ஷ்ரோடிங்கரின் பூனை

முன்குறிப்பு

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள். நியூட்டனும், ஃபாரடேவும் அமைத்த பௌதீக விதிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு புதிதாகப் பிறந்தது க்வாண்டம் இயற்பியல். புதுப்புது கோட்பாடுகளும், சமன்பாடுகளும் நாளுக்கு நாள் முளைத்த வண்ணம் இருந்தன. அணுவினும் நுண்ணிய துணிக்கைகளின் ஜாதகம் அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு விதிக்கும் ஓராயிரம் பொழிப்புரைகள் முன்வைக்கப்பட்டன. ஒரேயொரு வேவ் ஃபங்க்ஷன் (துணிக்கைகளின் தனித்தன்மையை கணித ரீதியாக விவரிக்க க்வாண்டம் இயற்பியலில் பயன்படுத்தப்படும் ஒரு மாறி அளவு) ஒரு சட்டகத்தின் அத்தனை நிலைகளையும் குறிக்கும் என்று சொல்லப்பட்டது. ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரு வேறு நிலைகளில் வசிக்கும் படியான ‘சூப்பர்பொசிஷன்’ தன்மையை கொண்டிருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ‘சூப்பர்பொசிஷன்’ நிலையில் வசிக்கும் அந்த பொருள், தான் கவனிக்கப்படும் அந்த நொடியில், நிலைகுலைந்து, இரண்டில் ஒரு நிலையை அடைகிறது என்ற கருத்தும் உருவானது. அந்தப் ‘பொருளை’ அணுவிலிருந்து வளர்த்து அண்டம் வரை எடுத்துச் செல்லும் யோசனைகள் முன் வைக்கப்பட்டன. அதே நேரத்தில் அணுவைப் போன்ற நுண்ணிய துணிக்கைகளை விவரிக்கும் இத்தகைய சமன்பாடுகளை பெரிய வஸ்துக்களுக்கு பொருத்துவது தவறு என்ற மாற்றுக் கருத்தும் மறுபுறம் வலுத்தது. அதன் ஒரு பகுதியாக, 1935 ஆம் ஆண்டு, எர்வின் ஷ்ரோடிங்கர் என்னும் ஆஸ்ட்ரிய விஞ்ஞானி சிந்தனை பரிசோதனை ஒன்றை முன்மொழிந்தார்.

அதன்படி ஒரு பூனையை எஃகினால் ஆன பெட்டி ஒன்றுக்குள் அடைத்து வைக்க வேண்டும். கூடவே, ஒரு கைகர் கௌண்டரில்(Geiger counter) துளியூண்டு, ரொம்பத் துளியூண்டு அளவில் ஒரு கதிர்வீச்சுத் தனிமத்தை வைக்க வேண்டும். அதாவது, அடுத்த ஒரு மணி நேரத்தில் தனிமத்தின் ஒரே ஒரு அணு சிதைந்து போகக் கூடிய சாத்தியமும், போக முடியாத சாத்தியமும் சரி பாதி இருக்கக் கூடிய அளவுதான் அங்கே வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த தனிமத்தின் ஒரு அணு சிதையுமாயின், கௌண்டர், மின் சக்தியை வெளியேற்றி, ஒரு ரிலே மூலம் தன்னோடு இணைக்கப்பட்டுள்ள சுத்தியலை கீழே தள்ளும். விழுகிற சுத்தியல் அதனடியில் வைக்கப்பட்டுள்ள குடுவையை உடைத்து, அதிலுள்ள அமிலத்தை சிதறச் செய்யும். பூனை இறந்து போகும். மாறாக தனிமத்தின் அணு சிதையாத நிலையில், ஒன்றும் ஆகாமல் பூனை உயிருடன் இருக்கும்.

க்வாண்டம் இயற்பியலின் அடிப்படையில் இந்த மொத்த அமைப்பையும் ஒரு வேவ் ஃபங்க்ஷன் மூலம் தெரிவிப்போம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேவ் ஃபங்க்ஷனின் படி பெட்டியைத் திறந்து பார்ப்பதற்கு முன்பு வரை பூனை உயிருள்ள நிலையிலும், உயிரற்ற நிலையிலும் சமமாக வசித்துக் கொண்டு ஒரு ‘சூப்பர்பொசிஷன்’ தன்மையை வெளிப்படுத்தும். பெட்டி திறந்து கவனிக்கப்படும் அந்த நொடியில் வேவ் ஃபங்க்ஷன் ‘சூப்பர்பொசிஷனில்’ இருந்து குலைந்து, பூனையை உயிருள்ளதாகவோ, அல்லது உயிரற்றதாகவோ சுட்டிக்காட்டும். ஆனால் உண்மையில், பெட்டியைத் திறந்து பார்த்தாலோ, பார்க்காவிட்டாலோ, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பூனை ஒன்று இறந்து போயிருக்கும், இல்லை உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கும். இரு நிலைகளிலும் வசிக்க வாய்ப்பேயில்லை. ஆகையால், நுண்ணிய பொருள்களின் தன்மையை விளக்குவதற்காக அமைக்கப்பட்ட க்வாண்டம் விதிகள், பூனை போன்ற பெரும வஸ்துக்களுக்கு செல்லாது என்று வாதிட்டார் ஷ்ரோடிங்கர்.

-o00o-

இரண்டாவது முறையாக விமானத்தின் புறப்பாடு தாமதிக்கப் படுகிறது என்ற அறிவிப்பைக் கேட்டவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. நறநறவென பல்லைக் கடித்துக் கொண்டேன். இந்த சூழ்நிலையில் அவ்வளவுதான் செய்ய முடியும். ஆனால் இந்த கேட்டில் இருக்கும் மற்றவர்கள் முகத்தில் கோபம் துளி கூட இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை கோபத்தை முகத்தில் காட்டாமல், கொட்டுகிற பனியை மனதுக்குள்ளேயே கறுவிக் கொண்டிருக்கிறார்களோ?

இன்று காலையில் கூட அச்சுபிச்சுவென ஒரு ஊமை வெயில் பல்லை இளித்துக் கொண்டு இருந்தது. நான் சாயங்காலம் புறப்படுகிறேன் என்று எப்படித்தான் இயற்கைக்குத் தெரிந்ததோ, உடனே மூக்கில் வியர்த்துவிட்டது! மதியத்திலிருந்து பன்னீராய்த் தெளிக்கத் தொடங்கி, இதோ இப்போது நன்றாகப் பிடித்துக் கொண்டது. இரவில் பெரிய புயலாக மாறலாம் என்று வேறு பயமூட்டுகிறார்கள்.

குளிர் காலத்தில் பனி கொட்டுவதெல்லாம் சிகாகோவில் சாதாரணமே என்றாலும், இது எதிர்பாராத ஒன்று. நேற்றைய அறிக்கைகள் கூட இத்தனை தீவிரமாக இருக்கும் என்று சொல்லவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் இங்கிருக்கும் மக்களோ, இதையெல்லாம் எதிர்ப்பார்த்து வந்ததைப் போல கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், லேப் டாப்பிலோ, ஐ-பாடிலோ ஐக்கியமாகி இருக்கிறார்கள். சிலர் இந்தப் பனியையும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதை எல்லாம் என்னவென்று சொல்ல? இவர்களின் ஹேன்ட் பேகேஜ்களை துழாவிப் பார்க்க வேண்டும். கையோடு கொஞ்சம் பொறுமையையும் கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களா என்ன? விமானத் தாமதத்திற்கு ஒரு குறைந்த பட்ச பதிலாக உதட்டைக் கூட சுழிக்க மாட்டேன் என்று பிடிவாதமாய் எதாவது ஒரு இயந்திரத்தை நோண்டிக் கொண்டிருக்கிறார்களே! இதோ, என் எதிர் வரிசையில் இருக்கும் அத்தனை பேர் கையிலும் ஏதோ ஒன்று – மடிக்கணினி, அல்லது அலை பேசி, அல்லது இயந்திர புத்தகம். அதிசயமாக அந்த ஓர நாற்காலி பெரியவர் மட்டும் காகித புத்தகத்தை வாசித்துக் கொண்டு தனியாக தெரிகிறார்… அந்த நூலின் தலைப்பைப் போல- “Schrodinger’s Cat Trilogy”.

தலைப்பைப் படித்ததும் என்னை அறியாமல் புன்னகைத்துக் கொண்டேன். இதென்ன விநோதம்? நாராவைப் பார்க்கச் செல்லுமுன் ஷ்ரோடிங்கரின் பூனை என் முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கறது. அவனைப் பார்த்ததும் இதைப் பற்றி மறக்காமல் சொல்ல வேண்டும். கல்லூரி நாட்களில் இந்தப் பூனையை பற்றி சொல்லி சொல்லி எத்தனை முறை என்னையும், சுந்தரையும் போர் அடித்திருப்பான்?

நான்காவது செமஸ்டர் என்று நினைக்கிறேன். இன்றைக்கெல்லாம் பன்னிரண்டு வருடங்கள் ஆகி இருக்கும். ‘செமிகண்டக்டர் டிவைசஸ்’ வகுப்பில் டன்னலிங் டையோடின் செயல்பாட்டைக் கற்பிப்பதற்கு முன்னோடியாக க்வாண்டம் இயற்பியலின் சில விதிகளை விளக்கிக் கொண்டிருந்தார் கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி சார். வழக்கம் போல பாடத்தின் சுவாரசியத்தைக் கூட்ட சில வரலாற்றுத் தகவல்களையும் இடையிடையே புகுத்தி வந்தார். அப்பொழுதுதான் எங்களுக்கு ஷ்ரோடிங்கரின் பூனை அறிமுகம் ஆனது. அறிமுகப்படுத்தியப் பின் கே.எஸ்.கே. கிடுகிடுவென அடுத்த பாடத்துக்கு நகர்ந்து விட்டார்… கூடவே எங்களையும் இழுத்துக் கொண்டு. ஆனால் அந்த பூனை மட்டும் நகரவில்லை. எங்களையே சுற்றி வரத் தொடங்கி, மெதுவாக நாங்கள் தங்கியிருந்த இடம் வரை வந்துவிட்டது!

நாங்கள் தங்கியிருந்த அந்த மாடி வீட்டை வீடு என்று அழைப்பது சரியாகாது; அதே நேரத்தில் அறை என்று குறைத்துச் சொல்லவும் முடியாது. அப்படியொரு ரெண்டுங்கட்டானான அமைப்பு. ஏகப்பட்ட அடைசல்கள் ஆக்கிரமித்தது போக, கால்வைக்க கொஞ்சமாகத் தரையுமென ஒரு பெரிய அறை. கல்லா, மரமா என்று கடைசி வரை கண்டுபிடிக்க முடியாத படி இருந்த ஒரு ஒல்லிப்பிச்சான் தடுப்புக்கு அந்தப் பக்கம் சின்னதாய் இன்னொன்று. எவ்வளவு குப்பைகளை குவித்தாலும், அவ்வளவையும் ஏற்றுக் கொண்டு, இன்னமும் அடைக்க எங்கேயாவது கொஞ்சம் வெற்றிடத்தை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கும் அந்த பெரிய மேஜையும், ஆம்லெட், டீ போட வசதியாக இருக்கும் என்று சொல்லி வைக்கப்பட்ட குட்டி அடுப்பும் அந்த சின்ன அறையை இன்னும் சிறியதாக்கின. போதாதற்கு ‘யாரோ தந்தார்கள்’ என்று சுந்தர் ஒரு மினி ஃபிரிட்ஜை வேறு கொண்டு வந்து சேர்த்தான். அதற்கு இடப்பக்கம் குளியலறை. இவற்றை எல்லாம் கடந்து வந்தால் இரண்டு சந்தோஷங்கள். எந்நேரமும் சுகமாகக் காற்று வீசும் மொட்டை வெளி. எத்தனை பெரிய புத்தகத்தை கொடுத்தாலும் அரை மணியில் அடித்துத் தரும் கீழ்த்தள ஜெராக்ஸ் கடை முருகேசண்ணனின் நட்பு.

இந்த புறாக்கூண்டில் தான் எங்களின் அடுத்த மூன்றாடுகள் கழியும் என்று முதலாம் ஆண்டு நாங்கள் சத்தியமாக நினைத்திருக்க மாட்டோம். கல்லூரிச் சேர்க்கை, ஹாஸ்டலில் அனுமதி, அப்பா அம்மா அறிவுரைகள், புது ரூம்மேட்டின் அறிமுகம், சீனியர்களின் ராகிங் என்ற வழக்கமான சம்பிரதாயங்களுடன் எங்கள் முதல் வருடம் தொடங்கியது. திரும்பிப் பார்ப்பதற்குள் ஒத்துக்கொள்ளாத மெஸ் சாப்பாடு, சரிபட்டு வராத ரூம் மேட், கட்டுப்படி ஆகாத கட்டணம் என்று ஆளுக்கொரு காரணத்தை கையில் எடுத்துக் கொண்டு வருட இறுதில் வெளியே அறை தேடத் தொடங்கிவிட்டோம். இடையில் எங்களின் பரிச்சயம், பழக்கம், நட்பு எல்லாம் ஏற்பட்டு விட்டிருந்தது.

வீட்டுச் சாப்பாட்டின் ருசி இன்னமும் நாக்கிலிருந்து விலகாத முதல் செமஸ்டரின் ஓர் இரவு. ரூம்மேட் செந்திலுடன் எதைப்பற்றியோ பேசிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து செல்கையில், திடீரென்று எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக் கொண்டான் அவன். வந்தவன் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தான். அவனை நான் அப்போது இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். அதற்கு முன்பு, ஏ விங் சீனியர்களின் ராகிங் பொழுதில் நாங்களெல்லாம் இடுப்பால் காற்றில் உயிர் எழுத்துக்களை எழுதிக் கொண்டிருக்க, இவன் மட்டும் கிதார் வாசித்துக் கொண்டிருந்தான். கிதார் வாசிக்கும் போது அவன் பெயர் நாராயணன் என்று தெரியாது. நாராயணன் அணிந்திருந்த கண்ணாடி அவன் முகத்துக்கு ஒரு ‘நெர்டி லுக்கைத்’ தந்தது.

எப்படி என்று தெரியவில்லை. ஆனால் சப்பாத்திக்காக காத்திருக்கும் வேளையில் எங்கள் உரையாடல் எளிதில் புரியாத ஒரு வெக்டார் கால்குலஸ் கணக்கைப் பற்றி இருந்தது. கணக்கை விட அதற்கு நாராயணன் கொடுத்த விளக்கங்கள் அதிகமாகக் குழப்பின. சிலது என் எதிர்வாதத்தைத் தூண்டின; சிலது சுத்தமாக புரியவேயில்லை. மறுத்துச் சொன்னதுக்கெல்லாம் நிதானமாக பதிலளித்தான். அந்த பொறுமையும், நிதானமும் அவனுக்கு ஒரு ஒட்டாத பக்குவத்தை தந்தன. சொற்ப மதிப்பெண்களில் அவன் ஐ.ஐ.டி யை கோட்டை விட்டவன் என்று அறிந்து கொண்டேன். திரும்பி வருகையில், வெக்டார் மறந்து போய், பேச்சு ராகிங்கை சுற்றி வந்தது. “நீ நல்லா கிதார் வாசிப்பியா?” என்று கேட்ட போது, “அவ்வளவா தெரியாது. பேசிக் கார்ட்சும், பெண்டடோனிக் ஸ்கேலும் வாசிப்பேன்” என்றான். எனக்கு அவன் ஆங்கிலமோ, தமிழோ பேசினால் தேவலாம் என்று தோன்றியது. கூடவே இவன் வெறும் படிப்ஸ் மட்டுமல்ல என்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

மெஸ் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். டிராஃப்டரை எங்கோ வைத்துவிட்டு, மறந்து போய், அறை அறையாய் தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுது. கடைசியாக, நிரஞ்சனுடைய அறையிலாவது இருக்குமா என்று தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது, சம்பந்தமேயில்லாமல், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவன் ரூம் மேட், “ஏன் உன் கால் இப்படி இருக்கு?” என்று ஒரு கேள்வியை கேட்டான். என்னிடம் அவன் பேசும் முதல் வாக்கியம் அது. புரியாமல் “எப்படி?” என்றதற்கு, “சிமென்ட் தரையில் கிரிகெட் விளையாடுன மாதிரி” என்றான். குனிந்து பார்த்தால் விரல்களில் புழுதி. எனக்கு எரிச்சலாய் வந்தது. பதில் சொல்ல பிடிக்கவில்லை. தொடர்ந்து தேடவும் பிடிக்கவில்லை. கோபமாக வந்துவிட்டேன். அந்த அதிகப் பிரசங்கியின் பெயர் கூட அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், பின்னர் நானும் சுந்தரும் பரிமாறிக் கொண்ட பல்லாயிரக்கணக்கான வார்த்தைகளுக்கு இந்த வினோதமான உரையாடலே அடிக்கல் என்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.

அதை நினைத்து இப்போது சிரித்தால், இந்த விமான நிலையமே என்னை ஒரு தினுசாகப் பார்க்கும். ஏனோ தெரியவில்லை, பொது இடங்களில் சில ஜோக்குகளுக்கு ரொம்பவே சிரிப்பு வருகிறது. இதைப் பற்றியும் நாராவிடம் சொல்ல வேண்டும். கண்டிப்பாக நினைவு வைத்திருப்பான். இப்பவும் கண்களை இடுக்கிக் கொண்டு சிரிக்கிறானா என்று தெரியவில்லை. விமானத்தை இப்போது கிளப்பினால் இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எங்கோ ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கோடியில் இருக்கும் அவனை சந்திக்க இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. என் மேலதிகாரிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அதுவும் அவன் இருக்கும் ஊருக்கு அருகில் நிகழும் கூட்டத்துக்கு சரியாக ஒரு நாள் முன்பே போய்ச் சேருமாறு பயணத் திட்டம் அமைந்ததெல்லாம் ரொம்பவே அதிர்ஷ்டம்! அமெரிக்காவிற்கு புறப்படும் முன்பு பார்த்ததுதான் அவனை. சுந்தரையாவது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிரஞ்சனின் திருமணத்தில் பார்க்க முடிந்தது. இவன் அதற்கும் வரவில்லை. பத்து ஆண்டுகளாக இயந்திர தொடர்பு மட்டுந்தான்.

என்னவோ தோன்ற, போனை எடுத்து, “இங்கே பனி பெய்கிறது. விமானம் இன்னும் புறப்படவில்லை” என்ற குறுஞ்செய்தியை அவனுக்கு அனுப்பினேன். பனி விடாமல் பொழிந்து கொண்டிருந்தது. ஓர நாற்காலி பெரியவர் பூனையுடனான தன் பயணத்தில் பாதியை முடித்திருக்க வேண்டும். அவர் கைகளில் புத்தகத்தின் எடை சரி பாதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

பெரியவராவது பரவாயில்லை. பூனையுடன் தெரிந்தே தன் பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஆனால் நாங்களோ கிட்டத்தட்ட பாதி தூரம் கடந்த பிறகுதான் பூனையும் எங்களுடன் வருவதை உணரத் தொடங்கினோம். அறிமுகமான பின்னர் அதை அங்கேயே மறந்துவிட்டோம் என்றே எண்ணியிருந்தோம். ஆனால், அன்று இரவு மொட்டை மாடியில் படுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று நாரா பூனையைப் பற்றி பேசத் துவங்கியதும் தான் எங்களுக்கே அது புரிந்தது.

அதுவரை கிரிகெட்டையும், சினிமாவையும் பின் தொடர்ந்து சென்றுகொண்டிருந்த எங்கள் உரையாடல், “மாப்பி! ஷ்ரோடிங்கரோட கன்க்லுஷன் சரியில்லைடா. பூனை சூப்பர்பொசிஷன்லையும் இருக்காலம் தானே?” என்று தொடர்பே இல்லாமல் நாரா கேட்ட போது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போன்று திக்குத் தெரியாமல் தவித்தது. “எந்த பூனை?” – எனக்கும், சுந்தருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. “அதான் அன்னைக்கு கே.எஸ்.கே சொன்னாரே…” என்று நினைவூட்டினான். ‘அது எதுக்கு இப்போ?’ என்று நானும் கேட்கவில்லை. சுந்தரும் கேட்கவில்லை. அப்போது எங்களுக்கு பேச ஏதாவது வேண்டியிருந்தது. பூனையைப் பற்றி விவாதிப்பது சுவையாக இருந்தது. அதிலும் நாரா ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல தன் கருத்துக்களை அழகாகச் சொல்லி வந்தான்.

வழக்கம் போல் பாதி புரியவில்லை என்றாலும், அவன் வாதத்தின் சாரம் இதுதான் – ‘பூனை ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இறந்தும் போயிருக்கலாம், அல்லது உயிருடனும் இருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் பெட்டியைத் திறந்து பார்க்காத வரையில் அதன் நிலை என்னவென்று வெளியே இருப்பவர்களுக்குத் தெரியாது. அவர்களின் சிந்தனையில் பூனை உயிருடனும் இருக்கலாம், உயிரற்றும் இருக்கலாம். அது பெட்டிக்கு வெளியே இருப்பவர்களைப் பொருத்து, ஆளுக்கு ஆள் வேறுபடும். அப்படிப் பார்த்தால் பெட்டியைத் திறந்து சோதிக்கும் அந்த நொடி வரை, பூனை இரு நிலைகளிலும் சமமாகத் தானே வசிக்கிறது. இதைத்தான் க்வாண்டம் இயற்பியலும் சொல்கிறது’ என்றான். இதை கேட்டதும் சுந்தரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் சிரிப்பு என்னையும் தொற்றிக் கொண்டது. மாறி மாறி சிரித்தபடியே இருந்ததால் எப்போது தூங்கினோம் என்று ஞாபகமில்லை.

எங்களின் சிரிப்பு நாராவை காயப்படுத்தியிருக்க வேண்டும். அதற்குப் பின் வந்த நாட்களில், சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவன் தன் வாதத்தை நிரூபிக்க முயன்றான். முக்கியமாக, அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மறக்கமுடியாதவை.

அப்போது பங்களாதேஷில் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அன்றைய தினம் இந்தியாவை எதிர்த்து வெஸ்ட் இண்டீசோ, ஆஸ்திரேலியாவோ… சரியாக நினைவில்லை, இரண்டில் ஒரு அணி போட்டியிட்டது. ஜெயித்தால் தான் இந்தியா இறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலைமை. முந்தைய இரண்டு நாட்களாக அந்த போட்டியைப் பற்றி நானும் சுந்தரும் அலசாத அலசலில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக போட்டி நடந்த அன்று எங்களால் அதைப் பார்க்க முடியாமல் போனது.

அன்று சனிக்கிழமையே ஆனாலும், முடிக்க வேண்டிய பழைய சோதனைகளை முடிக்கமால் நகரக் கூடாது என்று அந்த நீள மூக்கு வாத்தியார் எங்களையும், இன்னும் சிலரையும் எலெக்டிரிகல் லேபிலேயே முழு நாளும் அடைத்து வைத்தார். அந்தக் கூட்டத்தில் நாரா இல்லை. அவன் எப்பவுமே இதையெல்லாம் நேரத்தோடு முடித்துவிடுவான். ரொம்ப சின்சியர்! நாங்கள் தான் அப்படி இப்படி இழுத்தடித்து விட்டு, கடைசி நேரத்தில் முட்டிக் கொள்வோம். பல முறை நாராவிடம் ரெகார்டைக் கொடு, அப்சர்வேஷனைக் காட்டு என்று தொங்க வேண்டியிருக்கும்.

சுந்தருக்கோ பொறுக்க முடியவில்லை. போவோர் வருவோரிடம் எல்லாம் ஸ்கோர் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனாலும் ஜெயித்தது யார் என்று தெரியவில்லை. திரும்பி வந்து நாராவிடம் விசாரித்த போது, “நீ தெரிஞ்சுக்கிற வரைக்கும் இந்தியா ஜெயிச்சும் இருக்கும், தோத்தும் இருக்கும். சூப்பர்பொசிஷன் யூ நோ!” என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னான். விளையாட்டாகத்தான்… ஆனால், அதற்கு சுந்தர் அப்படி ஒரு எதிர்வினையைத் தந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எதோ ஒரு வசவு வார்த்தையைச் சொல்லி, “உனக்கு ஸ்கோர் தெரிஞ்சா சொல்லு. இல்லை மூடிட்டு போ!” என்று தன் கையிலிருந்த தடித்த புத்தகத்தை மேஜையில் வீசினான். அதுவரை அவன் கோபித்துக் கொண்டு பார்த்ததே இல்லை. யார் மேல் இத்தனை கோபம் என்றும் புரியவுமில்லை. நாராவிடமா? இல்லை நீள மூக்கு வாத்தியாரிடமா? அன்று இந்தியா தோற்றுப்போய் விட்டது என்று பின்னர் தெரிந்து கொண்டோம்.

அதற்குப் பிறகு சில மாதங்களுக்குப் பூனையைப் பற்றியோ, சூப்பர்பொசிஷனைப் பற்றியோ யாரும் பேசவில்லை. கடைசி செமஸ்டரில் கேம்பஸ் இன்டெர்வியூவிற்காக பல கம்பெனிகளிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அன்றைக்கு மறுநாளும் பெங்களூரில் இருக்கும் ஒரு கம்பெனிக்கான தேர்வு இருந்தது. மதியத்திலிருந்தே சுந்தர் அதற்காகப் படிக்கத் தொடங்கிவிட்டான். எனக்கும், நாராவுக்கும் முன்னமே வேலை கிடைத்திருந்ததால் நாங்கள் செய்ய ஒன்றுமில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.

நாராவிடம் இசையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது பரம சுகமாக இருக்கும். அன்றைக்கும், ‘என்னுள்ளே என்னுள்ளே’வின் தொடக்கத்தில் வரும் கிதார் இசையைப் பற்றியும், அதன் நடுவில் வரும் வயலின் இசையைப் பற்றியும் சிலாகித்துப் பேசினான் நாரா. அதற்கும் ‘போறாளே பொன்னுத்தாயி’யின் நடுவே வரும் உற்சாக வயலின் இசைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கிக் கொண்டிருந்தான். நான்காண்டுகள் கூடப் பழகியும் என்னால் தான் அவற்றை எல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை. புரியாவிட்டாலும் அந்தப் பேச்சையே தொடர்ந்திருக்கலாம்!

ஆனால் அப்படி ஆகாமல், பேச்சு பூனையை நோக்கித் திரும்பியது. மறுபடியும் விளக்குகிறேன் பேர்வழி என்று, “இப்போ சுந்தர் நாளைக்கு இன்டெர்வியூ ரிசல்ட் தெரிஞ்சுக்கிற வரைக்கும், அவன் சூப்பர் பொசிஷன்ல தான் இருப்பான். அதாவது…” என்று என்னவோ பிதற்ற ஆரம்பித்தான். அதற்குள் சுந்தரின் முகம் மாறியது. “பசங்களா! கடியை போடாம கிளம்பறீங்களா? காத்து வரட்டும்” என்றான். தொடர்ந்து இன்னும் சிலவற்றை முணுமுணுத்தான். சரியாகக் கேட்கவில்லை. ஆனால், அவற்றை கூறுகையில் அவன் முகம் இறுகியிருந்தது. மெளனமாக இருவரும் வெளியே வந்தோம். அதற்குப் பின் அன்று இரவு எங்களோடு நிசப்தமும் தங்கிவிட்டது. சுந்தருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. பிறகு வேலை கிடைக்க ரொம்ப நாட்கள் ஆனது.

அன்று இரவு சுந்தர் என்ன முணுமுணுத்தான் என்று அப்புறம் கேட்கவில்லை. இன்று வரை தெரியாது. நிரஞ்சனின் திருமணத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால், அங்கே எனக்குக் கிடைத்தே அனுபவமே வேறு!

முன்பெல்லாம் தொட்டதுக்கெல்லாம் அரை பக்க வியாக்கியானம் பேசுபவன், இப்போது எதையும் ஐந்தாறு வார்த்தைக்குள் முடித்துக் கொள்கிறான். வளரும் தொழில்நுட்பத்தின் தாக்கமாகக் கூட இருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த ஒரு கிரிக்கெட் போட்டியை குறித்து கேட்ட போது, அப்படியா என்று கேட்டு என்னை உலுக்கிவிட்டான்! கிரிக்கெட் பார்ப்பதற்கு எல்லாம் நேரமில்லை என்றான். அதற்கு பிறகு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

நான்காண்டுகளில் என்னவெல்லாமோ பேசியிருக்கிறோம். தினமும் பேசுவதற்கு எதாவது ஒன்று இருக்கும். பேசப்பேசத் தீராமல் வந்துகொண்டே இருக்கும். இப்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் போது பேசுவதற்கு விஷயங்களைத் தேட வேண்டியிருக்கிறது… அன்று நான் ட்ராஃப்டரைத் தேடியதைப் போல! அந்த நீண்ட மௌனம் என்னை அதிகமாக சங்கடப் படுத்தியது.

அதெப்படி பேசுவதற்கு எங்களுக்குள் ஒன்றுமே இல்லாமல் போகும்? நேரில் சந்திக்காவிட்டாலும் இத்தனை நாட்களுமாய் தொடர்பில் தானே இருக்கிறோம்? எங்களுக்குள் இருந்த பொதுவான விஷயங்கள் எல்லாம் எங்கே, எப்போது தொலைந்து போயின? கிரிக்கெட் பார்க்காமல், சிரித்த முகத்தோடு அரட்டை அடிக்காமல், இப்படி அளந்து அளந்து பேசும் சுந்தராக இவன் எப்போது மாறினான்? எனக்குக் குழப்பமாக இருந்தது. அவனை சந்தித்துப் பேசும் அந்த நொடி வரை, அவன் பழைய சுந்தராகவே இருப்பான் என்று நினைத்தது முட்டாள்தனமோ? ஒருவேளை இது இயல்பாக மனிதர்களுக்குள் வரும் மாற்றமா? அப்படியென்றால், நானுமா மாறிவிட்டேன்? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே? ஒருவேளை இவனுக்குத் தெரிகிறதோ? கேட்டு விட ஆசையாய் இருந்தது. அதே நேரத்தில், எதுவோ என்னை நிறுத்தியது. நாற்பது சென்டிமீட்டர் தூரத்தில் இங்கே நிற்பவனை விட என் நினைவில் இருப்பவன் இன்னும் நெருக்கமாகப்பட்டான். ஒருவேளை இன்று இவனைப் பார்த்திருக்க விட்டால், அப்படியே என் நினைவில் பழைய சுந்தராக அதே நெருக்கத்துடன் இருந்திருப்பான் அல்லவா?

நாரா சொன்னது சரிதான் போலிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் நாங்கள் மாறியிருந்தாலும், எங்களுடைய விருப்பங்கள் மாறி இருந்தாலும், நாங்கள் சந்திக்காத வரை அவை மாறாதவை. அறிந்து கொள்ளாதவரை அவை சூப்பர்பொசிஷனில் இருக்கும்… பெட்டிக்குள் இருக்கும் பூனையைப் போல! அந்த கணம் எதுவோ என்னைத் தாக்கியது. ஒரு சமயம், நாராவும் மாறி இருந்தால்? கிதார் வாசிக்காத, இசையைப் பற்றி பேசாத, கண்களை இடுக்கிக் கொண்டு சிரிக்காத ஒரு நாராயணனாக அவனும் மாறியிருந்தால்?

இடுப்பிலிருந்த ஃபோன் சிணுங்கி என்னை மீண்டும் கேட்டுக்கு அழைத்து வந்தது. அவன் தான் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்- “பனி நின்றுவிட்டதா? விமானம் எப்போது புறப்படும் என்று தெரிந்ததா? இதனால் நாம் சந்திப்பதில் எதாவது மாற்றம் வருமா?” படித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த அறிவிப்பு வந்தது. பனி தீவிரம் அடைந்து புயலாக மாறி வருவதால் விமானம் ரத்து செய்யப் பட்டிருப்பதாகச் சொன்னார்கள். மாற்றுப் பயண ஏற்பாடுகளுக்கு தன்னை வந்து அணுகுமாறு முகப்பில் உள்ள பெண் அறிவித்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் கிடுகிடுவென எழுந்து சென்றார்கள். ஏறக்குறைய முக்கால் புத்தகத்தை படித்து முடித்திருந்த பெரியவர் சிரமப்பட்டு எழுந்தார். முகப்பை நோக்கிய நீண்ட வரிசயில் நானும் சேர்ந்து கொண்டு நாராவுக்கு பதில் அனுப்பத் தொடங்கினேன்- “பனிப் புயலாக மாறியதால் விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது. மாற்றுப் பயணத்துக்காண வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன். என்ன ஆகும் என்று தெரியவில்லை. நாம் பெட்டிகளைத் திறக்க வேண்டாம். நம்முடைய பூனைகள் சூப்பர்பொசிஷனிலேயே இருக்கட்டும்”.

(முற்றும்)

புகைப்பட உதவி : http://www.cat-toys.com.au/cat-art-prints-posters/cute-nosy-cat-drawing-close-up-curiousity-joshua-hullender