இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-3

06: ரேயனிஸம்- Rayonism (Cubo-Futurism)

மிகக்குறுகிய காலமே (ஒரு ஆண்டே) உயிர்த்திருந்த ரேயனிஸம் (Rayonism [Cubo-Futurism]) பாணி, கணவனும் மனைவியுமான மிக்கைல் லாரியானாவ் (Mikhail Larionov), நடாலியா கான்சராவா (Nataliya Goncharova) என்னும் இரண்டு ஓவியர்களையே சார்ந்திருந்தது. ருஷ்யாவுக்கு மட்டுமல்லாமல், கலை உலகிற்கே அது ஒரு புதிய அணுகுமுறையாக அறிமுகமாயிற்று. 1913 இல் மாஸ்கோ நகரில் ‘டார்கெட் கலைக்காட்சி’ (Target Exhibition) மூலம் பார்வையாளர்களுக்கு இது முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. ”நடப்பில் பின்பற்றப்படும் பாணி, பழைய கைவிடப்பட்ட பாணி என்று அனைத்துப் பாணி ஓவியம் படைப்பதையும் தன்னுள் ஏற்றுக் கொண்டது. ஒரு வாழ்க்கையைப் போல, பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அது ஓவியத்தை அமைக்கவும், ஒத்திசைவைத் தோற்றுவிக்கவும் செய்கிறது” என்று இந்தப்பாணி விளக்கம் பெற்றது. தத்ரூபம் என்னும் கோட்பாட்டில் கட்டுண்டு முடங்கிக் கிடந்த ஓவியக் கலையை அதிலிருந்து விடுவித்து கட்டற்ற சுதந்திரக் கலையாக உலவ விடுவதுதான் அவர்கள் இருவரின் இலட்சியம்.

1913 இல் ‘கழுதையின் வால்’ (Donkey’s Tail)*, ‘டார்கெட் (Target) ஓவியக் காட்சிகளின்போது வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பில் மிக்கைல் லாரியானாவ் ஒரு கையேட்டை அச்சடித்து, வந்தோரிடம் வினியோகித்தார். அது, ‘ரேயனிஸ்ட் ஓவியம்’ (Rayonist Painting) என்று தலைப்பிடப் பட்டிருந்தது. தாங்கள் எப்படி அந்தப் பாணியில் ஓவியங்கள் படைக்கிறோம் என்பதை விரிவாகச் சொல்லியிருந்தார் ஓவியர்.

“நான், உருவங்களை படங்களில் உருவகப்படுத்தப்பட்ட விதத்தில் உண்மையில் காண்பதில்லை. அது நாமாக உருவாக்கிக் கொண்டுவிட்ட தோற்றம்தான். ஒளியின் ஒரு கற்றைத் தொகுப்பு (Ray) பொருளின் மீது பட்டுத் தெறித்து மீள்கிறது. நமது பார்வைக்குட்பட்ட பரப்பில் அவை தென்படுகின்றன. உண்மையில், நாம் காண்பதை அவ்விதமே ஓவியமாக்க வேண்டுமென்றால் அந்த ஒளிக் கற்றைகளைத்தான் வண்ணம் கொண்டு கித்தானில் தீட்டவேண்டும். உருவத்தைத் தவிர அதன் அண்மையில் இருக்கக்கூடிய மற்ற உருவங்களின் ஒளிக் கற்றைகளும் நமது பார்வைப் பரப்பில் தெரியும். நாம் படைக்கத் தேர்ந்தெடுக்கும் உருவத்துடன் அவற்றையும் ஓவியமாக்கினால்தான் நாம் காண்பதை அவ்வாறே படைக்க இயலும். நாம் உருவங்களைப் பற்றி சிந்திக்காமல் ஒளிக்கற்றைக் கூட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுத்தால் ‘அ’ என்னும் உருவத்துக்கும் ‘ஆ’ என்னும் உருவத்துக்குமான இடைவெளியில் இரண்டின் ஒளிக் கற்றைகளும் கலக்கும். ஓவியன் அதைப் பிரித்தெடுத்துவிட்டு ஓவியம் படைக்கவேண்டும். பாலைவனத்தில் நமக்குத் தோன்றும் கானல்நீர் போன்ற தோற்றம்கொடுப்பதுதான் உண்மை.”

இந்தப் பாணியில் ஓவியம் படைப்பதின் அடிப்படை, கோடுகளும் வண்ணங்களும்தான். ருஷ்யாவில் கலைப்பயணத்தில் இதை அரூபவழி படைப்புகளின் முதல் தடப் பதிவாகக் கலைவல்லுனர்கள் கணிக்கிறார்கள்.

குறிப்பு

ஜாக் ஆஃப் டயமண்ட்ஸ்/ Jack of diamonds

‘நேவ் ஆஃப் டயமண்ட்ஸ்’ (Knave of Diamonds) என்றும் ‘ரஷ்யன் பப்னோவி வேலெட்’ (Russian Bubnovy Valet) என்றும் அறியப்பட்ட இந்த குழு 1909 இல் மாஸ்கோ நகரில் ஓவியர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகியது. அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர்களது இயக்கம் கலையுலகை வெகுவாக ஈர்த்தது. 1910 இல் அவர்களது முதல் காட்சி நடந்தது.

டாங்கிஸ் டெய்ல்/ Donkey’s Tail(‘கழுதையின் வால்’)
Jack of diamonds குழுவிலிருந்த பல ஓவியர்கள் இங்கும் உறுப்பினர்களாக இருந்தனர். இதனைத் தோற்றுவித்த ஓவியர் மிச்செல் லாரியோனோவ் அறிமுகப்படுத்திய ரயோனிஸம் பாணியின் பாதிப்பு கொண்ட குழுவின் முதலாவதும் கடைசியுமான ஓவியக்காட்சி 1912 இல் மாஸ்கோ நகரில் காட்சிப்படுத்தப் பட்டது. 1913 இல் குழு உடைந்து சிதைந்து போனது.

[DDET ரேயனிஸ காலனி ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]

[/DDET]

07: சூபர்மாட்டிசம்
SUPERMATISIM-1913

வெள்ளைக் கித்தானில் வெண்மைச் சதுரம்

தொன்மையான கிராமியக் கலைகள், அரங்கம், இலக்கியம் – குறிப்பாக கவிதை – ஓவியம் என்று பல கலைத் தளங்களில் விரைவாகப் பரவிய நவீன சிந்தனைத் தாக்கம் புதிய பாதையில் பயணிக்க உகந்த களமாக அப்போது 20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால ருஷ்யா அமைந்தது.

குறியீட்டு ஓவியர்களுக்குப் பின்னர் (Icon Painters) அங்கு அலுப்பூட்டும் கல்விக்கூட (Academic) வழிதான் பின்பற்றப்பட்டது. வரவிருக்கும் 1817-இன் புரட்சியை முன்னரே அறிந்தது போல கலையியக்கம் செயற்படத் தொடங்கியது. ஓவியர்கள் ஷகால்(M.Chagall), ஸூடின்(Soutine) இருவரும் தங்கள் கலைத் தேடலுக்கு பிரான்ஸ் நாட்டுக்கு பயணப்பட்டு விட்டனர். ஒருவர்பின் ஒருவராகப் பல ஓவியர்கள் சொந்த மண்ணில் கிட்டாத புகழையும், மரியாதையையும் நாடி அண்டை நாடுகளுக்கு (குறிப்பாக பிரான்ஸ் நாடு) செல்லத் தொடங்கினர். என்றாலும், சில ஓவியர்கள் தாய் நாட்டிலேயே வாழ்ந்து தங்களைக் கலை வளர்ச்சிக்கு அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஓவியர் காஸிமீர் மலேவிச் (Kasimir Malevich) முதன்மையாக வைத்து பேசத் தகுந்தவர்.

தொடக்கத்தில் அவரை க்யூபிஸம், மற்றும் பழங்குடியினரின் கலைப் பாணியுமே பாதித்தன. பின்னர் அவர் எந்த மெய்மையுடனும் தொடர்பு இல்லாத சதுரம், வட்டம் போன்ற அடிப்படை வடிவியல் அமைப்புகளை கருப்பொருளாக அறிமுகப்படுத்தி ஒரு புதிய பாணியில் தமது ஓவியங்களைப் படைத்தார். தாமே ஒரு இயக்கமாக வாழ்ந்தவர் ஓவியர் கஸிமிர் மலேவிச். 1912 இல் கழுதை வால் (Donkey’s Tail), நீல சைக்கிளோட்டி (Blaue Reiter) போன்ற குழு ஓவியக் காட்சிகளில் அவரது படைப்புகள் இடம் பெற்று அப்போதே பரவலாக அறியப்பட்டவர்தான் ஓவியர் கஸிமிர் மலேவிச். அவர் 1913 ஆம் ஆண்டு சூபர்மாட்டிஸம் (Suprematism) என்னும் ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.

1913 இல் ‘பரிதி மீதான வெற்றி’ (‘Victory over the Sun’) என்னும் நாடகத்துக்கு அவர் உடைகளையும், அரங்க அமைப்பையும் வடிவமைத்தார். அரங்கின் பின்தொங்கிய திரையில் ஒரு பெரிய சதுரம் இரண்டு சமமான முக்கோணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்று கருப்பும் மற்றது வெண்மையுமாக வடிவமைக்கப்பட்டது. ஓவியர் பின்னாளில் தமக்கு ஒரு புதிய கலைவடிவம் தோன்ற இந்த நாடகம் காரணமாய் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

1915 ஆம் ஆண்டு 0.10 என்று அழைக்கப்பட்ட ஓவியக்காட்சியில் அவர் தமது தொடக்க சோதனை ஓவியங்களை காட்சிப்படுத்தினார். அவற்றில் சதுரமும் வட்டமுமே அடிப்படை உருவங்களாக இருந்தன. அவற்றில் எந்தக் கருப்பொருளும் ஓவியமாக்கப்படவில்லை. வெண்மைப் பின்புலத்தில் கருப்பு சதுரம் அமைந்த ஓவியம் காண்போரை வியக்கவைத்தது. அது காட்சிக்கூடத்தில் ‘பொன் மூலை’ (Golden Corner) என்று கருதப்பட்ட இடத்தில் தொங்க விடப் பட்டிருந்தது மிகப் பொருத்தமாகத்தான் இருந்தது. ‘என் உள்ளத்தில் தோன்றிய இருளின் கருமையைத்தான் நான் அவ்விதம் ஓவியத்தில் வடிவமைத்தேன்’ என்று ‘த நான்- ஆப்ஜெக்டிவ் வோல்டு’ (“The Non-Objective World”) என்னும் தமது நூலில் அவர் குறிப்பிடுகிறார். அவரைப் பாதித்த மற்றொன்று, ருஷ்ய கணிதமேதை உஸ்பென்ஸ்கி (P.D.Ouspensky) தமது நூலில் கூறியிருந்த ‘நமது புலன்களுக்கு எட்டும் மூன்றாவது பரிணாமத்துக்கு மேலான நான்காம் பரிணாமமாகும்’ (“A fourth dimention beyand the three, to which our ordinary senses have access”) என்னும் கருத்தாகும்.

1915 / 18 களுக்கு இடையில் அவர் படைத்த பல ஓவியங்கள் இவ்விதப் பாணியில் மிகக் குறைந்த வண்ணங்களுடன் அமைந்தன. அவற்றில் எவ்வித ஒளிபாதிப்புமற்ற இரு பரிமாண வடிவங்கள் அந்தரத்தில் மிதப்பதாகத் தோற்றமளித்தன. அந்த வடிவங்கள் யாருக்கும் எந்த செய்தியையும் கூறவில்லை. வேறு எதையும் படிவமாகக் குறிப்பிடவும் இல்லை. தமது சோதனையின் உச்சமாக அவர் ‘வெண்மையில் வெண்மை’ (White on White) ஓவியத்தைப் படைத்தார்.

குழு உறுப்பினர்கள் 1915 முதல் தொடர்ந்து சந்தித்துக் கொண்டனர். இப்பாணியின் தத்துவத்தை விரிவுபடுத்தி அறிவுசார்ந்த தளங்களிலும் கொண்டு செல்லத் தொடங்கினர். ‘நடாலியா கான்சராவா’ (Natalia Goncharova) மற்றும், “லூபோஷ் பாபொவா” (Liubov Popova) என்னும் இரு பெண் ஓவியர்கள் இந்தப் பாணியில் சிறந்து விளங்கினார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து அங்கு கலைஞர்களின் கற்பனை சுதந்திரத்தை முடக்க அரசு சட்ட திட்டங்கள் கொண்டுவர முற்பட்டது. உண்மையில் அது 1918 லேயே தொடங்கி விட்டது.

08: கன்ஸ்ட்ரக்டிவிஸ்ட் ஆர்ட் (CONSTRUCTIVIST ART – 1914)
கட்டமைப்பும் இயந்திரமும்

1913 ஆம் ஆண்டில் ஓவியர் ‘விலாடிமீர் டாட்லின்’ (Vladimir Tatlin) தோற்றுவித்த கட்டிடக்கலை சார்ந்த புதிய உத்திதான் கன்ஸ்ட்ரக்டிவிஸ்ட் ஆர்ட். இது ருஷ்யா முழுவதும் கட்டிடக் கலையில் புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தி அதற்கு ஒரு புதிய தளத்தைக் கொணர்ந்தது. இதற்கு சூபர்மாட்டிஸம்-ருஷ்யா, து ஸ்டைல் (De Stijl ) -ஹாலந்து, பௌ ஹௌஸ் (Bauhaus -ஜெர்மனி) ஆகிய மூன்று இயக்கங்களுமே முக்கிய காரணங்களாயின.

கலை, சமூக சீரமைப்புக்கான கருவியாகப் பயன்படவேண்டும். அதை வெறும் கலைக்கானதாக மட்டும் முடக்கிவிடக் கூடாது என்பது அதன் மையக் குறிக்கோளாக விளங்கியது. அன்றைய இளைஞரின் புத்தியக்கமாக மக்களின் இயல்பு வாழ்க்கை, செயற்பாடு, ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றின நிலைப்பாடு போன்றவை புதுப்பிக்கப்பட்டன. இந்தப் புதிய கலை அணுகல் மக்களுக்கு பழைய கலையமைப்பிலிருந்து விடுதலையளித்து அவர்களையும் தம்முள் இழுத்துக் கொள்ளும் முயற்சியாக நிகழ்ந்தது.

1916 களுக்குப் பின், ஓவிய/கட்டிடக் கலைஞர்கள் நௌம் கேபோ (Naum Gabo), ஆண்ட்வான் பெவ்ஸ்னெ (Antoine Pevsner) சகோதரர்கள் அதற்கு ஒரு புதிய பார்வையைக் கொணர்ந்து கட்டிடங்களில் அரூப வடிவங்களைப் புகுத்தனர். அதில் க்யூபிஸம், ஃப்யூசரிஸம் பாணி சிலை வடிவங்களைப் படைத்தனர். ஆனாலும், அவற்றில் தொழில் புரட்சியால் அறிமுகமான இயந்திரத் தாக்கம் மிகுந்து பெரும்பாலான வடிவங்கள் புரட்சியை நினைவுறுத்தும் அரசுக்கொள்கை சார்ந்ததாகவே இருந்தன. பல ஓவியர்கள் கலை, அரசியல் இரண்டையும் ஒன்றிணைத்து தீவிர ஈடுபாட்டுடன் படைத்தனர்.

1920 இல் விளாடிமீர் டாட்லின் (Vladimir Tatlin) மூன்றாவது பன்னாட்டு நிகழ்வுக்காக அரங்கில் அமையவென்று ஒரு பெரும் சிற்பத்தை நிர்மாணிக்க, சோதனை வடிவமைத்தார். அது பாரிஸ் நகரில் உள்ள ஈபிஃல் கோபுரத்தினும் உயரமானது. இயந்திர அழகியல் சார்ந்த நவீன சிந்தனை கொண்டது. ஆனால் அதை நௌம் கேபோ வெளிப்படையாகக் குறைகூறி விமர்சித்தார். ‘கலப்பற்ற கலைவடிவம் அல்லது மக்களுக்குப் பயன்படும் பாலங்கள், இல்லங்கள் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்வதுதான் சரியாக இருக்கும். இவ்விரண்டையும் கலந்து குழப்பக்கூடாது’ என்பது அவர் பார்வையாக இருந்தது. அது, மாஸ்கோ குழு உடைவதற்குக் காரணமாக அமைந்து விட்டது. நௌம் கேபோ, ஆண்ட்வான் பெவ்ஸ்னெ இருவரும் குழுவிலிருந்து விலகி செயற்படத் தொடங்கினர். தங்கள் குழுவுக்கு ‘ப்ரொடக்டிவிஸம்’ (Productivism) என்னும் புதிய பெயரை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினார். குழு ஓவியர்கள் வர்த்தகம் தொடர்பான பல விளம்பரங்களைப் படைத்தார்கள். தங்களை ‘விளம்பர கட்டுமானக்காரகள்’ (‘Advertising Constructors’) என்று பெருமையுடன் அழைத்துக் கொண்டனர். அந்த விளம்பரங்கள் வடிவியல் சார்ந்த உருவங்களும், காண்போரை ஈர்க்கும் விதமான வண்ண அமைப்பும், அளவில் பெரிய எழுத்துகளும் கூடியதாக இருந்தன.

விளாடிமீர் டாட்லின் தொடங்கிய கன்ஸ்ட்ரக்டிவிஸ்ட் ஆர்ட் குழுவின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறு துணையாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் லியோன் ட்ரோஸ்ட்கி (Leon Trotsky) 1921 களுக்குப் பின்னர் தனது ஆதரவை விலக்கிக் கொண்டார். கட்சி நாளேடான ப்ராவ்டா (Pravda) கட்சிப் பணம் அந்த குழுவுக்காக வீணடிக்கப்படுவதாக குறைகூறத் தொடங்கியது. 1921 இல் ருஷ்யாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அரசால் அறிமுகப் படுத்தப் பட்டது. நடைமுறையில் இருந்த அனைத்து கலை சார்ந்த வழிகளும் மக்களுக்குப் பயன்தரும் விதமாக அமையவில்லையென்று கட்சிரீதியாக இகழப்பட்டன. கட்சியால் மக்களின் பயன்பாட்டுக்கும் அரசியல் சார்ந்த விளம்பரங்களுக்கும் ஏற்றவாறு கலைக்கொள்கை உருவாகி, சோஷியலிஸ்ட் ரியலிஸம் (Socialist Realism) என்னும் பெயருடன் அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது. நௌம் கேபோ, ஆண்ட்வான் பெவ்ஸ்னெ இருவரும் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். நௌம் கேபோ ஐக்கிய அமெரிக்கப் பிரஜையாகி அங்கேயே காலமானார். ஆண்ட்வான் பெவ்ஸ்னெ ஃபிரெஞ்சுக் குடிமகனாகி அங்கேயே வாழ்ந்து மறைந்தார். ஓவியர் விளாடிமீர் டாட்லின் தாய்நாட்டிலேயே தொடர்ந்து வசித்தார். அவரது மரணம் 1943 இல் மாஸ்கோ நகரில் நிகழ்ந்தது.

[DDET ஆண்ட்வான் பெவ்ஸ்னெயின் ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும் ]


[/DDET]

[DDET நௌம் கேபோவின் ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும் ]


[/DDET]

(வளரும்)