இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 4

09
யுனோவி
UNOVIS ( 1919 TO 1926)

விடெப்ஸ்க் (Vitebsk) கலைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பில் இருந்த ஓவியர் சாகால் அந்த இடத்தில் ஓவியர் காசிமிர் மாலவிச்-ஐ 1919 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமர்த்தினார். தொடக்கத்தில் பள்ளி மாணவர்களால் தோற்றம் கண்ட ‘மால்பாஸ்னோவிஸ்’ (Molposnovis – Young Followers of the New Art) என்னும் குழு புதிய கலைச் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக அமைக்கப்பட்டது. பின்னர் அதில் பள்ளியின் ஆசிரியர்களும் உறுப்பினர் ஆனபோது அது ‘பாஸ்னோவிஸ்’ (Posnovis  – Followers of the new art) என்று பெயர் மாற்றம் கொண்டது. ஓவியர் காசிமிர் மாலவிச் முதல்வர் ஆனபின் அது யுனோவி (Unovis – ‘The Champions of the new art’) என்று மாற்றம் கொண்டது. ஓவியர் காசிமிர் மாலவிச் குழுவை இறுக்கமான கட்டுமானம் கொண்ட அமைப்பாக மாற்றியமைத்தார். அத்துடன், பள்ளியின் கற்பிக்கும் முறையிலும் மாற்றங்களை அறிமுகப் படுத்தினார்.

அவரது தலைமையில் குழு ஓவியரின் சூபர்மாடிஸம் வழி கலைப்பாணியைப் பின்பற்றி வியக்கத்தக்க செயற்பாடுகள் கொண்டதாக இயங்கியது. பல சோதனைகளை மேற்கொண்டது. அவற்றை செயற்படுத்த வீதியில் இறங்கியது. அதன் செயற்பாடுகள் குறித்த அறிக்கை பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் குறிக்கோள் சூபர்மாடிஸம் வழி கலைப்பாணியை முன் நிறுத்தும் விதமாக சோவியத் அரசுக்கு ஆதரவு தரும் விதத்திலும், கலையை மக்களுக்கானதாகவும் மாற்றுவதாக அமைந்தது. பள்ளி மாணவர்களை முதல்வர் அளவில் பெரிய படைப்புகளை கட்டிடக்கலை மூலம் செயலாக்கம் கொள்ளத் தூண்டினார். பள்ளியின் கட்டிடக்கலைப் பிரிவின் தலைவராகப் பணிபுரிந்த எல் லிஸ்சிட்சி (El Lissitzxy) தமது மாணவி இலியா சாஷ்னிக் (Ilya chashnik) உடன் இணைந்து நகர்ச் சதுக்கத்தில் புதிய பாணிக் கட்டிடம் ஒன்றையும், தலைவர்கள் உரை நிகழ்த்த மேடை ஒன்றையும் நூதன வடிவில் அமைத்தார். நாட்டில் பின்பற்றப்பட்ட கம்யூனிச சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு இயங்கிய அந்தக் குழு உறுப்பினர்கள் தமது படைப்புகளை குழுவின் படைப்புகளாக பாவித்து, அவற்றில் குழுத்தலைவரின் படைப்பை நினைவுறுத்தும் விதமாக ‘கருப்புச் சதுரத்தை’ ஒரு குறியீடாகத் தங்களது கையெழுத்துடன் இணைத்தனர்.

மாஸ்கோ நகரில் 1920 ஆம் ஆண்டு ‘அனைத்து ருஷ்யாவின் முதல் கலை மாணவர் – ஆசிரியர் சந்திப்பு’ (First All-Russian Conference of Teachers and students of Art) ஏற்பாடு செய்யப்பட்டது. விடெப்ஸ்க் கலைப்பள்ளியின் மாணவர் குழு (Unovis) அதில் பங்கேற்றது. புதிய சோதனைகளையும், கோட்பாடுகளையும் விளக்கும் கையேடுகள், கலைப்படைப்புகள், அவை சார்ந்த கட்டுரைகள், முதல்வர் காசிமிர் மாலவிச் எழுதி, பள்ளியிலேயே அச்சேறிய நூலான ‘கலையில் புதிய செயல்முறைகள்’ (‘On new Systems in Art’) ஆகியவை வந்திருந்தவரிடையே குழு உறுப்பினகளால் வினியோகிக்கப்பட்டன. இதற்கு ஒரு நல்ல பலன் கிட்டியது. அனைவரும் குழுவை ஒரு முன்னேறும் அமைப்பாகச் சிறப்பித்தனர். காசிமிர் மாலவிச் எழுதிய ‘சூபர்மாடிஸம் -34 கோட்டோவியங்கள்’ (‘Suprematism – 34 Drawings’) என்னும் மற்றொரு நூலும் பள்ளியின் லிதோகிராப் அச்சுக்கூடத்தில்தான் அச்சேறியது.

ஆனால், குழுவின் ஒற்றுமையும் அனைவரையும் கவர்ந்த மறுமலர்ச்சி இயக்கமும் தொடரவில்லை. 1922-இல் அமைப்பில் கருத்து வேற்றுமை முற்றி அது இரண்டாக உடைந்தது. காசிமிர் மாலவிச் தன்னைப் பின்பற்றிய மாணவர்களுடன் பெட்ரோகார்டு (Petrogard) நகருக்கு இடம் பெயர்ந்தார். மாஸ்கோ நகரில் இயங்கிய கலைப்பள்ளியுடன் (‘INKhUK’ Institute of Artistic Culture) தொடர்பு (1923 / 26) வைத்துக்கொண்டார்.

சூப்பர்மாட்டிஸம் என்னும் புதிய பாணி தொடர்பற்ற ஒரு வழியல்ல. மாறும் உலக ரீதியான கலைத்தளங்களுக்கு ஏற்ப அது தோற்றம் கண்டது. குழுவிலிருந்து பலர் ஊர் மாறிச் சென்றனர். சிலர் வேறுபாணிக்கு மாறினர். எல் லிஸ்சிட்சி, இலியா சாஷ்னிக் போன்றவர் தமது வாழ்நாள் முழுவதும் இந்தப் பாணியை விட்டு விலகாமல் ஓவியங்களைத் தொடர்ந்து படைத்தனர்.

[DDET யுனோவியின் ஓவியங்களை காண இங்கே அழுத்தவும் ]

220px-image-chagall_fiddler

abstract-by-el-images

book-cover-by-el-dg1

el-lissitzky-images

figure-01-el-lissitzky-images

unovis_art_on-a-street-in-vitebsk

[/DDET]

10
சோஷியலிஸ்ட் ரியலிஸம்
Socialist Realism

‘கலை’
அரசு உத்தரவு வழி

கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப்படி மக்களால் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் சமூகத்துக்குப் பொதுவானது. அதில் கலைப் படைப்புகளும் அடக்கம். கலையும் இலக்கியமும் பிரசாரத்துக்கு மிகுந்த வலுவூட்டுவதாக உணரத் தொடங்கியது கட்சித் தலைமை. 1917 அக்டோபர் புரட்சியின்போது போல்ஷெவிக் (Bolsheviks) கட்சி அனைத்து கலை / கலாசார இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, அதற்கு ‘ப்ரோலெகல்ட்’ (Prolekult – ‘The Proletarian Cultural and Enlighenmant Organi -zaions’) என்று பெயரிட்டது. கட்சியின் கட்டளைப்படி அந்த அமைப்பு உழைக்கும் வர்க்கத்தின் மேன்மைக்காகச் செயற்பட்டது.

புரட்சிக்கு முன்னர் கலைஞர்கள் பல புதிய பாணி இயக்கங்களை நடுதர வர்க்கத்தின் ஆதரவுடன் தோற்றுவித்து கலைத்தளங்களில் நவீனத்தைப் புகுத்தினர். ஆனால், கம்யூனிசக்கட்சியின் அடிப்படை உறுப்பினரிடமிருந்து அதற்கு எதிரான கருத்துகள் வரத்தொடங்கின. மேலை நாட்டு நவீன பாணிகளான இம்ப்ரஷனிஸம், க்யூபிஸம் இரண்டும் கட்சி மேலிடத்துக்கு ஏற்புடையதாக இல்லை. புரட்சிக்கு முற்பட்ட அவை நடுத்தரவர்க்க மக்களின் தரங்குறைந்த கலைப்பாணியாக அடையாளப்படுத்தப்பட்டன.

ஆனால், இந்தக் கலைக் கொள்கையை கம்யூனிச கட்சியின் கண்டு பிடிப்பாகக் கூறிவிட முடியாது. மன்னர் ஜார் (Tzar) ஆட்சிக் காலம் தொடங்கியே இந்தக் கலைத் தணிகை என்பது தொடர்ந்து செயற்பாட்டில் இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து எழுத்துக்களும் தணிகைக் குழுவின் ஒப்புதல் பெற்றபின்பே மக்களைச் சென்றடைந்தன. 19 ஆம் நூற்றாண்டுக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் தணிகைக் குழுவின் கண்களிலிருந்து தப்பிக்கும் இரகசியத்தை அறிந்திருந்தனர். ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இருக்க வில்லை.

1932 இல் கம்யூனிசக் கட்சியின் தலைவரும் நாட்டின் அதிபருமான ஸ்டாலின் சோஷியலிஸ்ட் ரியலிஸம் என்னும் கோட்பாட்டை ‘இலக்கிய, ஓவிய நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்தல்’ (On the Reconstruction of Literary and Art Organizaions)என்னும் ஒரு அரசு ஆணையாக அறிவித்து உலாவ விட்டார். அதன் நோக்கம், கலை, எழுத்து போன்ற அனைத்து படைப்பு சார்ந்த இயக்கங்களையும் ‘ஞானக் குளியல்’ செய்வதுதான். இலக்கியத்தை தணிகை செய்யும் அரசின் பிரிவாக ‘சோவியத் எழுத்தாளர் கழகம்’ (The Union of Soviet writers) நிறுவப்பட்டு இயங்கியது. 1934 இல் கூடிய சோஷியலிச எழுத்தாளர் மாநாட்டில் புதிய சட்டம் ‘ஒருமனதாக’ ஏற்கப்பட்டு, நாட்டின் அனைத்து கலைத் தளங்களிலும் மிகுந்த கண்டிப்புடன் புகுத்தப்பட்டது. அதிலிருந்து விலகி செயற்படுவதாக அரசு நினைக்கும் படைப்பாளிகள் கடும் தண்டனைக்குள்ளாகி ‘லேபர் காம்ப்’ (Labour Camps) என்று சொல்லப்பட்ட ஸைபீரியப் பகுதி சிறைகளில் பல ஆண்டுகள் வாட நேர்ந்தது. சிலருக்கு மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய ‘கிரேட் பர்ஜ்’ (great purge) என்று அறியப்பட்ட அரசின் ‘சமுதாயத்தை தூய்மைப்படுத்தும்’ நடவடிக்கையாக அது அமைந்தது.

அத்தகைய கடும் சட்டம் 1953 இல் ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் அறிவிக்கப்படாமல் பெயரளவுக்குத் தளர்த்தப்பட்டது. என்றபோதும், படைப்பு சுதந்திரம் என்பது அரசின் பிடியில்தான் இருந்தது. அதிலிருந்து தப்பிக்க பல படைப்பாளிகள் நாட்டைவிட்டு ஓடி வேறு நாடுகளில் அடைக்கலமாயினர். தொடர்ந்து நாட்டிலேயே வசித்த கலைஞர் கூட்டத்தின் மீது வேவுபார்ப்பதும், அரசின் நெருக்கடியும் தொடர்ந்தன.

‘உழைப்பாளி வர்க்கத்தின் புரட்சி வெற்றிகளையும், கட்சி மேற்கொண்ட சோஷியலிஸ வளர்ச்சியையும் பிரதிபலிப்பதுதான் ஒரு கலைப்படைப்பின் நோக்கமாக இருக்கவேண்டும்; அவைதான் உண்மையில் போற்றப்படத் தக்கவை’ என்று சோஷியலிஸ்ட் ரியலிஸம் கருதியது, அதை உறுதியாகப் பின்பற்றியது. கலைஞன் நாட்டின் புரட்சி பற்றிய நிகழ்வுகளையும், நாட்டுக்காகத் தமதின்னுயிரையையும் அர்ப்பணித்த வீரர்களின் உருவங்களையும், தனது படைப்புகளில் பதிவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது. அம்மட்டோடு அல்லாமல், அப்படைப்புகள் உழைப்பாளிகளின் சமுதாய மனோபாவத்தை மாற்றி, கல்வி மூலம் சோஷியலிஸ தத்துவங்களை அவர்கள் புரிந்துகொள்ள உதவி, அதற்கு அவர்களை வழிநடத்தும் கருவியாக இயங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது. தலைவர் லெனினின் கூற்றுப்படி “சோவியத் குடிமகன் முற்றிலுமாக ஒரு புதிய மனிதனாக மாறவேண்டும்” அந்த இயக்கம் ‘சோவியத் குடிமகனின் உள்ளதை வடிவமைக்கும் புதிய பொறியாளர்’ என்று ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.

ரியலிஸம் என்னும் சொல் அடர்த்தியான பொருள்கொண்டது. ஓவிய மாகவோ சிற்பமாகவோ படைக்கப்படும் உழைப்பாளியின் தோற்றம் அவனது தொழில் சார்ந்த கருவிகளுடன் எப்படி மிடுக்குடன் இருக்கவேண்டும் என்பதை அரசு முடிவுசெய்தது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் ஒரு குடிமகன், அவனது அன்றாட வாழ்க்கை நியதிகள் போன்றவை படைப்பாளியின் கருப் பொருளாயின. ஆனால், சோவியத் ருஷ்யாவில் அவ்விதம் நிகழவில்லை. கட்சியின் செயற்பாடு, அதன் கொள்கை, இயக்கம் அனைத்தும் உழைப்பாளியை மையப்படுத்தியே நகர்ந்ததால் அவன் ஒரு போற்றப்படும் மனிதனாக உருக் கொண்டான். புரட்சிக்கு முன்னர் படைப்பாளிகள் தேர்வுசெய்த கருப் பொருளினின்றும் இது முற்றிலும் வேறானது. ஆனால், சாமான்யனை கலைப் படைப்புகளில் கருப்பொருளாக்கியது என்பது அப்போதைய காலகட்டத்தில் (1915) பரவலாகப் பின்பற்றப்பட்ட உத்திதான். ஓவியர்கள் உறுதியான உடற் கட்டுடன் வயல்வெளிகளிலும், தொழிற்சாலைகளிலும் உற்சாகமாக உழைக்கும் குடிமகனை ஓவியங்களாக்கினர். தலைவன் ஸ்டாலினின் உருவத்தை ஏராளமாக ஓவியங்களாகவும் சிலையுருவாகவும் படைத்து அவர் புகழ்பாடித் தமது ராஜ விஸ்வாசத்தை அறிவித்துக் கொண்டனர். தொழிற்சாலை, வயல்வெளிகளில் கிட்டிய கட்சியின் சோவியத் பொருளாதாரக் கொள்கை பெற்ற வெற்றியை அவ்வோவியங்கள் பதிவுசெய்தன. கட்சி, தான் வரையறுத்த புதிய கம்யூனிஸ சித்தாந்தங்களை எழுத்தாளர், கவிஞர் போன்றோர் தமது படைப்புகளின் மூலம் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்றும், இசைக் கலைஞர்கள் அவற்றை மக்களை ஈர்க்கும் விதமாக பாடல்களில் புகுத்தவேண்டும், உழைப் பாளியின் வலிமையையும், பெருமையையும் போற்றுவதாக அவை அமைய வேண்டும் என்றும் வற்புறுத்தியது.

மாக்ஸிம் கோர்கி (Maxim Gorky) யின் புதினமான ‘தாய்’ (‘Mother’) சோஷியலிஸ தத்ரூபத்தை பிரதிபலிக்கும் முதல் படைப்பாகக் கருதப்பட்டது. ஓவியர் அலக்ஸாண்டர் டெய்னெகா (Alexander Deineka) 2 ஆம் உலகப் போரில் சோவியத் வீரர்கள் விளைத்த வீரம் செறிந்த போர்க் காட்சிகள், கூட்டுறவுப் பண்ணைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை தத்ரூப வடிவில் ஓவியங்களாக்கினார். யூரி பிமெனோவ் (Yuri Pimenov), போரிஸ் லொகான்சன் (Boris Loganson),கெலி கோர்செவ் (Geli Korzev) போன்றோர் அவ்விதப் படைப்புகளைத் தந்த ஓவியர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.

சோஷியலிஸ தத்ரூபக் கலை கோட்பாட்டால் கலைஞர்கள் சுதந்திரமாக இயங்குவது என்பது அனேகமாக நாட்டில் இல்லாமற் போனது. அவர்களது படைப்புகள் தணிகை செய்யப்பட்டன. அரசு வழிமுறைக்குள் அடங்காததாகக் கருதியவை காட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன. நாட்டில் பின்பற்றப் பட்ட கடுமையான கலைத்தணிகை முறையால் வெளிநாட்டு இலக்கியம், கலைப் படைப்புகள் போன்றவை தடை செய்யப்பட்டன. மக்களின் நடுத்தர வாழ்க்கையைப் பிரதிபலித்த அனைத்துக் கலைப்படைப்புகளும் ‘அழுகி நாற்றம் வீசுபவை’ என்னும் பெயரில் நிராகரிக்கப்பட்டன. அவை கம்யூனிஸ சித்தாந்தத்திற்கு எதிரானவை என்ற பார்வை மக்களிடையே பரப்பப்பட்டது. 1980 களுக்குப் பின்னர்தான் மேற்கத்திய இலக்கியம், கலை போன்றவற்றுடன் தடையற்ற தொடர்பு அங்கு ஏற்பட்டது. கட்சியில் கலை முடக்கத்தை ஏற்காதவரும் சிலர் இருக்கத்தான் செய்தனர். ஆனால், எண்பதுகளுக்குப் பின்னர் தான் அவர்களுக்குத் தமது கருத்தை அச்சமின்றி வெளிப்படையாகக் கூற முடிந்தது. என்றாலும், 1991 கள் வரை சோஷியலிஸ்ட் ரியலிஸம் அரசு சார்ந்த கலை கொள்கையாகவே இருந்துவந்தது. ‘ஒருங்கிணைந்த சோவியத் நாடு’ (U.S.S.R) உடைந்து சிதறுண்ட பின்னரே கலைஞர்கள் அரசு தணிகையின் கோரப் பிடியினின்றும் விடுதலை பெற்றனர்.

சோவியத் ருஷ்யாவின் இந்தக் கலாசார அணுகுமுறை கம்யூனிஸத்தை ஏற்றுப் பின்பற்றிய அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதாயிற்று. ஆனால், அதனை நடைமுறைப்படுத்திய பாங்கு நாட்டுக்கு நாடு வேறுபட்டது. தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் அதுதான் அவற்றின் கலைவடிவமாகப் பின் பற்றப்பட்டது. இன்று வடகொரியா மட்டுமே இன்னும் அதைப் பின்பற்றி வருகிறது. சைனா அவ்வப்போது அதைத் தனக்குச் சாதகமாக இழுத்துக்கொள்ளும். கம்யூனிஸம் இல்லாத, அல்லது அதை ஏற்காத நாடுகளில் இன்றளவும் இந்தக் கலைத்தணிகை என்பது எதேச்சாதிகாரத்துடன் இணைத்துத்தான் பேசப்படுகிறது.

[DDET சோஷியலிஸ்ட் ரியலிஸ ஓவியங்களை காண இங்கே அழுத்தவும் ]

boris-vladimirski-roses-for-stalin-images

brodskiys_lenin

by-womacka_gemeinschaftsarbeit

collective-farm-images

miner-by-boris-images

stalin-by-wermer-horvath-images

women-at-work-images

worker-by-larsen-images

worker-by-vera-mukhina-1936-images

[/DDET]