ஐந்து கவிதைகள்

1. தன்னை இழந்தவனின் தேடல்- எண்ணக் கூடுமோ என் இழப்பு?

வழக்கிழந்து போன மொழியொன்றின் வார்த்தைகள் போல
நீ பேசிவிட்டுச் சென்றவை
மொழியறிந்த ஒருவனால்
புரியப்படுவதற்காகக் காத்திருக்கின்றன.

பாலத்தின் கீழோடும் ஆற்றில்
என்னைக் கழற்றி ஒவ்வொன்றாய் எறிந்தேன்.
தலையைக் குலுக்கி விழிகளை நீரில் வீழ்த்தினேன்.
கடலாய் விரிந்தது என் பார்வை

அசைவற்று உறைந்த மலைகளின் மடியில்
தூங்கும் காடுகளில் ஊறி
எங்கும் நிறைந்து கிடக்கும் நிசப்தத்தில்
வீழ்ந்து மூழ்கிப் போனேன்
பயண நடுவில்
தவறிக் கிடைத்த வழி

நினைக்க முடியாத, புரியாத, சொல்ல முடியாத, அறிந்திராத
ஒன்று.
அதை ஏன் இப்போது நினைத்தேன் நான்?
அது தான் என்னை நினைத்ததோ?

தூங்கக் கிடைத்த இரவொன்றில் தூங்கினேன்
உண்ணக் கிடைத்த நாளொன்றில் உண்டேன்
பிறக்கக் கிடைத்த நாளொன்றில் பிறந்தவன்
சாகக் கிடக்கும் நாளொன்றில்
சாவு

2. அகம் புறம்- உள்ளீடற்ற வெளி.

என் ஒற்றை நிழலைத் தேடி
மீண்டும் தொடங்கியது என் பயணம்.
சிந்திக்கொண்டிருந்தவை சேர்ந்தெழுந்த
பெருக்கெடுப்பு வடிந்து
எங்கும் பரவிக்கிடந்த இருளில்

ஓடிக் கொண்டேயிருந்தன என் கால்கள்;
கல்லுமுள்ளு நெருப்பெனக் கடந்து,
அவை சுமந்து வந்தன என்னை.
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன் – துரத்தி வந்த கால்களை.

பளிங்குச் சுவரின்
விலையுயர்ந்த தேக்குமர யன்னற் தாழ்ப்பாள் நீக்கி
உள்ளே குதித்த பின்னேதான் தெரிகிறது
அதுவும் வெளியென்று!
உள்ளென்று எதுவுமில்லை

எரிந்த திரிக்கும்,
விளக்கின் அடிக்கு வற்றி விட்ட எண்ணெய்க்கும் இடையில்
ஒளி தூண்ட முனைகையில்
எழுகிறது இடைவெளி.
இருள் கூடும்போது சோர்ந்துவிடுகிற சுடர்!

சொல்ல முடிவதேயில்லை..
எப்போதும் உண்மைகளை.
அவை பொரிந்து உருமாறி ஊதி பருத்துப்
பாப்கான்கள் போலக் கொறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
சுவையாக எங்கும்

3. உலர்காற்றின் ஈரம்- அண்மையை நீங்காது இன்மை

சோறு வெந்து பதமாயிருக்கிறது.
என்னைத் தவிர யாரும் எஞ்சாத வீடெங்கும்
கொதிக்கும் குழம்பு மணக்கிறது;
பசிக்காகக் காத்திருக்க நாவிலும்
ஊறுகின்றன நினைவுகள்

மேசையில் மூட மறந்து விட்டுச்சென்ற
கவிதைப் பக்கங்களை
முழு இரவும் திருப்பிக் கொண்டேயிருந்தது
நிறுத்த மறந்த விசிறிக் காற்று.
காலை கனத்திருந்தது காற்று….
பெருமூச்சுப் போல.

நசிந்து கொண்டேயிருக்கிறது நிலம்
புதையும் கால்களை தொடர்கிறது காலடிக் குளங்கள்
தெறித்துக் கொண்டே இருக்கிறது நீர்;
ஈரமும் மழைக்காடும் போல்
மனசும் நினைவும்

துயர் தூக்கி அறைந்த சிலுவை.
வார்த்தை ஆணிகளில் தொங்கி..
வலி கொண்டழுகிற நெஞ்சம்.
பூக்கள் உதிர்ந்திட உதிர்ந்திட
வெறும் முட்களைச் சூடும்
வாழ்க்கை

என்னை வேரோடு கெல்லிக் கொன்று,
சுவடில்லாமல் எரித்து,
கழுவிக் கொண்டிருக்கிறாய் கைகளை.
எங்கும்
பரவிக் கிடக்கின்றன
என் நினைவுகள்
காற்றினணுக்களாகி

4. உறைந்த காலம்- உயிர்த்திருக்கும் நினைவு

சதை புடைத்து இறுகிய தாடைகள்
கம்பீரமாய் நீண்டு அகன்ற நெற்றி
இரும்பாய் முறுகி வளைந்த கொம்புகள்
திண்மை வலிமையாய் காட்டெருமைத் தலை
சுவரில்

பகலெல்லாம் ஒலித்துக்கொண்டேயிருந்தது பறை.
இடை இடையே அழு குரல்கள்.
இரவெல்லாம் பந்தலில் சீட்டு விளையாட்டு
காத்துக் கொண்டிருந்தது சவம்
மகனின் வருகைக்காய்

தீர்த்தமாடி முடித்து
சொட்டச் சொட்ட
நீள் அலை ஈரக் கூந்தலை
முறுக்கிப் பிழிந்து
விரித்து உதறினாள் அவள்
தெறித்தது என் மீதும் ஒருதுளி…
இரத்தம்

கரும்புகை திக்கெட்டும் எழுந்தது.
நிலம் பறையென அதிர்ந்து
துகள்களாய் பிரிந்து எழுந்து
தூறலாய் சிதற,
பகல் கருகும் மணம் கந்தகமாய்
பின்
நிணமாய்.

“கொண்டு சுமக்கக் கூடியதை மட்டும் எடு’
அப்பா சொல்லி எடுத்து வந்தவைகள்
ஓடிக் களைக்க
சுமக்க முடியாதவையாகின உடலுக்கு,
விட்டுவந்தவை மனத்துக்கு..

5. விடியலை நோக்கி- இருளினூடே புறப்பாடு

பெரு வெள்ளம் நிறைந்து வயல், வரப்புகளற்று
ஏரி போல வானம் பிரதிபலித்துப்
பரந்திருந்தது;
நீர் வற்றும் வரை காத்திருந்தன
வெடித்துக் கிளம்பி வீச்சாயெழ விதைகள்

மழை வெளித்து வெள்ளம் வடிந்து
சிறு குட்டைகளாய்க் கிடக்கும் நீரில்
எஞ்சிக் கிடக்கும் வாற்பேய்களை
தவளைகளாக விடுவதில்லை
நீரை மேகமாக்கும் சூரியன்

இயலாமையின் சினம்
மீண்டும் ஊற்றெடுத்துப் பெருகுகிறது எங்கும்.
பெருகிக் கரையுடைத்து
ஒரு பிரளயம் நிகழ்ந்தும்
இன்னும் ஊற்றின் வாய் அறியவில்லை
உலகு.

இரவின் முடிச்சு அவிழ்கிறது.
இருளின் கூந்தல் விரிகிறது.
பகலின் துயரம் கரைகிறது
மெல்ல, கனவின் சலனம் எழுகிறது.
மீண்டும் காகம் கரையக்
கலைகிறது

எண்ணை தடவி உண்ணி பொறுக்கினேன்.
உறிஞ்சிக் குடித்த கழுநீர் தெறிக்க
கண்கள் மின்னி
தலையை ஆட்டுகிறது
வண்டிக்காளை;
நீண்ட தூரம் ..பெரிய சுமை
இன்றைய பயணம் நானறிவேன்.
காளை யறியாது