ஆயிரம் தெய்வங்கள் – 5

நான் பக்திமான் இல்லை. என்மீது பிராமண முத்திரை உண்டு. ஒரு தேசியவாதியாக வளர்ந்தவன். காந்தி, நேரு, சுபாஷ், படேல், ஆசாத் போன்ற தலைவர்களை நேசித்தவன். நான் உயிரோடு இருந்த போது அவர்களும் உயிரோடு இருந்தார்கள். என் உயிர் உருவாகாதபோது – எனது ஜனனத்திற்கு முன்பே உயிர் துறந்த பாரதியாரின் கவிதைகளினால் கட்டுண்டேன். அவரை இன்னமும் வாழுந்தெய்வமாகப் போற்றுகிறேன். ஒரு தெய்வீகக் கவியாகக் கண்ணதாசனை நேசிப்பதுண்டு. கருத்தாழமுள்ள பட்டுக்கோட்டை என்னுடைய மண். நான் சீர்திருத்தவாதி இல்லை. சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவன் என்றாலும் தாயாரின் உணர்வுகளுக்கு மதிப்பு வழங்கும் பண்புடையவன். சந்தியாவந்தனம், அமாவாசைத் தர்ப்பணம் செய்தது இல்லை. என் உடலில் பூணூல் சிலசமயம் இருக்கும்; சில சமயம் இருக்காது. 1942-இல் இறந்த என் தந்தைக்கு இன்னமும் சொந்தமண் சென்று ஒவ்வொரு ஆண்டும் சிரார்த்தம் செய்வதுண்டு. 1994-இல் 93 வயது வரை வாழ்ந்த என் தாயாருக்கும் விடாமல் சிரார்த்தம் சொந்த மண்ணில் செய்து வருகிறேன். எனக்கு 73 வயது. காலில் பலம் குறைந்து வருகிறது. சப்பளம் போட்டு உட்கார்ந்தால், எழுந்திருப்பது சிரமம். எனினும் இந்த பூமியில் என்னை வாழச்செய்த என் தாய், என் தந்தை, என் தந்தைக்கும் தாய்க்கும் முன்பே மூன்று+மூன்று பித்ருக்கள்; (முன்னோர்) அஞ்ஞாத பித்ருயார் என்று தெரியாத பித்ருக்களுக்கும் – பிண்டம் வழங்குவதை நிறுத்த முடியுமா? இவ்வளவு பீடிகை ஏன்? பிராமணர்கள் தர்ப்பயாமி, தர்ப்பயமாமி” என்று சொல்லித் தர்ப்பை ஜலத்தைவிடும் பாங்கில், நான் புரிந்துகொண்ட விஷயம் விவசாயமே. நான் செய்யும் விவசாயத்திற்கு 2, 3 உதவியாளர்கள் என்னிடம் உண்டு. அவர்கள் ”தீண்டத்தகுந்தவர்கள்.” அவர்களுக்கு நீர் பாய்ச்சத் தெரியுமே தவிர என்னைப்போல் திறமையாகப் பயிர் மீது பஞ்சகவ்யத்தையோ, பால்நீர், மோர் நீரையோ கைவழியாகத் தெளிக்கத் தெரியவில்லை! கீரைப்பாத்தியில் ஜலம் தெளிக்கத் தெரியவில்லை! நான் தெளித்தால் பயிர் வளர்கிறது! அவர்கள் தெளித்தால் வாடுகிறது! உள்ளங்கை வழியே தர்ப்பை இல்லாமல் ”தர்ப்பயாம் தர்ப்பயாமி” என்று ஓதியவண்ணம் தண்ணீருடன் என் கண்ணீரை விட்டும் நான் பயிர் வளர்க்கிறேன். இப்படித் திறமையாக விவசாயம் செய்த பிராமணர்கள், நகரங்களில் விடும் ”தர்ப்பயாமி ஜலம்” எல்லாம் சாக்கடையில் அல்லவா சேர்கிறது! நாணலைப்போல் தர்ப்பைப் புல்லும் ஆற்றோரங்களில் மண்டி வளர்கிறது. அப்படி என்ன அதன் ஆற்றல்? மோதிரம் போல் தர்ப்பையில் செய்து ”பவித்திரம்” என்கிறார். தர்ப்பயாமி என்று சொல்வதற்கு மேல் தர்ப்பையை அறிவியல் ரீதியாக ஆராய்வது நன்று.

tharpanam_hand

அன்று இலக்கியவாதியாக வாழ்ந்தேன். வரலாறை நேசித்தேன். மக்களை அறிய பூகோளமும் வரலாறும் அறிவது நன்று என்று அவற்றையும் கற்றேன். இன்று இயற்கை விவசாயியாக வாழ்கிறேன். இயற்கை விவசாயத்தில் பள்ளிக்கூடம் கூட நடத்துகிறேன். ”வேதம்” என்ற சொல்லை அடிக்கடி நான் பயன்படுத்துவதைக் கண்டு இயற்கை விவசாயத்தில் என்னை குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு வேளாள சிஷ்யர், திடீரென்று ”ஐயா நீங்கள் பிராமணரா?” என்று கேட்டார், அதன் பின்னர், ”பட்டையா, நெட்டையா” என்றார். ”ஜேம்ஷெட்ஜி டாட்டா”தான் ஆரியர், நான் தமிழன் என்றேன். குரு – சிஷ்ய உறவில் ஆரிய – திராவிட பேதம் இல்லையே என்று கூறியதும் – ஆரியர் என்று நான் சொன்னது ”உயர்ந்தவர்” என்ற பொருளில் என்று அவர் சமாளித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, டேராடூனிப் ஒரு நண்பர் வீட்டில் இரவுத்தங்கல். அவர் ஒரு காலத்தில் உ.பி. முதல்வராயிருந்த பகுகுணாவின் உறவினர். அங்கும் ஜாதிப் பேச்சு வந்தது. பகுகுணா ஆரிய பிராமணராம்! எனது டேராடுன் நண்பரிடம், ”மதராசி பிராமணர்களுடன் திருமண உறவு கொள்வதுண்டா?” என்றுதான் கேட்டேன். அது எப்படி முடியும்? நீங்கள் ”திராவிட பிராமணர்” என்றார், ”திராவிடம்” என்றால் தென்திசை என்றுதான் பொருள். தெக்கத்தி பிராமணர் கலப்பு அதிகம் என்பது, அவர் கணிப்பு. இப்படிப் பேசிய பகுகுணா மாநிறமாயிருந்தார். வங்காளத்து பிராமணர்கள் நல்ல கருப்பு, கலப்பும் அதிகம். மீன்கூட சாப்பிடுவார்கள். அவர்களை விடத் தமிழ் நாட்டு பிராமணர் மோசம் என்று கூறினார். நான் எதுவும் அவரிடம் பேசமுடியாது. ஏனெனில் அவர் பகுகுணாவின் சமையல்காரர், தால் ரொட்டி பிரச்சனையாகிவிடுமே! இங்கிலிஷில் பேசினால் அவருக்குப் புரியாது. ஹிந்தி புரியும். பேசலாம். விவாதம் செய்யும் அளவில் எனது ஹிந்தி அறிவு குறைவு. பிராமணர்கள் ஆரியர்களே என்பதில் தெளிவாயிருந்தார். மதராசி பிராமணர்கள் ஆரியரல்லவாம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரியத்தந்தைக்கும், பழங்குடித் தாய்க்கும் பிறந்த ஒரு சாதி மக்கள் தெய்வீகச் சடங்குகளுக்கு ஒதுக்கப்பட்டதாக கோசாம்பி கூறுகிறார். ஜாதி என்று இந்தியர்களின் அடையாளம். பிராமணர், அய்யர், அய்யங்கார், செட்டியார், முதலியார், பள்ளர், பரையர் என்பது ஒரு சமூக அடையாளம். சட்டத்தினால் நிறுத்த இயலாது. சென்சஸ் கணக்கில் சாதி வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் போது, சாதியின் ஒரு அடையாளத்தை ஏன் மறுக்க வேண்டும்? ஜாதியில் ஏற்றத் தாழ்வு கூடாது. ஜாதியைப் பற்றிப் பேசுவது தவறு இல்லை. ஆரியம் ஒரு சாதியே இல்லை.

நிஜமான ஆரியர்கள் யார்? ஆரியர்களின் தெய்வங்கள் எவை? இன்றைய இந்தியாவில் வழங்கப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன், வினாயகர், கிருஷ்ணர் (கருப்பர்) ஆகியவர்கள் ஆரிய தெய்வங்கள் அல்லர். பிராமண தெய்வங்கள் என்பதில் உண்மை இருக்கலாம்.

வரலாற்றுப் பூர்வமாக ஆரியர்கள் என்போர் இரானியர்களே. முன்பு பாரசீகம் என்று அழைக்கப்பட்ட நாடு இன்று இரான். ”இரான்” என்ற சொல்லே. ”ஆரியன்” என்ற சொல்லின் திரிபு. தங்களது ஆரிய வழிபாடுகளைக் காப்பற்றிக் கொள்ள மும்பையில் குடியேறிய இரானியர்களே நிஜமான இந்திய ஆரியர்கள். இரானைத்தவிர, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் ஆரியர்களாக இருக்கலாம். இவ்வாறே கிரேக்கர்கள், ரோமானியர்கள், ஜெர்மானியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் ஆரியர்களாக இருக்கலாம். ஹிட்லர் தன்னை ஆரியன் என்று கூறிக்கொண்டு ஜெர்மானியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் ஆரியர்களாக இருக்கலாம். ஹிட்லர் தன்னை ஆரியன் என்று கூறிக்கொண்டு ஜெர்மானியர்களே ஆளப்பிறந்தவர்கள் என்று தவறாக இனபேதம், நிறபேதம் பாராட்டி யூதர்களைக் கொன்று குவித்தான். சம்ஸ்கிருதம், கிரேக்கம், ரோமன் ஆகிய மொழிகள் ஒரே குடும்பம் என்று மொழியியல் வல்லுனர்கள் கூறுவர். உண்மையில் பொன்னிறமுள்ள ஸ்காண்டிநேவியனையும், ஈரோட்டுக்கு அருகில் மண்ணாத்தம்பாளையத்தில் வெள்ளைநிறப் பூணூல் எடுப்பாகத் தெரியும் அளவில் பஞ்சாங்கம் செய்யும் (பிராமணரல்லாதவர்களுக்கு புரேகிதம்) கரிய நிறமுள்ள மணி அய்யரையும் ஒரே இனம் என்றால் சிரிப்பாக இல்லையா? ஆகவே ‘ஆரியன்’ என்ற சொல் இன ஒற்றுமை அல்லது மொழியியல் அலகாக எடுத்துக் கொள்வதே நன்று. சமஸ்கிருதத்தில் ”ஆர்ய” என்றால் ”மரியாதைக்குரிய” என்று பொருள். தமிழில் கூட ”அய்யா” என்ற மரபு உள்ளது. சம்ஸ்கிருத நாடகங்களில் ”ஆர்ய” என்று கூறுவதைப் போல் தமிழில் ”அய்யா” – ஆர்யா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம்.

எனினும் 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே மக்களில் சிலர் தம்மை ஆரியர் என்று கூறிவந்தனர். ஒரு நாட்டுக்கே ஆரியானாம் (ஈரான்) என்று பெயர் சூட்டினர். பாரசீகத்தில் உருவாக்கப்பட்ட அக்கேயமனீத் (Achaemenid) பேரரசின் முதல் மன்னன் டரீயஸ் தன்னுடைய கல்வெட்டுக்களில் (கி.மு.500), ”ஹக்க மானிசியன், பாரசீகன், ஆரியபரம்பரையில் உதித்த ஆரியன்” என்று புகழாரங்கள் உள்ளன. அக்கேய மனிதக்குலம், பாரசீகப் பழங்குடி மக்களுடன் ரிக்வேத காலத்தில் சிந்து சமவெளியில் குடியேறிய பழங்குடிமக்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள் ஆரிய ஆரியர் வரிசையில் கங்கைப் பகுதியில் சாக்கியப் பழங்குடிக்கும் இடம் உண்டு. ஏனெனில் சாக்கிய மன்னரான கவுதம புத்தருக்கும் ”ஆரிய புத்திரன்” என்ற பெயருண்டு. வர்ண பேதத்தில் க்ஷத்திரியர் – 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியராயிருக்கலாம். ”க்ஷத்திரியர்” என்ற சொல் பழைய பாரசீகச்சொல். வீரத்தையும் பாளையும் எடுத்துக்காட்டும் தெய்வமாகவும் வழங்கப்பட்டது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே – பிராமணர், வைசியர், சூத்திரர் போன்ற பிறவர்ணத்தார்கள் க்ஷத்திரியர்களுடன் மணஉறவு கொண்டனர். பிற்கால மரபில் க்ஷத்திரியர்களும் ஆரியரல்லாதவர்களிடம் ரத்தக்கலப்பு செய்துள்ளதால், இன்று க்ஷத்திரியர்களாக வாழ்பவர்களும் ஆரியரல்லர். ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்ட ஆரியர்கள் – மாவீரர்கள். ஆஜானுபாகுவான தோற்றம், கடைந்தெடுத்த தங்க நிறம், குதிரையேற்றம், வாட்போர் தவிர தலைசிறந்த வில்லாளிகள். அலெக்சாந்தரின் ஈட்டிப்படை பாரசீகர்களின் விற்படையை வீழ்த்தினாலும் கூட சிந்து ராஜ்ஜியத்தில் (பாகிஸ்தான்) புரு மன்னனின் (புருஷோத்தமன்) படைவீரன் காயப்படுத்திய அம்புக்காயமே பின்னர் அலெக்சாந்தரின் மரணத்திற்கும் காரணமானது. பாரசீகத்தையோ, சிந்துவையோ கூட அலெக்சாந்தர் ஆளவில்லை.

alexanderporus

சிந்து-பஞ்சாப்பில் வாழ்ந்த புருவம்சம் ஆரியவம்சமாயிருக்கலாம். இந்திய வரலாற்றைத் தவறாக எழுதியவர்கள் அலெக்சாந்தர் இந்தியாவை வென்றதாக எழுதியுள்ளனர். இன்றைய பாகிஸ்தான், ஆப்கன், பாரசீகத்தை மட்டும் வென்றாலும் கூட ஆளவில்லை. திரும்பிச் சென்றது மட்டுமல்ல. கிழக்கே சந்திரகுப்தரின் ராணுவபலம் – அலெக்சாந்தரை சிந்து நதியைக் கூடக் கடக்காமல் பின்வாங்க வைத்து பாரசீக ஆரியப்படை அலெக்சாந்தரை அயரவைத்தது. ஆரியர்கள் வில்வித்தையில் கை தேர்ந்தவர்கள். ஆரிய (ஈரானிய) தெய்வங்களைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் முன்னரையில் மேலும் இரண்டு மன்னர்களைக் குறிப்பிட்டுவிட்டு அஹூர் மஜ்தாவை ஆராயலாம். புத்தரே கூட ஈரானியப் பழங்குடியாக இருக்கலாம். திட்டவட்டமாக புத்தர் வாழ்ந்த காலத்தில் ஜராதுஷ்டிரன் ஒரு க்ஷத்திரிய சன்னியாசியாக பாரசீகத்தில் வாழ்ந்தார். பாரசீகம் வரை நீண்டிருந்த இந்தியாவை ஆண்ட கனிஷ்கரின் பேரசு மெளரியப் பேரரசைவிட அதிகமான ஜனபாதங்களைக் கொண்டிருந்தது. உண்மையில் கானிஷ்கர் ஒரு ஈரானியர். இந்துமதத்தையும் இந்திய தெய்வங்களையும் போற்றியவர். கனிஷ்கர் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமிய மதம் உருவாகவில்லை (கிபி.100). பின்னர் அக்பருக்குப் பின் குறுகிய காலம் இந்தியாவை ஆண்ட ஷெர்ஷா இரானியன். ஷா நாமாவை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவன். எனினும், மொகலாய மன்னர்களின் அரண்மனை மொழியாக பாரசீகம் நிலவியது. பாரசீகத்திற்கும் சம்ஸ்கிருதத்திற்கும் உள்ள உறவைப்பற்றி மொழியியலாளர் ஆய்வு செய்யலாம். சம்ஸ்கிருதம் ஆரியமொழி என்றால் ஈரான் (பாரசீகம்) ஒரு ஆரியநாடு. ஷாநாமா என்பது இஸ்லாமிய நூல் அல்ல. புராதன பாரசீக மன்னர்களின் குறிப்புதான். வரலாற்றுக் குறிப்புடன் புராணக்குறிப்பும் உண்டு.

ஈரானிய புராணங்களில் சொல்லப்படும் சடங்குகளை மும்பையில் வாழும் பாரசீகர்கள் செய்கிறார்கள். ரிக்வேதம், யஜீர்வேதம் சதபதபிராமணம் கூறம் பல நிகழ்ச்சிகள் பாரசீகத்தில் இருந்தன. பாரசீகத்தில் (ஈரான்) நிகழ்ந்த தேவ-அசுரப் போராட்டத்தில் அதே சம்ஸ்கிருதச் சொற்கள் அப்படியே கையாளப்பட்டன. தேவர்-அசுரர் என்பது தேவா-அகுரா எனப்பட்டது. யமன் -யிமா எனப்பட்டார். ஒருவனுக்கு சொர்க்கமா, நரகமா என்ற முடிவுக்கு “வார்” என்ற விண்ணுலகத்தின் தலைவனாக இருந்தார். இந்திய யமனைவிட இரானிய யிமா – மனுவைப் போல் முதல்மனிதன். அஹூர் மஜ்தாவால் படைக்கப்பட்ட பிரம்மனும்கூட. ”அஹூர்மஜ்தா” என்பது தீயசக்திகளை அழித்த பெருந்தெய்வம். புத்தரைப்போல் ஈரானில் ஜராதுஷ்டிரர் எழுச்சிக்குப்பின் ரிக்வேதத்தில் கூறப்பட்டிருந்த பழைய தெய்வங்கள் வழக்கொழிந்தன. இந்தியாவில் தஞ்சம்புகுந்த பார்சீக்காரர்கள் மட்டும் வேதகால தெய்வங்களைக் கடைப்பிடித்தனர். ”யக்ஞோபவீரதம் பரமம் பவித்ரம்” எல்லாம் மும்பை வாழ்ப் பாரசீகர்களுக்கு உண்டாம். ஜாம்ஷெட்ஜி, நாரிமென் – போன்ற பல சொற்கள் பாரசிக தெய்வீகப்பெயர்கள். பாரசீகத்திலிருந்து ”மித்ரா” வழிபாடு கிரீஸ், ரோம் வரை சென்று நீடித்தது. ”ஆரியானாம்” என்ற ஈரானிலிருந்து வந்த வேதகால அரியர்கள் இந்தியாவில் ஹிந்துமதத்தை நிலைநாட்டினர். இந்தியப் புராணங்களில் சர்வ வல்லமையுள்ளவர்களாக அசுரர்களை வர்ணித்தத்தின் காரணமே, பாரசீகப் பெருந்தெய்வமான அஹூர்மஜ்தாவிடம் தீயசக்திகள் தோற்றோடிய விளைவால் ஆகும். இந்தியாவில் தோன்றிய புத்தரின் மதம் சீனாவிலும், இலங்கையிலும் கொடிகட்டிப் பறந்ததைப் போல், வைதீக காலத்தில் ”அஹூமைஜ்தா” வின் வழிபாடு – பாரசீகத்தில் தோன்றி, அங்கு வணங்கப்பட்ட அக்னி வழிபாடு – ஹோமம் எல்லாம் இந்தியாவில் ஹிந்து மதமாகி, ஈரானில் அழிந்தது. புராதன ஈரான் – ஆரியப்பண்பாட்டின் உறைவிடத்தில் அக்னி பல உருவில் வணங்கப்பட்டது.

– விவரம் அடுத்த இதழில்.