேரிக்கு ரிசர்வ் செய்துவிட்டார் போலிருக்கிறது.

ட்விட்டர்-சுருக்கமாக ஆலாபனையை முடித்துக்கொண்டு ‘நீ தய ராதா’வை எடுத்தார். அடுத்து கற்பக மனோகரா. (இது தமிழ்ப்பாட்டுதான் என்று நினைக்கிறேன்; ஆனால் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை). உன்னி பல சமயம் ஸ்வரம் பாடுகிறாரா, சாகித்யம் பாடுகிறாரா என்று புரியாமல் அமுத்தலாகப் பாடுகிறார்.

‘சொல்லித்தான் தெரியுமோ, சொன்னால் உனக்குக் கருணை வருமோ?’ என்று ஒரு உருப்படியைக் கொஞ்சம் உருப்படியாகப் பாடினார். அவ்வப்போது சங்கதியை அசைத்துப் பாடுகிறேன் என்ற போர்வையில் ‘ஙேஙேஙே’ என்று இழுப்பதைக் குறைத்துக் கொண்டால் இன்னும் ரசிக்கலாம்.

திரும்பத் திரும்ப வாதாபி கணபதியையும் சாதிஞ்சனேவையும் எத்தனை தடவைதான் கேட்பது என்று நாங்கள் ஆட்சேபித்தது உண்மைதான். உன்னி அதற்காக வித்தியாசமான ஐட்டங்களை எடுத்துக் கொள்ள முடிவு செய்ததும் சரிதான். ஆனால் கச்சேரி முழுவதும் சபையோருக்கு அதிகம் பரிச்சயமில்லாத ராகங்களையும் பாட்டுக்களையும் தேர்ந்தெடுத்துப் பாடியதால் ஒரு audience involvement இல்லாமல் போய், ஓரத்தில் ஒருவர் ஹிந்து பேப்பரை விரித்துப் படிக்க ஆரம்பித்துவிட்டார்.

அன்றைய கச்சேரியில் அபாரமான musical moments-ம் இல்லாமல் போகவில்லை. உன்னியின் க்ரியேடிவிட்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்று காட்டுவது போல் ஆலாபனையில் அவ்வப்போது organic LED பொட்டுக்கள் ஒளிர்ந்தன. மற்றொரு நல்ல விஷயம், மங்களம் பாடுவதற்கு பதிலாக வாழிய செந்தமிழ் பாடினார். நற்றமிழ் வித்வான்களும் இதைப் பின்பற்றினால் என்ன ?

காதில் விழுந்த உரையாடல் : “இந்தக் கச்சேரியில எல்லாம் என்னவளே என்னவளே பாடமாட்டார்ல?”

சபாவின் பின்பக்கம் அரசமரத்து நிழலில் குளிர்ச்சியாக காண்டீன் போட்டிருப்பவர்கள், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்காரர்கள். ஒரு சாதா தோசை முறுகலாகச் சாப்பிட்டுக் காப்பி குடிக்கலாம். பேல்பூரியை முயற்சிக்க வேண்டாம்; சொதசொதவென்று இருக்கிறது.

கிருஷ்ண கான சபாவின் rickety, rickety பிரம்பு நாற்காலிகளை மாற்றுவதற்கு யாராவது டொனேஷன் கொடுங்களேன் !

* * *

இரண்டு நாளைக்குப் பிறகு நாரதகான சபாவில் பாடியபோது சச்சின் டெண்டுல்கர் மாதிரி full form-இல் இருந்தார் உன்னி. ஒவ்வொரு கச்சேரிக்கும் அவருடைய ரசிகர்கள் மின்னஞ்சலில் feedback கொடுத்துவிடுகிறார்களாம். எனவே நாட்டை, ப்ருந்தாவன சாரங்கா, கரகரப்ரியா, பந்துவராளி, வெறும் வராளி என்று டிஃபென்ஸிவாக ஆடினார்.

பிருந்தாவன சாரங்காவில் தொம்த தொம்த என்று அவர் தில்லானாவில் குதிக்க, மிருதங்கம் திமிகிட திமிகிட என்று சேர்ந்துகொள்ள, அக்கரை சுப்புலட்சுமியின் வயலின் இனிமையாக ஒரு நீண்ட note இழைக்க, என் நாடி நரம்புகளில் அட்ரினலின் பாய்ந்தது.

தயிரில் ஊறும் வடை போல் அந்த முயக்கத்தில் நெடுநேரம் அமிழ்ந்து கிடந்தேன்.

* * *

நாரதகான சபாவில் கதிரி கோபால்நாத் சாக்ஸஃபோன். அதற்கு முன்னால் ராமபத்திரனுக்கு என்னவோ ஒரு பிரும்மம் என்று பட்டம் கொடுக்கும் விழா. விழாவில் பேசிய காரைக்குடி மணி, பாடவே ஆரம்பிக்கலாம். அப்படி ஒரு சக்தி வாய்ந்த மயில் குரல். காவி வேட்டி கட்டி ஹரே ராமா மஞ்சள் துண்டு போர்த்திய ஸ்வாமிகள் ஒருவர் பேச எழுந்து, நீண்ட சமஸ்கிருத சுலோகம் ஒன்று சொன்னார். பிறகு எதிர்பாராதவிதமாக “I feel privileged today to be in the midst of these imposing musical personalities…” என்று ஆரம்பித்தார்.

பாராட்டு விழாக்களில் பொழுது போகாத சீனியர் சிட்டிசன்கள் அதிகம் பேசுகிறார்கள். இவர்கள் பேச்சை நைன்டீன் ஃபிஃப்ட்டி டூவில் ஆரம்பித்தால் நிகழ்காலத்துக்கு வருவது எப்போது ?

விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாதாபி கணபதியை கம்பீரமாகத் தொடங்கினார் கதிரி. ஆண்யானையின் பிளிறல் மாதிரி டாமினேடிங்காக ஒலிக்கும் அந்த முரட்டு வாத்தியத்துக்கு ஈடு கொடுக்க கன்யாகுமரியின் high octane வயலினால்தான் முடியும். ஹரித்வார மங்கலம் பழனிவேலும் சளைக்காமல் கொட்டி முழக்கினார். ஹரித்வார மங்கலத்திற்கு hefty personality. அவருக்குப் பக்கத்தில் கன்யாகுமரி மிகவும் பொடிசாகத் தெரிகிறார்.

கதிரியார் எப்போதுமே gallery-யை நோக்கி வாசிக்கிறவர். எனவே ஆபேரி, ஆனந்த பைரவி, மத்யமாவதி, சக்ரவாகம் என்று நேயர் விருப்ப ராகங்களாகத் தேர்ந்தெடுத்து வாசித்தார். பாக்யாத லக்ஷ்மி பாரம்மா போன்ற தன் முத்திரைப் பாடல்களையும் வெளுத்து வாங்கினார். கன்யாகுமரியின் வில் வீச்சும் ஹரித்வார மங்கலத்தின் விரல் வீச்சும் ப்ளம் கேக்கில் திராட்சைப் பழங்கள் போல் சாக்ஸஃபோனுடன் பொருந்திப் போயின.

ஒவ்வொரு கீர்த்தனையின் முடிவிலும் சில பல சென்னை ரசிகர்கள் பஞ்ச் பஞ்ச்சாக எழுந்து வெளியேறினார்கள். பாவம், எல்லோருக்கும் ப்ளாடர் வீக் போலிருக்கிறது. இவர்களைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காகவே இந்த மாதிரி அருமையான இசைக்கலைஞர்கள் மெலடியைக் குறைத்து ஓசையையும் வேகத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது.

இருந்தாலும் கதிரி டீமுக்கு ஒரு ரிக்வெஸ்ட்: ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் மேற்கத்திய ஸிம்ஃபனி போல் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு orgasmic crescendo-வுக்குப் பாய்வதைத் தவிர்க்கலாம். தகரப்பாலத்தின் மீது குதிரைப் பட்டாளம் ஓடுவது போல் ஒலிக்கிறது.

நகுமோமுவை நார் நாராகக் கிழித்தார்கள். சாக்ஸிலிருந்து வழிந்து பெருகும் நயாகராவைக் கன்யாகுமாரி அப்படியே அள்ளி ஏந்தி முன்னே எடுத்துச் சென்றதில் ஒரு பாலே நடனத்தின் வழுக்கும் seamless flow இருந்தது. என்ன ஒரு blend! என்ன ஒரு coordination!

நாரதகான சபா ஆடிட்டோரியத்தின் சவுண்ட் எஞ்சினியருக்கு சம்பள பாக்கி ஏதாவது இருந்தால் செட்டில் பண்ணிவிடுவது நல்லது. மைக் நடுநடுவே acoustic feedback விசில் அடித்தது. ஆடியோ மிக்ஸிங் வேறு சரியில்லை – கடைசி வரை கஞ்சிராவும் மோர்சிங்கும் அதல பாதாளத்தில் அமிழ்ந்து கிடந்தன. தனி ஆவர்த்தனத்தின் போது பழனிவேல் ஐயா ஓட்டிய புல்டோசரை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. வயலினையும் இரண்டு மூன்று டெசிபெல் கம்மியாக வைத்திருக்க வேண்டும்.

இந்த முறையும் ஞானாம்பிகாதான் கேட்டரிங். சாம்பிராணி, ஊதுவத்திப் புகைமூட்டம். காஸெட்டில் பஜன். பசுமையான வாழை இலையில் பளபளக்கும் காசி அல்வா. கை கழுவிவிட்டு வெளியே வந்தால் டேபிளில் வெற்றிலை பாக்கு சீவல் சுண்ணாம்புடன் அசல் கல்யாண மண்டப ambience-தான் ! நீங்கள் நாரதாவுக்குப் போனால் அவசியம் காசி அல்வாவும் கீரைவடையும் சாப்பிட்டுப் பாருங்கள்.

பக்கத்திலேயே சரஸ்வதி ஸ்டோர்காரர்கள் குறுந்தகட்டுக் கண்காட்சி விரித்திருக்கிறார்கள். உலகத்தில் எத்தனை ஆடியோ-வீடியோ-MP3 சிடிக்கள் உண்டோ அத்தனையும் ‘அள்ளிக்கோ’ என்று கொட்டிக் கிடக்கின்றன. கொஞ்சம் குருசரண், கொஞ்சம் சஞ்சய் சுப்ரமணியன் வாங்கினேன்.

* * *

akkaraisubhalakshmi-abhishek

upcoming artistes என்றால், அக்கரை சுப்புலட்சுமியையும் அபிஷேக் ரகுராமையும் இனி உற்றுக் கவனிக்கவேண்டும். அக்கரையின் வயலின் விரல்களில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. She is already there என்று தோன்றுகிறது.

அபிஷேக் – மைக்ரோ வேவ் அவனிலிருந்து அவசரப்பட்டு முக்கால் பதத்தில் எடுத்துவிட்ட ப்ளம் கேக் மாதிரி இருக்கிறார். காதைத் திருகிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் குரு கிடைத்தால் பெரிய லெவலில் வருவார்.

* * *

அடுத்த நாளே சாக்ஸஃபோனின் dominance இல்லாமல் கன்யாகுமரியை மட்டும் தனியாகக் கேட்க சந்தர்பம் கிடைத்தது. எம்பார் கண்ணனுடன் டூயட் வயலின்.

மியூசிக் அகாடமியில் மெட்டல் டிடெக்டர் நிலைப்படி, செக்யூரிட்டி கெடுபிடிகள் கடந்து இரண்டு மாடி ஏறி மூச்சு வாங்க பால்கனியை அடைந்தால், அந்தோ! கீழே எங்கோ கிணற்றுக்குள் உட்கார்ந்திருப்பவர்கள் போல் இசைக்குழு. டாப் ஆங்கிள் ஷாட்டில் அவர்கள் மண்டைதான் தெரிந்தது. கீழே பார்த்தால் செங்குத்தாக ஐம்பது அடிக்கு சரியும் படிக்கட்டுகளில் நாற்காலிகள். பிளட் ப்ரஷர்காரர்களுக்கு vertigo வந்துவிடும்.

பொதுவாகவே மியூசிக் அகாடமியின் ஆர்க்கிடெக்சர் சரியில்லை. லே அவுட்டுக்கு அப்ரூவல் வாங்காமல் மொட்டைமாடியில் உபரியாக ஒரு ஃப்ளோர் கட்டிவிட்டார்களோ என்று சந்தேகம். பாத்ரூமுக்குப் போவதற்கு, சுந்தர சோழர் அரண்மனையின் சுரங்கப்பாதை போன்ற நீண்டவழி. ஏதாவது ஒரு ஆபத்து அவசரம் என்றால், வயதான ரஸிகாஸை நாதப்பிரம்மம் காப்பாற்றட்டும்!

இருக்கிற சொற்ப காரிடாரை அடைத்து சிடி, டிவிடி, புத்தகக்கடை போட்டிருக்கிறார்கள். சாணியோ சாணித்தாளில் அச்சிட்ட ‘ஸங்கீத ஸம்ப்ரதாயப் ப்ரதர்சினி’ என்ற புத்தகத்தை ஓரத்தில் பிரித்துப் பார்த்தேன். கிரந்த எழுத்துக்களில் ஸா-பா-ஸா இறைந்து கிடக்க, சில எழுத்துக்களின் மேல் அல்ஜீப்ரா புத்தகம் போல் square, cube குறியீடுகள் போட்டிருந்தது. அவசரமாக மூடி வைத்துவிட்டேன்.

கன்யாகுமரியும் கண்ணனும் டிக்கெட் விற்பனைக்காக அதிரடி அரசியல் பண்ணாமல், சாத்திரம் மீறாத professional வாசிப்பு வாசித்தார்கள். கன்யாவின் வயலினுக்கு நல்ல booming voice. அதனுடன் ஒப்பிடுகையில் கண்ணனின் வயலினுக்கு சற்று ப்ரோட்டீன் சத்து குறைவு.

சாருகேசி ராகத்தை நிறுத்தி நிதானமாக ஆலாபனை செய்துவிட்டு ‘இந்த ராகத்தில் இப்போது பாலிஞ்சு காமாட்சி வாசிக்கப் போகிறோம்’ என்று அறிவித்தார்கள். (அது மத்யமாவதி இல்லையோ?) ஆனால் இந்த version கூட அழகாகத்தான் இருந்தது.

ஒரு சந்தேகம். ராகத்தையோ மாற்றியாகிவிட்டது; வாத்தியத்தில் வாசிக்கும்போது lyrics என்பதற்கும் இடமில்லை. பின்னே ‘அந்தப் பாட்டை வாசிக்கிறோம்’ என்றால் என்ன அர்த்தம் ?

கன்யாகுமரியின் வயலின் சில சமயம் தூரத்து இடி முழக்கம் மாதிரி குமுறுகிறது; சில சமயம் விசுவாச நாய்க்குட்டி மாதிரி காலடியில் வந்து குழைகிறது. வில்லின் ஒரு சின்ன இழுப்பிற்குள்ளேயே ஏழெட்டு fractal patterns காட்டும் கன்யாகுமரியுடன் சற்றே மொக்கையாகப் பேசும் கண்ணணின் கைவில்லை ஒப்பிட்டால் – சீனியர் சீனியர்தான், ஜூனியர் ஜூனியர்தான்!

கோவிந்தா ஹரி கோவிந்தா என்று பஜனை பாடியபோது வயலின் அந்த வார்த்தைகளைத் தெளிவாகப் பேசியது. (சாஹித்ய வில்!) உச்சக் கட்டத்தில் பரவசக் கூட்டம் இடம் வலமாக அசைந்து ஆடியது. திருப்தியாக இசை ஏப்பம் விட்டபடியே வெளியே வந்தேன்.

வரலாற்றுப் புகழ் பெற்ற அகாடமி காண்டீன் செத்துப்போய் சில வருடம் ஆகிறது. (ஏதாவது ஹை லெவல் பாலிடிக்ஸாக இருக்கும்). இருந்தாலும் பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தால், இட்லியில் அநியாயமாக ரவாவைக் கலந்து கல்லுக் கல்லாக இருந்தது. சாம்பாரில் கன்னட வாசனை அடித்தது. ‘ஹிண்டு’ முரளி சார் கூட பக்கத்து டேபிளில்தான் ஊத்தப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் இதையெல்லாம் கொஞ்சம் கவனித்து சரி செய்யக்கூடாதோ ?

காண்டீனில் ‘நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சமையலில் வெங்காயம் சேர்க்கப்பட மாட்டாது’ என்று ஓர் அறிவிப்புப் பலகை தென்பட்டது.

நாளைக்கு நான் வந்தால்தானே ?