‘குட்டி ஸ்ராங்க்’ – மலையாளத் திரைப்படம்

shaji_n_karunடந்த ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான தேசீய விருது உட்பட ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றிருப்பது ஷாஜி நீலகண்டன் கருணின் ‘குட்டி ஸ்ராங்க்’ (Kutty Srank) என்ற மலையாளத் திரைப்படம். சிறந்த நடிகருக்கான விருது கூட இத்திரைப்படத்தில் நடித்ததற்காக மம்மூட்டிக்குக் கிடைத்திருக்க வேண்டும். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களின் வரிசையில் ஷாஜி என்.கருண் (Shaji N.Karun) இடம்பெறுகிறார். எமர்ஜென்சி காலத்தில் காவல்துறை சித்ரவதையில் கொல்லப் பட்ட ராஜனின் கொலையை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய ‘பிறவி’ பல விருதுகளைப் பெற்ற படம். கதகளி ஆட்டக்கலைஞராக மோகன்லால் சிறப்பாக நடித்த ‘வானப்பிரஸ்தம்’ கூட ஷாஜிக்கு சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுக் கொடுத்தது. ஷாஜியின் முந்தைய படமான வானப்பிரஸ்தத்தைப் போல இல்லாமல் கலைப்பட அம்சத்தில் இருந்து விலகி ஒரு இணை சினிமாவாக பலராலும் ரசிக்கப்படும் சினிமாவாக இருக்கிறது ‘குட்டி ஸ்ராங்க்’.

காணாமல்போகும் அல்லது கொலை செய்யப்படும் (அல்லது இறந்துவிடும்) ஒருவரைப் பற்றிய பலரது பார்வைகளில் விரியும் புலன் விசாரணை அல்லது மனித உறவுகளை நுட்பமாக அலசும் சினிமாக்கள் மலையாளத்திற்கு புதிது அல்ல. யவனிகா, உத்தரம், கதாவிசேஷன், கரியிலக்காட்டுப்போல போன்ற பல படங்கள் இதே கதையமைப்புடன் வந்துள்ளன. கதையமைப்பு அப்படி அமைந்தாலும், அந்த வரிசையில் இருந்து சற்று விலகிய தனித்தன்மையுள்ள ஒரு சினிமா இது.

குட்டி ஸ்ராங், கேரளத்தின் நீண்ட கடற்புரத்திலும், உட்புறத்தில் பரந்து விரியும் காயல்களிலும் நடுவாந்திரப்படகுகளை ஓட்டும் ஒரு ஓட்டுனர். அவனது வாழ்க்கை கேரளத்தின் கடற்புறங்களில் அலைபாய்கிறது. நிலப்பிரபுத்துவத்தின் கொடுமைகளிலும், கிறிஸ்துவ மதக்குருமார்களின் கடுமையான பிடிகளிலும், மூட நம்பிக்கைகளிலும் சிக்கித் தவிக்கும் கேரள கடற்புற சமூகத்தின் நடுவே பயணிக்கும் ஒரு படகோட்டி குட்டி ஸ்ராங்க். கடலிலும், காயல்களிலும் ஓயாது தத்தளிக்கும் படகுகளைப் போலவே அவன் வாழ்வும் தத்தளிக்கிறது. தன் பொறுப்பான படகினை பத்திரமாகக் கரைகொண்டு சேர்ப்பதைப் போலவே வெவ்வேறு சூழல்களில் தன்னிடம் அடைக்கலமாகும் மூன்று பெண்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள முயலும் ஒரு புதிரான நாடோடிக் கடலோடியான அவனுடைய கதை இத்திரைப்படம். குட்டி ஸ்ராங்க் தன் எஜமானர்களுக்குக் காண்பிக்கும் விஸ்வாசத்திற்கும், அவனது மனசாட்சியின் உறுத்தல்களுக்கும் இடையே நிகழும் தொடர் அகப்போராட்டங்களின் கதையாக விரிகிறது இத்திரைப்படம்.

கதை நடக்கும் காலகட்டம் உறுதியாகச் சொல்லப்படாவிட்டாலும் கூட சுதந்திரத்திற்கு சற்றே முன்னும் பின்னும் நிகழும் கதையாக யூகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ரேடியோவில் ஒலிக்கும் “கானகமே எங்கள் தாயகமே” பாடல் கதை நிகழும் காலத்தைச் சொல்லலாம். கவித்துவமான கடற்கரைக் கேரளத்தையும் அந்தக் கரைகளின் மூன்று விதமான சமுதாயப் பின்ணணிகளுடன், அவற்றின் சமூக நோய்க்கூறுகளுடன், மூன்று விதமான பருவகாலங்களில் இயக்குனர் அழைத்துச் செல்கிறார். குட்டி ஸ்ராங்க் சாகசக்காரனல்ல, எஜமானர்களை அண்டி வாழும் ஒரு சாதாரண படகோட்டி, எடுபிடி. அவன் யாரென்பது யாருக்கும் தெரியாதது போலவே அவனது ஆழ்மனத்தையும் எவரும் அறிவது இல்லை. எஜமானர்களுக்கு விசுவாசமாக அவர்களை அண்டி வாழவேண்டிய நிர்ப்பந்தங்களையும் மீறி வெளியாகும் மனிதாபிமானமே அவனைக் கதைநாயகனாக்குகிறது. அவனது ஆழ்மனத்தின் அருகில் கூட நம்மை இயக்குனர் அனுமதிப்பதில்லை. அவனுடன் சற்று நெருங்கிப்பழகியும் கூட அவனை முழுவதுமாக அறிந்திராத மூன்று பெண்கள் அவனைப் பற்றி விவரிப்பதன் மூலமாக விரியும் சம்பவக்கோர்வைகளே இந்த சினிமா.

kutty_srankமுதல் காட்சியிலேயே மேல்நாட்டு ராஜகுமாரனின் ஆடைகளுடன் கடற்கரையில் அழுகிக் கிடக்கும் பிணமாகவே கதையின் நாயகன் நமக்கு அறிமுகமாகிறான். பத்மராஜனின் ‘கரியிலக் காட்டுப் போலே’ திரைப்படத்தைப் போலவே இதுவும் தொடங்குகிறது. இதிலும் கடற்கரையில் இறந்து கிடக்கும் பிணத்தில் இருந்து அவனை அறிந்த பெண்களின் வாயிலாகக் கதை நகர்கிறது. ஆனால் இது ஒரு த்ரில்லர் அல்ல. அவன் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸ்காரர்களின் விசாரணையில் அடையாளம் காட்ட அடுத்தடுத்து வரும் மூன்று பெண்கள் வாயிலாக, அவர்களின் பார்வையில் இறந்தவனின் கதையும் மூன்றுவிதமான சமூகச்சூழல்களும் நமக்குச் சொல்லப்படுகிறது. அதன் பின்ணணியில் விரிவது அழகும், க்ரூரமும், கவித்துவமும், உக்கிரமும், அவலங்களும், கோரமும், இனிமையும், மகிழ்ச்சியும், சோகமும், பொறாமையும், அதிகார வெறியும், மத ஆதிக்கமும், மூட நம்பிக்கையும் இன்னும் வாழ்க்கையின் அனைத்து விதமான அபத்தங்களையும் ஊடுருவிச் செல்லும் ஒரு பயணம் மட்டுமே. குறுங்கப்பல் மாலுமி கடலிலும் காயலிலும் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் விட கடினமான சவால்களை அந்த மாலுமி யதார்த்தத்துடன் எதிர்கொண்டு பயணித்த கதை அந்தப் பெண்களின் பார்வையில் சொல்லப்படுகிறது.

குட்டி ஸ்ராங்க்கை அடையாளம் காட்ட வரும் முதல் பெண் ரேவம்மா புத்த சன்யாசினியாக விழையும் ஒரு மருத்துவர். மலபாருக்கும் வடக்கேயான வட கேரளத்தின் ஒரு ஜமீன்தாரின் ஆதிக்க சக்தியின் ஒரே வாரிசு. எஜமானின் துப்பாக்கி விசையில் இருந்து சீறிப்பாயும் ஒரு உலோகக்குண்டு போன்ற இறுக்கமான மனித உணர்வுகளற்ற ஒரு இயந்திரம் போன்றவனாக குட்டியை ரேவம்மை அடையாளம் காண்பிக்கின்றாள்.

ரேவம்மையை அடுத்து பிணத்தை அடையாளம் காட்டவரும் பெண், ஓலைப்பாயில் சுற்றப்பட்ட அழுகிய பிணத்தின் முகத்தினை சுற்றி வளர்ந்திருக்கும் காளான்களை விலக்கிவிட்டு குட்டி ஸ்ராங்க்கைத் தனது ஒருதலைக் காதலனாக, ஒரு சவிட்டு நாடகநடிகனாக அடையாளம் காட்டுகிறாள். இங்கும் குட்டியின் உண்மையான முகம் அறியத்தரப்படுவது இல்லை. அவன் முந்தைய கதையில் வரும் அதே அடியாள்தானா என்பது கூடத் தெரியாது. அதன் தொடர்ச்சியும் கிடையாது. அவன் வேற்றொரு ஆளாகக் கூட இருக்கலாம். பெம்மனாவின் காதலனாகச் சொல்லப்படும் குட்டியின் முகம் முற்றிலும் வேறானது.

மூன்றாவதாக பிணத்தை அடையாளம் காணும் ஊமை இந்துப்பெண் காளி. திருவாங்கூர் கடற்க்கேரள கிராமத்தில் கடுமையான மூட நம்பிக்கைகளில் உழலும் கிராமத்தினரின் அனைத்துத் தீங்குகளுக்கும் காரணமாக, தீய சக்தியின் உருவகமாக உருவகிக்கப்பட்டு சபிக்கப்பட்டுத் துரத்தப்படும் ஒரு அநாதை ஊமைப் பெண். அவளது பார்வையில் வயிற்றில் வளரும் அவளது குழந்தைக்குத் தந்தை குட்டி.

இந்த மூன்று பெண்களுக்கும் அவர்களின் குடும்ப மதப்பின்ணணிகளுக்கும் குட்டி ஸ்ராங்க்கிற்கும் இடையே எந்தவித உரசலும் கிடையாது. அழகிய நீண்ட கேரளக்கடலில் அலையும் கட்டற்றதொரு தோணியைப் போன்றே கடலில் மிதக்கும் ஒரு புதிரான நாடோடி, அவர்கள் வாழ்வில் அன்பையும், காதலையும், பாதுகாப்பையும் அளித்துவிட்டுக் காற்றில் கரைந்த ஒரு கடலோடி. கடல் அலைகள் போலவே அவனது கடந்த காலமும் நிகழ்காலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி நிகழ்கிறது. அவனைப் பற்றிய அவர்கள் நினைவுகள் மட்டுமே கடற்காற்றில் நிறைந்து வழிகிறது. அவர்கள் வாழ்வில் மூன்று விதமான கேரளக் கடற்பகுதியின் பருவ காலங்களில் அவர்களைக் கரை சேர்த்த ஒரு ஓடம் போல சத்தமில்லாமல் வந்து மறைந்தவன் குட்டி ஸ்ராங்க். சிக்கலான சில மானுட உறவுகளை அதன் யதார்த்தங்களுடன் சொல்லிச் செல்கிறது சினிமா.

முதல் கதை முழுவதும் மெல்லிய மாந்த்ரீக யதார்த்தத்தைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். அந்த பங்களாவின் நீண்ட அமானுஷ்யமான தாழ்வாரங்களில் முகத்தில் பீச்சியடிக்கப்பட்ட ரத்தத்துடன் வரும் சிறுமியாகத் தன் இளவயது பயங்கரங்களைக் கடந்து செல்லும் ரேவம்மை, மரணங்களின், கொலைகளின், சித்திரவதைகளின் உருவகமாக அந்த மாளிகை முழுவதும் நடந்து திரியும் மர்ம வாத்து, குட்டி ஸ்ராங்க்கின் கைகளில் கழுவ, கழுவப் போகாமல் எந்நேரமும் பிசுபிசுத்து வழியும் ரத்தம், திவானின் படுக்கையறைக் கைப்பிடிகளில் எப்பொழுதும் பிசுபிசுத்து வழியும் ரத்தம், மூக்கில் இருந்து நிற்காமல் வடியும் ரத்தம், ரொய்ங் என்று பின்ணணியில் இரையும் இரத்தம் குடிக்கும் வண்டுகளின் ரீங்காரம் என்று முதற்பகுதி முழுவதிலும் அனுமாஷ்யத்தையும், ரேவம்மையின் தந்தையின் கொடூர மனநிலையையும் இவை போன்ற படிமங்கள் வாயிலாக மட்டுமே உணர்த்துகிறார் ஷாஜி. ஆனால் இந்தப் பகுதியின் நிலப்பகுதியை மட்டும் அது வட கேரள கொங்கணிப் பகுதி கடற்பகுதி என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. கதை நடக்கும் அரசாங்கம் செயல்படாத நிலப்பிரபுவின் காலம், இடம் குறித்து அறியத்தர இயக்குனர் மெனக்கெட்டுக் கொள்ளவில்லை. அது பிரிட்டிஷ்காலமா சுதந்திர இந்தியாவா என்பது போன்ற விபரங்கள் ஏதும் இல்லாத குழப்பத்துடனே நகர்கிறது. இருந்தாலும் கதை நிகழும் சூழலும் கடற்பகுதிகளும் கதையுடன் ஒட்டியே வருகின்றன. குட்டி ஸ்ராங்க்கும் எஜமானருக்கு விசுவாசமான ஒரு படகோட்டும் அடியாள் என்பதைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்திக் கொள்ளாத ஒரு இயந்திரத்தனமான இறுக்கமான உணர்ச்சிகளற்ற புதிரான மனிதனாக மட்டுமே வருகிறான்.

பெம்மானோவின் மூலமாக நகரும் இரண்டாம் பகுதி சற்று விஸ்தாரமானதாகவும், கலகலப்புடனும், ஒரு தலைக்காதலுடனும் நகருகிறது. கதை நிகழும் இடம் கதையுடன் மிக அருமையாக ஒட்டிப்போகும் பகுதி இது. இது நடப்பது கொச்சினுக்கும் வடக்கேயுள்ள கிறிஸ்துவர்கள் நிரம்பிய மீன்பிடிக் கிராமம். இந்தப்பகுதி அந்த கிறிஸ்துவ மீனவக்கிராமத்தின் தனித்தன்மை, அவர்களது வாழ்க்கை முறைகள், பண்பாடுகள், கலை ரசனைகள், மத நம்பிக்கைகள், பாதிரியாரின் – சர்ச்சுகளின் இறுகிய பிடிமானங்கள் அனைத்தையுமே மிக அற்புதமாகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது. முந்தைய கதையின் இறுக்கம் இன்றி கதாபாத்திரங்களின் மனநிலைகளும், அவற்றை ஒட்டிய குட்டி ஸ்ராங்க்கின் மனநிலையும் அமைகின்றன. நாடகாசிரியரான லோனி ஆசானிடம், நாடகத்தில் முக்கிய வேடத்தையும் ஆசானின் தங்கையையும் தரச்சொல்லி மிரட்டும் பணக்கார மீன்பிடி ஜோனாஸ், ஜோனாசுக்கு ஆதரவாக ஆசானையும், அவன் தங்கையையும் அம்மாவையும் நரகத் தீயைச் சொல்லியே மிரட்டும் பாதிரியும், ஆசானின் நண்பர்களும், கதை நடக்கும் அற்புதமான காயல் பகுதிகளும், கதையின் ஊடாகத் தொடர்ந்து வரும் பருவமழையும் மனதில் இருந்து அகலாத சித்திரங்கள். காட்சிப்படிமங்களும் பாத்திரங்களின் இயல்பான நடிப்புமாக படத்தின் ஆகச்சிறந்த காட்சிகளாக அற்புதமான ஓவியம் போல மனதில் பதிகின்றன.

இந்தப் பகுதி மக்களின் தனித்தன்மை மிக்க வழக்கங்களும், நுட்பமான தருணங்களும் ஒரு நுட்பமான ஓவியக் கலைஞருக்குரிய திறனுடன் பதிந்திருக்கிறார் ஷாஜி. கேரளத்தின் கடற்கரைப்பகுதி மீனவ கிறிஸ்துவர்கள். சர்ச்சின் கடுமையான கட்டுப்பாட்டில் பாதிரியின் ஆதிக்கத்தில் வாழ்கிறார்கள். மீன் பிடித்த நேரம் போக பொழுதுபோக்கிற்காகவும் கலை ரசனையாகவும் அவர்கள் நிகழ்த்தும் அந்தப் பகுதியில் பிரபலமான “சவிட்டு நாடகம்” என்னும் கிறிஸ்துவ நாடகக்கலை மிக விரிவாக நிகழ்த்தப்படுகிறது. கடற்கரையோரக் கேரளக் கிறிஸ்துவர்களிடம் 16-ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் உள்ள ஒரு ஒரு கலை நமக்கு அதன் நிஜத்தன்மையுடன் அறிமுகப் படுத்தப்படுகிறது. சவிட்டுதல் என்றால் மிதித்தல். மேலைநாடுகளின் ஓப்பரா ஷோக்களைப் போன்ற ஒரு ம்யூசிக்கல் நாடக வடிவமான இது போர்ச்சுக்கீசியர்கள் கேரளத்துக்கு வந்தபொழுது அவர்களுடன் அவர்களால் போடப்பட்ட நாடகங்களாக வந்து பின்னர் கேரளத்தின் பாரம்பரியக் கலைகளுடன் கலந்து தனக்கென ஒரு பாணியைக் கைக்கொண்டிருக்கலாம். இந்த நாடகங்களுக்காகவே பிரத்யேகமாக இயற்றப்பட்ட வசனங்களும், பாடல்களும் பெரும்பாலும் தமிழ்ச் சாயலிலேயே உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்ட பாடல்களும் வசனங்களுமாக அவை இருந்திருக்கலாம். இதில் நடிக்கும் நடிகர்களே, பாடல்களும் பாடுகிறார்கள். வசனங்கள் பாடல்களைப் போன்றே அமைகின்றன. ஒரு வித துள்ளளுடன் கூடிய ஆட்டமும் பாட்டுமாக நாடகம் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் கேரல்மான் சரிதம், அலக்சாண்டர், தாவீதும் கோலியாத்தும் போன்ற கிறிஸ்துவக் கதைகளே நிகழ்த்தப் படுகின்றன. நடிகர்களும் ஐரோப்பிய மத்தியகால மன்னர்களின், பிரபுக்களின் வண்ணமயமான ஜிலுஜிலு ஆடைகளுடனும், குல்லாய்களுடனும் தோன்றி நடிக்கிறார்கள். கனமான பூட்ஸுகளுடன் மரத்திலான மேடைகளில் மிதித்து மிதித்து நடனமாடிக் கொண்டே பாட்டுப்பாடிக்கொண்டே நடிக்கிறார்கள். வாள் சண்டைகள் நிரம்பிய, தாள லயத்துடனான நடனமும் பாடல்களும் கூடிய ஒரு வித நாட்டிய நாடகமாக இருக்கிறது இது. கேரளத்தின் கதகளி, மோகினியாட்டம், தெய்யம் போன்ற பாரம்பரிய நடன வடிவங்களைப் பல படங்களில் மிக விரிவாக அதன் தனித்தன்மை குலையாமல் அளித்திருக்கிறார்கள்.

சவிட்டி சவிட்டி, மிதித்து, மிதித்து, உதைத்து உதைத்து நடனமாடி நடிக்கப்படும் சவிட்டு நாடகத்தின் உச்சகட்டத்தில் அந்த நாடக மேடை மிதி தாங்காமல் முறிந்து விழுந்தால் நாடகம் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுமாம். இந்தப் படத்தில் வரும் இரு நாடகக் காட்சிகள் சினிமாவுக்காக எந்தவித சமரசமும் செய்யப்படாமல் அதன் தனித்துவம் குன்றாமல் அற்புதமான பாடல்களுடனும் பின்ணணி இசையுடனும் வருவது இந்தப் படத்தின் தனித்தன்மையான சிறப்பாகும்.

ஷாஜியின் வானப்பிரஸ்தம் ஒரு கதகளியை அடித்தளமாகக் கொண்ட சினிமா. ஜெயராஜின் களியாட்டம் தெய்யம் ஆட்டம் பற்றிய ஒரு சினிமா. இந்த சினிமாவில் ஓரங்கமாக இந்த சவிட்டு நாடகம் ஐசக் தாமஸ் கொட்டுக்காப் பள்ளியின் அற்புதமான உணர்ச்சிகள் கொந்தளிக்கும் மனம் மயக்கும் இசையுடன் நிகழ்த்தப்படுகிறது. நாடகத்தின் சோகமான காட்சிகள் போலவே பருவ மழையின் நடுவே கதை மாந்தர்களின் போராட்டங்களும், பேராசைகளும், கொலைகளும் நிகழ்ந்து குட்டி ஸ்ராங்க்கின் தோணி மீண்டும் ஒரு சூறாவளிக்குள் தள்ளப்படுகிறது. இதில் வரும் ஸ்ராங்கிற்கும் முந்தைய ஸ்ராங்கிற்கும் எவ்விதத் தொடர்பும் வெளிப்படையாகக் காண்பிக்கப்படுவதில்லை. ஒரு சில காட்சிகளில் ஸ்ராங்கின் அச்சம் மட்டுமே அதை உணர்த்துகின்றன. கேரளக் காயல்களின் முழு அழகையும் அதன் மழையுடனும் அதன் துடிப்புடனும் காண்பிக்கும் பகுதி இது. படத்தின் முக்கியமான பகுதி.

படத்தின் இசை முக்கியமானது. ஒவ்வொரு பகுதியின் இயல்பையும், தன்மையையும், பருவகாலத்தையும் இயல்பாக பிரதிபலிக்கும் இசை. முக்கியமாக சவிட்டு நடனத்திற்கான பிரத்யேகப் பாடல்களும் இசையும். ஐசக் தாமஸ் கொட்டுக்காப் பள்ளி கேரளத்தின் மரபான இசையிலும், மேல்நாட்டு சங்கீதங்களிலும் பரிச்சியம் கொண்ட ஒரு இசையமைப்பாளர். அவரது பின்ணணி இசையை பாலு மகேந்திரா தயாரித்த தொலைக்காட்சித் தொடரான ”கதை நேரத்தில்” கேட்டிருந்திருக்கலாம். கதாவிசேஷம், ஆடும் கூத்து போன்ற படங்களில் மனதை உருக்கும் இவரது இசையைப் பலரும் அனுபவித்திருக்கலாம். ஜெயமோகன் சமீபத்தில் இவரது இசையில் வந்த ஒரு பாடலை http://www.jeyamohan.in/?p=7829 மிகவும் சிலாகித்திருந்தார். ஆடும் கூத்து படத்தில் இவர் தமிழ்நாட்டின் நையாண்டி மேளத்தில் இசையை அளித்தது மயக்க வைத்த ஒன்று. அவரது வித்யாசமான நெஞ்சைப் பிசையும் இசைக்கு இந்தப் படம் இன்னுமொரு உதாரணம்.

இந்த சினிமா தென் கேரளத்தின் ஆழப்புழை முதல் மலப்புரம், கண்ணனூர், வட கேரளப்பகுதி வரை நீண்டு விரியும் மேற்குக் கடற்கரைச் சொர்க்கமான காயல் பகுதிகளை ஓவியம் போலக் காட்சிப்படுத்துகின்றது. அஞ்சலி சுக்லாவின் அபாரமான கேமிரா இந்தப் படத்தை வேறு எதற்காகவிட்டாலும் கூட அதன் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்காவவது அவசியம் பார்க்கவைக்கும். பனி சூழ்ந்த, சாம்பல் படர்ந்த, குளிர்காலக் காலைப்பொழுதின் பனிமூட்டத்தின் நடுவே மெல்ல மெல்லத் தோன்றும் பாய்மரக் கப்பல், வாசலில் தெருவுக்குப் பதிலாக காயல் நீர் விரியும் வீடுகளைப் பிரதிபலிக்கும் காயல் காட்சிகள் என்று ஒவ்வொரு ஃப்ரேமும் கண்களைத் திருப்ப முடியாமல் நிறுத்தும் காட்சிகளாக நகர்த்தியிருக்கிறார் இந்தக் காமிராவுமன்.

குட்டி ஸ்ராங்க்காக வரும் மம்மூட்டி இந்தப் படத்தை நகர்த்துபவர். புதிரும் ரகசியமும் நிறைந்த ஆளுமை, மூன்று பெண்களின் வர்ணணைகளில் வருவது ஒரே மம்முட்டியாக இருந்தாலும் கூட மூன்று விதமான குட்டி ஸ்ராங்க்கைக் கண் முன் கொணர்கிறார். மூன்று இடங்களுக்கும் வித்தியாசமான உடல்மொழி, குணாதிசயம், உரிய வசன நடை என்று பிரமிக்க வைக்கிறார் மம்மூட்டி. மம்முட்டியின் முழுமையான நடிப்பாளுமையையும் தாண்டி மிளிர்பவர்கள் லோனி ஆசானாக வரும் சுரேஷ் கிருஷ்ணாவும், கமலினி முகர்ஜியும், பத்மப்பிரியாவும். மிகக் கச்சிதமாக வெகு இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

அடுக்கடுக்காக மூன்று பகுதிகளாக இருந்தாலும் நேர்க் கோட்டில் செல்லாத கதை அமைப்பு. மூன்று பெண்கள் விவரிக்கும் நபரும் ஒருவரா அல்லது மூன்று வித்தியாசமான மனிதர்களா என்ற புதிரை இயக்குனர் அவிழ்ப்பதேயில்லை.

முற்றிலும் கலைப்படங்களைத் தவிர்த்து ஆனால் இணையான நடுவாந்திர யதார்த்தப்படங்களை விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாகக் காணவேண்டிய ஒரு திரைப்படம் குட்டி ஸ்ராங்க்.