துயில், தோள்சீலைக்கலகம் – புத்தக வெளியீடுகள்

01. துயில்

எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல் துயில் ஜனவரி 1 2011 அன்று (1.1.11) மாலை 5,.30 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட உள்ளது, 600 பக்கங்களுக்கும் அதிகமான இந்த நாவல் தமிழ்புனைகதைப் பரப்பில் ஒரு முக்கிய முயற்சி. அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்

••

துயில் நாவல் குறித்து எஸ், ராமகிருஷ்ணன் எழுதியுள்ள ஒரு சிறிய குறிப்பு

“நோய் ஒரு ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்றுத் தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது. நோய்மையுறுதல் என்பது உண்மையில் உடலை அறிந்து கொள்வதற்கான ஒரு விசாரணை.

உடல் ஒரு பிரபஞ்சம். நாம் ஒரு போதும் கண்ணால் காணமுடியாத பேராறு போல நமக்குள் ஒடுகிறது ரத்தஒட்டம். உடலினுள் மிகுந்த பேரொழுங்குடன் எண்ணிக்கையற்ற புதிர்கள், நுட்பங்கள், அடங்கியிருக்கின்றன. உடலை அறிவது தான் மனிதனின் முதல் தேடல். அதை நோய்மை நினைவுபடுத்துகிறது.

கடவுளின் இருப்பு குறித்த நம்பிக்கைகள் யாவும் மனிதன் நோய்மையடைவதால் மட்டுமே காப்பாற்றபட்டுவருகிறது. ஒவ்வொரு நோயிற்கும் நூற்றாண்டுகால நினைவுகளிருக்கிறது.

வலியின் முன்னே மனிதன் தனது சகல அடையாளங்களையும் இழந்துவிடுகிறான், வலியைச் சந்திப்பது எளிதானதில்லை, அதை மனிதர்கள் தாங்கிக் கொள்ள உடல் உறுதியை விட ஆறுதலான. அன்பான சொற்களே அதிகம் பயன்படுகின்றன,

மருத்துவத்தின் வரலாறு இன்று வரை நாம் முறையாக தொகுக்கப்படாதது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.

நமது கலாச்சாரம் காலம் காலமாக உருவாக்கி வைத்துள்ள நமது உடல் குறித்த அறியாமை,பயம்,புனிதம்,அவநம்பிக்கை என அத்தனையும் குறித்து புனைவின் வழியாக மறுபரிசீலனை செய்வதே இந்த நாவலின் தனித்துவம்.”

02. தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்

தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் முதல் வெளியீடு
எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன்
இணைந்து எழுதியுள்ள ஆய்வு நூல்
தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்
ISBN: 978-81-910023-0-0
பக்கங்கள்: 192
விலை: ரூ. 100/-

bookcover

“தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும்.

தோள்சீலைக் கலகம் (Upper Cloth Revolt) என்று வழங்கப்படுகின்ற இப்பொருள் குறித்து எழுதியுள்ள ஆய்வாளர்களுள் பெரும்பாலானோர் – அனைவருமே என்றுகூடச் சொல்லலாம் – சாணார் சமூகத்துப் பெண்டிர் இடுப்புக்குமேல் உடையுடுத்துவதற்கு அனுமதிக்கப்படாதிருந்தனர் என்றும், லண்டன் மிஷனரி சொஸைட்டியைச் சேர்ந்த புராடஸ்டண்ட் கிறிஸ்தவ சமயப் பரப்புநர்களின் சமயப் பரப்புதல் பணியின் மூலம் மதம் மாறிய சாணார் சமூகத்தவர்கள் நாகரிகமான நடையுடை பாவனைகளைக் கற்றுக் கொண்டதன் விளைவாக அச்சமூகப் பெண்டிர் மார்பை மறைக்கும் வண்ணம் ரவிக்கையும் அதன் மேல் முன்றானை போன்ற சீலைத் துணியும் அணியத் தொடங்கினர் என்றும் எழுதி வருகின்றனர். இக்கருதுகோளுக்குப் பின்னிருக்கும் வரலாற்று உண்மைகளை இந்நூல் தேடுகிறது.

இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தை ஏற்கனவே சொல்வனம் வெளியிட்டிருக்கிறது. அதை இங்கே படிக்கலாம்.