புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’

மேலோட்டமான பார்வையில் நம் நினைவுகள் நிகழ்வுகளின் அச்சுப் பிரதி போல் தோற்றம் தந்தாலும், பிரதிகளுக்குரிய குறைதல், மிகுதல், திரிதல் போன்ற இயல்புகள் நினைவுக்கும் உண்டு. நிகழ்வை அசலாகப் பிரதிபலிக்கும் இயல்பு நினைவுக்குக் கிடையாது. நிகழ்வுகள் நிஜமெனக் காட்சி பெறும் மெய்த்தோற்றம், மனம் தன் நினைவுத் தொடரைத் தப்பிய, தன் மைய நிலைப்பை இழந்த தருணங்களில்தான் நிகழ்கிறது. நிலைப்பு என்பது என்ன என்பதொரு தத்துவ/ உளவியல் விசாரம். அதை விடுவோம். இங்கு உளப்பாங்கு எப்படி இயங்குகிறதென்பதைப் பார்ப்போம்.

பொதுவாகச் சொன்னால், நிகழ்வு தொடங்கி நினைவு வரையுள்ள இடைவெளி ஆதாரங்களாலோ தகவல்களாலோ இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு விரிந்திருக்கிறது. இது பிழைவான நினைவுகளால் மட்டும் உருவான ஒன்றாகத் தோன்றவில்லை- தவறான தகவல்களையும் குற்றம் சொல்வதற்கில்லை. நமக்குப் புலனாகும் உலகை நாம் அறியும் தரத்தில் நுழைந்த திரிபின் பாற்பட்டதே இப்பிளவு. நமது அனுபவத்தை விசாரம் செய்து, அதன் மூலம் இது குறித்துத் தெளிதலை விட, ஒரு புனைவை விசாரிக்கையில் நிகழ்வு மற்றும் நினைவுகளின் இயல்பை நாம் இன்னும் எளிதாக அறிய முடியலாம்.

புதுமைப்பித்தனின் சிறுகதை ‘காஞ்சனை’ இத்தகைய விசாரணைக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது. சிறுகதை என்பது சொற்களால் எழுதப்பட்டிருந்தாலும், அது சுட்டும் விஷயங்கள் நாம் நம் மனதைக் கொண்டு அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. சொற்களுக்கு வாசகனின் துணையின்றி எதையும் குறிக்கக்கூடிய சாத்தியமில்லை- அந்த சொற்களை எழுதிய ஆசிரியனும் கூட இந்த விஷயத்தில் அசக்தன்தான். இதை இந்தக் கதையில் புதுமைப்பித்தன் மிக நுட்பமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பொதுவாகவே தன்மை ஒருமையில் எழுதப்படுகிற கதைகளின் கதைசொல்லி நம்பத்தகுந்தவனல்ல- இதை மனதில் கொண்டுதான் இந்தக் கதையையும் படிக்க வேண்டும். அதே போல், கதை சுட்டிக் காட்டும் விஷயங்களை நிகழ்வுகள் என்றும், அது சொல்லப்பட்டிருக்கும் மொழிபு நினைவு சார்ந்த நீட்சி என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

-o00o-

புதுமைப்பித்தன், இக்கதையின் துவக்கத்திலேயே தன் இயல்பை நிறுவி விடுகிறார்- எழுத்தாளனாகிய தானும் ஒரு உலகை இயற்றுபவன் என்றும், தான் இரண்டாவது பிரம்மாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும்.

இந்த நிலைப்பாடு நம்மில் பெரும்பாலோர் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான் என்றாலும், புதுமைப்பித்தன் தன் படைப்பின் தன்மையில் சந்தேகம் எழுப்புவது போல், பிரமனால் இயற்றப்பட்ட உலகின் மெய்ம்மையையும் சந்தேகத்துக்குட்படுத்துகிறார். இது நிகழ்வு குறித்து என்று நினைப்போம், ஆனால் இது நினைவின் நீட்சியாகிய மொழிபு குறித்துதான் என்பது சற்றே உற்று நோக்கினால்தான் விளங்கும்- “நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நானுமே பொய்யா?” என்ற கேள்வியில் எழுகிற பொய் மெய் என்ற இருமை, மொழியேதும் இல்லாத இடத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

உலகின் தோற்றம் குறித்து ஒரு கருத்து இருக்கிறது- அதன் மெய்யான இயல்பு மறைக்கப்பட்டு ஒரு திரிக்கப்பட்ட தோற்றம் பிரதிமைப்படுத்தப்படுகிறது என்று. இந்தக் கருத்து பல பண்பாடுகளிலும், பல தத்துவ/மத விசாரங்களிலும் காணப்படுவதால் இஃது மானுடருக்குப் பன்னெடுங்காலமாக ஏற்படும் பெரும் ஐயம் என்றோ, மன உளைச்சல் என்றோ, அச்சம் என்றோ நாம் கருத இடமுண்டு. ஐயம் என்பது அறிவுத் தளத்திலும், உளைச்சல் என்பது மனவிகாரத்திலும், அச்சம் என்பது மிருக சஞ்சாரத்திலும் எழுவதாக, அவ்வத் தளங்களில் தொடர்புள்ளதாக நாம் கருதலாம். இப்படியொரு தோற்றம் உருவாவதற்கான காரணங்களில் மோகம் என்பது முக்கியமான ஒன்றாகவும் சொல்லப்படுகிறது, மோகமே முப்பால்களிலும் உலவும் இடையூறு. அறமாகட்டும் பொருளாகட்டும், காமமாகட்டும். நிதானத்துக்கும், நிலைப்புக்கும், ஏன் உண்மைக்குமே மோகம் ஒரு அச்சுறுத்தல் அல்லது தடையெனவே பார்க்கப்பட்டிருக்கிறது.

‘காஞ்சனை’யில் புதுமைப்பித்தன் இந்த இயக்கத்தை மொழிபு வாயிலாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

-o00o-

இந்தக் கதையில் மெய்யியல்பு மறைக்கப்பட்டு திரிக்கப்பட்ட தோற்றம் உருவாவதை, புதுமைப்பித்தன் துவக்கத்திலேயே சுட்டிக் காட்டுகிறார்-

“சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி ‘டொடக்’ என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை.”

ரதத்தில் துவங்கி மயிலைக் காளை வண்டிக்குப் புதுமைப் பித்தன் சேர்ந்தது ஏதோ அகஸ்மாத்தான நிகழ்வாகத் தோன்றவில்லை. இறக்கை கட்டியோ, புஷ்பகமாகவோ பறக்கும் மனோரதம் என்பது என்ன அற்புதமாகத் தெரிந்தாலும், வாழ்வைக் கடக்க மனிதர் செல்வது பெருநேரமும் இரு தடப் பாதையில் முதுகெலும்பு நொறுங்கிடும் மாட்டுவண்டிப் பயணமாகவே புதுமைப் பித்தனுக்குத் தெரிகிறதோ என்னவோ. இந்த காற்றுவேகத்தை மிஞ்சும் ரதத்துக்கும், தடங்கிடும் மாட்டு வண்டிக்கும் இடையே இழுபறியில் இந்தக் கதை சொல்லப்படுவதை முதல் கட்டத்தில் சொல்வது புதுமைப்பித்தன் திட்டமுடன் தான் இங்கு இறங்கியிருக்கிறார் என்று தெரிவிக்கிறது.

இந்தக் கதையில் நிகழ்வின் தொடுவான் தாண்டி நினைவின் தொடுவான் நிலைபெற்று, அதிலிருந்து மீள்தல் நிகழ்கிறது. அன்றாட வாழ்க்கையின் தினசரி நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு, அமானுடம் காஞ்சனை வடிவில் கதையின் களத்தில் நிலை கொள்கிறது- அதிலிருந்து மீட்சியும் கிடைக்கிறது. இந்தத் தடம் பிறழ்தல் ஏன் நிகழ்கிறது என்பதை விசாரித்தால் மோகம் என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

காஞ்சனையின் சுயரூபத்தைக் கதைசொல்லி தரிசிக்கும் இடம் குறிப்பிடத்தக்கது-

“திடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.”

இங்கும் எப்படி மெய்ம்மையைத் திரித்து விவரிக்கிறார் புதுமைப்பித்தன் என்பது வியப்பாக இருக்கிறது. திரைப்பட மொழியின் உத்தியைக் கையாண்டு (dissolve) மிக அழகாக இந்தக் காட்சியை விவரித்திருக்கிறார்- காஞ்சனையின் கோர வடிவையும் தாண்டி கதை சொல்லிக்கு அவளது முகத்தில் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி தெரிகிறது. காஞ்சனையின் குரூபம் பார்வையைப் பறிக்கும் கண்களில் இருக்கிறது, ஆவியை உட்கொள்ளும் பற்களில் இருக்கிறது. அவ்வளவே. இந்த தனி அவயங்களைத் தாண்டிய முகத்தின் மொத்த தோற்றத்தைக் காண்கையில் கதை சொல்லிக்கு மோக லாகிரி எழும்புகிறது- காஞ்சனையின் முகத்தில் அற்புதமான அமைதி பொலிகிறது. பின்னர் அவளது தோற்றம்- ‘பிம்பம்’ என்கிறார் புதுமைப்பித்தன்- மங்கி அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள் முன்னிலை பெறுகின்றன. கதை சொல்லி அதைத் தன் வசமிழந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கண்ணாடி என்பது பிரதிபலிப்புக்குக் குறியீடு, நெருப்பு என்பது வழக்கமாக மோகத்தின் குறியீடு. இந்தக் கதையில் காஞ்சனை மோகத்தின் திருவுருவாக வந்திருக்கிறாள், அவள் கதை சொல்லியின் ஆசைகளை பிரதிமைப்படுத்துகிறாள். இது கதையின் நிகழ்வு குறித்த ஒரு வகை மொழிபென்றால், இந்த நெருப்பு அடுப்பின் நெருப்பு- கட்டுங்கடங்காத ஒன்றல்ல, பயன்பாட்டுக்குரியது என்பதை நினைவில் கொண்டால், இந்த அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள் கண நேரம் கண்ணாடியில் தோன்றி மறைந்து பிச்சைக்காரி- காஞ்சனை அல்ல, பிச்சைக்காரிதான்- தோற்றம் பெறுவது மோக லாகிரிக்கும் அதன் அற்பத்தனத்துக்கும் இடையுள்ள போராட்டத்தை சுட்டிக் காட்டுகிறது என்று கொள்ளலாம். இதில் கதை குறித்த எவ்வகை மொழிபு சரியாக இருந்தாலும், காஞ்சனையின் அமானுடம் மோகத்தின் அமானுடம், அவள் குறித்த அச்சங்கள் மோகத்திடம் தன் வசமிழப்பது குறித்த அச்சங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இதை உளச்சிக்கல்கள் குறித்த தேர்ந்த ஞானத்தோடு புதுமைப்பித்தன் குறிப்பாக ஓரிடத்தில் தொட்டுக் காட்டுகிறார்.

நள்ளிரவில் ஏதோ ஒரு உந்துதலில் கதைசொல்லி காஞ்சனை படுத்திருக்கிற அறைக்குப் போகிறார். அப்போது என்ன நிகழ்கிறது என்று விவரிக்கிறார் புதுமைப்பித்தன்- இந்த இடத்தில் மொழியை லாவகமாகப் பயன்படுத்தி விஷயங்களை மறைத்து நிகழ்வு குறித்த போலி நினைவுகளை விதைக்கிறார்-

”அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, “என்ன, தூக்கம் வரவில்லையா?” என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.

அப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.

நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.”

சாம்பிராணி வாசம் வந்ததும் என்ன நடந்தது என்ற கேள்வியைத் தாண்டி, “நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.” என்று வாசகனைக் கடத்திக் கொண்டுபோய் விடுகிறார் புதுமைப்பித்தன். ஆனால் முக்கியமான ஏதோ ஒன்று நடந்திருக்கிறது- அதை மறைக்கும் வகையில் ஒரு சன்னமான திரை போல், ஒற்றை வரியில், ஒரு சிறு பத்தி-

“என்ன, வரவரத்தான், இப்படித் தூங்கித் தொலைக்கிறீக; காப்பி ஆறுது!” என்று என் மனைவி எழுப்பினாள்.”

அதைத் தொடர்ந்து, உண்மை மறைக்கப்பட்டு திரிவுற்ற வடிவில் வெளிவருகிறது-

“இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?

தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா?…”

சோரம் போவது யார் என்ற கேள்வி எழுவது நியாயம்தானே? கதை சொல்லியின் பயம் எது குறித்து? அமானுடத்தின் எத்தகைய தாக்குதல் குறித்து?

கதையின் நிகழ்வின் இந்த மொழிபை இன்னும் நுட்பமாகப் பார்க்கும் சாத்தியம் இருக்கிறது. காஞ்சனை தோற்றம் பெறப்போவதை அறிவிக்கும் நிகழ்வை இப்படி எழுதுகிறார் புதுமைப்பித்தன்-

”மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு நிமிஷம் ஆயிற்று.

என்ன அதிசயம்! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப் பக்கத்தில் ஏற்றி வைப்பது.

“உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை தெரியுதா?” என்று கேட்டேன்.

“ஒண்ணும் இல்லியே” என்றாள்.

சற்று நேரம் மோந்து பார்த்துவிட்டு, “ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது; எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள்” என்றாள். “

தன்னை நள்ளிரவு வேளையில் தேடி வரும் கதைசொல்லி தான் நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, “என்ன, தூக்கம் வரவில்லையா?” என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறுகிறார்- அப்போது வருவது சாம்பிராணி வாசனை. இந்த கட்டத்தில் கதைசொல்லி தன் மோகத்தை முகத்தோடு முகம் பார்த்து அதன் ஈர்ப்பிலிருந்து மீண்டு விட்டார் என்று சொல்லலாம்- காரணம், அவர் மாடிப்படிகளில் கீழிறங்காமல் ’ஏறும்போது’,அந்த இடத்தில் மோகத்தின் உந்துதல் அடங்கி விடுகிறது என்று சொல்லலாம். இருந்தாலும் இந்த மோகத்தின் விளைவுகள் குறித்த அச்சம் நீங்குவதில்லை.

இப்போது எழுத்தாளர் தன் மனைவி சோரம் போகிறாள் என்பதை எந்த பொருளில் சொல்கிறார் என்று புரிகிறது, அவள் தீதறியா பேதையாக இருக்கிறாள்: தன் கணவனுக்குத் துல்லியமாகப் பிணத்தை நினைவுபடுத்தும் மட்டமான ஊதுபத்தியின் வாசனை அவளுக்கு “”ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது;” என்று சொல்லுகிற அளவுக்கு பொருட்படுத்தத்தக்கதாய் இல்லாமல் போய் விட்டது. அப்படிப்பட்டவளுக்குக் காஞ்சனை வீட்டில் இருப்பதால் தான் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து எதுவும் தெரியவில்லை. ஒரு வகையில் அவளது இந்த களங்கமில்லா குணம் எழுத்தாளனது மோகம் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்லாத அரணாக இயங்குகிறது- அவனது சுயமேம்பாட்டை அவள் அவசியமாக்குகிறாள்.

இந்த மோகத்தின் துவக்கங்கள் கதைசொல்லியின் மனைவியின் மூன்று மாத கர்ப்ப நிலையாக இருக்கலாம், வேறு எதுவாகவும் இருக்கலாம். ஆனால் காஞ்சனையின் வருகையின் நோக்கம் மோக தகனம் என்பதைக் குறிக்கும் வகையில் கதையின் துவக்கத்திலேயே ஒரு சிறு கணு பதிக்கப்பட்டிருக்கிறது- கதையின் அமானுட நிகழ்வுகள், கதை சொல்லி புகையிலை போட்டுக் கொண்ட பின் வருகின்றன- புகையிலை கூட ஒரு லாகிரி வஸ்துவே என்பதை பொருட்படுத்தாவிட்டாலும்கூட, காஞ்சனையின் வருகை ஒரு சுத்திகரிப்பை நிகழ்த்துகிறது என்பதை புதுமைப்பித்தன் மிக்க நுட்பமாக விவரிக்கிறார்- “உள்ளங்கையில் கொட்டி வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்,” என்ற மொழிபின் வாயிலாக.

பவித்திரம் போட்டுக் கொள்ளுதல் ஒருவனுக்கு கர்ம காரியங்களை செய்வதற்குறிய தகுதிகளைத் தருகிறது. புகையிலையைக் கதை சொல்லி பவித்திரமாகப் போட்டுக் கொண்ட அடுத்த கணமே நாற்றம் எழுகிறது- காஞ்சனையின் வருகைக்குத் தடம் இடப்படுகிறது. மோக ரூபிணியான காஞ்சனை கதை சொல்லியின் மோகத்தின் இயல்பைக் காட்டி அவனது அறிவுபூர்வமான தன்னியல்பு குறித்த நினைப்புகளை உடைத்தபின், ஒரு வழியாக சுத்திகரிப்பு நிகழ்கிறது- சேமக்காரன் விபூதி தருவதுடன். அந்த விபூதியும் வாங்கும்போது சுடுகிறது- எல்லாம் எரிந்தபின் அழியாதிருப்பதே விபூதி, அது மோட்சத்துடன் இணைத்து வைக்கும் ஒன்று. மோட்சம் என்பது இயல்பு என்று கொண்டால், இந்தக் கதையில் கதை சொல்லி அவனது இயல்பான துணையாகிய மனைவியைச் சேர்கிறான், அவள் நெற்றியில் விபூதியை இட்டு.

காஞ்சனை மறைந்து மூன்று நாட்கள் கழிந்த பின் காலை வேளையில் காப்பி கொடுக்கும் மனைவி, “இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!” என்கிறாள் தன் கணவனிடம். இதற்கு என்ன பதில் சொல்ல என்று நம்மைக் கேட்கிறார் கதை சொல்லி. இருவருக்கும் இடையில் அன்றைக்கு என்ன நடந்ததோ?- அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

-o00o-

இந்தக் கதையை ப்ராய்டிய வாசிப்புக்கு உட்படுத்தி இருக்கலாம்- ஆழ்நிலை நனவிலி மனதின் மோகம், அதன் வெளிப்பாடான பிசாசு என்று. அத்தகைய வாசிப்புக்கான வசதிகள் இந்தக் கதையில் நிறைய இடங்களில் இருக்கின்றன என்றே நானும் நினைக்கிறேன். ஆனால் அது புதுமைப்பித்தனின் நினைவுக்கு நாம் இழைக்கிற அநீதியாக இருக்கும், அது தவிர அத்தகைய வாசிப்பு காஞ்சனையின் முழுமையான வாசிப்புக்கு துணை போவதாகவும் இருக்காது. புதுமைப்பித்தன் நம் தத்துவத்தின் கூறுகளை அறிந்தவராகவும், அது குறித்த விசாரத்தில் ஆர்வமுடையவராகவும் இருந்தார் என்பது இது தவிர இன்னம் பிற கதைகளிலும் தெரிகிறது.

நாம் சமகாலத்தில் மெய்யென ஏற்றுக்கொண்டிருக்கிற உள இயல்பு குறித்த பார்வையில் காமத்தைக் கடத்தல் அதை வெளிப்படுத்துவதன் வாயிலாக மட்டுமே நிகழ்கிறது. ஆனால் அது எப்போதும் இவ்வாறு நினைக்கப்பட்ட ஒன்றல்ல. சொல்லப்போனால் கடந்த நூற்றாண்டுக்கு முன் இப்படிப்பட்ட ஒரு கருத்தை முன்வைப்பதே நகைப்புக்குரியதாக இருந்திருக்கும். காமத்தின் இயல்பு, மோகத்தின் லாகிரியில் ஏற்படக்கூடிய மனப்பிறழ்வு, அதன் தன்மையைப் பூரணமாக, அதன் தாக்கத்தை முழுமையாக உணர்ந்து தரிசிப்பதே அதைக் கடந்து செல்வதற்குரிய வழியாக அறியப்பட்டிருந்த மரபு காலம்தோறும் இருந்து வந்திருக்கிறது.

நிகழ்வின் தொடுவானை எப்போதும் தொடமுடியாத தூரத்தில் இல்லை நினைவின் தொடுவானம் – மனம் ஸ்தம்பித்த நிலையில், நினைவு நிகழ்வைத் தொடுவதோடல்லாமல், நினைவுமே ஒரு நிகழ்வாகிறது, மாற்றத்தை நிகழ்த்துகிறது. முரண்கள் நேருக்கு நேர் சந்திக்கும் இந்த இடத்தில்தான் கதவு திறக்கிறது- நினைவு நிகழ்வாய் மாறும் வாயிலாய், பிரதி மொழிபாய் உயிர் பெரும் தருணமாய், புனைவு இயல்பின் ஒளி பெறுகிறது. புதுமைப்பித்தன் தன் காஞ்சனையை, பிரம்மனின் படைப்புக்கு எவ்விதத்திலும் குறையாத நுட்பத்துடன், அதன் இருள், மருள், மற்றும் ஒளியைத் தன்னுள் கொண்ட, எக்கேள்விக்கும் பதில் கேள்வியை விடையாய்த் தரும் உண்மையின் மெய்ம்மை கொண்டதாய் படைத்திருக்கிறார்.

புதுமைப்பித்தனின் இந்த அற்புதமான கதையை நம் மரபையும், அதன் தத்துவங்களையும் ஒட்டிய வாசிப்புக்கு உட்படுத்துவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது எழுத்து மேலை விமரிசன கோட்பாடுகளுக்கு உட்படுத்தப்படும்போது ஒரு வகையான திணிப்பு போன்ற உணர்வு எழுகிறது. ஆனால் நம் தத்துவங்களை ஒட்டி இந்தக் கதையை வாசிக்கும்போது இயல்பாகவே கதை அத்தகைய விசாரணைக்குத் தன்னை நெகிழ்த்தித் தருகிறது.

இங்கு எழுதப்பட்டிருப்பது ஒரு சிறிய துவக்கமே. ’காஞ்சனை’ கதைசொல்லியின் மோகத்துக்கும் அதன் மீட்சிக்கும் மட்டும் ஒரு கதவு திறப்பாக இல்லாமல், புதுமைப்பித்தனின் எழுத்து குறித்த ஒரு புதிய, இன்னும் செழுமையான மொழிபுக்கும் கதவு திறப்பாக இருப்பாள் என்று எதிர்பார்க்கிறேன். அதன் நீட்சியாக தமிழ் இலக்கிய படைப்புலகின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு ஒரு புத்துயிர்ப்பும் ஆக்கங்களில் வளமையும் கிடைக்கக் கூடும்.

இது குறித்து எழுதுவதானால் எவ்வளவோ எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட விவரங்களாக நாம் சொல்லக் கூடிய ஒவ்வொன்றும் மறுப்புகளுக்கு வாய்ப்பு தரக் கூடியவை.

பொதுவாக, நிகழ்வு= கதை, நினைவு /சிந்தனை= மொழிபு எனக் கொள்வோம். கதையோ மொழிபு வழியாகத்தான் இயங்க வேண்டும், ஆனால் அது திரிபைத் தன் இயல்பாகக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சமும் ஒரு மொழிபு வழியாகத்தான் உணரப்படுகிறது, ஆனால் மொழிபின் குணமாகவே உள்ள திரிபு காரணமாக (ஆவரண விக்ஷேப சக்திகள்) நிகழ்வின் வட்டத்தை ஒட்டி இயங்கினாலும் அதைத் தொட வழியில்லாமல் இருக்கிறது நினைவின் வட்டம்: காஞ்சனையை எவ்வளவுதான் பிரித்துப் படித்தாலும் மொழிபின் வழியாகப் புலப்படுகிற நிகழ்வு, அங்கே என்ன நடந்தது என்ற விபரம், நமக்குத் தெரிய வர வாய்ப்பில்லை.

அப்படி ஒரு வாசகன் அதைத் தெரிந்து கொள்கிறான் என்றால் அது கதையின் இயல்பு குறித்த தன்னளவில் நிறைவு கொண்ட ஒரு தனிப்பட்ட தரிசனமாகத்தான் இருக்க முடியும். கதை சொல்லியின் தன்மை ஒருமை விவரணை மூலம் புதுமைப் பித்தன் நமக்கு விளக்குவதை விட, விலக்கியது அதிகம் என்று கோடி காட்டுகிறார். கதை சொல்லி நம்மிடம் ஏன் இதையெல்லாம் சொல்ல விழைய வேண்டும், உண்மையை, முழுக்கதையைச் சொல்லத் தயாராக இல்லை என்றால் என ஒரு கேள்வி எழலாம். படைப்பாளி எவரும் தன்னையோ, தன் கருத்தையோ, படைப்பில் முழுதுமாக வெளிப்படுத்துவதில்லை எனவே கருத இடம் இருக்கிறது. முடிவதில்லை என்பதை விட, முயல்வதில்லை என்பதும் கூடுதலான காரணமாய் இருக்கலாம். தன்னைக் கொட்டிக் கரைத்துக் கொடுத்து விட ஒருவரால் முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், அது கலையாகுமா என்பது கேள்விக்குரியது. கலை உண்மையைச் சித்திரிக்க முயலலாம், ஆனால் உண்மையாகவே ஆகாது. எந்தச் சித்திரிப்புமே உண்மையாக முடியாது. பிரதிகளின் உலாவை நாம் இன்று எதார்த்தம் என்று எடுத்துக் கொள்கிறோம். ஏனெனில் பிரதிகளின் தன்னிலை சார்ந்த தொகுப்பில் நாம் எது அர்த்தம் என்று புரிந்து கொள்ளும் திறன் நம்மிடம் உண்டு. அதை என்ன அளவுக்குத் தீட்டி, கூர் பார்த்து, பயன்படுத்த முயல்கிறோமோ அந்த அளவுக்கு நமக்குக் கிளர்ச்சியோடு தரிசனமும் கிட்டும். எந்த அளவுக்கு நாம் முயற்சி அற்று வெற்றுத் திளைப்பில் கிடக்க விரும்புகிறோமோ அந்த அளவுக்குக் கிளர்ச்சி மட்டும் கூடி, தரிசனம் மட்டுப்பட்டே நிகழும். தரிசனம் இல்லாது உண்மைக்கு அருகில் நம்மால் நகர முடியும் என்று தோன்றவில்லை.

படைப்பாளியின் தன்மை ஒருமையில் மனிதரின் பொதுமையைக் காண்பதும் ஒரு வகை தரிசன முயற்சியே. அது சாத்தியமாவது படைப்பாளி எந்த அளவு ஒளிப்பதையே, ஜாலத்தையே, தொழில் நுட்பத்தையே முனைப்பாகக் கொண்டு இயங்கினார், எந்த அளவு நிகழ்வின் நினைவிலிருந்து நிகழ்வின் தன்மையை, குறைந்தது அதன் சாரத்தை நம் முயற்சி ஊடுருவக் கூடிய ஒன்றாகப் படைக்கிறார் என்பதை எல்லாம் பொறுத்தது. முதல் வகை முயற்சிகள் கூடக் கூட பின்னதான வகை முயற்சி அவருக்கு சாத்தியப் படாமல் போகும் என்று தோன்றுகிறது.

புதுமைப்பித்தன் கதையின் துவக்கத்தில் தான் ஒரு பிரம்மா என்று துவங்கினாரல்லவா, அவர் தன் கதையை உலகியற்றிவன் ஆக்கிய படைப்பை ஒட்டி, மோகம், மறைப்பு, திரிப்பு, அதனின்று விடுதலை என்று தானும் செய்திருக்கிறார். இதில் தனிச்சிறப்பு என்னவென்றால் எப்படி உலகின் தன்மை மொழிபின் மூலம் அறிவதற்கில்லாததாக, மொழியின் மூலம் விவரிக்கப்பட முடியாததாக இருக்கிறதோ, அதே போலவே கதையின் நிகழ்வும் கதையை ஒட்டி விடை கண்டு வெளியே சொல்ல முடியாததாக இருக்கிறது. பிரும்ம சிருஷ்டி போலவே இங்கும் மனிதம் தொடர்ந்து நம் முன் வைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது, அதை அறியும் முயற்சிதான் நம்மிடம் கூடுதலாக வேண்டும்.

இந்தக் கருத்தை முன் வைத்தால், காஞ்சனையை எப்படி பொருள் செய்து கொள்கிறோம் என்பது குறித்த சந்தேகங்களைவிட, காஞ்சனை என்ற கதை பிரம்மனின் படைப்பின் பிரதியாக இருக்கிறது என்ற கருத்தைப் பேசலாம். காரணம்,

”இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம்…”

என்பதுதானே புதுமைப் பித்தனின் துவக்கத் திரியே?

நான் எழுதியது அனைத்தும் தவறாக இருக்கக்கூடும் என்றாலும்கூட, துவக்கம் என்ற அளவில் இத்தகைய விமரிசனப் பார்வையை விவாதிப்பதற்கான கதவு திறந்தாலே இந்தக் கட்டுரையை எழுதியதன் நோக்கம் வெற்றி பெற்றதாகக் கருதலாம் என்ற கருத்தையும் முன் வைக்கிறேன்.

(காஞ்சனை சிறுகதையை இங்கே படிக்கலாம்).