வாசகர் எதிர்வினை

செல்வராஜ் ஜெகதீசன் – கவிதைகளின் நேரடித்தன்மை
வா.மணிகண்டன் | இதழ் 39 | 30-11-2010 |

“இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.”

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! சில துயரங்கள் என்ன செய்தாலும் நம்மை அவ்வளவு சுலபமாக கடந்து போவதில்லை என்பது மிக நிதர்சனம். ‘Time will heal’ என்பது சில இடங்களில் பொய்த்து விடுகிறது. ‘அதுவாய் கடந்து போனதில்லை’ என்று கூற கற்பனை போதாது. ஆழ்ந்த அனுபவமோ அல்லது தீர்கமான சிந்தனையோ வேண்டும். அதுவாக கடந்து போகாததால் அதை கடத்த மனிதன் எவ்வளவு பாடு பட வேண்டும் என்ற ஆதங்கமும் இந்த வரியில் சுமையாக தெரிகிறது. இந்த வரிகளுக்கு அப்புறம் ஒரு பெருமூச்சோ அல்லது ஒரு சொட்டு கண்ணீரோ எனக்கு தெரிகிறது.

அன்புடன்
ராஜன்

அன்பு சொல்வனம் ஆசிரியருக்கு,

வணக்கம். மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தில் குறிப்பிட்டிருந்த பரிந்துரையின் கீழ் தங்களது தளத்தைப் பார்வையிட்டேன். மிக நேர்த்தியாகவும் எந்தவித ஆர்ப்பாட்டங்களுமின்றிவடிவமைக்கப்பட்டிருந்தது. அதைக் காட்டிலும் உள்ளடக்கமும் எழுத்துக்களும் உயரிய தரத்தில் இருந்தது குறித்து மகிழ்ச்சி.

அனிமேஷன் திரைப்படம் எனும் தொடரை எழுதிவரும் ரவிநடராஜன் அவர்களுக்கு என் சிறப்பு வந்தனங்கள். மிக நேர்த்தியான எழுத்து. வெகு அழகாக தமிழில் எளிதாகப் புரியும்படியான தொழில்நுட்ப வார்த்தைகளோடு பயணிக்கும் அவரது கட்டுரைகளைப் படித்து தமிழில் இதுபோன்று எழுதியிருக்கிறார்களா என்று வெகுநாட்களாகக் கேட்டுக்கொண்ட கேள்விக்கு விடையாக அறிந்து கொண்டேன். அவருக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். மேலும் இதுபோன்று பல கட்டுரைகளையும் வெகுவாக எதிர்பார்க்கிறேன்.

இதுவரை கண்ட தளங்களிலேயே இத்தளம் மாறுபட்டும் வித்தியாசமாகவும் தரமாகவும் இருக்கிறது… இன்னும் மற்ற இடங்களிலெல்லாம் சுற்றவில்லை. நேரம் போதவில்லை. கிடைக்கும் சமயங்களில் சொல்வனத்தின் ஒவ்வொரு செடிகளுக்கிடையே ஊர்ந்துவருவேன்.

அன்புடன்
ஆதவா.