உயிர், மாற்று உயிர் – 3

இரு வகையான மாற்று உயிர் சாத்தியத்தை இரண்டாவது பாகத்தின் இறுதியில் பார்த்தோம்.அடுத்த வகை மாற்று உயிர் சாத்தியத்திற்கான கேள்வி, ஏன் கார்பன் கட்டமைப்புகொண்ட உயிரினமே இருக்கவேண்டும்? அதாவது, மூலக்கூறு அட்டவணையில் (periodic table) கார்பனுக்கு அடுத்து நான்கு என்ற அதே வாலன்ஸி கொண்ட சிலிக்கன், ஜெர்மானியம் போன்ற மூலக்கூறுகள் வருகின்றன. அதனால், நாம் இதுவரை கண்டறிந்த ஜீவராசிகளின் டி.என்.ஏ.க்களில் உள்ள அமினோ அமிலங்களில் கார்பனுக்கு பதில் சிலிக்கன் இருக்கலாமா என்பது ஆதாரக் கேள்வி. இப்படி அமைந்தால் அவை நிச்சயம் மாற்று உயிர். இவ்வகையில் சிலிக்கன் கொண்டு அமைந்த நுண்ணுயிர்கள், சாதா உயிர்கள், பார்ப்பதற்கு படத்திலுள்ளது போல் இருக்குமாம்.

[படம் – சிலிக்கன் உயிரினம்]

முன்னர் விளக்கிய உயிர் மரத்தை வைத்து இவ்வகை மாற்று உயிர் தரும் சாத்தியத்தை யோசித்துப்பாருங்கள். சிலிக்கனுக்கு ஒன்று, ஜெர்மானியத்திற்கு ஒன்று என்று மொத்தமாக வேறு உயிர் மரங்களே பூமியில் பூத்துக்குலுங்கலாம். நாம் இருக்கும், கார்பன் சார்ந்த உயிர் மரம் ஒரு காட்டின் ஒரு மரமாய் இருக்கலாம். இதை எழுதுகையிலேயே இதன் சாத்தியம் சிலிர்கவைக்கிறது.

நேச்சர் என்னும் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி சஞ்சிகையில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே விஞ்ஞானப் புனைக்கதை, ஆர்தர் கிளெர்க்கின் கடைசி சிறுகதை. நேச்சர் எடிட்ர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீலங்காவில் ரிடையர்மென்டிலிருந்து வந்து எழுதிக்கொடுத்தார். கதை ஒரே பக்கம்தான். நம் ஆகாச கங்கை காலக்ஸியில் வேறு சமுதாயத்தினர் பூமியின் அழிவிற்குப்பிறகு அதைப்பற்றி ”பாவம்பா நல்ல மனுஷன் போயிட்டான், ஆனா தேவைதான் அவனுக்கு” என்கிற ரீதியில் பேசிக்கொள்ளும் சிறு உச்கொட்டல் போல எழுதியிருப்பார். இது எதற்கு இப்பொது என்றால், அந்த சமுதாயத்தினரை ஜெர்மானியம் மூலக்கூறை ஆதாரமாகக்கொண்ட உயிரினமாக சித்தரித்திருப்பார். மாற்று உயிரினம். வளி-அறிவு-ஜீவராசி.

நாம் இன்னமும் இவ்வகையில் சாதா உயிரைக்கூட பூமியில் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியங்கள் அதிகம் என்பது போல பரிசோதனைகள் குறிசொல்கின்றன. பின்னால் விளக்கியுள்ளேன்.

அடுத்த வகை மாற்று உயிர், கார்பன் இருக்கட்டும், ஆனால் மற்ற மூலக்கூறுகள் மாறலாமே என்கிற சிந்தையிலிருந்து புறப்படுகிறது. அதாவது கார்பனுடன் அமினோ அமிலங்களில் சேரும் மூலக்கூறுகள் நமக்கு இருக்கும் மூலக்கூறுகளிலிருந்து மாறுபட்டிருந்தால்?

இவ்வகை மாற்று உயிரினங்களை எவ்வாறு அறிவது? எளிமையான பரிசோதனை ஒன்றை விளக்குவோம்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, மாற்று உயிர்கள் என்று நாம் இங்கு குறிப்பிடுவது, தேடுவது, நம் அளவு உயரம் பருமன் மூளை உடைய சிக்கலான உயிரியலுடைய ”மேம்பட்ட” அறிவு-ஜீவராசிகளை இல்லை. பாக்டீரியாக்களையும் விட சிறிதான நுண்ணுயிர்களை. வைரஸ் போன்ற உயிரணுவின்றி செயல்படும் மைக்ரோபுகள். புரிதலுக்காக, இவற்றை எளிமையான, சாதா உயிர்கள் என்போம். சாதா என்பதால் சோதா உயிர்கள் என்று அர்த்தமில்லை. முதல் பாகத்தில் விளக்கியது போல ஆர்கேயியா என்ற வம்சாவளியே உயிர் மரத்தில் இருக்கிறது இல்லையா.

இவற்றின் குணங்களாக நாம் எதிர்பார்ப்பது எளிமையாக தங்களையே பிரதியெடுத்து பெருக்கிக்கொள்ள முடிகிற திறனையே. அதனால் நாம் இப்போதைக்கு மாற்று உயிர்களின் உயிரணுக்களின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் ஆராயவில்லை. தேடவில்லை.

நம்மைபோலன்றி மொத்தமாக வேறுவகையான உயிரினங்களை எப்படித்தேடுவது? நாம் எங்கெல்லாம் இருக்கமுடியாதோ, நம்மைப்போன்ற ஜீவராசிகள் எங்கெல்லாம் வாழமுடியாதோ, எங்கெல்லாம் தேடலை தொடங்கலாமே. இந்த யோசனையின் நீட்சியாக, ஒருவேளை நமக்கு விஷம் என்று கருதும் வேதியியல் பொருட்களை உனவாகக்கொள்ளும் ஜீவரசிகளை ஆராய்ந்தால் அவைகளில் சில மாற்று உயிர்களா என்று அறியமுடியுமா?

இங்கு குழம்பவேண்டாம். நாம் மாற்று உயிர் என்று தேடுவது நம்போன்ற உயிர்களிடத்தே இல்லாத புதிய மூலக்கூறுகளை மரபணுவிலேயே, டி.என்.ஏவிலேயே கொண்ட உயிர்களைத்தான். ஆனாலும் முதல் கட்டமாக அட்லீஸ்ட் நம்மால் உட்கொள்ளமுடியாத மூலக்கூறுகளை உணவாகக்கொள்ளும் உயிரினங்களை சோதிக்கலாம். பிறகு, இவற்றில் சில தங்கள் டி.என்.ஏ.வரை வரை இவ்வகை மூலக்கூறுகளை கொண்டுசென்றுள்ளதா என்றும் சோதிக்கலாம் என்று கருதி ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.

இவ்வகை யோசனையில் ஒன்று அமேரிக்காவில் Felissa Wolfe-Simonனுக்கு தோன்றியது. அவர் நாஸாவிடம் ஆராய்ச்சிபொருளுதவி கேட்டு எழுதிய பிரேரணையில், தான் ஆர்ஸனிக் உட்கொண்டு வாழும் உயிரினத்தை கண்டறிய முயல்வதாக குறிப்பிட்டார். புறநகர் தொழிற்சாலை கழிவுகள் பெரும்பாலும் ஆறுகள், ஏரிக்கள், குளங்களை சென்றடையச்செய்துவிடுகிறோம். இக்கழிவுகள் பல மிகுதியான ஆர்ஸனிக் சூழல் கொண்டவை. தொழில்நுட்பத்தில் பெருவளர்ச்சிபெற்ற ”முதல்-உலக” நாடான அமேரிக்காவில் இவ்வகை ஏரிக்களுக்கா பஞ்சம். அதனால் நாஸாவின் ஆதரவில் கலிஃபோர்னியாவிலுள்ள மோனோ ஏரியில் மாற்று உயிருக்கான ஆராய்ச்சியை ஃபெலிஸா தொடங்கியுள்ளார்.

மோனோ ஏரி, யோஸமைட் பூங்காவின் அருகிலுள்ளது. மிக அதிகமான ஆர்ஸனிக் மாசடைந்துள்ளது. பார்க்கத்தான் பச்சை நிறத்தில் ரம்மியமாய் இருக்கும். இவ்வகை மாசடைந்த ஏரிக்கலைசுற்றி வாக்கிங் போகையில், ஜலம் மொண்டு பருகமுடியாது. ஏரியின் நீர் நமக்கு உணவாக வெறுப்பு தெரிவிக்கும் பலவகை விந்தை நுண்ணுயிர்களை ஏற்கனவே கொண்டது. இவற்றில் பல ஏற்கனவே ஆர்ஸனிக்கை உட்கொள்கின்றனவோ என்ற சந்தேகக்கேஸ்கள்.

எப்படி மாற்று உயிரை கண்டுகொள்வது? ஒரு பரிசோதனை மூலம் [1].

இந்த ஏரியிலிருந்து சாம்பிளாக எடுத்துவரப்பட்ட பல நுண்ணுயிர்களை, சோதனைச்சாலையில், குடுவையிலிட்டு, ஆர்ஸ னிக்கை உணவாக கொடுத்துக்கொண்டே போகவேண்டியது. அதாவது, குடுவையில், ஆர்ஸனிக்கின் வீரியத்தை (concentration) ஏற்றிக்கொண்டே போவது. சாம்பிளில் அநேக நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கின் வீரியத்தினால் விரைவில் இறந்துவிடலாம். ஆனால் ஒருசில நுண்ணுயிர்கள் ஆர்ஸ னிக்கை உணவாக உட்கொள்வது சரியெனில், இவை மட்டும் நம்மைப்போல் ஆர்ஸனிக் விஷ-உணவினால் சாகாது. மாறாக, கல்யாண சமயல் சாதம், ஆர்ஸனிக்கும் பிரமாதம் என்று ஒரு வெட்டு வெட்டும். ஆர்ஸனிக்கிலிருந்து கிடைத்த ஆற்றலைவைத்துக்கொண்டு, நுண்ணுயிராதலால், தங்களை பிரதியெடுத்து மேலும் பெருக்கிக்கொள்ளும். இப்படிப்பெருகிய நுண்ணுயிர்களை மீண்டும் பெரிய பாத்திரத்தில் போட்டு ஆர்ஸனிக்கை பொழிந்தால், மீண்டும் பிரதியெடுத்துப்பெருகலாம். ஆர்ஸனிக் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க, இவ்வகை நுண்ணுயிர்களின் தொகையும் பல்கிப்பெருகலாம். தாங்கள் துளி ஆர்ஸனிக் விஷத்திற்கே பூட்டகேஸாகிவிடும் அகதா கிரிஸ்ட்டி மர்மக்கதைமாந்தர்கள் இல்லை என்பதை நமக்கு தெரியப்படுத்தலாம்.

இதுதான் பரிசோதனை.

மீண்டும் நினைவில்கொள்ளவேண்டியது, இங்கு நுண்ணுயிர்கள் என்று குறிப்பிட்டு நாம் சோதித்துபார்ப்பது, பாக்டீரியாக்களைவிட எளிமையான, வைரஸ் போன்ற மைக்ரோப்கள், அல்லது நேனோபுகளை. இவற்றின் மரபணுவில், நம் மனித (மற்றும், மரம்,மீன், உருளைக்கிழங்கு, பூச்சி, விலங்கு என அநேக ஜீவராசிகளின்) மரபணுவில் இருப்பது போல கரி மற்ற மூலக்கூறுகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள சேர்க்கைகள் இருக்கலாம். கரியுடன் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற மூலக்கூறுகளின் சேர்க்கை. மாற்று உயிர் என்று நாம் இங்கு சோதிப்பதில், கரியுடன், பாஸ்பரஸ் சேரும் இடங்களில் மட்டும், பாஸ்பரஸுக்கு பதில், மூலக்கூறு அட்டவணையில் (periodic table ) அதற்கு அடுத்து வரும், ஆர்ஸனிக் ஒட்டிக்கொள்கிறதா என்று பார்க்கிறோம்.

அதாவது, நமக்கு பாஸ்பரஸ் தவிர மூலக்கூறு அட்டவணையில் அதற்கு அடுத்துள்ள ஆர்ஸனிக், பிஸ்மத், என்று வேறு மூலக்கூறுகள் டி.என்.ஏ.வில் சேருவதற்கு இயலாது. உணவாகக்கூட நம் உடம்பில் சேராது. டாக்ஸின், நச்சுனி, என்று நம் மரபணு கட்டமைப்பு வெளியேற்றிவிடும். இல்லை, கட்டமைப்பே காலப்போக்கில் செயலற்று, இறந்துவிடும். ஆனால், மாற்று உயிர்கள், இவ்வகை மூலக்கூறுகளின் சேர்க்கையில் இயங்கலாமே என்று அனுமானிக்கிறோம். இதன் மூலம் நம் விஷத்தை உணவாகக்கொண்டு சந்ததியை பெருக்கும் உயிரினத்தை காணவே இவ்வகை பரிசோதனை. நம்மால் எங்கெல்லாம், எந்த சூழலிலெல்லாம் உஜ்ஜீவிக்கமுடியாதோ, அங்கு தழைப்பதுதானே மாற்று உயிர்.

மரபணுவிலேயே, டி.என்.ஏ.களிலேயே ஆர்ஸனிக் உடைய இவ்வகை நுண்ணுயிர்கள் இதுவரை இச்சோதனைகள் கண்டறியவில்லை. ஆனாலும், சமீபகாலமாகவே இவ்வகை ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது என்பதால், நம்பிக்கையுடன் தேடி வருகிறார்கள்.

மேலே படத்திலுள்ளது ஓவியர் வரைந்த ஆர்செனிக் மாற்று உயிர். வெள்ளையாக ஜாதிமல்லிகைபோல் இருப்பது சில மில்லிமீட்டர்கள் தடிமனில் ஆர்ஸனிக் மாற்று உயிரினக்கூட்டம். இதில் ஒரு சாதா மாற்று உயிர், சில நானோ மீட்டர் பருமனே.

மேலே குறிப்பிட்டது ஒரு வகை மாற்று உயிர் தேடுதல் பரிசோதனையே. மற்றொன்று, கதிரியக்க குணமுள்ள ஆர்ஸனிக்கை சிறிதளவு டிரேசர் என்று நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் உடம்பில் செலுத்தி, அவை மரபணு, டி.என்.ஏ. வரை சென்று மாற்றமேற்படுத்துகிறதா என்றும் பரிசோதித்துவருகிறார்கள். டி.என்.ஏ.வில்தான் பாஸ்பரஸ் இருக்கிறது என்றல்ல. நம்போன்ற ஜீவராசிகளின் உயிரணுவிலும், அதன் செல்-சுவர்களில், செல்-ஜவ்வுக்களில், லிப்பிட் (lipid) எனப்படும் புரதம் இருக்கிறது. இவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம். மாற்று உயிர்களில் இவ்விடங்களிலும் பாஸ்பரஸிற்கு பதிலாய் ஆர்ஸனிக் ஒட்டிக்கொள்கிறதா என்றும் இந்த சோதனைகள் மூலம் அறியமுடியும்.

அதேபோல, உலகின் கடல்களில் நீர் மொண்டு அவற்றில் உள்ள லட்சக்கணக்கான நுண்ணுயிர் ஜீவராசிகளை பிரித்தெடுத்து சோதித்துவருகின்றனர். உதாரணமாக, விஞ்ஞானி கிரெய்க் வெண்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்தில் மனித மரப ணுவின் அணிவரிசையை ஒழுங்குசெய்ய (human genome sequencing) பல முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தவர். இதற்கு அடுத்து ஈஸிசேரில் காலை நீட்டி ரிடையர் ஆகாமல், இவரே 2004இல் ஸர்கோஸா கடலில் இருந்து மொண்டு எடுத்த ஒரு டம்ளர் நீரிலிருந்து, 1.2 மில்லியன் புதிய மரபணுக்களையும், 1800 புதிய நுண்ணுயிர் மைக்ரோபுகளையும் கண்டறிந்துள்ளதாக அறிவித்தார். விஞ்ஞான உலககையே ஸ்தம்பிக்கவைத்த அறிவிப்பு. தன் அறிவிப்பில், இங்க நம்ம கடலிலேயே இவ்வளவு ஜீவராசிகள் நமக்கு இன்னமும் தெரியாம இருக்கு, நீங்க செவ்வாய்ல உயிரத் தேடுறீங்களா என்றார்.

அவர் சொல்வதில் பெரும் உண்மை இருக்கிறது. அநேகமாக நாம் அறியும் மைக்ரோ ஜீவராசிகள் அனைத்துமே, விரவியிருக்கும் உயிரியல் பலசரக்குகளில் ஒரு பகுதியான, சோதனைச்சாலையில் ஒரளவு பரிசீலிக்கமுடிந்த சொற்பமே. நம் உலகிலேயே, நம் பரிசோதனைமுறைகளில் தப்பிய இவ்வகை மைக்ரோஜீவராசிகள் நிச்சயம் ஏராளம் இருக்கிறது. இவற்றில் மாற்று உயிர் எனும் நிழல் உயிருருளையின் பிரதிநிதிகள் நிச்சயம் இருக்கவே சாத்தியம் அதிகம். உயிர் இருக்கிறது, இல்லை என்பதையறிய மேற்கொள்ளும் இந்த வகை சோதனைமுறைகளை விரிவுபடுத்தவேண்டும் என்று தீவிரமாக அறிவியலளர்கள் முயன்றுவருகிறர்கள். பவளப்பாறைகள் முதல், மைக்ரோபுகள், பாக்டீரியாக்கள், விலங்குகள் என கடல்வாழுயிரினங்களிடையே கார்பன்டைஆக்ஸைடு வாயுவின் பாதிப்பை, அதன் தேக்கத்தை பற்றிய ஆராய்ச்சிகள் உலகில் பல இடங்களில் சமீப காலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் உப நோக்கம் நிழல் உயிருருளையின் பிரதிநிதிகளை கண்டறிவதே.

பார்ப்போம், மாற்று உயிர் என்று திட்டவட்டமாய் நிரூபணம் செய்யமுடிந்த எதுவும் இன்னமும் மாட்டவில்லை.

சான்றேடுகள்

1. ஆர்ஸனிக் மாற்று உயிர் பரிசோதனை: Searching for Alien Life, on Earth by Henry Bortman , Astrobiology Magazine, 2009 http://www.astrobio.net/index.php?option=com_expedition&task=detail&id=3259

One Reply to “உயிர், மாற்று உயிர் – 3”

Comments are closed.