காஞ்சனை – ஓர் அனுபவம்

புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை அக்காலத்துக்கே உரித்தான, வாழ்வின் பிரச்னைகளையும், வறுமையையும் மீறிய விச்ராந்தியான தருணங்களில் ஆரம்பிக்கும் கதை. இத்தகு தருணங்களை சத்யஜித் ராயின்படங்களில், தி.ஜா., கதைகளில் காண்கிறோம். படத்தைப் பார்க்கையில், கதைகளைப் படிக்கையில் ஒரு பறவையின் அழைப்பை, தூரத்து ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். அதுதான் அடிப்படை. இயல்பு. சகஜம். அதன்மேல் இயக்கங்களும், இயக்கம் பற்றிய மாசு படிந்த கவனிப்புகளும், நினைவுப் பதிப்புகளும், அவற்றில் படியும் தூசிகளும் நிகழ்கின்றன. அத்தூசிகளோடு கற்பனை குதிரையும் எழும்பிப் பறக்கின்றது. ‘காஞ்சனை அத்தகு தருணங்கள் மனதளவில் தவிடு பொடியாவதில், வேண்டுமென்றே தவிடு பொடி ஆக்கப் படுவதில் துவங்குகின்றது.

(‘காஞ்சனை’யைப் படிக்கையில் ஞாபகம்வைத்துக் கொள்கிறேன்: ‘ புதுமைப்பித்தனின் கதைகளில் மூட்டைப்பூச்சிகள் ‘அபிவாதயே’ சொல்லும்.)

இத்தகைய விச்ரந்தியான தருணங்களில் (கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய துன்பமும் இல்லை; புகையிலையைக் கூட கடனெழவே என்றோ, பழக்க தோஷத்தாலோ, அனிச்சையாகவோஅன்றி அனுபவித்து பவித்திரமாக போட்டுக் கொள்ள முடிகிறது) மனதால் சும்மா இருக்க முடியுமா? அதுவும் ஒரு இரண்டாவது பிரம்மாவுடைய மனதால்? Devil’s workshop?

இது எழுத்தாளனின் சரடு – கயிறு – ஆனால் அரவு. இது வாசகனுக்குவிடப்படும் சரடு மட்டுமல்ல. தனக்குமேயானது. முதலில் தான் அனுபவிக்க. இந்த ஒற்றைப் பரிமாண வாழ்வின் சலிப்பை வரவொட்டாமல் அதுபற்றிய குறிப்பைக் கூட அண்டவிடாமல், தன்னை அனுபவிக்க வைக்க விடப்படும் சரடு. அதைத்தான் நாமும் சேர்ந்து அனுபவிக்கிறோம். கலையென்னும் அம்ருத தாரையில் கரங்களை குவித்து எப்போதும் கலைஞனே முதலில் பருகுகிறான். அவன் கை விரலிடுக்குக்ளில் பெருகி வழிவதைதான் நாம் அனுபவிக்கிறோம்.

இது ‘தன்மை’ யில் எழுதப்பட நேர்ந்ததற்குமிதுவே காரணம்.

சரடு.

teimosoமனம் ரதம் அல்ல என்றதும் ரதமாகிறது. ‘பேய்’ ஓட்டும் ரதமாகிறது. இது மனதின் இயல்பு. ‘மருந்தை அருந்துகையில் குரங்கை நினைக்காதே’ என்றதும் செய்கிற வேலையைச் செய்கிறது. சாதாரணமாக அநாதி காலந்தொட்டு ஒரே தடங்களில் மீண்டும் மீண்டும் செல்லும் கட்டை வண்டிதான். மனதைப் பற்றி எத்தனை அழகாகச் சொல்கிறார்? இதுதானே மனம்? மனதின் இயல்பு. தினம் தினம் ஒன்றையே, ஒற்றைப் பாதையில்தானே நாம் சிந்திக்கிறோம்?

அதே தடம்தான், வெகு விலகி போவதுபோல் தெரிந்தாலும். (அதே மனிதர்களைப் பற்றி, அதே அபிபிராயங்களைச் சுற்றி, அதே கொள்கைகள், அதே துவேஷங்கள், அதே வார்த்தைகள் – நமமனைவருக்கும் அப்படித்தானே) இந்தப் பிரபஞ்சம் பௌதீகமாக எத்தனை பெரியதோ அத்தனைக்கத்தனை சிறியது இந்த மனவெளிப் பிரதேசம். இதிலும் ஆகாசத்தில் பறப்பதாக பாவித்துக் கொள்ளலாம். அதை நம்பவும் செய்யலாம்.

அதிலும் மனம் என்னும்கயிறை முதுகில் போட்டுவிட்டு தானே போகும்படி செய்தால்?

இனி தன்னிஷ்டம்தான். தூக்க மயக்கம். மயக்கம். விழிப்பு, வேண்டுமென்றே கண்காணா பிரதேசத்தில் வந்து சேர்ப்பித்த கலத்தை தெரிந்தே தொலைத்துவிடும் மயக்கத்தின் இன்பம். எழுத்தாளனின் ‘deliberate’ மனம் சொல்லும் கட்டளைகள் கூட இல்லை. காளையின் கால் போனபடி ரதம் போகிறது. சாதுவான , ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதையாம்! என்ன கொழுப்பு?

அந்தப் பாதையில் காஞ்சனை வருகிறாள். வௌவால், பிச்சைக்காரி, பிணவாடை, ஊதுவத்தி, சாம்பிராணி, சேமக்கல சப்தம், இதில் எது கட்டை வண்டி ரதம் தன்னிசையாக சென்ற பாதை?

என்றாலும் வண்டிக்காரன் முழுதும் தூங்கவில்லை. தினசரி வேலைகள் தம்பாட்டுக்கு. பிரக்ஞை கூர்மையாக இருக்கிறது. புகையிலையை பவித்திரமாக போட்டுக் கொள்கிறான். பிரம்பு நாற்காலி க்றீச்சிட்டு ஆட்சேபிக்கிறது. துல்லிய கவனம் அவ்வபோது, பெருகி போதையேற்றும் கற்பனா சாகரத்தின் மத்தியில்.

தொழில்? பிரம்ம வித்தை. தெரிந்தவன் சும்மா இருக்கலாமா? அங்கீகரிக்கப்படும் பொய்களை உருவாக்க வேண்டாமா? சென்ற தடத்திலேயே எப்படிச் செல்வது? எனவே நிஜந்தோரும் தன் கல்பனா லோக சஞ்சாரத்தைக் கலக்கிறது. எழுத்தாளன் இது உண்மை என்கிறான்.

அவன் கண்ட காஞ்சனை நிஜம். ஆனால் அவன் மனைவி காணவில்லை. அவள் பிரம்ம குலம் இல்லை. மனதைச் சீண்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஊதுபத்தி வாசனை – அவளும் மெலிதாக ஆமோதிப்பது உண்மையாகவும் இருக்கலாம். ஒப்புக்காக, சமாதானத்துக்காகவும் இருக்கலாம். அவன் படிக்கும் புத்தகத்தின் ஆங்கில வாக்கியங்களை காஞ்சனை தமிழில் சொல்வது அவனுக்கு மட்டுமே தெரியும்.

இவனுக்கு கற்பனையின் எல்லைகளைத் தொட்டுவிட வேண்டும். கஞ்சா அடிப்பத்தைப்போல. அதை நிஜமாக்க வேண்டும். அதற்கு முதலில் அவனே அவற்றை நம்ப வேண்டும். அதனால்தான் ‘இன்னுமின்னும்’ என்பதற்காகத்தான் கண்ணாடி.

கண்ணாடிக்குள் இவனுக்குத் தெரிவது மனைவிக்குத் தெரிவதில்லை. அவள் சிரிப்பைக் கேட்பதில்லை. வாசனையை முன்னறிந்து சொல்வதில்லை. கழுத்துக் காயம் பற்றிக் கவலைப்படுவதில்லை. மூன்று மாத கர்பிணி வேறு.

மூன்று மாத கர்ப்பிணியை பேயோடு யாராவது விடுவார்களா? வெளியாளிடம் வேண்டாம். மனைவியிடம் இதைச் சொல்லலாம் இல்லையா? ‘அந்தப் பிச்சைக்காரி வேண்டாம். பேய் மாதிரி இருக்கிறாள். பேய்தான். அவளால் உனக்கு ஆபத்து’ என்று.

சொல்வதில்லை. ஏன்? அவனுக்கு அந்த எல்லையைக் காண வேண்டும். அடியாழத்தில் மயக்க விழிப்பில் அவனுக்குத் தெரியும், இது சரடு.

மனதின் இயல்புகளிலொன்று. எப்போதும் ஒருபிரச்னையை உண்டு பண்ணி அதைத் தீர்ப்பது. (உ -ம்) ஒரு குழந்தை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வழக்கமான நேரத்துக்கு வரவில்லை. பயம். கற்பனை. விபத்து பற்றி. கடத்தல் பற்றி. பிரார்த்தனைகள். புலம்பல்கள். குழந்தை வந்ததும் ரிலீஃப். மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி.

இங்கு மனம் விளையாட உற்பத்தி செய்து வினையாகி விட்ட பேய். பெண் பேய். மோக லாகிரியை எழுப்பும் பேய். மனைவிக்கு ஆபத்து வரை போயாகிவிட்டது. விபூதி தடவி பேயும், பேயின் பின் விளைவுகளும் போய் விட்டன.

தனக்குத் தானே, தன்னை மீறி, தன்னை விடுத்து, தன்னை மறந்து, விட்டுக் கொண்ட சரடு.

மீண்டும் புதுமைப் பித்தன்.

காஞ்சனை என்னும் பிசாசு உண்டா இல்லையா?

அதை விடுங்கள். ஆனால் நினைத்தால் பயமாய் இருக்கிறதே.